Advertisement

 
குடை 7:
தொழில் உலகில் ஜேஎம் கம்பெனியின் ஷேர்ஸ் பற்றிய பேச்சு தான் தீவிரமாய் அலசி ஆராயப்பட்டுக் கொண்டிருந்தது.அது நாளிதழ், நேரடி செய்தி, இணையம் என அனைத்திலும் சில நிமிடங்களில் பரவியிருந்தது.
“இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜேஎம் குழுமத்தின் வாரீசு ஜீவ மித்ரன் மாயாமாகி உள்ளார்.. என்று பல செய்தி சேனல்கள் செய்தி பரப்பியது. இணையத்தின் உதவியால், இந்த விஷயம் பரவிக் கொண்டிருக்க, அதே ரயிலின்  ஏசிப் பெட்டியில் இருந்த லக்சனாவும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் முகத்தில் வெற்றியின் சாயல்.
“மிஸ்டர் ஜீவ மித்ரன்.., இது தான் நான் உனக்கு குடுக்குற பரிசு..! என்று மனதிற்குள் வஞ்சம் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
ரயிலின் படியின் அருகில் நின்று கொண்டு, தன்னுடைய செல்போனையே வெறித்துக் கொண்டிருந்தான் மித்ரன். அந்த நிமிடம் அவனின் மனதிற்குள் எல்லாம் வெறுத்துப் போனது. எதிர்காற்றின் வேகத்தில் அவன் சட்டை பறக்க, கண்மூடி நின்றான் மித்ரன்.
“மித்ரன்.. என்று அஸ்வினியின் குரல் கேட்க, அது பிரம்மை என்று நினைத்தான்.
மீண்டும் காதிற்கு அருகில் கேட்க, கண்ணைத் திறந்தான்.அவனின் எதிரே கொஞ்சம் பயந்த முகத்துடன் அவள்.
“என்ன..? என்றான்.
“இங்க எதுக்காக நிக்குறிங்க…? பிளேஸ்க்கு வாங்க..! என்றாள் பவ்யமாய்.
“இவ்வளவு நேரம் அப்படி வாய் பேசிட்டு இருந்த..? இப்ப என்னமோ பம்முற..? என்றான்.
“அப்ப நீங்க யாருன்னு தெரியாது..! இப்ப நீங்க யாருன்னு தெரியும்ல..! என்றாள் தொங்கிய முகத்துடன். இவர்களைத் தேடி விகாசும் வந்து சேர்ந்தான்.
“நான் பணக்காரன்னு தெரிஞ்ச உடனேயே நடிக்கிறியா..? என்றான் மித்ரன்.
அவனின் கேள்வியில் அவளுக்கு எரிச்சல் வர..
“என்ன சார் நீங்க..? விட்டா ஓவரா பேசுறிங்க..? நீங்க இவ்வளவு பெரிய ஆள்ன்னு எங்களுக்குத் தெரியாது. அப்ப கூட நான் சரியா தான் கெஸ் பண்ணினேன்.நீங்க பெரிய ஆளா இருப்பிங்கன்னு..!
நீங்கதான் சொன்னிங்க ஒரு ஷூவும், வாட்சுமா ஒரு மனிதனோட நிலையை தீர்மானிக்கும் அப்படின்னு..! நீங்க பேசுனதை வச்சு லைட்டா குழம்பிட்டேன்.  அப்பறம் தான் உங்ககிட்ட சகஜமா பேச ட்ரை பண்ணினோம்..! நீங்களும் உடனே எங்க கூட மிங்கிள் ஆகலையே..? எங்களை மட்டும் குறை சொல்றிங்க..? என்று சண்டைக்கு தயாரானாள்.
