Advertisement

குடை 5:
இருக்கையில் வந்து அமர்ந்த அஸ்வினிக்கு மனதில் ஏனோ நியாபகச் சுவடுகள்.மித்ரனின் காதல் தோல்வியைப் போல அவளுக்கும் ஒரு தோல்வி இருந்தது. எதிலிருந்து தப்பிக்க இவ்வளவு தூரம் ஓடிக் கொண்டிருக்கிறாளோ….அதற்கான காரணம்.
மனதில் ஏறிய சுமைகளின் நினைவுகளில் அவள் மூழ்கியிருக்க, வேறு எந்த சிந்தனையும் தோன்றவில்லை அவளுக்கு.
அவளின் நினைவில்….
சென்னையில் பிரபல மாலில்….அன்று வெளியான ஒரு படத்தைப் பார்த்துவிட்டு தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாள் அஸ்வினி.
“என்னடி சங்கியும், மங்கியும் இவ்வளவு அமைதியா வரிங்க..? என்றாள் அஸ்வினி.
“எண்ணத்தைச் சொல்ல? படம் நல்லா இருக்கும்ன்னு கூட்டிட்டு வந்து இப்படி மொக்கைய போட வச்சுட்டியேடி..? என்று அவர்கள் இருவரும் புலம்ப,
“அடிப்பாவிங்களா..? இந்த படத்துக்கு என்ன குறையைக் கண்டிங்க..? என்ன மாதிரியான படம், எப்படி ஒரு லவ் பீல்…நான் ரொம்ப என்ஜாய் பண்ணிப் பார்த்தேன்..! என்றாள் அஸ்வினி.
“நீ என்ஜாய் பண்ணி பார்த்தடி.ஆனா நாங்க…? எங்க நிலைமையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு. படமா இது…? இந்த காலத்துல இப்படி எல்லாம் நடக்குமா..? என்று இருவரும் கடுப்புடன் பார்க்க,
“ஏன் நடக்காது..? பார்த்திங்க தான..? ஹீரோ எப்படி உருகி உருகி காதலிக்கிறார்..? அப்படியே அதை நானும் பீல் பண்ணினேன்..! என்று அஸ்வினி ரசித்து சொல்லிக் கொண்டிருக்க,
“நீயென்ன லூசா..? என்பதைப் போல் பார்த்து வைத்தனர் தோழிகள் இருவரும்.
“என்னடி இப்படிப் பார்க்குறிங்க..? என்று அவள் சந்தேகமாகக் கேட்கவும்,
“பின்ன என்ன..? காலம் எவ்வளவு அட்வான்சா போயிட்டு இருக்கு. இப்பவும் ஹீரோ அவங்களை பார்க்காமலேயே காதலிப்பாங்களாம்.. அவங்களைத் தேடி தேடி அலைவாங்களாம்..கடைசில ஒன்னு சேர்ந்து, சுபம் போடுவாங்களாம்… என்று சங்கி நீட்டி முழக்க,
“எப்படி இருந்தாலும் பார்க்க நல்லாத்தான இருந்தது..? என்றாள் அஸ்வினி.
“நாங்க கொலை காண்டுல இருக்கோம். இத்தனை வருஷம் நீ கோமாவுல இருந்தியா..? இந்த கதையெல்லாம் நடிச்ச முரளி சார் கூட இப்போ உயிரோட இல்லைடி…! பழைய படத்தோட ரீமேக்கா இருக்க போகுது..! என்று அவர்கள் கிண்டல் அடித்தனர்.
ஆனால் அஸ்வினியால் அப்படி கிண்டலாகப் பார்க்க முடியவில்லை அந்த படத்தை. அவளைப் பொறுத்தவரை படம் நன்றாக இருந்தது.
“எந்த காலத்திலும் காதல் மாறவே மாறாது.காதல் அப்படிங்கிற ஒரு விஷயம் இல்லைன்னா உலகமே இல்லைடி..! என்றாள் அஸ்வினி.
“நீ இப்ப சொல்ற இந்த டயலாக் கூட அறுந்த பழசு. பப்,கிளப், பார்ட்டின்னு போய்கிட்டு இருக்கு காலம். டேட்டிங் சர்வ சாதாரணம். ஒருவனுக்கு ஒருத்தி கல்ச்சர் எல்லாம் மலையேறிப் போய்டுச்சு.இப்ப வந்துகிட்டு பார்க்காம காதல், தேடுற காதல், ஓடுற காதல் அப்படின்னு ஒரு படத்துக்கு கூட்டிட்டு வந்து மூணு மணிநேரம் மொக்கை போட்டது தான் மிச்சம்..! என்றனர் சங்கியும், மங்கியும்.(சங்கீதா, மந்த்ரா பெயரின் சுருக்கம்.)
