Advertisement

குடை 19:
மித்ரன் ‘அண்ணன் என்று தெரிந்ததில் இருந்து, விகாசிடம் ஒரு ஒதுக்கம் காணப்பட்டது. அவன் எவ்வளவு முயற்சி செய்தும் உடனே அவனால் ஒன்ற முடியவில்லை.
மறுநாள் காலை, அந்த வீட்டின் முன்பு, நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஜீவ மித்ரன். அப்போது அங்கு வந்த சந்தனம் தாத்தாவிற்கு அவனை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. ஆனால் பார்த்த முகமாக இருந்தது.
“யாருப்பா..? என்று அவர் கேட்டு முடிப்பதற்குள்,
“ஏங்க..! நம்ம மித்ரன், வந்துட்டாங்க..! என்றபடி வந்தார் சிவகாமி.
“நம்ம மித்ரனா..? என்றவருக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி.
“அட..ஆமாங்க..! புள்ள நம்மளைத் தேடி எப்படியோ வந்துட்டான்..! என்றார் நெகிழ்ச்சியாக.
அவனின் கைகளைப் பிடித்த தாத்தா,
“ரொம்ப சந்தோசம் மித்ரா. எப்படி வளர்ந்துட்ட. அடையாளமே தெரியலை. எங்க உங்கப்பா மாதிரி நீயும் வராமையே இருந்துடுவியோ அப்படின்னு நினைச்சேன்.ஆனா நீ அப்படி இல்லையா..? உங்க அம்மாவைப் பார்த்தியா…? உன்னைப்பத்தி என்பொண்ணு, நினைக்காத நாளில்லை..! என்று அவர் பேசிக் கொண்டே போக,
“அவ இங்க தான் இருப்பான். மெதுவா பேசிக்கலாம்..! நீங்க வாங்க உள்ள..! என்று சிவகாமி சொல்ல, அப்போதும் மித்ரன் அமைதியாகத் தான் இருந்தான்.
அப்போது பார்த்து தேஜுவும், அஸ்வினியும் வெளியே வந்தனர்.
“ஏன் அஸ்வினி.., ஏதோ மாற்றமா இருக்குள்ள..? நேத்து வந்தப்ப, மித்ரன் சாரை எல்லாரும் வேற மாதிரி பார்த்தாங்க. ஆனா இன்னைக்கு சொந்தமா பார்க்குறாங்க..? என்னவா இருக்கும்..? என்று தேஜு கேட்டுக் கொண்டிருக்க, அஸ்வினியோ….மித்ரனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சுத்தம்..! இவ காலையிலேயே சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டாளா..? கடவுளே..! என்று தேஜு புலம்ப,
“என்னாச்சு தேஜு..? என்றபடி வந்தான் விகாஸ்.
“ம்ம்..! அதுவா..உன்னைய காணமேன்னு தேடுனேன்..! என்றாள்.
“நான் உள்ளதான் இருந்தேன்..! என்றான்.
“சரிடா நல்லவனே..! என்றாள் தேஜு, சிரித்துக் கொண்டே.
“இப்ப எதுக்கு சிரிக்கிற..? என்றான்.
“ம்ம்..! வேண்டுதல்..! என்றவள்,
“அஸ்வினி, உள்ள போகலாமா..? என்றாள்.
தேஜுவின் அருகில் விகாஸ் இருப்பதைப் பார்த்தவள்,
“நீ போ தேஜு..! நான் வரேன். என்று சொல்லிவிட்டாள்.
“நீ நடத்து..! என்ற தேஜு, விகாஸை இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல, அவர்களை ஒரு மார்க்கமாகப் பார்த்துக் கொண்டே சென்றான் விகாஸ்.
இதுவரை இவர்களை கணக்கில் எடுக்காமல், கண்டு கொள்ளாமல்… தன்னுடைய செல்லில் மும்பாரமாக பேசிக் கொண்டிருந்தான் ஜீவ மித்ரன்.
