Advertisement

குடை 3:
சில சம்பவங்கள் அவனின் கண் முன் அணிவகுக்க, அடுத்த வாய் சாப்பாடு அவனுக்கு உள்ளே செல்ல மறுத்தது. அதைக்கண்ட அஸ்வினி,
“என்னாச்சு சார்.? சாப்பிடும் போது எதையும் யோசிக்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க..? என்றாள்.
“ம்ம்ம்.. என்றவன், மீண்டும் அமைதியாக சாப்பிடத் தொடங்கினான். அவர்கள் சாப்பிடுவதைக் கண்ட அந்த அழகி,
“லோ கிளாஸ் கேர்ள்..! என்று முனுமுனுத்தபடி பார்வையைத் திருப்ப, யாரின் காதுக்கு கேட்க கூடாதோ அவளின் காதுக்கு கேட்டு விட்டது அந்த வார்த்தைகள்.
அவளைப் பார்த்து முறைத்தவள், தன் சாப்பாட்டை சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை.முடித்தபின்பு அவளைப் பார்த்தவள்,
“ஹெலோ யார் லோ கிளாஸ்…? என்றாள்.
அந்த அழகியோ அவளுக்கு பதில் சொல்லாமல், அசிரத்தையாக முகத்தைத் திருப்ப,
“என்ன திமிரா? நானும் பார்த்துட்டு இருக்கேன்..! ரொம்ப ஓவரா பண்ற…? லோகிளாஸ்ன்னு தெரியுதுல்ல, மேடம் எதுக்கு இதுல ட்ராவல் பண்றிங்க…? ஹைக்கிளாஸ்ல ட்ராவல் பண்ண வேண்டியது தானே..? என்று நக்கலாய் கேட்டு வைக்க…
“யு இடியட்..! நான் பர்ஸ்ட் கிளாஸ் ஏசி.அடுத்த கம்பார்ட்மென்ட்ல மாறிடுவேன்..! என்றாள் ஆங்கிலத்தில்.
“தமிழ் பேசினா புரியுது.ஆனா தமிழ்ல பதில் சொல்ல எரியுதா..? என்றாள் கொஞ்சம் காட்டமாகவே.
விகாஸ் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன்..என்ன அஸ்வினி..? எதுக்காக இப்படி கோபப் படுறிங்க..? என்றான்.
“இவங்க இஷ்டத்துக்கு பேசுவாங்க…? நான் கேட்டுட்டு இருக்கனுமா விகாஸ்.என்னைப் பார்த்து லோ கிளாஸ்ன்னு சொல்றாங்க..? என்று அவள் புகார் வாசிக்க…
“எதுக்கு வீண் பிரச்சனை விடுங்க..! என்றான்.
“அதெப்படி விட முடியும்..! என்னைத்தானே பேசுனாங்க..! அப்ப நான் பேசுவேன். வந்த சண்டையை விட்டதா சரித்திரமே இல்லை..! என்று அவள் வாயாட…அவளைப் பார்த்து மேலும் முகம் சுளித்தாள் அந்த அழகி.
“என்னா..? என்ன லுக்கு..? கண்ணை நோண்டிடுவேன்..! என்று சொல்ல…மித்ரனுக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த பொண்ணா இது..? என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
பதிலுக்கு அவளும் கேவலமாய் ஒரு பார்வை பார்க்க, அஸ்வினி மீண்டும் சண்டைக்குப் போக, இறுதியில் விகாஸ் கெஞ்சிக் கூத்தாடி அஸ்வினியின் வாயை அடக்கினான்.
அதற்குள் அடுத்த ஸ்டேசனும் வந்து விட்டிருந்தது.அந்த அழகி எழுந்து செல்லும் போது மித்ரனை பார்த்த பார்வையில் அவ்வளவு கோபம் இருந்தது.அவனோ அவளைக் கண்டு கொள்ளாமல் முகத்தை அசால்ட்டாய் திருப்ப,வெடுக்கென்று தலையை வெட்டி விட்டு சென்றாள் அந்த அழகி.
