Advertisement

குடை 20:
“விகாஸ், இங்க என்ன பண்ற..? என்றாள் தேஜு.
“சும்மா..அப்படியே காத்து வாங்கலாம்ன்னு.. என்றான்.
“பொய் சொல்லாத..! உன் முகமே சரி இல்லை. என்ன பிரச்சனை. ஊட்டிக்கு கூட்டிட்டு வந்து, எங்களை சுத்திக் கட்ட கூட, கூட்டிட்டு போகலை..! என்றாள் யோசனையாக.
“அதான், அம்மா சொன்னாங்களே..! என்றான்.
“ஆமா, சொன்னாங்க..! என்றாள்.
“என்னால இன்னும் மித்ரனை, அண்ணனா ஏத்துக்க முடியலை தேஜு..! என்றான்.
“லூசு மாதிரி பேசாத விகாஸ். உனக்கு அண்ணன்னு சொல்லி, அவர் வானத்துல இருந்து குதிச்சு வரலை. பத்து வயசு வரைக்கும் உங்க கூட தான் இருந்திருக்கார். உங்க குடும்ப பிரச்சனைல, அம்மாகிட்ட ஒரு பையன், அப்பாகிட்ட ஒரு பையன்னு பிரிஞ்சிருக்கிங்க..! இப்போ உங்க அண்ணன் தேடி வந்திருக்கார். உனக்கு அப்போ விவரம் பத்தலை. உனக்கும்  விவரம் தெரியற வயசுல, நீங்க பிரிஞ்சிருந்தா…கண்டிப்பா நீயும் அவங்களைத் தேடி போயிருப்ப.. என்றாள்.
“இப்ப என்ன சொல்ல வர தேஜு..! நான் தான் தப்பு. அவன் சரின்னு சொல்ல வரியா..? என்றான் விகாஸ்.
“நான் அப்படி சொல்லலை விகாஸ். தெரிஞ்சோ, தெரியாமலோ நீ உங்க அம்மாகிட்ட வளர்ந்துட்ட. ஆனா மித்ரன் சார், இத்தனை வருஷம் அம்மா பாசம் இல்லாமலேயே வளர்ந்துட்டார்..! மனசுக்கு கொஞ்சம் கஷட்டமா இருக்கும். ஆனா நீ ஏத்துகிட்டு தான் ஆகணும்..! என்றாள்.
“இத்தனை வருஷம், நானும் தான் அப்பா பாசம் இல்லாமலேயே வளர்ந்தேன்.. அது யாருக்கும் பெருசா தெரியலை.. என்றான் விகாஸ்.
“இப்ப என்ன சொல்ல வர.. மித்ரனை இங்க இருக்க வேண்டாம்ன்னு சொல்ல வரியா..? இத்தனை வருஷம் பிரிஞ்சு இருந்த, உங்க அப்பா, அம்மா சேர வேண்டாம்ன்னு நினைக்கிறியா..? என்றாள்.
“நான் அப்படி நினைப்பேனா, தேஜு..? என்றான் கவலையாக.
“பின்ன என்ன பிரச்சனை உனக்கு..? மித்ரனை உனக்கு எவ்வளவு பிடிக்கும். இப்போ, அவர் தான் உன் அண்ணன்னு தெரிஞ்சதுக்கு அப்பறமா, இன்னும் கூடுதலா பிடிக்கணும் உனக்கு. அவரை மாதிரி,நீயும் உங்க குடும்பம் சேரணும்ன்னு நினைச்சா, இப்படி யோசிக்கிறதை விட்டுட்டு, அடுத்து என்ன பண்றதுன்னு யோசி..! என்றாள்.
“கொஞ்சம் குழப்பமா இருந்தது.இப்போ ஓகே தேஜு. ரொம்ப தேங்க்ஸ்..! என்றபடி அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்..! ஏதோ ஒரு வகையில பிரிஞ்ச நம்ம எல்லாரும், எங்கோ வாழ்ந்து, ஏதோ ஒரு புள்ளியில வந்து சேர்ந்திருக்கோம். இது தான் விதி போல.. என்றாள்.
“உண்மைதான் தேஜு..! வாழ்க்கை ஒரு வட்டம் தான்..! என்றான்.
“இப்பவாவது புரிஞ்சதே..! என்று சொல்லி சிரிக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விகாஸ்.