அவர்கள் பேசுவது எதுவும் அவளின் காதில் விழவில்லை.அவளைப் பொறுத்தவரை காதல் எப்படிப்பட்ட விதத்தில் வந்தாலும் காதல், காதல் தான் என்ற கொள்கை உடையவள்.
“பேசாம் இன்னைக்கு ஆபீஸ்க்கே போயிருக்கலாம்..! ஒரு நாள் லீவு போட்டது தான் மிச்சம்..! என்று சங்கி புலம்ப,
“ஓவரா அலட்டிக்காதிங்காடி. இந்த காலத்திலும் இப்படி டீசன்ட்டா படம் எடுத்திருக்காங்கன்னு பெருமைதான் படனும். ஒரு இடத்துல கூட முகத்தை சுளிக்கிற மாதிரி காட்சிகள் இல்லை. ரசனை மட்டும் தான். ரசிக்க தெரிஞ்சவங்களுக்கு இந்த படம் நல்ல ஒரு ரசனை. ரசிக்கத் தெரியாதவங்களுக்கு இந்த படம் அறுந்த பழசு தான்… என்று அஸ்வினி கோபமாக சொல்ல,
“இதுக்கு எதுக்கு கோபப்படுற அஸ்வினி.நாங்க லாஜிக் பேசுறோம். ஆனா நீ கற்பனை உலகத்தில் மட்டுமே இருக்குற..! அது தான் இங்க பிரச்சனையே..! என்றனர் மற்ற இருவரும்.
“நான் கற்பனை உலகத்தில் இல்லை. இப்ப நீங்க சொன்னிங்களே டேட்டிங்,பப், பார்ட்டின்னு அது தான் கற்பனை உலகம். முதலை வாய்க்குள்ள போன கதை தான்.போனா திரும்பவே முடியாது.ஆனால் என்னோட கற்பனை அழகானது. அதுல கள்ளத்தனம் இல்லை.கலாச்சார சீரழிவு இல்லை. அதனால தான் எனக்கு இது மாதிரியான படங்கள் பிடிக்குது.. என்றாள்.
“நீ மட்டும் தான் இப்படி இருக்குற அஸ்வினி. இந்த காலத்துல எந்த பசங்ககிட்டையும் உண்மையான காதலை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.பார்த்து லவ் பண்றப்பவே, பத்து பேரை அட்ட டைமில மேனேஜ் பண்றானுங்க. இதுல நீ சொல்ற பார்க்காம, உண்மைக் காதல் இதெல்லாம்… இதோ இப்ப பார்த்துட்டு வந்தோமே, அந்த படத்துக்கு வேணுமின்னா சரிப்பட்டு வரும். நிஜத்துல ஒரு பெர்சன்ட் கூட சரிப்பட்டு வராது. என்றாள் மங்கி.
“இப்ப நீங்க என்ன சொல்ல வரிங்க..? என்றாள் அஸ்வினி கொஞ்சம் கடுப்பான குரலில்.
“அம்மா தாயே..! நாங்க ஒன்னும் சொல்ல வரலை.ஆனா இனிமேல் இது மாதிரி மொக்கைப் படத்துக்கு மட்டும் கூப்பிடாதா. சத்தியமா எங்களால முடியாது. என்று இருவரும் கையெடுத்து கும்பிட்டனர்.
“உங்களை எல்லாம் திருத்தவே முடியாது..! அஸ்வினி.
“ரொம்ப நல்லது. நாங்க இப்படியே இருந்திட்டு போறோம். நீ இப்படி நல்ல விதமாவே இரு. ஆனா ஜாக்கிரதையா இரு. நீ பேசாம நான் பார்க்காம லவ் பண்ண போறேன், அப்படி இப்படின்னுட்டு யார்கிட்டயும் ஏமாந்துடாத. உன்னோட கற்பனை வேற. நிஜம் வேற..! என்று சங்கி ஆணித்தரமாகக் கூறினாள்.
“நீங்க சொல்றதுக்காகவே, நான் அப்படி ஒரு உண்மையான காதலை, காதலனைத் தேடுறேன். அப்பத் தெரியும் உங்களுக்கு..! என்று சவால் விட்டாள் அஸ்வினி.