அவள் சென்றவுடன், “சூப்பர் சார்..! கையைக் குடுங்க..! கடைசியில் அவளைப் பார்த்து ஒரு லுக்கு விட்டிங்க பாருங்க..செம்ம சார், செம்ம.. என்று அகம் மகிழ்ந்தாள்.
அவளின் கை மித்ரனின் கையைப் பிடித்திருக்க, அவளையும் பார்த்தவன் அவள் கையையும்,தன் கையையும் பிடித்திருப்பதைப் பார்க்க, அதைக் கண்டு அசடு வழிந்தவள்..சாரி சார்..! என்றபடி கைகளை விளக்கிக் கொண்டாள்.
மித்ரனின் செல்போன் ஒலிக்க அந்த செல்போனின் திரையையே ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன்..சிறு யோசனைக்குப் பின் அதைக் காதில் வைத்தான்.
காதில் வைத்த மாயத்தில் அவன் வாய் ஹிந்திக்குத் தாவ….அவன் ஹிந்தி பேசிய விதத்தைப் பார்த்த அஸ்வினிக்கு மயக்கம் வராத குறைதான். அவனோ, அவளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சரளமாக பேசிக் கொண்டிருந்தான்.
“என்ன ஹிந்தில பொளந்து கட்டுறான்.சரியா பேசுறானா..? இல்ல தப்பா பேசுறானா..? இல்லை நம்ம இருக்கோம்ன்னு பீலா விடுறானா…? என்று அவள் யோசிக்க….
விகாசோ காதில் ஹெட்செட்டை மாட்டியிருந்தான்.மூடிய அவன் கண்களும்., ஆடிய அவன் தலையும், அவனுக்கு பிடித்த பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக உணர்த்தியது.
“என்ன இவனும் பாட்டுக் கேட்குறான்..? இவன் ஹிந்தில பேசிட்டு இருக்கான்.நமக்கு ஹிந்தி தெரியாதுன்னு இவனுக்குத் தெரியுமோ..? அதனால தான் வீம்புக்கு பேசுறானோ..? என்று யோசித்துக் கொண்டிருக்க..
“என்ன யோசனை..? எதுக்கு என்னையவே பார்த்துட்டு இருந்த..? என்றான் மித்ரன்.
“அது ஒண்ணுமில்லை சார்..! எப்படி இவ்வளவு நல்லா ஹிந்தி பேசுறிங்க..? தமிழும் பேசுறிங்க..? நீங்க தமிழா இல்லை ஹிந்தியா..? என்றாள்.
“நீயெல்லாம் மும்பைல வேலை பார்த்தன்னு வெளிய போய் சொல்லிடாத..! என்றான்.
“ஏன் சார்..? மும்பைல வேலை பார்த்தா ஹிந்தி கட்டாயம் தெரியனுமா என்ன..? கம்யுனிகேசனுக்கு இங்கிலீஷ் இருக்கு.நிரந்தரமா எங்களுக்கு தமிழ் இருக்கு..? அப்பறம் நான் ஏன் ஹிந்தி கத்துக்கணும்.
நான் இந்த ஊருக்கு வந்து இங்க செட் ஆகவே ஆறு மாசம் முடிஞ்சுடுச்சு. ஹிந்தி கொஞ்சம் கத்துக்கலாம் அப்படின்னு நினைக்கிறப்போ அடுத்த ஆறு மாசமும் ஓடிடுச்சு…? இதோ இப்போ இந்த ஊரை விட்டே கிளம்பிட்டேன். அப்பறம் எனக்கு எதுக்கு ஹிந்தி.எங்க சிங்கார சென்னைக்கு, தனி பாஷை இருக்கு.இந்த ஹிந்தி எல்லாம் தேவையில்லை..! என்று அவள் பேசிக் கொண்டே இருக்க,
கேட்ட அவன் தான் நொந்து போனான்.கேட்டது குத்தமா..? என்ற ரீதியில் அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
“அம்மா தாயே..! கேட்டது தப்புத்தான்.தமிழ்நாட்டு அரசியல்வாதியை விட நீ அதிகம் பேசுவ போல..ஆளை விடு.. என்று கடுப்புடன் சொன்னவன்… சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.அந்த ஹிந்தியை கத்துக்க என்ன பாடு பட்டேன்னு எனக்குத் தான தெரியும்..!  என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
மூவருக்கும் இடையில் மவுனம் மட்டுமே மொழியாக இருக்க, அந்த மாலை வேளையில்…முகத்தில் மோதிய காற்று, மித்ரனின் கோபத்தை கொஞ்சம் குறைத்தது.அந்த காற்றின் குளுமை…அவனின் மனதை கொஞ்சம் அமைதிப் படுத்தியது என்றே சொல்லலாம்.