அவன் பேசி முடிக்கட்டும் என்று எண்ணிய சுபஷ்வினி… அருகில் இருந்த செடிகளின் பக்கம் திரும்பி, அந்த ரோஜா செடிகளின் அழகாய் ரசித்துக் கொண்டிருந்தாள்.
காலையில் ஒப்பனையற்ற முகம், அந்த ரோஜா செடிகளின், இளம் தளிர் இலைகளின் வண்ணத்தில் அணிந்திருந்த சுடிதார், அவள் அழகுக்கு அழகு சேர்ப்பதாய்.
போனைப் பேசிக் கொண்டே திரும்பிய மித்ரன் கண்களில் விழுந்தாள் சுபஷ்வினி.
ஏனோ,அவனையும் அறியாமல் ஒரு சுகந்தம் மனதில். இதுவரை பார்த்த பெண்களில் இவள் கொஞ்சம் வித்யாசம். அவளின் அமைதி தான் அவனை முதலில் கவர்ந்தது.
திருமணம் ஆகி, விவாகரத்து வாங்கியவன் என்பதால், கொஞ்சம் அடக்கி வாசித்தான். அவள் தப்பாக எண்ணி விட கூடாதே என்ற எண்ணத்தில், மனதில் எந்த சலனத்திற்கும் இடம் கொடுக்க கூடாது என்று வைராக்கியமாக இருந்தான்.
ஆனால் அவளை நோக்கி சென்ற கண்களை, அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை. அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு, இறுதியில் அவளின் இதழில் வந்து நின்றது.
“மித்ரா..என்ன பண்ற..? என்ன விஷயத்துக்கு இங்க வந்த..? இப்ப என்ன பண்ணிட்டு இருக்க…? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவன், கண்களை திருப்ப முற்படும் போது,
“குட் மார்னிங் மித்ரன்..! என்றாள் அஸ்வினி கொஞ்சம் தைரியத்துடன்.
அவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன்…
“குட்மார்னிங்..! என்றான்.
“எனக்கு உங்க கூட கொஞ்சம் பேசணும்..! பேசலாமா..? என்றாள் கொஞ்சம் தயங்கிய படி.
“ம்ம்..! என்றான், அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி.
“இப் யு டோன்ட் மைன்ட், நீங்க ஏன் உங்க வொய்ப டிவேர்ஸ் பண்ணிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..? என்றாள்.
“அது ஏன் உனக்கு..? தெரிஞ்சு என்ன செய்ய போற..? என்றான் வெடுக்கென்று.
“கேட்கணும்ன்னு தோணுச்சு..! விருப்பம் இருந்தா சொல்லுங்க..! என்றாள்.
“சொல்ல வேண்டாம்..! என்று அவன் மூளை கட்டளையிட்டுக் கொண்டிருக்கும் போதே, மனம் சொல்லி விடத் துடித்தது.
“பிடிக்காத மேரேஜ்…எனக்கும் அவளுக்கும் அண்டர்ஸ்டேன்டிங் இல்ல. அதான்..! என்றான் பட்டும் படாமல்.
“உங்க மேரேஜ் அன்னைக்கு ஹேப்பியா தான இருந்திங்க..? என்றாள் விடாமல்.
“அப்கோர்ஸ்..! இது ஒரு டீல். அப்படித்தான் நான் பார்த்தேன். தென் லக்சனாவுக்கும் என்னைவிட, என்னோட பேர், புகழ், பணம் முக்கியமா பட்டது. எனக்கு அது முக்கியமா படலை. தட்ஸ் ஆல்..! என்றான்.
அவனை ஆச்சர்யமாகப் பார்த்தவள்,
“நீங்க இன்னொரு மேரேஜ் பண்ணிக்கலாமே..? என்றாள்.
“பண்ணிக்கலாம். பட், அதுல நம்பிக்கை இல்லை..! உண்மையான அன்புக்கு இப்ப மதிப்பில்லை. அப்படி ஒரு உண்மையான அன்பு குடுக்குற ஒரு பொண்ணு கிடைக்கிற பட்சத்தில், கண்டிப்பா மேரேஜ் பண்ணிப்பேன்..! என்றான்.
