Advertisement

“அது என்னவோ உண்மைதான்..! என்றான்.
“அந்த கம்பெனில வேலை கிடைக்க..மேல்மாடில சரக்கு இருக்கணும். நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம். அதுமட்டும் இல்லாம அந்த கம்பெனி எம்டி ரொம்ப கோபக்காரராம்..! என்றாள்.
“அதெப்படி உங்களுக்குத் தெரியும்..? என்றான்.
“அவ்வளவு பெரிய ஆளைப்பத்தி தெரியாம இருக்குமா..? இன்பாக்ட் அந்த எம்டியை எனக்கு நல்லா தெரியும்..? என்றாள்.
“எப்படி கஜினி படம் மாதிரியா..? என்று விகாஸ் கேட்க..
“ஹா..ஹா..கண்டுபிடிச்சுட்டிங்களா..? என்று அசடு வழிந்தாள்.
“உங்களுக்கு பயமே இல்லையா..? இப்படி ரெண்டு பாய்ஸ் கூட ட்ராவல் பண்ண..? என்றான் ஆச்சர்யமாய்.
“எதுக்கு பயப்படனும்.உங்களைப் பார்த்தாலும், இதோ சாரைப் பார்த்தாலும் எனக்குத் தப்பா தெரியலை.. என்றவள்,
“அப்படி சொல்லுவேன்னு நினைக்காதிங்க…! எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கிற அளவுக்கு தெம்பும்,தைரியமும் இருக்கு. அசட்டுத் தனமான தைரியம் கிடையாது.நீங்க ரெண்டு பெரும் ஏறுன உடனே… உங்களுக்கே தெரியாம உங்களை போட்டோ எடுத்து… அதை என் அம்மா செல்லுக்கு அனுப்பிட்டேன்.நீங்கதான் என் கூட டிராவல் பண்றிங்க அப்படின்னு சொல்லி மெசேஜ் போட்டுட்டேன்.அப்பறம் காவலன் ஆப் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன்.சோ எனக்கு எதுக்கு பயம்..? என்று அவள் கேட்க..
அமைதியாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்த மித்ரனுக்கு கூட… அவளை நினைத்து பரவாயில்லை என்று தோன்றியது.
“எங்களை எப்போ போட்டோ எடுத்திங்க..? என்று விகாஸ் கேட்க…
“அந்த ரகசியத்தை ஆண்களுக்கு நான் சொல்ல மாட்டேன்…! என்று அவள் சொல்ல…அவளை முறைத்தான் விகாஸ்.
“ரெண்டு பெரும் கொஞ்ச நேரம் வாயை மூடுங்க..! பக்கத்துல யாரும் உட்கார்ந்து வர வேண்டாமா..? என்று மித்ரன் எரிந்து விழ…
“சாரி சார்..! என்றபடி அமைதி ஆனான் விகாஸ்.
“இப்பவும் நீங்க எதுக்கு சாரி சொல்றிங்க விகாஸ்.. என்றவள்,
“ஹலோ சார்..! இது எங்க வாய்.., நாங்க பேசிகிட்டு வருவோம்,பேசாம வருவோம்.., உங்களுக்கு என்ன சார் வந்தது..? நீங்க ஏன் பேசாம வரிங்கன்னு நாங்க எதாவது கேட்டோமா..? என்றாள்.
“கேட்டுத்தான் பாரு..! என்றான் மித்ரன்.
“என்ன மரியாதை இல்லாம பேசுறிங்க..? என்று அஸ்வினி கோபம் கொண்டு கத்த…
“மரியாதையை தானா தான் குடுக்கணும்.கேட்டு வாங்கக் கூடாது..! என்றான்.
“சரிடா மித்ரா..! என்று அசால்ட்டாய் சொன்னவள் வெளியே வேடிக்கைப் பார்க்கத் தொடங்க…
“ஏய்..! என்ன திமிரா..? என்றான் ருத்ர மூர்த்தியாய்.
‘மரியாதை எல்லாம் தானா கொடுக்கணும் சார்.கேட்டு வாங்கக் கூடாது..! என்றாள் அவளும் அவனைப் போலவே.
“பேசாம இருங்க அஸ்வினி. அவர் தான் ஏதோ டென்சன்ல இருக்கார்னா.. நீங்களும் ஏன் அதை அதிகப்படுத்துற மாதிரியே பேசுறிங்க. ஒருத்தர் நம்மை மரியாதை இல்லாம பேசுனா.., நாமும் அப்படி பேசனும்ன்னு இருக்கா என்ன..? யார் எப்படி இருந்தாலும், நாம நாமளா இருக்கணும்.அது தான் ஒரிஜினாலிட்டி.. என்றான் விகாஸ்.