“இது தான் நான். இது தான் என் அடையாளம்ன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் நீ நடிச்ச பாரு ஒரு நடிப்பு.. என்று எகத்தாளமாய் கேட்க,
“சார்…! உங்களைப் பத்தி தெரிஞ்ச உடனே நான் அப்படி ரியாக்ட் பண்ணாம இருந்தா தான் தப்பு. நம்மளை விட கொஞ்சம் உயரமா இருக்குறவங்களை நாம அண்ணாந்து தான பார்க்க முடியும். எனக்கும் அந்த பீல் தான். உடனே அதுல இருந்து வெளிய வர முடியலை. அதுக்காக உங்க வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவிங்களா..?
நீங்க கோடில புரண்டாலும் சரி, இல்லை தெருக்கோடில புரண்டாலும் சரி..அதனால் எனக்கு என்ன சார் வந்தது. இல்லை விகாசுக்கு தான் என்ன வந்தது…? என்று கேள்வியாய் கேட்டுக் கொண்டிருக்க,
“இதுல ஏன் இந்த அச்சு, என்னை இழுத்து விடுது..? என்று விகாஸ் யோசனையாய் பார்க்க…
“அப்போ நான் பணக்காரன்னு என்னைப் பார்த்து உங்களுக்கு பயம் இல்லை… என்றான் ஒரு மார்க்கமாய்.
“இல்லை.. என்றாள் ஆணித்தரமாய்.
“என்கூட எப்பவும் போலவே பேசுவிங்க..? என்றான்.
“ஆமா..! பேசுவோம்..! என்றாள்.
“என்னைப் பார்த்ததைக் கூட யார்கிட்டயும் சொல்ல மாட்டிங்க..! என்றான்.
“ஆமா..! சொல்ல மாட்டட்ட்ட்டோம்..! என்று இழுத்தவள் விகாஸைப் பார்க்க, அவன் வாயை மூடி சிரித்துக் கொண்டான்.
“ஏன் சார் சொல்லக் கூடாது..? என்றாள்.
“அது உனக்குத் தேவையில்லாத விஷயம்..! என்றான்.
“நாங்க சொல்லனும்ன்னு அவசியம் இல்லை. நீங்க இந்த தாடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணினாலே தெரிஞ்சுடும் எல்லாருக்கும். இன்னும் சிலர் அப்படியே கண்டு பிடிச்சுடுவாங்க..! என்றாள் சற்று நக்கலாய்.
“என்ன நக்கலா..? என்றான் மித்ரன்.
“பிறகு என்ன சார்..! நீங்களே எவ்வளவு பேமஸ்…இதுல எங்களை சொல்லக் கூடாதுன்னு சொன்னா..? என்று அவள் அசால்ட்டாய் சொல்ல,
“அந்த பேமஸ் எல்லாம் மும்பைல மட்டும் தான். சென்னைல அவ்வளவு சீக்கிரம் யார் கண்ணுலையும் நான் தட்டுப்பட மாட்டேன். நான் வந்த வேலையை முடிக்காம..? என்றான் தீவிரமாய்.
“என்ன வேலை சார்..! என்றாள்.
“தெரிஞ்சு என்ன பண்ண போற..? என்றான்.
“ஏதாவது உதவி பண்ணத்தான்..! என்றாள்.
“ஆணியே புடுங்க வேண்டாம்..! என்றான்.
“ஓகே..! அப்போ இன்னும் நல்லது..! என்றவள்,
“வா விகாஸ்..! சாரே எல்லா ஆணியையும் புடுங்கிக்கிடுவார்..! என்று அவனைக் கைப்பிடித்து இழுத்து செல்ல, அவள் சொன்ன பாவனையில் மித்ரனுக்கு கூட சிரிப்பு வந்தது.
“என்ன மாதிரியான டிஸைன் இவ..? என்று மனதிற்குள் நூறாவது தடவையாகக் கேட்டுக் கொண்டான்.
“எதுக்கு அச்சு இப்படி அவர்கிட்ட வாயைக் குடுக்குற..? என்றான்.
“அடப்பாவி விச்சு…! நான் எங்க குடுத்தேன். என் வாய் என்கிட்டே தான இருக்கு..! என்று அவள் காமெடி பண்ண…
“மொக்கை காமெடி பண்ணாத.முயற்சி பண்ணாலும் சிரிப்பு வரலை..! என்றான்.