“என்ன..? என்னை சொல்லிட்டு, இப்ப நீ சைட் அடிக்கிற மாதிரி இருக்கு. வாய்ப்பில்ல மச்சி, வாய்ப்பே இல்லை..! என்றாள்.
“ம்க்கும், உன்னை சைட் அடிச்சுட்டாலும்..! என்று அவன் இழுக்க,
“உன் முகர கட்டைக்கு எல்லாம், நான் மயங்கவே மாட்டேன்..! என்றாள்.
“எனக்கும், உன்கிட்ட சிக்கி, பாடா படனும்ன்னு ஆசை இல்லை..! என்றான் விடாமல்.
“உனக்கு ஆசை இல்லை. ஆனா எதிர்காலத்துல…நீ எனக்கு அத்தான் ஆனாலும் ஆச்சர்யபடுறதுக்கில்லை… என்றாள்.
“என்ன சொல்ற..? என்றான் புரியாமல்.
“எப்படியும் சுபஷ்வினி தான் உனக்கு அண்ணி..! அப்போ நீ எனக்கு அத்தான் தான..? என்றாள்.
“ஹேய் நிஜமாவா..? இது எப்ப நடந்தது..? எப்படி நடந்தது..? என்றான் சந்தோஷமாக.
“அது ஒரு பெரிய கதை..! என்றவள், அந்த பெரிய கதையை, சுருக்கமாக சொல்லி முடித்தாள்.
“இவ்வளவு நடந்திருக்கா..? என்றான்.
“இவ்வளவும் நடந்திருக்கு..! என்றாள்.
“ஹேய்..சூப்பர்,சூப்பர்..! என்று விகாஸ் சொல்ல,
“என்ன சூப்பர்..? என்றபடி வந்தான் ஜீவ மித்ரன்.
“அது ஒண்ணுமில்லை சார்..! தெரிஞ்சு நீங்க என்ன செய்ய போறீங்க..? என்றாள் தேஜு.
“நான் என்ன பண்ண முடியும்..? எனக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில்..! என்றான்.
“அது நீங்க சம்பந்தப்பட்டது  தான்..! என்று விகாஸ் உளறி விட,
“நான் சம்பந்தப்பட்டதா..? என்றான் கேள்வியாய் மித்ரன்.
“அது..ஒண்ணுமில்லை மித்ரன் சார்..! விகாஸ் சும்மா உளறிக் கொட்டுறான். இல்லையா விகாஸ்..? என்றாள், அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே.
“ஹாங்..ஆமா, ஆமா அண்ணா..! என்றான்.
இப்போது தான் அண்ணன் என்று அழைக்கிறான். அந்த அழைப்பு மித்ரனிடத்தில் ஒரு பெரிய மாற்றத்தையே கொண்டு வந்தது என்று சொல்லலாம். அந்த மகிழ்ச்சியில், அவன் இந்த விஷயத்தை மறந்து விட்டான்.
அவன் அசந்திருந்த நேரம், விகாஸை தள்ளிக் கொண்டு வந்து விட்டாள் தேஜு.
“எதுக்குடா, இப்படி உளறிக் கொட்டுற..? அவருக்கு இன்னும் விஷயம் தெரியாது..! என்றாள்.
அவனைத் திட்டுகிறேன் பேர்வழி என்று அவன் மீது சாய்ந்திருந்தாள் தேஜு. அதை அவள் உணரவில்லை. ஆனால் விகாஸ், ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை உணர்ந்தான். அவன் மனதிற்குள் உணர்வுகள் பேயாட்டம் போட,
“தேஜு..! கொஞ்சம் விலகி நின்னு..! என்றான்.
அவனை முறைத்துக் கொண்டே விலகியவள்,
“நான் என்ன சொல்றேன்..? நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க..? என்றாள்.
“நான் ஒன்னும் பண்ணலையே..? என்றான் பாவமாய்.
“கடவுளே…! இவனை வச்சுகிட்டு.. என்று தலையில் அடித்தவள்,
“நீயா, யார்கிட்டையாவது வாயைத் திறந்த, கொன்னுடுவேன் மகனே..! என்று மிரட்டி விட்டு சென்றாள்.
அவள், அப்படி மிரட்டி விட்டு சென்றது கூட அழகாய் தோன்றியது விகாசிற்கு. அவள் அருகில் வரும் போது, அவனறியாமலே மனதில் மழைச் சாரலை உணர்ந்தான்.
