Advertisement

குடை 2:
“இப்ப எதுக்காக இவன் என்னைப் பார்த்து அப்படி ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சான்..? என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அஸ்வினி.ஆனால் அவனோ அதற்கு பிறகு அவளை  கண்டு கொள்ளாமல் தலையைத் திருப்பி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தான்.
ட்ரெயின், தானே ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் ட்ரெயினில் ஏறிய இந்த அரை மணி நேரத்தில் அவன் ஒரு சில வினாடிகள் தான் தலையைத் திருப்பி இவர்களைப் பார்த்திருப்பான். அதுவும் அந்த நக்கல் சிரிப்பிற்காக மட்டுமே.
“என்ன சார்..? அப்ப இருந்து அமைதியா வரிங்க..! உங்க பேரைக் கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறிங்க..? என்று விகாஷ் தன்மையாய் கேட்டான்.
“என் பேரைத் தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க..? என்றான் முதன் முறையாக வாயைத் திறந்து.
“யப்பா சாமி..பிறக்கும் போது இரும்பை முழுங்கி இருப்பானோ..? வார்த்தை இவ்வளவு கனமா வருது..? என்று மனதில் எண்ணிய அஸ்வினி…
“விடுங்க விகாஷ்..! ரொம்பத்தான் பண்றார். இவர் பேர் தெரிஞ்சா என்ன தெரியலைன்னா என்ன..? ஒரு பேரைக் கேட்டதுக்கு என்னமோ… வயசுபிள்ளை, வாலிபனைக் கண்டு பயந்த மாதிரி இப்படி பார்க்குறார்..! என்றாள்.
“ஏய்..! என்றான்.
“என்ன சார் ஏய்..! பொண்ணு நானே என் பேரைத் தைரியமா சொல்றேன். உங்களுக்கு என்ன சார்..? என்றாள்.
“பொண்ணுங்க உங்களுக்கு எதுல தான் தைரியம் இல்லை, இதுல தைரியமா இருக்குறதுக்கு.ஒரு இளிச்சவாயன் கிடைச்சா போதும்.., உடனே பேசிப் பேசியே மிளகாய் அரைக்க வேண்டியது. அப்பறம் ஏதாவது ஒண்ணுன்னா… அழுது அழுது நாடகம் நடிக்க வேண்டியது… என்று அவன் கடித்துக் குதற..
“சார்..! மைன்ட் யுவர் வோர்ட்ஸ்..! உங்களுக்கு சொல்லவோ,பேசவோ இஷ்ட்டம் இல்லைன்னா பேசாதிங்க, சொல்லாதிங்க. அதை விட்டுட்டு கண்டபடி பேசுறிங்க.பாக்கத்தான் பக்கா டீசன்ட். வாயைத் திறந்தா…யப்பா சாமி…! என்று அஸ்வினி பொரிந்து தள்ளினாள்.
“விடுங்க அஸ்வினி…! அவர் வேற மனநிலையில் இருக்கலாம்.அது தெரியாம நாமளும் நம்ம பங்குக்குப் பேசக்கூடாது..! என்றவன்..
“சார் சார்..! நாங்க கேட்டது தப்புத்தான்..! உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. டிவில கூட பார்த்திருக்கேன்.ஆனா பேர் தெரியலை. அதனால் தான் கேட்டேன்.தப்பா இருந்தா சாரி..! என்று தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டான் விகாஸ்.
“நீங்க எதுக்கு விகாஸ், இவர்கிட்ட சாரி கேட்குறிங்க…? ஒரே பெட்டில டிராவல் பண்றோம்.இன்னும் இருபத்தி ஆறு மணி நேரம் ஒன்னாதான் டிராவல் பண்ண போறோம்..! ஒருத்தர் பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கறதுல தப்பில்லையே..! அதுக்குன்னு இப்படி பேசுனா கோபம் வராதா…? நியாயப்படி பார்த்தா அவர் தான் சாரி கேட்கணும்..இங்க நீங்க ஏன் கேட்குறிங்க..? என்று அஸ்வினி அவள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டே இருக்க…
“வில் யு ஸ்டாப் இட்…! என்று கர்ஜனையாகக் கூறினான் மித்ரன்.
“என்ன சார் ஸ்டாப் இட்.ஸ்டாப் பண்ண மாட்டேன் சார்..என்ன சார் பண்ணுவிங்க..! உங்க பேரைத்தான கேட்டோம்..! என்று அவள் ஆரம்பித்த இடத்திற்கே வர..
“ஐயோ..! என் பேர் மித்ரன், ஜீவ மித்ரன் போதுமா..? என்றான் கடுப்புடன்.