இதற்காகத் தானே…இந்த அமைதிக்காகத் தானே அவன் ரயில் பயணத்தை மேற்கொண்டது.ஆணோ,பெண்ணோ அவர்கள் தனியாக பயணம் மேற்கொள்ளும் போது,  அவர்கள் புது அனுபவத்தைக் கற்றுக் கொள்கிறார்கள்.
“தனிமைப் பயணம் உன் நிறை, குறைகளைத் தெரிந்து கொள்ள உதவும், உனக்கு பலவீனமாக இருக்கும் விஷயம் கூட பலமாக மாறும், நீ உன்னையே மாற்றிக் கொள்ள அது உதவும்.. என்ற தந்தையின் வரிகள் அவன் காதில் வந்து மோத, அது எவ்வளவு உண்மை என்று பல முறை அவன் அனுபவித்து இருக்கிறான்.ஆனால் அதெல்லாம் சந்தோஷமான தருணங்கள்.இன்று முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில், மனம் வெம்பிய ஒரு நிலையில், இந்த தனிமைப் பயணம் அவனுக்கு அவசியமாகப் பட்டது.
அந்த தனிமையில் கத்தியை வைத்து குத்தியதைப் போல் இருந்தது அஸ்வினியின் பேச்சு.அதனாலேயே அவன் கோபப்பட்டான்.இயல்பில் யாரையும் மரியாதை குறைவாக அவன் பேசியதில்லை.தன்னுடைய உயரம் அவனுக்குத் தெரிந்தாலும்,யாரையும் குறைத்து மதிப்பிட்டதில்லை.
இந்த ஒரு குணமே பல நேரங்களில் பலமாகவும், சில நேரங்களில் பலவீனமாகவும் இருந்திருக்கிறது.
எதார்த்தமாக அவன் அஸ்வினியின் பக்கம் பார்க்க, அவள் கண்கள் கலங்கி இருந்ததைப்போல் இருந்தது.அவன்  நன்றாகப் பார்ப்பதற்குள் அவள் அதை சரி செய்ததைப் போல் இருந்தது.
அவளிடம் கேட்கவும் அவனுக்கு கொஞ்சம் தயக்கமாக இருக்க, அப்படியே விட்டுவிட்டான்.
அடுத்ததாக ட்ரெயின் புனே ஜங்சனில் நின்றது.அங்கு வந்து பத்து நிமிடங்கள் நிற்கும் என்பதால்…விகாஸ் எதையோ வாங்குவதற்காக இறங்கினான்.அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் அஸ்வினி இல்லை.
“என்னாச்சு..? என்றான் மித்ரன் மொட்டையாக.
“என்னையவா சார் கேட்டிங்க..? என்றாள்.
“இங்க நீதான இருக்க..? என்றான் நக்கல் குரலில்.
“நான் மட்டும் தான் சார் இருக்கேன்.நீங்க பேசுறிங்களே அதான் ஆச்சர்யமா இருந்தது..! என்றாள்.
“கொஞ்சம் இறங்கி வந்தா ஓவரா கெத்து காட்டுவிங்களே..? என்றபடி அவன் முகத்தைத் திருப்ப,
“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே சார்..? என்றாள் பீடிகையுடன்.
“என்ன..? என்றான்.