“ஏய் அஸ்வினி..! சவால் விட்டு விளையாட இதொண்ணும் போட்டி கிடையாது, வாழ்க்கை. இந்த அல்ட்ரா மார்டன் வேர்ல்ட்ல இதெல்லாம் சாத்தியம் கிடையாது. அப்படி உனக்கு காதலிச்சே ஆகணும்ன்னு சொன்னா, நம்மா காலேஜ்ல உன் பின்னாடி சுத்தி சுத்தி வந்தவனுங்க ஒருத்தனா பார்த்து, லவ்க்கு ஓகே சொல்லிடு. அதை விட்டுட்டு தேவையில்லாத எதையும் பண்ணாத..! என்றாள் மங்கி.
“ஆமா அஸ்வினி..! இப்பல்லாம் பசங்களை விட அங்கிள்ஸ் தான் யாருடா கிடைப்பாங்கன்னு சொல்லி அலையுதுங்க. இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத ஒன்னு. வேலையை மட்டும் பாரு..! என்று சங்கியும் அறிவுரை சொல்ல..
“ஸ்டாப், ஸ்டாப்…இப்ப என்ன? ஒரு படத்துக்கு வந்தது குத்தமா..? எவன் எப்படி லவ் பண்ணா நமக்கு என்ன..? இதோட இந்த டாப்பிக்க விடுங்க..! என்று அந்த பேச்சிற்கு சுபம் போட்டாள் அஸ்வினி.
பேச்சிற்கு சுபம் போட்ட அவளால் மனதிற்கு சுபம் போடமுடியவில்லை. பார்த்த படத்தின் தாக்கம் அப்படியே இருந்தது அவள் மனதில்.அந்த படத்தில் வேறு ஒன்றும் இல்லை.
காதலனும்,காதலியும் பார்க்காமல் காதலித்து இறுதியில் சேரும் கதை. தொண்ணூறுகளில் வந்த ஒரு பிரபல படத்தின் இரண்டாம் பாகம் போல் இருந்தது. இந்த காலத்திற்கு ஏற்ப கொஞ்சம் பட்டி டிங்கிரியுடன். வேறு எந்த மாற்றமும் இல்லை.ஆனால் அஸ்வினிக்கு தான் ரொம்ப பிடித்துப் போனது.
ஒரு கதையின் கதாப்பாத்திரம் போல் மாறுவது, அந்த கதையில் வரும் நாயகனைத் தேடுவது என்பதெல்லாம் இப்போது பேஷனாகி விட்டது.
யாரும், எதார்த்தம்… இது தான் உண்மை என்பதை உணர்ந்து கொள்வதில்லை. நிறைய ஜோடிகளின் விவாகரத்திற்கு கூட இது தான் காரணம் என்கிற முறையில் சில வீண் கற்பனைகள் மூளையில் ஏறிக் கொள்கிறது.
அஸ்வினியும் அந்த நிலையில் தான் இருந்தாள்.முட்டாள் தனமாக எதையும் செய்ய மாட்டாள் என்ற காரணத்தினால் சங்கியும், மங்கியும் அதை பெரிது படுத்தவில்லை. ஏனென்றால் இது முதல் முறை இல்லை. இதைப் பற்றி எப்போது பேச்சு எழுந்தாலும், அஸ்வினியின் பதில் இதுவாகத்தான் இருக்கும்.
ஆனால் அவளின் உள் மனதில் ஒரு விஷயம் இருந்து கொண்டே இருந்தது. அதுவே அவளின் கண்ணீருக்கு காரணமாக அமையப் போகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை.
அதை நினைத்துக் கொண்டே இருந்தவளுக்கு அப்போது தான் நிஜம் உரைத்தது.
“ச்ச்ச..என்ன இது எப்படி மறக்கனும்ன்னு நினைச்சாலும் முடிய மாட்டேங்குது..! என்று தன்னைத் தானே நொந்து கொண்டவள், அப்போது தான் கவனித்தாள், மித்ரன் தனக்கு எதிரில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை.
“இவன் எப்ப வந்திருப்பான்..? என்று அவள் யோசிக்க,
“நீ கனவு காண ஆரம்பிச்சப்பவே வந்துட்டேன்..! என்றான்.
“நான் ஒன்னும் கனவு காணலை. யாராவது உட்கார்ந்துகிட்டே கனவு காணுவாங்களா..? என்றாள்.