“அப்படி வாங்க சார் வழிக்கு.இதை நீங்க முதல்லையே பண்ணியிருக்கலாம். இப்படி கத்தியிருக்க தேவையில்லை.உங்க பேரை விட,  நீங்க சொன்ன ஸ்டைல் நல்லா இருக்கு சார். மித்ரன்..ஜீவ மிதரன்.. என்று அவனைப் போல் அஸ்வினி பேசிக் காட்ட…
“இப்போ வாயை மூடப் போறியா இல்லையா..? என்று அவன் கோபப்பட்டு முன்னால் வர…
“போனாப் போகுன்னு வாயை மூடுறேன்..! என்றபடி அமைதியானாள் அஸ்வினி.
ஆனால் அவளைப் பார்த்த விகாசிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.அவன் வாயிலிருந்தே வரவைத்து விட்டாளே..!
“நீங்க என்ன விஷயமா மும்பை வந்திங்க விகாஸ்..? என்றாள் அவனிடம் பேச்சை மாற்றி.
“நான் இங்க ஒரு ஆட் சூட்காக வந்தேன்.ஆனா அதுக்குள்ள எங்க பாட்டிக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சுடுச்சு…அவங்களுக்கு நான் இந்த பீல்டுல இருக்குறது சுத்தமா பிடிக்கலை.அவங்களுக்கு தெரிஞ்சதால.., இப்போ கிளம்பிட்டேன்..! என்றான்.
“இவ்வளவு தூரம் வந்துட்டு ஆட் ஷூட் முடிக்காம போறிங்களே, உங்களுக்கு கஷ்ட்டமா இல்லையா..? என்றாள்.
“யார் சொன்னா நான் முடிக்கலைன்னு..?அதெல்லாம் ஷூட் முடுஞ்சுடுச்சு. நான் தான், உங்களுக்காக கிளம்பி வரேன் பாட்டின்னு அவங்களுக்கு ஐஸ் வச்சிருக்கேன்..! என்று அவன் சிரிக்க…அந்த ஐஸ் என்ற வார்த்தை மித்ரனுக்கு..சில நியாபகங்களைத் தூண்டி விட… இமைகளை அழுந்த மூடிக் கொண்டான்.
அவனின் முகத்தைப் பார்த்த அஸ்வினிக்கு, கொஞ்சம் வருத்தமாகக் கூட இருந்தது. அவனுக்கு ஏதோ பிரச்சனை என்பது மட்டும் தெரிந்து.மற்றபடி தாடிக்குள் ஒளிந்திருக்கும் அவனின் முழு முகத்தை அவளால் பார்க்கமுடியவில்லை.
“நீங்க இங்க என்ன வேலை பார்த்திங்க..? என்றான் விகாஸ்.
“அந்த கொடுமையை ஏன் கேட்குறிங்க விகாஸ்..! அது பெரிய கதை..! என்றாள்.
“அது தான் என்ன கதை..! என்றான்  விகாஸ்.
“அது நான் வேலை பார்த்த கதை, அந்த சோகக் கதை, எங்கம்மாவுக்கு பிடிக்காம போன கதை… இப்படி எல்லாக் கதையும் என்றாள்.
“அப்போ நீங்க மறுபடி இங்க வரமாட்டிங்களா..? என்றான்.
“இதென்ன எனக்கு மாமியார் ஊரா..? இங்க மறுபடியும் வர..! என்று சிலுப்பிக் கொண்டாள்.கடைசி வரை அவள் கதையை மட்டும் சொல்லவே இல்லை.
“அந்த கதை..! என்று விகாஸ் எடுத்துக்  கொடுத்தான்.
“ஹான்..அதுவா..? முதல்ல சென்னைல தான் வொர்க் பண்ணேன். அப்பறம் என்ன நினைச்சாங்கன்னு தெரியலை மும்பை பிரான்ச்க்கு அனுப்பிட்டாங்க. அப்பவே அம்மா என்னை விடவே இல்லை.இவ்வளவு தூரம் தனியா அனுப்ப ரொம்ப யோசிச்சாங்க..! நான் தான் கில்லாடி ஆச்சே..எப்படியோ அடம்பிடிச்சு பர்மிசன் வாங்கிட்டேன்..! என்றாள்.
“ம்ம் அப்பறம்..? என்றான்.
அஸ்வினி சொல்லும் கதை.. யாருடைய அனுமதியும் இன்றி அங்கிருந்த ஜீவ மித்ரனின் காதில் விழுந்து வைக்க…எரிச்சல் வந்தாலும்…கேட்கத் தவறவில்லை.