“இல்லை, உங்களைப் பார்த்தா சாதாரண ஆள் போல தெரியலை.உங்க ஷூவும், வாட்சும் சொல்லிடும் உங்க ஸ்டேட்டஸை. அப்பறம் ஏன் ட்ரெயின்ல வரிங்க..? என்றாள்.தன்னுடைய நெடுநேர சந்தேகத்தை கேட்டுவிட்ட திருப்தி அவளுக்கு.
“ஷூவும்,வாட்சும் ஒருத்தர் ஸ்டேட்டஸை தீர்மானம் பண்ணிடுமா என்ன? இன்னும் எந்த காலத்துல இருக்க நீ..? இப்படி நினைச்சு தான் பல பொண்ணுங்க வாழ்க்கையில பாதை மாறி போய்டுறாங்க..? என்றான் எரிச்சலுடன்.
“சார்..! உங்க இஷ்ட்டத்துக்கு பேசாதிங்க..! நான் அதைப்பார்த்து ஒன்னும் கேட்கலை.பொதுவா உங்களைப் பார்த்தாலே சாதாரண ஆள் போல தெரியலை.என்னோட உள்ளுணர்வு சொல்லுது.அது என்னைக்கும் பொய்க்காது.. என்று சொல்ல, அவளின் தைரியத்தை மெச்சிக் கொண்டான்.
“சரி அப்பறம்..? என்றான்.
“உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்சனை. அதை எப்படி தீர்க்கனும்ன்னு உங்களுக்குத் தெரியலை.எங்கையோ, எதுலயோ பலமா அடிவாங்கி இருக்கீங்க..? என்றாள்.
“பாருடா..! உனக்கு ஜோசியம் எல்லாம் தெரியும் போல..? என்றான்.
“அப்படி இல்லை சார். மனசில் பட்டது சொன்னேன்.அவ்வளவு தான்..! என்றாள்.
“நீ இவ்வளவு தூரம் சொன்னதால, ஓகே ஏத்துக்கறேன்.நீ சொன்னது கொஞ்சம் சரி தான்..! என்றான்.
“பார்த்திங்களா சார்..! என்று பெருமை பீத்த,
“ஆமா உனக்கு சொந்த ஊர் எது. உன்னை எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கு..! என்றான்.
“சொந்த ஊர் சென்னை தான் சார்..! என்றாள்.
அதற்குள் விகாஸ் வர, அவர்களின் பேச்சு தடைபட்டது.ட்ரெயின் மீண்டும் தன் ஓட்டத்தை ஆரம்பிக்க, இப்போது வெளியே பார்த்துக் கொண்டிருந்த மித்ரனின் ஒரு பக்கத்தைப் பார்த்தாள் அஸ்வினி.
“எப்படி இருக்கான்…இந்த தாடி எல்லாம் ஷேவ் பண்ணிட்டா.. செம்மையா இருப்பான் போலயே..? என்று அவள் யோசித்துக் கொண்டே வர..
“என்ன..? என்றான் புருவத்தை உயர்த்தி.
“அது ஒண்ணுமில்லை சார். பார்க்க செம்ம பிகரா இருக்கீங்க.இந்த தாடியையும் ஷேவ் பண்ணிட்டா இன்னமும் செம்மையா இருப்பிங்க. அதைத்தான் யோசிச்சேன்..! என்று அவள் சொல்ல…விகாஸ் திறந்த வாய் மூடாமல் அவளைப் பார்த்தான்.
“என்ன விகாஸ்..? அப்படி பாக்குறிங்க..? என்றாள்.
“இல்ல…! உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான்.. என்றான் விகாஸ்.
“உண்மையை பேசுறதுக்கு பேரு உங்க ஊர்ல தைரியமா..? நீங்களே சொல்லுங்க, சார் அழகாத்தான இருக்கார்.. என்று அவனையும் கூட்டணியில் சேர்த்தாள்.
விகாசிற்கு சிரிப்பதா,அழுவதா என்று தெரியவில்லை.ஒரு விளம்பர மாடல் ஆகிய தன்னை விட, மித்ரன் எந்த விதத்தில் அழகு என்று அவனுக்குத் தெரியவில்லை.இருந்தாலும் ‘ஆம் என்று தலையை ஆட்டி வைத்தான்.
