Advertisement

குடை 21:
பத்து நாட்களுக்குப் பிறகு,
“என்ன நீ மட்டும் தனியா இருக்குற..? மித்ரன் சாரை காணோம்..? என்றாள் சங்கி.
“யாருக்குத் தெரியும்..? என்றாள் சுபஷ்வினி.
“என்னடி இப்படி பேசுற..? மித்ரன் உன் புருஷன், உனக்கு நியாபகம் இருக்குள்ள..? என்றாள்.
“அதெல்லாம் நல்லா நியாபகம் இருக்கு. ஆனா மித்ரனுக்கு தான் சுத்தமா நியாபகம் இல்லை. யாரோ போல இருக்கார், என்னவோ போல நடந்துக்கறார்.. என்றாள்.
“என்னடி மேரேஜ் முடிஞ்சு மூணு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி சொல்ற..? என்றாள்.
“மூணு நாள் கடக்குறதுக்கே, எனக்கு முப்பது நாள் ஆன மாதிரி இருக்கு..! என்றாள்.
ஜீவ மித்ரனுக்கும், சுபஷ்வினிக்கும் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. நேசனால் வரமுடியவில்லை.அதனால் சிம்பிளாக கோவிலில் வைத்து அவர்களின் கல்யாணத்தை முடித்திருந்தார் ரேகா. அன்று நேசனுடன் பேசியதற்கு பிறகு, அவருக்கு புது தெம்பு கிடைத்ததை போல் இருந்தது.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டு, திரும்பினர் இருவரும். காரிலிருந்து லக்சனா இறங்கிக் கொண்டிருந்தாள். அவளை அங்கு பார்த்த இருவருக்கும் அதிர்ச்சி.
முதலில் சுபஷ்வினியால் அடையாளம் காண முடியவில்லை. பிறகு தான் தெரிந்தது, அவள் லக்சனா என்று. இறங்கியவள், அதே திமிர் நடையுடன் வந்தாள்.
அவர்களின் அருகில் வந்தவள்,
“மித்ரன் எங்க..? என்றாள் திமிராக.
“தெரியாது..! என்று சங்கி சொல்ல,
“ஆமா, நீங்க யாரு..? என்றாள் சுபஷ்வினி.
“நான் அவரோட வொய்ப்..! என்றாள் அதே திமிருடன்.
“அப்போ நான் யாரு..? என்றாள் அஸ்வினி.
“என்னைக் கேட்டா…எனக்கு என்ன தெரியும். நான் கேட்ட கேள்விக்கு பதில், எங்கே மித்ரன்…? என்றாள் லக்சனா.
“கண்டவங்க கேட்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லனும்ன்னு, எனக்கு அவசியம் இல்லை..! என்றாள் அஸ்வினி.
“பைன்..! நான் உள்ள போய் தெரிஞ்சுக்கறேன்..! என்றாள்.
“என் புருஷனை, யாரும் பார்க்குறதை நான் அனுமதிக்க முடியாது..! என்ற அஸ்வினியின் குரலில் அப்படி ஒரு தீர்க்கம்.
“புருஷனா…? யாரு மித்ரன்..? அதுவும் உனக்கு புருஷன்..? குட் ஜோக்..! என்று சொல்லி சிரிக்க,
“நீயெல்லாம் சிரிக்கிற அளவுக்கு இங்க யாரும் இல்லை.இங்க இருந்து கிளம்பிடு. அது தான் உனக்கு நல்லது..! என்றாள் சங்கீதா.
“நீயென்ன இவளுக்கு கொடுக்கா? என்றாள் லக்சனா.
“கொடுக்கு என்ன செய்யும்ன்னு தெரியும்ல..? என்று சங்கி, கோபத்திற்கு வர, அவளை அமைதிப் படுத்தினாள் சுபஷ்வினி.
ஜீவ மித்ரன் உள்ளே தான் இருந்தான். அவன் இங்கு இருக்கிறான் என்கிற வரைக்கும் தான் லக்சனாவிற்கு தெரியும். அவனுக்கும், அஸ்வினிக்கும் கல்யாணம் ஆன விஷயம் அவளுக்குத் தெரியாது. அதனால் தான் அவனைத் தேடி வந்தாள்.