“உண்மைதான் விகாஸ்.இனி இவர் பஞ்சாயத்துக்கே போக மாட்டேன்..! என்றபடி திரும்பிக் கொண்டாள்.
“என்ன பண்ணிட்டு இருக்க மித்ரா..? எதுக்காக இப்படி செல்ப் கண்ட்ரோல் இழக்குற..? பட்டதெல்லாம் போதாதா..? எந்த இடத்திலும்,எந்த நிமிஷத்திலும் நீ நிதானம் தவறக் கூடாது.. என்று மனசாட்சி அறிவுரை வழங்க, அதனை உடனே ஏற்றுக் கொண்டவன்…
“சாரி..மிஸ் அஸ்வினி..! என்றான்.
அவள் காதுகளை மீண்டும் தேய்த்து விட, அதைப் பார்த்தவனுக்கு மீண்டும் கோபம் வர அடக்கிக் கொண்டான்.அவன் சாரி சொன்னது கூட அத்தனை கம்பீரமாய் இருந்தது.
“சார் சொல்றனேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க..! நீங்க சாரி சொல்றது கூட அவ்வளவு கெத்தா சும்மா ஜம்முன்னு இருக்கு..! என்று அவள் மனதில் பட்டதை சொல்ல..அவனுக்குள் ஆச்சர்யம்.இப்படியும் ஒருத்தி பேசுவாளா என்று.
“ம்ம்..தேங்க்ஸ்..! என்றபடி அவன் தலையைத் திருப்ப…
“விக்கெட் விழுந்திருச்சு..! என்று விகாஸிடம் கையைக் காட்டினாள் அஸ்வினி.
அவளின் சேட்டைகளைப் பார்த்த விகாசிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.வாய் திறக்காமல் சிரிக்க..பக்கத்தில் இருந்த மித்ரனுக்கு நடந்த சம்பாஷனைகள் தெரிந்த போதும், அவன் அதை தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.
அந்த ரயில் பயணத்தின் நிம்மதியை கெடுக்க அவனுக்கே விருப்பம் இல்லை போலும்.ரயிலின் தடக் தடக் ஓசையும்., இரு புறமும் கண்ணில் பட்டு மாயமாய் சென்று கொண்டிருந்த இயற்கையின் செழிப்பும்,பிரமிப்பில் அவர்கள் கூடவே பயணித்த மரங்களும், ஒரு இனிமையான அனுபவம் தான்.
ரசிக்கத் தெரிந்த மனிதர்களுக்கு ரயில் பயணம் என்பது மறக்க முடியாத அனுபவம் தான்.சில பசுமையான நினைவுகளின் பட்டியலில் கண்டிப்பாக சேர்ந்து விடும்.
அந்த இடமே அமைதியாய் இருக்க, அஸ்வினிக்கு அந்த அமைதி பிடிக்கவில்லை போலும். ரயிலில் ஏறி ஒரு மணி நேரம் தான் சென்றிருந்தது.
கல்யாண் ஜங்க்ஸனில் இரண்டு நிமிடம் நின்றது வண்டி. அப்போது அவர்களின் பெட்டிக்கு இன்னொரு பெண்ணும் வந்தாள். பார்க்க அவ்வளவு அழகு. மாடல் அழகி போல் இருந்தாள்.
வந்தவள் அஸ்வினியின் அருகில் ஒய்யாரமாய் அமர…அவளை முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை அஸ்வினிக்கு.
“ஆளும் மண்டையும்,அவ டிரசும்..! என்று அவள் மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
விகாசைப் பார்க்க, அவனோ அந்த அழகியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த அஸ்வினி அவனை முறைக்க… அவர்களின் பாவனைகளைப் பார்த்த மித்ரனுக்கு சிரிப்பு.ஆனால் அடக்கிக் கொண்டான்.
“விகாஸ்…! என்றாள் எரிச்சல் குரலில்.
“சொல்லுங்க அஸ்வினி..! என்றான்.
“எனக்கு பசிக்குது, சாப்பிடாம ட்ரெயின் ஏறிட்டேன். நீங்க சாப்பிட்டிங்களா..? என்றாள்.
“நான் சாப்பிட்டேன் அஸ்வினி..! உங்களுக்கு எதுவும் வாங்கனுமா..? சொல்லி இருந்தா ட்ரெயின் நின்னப்பவே வாங்கி இருக்கலாம்ல.. என்றான்.
“நோ தேங்க்ஸ்..! நான் சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன்..! என்றாள்.
“எப்படி..? நீங்கதான் வேலையை விட்டுட்டிங்களே…? என்று அவன் எதார்த்தமாய் கேட்க, அந்த அழகி அவளைப் பார்த்து ஒரு மாதிரி சிரித்து வைக்க, அவளுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.