“ம்ம்ம்..! என்று தலையை ஆட்டியவளுக்கு, அதற்கு மேல் வார்த்தை வரவில்லை. தானாக கேட்கவும் தயக்கம். இப்படி எல்லாம் சேர்ந்து அவளைப் பாடாய்படுத்த, அமைதியாகிப் போனாள்.
வீட்டிற்குள் செல்வதற்காக முற்பட்டவன், மீண்டும் சுபஷ்வினியிடத்தே வந்தான்.
“ஆமா.., இதெல்லாம் நீ ஏன் கேட்ட..? என்றான் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி.
“எப்படி பார்க்குறான்..! யப்பா சாமி.. இவன்கிட்ட பொய் கூட சொல்ல முடியாது போலவே..? என்று மனதிற்குள் எண்ணியவள்,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, சும்மாதான் கேட்டேன்..! என்றாள்.
“இல்லையே…சும்மா கேட்ட மாதிரி தெரியலையே..? என்றான் ஒரு மார்க்கமாக.
“ஐயோ கடவுளே..! இப்படி பக்கத்துல நின்னு கொல்றானே..! என் கண்ணுக்கு மட்டும் இவனைத் தான் பிடிக்குது. இவன் பக்கத்துல வந்தாலே.., என்னமோ பண்ணுது. வினி.., கண்ட்ரோல் யுவர் ஸெல்ப்..! என்று மனதிற்குள் பேசிக் கொண்டு நின்றாள் சுபஷ்வினி.
அவளின் முகத்திற்கு முன்னால் சொடக்குப் போட்டவன்,
“என்ன..? நின்னுகிட்டே கனவா..? என்றான்.
“இல்ல..அதெல்லாம் ஒண்ணுமில்லை..! என்று அசடு வழிந்தாள்.
“ஓகே..! என்றபடி அவன் செல்ல, அவ்வளவு நேரம் இருந்த அந்த உணர்வு காணாமல் போய், நிம்மதியாக மூச்சு விட்டாள்.
அந்த நிம்மதியை கொஞ்ச நேரம் கூட நிலைக்க விடவில்லை தேஜு.
“என்ன..? பேசுனியா..? சொல்லிட்டியா..? என்றாள் வேகமாக.
“எங்க..? ம்கூம்..! என்னால சொல்ல முடியலை. இந்த ஜென்மத்துக்கு சொல்லவும் முடியாது போல..! என்றாள் சுபஷ்வினி.
“உன்னையெல்லாம் வச்சுகிட்டு.., பேசாம நீ விலகிடு. நான் பிரபோஸ் பண்ணி, நானே அவனை மேரேஜ் பண்ணிக்கிறேன்…! என்றாள் தேஜு.
“தேஜு..! என்றாள் கோபமாக.
“இப்ப எதுக்கு இப்படிக் கத்துற..? எனக்கு ட்ரெயின்லயே அவன் மேல ஒரு பீலிங்.  நான் தான் அதை ரொம்ப யோசிக்காம விட்டுட்டேன். நான் மட்டும் அப்பவே ஸ்டெடியா இருந்திருந்தேன்…இந்நேரம் கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ணி, அடுத்த லெவல்க்கு போயிருப்பேன்..! என்று தேஜு பேசிக் கொண்டே போக, அஸ்வினியின் கண்களில், கண்ணீர் குளம் கட்டியது.
“இப்ப எதுக்கு பொசுக்கு பொசுக்குன்னு அழுகுற..? ஒரு பேச்சுக்கு தான சொன்னேன். முதல் தடவை பயந்து கோட்டை விட்டது பத்தாதா. இப்ப ரெண்டாவது தடவையும் விட்ட, அவ்வளவுதான். மித்ரன் உனக்கு கண்டிப்பா இல்லை..! என்றாள் தேஜு.
“அம்மா… ஒன்னும் சொல்ல மாட்டாங்களா..? என்றாள்.
“அடிப்பாவி..! உனக்குன்னு இந்த சந்தேகம் எல்லாம் வருமா..? எல்லா விஷயத்துலயும் டாப்ல இருக்குற நீ, இந்த விஷயத்துல மட்டும் ஏன் இப்படி இன்னும் வளராம இருக்க..? என்றாள் தேஜு.