“ஏன் மாட்டங்க..? அதைத் தான் நீ இப்ப பன்னுனியே..? நான் பார்த்தேனே..!” என்றான்.
“உளறாதிங்க மித்ரன் சார்..! என்றாள்.
“நான் ஒன்னும் உளறலை. நீ வேற உலகத்துல இருந்ததையும் பார்த்தேன். உன் கண்ணுல இருந்து கண்ணீர் வந்ததயும் பார்த்தேன். வேகமா நீ அதை துடைச்சதையும் பார்த்தேன்… என்றான்.
“ஆமா.. ! அதுக்கு என்ன இப்போ..? என்று எரிந்து விழுந்தாள்.
ஆனால் அவனோ ரியாக்சனே காட்டாமல் இருந்தான். ஒருவேளை அவனின் நிலை தெரிந்தால் அப்படி பேச மாட்டாளோ என்னவோ..?
ராணியம்மாள் இப்போது பார்க்க வேண்டும் மித்ரனை.அவ்வளவு தான். காய்ச்சி எடுத்து விடுவார். அவனுடைய பயணம் தான் யாருக்கும் சொல்லப் படவில்லையே. ஆனால் அந்த ராட்சசிக்கு மட்டும் எப்படியோ தெரிந்திருந்தது.
“இன்னும் கொஞ்ச நேரத்துல விடுஞ்சிடும்..! என்றாள் அஸ்வினி.
“எனக்கு எப்பவும் விடியாது.. என்று மனதில் எண்ணிய மித்ரன், அந்த அதிகாலைக் காற்றை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டிருந்தான்.
“நீங்க ட்ரெயின்ல ஏறினப்ப இருந்த மித்ரன் சார் இல்லை. நீங்க யாரோ..? ஒரு பேர் கேட்ட கொடுமைக்கு எப்படி முறைச்சிங்க..? நான் கூட நினைச்சேன்….நீங்க சரியான சிடு மூஞ்சின்னு… ஆனா இப்ப பார்த்தா அப்படி தெரியலை.. என்றாள்.
“அப்படியா..? என்றான்.
“அப்படித்தான் சார்..! உங்க முகம் ரொம்ப இறுக்கமா இருந்தது…ஆனா இப்ப அப்படி இல்லை. அதுலயும் அந்த அழகி ஒருத்தி ஏறுனா பாருங்க. அப்ப நீங்க குடுத்த ரியாக்சன் இருக்கு பாருங்க..செம்ம சார். உங்களுக்கும் அவளைப் பிடிக்கலை. எனக்கும் அவளைப் பிடிக்கலை.
உங்களுக்கு அவளைப் பிடிக்காததுனால தான் சார்…நான் உங்க கூட நல்லா பேசவே ஆரம்பிச்சேன்..! என்றாள்.
“அப்படியா..? அதுக்கு முன்ன மட்டும் நீ வாயே திறக்கலை..! என்று மித்ரன் கிண்டல் பண்ண…
“ஹி..ஹி.. என்று அசடு வழிந்தாள்.
“அப்போ..நான் அந்த பொண்ணு கூட பேசுனதுனால தான்…அதுக்கப்பறம் என்கூட நீங்க சரியாவே பேசலையா..? என்றபடி வந்து நின்றான் விகாஸ்.
“அப்படியில்லை விகாஸ். ஆனா அப்படித்தான்..! என்றாள்.
“இது தெரியாம நானும் குழம்பிப் போயிட்டேன். ஏன் இவங்க திடீர்ன்னு அமைதியா மாறிட்டாங்கன்னு.. என்றான் விகாஸ்.
“என்ன கிண்டலா..?
“இல்லை அஸ்வினி..! நான் உண்மையைத் தான் சொன்னேன்..! என்றான்.
“நல்ல தூக்கம் போல..? என்றாள்.
“ஆமா..! இந்த ரெண்டு லேடீஸ் எப்ப ஏறுனாங்க..? என்றான். தூங்கிக் கொண்டிருந்த அவர்களைப் பார்த்து.
“ம்ம்ம்…! நீங்க ஆழ்ந்த உறக்கத்துல இருந்தப்ப..! என்று அஸ்வினி சொல்ல, சிரித்தான் மித்ரன்.
“என்ன மித்ரன் சார்..! சிரிக்கிறிங்க..! இந்த அதிசயம் எப்படி நடந்தது..? என்றான் விகாஸ்.