“என்னம்மா அஸ்வினி, சத்தம்..? என்றபடி ரேகா வெளியே வர, அவரைக் கண்டு இகழ்ச்சியாக சிரித்து வைத்தால் லக்சனா.
“யார் இது..? என்று அவர் புரியாமல் கேட்க,
“இவ தான், மித்ரன் சார் சொன்ன, லக்சனா..! என்றாள் சங்கீதா. அந்த பேரைக் கேட்ட உடனே, அனைத்தும் புரிந்து போனது அவருக்கு.
“என்ன விஷயம்..? என்றார் கறார் குரலில்.
“ஹோ..நீங்கதான், மித்ரன் தேடி வந்த, அந்த பாசத்திற்கு உரிய தாயா..? என்றாள் நக்கலாக.
“என்ன பேச்சு தினுசா போகுது..! நான் என் பையன் மாதிரி கிடையாது. இழுத்து வச்சு ஒரே அறை தான்..! கன்னம் பழுத்துடும்..! என்றார்.
“இங்க பாருங்க மாமியாரே..! என் வயித்துல, உங்க பிள்ளையோட வாரிசு வளருது. அதனால இந்த அதட்டல், உருட்டல் எல்லாம் என்கிட்டே வச்சுக்காதிங்க..! என்று அவள் சொல்ல, அவள் சொன்ன செய்தி கேட்டு, அதிர்ந்து விட்டாள் சுபஷ்வினி.
“ம்ம்ம்…! டைவேர்ஸ் ஆனதுக்கு அப்பறம்..இதை வச்சு மிரட்ட முடியாதுன்னு உனக்கு தெரியலை போலவே..! என்று ரேகா நக்கலுடன் கூற,
“எதை எப்படி செய்யனும்ன்னு எனக்குத் தெரியும். கூப்பிடுங்க உங்க பையனை..! என்றாள்.
“இதோ பார், அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இதோ இவ தான் அவன் மனைவி. மரியாதையா போய்டு..! என்றார்.
“இவ, மித்ரனுக்கு மனைவியா..? அவனுக்கு மனைவியாகுறதுக்குக் கூட ஒரு தகுதி வேணும். அதெல்லாம் இவகிட்ட இருக்கா..? என்றாள்.
“அதைத்தான் நானும் சொல்றேன். என்னோட மனைவியா இருக்குறதுக்கு ஒரு தகுதி வேணும். அது உன்கிட்ட இருக்கா..? என்றான் மித்ரன் பின்னால் இருந்து. அனைவரும் அவனை திரும்பி பார்க்க,
“என்கிட்டே இல்லாதது, அப்படி என்ன இவகிட்ட இருக்கு..? என்றாள் லக்சனா.
“அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. இருந்தாலும் சொல்றேன். இவகிட்ட பெண்மை இருக்கு. அன்பு இருக்கு…! இதெல்லாம் என்னான்னு உனக்குத் தெரியுமா..? என்றான்.
“மித்ரன்..! என்று கோபமாய் கத்த,
“சும்மா கத்தாத..! நான் உனக்கு பயந்து இங்க வரலை. நான் என் அம்மாவையும்,குடும்பத்தையும் தேடி வந்தேன். இடையில் கொசுத் தொல்லை வேண்டாம்ன்னு தான், உன் கண்ணுல மண்ணைத் தூவி வந்தேனே தவிர, உனக்கு பயந்து கிடையாது ரைட்..! என்றான்.
“ராணி பாட்டி, என் கைக்குள்ள..! உன்னால ஒன்னும் அசைக்க முடியாது..! என்றாள்.
“அப்படியா…? என்று அவளை மேலிருந்து, கீழாக பார்த்தவன்,
“உன்னோட மொபைலுக்கு, நிறைய வீடியோஸ் அனுப்பியிருக்கேன். அப்பறம் உன் வயித்துல வளர குழந்தைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படின்றதுக்கான டிஎன்ஏ ரிசல்ட், அதுக்கு அப்பன் யாரு, நீ யாரு கூட சுத்துன..? இப்படி எல்லா விபரமும், தெளிவா அனுப்பியிருக்கேன். இன்னும் நீ பார்க்கலையா..? என்றான் நக்கல் சிரிப்புடன்.
“நீ பொய் சொல்ற..? என்றாள்.