“சரி விகாஸ்..! அந்த சிடுமூஞ்சியை விடு..! நீ இப்ப விஷயத்துக்கு வா…! என்றாள்.
“என்ன விஷயம்..? என்றான்.
“அந்த அழகி தான் இவன் பொண்டாட்டின்னு தெரியாம நீ வேற நல்லா சைட் அடிச்ச இல்ல.. என்று அவள் முடிப்பதற்குள்,
“ஹேய்..! ஸ்டாப், ஸ்டாப். நான் எங்க சைட் அடிச்சேன்..? என்றான்.
“சும்மா ரீல் விடாத…! நாங்க பார்த்துட்டு தான் இருந்தோம்..! நீ வடிச்ச ஜொல்லை..! என்று சொல்லி அவள் சிரிக்க,
“ஆமா..! அழகா இருந்தாங்க சைட் அடிச்சேன்..! ஏன் ட்ரெயின்ல ஏறுன உடனே உன்னைக் கூட தான் சைட் அடிச்சேன். அழகு எங்க இருந்தாலும் சைட் அடிப்பேன்..! என்றான் விகாஸ்.
“அடப்பாவி..! என்னையும் சைட் அடிச்சியா..? என்றாள்.
“உன்னையும் போய் சைட் அடிச்சான் பாரு..! என்றபடி வந்தான் மித்ரன்.
“ஏன்..? எனக்கென்ன குறை. நானும் அழகா தான் இருக்கேன்..! என்று முகத்தை ஒரு வெட்டு வெட்ட, அந்த மிடுக்கு மித்ரனின் மனதில் பதிந்து போனது.
“அப்படியா..? சொல்லிக்க சொல்லிக்க…. நீயே சொல்லிக்கிட்டாதான்  ஆச்சு..! என்றான் மித்ரன்.
“நீங்க இப்படி கூட பேசுவிங்களா சார்..! என்றாள்.
“ஏன்..! நானும் மனுஷன் தான..? என்றான்.
“ஆமா சார்..! இரும்பு மனுஷன்..! என்றாள் சிரிப்பாய்.
அவளின் பேச்சு, தன்னுடைய நிலையை அவனுக்கு நியாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. மறக்க வேண்டும் என்று நினைத்த எதையும் அவனால் மறக்க முடியவில்லை.
“என்ன சார் நீங்க..? எப்ப பார்த்தாலும் யோசனைக்கு போய்டுறிங்க..? நானும் எத்தனை தடவை தான் ‘சார் போட்டு உங்களை இந்த உலகத்துக்கு திருப்புறது..? என்று சலித்துக் கொண்டாள்.
“நீ எப்பவுமே இப்படித்தானா..? என்றான்.
“எப்படி..?
“இப்படி பேசிகிட்டே..? என்றான்.
“அப்படி எல்லாம் இல்ல சார். வீட்டுக்கு போனா அமைதி ஆகிடுவேன். எங்கம்மாவுக்கு அதிகம் பேசுனாலே பிடிக்காது. அதான் இப்படி வெளிய வரப்ப பேசித் தீர்த்துக்குவேன்..! என்றாள்.
“உன்னை இதுக்கு முன்னாடி நான் எங்கயோ பார்த்திருக்கேன்..! என்றான் மித்ரன்.
“உங்க பில்டிங்க்கு பக்கத்து பில்டிங் தான் மித்ரன் சார்..! அப்ப பார்த்திருப்பிங்க..! என்றான் விகாஸ்.
“உன்னைக் கேட்டாரா..? என்று அஸ்வினி அவனை முறைக்க,
“இல்லை,மும்பைல இல்லை.அதுக்கும் முன்னாடி..! என்றான் மித்ரன்.
“தெரியலை சார்.. என்றாள்.