“அப்பறம் என்ன..? இங்க வந்தேன்..! வேலை பார்த்தேன்.இப்போ பிடிக்கலை… கிளம்பிட்டேன்..! என்றாள்.
“எங்க வேலை பார்த்திங்க? ஏன் பிடிக்கலை? என்றான் விகாஸ்.
“எல்லாம் இந்த ஜேஎம் எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் இம்போர்ட்ஸ் கம்பெனி இருக்குள்ள.. என்றாள் அசுவாரஸ்யமாக.
“வாவ்..! அது எவ்வளவு பெரிய கம்பெனி. அங்க வேலை கிடைக்கணும்ன்னா ரொம்ப புத்திசாலியா இருக்கணுமே..? நீங்க எப்படி அங்க..? என்று விகாஸ் சிரிக்காமல் சொல்ல…
“என்ன கிண்டலா..? என்றாள் அஸ்வினி.
“ஐயோ சும்மா சொன்னேன்..! அவ்வளவு பெரிய கம்பெனிய விட்டு வர என்ன ரீசன் இருக்க போகுது..?என்றான் விகாஸ்.
உண்மையில் மும்பை மாநகர் மிக பிரபலமான வர்த்தக நகரம். நிதி மற்றும் வர்த்தக மூலதனத்தை அதிகம் கொண்ட ஒரு வர்த்தகத் தலைநகர்.உலகின் மிகப் பெரிய மீன் சந்தையும் இங்கு தான் இருக்கிறது. ஏழு தீவுகள் ஒன்றாக சேர்ந்து மும்பை நகரம் உருவானதாக செய்திகள் கூட உண்டு. ஒரு முக்கிய துறைமுகம் அரபிக் கடலில் உண்டு. பிரிட்டிஷ் காலத்திலேயே இது வர்த்தக நகரமாக மாறுவதற்கான முயற்சிகள் நடந்திருக்கிறது.
‘பெர்ரி வார்ப் என்று அழைக்கப்படும் இடம் தான்.. ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களுக்கான முக்கிய இடம். ஒவ்வொரு நாளும் இங்கு எண்ணற்ற கப்பல்களில் பொருட்கள் ஏறியவாரும் இறங்கியவாரும் இருக்கும். ஜனசந்தடி நிறைந்த இடம். இதற்கு அருகில் பல தீவுகள் உண்டு.   
அப்படிப்பட்ட இடத்தில் ஜேஎம் கம்பெனியின் கப்பலே நான்கு கப்பல் ஓடும்.ஏற்றுமதி துறையில் அந்த கம்பெனி தான் மும்பையின் நம்பர் ஒன் இடத்தில் இதுவரை இருக்கிறது.அந்த கம்பெனியின் எம்டி மிக நேர்மையாவர் என்று கூட கேள்விப் பட்டிருக்கிறான் விகாஸ்.
அங்கு பணி புரியும் ஆட்களின்  சம்பளமும்  லட்சங்களில் தான்…அப்படி இருக்கும் வேலையை ஒருத்தி சாதரணமாக விட்டு விட்டேன் என்று சொன்னதை அவனால் நம்ப முடியவில்லை.
“விகாஸ்..! என்ன ஆச்சு..? என்றாள்.
“இல்லை, உங்களுக்கு என்ன பைத்தியமா..? யாராவது இப்படி ஒரு வேலையை விட்டுட்டு வருவாங்களா..? என்று அவன் திட்டிக் கொண்டிருந்தான்.
“எப்படி ஒரு வேலையை விட்டுட்டு வந்தேன்..? என்று அவள் புரியாமல் கேட்க..
“ஜேஎம் கம்பெனி வேலைதான்.. என்றான்.
“நான் எப்ப அந்த கம்பெனில வேலை பார்த்தேன்…? என்றாள்.
“இப்ப தான சொன்னிங்க..? என்று விகாஸ் பொறுமையை இழுத்து வைத்துக் கொண்டு கேட்க..
“ஜேஎம் கம்பெனிக்கு பக்கத்துல இருக்க ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்த்தேன்னு சொல்ல வந்தேன். நீங்க தப்பா எடுத்துகிட்டிங்க..? என்று அவனைப் பார்த்து சிரிக்க…
“ஐயோ..! அஸ்வினி. உங்களைப் போய் கேட்டேன் பாருங்க..? என்னைச் சொல்லனும்..! என்று அவன் தலையில் அடிக்க…அதைப் பார்த்த அஸ்வினிக்கு சிரிப்பு வந்தது.
“நீங்களா முடிவு பண்ணிகிட்டா, அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா..? என்று அவள் கண்சிமிட்டி கேட்க…அவளின் அந்த அழகில் மயங்கித்தான் போனான் விகாஸ்.

Advertisement