“அட…உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன ஆகப் போகுது. சீக்கிரம் எடுத்துப் பாரு. எனக்கு நிறைய வேலை இருக்கு..! என்றான்.
லக்சனா வேகமாக தன்னுடைய செல்லில், அவன் அனுப்பிய அனைத்தையும் பார்க்க, அவள் முகம் பேயறைந்ததைப் போல் ஆனது.
சுபஷ்வினிக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. ஆனால் மித்ரன் பெரிய சிக்கலில் மாட்டி, இப்போது மீண்டு வந்திருக்கிறான் என்பது வரை தெரிந்தது.
“நோ..இதெல்லாம் நான் நம்ப மாட்டேன்..! என்றாள் லக்சனா.
“உண்மையை நம்புறது கஷ்ட்டம் தான். இதெல்லாம் பாட்டிகிட்ட காட்டினேன்னு வை, உனக்கு குடுத்த அந்த ஷேர்ஸ் கூட உனக்கு இல்லாம பண்ணிடுவாங்க..? வசதி எப்படி..? என்றான்.
லக்சனாவின் முகம் அப்படியே மாறியது.இதற்கு மேல் அவனிடம் பேசிப் பயனில்லை என்று தெரிந்தவள்,
“உன்னை கவனிச்சுக்கிறேன்டா..! என்றபடி, வேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு போக,
“நல்லா கவனிச்சுக்க. யாரு வேண்டாம்ன்னு சொன்னா..! அடிப் போடி..! என்று மித்ரன் ஓரக் கண்ணால் சுபஷ்வினியைப் பார்த்துக் கொண்டே நக்கல் அடித்தான்.அவன் பார்வையில் இருந்த மந்தகாசம், அவன் மனதிலும் இருந்திருக்க வேண்டும். அவன் பார்வையே ஒரு மார்க்கமாகத் தான் இருந்தது.
“நீங்க இதையெல்லாம் ஏன் என்கிட்டே சொல்லவே இல்லை..? என்றாள் அஸ்வினி, ரேகாவிடம்.
“இதெல்லாம் உண்மையில்லை. அதான், அதை சொல்லி உன் மனசைக் காயப்படுத்த வேண்டாம்ன்னு சொல்லலை..! என்றார்.
சங்கியும், ரேகாவும் உள்ளே செல்ல, பின் தங்கினாள் அஸ்வினி.
அவளின் அருகில் சென்றவன், அவள் எதிர்பாராவண்ணம்… அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டான். அவள் அதிர்ந்து விழிக்க,
“ஒரு நிமிஷத்துல அப்படியே உன் முகம் சுருங்கிடுச்சு..! அவ்வளவு தானா உன் நம்பிக்கை..! என்றான்.
“எனக்கு முகம் எல்லாம் சுருங்கலை. அது உங்க கற்பனை..! என்றாள்.
“இல்லையே..? குழந்தைன்னு சொன்ன உடனே, உன் ரியாக்சன் மாறுச்சே..! என்றான்.
“ஆமா, அதுக்கென்ன இப்போ..! என்றாள் எரிச்சலுடன்.
“மாறலாம் தப்பில்லை. மாறாம இருந்தா தான் தப்பு..! என்றான் இரு பொருள்பட.
“நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு, எனக்கு சுத்தமா புரியலை..! என்றாள்.
“உனக்கு புரிஞ்சுட்டாலும்..! என்று இழுத்தவன், பட்டென்று அவளை விட்டு விலகி செல்ல, சுபஷ்வினி தான் மனதிற்குள் நொந்து போனாள்.
பிடித்தவனை திருமணம் செய்தும், அவளுக்கு ஒரு நிறைவே இல்லை. மித்ரனின் நடவடிக்கைகள் அப்படி. அவளை அவன் நெருங்கவும் இல்லை. அதற்கான முயற்சியும் செய்யவில்லை.
“என்ன விகாஸ்.., இவங்க ரெண்டு பேரும் இப்படி இருக்காங்க..? என்று தேஜு அவனிடம் கேட்க,
“எனக்கும் அது தான் புரியலை. அஸ்வினிக்கு தான் அண்ணாவை பிடிக்குமே..அப்பறம் ஏன் ரெண்டு பேரும் இப்படி விலகி இருக்காங்க..! என்றான்.