“வேலையை விட்டா, சாப்பிடக் கூடாதுன்னு இருக்கா..? என்றாள்.
“ஐயோ..! நான் அப்படி சொல்லலை அஸ்வினி.கிளம்புறப்போ சமைக்க நேரம் இருந்ததா…? நீங்க ஹாஸ்ட்டல்ல தான இருந்திருப்பிங்க…? அதான் கேட்டேன் என்றான்.
“நானும் இன்னும் மூணு பொண்ணுங்களும், அப்பார்ட்மென்ட்ல தங்கியிருந்தோம்…அதான் வரப்போ சமைச்சே எடுத்துட்டு வந்துட்டேன்..! என்று அவள் சொல்ல…
“ஓகே..! நீங்க சாப்பிடுங்க..! மணி ஆயிடுச்சு..! என்று அவன் அக்கறையாய் கூற…அவளும் தனது உணவைக் கடை விரித்தாள்.
பேருக்குக் கூட மித்ரனை சாப்பிட அழைக்கவில்லை.அவனின் மீதான பயத்தால் தான் அவள் கூப்பிடவில்லை.அவள் கூப்பிட்டு,அவன் ஏதாவது கத்தி, வந்திருக்கும் அந்த அழகி முன்பு அவளுக்கு இன்னமும் அவமானம் நேரலாம் என்பதால் விட்டு விட்டாள்.
தக்காளி சாதமும்,உருளை வறுவலும் பார்ப்போரை தூண்டும் வகையில் ஸ்பைசியாக இருந்தது பார்க்கவே.
வேகமாக அதை உண்ணப் போனவள்… என்ன நினைத்தாளோ தெரியவில்லை, மித்ரனை நோக்கி ஒரு டப்பாவை நீட்டினாள்.
“நீங்க என்னைத் திட்டினாலும் பரவாயில்லை.உங்க கண்ணுலையே தெரியுது, நீங்க எவ்வளவு பசியா இருக்கிங்கன்னு.இதை சாப்பிட்டுட்டு அப்பறம் பொறுமையா என்னைத் திட்டுங்க..! என்றாள்.
அவள் அவனுக்கு உணவை நீட்டியதும் ஒரு நிமிடம் அவன் கண்கள் கலங்கித்தான் போனது.பிறர் அறியாமல் மறைத்துக் கொண்டான்.
“எனக்குக் குடுத்துட்டா…உனக்கு..? என்றான்.
“எனக்கு இன்னொரு பாக்ஸ் இருக்கு..! நான் ட்ரெயின்ல போறப்ப எப்பவும் சேர்த்து தான் கொண்டு வருவேன்…! பிளீஸ் வாங்கிக்கங்க சார்..! என்றாள்.
அவன் அந்த அழகியைப் பார்க்க, அவள் கண்களில் திமிரும், அவர்களை மதிக்காத ஒரு பாவனையும் தெரிந்தது.ஆனால் மித்ரன் அதை கண்டு கொள்ளாமல் அவள் நீட்டிய உணவு டப்பாவை வாங்கிக் கொண்டான்.
“கூடவே இன்னொரு விஷயம் சொல்லவா சார்..? என்றாள்.
“என்ன..? என்றான்.
“இல்லை..! உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எங்களுக்குத் தெரியாது. ஆனா இந்த பயணம் உங்க வாழ்க்கையையே மாத்தலாம் இல்லையா..? அதனால் எதையாவது யோசிக்காம…இப்ப இருக்குற இந்த நிமிஷத்தை சந்தோஷமா அனுபவிங்க..! என்றாள்.
“என்ன அட்வைஸா..? என்றான்.
“நீங்க எப்படி எடுத்துக்கிட்டாலும் எனக்குக் கவலை இல்லை.. என்றபடி அவள் சாப்பிடத் தொடங்கினாள்.
அவனும் அவளைப் பார்த்தபடியே சாப்பிடத் தொடங்க…இவர்களின் இந்த பிணைப்பை விகாஸ் எதிர்பார்க்கவில்லை போல.இவர்களையே ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த அழகி…எதிரில் இருந்த மித்ரனையே முறைத்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த விகாசிற்கு குழப்பம்.
“இவங்க ஏன் இவரை முறைச்சுகிட்டு இருக்காங்க..? என்று அவன் யோசிக்க…
மித்ரனுக்கு அந்த யோசனையெல்லாம் இல்லை போல.அவள் கொடுத்த உணவை ரசித்து,ருசித்துக் கொண்டிருந்தான். இப்படி சாப்பிட்டு பல நாட்கள் ஆனது அவனுக்கு. அந்த உணவின் சுவை யாரையோ நியாபகப் படுத்த, அவனுக்குள் தோன்றிய இளக்கம்..நொடியில் மறைந்து போனது.

Advertisement