“நான் ஒன்னும் டீன் ஏஜ் பொண்ணு கிடையாது..! என்றாள் ரோஷமாக.
“இல்லைன்னாலும், நீயும் கிளுக்குன்னு சொல்லிடுவ..? என்றாள் தேஜு.
“ஆமால..! நான் ஏன் டீன் ஏஜ் பொண்ணு மாதிரி தயங்கணும்..? என்று அவள் தனக்குத் தானே கேட்க,
“அந்த ஏஜ் பொண்ணுங்க எல்லாம் இப்ப தைரியமா இருக்காங்க. நீதான் இப்படி..! என்று சொல்லிவிட்டு ஓடி விட்டாள் தேஜு.
“சுபஷ்வினி..! உருப்படியா அவன்கிட்ட போய் பேசு. உனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லு. இன்னும் எத்தனை நாள் இங்க இருப்பான்னு தெரியாது. நேரத்தைக் கடத்தாத… என்று எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருந்தது.
“அஸ்வினி..! சாப்பிட வாம்மா..! என்ற ரேகாவின் குரலில், யோசனைகளை தள்ளி வைத்து விட்டு, உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றவளுக்கு ஆச்சர்யம்..!
அங்கே, ஜீவ மித்ரனுக்கும், விகாசிற்கும் ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார் ரேகா.
“என்ன நடக்குது இங்க..? என்று புரியாமல் பார்த்தபடி, அவளும் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள். அவளுக்கு முன்பே, அதே ரியக்சனில் இருந்தாள் தேஜு.
“என்ன நடக்குது..? என்று தேஜுவைப் பார்த்து, சைகையில் கேட்டாள் அஸ்வினி.
“எனக்கும் தெரியலை..! என்றாள் அவளும்.
“என்ன ரெண்டு பேரும்… ஊமை பாஷையில் பேசிட்டு இருக்கீங்க..? என்றபடி பாட்டி வர,
“நான் மித்ரனுக்கு ஊட்டி விடுறேன்ல, அதான் அவங்களுக்கு புரியலை..! என்றார் ரேகா.
“அப்படியா..? என்றார் சிவகாமி.
“சுபஷ்வினி செல்லம்..! உனக்கு என் பெரிய பையனை நியாபகம் இருக்கா..? என்றார் ரேகா.
“எப்படி ஆன்ட்டி மறக்கும்..? முகம் சரியா நியாபகம் இல்லை. ஆனா, நான் தேர்ட் ஸ்டேண்டேர்ட் படிக்கும் போது, நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல்ல, ஒரு டிராமால ஆக்ட் பண்ணோமே..ஹஸ்பண்ட் அன்ட் வொய்பா..! அம்மா அடிக்கடி சொல்லுவாங்க…! என்றாள் பழைய நினைவுகளில்,முகத்தில் மகிழ்ச்சியுடன்.
“அப்படியா..? வேற நியாபகம் இல்லையா..? என்றார் ரேகா.
“ஏன் இல்லாம..? உங்க பெரிய பையன் ஒரு டெரர் பீஸ்..! கண்ணை உருட்டி முழிச்சு பார்த்தா, அப்பவே அப்படி பயமா இருக்கும்..! என்றாள்.
அவள் சொல்லவும், அந்த நியாபங்களில், ரேகாவின் கண்கள் கலங்க,
“இப்ப ஏன் இதைக் கேட்டிங்க ஆன்ட்டி..! என்ற படி, ரேகாவைப் பார்த்தவள்,
“என்னாச்சு ஆன்ட்டி, ஏன் கண்  கலங்குறிங்க..? என்றாள் பதட்டமாக.
“ஒன்னுமில்லைடா..! அவனோட நியாபகத்துல.. என்றார்.
“விகாஸ் சொன்னான் ஆன்ட்டி.  எனக்கும் கேட்ட உடனே ரொம்ப பீல் ஆச்சு..! எப்படி இறந்தாங்க..? என்று சுபஷ்வினி கேட்க,
அதுவரை, அவர்களின் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த மித்ரனுக்கு, அவளின் இந்த கேள்வி, கோபத்தை வர வழைத்தது.