ரயில் ரேணிகுண்டாவை நெருங்கிக் கொண்டிருந்தது. சென்னையை அடையும் நேரம் குறைய குறைய மித்ரனுக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு. ஏதோ பிரிந்த இடத்தையே சேர்ந்த உணர்வு.
“நீங்க இதுக்கு முன்னாடி சென்னை வந்திருக்கிங்களா..? என்றாள் அஸ்வினி.
“ம்ம்ம் வந்திருக்கேன். பட் ட்ரெயின்ல இதுதான் முதல்முறை..! என்றான்.
“பிளைட்ல வந்துடுவிங்களா..?
“ஆமா..!
“எனக்கு ட்ரெயின் ஜேர்னி தான் ரொம்ப பிடிக்கும். எல்லா முறையும் ஏதாவது ஒரு வகையில் புது பிரண்ட்ஸ் கிடைச்சுடுவாங்க..! இந்த டைம் ஒரிஜினல் பிரண்டையே மீட் பண்ணியாச்சு..இல்லை விச்சு..! என்றாள்.
“ஆமா சார்..! நானும் எதிர்பார்க்கவேயில்லை..! என்றான்.
“சார் உங்க மொபைல் நம்பர் தாங்களேன்..! என்று அவனிடம் நம்பரைக் கேட்டு வாங்கிக் கொண்டாள்.
“மூணு பெரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கலாமா..? என்று விகாஸ் கேட்க…
“ஓகே..! என்ற மித்ரன் அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டான். அஸ்வினி தன்னுடைய செல்லிலும் எடுத்துக் கொண்டாள். மூவரிடத்திலும் அந்த புகைப்படம் இருந்தது. அந்த புகைப்படத்தால் அவளுக்கு ஏற்பட போகும் பின்விளைவுகளைப் பற்றி அவள்  அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவளுடைய தக்காளி சாதத்தை அவன் உண்டது முதல் அனைத்தும் படங்களாய் அவனின் பாட்டியின் பார்வைக்கு சென்றிருந்தது. லக்சனாவின் உபயத்தில்.
ரயிலில் கிடைத்த உணவையே மதிய உணவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“நீங்க எப்படி சார்..இந்த புட் எல்லாம் சாப்பிடுறிங்க..? என்று கேட்டுக் கொண்டே அஸ்வினி சர்வ சாதரணமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“ஏன்..? என்றான் அவளையே பார்த்துக் கொண்டு.
“இல்லை..! பார்ன் வித் சிலவர் ஸ்பூன் நீங்க..! அதான்.. என்றாள்.
“எப்படி பிறந்திருந்தாலும், பசிச்சா சாப்பாடு தான் சாப்பிட முடியும். பணத்தை இல்லை..! என்றான் அவனும் சாப்பிட்டுக் கொண்டே.
ஒருநிமிடம் அவனை ஆச்சர்யமாய் பார்த்தவள்… எப்படி சார் இப்படி இருக்கீங்க..! உங்களுக்குப் போய் இப்படி ஒரு மனைவியா..? என்றாள்.
“முன்னால் மனைவி..! எங்களுக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சு..! என்றான் கோபமாய்.
“அதுக்கு ஏன் சார் கோபப்படுறிங்க…? உங்களுக்கும், அவங்களுக்கும் எப்படிப் பார்த்தாலும் பொருத்தமில்லை..!என்றாள்.
லக்சனாவைப் போல் இவளும் நினைக்கிறாள் என்று எண்ணிய மித்ரன்…ஏன் அவ கலரா இருக்கா, நான் கருப்பா இருக்கேன்..! அதான..! என்றான்.
“ஆமா சார்..! அவங்க கலரா பயங்கரமா இருக்காங்க..! நீங்க பயங்கர கருப்பா இருக்கீங்க..? என்று சொல்லி சிரிக்க, அவளை முறைத்தான்.
“அஸ்வினி..! எப்பவும் அடுத்தவங்க பீல்ங்க்ஸ்சோட விளையாடாத..? என்றான் விகாஸ் கோபமாய்.