“உங்க அண்ணன், ஒரு சரியான தத்தி..! என்றாள் தேஜு.
“எங்க அண்ணனை வச்சு என்னை எடை போடாத. நான் தத்தி எல்லாம் கிடையாது..? என்றான் விகாஸ்.
“நான் எதுக்கு உன்னை எடை போடணும்..? என்று அவள் கேட்டு முடிக்கும் போது, அவளுக்கே உண்மை உரைத்தது.
“அடப்பாவி..! நீ என்னை லவ் பண்றியா..? என்றாள் அதிர்ச்சியாய்.
“நான் எப்ப அப்படி சொன்னேன். எனக்கு என்ன குறைச்சல்? உன்னை லவ் பண்ணனும்ன்னு எனக்கு என்ன தலை எழுத்தா..? என்றான்.
“ஹோ..! சார் மூஞ்சிக்கு கிளியோபட்ராவா கிடைப்பாங்க..? என்றாள்.
“ஓய் நாட்….என்னோட அழகு அப்படி..! என்றான்.
“மைதா மாவு மாதிரி இருக்குற நீயெல்லாம் அழகை பத்திப் பேசக் கூடாது.. என்றாள் தேஜு.
“உனக்குப் பொறாமை..! என்றான்.
“ஆமா..! எனக்குப் பொறாமை…அடப் போடாங்..! என்றவள், கடுப்புடன் செல்ல, அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் விகாஸ்.
அறைக்குள் அமர்ந்து, லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவ மித்ரன்.
சுபஷ்வினி அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் வேலை செய்யும் பாங்கு, அவன் முகம், அவன் திமிரேறிய புஜங்கள்..என்று அவனைப் பார்த்து சைட் அடித்துக் கொண்டிருந்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பட்டென்று நிமிர்ந்தான் மித்ரன்.
“என்ன..? என்றான் புருவத்தை உயர்த்தி.
“ஒன்னுமில்லையே..? என்றாள்.
“இங்க பார் அஸ்வினி. நமக்கு மேரேஜ் ஆகிடுச்சு. இப்பவும் ஏன் பயந்து பயந்து சைட் அடிக்கிற..? நல்லாவே பார்த்து சைட் அடிக்கலாம்..! என்றான் சிரிப்புடன்.
“நான் ஒன்னும் பார்க்கலை..! என்றவள் கவுந்தடித்துப் படுத்துக் கொண்டாள்.
“சொந்த புருஷனையே சைட் அடிக்கிறவ, இவளாதான் இருப்பா..! என்று முனங்கியவன், மீண்டும் வேலையைப் பார்க்க,
“அப்படி இவன்கிட்ட என்னதான் இருக்குன்னு தெரியலை. நான் ஏன் இப்படி இருக்கேன். இவனை ஏன் எனக்கு இவ்வளவு பிடிக்குது.. கடவுளே..? என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். அவனிடம் நேசத்தை சொல்லவும் தயக்கம்.
மித்ரனின் போன் அடிக்க, அதை எடுத்தவன், அந்த பக்கம் சொல்லிய செய்தியில் அதிர்ந்தான்.
“மை காட், இதோ கிளம்பிட்டேன் டாட்..! என்றான்.
அவனின் பதட்டம் அவளையும் தொற்றிக் கொள்ள,
“என்ன ஆச்சு..? என்றாள்.
“பாட்டிக்கு சீரியஸ்..! நான் உடனே கிளம்பனும்..! என்றவன், அவளிடம்  சொல்லாமல், வேகமாக ரேகாவிடம் சென்றான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன், சில பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்ப, அங்கு ஒருத்தி இருந்ததையே மறந்து விட்டிருந்தான்.
அவளுக்கு கண்களில் கண்ணீர் பெருக, அவன் கிளம்பும் நேரம் அழுகக் கூடாது என்று அடக்கிக் கொண்டாள்.
“நானும் வரவா மித்ரா..? என்றார் ரேகா தயங்கியபடி.
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரை அழைத்து செல்லவும் தயக்கம், விட்டு செல்லவும் தயக்கம்.
“உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்ங்கம்மா..! என்றான்.ஒரு நிமிடம் யோசித்தவர்,
“விகாஸ்..! மித்ரன் கூட கிளம்பு..! என்றார்.