அங்கே மும்பையில், நேசனின் பாடு தான் திண்டாட்டம் ஆனது. இத்தனை நாள் அருகில் இருந்த மகனின் பிரிவு, அவரை அப்படி ஆக்கியிருந்தது. மகன், அவன் அம்மாவிடம் சென்று விட்டான், என்பதை அறிந்து கொண்ட நிமிடத்தில் இருந்து, அவருக்கும் உள்ளே ஆசை பாடாய் படுத்தியது.
இத்தனை வருட மனைவியின் பிரிவு, அவருக்கு இப்போது பூதாகரமாய் தெரிந்தது. இருந்தாலும் அவர்களைத் தேடி செல்ல, அவர் விரும்பவில்லை.
ராணியம்மாளும், அவருடன் இப்போது சரியாக பேசுவதில்லை. அவருக்கு உடம்பும் கொஞ்சம் சரியில்லாமல் போனது. இதை சாக்காக வைத்து, பேரனை திரும்பி வர வைக்க வேண்டும் என்று ஒரு திட்டத்தைத் தீட்டினார் அவர். ஆனால், இத்தனை வருடம் ஏமாந்த மருமகள், இப்போது கொஞ்சமாவது தெளிந்து இருப்பாள், என்று எண்ணாமல் விட்டது தான் அவர் செய்த தப்பு.
மூன்று நாட்கள் கழித்து,
“அம்மா..! என்றபடி  வசந்தாவை அணைத்துக் கொண்ட சுபஷ்வினியின் புத்துணர்ச்சியைக் கண்டு, ஆச்சர்யப்பட்டார் வசந்தா.
“வாங்க வசந்தா மிஸ்..! என்றார் ரேகா.
“என்ன..? இன்னமும் மிஸ்ன்னு சொல்லிட்டு இருக்கீங்க..? பேர் சொல்லியே கூப்பிடுங்க..! என்றார் வசந்தா.
“திடீர்ன்னு வரலை.கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேன்.. என்ற ரேகா,
“எப்படி இருக்கீங்க..? எத்தனை வருஷம் ஆச்சு உங்களைப் பார்த்து..! என்ற சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு, அத்தனை வருட கதையை பேச ஆரம்பித்து விட்டனர்.
“ஹேய் சங்கி…! வாடி, ஏன் அங்கயே நிற்குற..? என்றாள் தேஜு.
“என் கூடவா பேசுன..? பாருங்கப்பா..ஊட்டில மழை வரப் போகுது..! என்று சங்கி கிண்டல் அடிக்க,
“ரொம்ப ஓவரா பண்ணாதடி, வா..! என்று தொளில் கை போட,
“திருந்துறதா இருந்தா, சொல்லிட்டு திருந்துங்கடி..! பக்குன்னு இருக்கா இல்லையா..? என்றாள் நெஞ்சில் கைவைத்து.
“ஹேய் சங்கி..! நீ வரதா சொல்லவே இல்லையே..? என்றாள் சுபஷ்வினி.
“அடிப்பாவி..! உனக்கு கல்யாணம்ன்னு தான், அம்மா என்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தாங்க..! என்றாள் சங்கி.
“எனக்கு கல்யாணமா..? என்று அதிர்ந்தாள் சுபஷ்வினி. தேஜஸ்வினிக்கும் யோசனையாக இருந்தது.
“வாங்க ஆன்ட்டி..! என்று விகாஸ் வரவேற்க,
“வாங்க..! என்பதோடு முடித்துக் கொண்டான் மித்ரன்.
அவர்கள் இருவரும் போனிலேயே எல்லா விஷயத்தையும் பேசி இருந்தபடியால்,
“மித்ரன் இன்னும் கொஞ்சம் கூட மாறலை ரேகா..! அதே தெனாவெட்டு..! என்றார் வசந்தா.
மித்ரன் எரிச்சலுடன் அவரைப் பார்க்க, சுபஷ்வினிக்கு பயமாக போனது, அம்மாவை எதுவும் சொல்லிவ விடுவானோ என்று.
“ஆமா..மித்ரா..! ஸ்கூல் படிக்கும் போது கூட இப்படித்தான் இருப்ப. இந்த தைரியம், கொஞ்சம் தெனாவெட்டு, அப்புறம் கொஞ்சம் பிடிவாதம்.! என்றார் வசந்தா.