“நீ பார்த்தியா..? இல்லை நீ பார்த்தியா..? அவன் செத்துட்டான்னு உனக்கு எப்படித் தெரியும்..? என்றபடி அவளை நோக்கிப் போக,
“ச..சாரி..! எனக்குத் தெரியாது..! என்றாள் பயந்தபடி. அவளின் முகத்தைப் பார்த்த தேஜூவிற்கு கோபம் வர,
“இப்ப ஏன் சார்..அவளை இப்படி மிரட்டுறிங்க..? என்ன ஓவரா பண்றிங்க..? என்று அவள் சண்டைக்குத் தயாராக,
“என் பையன் இவன் தான் தேஜு..! என்றார் ரேகா, அமைதியாக.
“ஆன்ட்டி..! என்று அதிர்ந்தனர் சகோதரிகள் இருவரும்.
“ஆமா..! அது ஒரு பெரிய கதை.. என்று ஆரம்பித்தவர், ஆதியும், அந்தமும் சொல்லி முடித்தார்.
கேட்டு முடித்த இருவருக்கும், மனதில் அப்படி ஒரு பாரம். சுபஷ்வினிக்கோ ஒரு படி மேலே.
“சாரி..ஆன்ட்டி..! என்றாள்.
“பரவாயில்லடா…! என்றார் ரேகா.
“அப்போ, மித்ரன் சார், விகாஸ்க்கு அண்ணன்.. என்றாள் தேஜு, உள் குத்துடன்.
“ஆமா..!
“அப்போ, வேலை மிச்சம்..! என்றாள் முணுமுணுப்பாக.
ஆனால் மித்ரனுக்கு, தன்னுடன் சிறுவயதில் நடித்த, அவளை அப்படியே நியாபகம் இருந்தது. அந்த குண்டு கன்னங்களும், அந்த அழகு சிரிப்பையும் அவன் எப்படி மறப்பான். தான் பசிக்குது என்று சொன்னவுடன், பிஸ்கட்டை நீட்டிய அந்த பிஞ்சு விரல்களை எப்படி மறப்பான்..?
மித்ரன், அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்குத் தான் ஒரு மாதிரியாகிப் போனது. கண்டும், காணாமல் அந்த இடத்தைக் காலி செய்தாள்.
அவள், அப்படி சென்றதைப் பார்த்த மிதரனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவன் லேசாக சிரித்துக் கொண்டிருக்க,
“என்னாச்சு மித்ரா..? ஏன் சிரிக்குற..? என்றார் ரேகா.
“அது ஒண்ணுமில்லைம்மா..! உங்க செல்லம் சுபஷ்வினி பொண்ணு, என்னை நல்லா சைட் அடிக்குது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட, எனக்கு டிவேர்ஸ் எப்படி ஆச்சுன்னு விசாரிக்கிறா..? என்றான்.
“அஸ்வினி, அப்படி பட்ட பொண்ணு எல்லாம் கிடையாது மித்ரா..! என்றார் ரேகா, அவளுக்குப் பரிந்து கொண்டு.
“நான் அவளை தப்பான பொண்ணுன்னு சொல்லலையே. சைட் அடிக்கிறது எல்லாம் ஒரு குத்தமா..? ஆனா, இவ அதை நான் கண்டு பிடிக்கிற அளவுக்கு அடிக்கிறா..? இன்னொசன்ட் கேர்ள்..! என்றவன், ரசித்து சிரிக்க,
உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா..? என்றார் ஆவலுடன்.
“பிடிச்சிருந்தாலும், இப்ப ஒன்னும் செய்ய முடியாத நிலமையில இருக்கேன்..! என்றான்.
“என்ன ஆச்சு..? என்றார்.
ராணி பாட்டிக்கு, லக்சனா எது சொன்னாலும் சரி தான். அவளோட பேச்சைக் கேட்டு, சொந்த பேரன் என்னையவே வெளிய போக சொன்னவங்க.