அவனின் நிலை மித்ரனுக்கு புரிந்தது போல.உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான்.
அதே நேரம் அவனுக்கு மீண்டும் போன் அடித்தது.அதை கோபத்துடன் எடுத்து, அவன் கத்திய கத்தலில் மிரண்டு விழித்தாள் அஸ்வினி.அவன் முகம் அப்படியே சிவந்து போயிருக்க…
“என்ன இவன், இப்படி கத்துறான்…? என்னா கோபம் வருது. அஸ்வினி இவன்கிட்ட கொஞ்சம் அடக்கி வாசி.இல்லைன்னா இவன் கிட்ட அடிவாங்குனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்ல… என்று எண்ணியவள், கப் சிப் என்று வாயை மூடி அமர..அவளைப் பார்த்த விகாசிற்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.
பேச்சை மாற்றுவதற்காக..என்ன இன்னைக்கு ட்ரெயின் காத்து வாங்குது.எப்பவும் இப்படி கூட்டமில்லாம இருக்காதே…? என்று அவள் சொல்ல…
“அடுத்தடுத்த ஜன்க்ஷன்ல ஏறுவாங்களா இருக்கும்..! என்றான் விகாஸ்.
“இந்த ட்ரெயின் இப்படியே நின்னுட்டா எப்படி இருக்கும்…? என்று அவள் விளையாட்டாய் கேட்க,
“இதென்ன சினிமாவா…? ட்ரெயின் ஒரே இடத்துல ஒரு நாள் முழுக்க நிக்கும்,உடனே அங்க இருக்குற ரெண்டு பேருக்கு லவ் வரும், இப்படி சொல்லிட்டே போகலாம்…! என்று விகாஸ் சொல்லி சிரிக்க, மித்ரன் தனக்கு வந்த அழைப்பை பேசி முடித்திருந்தான்.
அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல், அவன் போனையே நோண்டிக் கொண்டிருந்தான்.
“நீங்க எப்பவும் இப்படித்தானா..? பேசிட்டே இருப்பிங்களா..? என்றான் விகாஸ்.
அவள் பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டான் மித்ரன்.
“தன்னோட ரகசியங்களை மறைக்க ஒரு சிலர் ரொம்ப அமைதியா இருப்பாங்க..! இன்னும் ஒரு சிலர் பேசிட்டே இருப்பாங்க..! இதுல நீ எந்த வகைன்னு சொல்லு..! என்றான் மித்ரன்.
விகாஸ் புரியாமல் பார்க்க, அஸ்வினிக்கு பக்கென்று இருந்தது.மித்ரன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார்..! என்றாள்.
“அதென்ன என்னை மட்டும் விகாஸ்,அவரை மட்டும் சார்..? என்று விகாஸ் கேட்க, அவனை முறைத்தவள்…
“நீங்க கூட தான் என்னைய அஸ்வினின்னு கூப்பிடுறிங்க..! அவரை சார்ன்னு கூப்பிடுறிங்க..? நான் ஏதாவது கேட்டேனா..? சிலரைப் பார்த்தாலே தன்னால மரியாதை வந்திடுது…! என்றாள்.
“உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா அஸ்வினி..? என்றான் விகாஸ்.
“என்னை வாயாடின்னு சொல்றிங்களா…? என்றாள்.
“ஐயோ நான் அப்படி சொல்லலை..! நீங்க தப்பா எடுத்துக்காதிங்க..! என்றான்.
“அது..! அந்த பயம் இருக்கணும்..! என்றபடி அவள் சிரிக்க..அந்த சிரிப்பில் ஏதோ உயிர்ப்பில்லாததைப் போல் இருந்தது மித்ரனுக்கு. தன்னுடைய பிரச்சனைக்காக சென்று கொண்டிருப்பவன், அவளுடைய பிரச்னையை யோசித்துக் கொண்டிருந்தான்.