“அதெல்லாம் இந்த அஸ்வினியோட மகிமை.எப்படி இருந்தவரை இப்படி சிரிக்க வச்சுட்டேன் பார்த்திங்களா..? என்றாள்.
“ரொம்ப பெரிய சாதனை அஸ்வினி..! என்று விகாஸ் சொல்ல..
“என்ன..? ரெண்டு பெரும் சேர்ந்து என்னை ஒட்டுறிங்களா..? என்றான் மித்ரன்.
அவன் அவனாக இருந்தான் இப்போது. யாரிடமும் ஒட்டாமல் விலக வேண்டும் என்று அவன் நினைத்தலும், அவனின் இயற்கையான குணம் அவனை அப்படி இருக்க விடவில்லை. எத்தனை நாளைக்கு அவனும் முக மூடியோடு சுத்துவான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த இப்படியொரு பயணத்தைக் கெடுத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை போல. அவர்களின் நண்பனாகவே மாறிவிட்டான்.
ரயில் குண்டக்கல் ஜங்க்க்ஷனில் வந்து நின்றது. நன்றாக விடிந்திருக்க, நேரம் ஆறு முப்பதைக் காட்டியது.
“நான் போய் பிரஷ் பண்ணிட்டு வரேன்..! என்றபடி அஸ்வினி நகர..
“ஏன்  நாங்க எல்லாம் பிரஷ் பண்ண மாட்டோமா..? என்றபடி அவர்களும் கிளம்பினர்.
அந்த நிமிடம் அவர்களுக்குள் ஒரு புதிய பிணைப்பு உருவாக்கி இருந்தது. யாரைப் பற்றியும் யாருக்கும் தெரியாது. யாருடைய குடும்ப சூழலும் யாருக்கும் தெரியாது. இருந்தாலும் ஏதோ ஒரு பிணைப்பு அவர்களுக்குள்.
விகாசும், மித்ரனும் காபியை வாங்கிக் கொண்டு வந்தனர்.அதைப் பார்த்த அஸ்வினி வேகமாக எழுந்து சென்று வாங்கிக் கொள்ள…
“தேங்க்ஸ்..! என்றாள்.
“காபியை குடிங்க முதல்ல. ஆறிடும்..! என்றான் விகாஸ். மித்ரனோ அதையும் சொல்லாமல்…அதை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
“இவரென்ன..? முன்ன பின்ன காபியையே பார்க்காத மாதிரி குடிக்கிறார்..! என்று எண்ணியவள், வாய்விட்டு கேட்காமல் அப்படியே விட்டு விட்டாள்.
தன்னுடைய போனை எடுத்தவள்..அவள் அம்மாவிற்கு அழைத்தாள்.
“ஹலோ அம்மா..! என்றாள் கத்தி.
அவளின் கத்தலில், மித்ரனுக்கு புரையேற, அவன் கையில் இருந்த காபி கொஞ்சம் சிந்தியது.
“என்னாச்சு..? என்று அவள் பார்வையில் கேட்க..,
“ஒண்ணுமில்லை…நீ பேசு..! என்பதைப் போல் சைகை காட்டினான் மித்ரன்.
“அஸ்வினி..அஸ்வினி.. என்று அந்த பக்கம் அவளின் அம்மா கத்திக் கொண்டிருப்பது கேட்டது அவளுக்கு.
“ஆங்..அம்மா..! என்றாள்.
“என்னமா ஆச்சு..? ஏன் போன் பண்ணிட்டு பேசாம இருக்க..? என்றார்.
“ன்காம்..அது ஒண்ணுமில்லைம்மா..! சிக்னல் சரியா கிடைக்கலை..! என்றவள்,
“நான் இன்னைக்கு நைட் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுவேன்..! என்றாள்.
“பார்த்து பத்திரம் அஸ்வினி..! என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க,
“அதெல்லாம் பத்திரமா வந்திடுவேன்..! என்கூட தான் மித்ரன் சாரும், விகாசும் இருக்காங்களே..! என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்ட இருவரும் வேகமாகத் திரும்பி அவளைப் பார்க்க…அவளோ அசடு வழிய சிரித்தாள்.
“அவங்க என்னை நல்லா பார்த்துக்கிறாங்க அம்மா..! “ என்று அவள் சொல்ல…அவளின் அம்மா அந்த பக்கம் என்ன கேட்டாரோ தெரியவில்லை..
“ஆமாம்மா..இன்னும் ரெண்டு லேடீஸ் இருக்காங்க..! என்றாள்.