“நான் விளையாடலை. சீரியஸா தான் சொல்றேன். ஏதோ ஒரு விதத்துல மித்ரன் சார் அந்த அழகிக்கு பயப்படுறாங்க…! என்றாள்.
“இதென்ன புதுக்கதை..? என்றான் மித்ரன் தெனாவெட்டாய்.
“புதுக்கதை இல்லை சார்..! உண்மை கதை. அவங்களுக்கு நீங்க பயப்படலைன்னு சொன்னா..ஏன் நீங்க அவங்க இங்க வந்தப்ப அமைதியா இருந்திங்க..? சொந்தமா விமானம் வாங்குற அளவுக்கு வசதி இருக்குற நீங்க ஏன் ட்ரெயின்ல வரணும். டிவோர்ஸ் பண்ணிட்டாலும் உங்களை பாலோ பண்ணி எதுக்காக அந்த அழகியும் வரணும்..? இப்படி விடை தெரியாம நிறைய கேள்விகள் இருக்கு சார்.. என்றாள்.
“விளையாட்டு பெண் என்று நினைத்தால், இத்தனையும் கவனித்தாளா..? என்று ஒரு நிமிடம் வியந்து தான் போனான் மித்ரன்.
“இவ்வளவு பிரச்சனையிலும் இப்படி கெத்தா இருக்கீங்க பாருங்க சார்..! அங்க தான் நீங்க இருக்கீங்க. ஐ அட்மையர் பார் யுவர் ஆட்டிடுயுட் சார்..! என்றாள்.
“நான் எங்க கெத்தா இருக்கேன்..! உள்ளுக்குள் புழுங்குற புழுங்கல் எனக்குத்தான தெரியும்.. என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் மித்ரன்.
“அஸ்வினி வாயை மூடு..! யாரோட பர்சனல் விஷயத்திலும் மூக்கை நுழைக்க கூடாது..! என்று கொஞ்சம் கடுமையாகவே சொன்னான் விகாஸ்.
“அஸ்வினி சொல்றது சரி தான் விகாஸ்..! அவளைத் திட்டாதே..! என்றான் மித்ரன்.
“இவளைத் திட்டினா இவருக்கு எதுக்கு கோபம் வருது..? என்று விகாஸ் உள்ளுக்குள் புகைந்தான்.
“நீங்க சென்னைக்கு எதுக்கு வரீங்கன்னு இப்பவாவது சொல்லலாம்ல..! என்றாள் அஸ்வினி.
“சில கேள்விக்கான பதில் இங்க தான் இருக்கு. அதைத் தேடித்தான் வரேன்..! என்றான்.
“நீங்க எப்படி சார் இப்படி நல்லா தமிழ் பேசுறிங்க..?
“நான் பிறந்தது சென்னை. என்னோட குடும்பமும் தமிழ் குடும்பம் தான்..! என்றான்.
சாப்பிட்டுக் கொண்டே அவள் ஒவ்வொன்றாய் கேட்க, அவனும் புதிர் போல ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிக் கொண்டே வந்தான்.
விகாசிற்கு ஏனோ அஸ்வினி தன்னை விட்டு மித்ரனிடம் நெருங்குவதைப் போல் தோன்ற…உள்ளே ஒரு விதமாக உணர்ந்தான். அதை வார்த்தையில் சொல்ல அவனுக்குத் தெரியவில்லை.
இதை அஸ்வினி கவனிக்கவில்லை என்றாலும் மித்ரன் கவனித்தான். அவனைப் போன்று அவனும் சில மணி நேரங்களுக்கு முன்பு நினைத்தானே.
“என்னாச்சு விகாஸ்..?
“ஒண்ணுமில்லை மிதரன் சார்..! என்றான் ஒட்டாத குரலில்.
“உன்னோட பிரண்டை.., என்கூட கூட்டிட்டு போற ஐடியா எனக்கு இல்லை. அதனால் நீ இப்படி பீல் பண்ற அளவுக்கு ஒண்ணுமில்லை.. என்றான் மித்ரன்.