“சென்னைல போய், இனி வேற வேலை தேடணுமா..? இல்லை இனி வேலைக்கு போற ஐடியா இல்லையா..? என்றான் விகாஸ்.
“தெரியலை விகாஸ். அது எங்கம்மா கைல தான் இருக்கு.ஏற்கனவே அவங்களுக்கு நான் வேலைக்கு வந்ததில் விருப்பம் இல்லை. என்னோட ஆசைக்காகத் தான் அனுப்பி வச்சாங்க.இனி எப்படின்னு தெரியலை..! என்றாள் மேம்போக்காய்.
“இன்னும் எந்த காலத்துல இருக்காங்க..? என்று அவன் ஆச்சர்யமாய் கேட்க, அவனைப் பார்த்து முறைத்தாள்.
“எதுக்கு முறைக்கிறிங்க…?
“எந்த காலத்திலும், அம்மாவுக்கு மகள் என்பதோ, மகளுக்கு அம்மா என்கிற விஷயமோ மாறாது தானே..! அதே மாதிரி தான்..என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும், முன்னேற்றம் வந்தாலும், பிள்ளைங்களோட பாதுகாப்பை எண்ணி பயப்படுற விஷயத்துல எந்த காலத்திலும், எந்த அம்மாவும் மாற மாட்டாங்க..! என்றாள்.
“அப்படியா சொல்றிங்க..? என்றான்.
“நீங்க எதுக்காக உங்க பாட்டிக்கு பயந்து, உங்களுக்கு பிடிச்ச வேலைன்னாலும் உடனே கிளம்பியிருக்கிங்க..? என்றாள்.
“அது, அவங்களுக்கு இந்த பீல்டு பிடிக்கலை, அதான்.. என்றான்.
“பார்த்திங்களா..? ஆண்கள் நீங்களே சில விசயங்களை பேமிலிக்காக பார்க்க வேண்டியிருக்கு. அப்போ எங்க நிலைமையெல்லாம் யோசிச்சுப் பாருங்க..! என்றாள்.
“உண்மைதான் அஸ்வினி..! சாரி..! என்றான்.
“இதுக்கு எதுக்கு சாரி விகாஸ். நீங்க உங்களுக்கு தோணினதை கேட்டிங்க. நான் எனக்குத் தோணினதை சொன்னேன். அவ்வளவுதான்.. என்றாள்.
“சில விஷயங்களை பேமிலிக்காக பார்க்கணும்..! என்ற விஷயம் மித்ரனின் மண்டையில் நங்கூரமாய் இறங்கியது.
அஸ்வினி பேச்சு வாக்கில் சொன்னது தான் என்றாலும், உண்மையும் அதுதானே..!
ஏனோ மீண்டும் மீண்டும் அஸ்வினியைப் பார்த்தான் மித்ரன்.இந்த வார்த்தைகளை அவன் ஏற்கனவே கேட்டிருந்தாலும், இன்று ஏதோ பண்ணியது அவன் மனதிற்குள்.
அவனும் கண்களை மூடி, ஒரு நிமிடம் ஆழ்ந்து தியானித்து பார்த்தான். ம்கூம்…மனம் ஒரு நிலைக்கு வரவேயில்லை.எல்லாமே மாறி மாறி வந்து அவனை மீண்டும் நிம்மதியில்லாமல் தோன்றச் செய்தது.
அந்த ஒரு நிமிடம் வீண் என்பதை உணர்ந்து கண்களைத் திறக்க, எதிரில் இருந்த அஸ்வினி தான் கண்களுக்குத் தெரிந்தாள்.
அந்த பால்வண்ண முகத்தில் சிலும்பிய முடிகளை அவள் ஒதுக்க, ஆனால் அவைகள் அடங்காமல் சண்டித்தனம் செய்து, மீண்டும் அவள் கன்னத்து ஓரத்திலேயே ஊர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.
இதெல்லாம் மித்ரனின் கண்களில் தான் பட்டுத் தொலைய வேண்டுமா என்ன? பார்த்தான் பார்த்தான்.அவள் அவனைத் திரும்பிப் பார்க்கும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான்.

Advertisement