“சரிம்மா..சரிம்மா..! என்று அவள் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.
“நாளைக்கு நீங்க லீவ் போட்ருங்க…! இப்பவே சொல்லிட்டேன்..! என்று அவள் அவருக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள்.
அதற்குள் தன்னுடைய போனை எடுத்தபடி கொஞ்சம் தள்ளி சென்றான் மித்ரன்.
“என்ன பேசியாச்சா..? என்றான் விகாஸ்.
“ம்ம் அதெல்லாம் பேசிட்டேன்..! என்றாள்.
“அதென்ன அவங்களை லீவ் எல்லாம் போட சொல்றிங்க..? உங்கம்மா வொர்க் பண்றாங்களா..? என்றான் விகாஸ்.
“ஆமா..! எங்கம்மா டீச்சர்..! என்றாள்.
“ஹோ சூப்பர்..! என்றவன்,
“எந்த ஸ்கூல்..? என்றான் எதார்த்தமாய்.
பள்ளியின் பெயரை சொன்னவள்…நானும் அங்க தான் படிச்சேன்..! என்றாள் கொசுறாய்.
“ஹேய் நிஜமாவா..? என்றான்.
“ஏன் நான் ஸ்கூலுக்கு போனேன்றதை உங்களால நம்ப முடியலையா..? என்றாள்.
“ஐயோ அதில்லைங்க..! நானும் அந்த ஸ்கூல்ல தான் படிச்சேன்..! என்றான்.
“ரியல்லி.. என்று சந்தோஷப் பட்டவள்…சில நிமிடங்களில் அவனை முறைத்தாள்.
“என்னங்க முறைக்கிறிங்க..?  என்றான்.
“யாருகிட்ட பீலா விடுறிங்க..? உங்க சொந்த ஊர் ஊட்டி தானே சொன்னிங்க.அப்பறம் எப்படி சென்னைல படிச்சிருப்பிங்க..? என்றாள்.
“ஐயோ அஸ்வினி…நிஜம்ங்க..! என்று எதையோ சொல்ல வந்தவன்…
ஹேய் காட் இட்… என்று கத்தியவன்..
“எங்கம்மாவும் அங்க தாங்க டீச்சரா இருந்தாங்கா..! சசி டீச்சர் எங்கம்மா தாங்க..! என்றான்.
“சசி மிஸ் பையனா நீங்க..? என்றவளுக்கு ஆச்சர்யம்.ஆனால் உண்மை.
“அப்போ உங்கம்மா பேரு..? என்றான்.
“வசந்தா மிஸ் தான் எங்கம்மா..! என்றாள்.
“ஹோ ஹாட்..! ஹேய் மக்கு என்னைத் தெரியலையா..? நான் தான் விகாஸ். நீ கூட விச்சுன்னு கூப்பிடுவியே…? என்று அவன் அவளுக்கு நியாபகப்படுத்த…
“ஆமா..! நீ விச்சு தான்..! என்றவளுக்கு இன்னும் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை.
“என்னால நம்பவே முடியலை…? எப்படி இப்படி..? இப்படியெல்லாம் கூட நடக்குமா..? என்றாள்.
“அதான் இப்ப நடந்திடுச்சே..! எனக்கும் அப்ப இருந்து உங்களை…சரி உன்னை எங்கையோ பார்த்த மாதிரியே இருந்தது. இப்போ தான் தெரியுது. என்றான் அவனும்.
“என்ன ரெண்டு பெரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க..? என்ன விஷயம்..? என்றபடி மிதரன் வர…
“சார்..! கடைசில பார்த்தா நானும் விகாசும் ஒரே ஸ்கூல். அவங்க மம்மிக்கும், எங்க மம்மிக்கும் நல்ல பழக்கம்… என்றாள்.
“நிஜமாவா…? என்றான் மித்ரனும் ஆச்சர்யத்துடன்.
“அட ஆமா சார்..! என்றவள் முகத்தில் சந்தோசம் வழிய…
“ட்ரெயின் கிளம்ப போகுது…! உள்ள போகலாமா..? என்று மித்ரன் சொல்ல…தலையை ஆட்டிய இருவரும்…பேசிக்கொண்டே செல்ல… இவ்வளவு நேரம் இல்லாத இவர்களின் நெருக்கம்..இப்போது அதிகமானதைப் போல் இருந்தது மித்ரனுக்கு.

Advertisement