“சாரி சார்..! என்றான் விகாஸ்.
அடுத்து வந்த சில மணித்துளிகள் அமைதியில் கழிய…மித்ரன் அடுத்து தான் செய்ய வேண்டிய அனைத்தையும் பட்டியலிட்டுக் கொண்டான்.
அடுத்து அவன் பாட்டியின் நடவடிக்கைகள் அவனுக்குத் தெரியும். அதை எப்படித் தவிர்த்து, செல்லும் இடம் செல்வது என்ற யோசனை அவனுக்கு.
அஸ்வினி போனில் பேசிக் கொண்டிருக்க, விகாசும் தன் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தான் போனில்.
அங்கிருந்த மூவரின் பாதையும் வேறு. எண்ணங்களும் வேறு. வாழ்க்கை முறையும் வேறு. ஆனால் இவர்கள் ஏதோ ஒரு புள்ளியில், ஏதோ ஒரு பாதையில் இணைந்திருந்தனர்.
“அடுத்து அரக்கோணம் வந்திடும் சார்..! என்றாள் அஸ்வினி.
“எனக்கு அதெல்லாம் தெரியாது அஸ்வினி..! என்றான் சற்று சோர்ந்த குரலில். அவனின் அந்த குரல் அவளுக்குள் ஏதோ பண்ணியது. இதுவரை தெரியாத ஒரு உணர்வு மனதிற்குள். அது தொண்டை வரை வந்து சிக்கிக் கொள்ள, அதைத் தவிர்ப்பது எப்படி என்று தெரியாமல் தவித்தாள் அஸ்வினி.
“என்ன அஸ்வினி..? இவ்வளவு நேரம் இருந்த அஸ்வினி நீ இல்லை. உனக்குள்ள ஏன் இப்படி ஆகுது..? அவர் எங்க..? நீ எங்க..? என்ன மாதிரியான ஒரு நிலைமையில் இருந்து நீ மீண்டு வந்திருக்க..? மறுபடியும் என்ன இது..? என்று அவளின் மூளை அவளுக்கு அபாய மணி அடித்தது.
“இல்லை..! நான் நானா தான் இருக்கேன். மித்ரன் மேல எனக்கு ஒரு பரிதாப உணர்வு. இவ்வளவு பெரிய ஆளா இருந்தும், அவருக்கு நிம்மதி இல்லையே அப்படிங்கிற ஒரு பரிதாப உணர்வு..அவ்வளவு தான்.. என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.
மூவரும் ஏதோ ஒரு வகையில் கவலைப்பட்டனர். இது வெறும் ரயில் பயணமாக அல்லாமல் ஒரு உணர்வு பயணமாக அமைந்தது.
“நீங்க கண்டிப்பா ஊட்டி வரணும் மித்ரன் சார்..! என்றான் விகாஸ்.
“ஆமா சார்..! கண்டிப்பா எங்க வீட்டுக்கும் வரணும். எவ்வளவு பேர் உங்க ஆட்டோகிராப் கிடைக்குமான்னு ஏங்குறாங்க..? ஆனா நாங்க இவ்வளவு நேரம் உங்க கூடவே ட்ராவல் பண்ணியிருக்கோம்..! அதுவே எங்களுக்கு ரொம்ப பெருமையான விஷயம் சார்..! என்றாள் அஸ்வினி.
அவள் பேசும் போது அவளின் வார்த்தைகள் அவன் மனதில் பதிந்தை விட..உணர்வு பொங்கிய அவள் முகம் தான் அவனுக்குள் இறங்கியது. அது எதையோ நியாபகப்படுத்தியது.
அந்த பார்வையை எங்கோ பார்த்த உணர்வு. மித்ரனும் ஆரம்பம் முதற்கொண்டு யோசித்து பார்த்து விட்டான். ஆனால் அவனுக்கு நினைவிற்கு வரவில்லை.
மூவரும் இறங்கி, பிரிந்து செல்லும் நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது.
 

Advertisement