“உன்னைய வீட்டை விட்டு வெளிய போக சொன்னாங்களா..? என்றார் ரேகா, கோபத்துடன்.
“கம்பெனியை விட்டு..! என்றான் கோபத்துடன்.
“என்ன சொல்ற மித்ரா…? என்றார் புரியாமல்.
“என்னோட பேர்ல இருந்த ஷேர்ஸ் எல்லாம், அவ பேர்க்கு மாத்திக் குடுத்துட்டாங்க. கோர்ட்ல சொன்ன, ஜீவனாம்சம் அப்படி இப்படின்னு கதை. ஆனா உண்மை அது இல்லை. அந்த ஷேர்ஸ்க்காகவாவது நான் லக்சனா ஏத்துப்பேன்னு நினைச்சாங்க..! ஆனா, எனக்கு பணம் பெரிசில்லைன்னு சொல்லிட்டு தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன். முதல்ல எனக்கு இங்க வர ஐடியா இல்லை. அப்பறம் டாடி தான் சொன்னார், உங்ககிட்ட போக சொல்லி. ஆனா அவருக்கும் நீங்க இருக்குற இடம் தெரியலை.. என்றான்.
“உங்க டாடி எப்படி, இந்த மேரேஜ்க்கு ஓகே சொன்னார்..? என்றார் ரேகா.
“டாடிக்கு விருப்பம் இல்லை. ஆனா பாட்டி தான், எப்பவும் போல, அவங்க ஆயுதத்தை பயன்படுத்தி, டாடியை ஆப் பண்ணிட்டாங்க. அப்பறம் நானும் ஓகே சொன்னதால, அவர்னால ஒன்னும் பண்ண முடியலை..! என்றான்.
“என்ன ஆயுதம்..?  என்றார் புரியாமல்.
“அதான்..! நான் செத்துவேன்… அப்படின்னு சொல்ற, பழைய டெக்னிக்.
“எங்க வாழ்க்கையை கெடுத்தது பத்தாதுன்னு, இப்ப உன் வாழ்க்கையையும் இப்படி ஆக்கி வச்சிருக்காங்களே..! என்றார் கவலையுடன்.
“அவங்களுக்கு ஒரே தாட் தான். அவங்களுக்கு பிடிச்சா, அவங்க நல்லவங்க. அவங்களுக்குப் பிடிக்கலைன்னா, அவங்க ரொம்ப கெட்டவங்க..! என்றான், வெறும் சிரிப்புடன்.
“அவளைப் பார்த்து ஏன் பயப்படனும் மித்ரா..? என்றார் ரேகா, புரியாமல்.
“அவளைப் பார்த்து எனக்கு பயம் கிடையாது மாம். இன்பாக்ட், அவ ஒரு ஆளே கிடையாது. பட், உங்களை ஏதாவது சொல்லிட்டா. அதுவும் என்னை பாலோ பண்ணி வேற வந்தா. பாட்டிக்கு நியூஸ் போயிருக்கும். அவளுக்கு, என்கூட இப்பவும் சேரனும் அப்படிங்கிற எண்ணம் இருக்கு..! என்றான்.
“நல்ல விஷயம் தானே..! என்றார் ரேகா, புரியாமல்.
“புரியாம பேசாதிங்க மாம். அவ புருஷனை தேடலை. அவ வயித்துல இருக்குற குழந்தைக்கு, என்னோட இன்ஷியல் போடணும்ன்னு விருப்பப்படுறா..? என்றான்.
“மித்ரா..
“வேடிக்கை என்னன்னா..? அது என்னோட குழந்தைன்னு பட்டி இன்னமும் நம்புறாங்க..! அதான், என் மேல கோபம் அவங்களுக்கு..! என்றான்.
பிரச்சனையின் தன்மை புரிந்தது ரேகாவிற்கு. அவன் சொன்னதைக் கேட்ட அவருக்கு, அருவருப்பாய் இருந்தது. இதை இப்படியே விடக் கூடாது என்ற எண்ணமும், அவரின் மனதில் உறுதியானது.

Advertisement