“அது கூடவே பொறந்தது..! நான் என்ன பண்றது..? என்றான் அசால்ட்டாய்.
“மித்ரா..! அவங்க உனக்கு மாமியார் ஆகப் போறவங்க..! இப்படியெல்லாம் எடுத்தெறிந்து பேசக்கூடாது.. என்றார் ரேகா.
அவர் சொன்னதைக் கேட்டு, மித்ரன் அதிர்ச்சி அடைந்தானோ இல்லையோ சுபஷ்வினி அதிர்ந்தாள்.
“என்ன மாம் சொல்றிங்க..? என்றான்.
“ஆமா..! உனக்கும், சுபஷ்வினிக்கும் மேரேஜ்…! எல்லாத்தையும் பேசி முடுச்சுட்டோம்..! என்றார்.
“என்ன ரேகா சொல்ற..? என்று சிவகாமி பாட்டியும் அதிர்ந்து கேட்டார்.
“இவங்களுக்கு என் கதை எல்லாம் தெரியுமா..? என்றான் மித்ரன்.
“நடந்த எல்லா விஷயத்தையும் இவங்க கிட்ட சொல்லி தான் பொண்ணு கேட்டிருக்கேன்..! என்றார் ஒரு முடிவுடன்.
“இப்போ, இதுக்கு என்ன அவசரம்..? என்றான் கொஞ்சம் அமைதியாக. ஏனோ பாட்டியிடம் பேசுவதைப் போல், ரேகாவிடம் அவனால் பேச முடியவில்லை.
“இன்னொரு தடவை உன்னோட வாழ்க்கை சீரழியறதை என்னால் பார்க்க முடியாது. ஒரு அம்மாவா உனக்கு எதையும் நான் செஞ்சது கிடையாது. இப்போ, உன்னோட வாழ்க்கையை நேர்படுத்தி குடுக்குற பொறுப்பையாவது, எனக்குக் குடுப்பேன்னு நம்புறேன்..! என்றார் ரேகா.
அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த சுபஷ்வினிக்கு, மயக்கம் போடாத குறை தான்.
“என்ன நடக்குது இங்க..? என்னை யாரும் ஒரு வார்த்தை கேட்கலை. ஒரு வேளை, தேஜு எதுவும் சொல்லிட்டாளா..? என்று தேஜுவைப் பார்த்தாள்.
தேஜுவின் முகத்தில் இருந்த குழப்பம், அவளுக்கும் இப்போது தான் தெரியும், என்பதை சொல்லாமல் சொல்லியது. கேட்ட விஷயம், சந்தோசம் தரக் கூடியது என்றாலும், மனதின் ஓரத்தில், சின்ன நெருடல் இருந்து கொண்டே இருந்தது அவளுக்கு.
“எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. ஆனா எனக்கு டாடி வரணும். அவர் இல்லாமல் கண்டிப்பா, நான் எந்த நல்ல காரியத்தையும் செய்ய மாட்டேன்..! என்றான் மித்ரன், சமயம் பார்த்து.
ரேகா கொஞ்சம் தயங்க,
“என்ன ரேகா தயங்குற..? நேசன் வரதுல உனக்கு என்ன பிரச்சனை..? சரின்னு சொல்லு..! என்றார் சிவகாமி பாட்டியும்.
“அவருக்கு பிராப்ளம் இல்லைன்னா, எனக்கும் ஒண்ணுமில்லை..! என்றார் ரேகா. முகத்தில் ஒரு சிறு எதிர்பார்ப்பு இருந்தது, நேசனின் வரவை எதிர்பார்த்து.
“உனக்கு இதுல சம்மதம் தான, சுபஷ்வினி..? என்றார் ரேகா.
 அவள் அம்மாவைப் பார்க்க, சங்கியோ அவளை முறைத்தாள்.
“அப்படியே பயந்தவ மாதிரியே நடிக்காத. மனசுக்குள்ள ஒரே கொண்டாட்டம் தான். ஆனா, வெளிய காட்டாம இருக்க. சரின்னு சொல்லிடு. இல்லைன்னா, மித்ரனை, மிஸ் பண்ணிடுவ..! என்றாள் சங்கி.

Advertisement