“அம்மா, நான் எப்படி..? என்று விகாஸ் வெகுவாக தயங்கினான்.
அவனின் தயக்கத்தில், மித்ரனுக்கு கோபம் வந்தது.
“அங்க இருக்குறவங்க, உனக்கும் அப்பாதான், பாட்டிதான். நான் உனக்கு அண்ணன். என்கூட வர, இன்னுமா தயக்கம் உனக்கு. அப்படி தயக்கத்தோட நீ வர வேண்டாம்..! நான் கிளம்புறேன்..! என்றான் கோபமாக.
“இல்லண்ணா..! நான் வரேன்..! என்றான் விகாஸ்.
“ம்ம்.. என்றவன், உடனடியாக கோவையில் இருந்து மும்பைக்கு பிளைட் டிக்கெட் புக் செய்தான்.
விகாஸ் கிளம்பி வர, இருவரும் உடனே கிளம்பினர். கடைசி வரை, மனைவி என்று ஒருத்தி இருக்கிறாள், அவளிடம் சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும் என்று அவனுக்குத் தோணவே இல்லை. சுபஷ்வினி மனதிற்குள் வெறுத்தே போனாள். இது மட்டும் காரணம் இல்லை. இந்த மூன்று நாட்களும் அவன் நடந்து கொண்டதும் ஒரு காரணம்.
“என்னடி இப்படி கிளம்பிப் போறார்..? உன்கிட்ட கூட சொல்லலை..! என்றாள் தேஜு.
“ரூம்லயே சொல்லிட்டார்..! என்று சமாளித்தாள் அஸ்வினி.
“அத்தை, எனக்கும் ஆபீஸ்ல லீவ் முடியுது. நானும் கிளம்பனும்..! என்றாள் சுபஷ்வினி.
“என்னமா நீ..? அவனும் இப்படி அவசரமா போயிருக்கான். நீயும் கிளம்பனும்ன்னு சொல்ற..? என்றார் ரேகா.
“ஒன் வீக் தான் அத்தை லீவ் போட்ருந்தேன். மேரேஜ் எதிர்பாராத விதமா நடந்திடுச்சு. லீவ் எக்ஸ்டன் பண்ண முடியாது..! என்றாள்.
“அதுவும் சரிதான். எங்க அவசரத்துக்கு, உன்னை யோசிக்காம விட்டுட்டோம் அஸ்வினி. சாரிடாமா..! என்றார்.
“ஐயோ அத்தை..! நீங்க ஏன் என்கிட்ட சாரி கேட்குறிங்க..? அவர் வர வரைக்கும், நான் அம்மா வீட்ல இருந்தே ஆபீஸ் போறேன்..! என்றாள் முடிவாக.
“சரிமா..! கிளம்பறதுக்கு ஏற்பாடு பண்றேன்..! என்றார் ரேகா.
“சரிங்கத்தை..! என்றபடி அவள் செல்ல,
“எனக்கு என்னமோ…ரெண்டு பேருக்கும் இடையில ஏதோ சரியில்லைன்னு தோணுது..! என்றார் சிவகாமி பாட்டி.
“அதேல்லாம் இல்லைம்மா..! சுபஷ்வினி எப்பவுமே இப்படித்தான் அமைதியா இருப்பா..! என்றார் ரேகா.
“எப்படியோ, பிரச்சனை இல்லாம, நல்லா இருந்தா சரி..! என்றார் சிவகாமி பாட்டி.
“அப்பாவை, ஒரு காருக்கு சொல்ல சொல்லுங்கம்மா..! என்றார் ரேகா.
“சரி என்று சிவகாமி பாட்டி எழுந்து செல்ல,
மும்பையின் நிலவரத்தையும், அங்கு நேசனின் நிலைமையும் எண்ணி கவலை கொண்டார் ரேகா.
சில காத்திருப்புகளுக்கான அர்த்தம் யாருக்கும் தெரிவதில்லை. ஆனாலும் அதில் ஒரு ஆனந்தம்.
வாழ்க்கை, எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பதில்லை. கொடுத்ததை வைத்து நிறைவு கொள்ளும் பக்குவம், இங்கு பலருக்கும் இல்லை. இதில் லக்சனாவும் அடக்கம், ராணி பாட்டியும் அடக்கம்.

Advertisement