Advertisement

 
குடை 18:
“தாத்தாவை  இன்னமும் காணலை..?” என்றான் விகாஸ்.
“எஸ்டேட்லயே தங்கிட்டாரு போல..! காலையில வந்திடுவார். நீ போய் ரெஸ்ட் எடு. மித்ரா நீயும் போய் ரெஸ்ட் எடுப்பா..!” என்றார் சிவகாமி.
“ஓகே பாட்டி..!” என்றபடி மித்ரன் எழுந்து செல்ல, அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமி.
“ஏம்மா, மித்ரனை அப்படிப் பார்க்குறிங்க..?” என்று ரேகா, புரியாமல் கேட்க,
“என்னால இன்னமும் நம்ப முடியலை ரேகா. மித்ரன் நம்மளைத் தேடி வருவான்னு, நம்ம கனவுல கூட நினைக்கலை. ஆனா வந்துட்டான். ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், இன்னொரு பக்கம் ராணியை நினைச்சு பயமா இருக்கு..!” என்று தன்னுடைய பயத்தை சொன்னார் சிவகாமி பாட்டி.
“எனக்கும் அப்படித்தான் இருக்கும்மா..! ஆனா வரது வரட்டும். இனி என் பிள்ளை என்கூடத் தான் இருப்பான்..!” என்றார் ரேகா.
“புரியாம பேசாத ரேகா. இப்ப கூட, எனக்கு மித்ரன் மேல சந்தேகமாத் தான் இருக்கு. அவன் இங்க வந்ததுக்கு பின்னாடி வேற காரணம் ஏதும் இருக்குமோன்னு…” என்றார்.
“இல்லைம்மா..! கண்டிப்பா அவன் நம்மளைப் பார்க்க மட்டும் தான் வந்திருக்கான். அவனுக்கு அங்க பிடிக்காத ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கு. அதான் நம்ம நியாபகம் வந்து இங்க வந்திருக்கணும். ஆனா என் பிள்ளை என்னைக் கண்டுபிடிச்சு வந்திருக்கான். விகாஸ் சொன்னான், மும்பைல அவன் பெரிய பிஸ்னஸ்மேனாமே..? அவர் என் பிள்ளையை நல்ல படியா வளர்த்திருக்கார்ன்னு சொல்றதை விட, அவனை ஒரு பிஸ்னஸ்மேனா உருவாக்கி இருக்கார்..!” என்றார் ரேகா பெருமையாய்.
“இத்தனை வருஷத்துக்கு அப்பறமும், நேசனை நீ மறக்கலை இல்லையா..?” என்றார் சிவகாமி.
“அது என்னால எப்பவும் முடியாது. அன்னைக்கு நாங்க பிரிஞ்சதுக்கு சூழ்நிலை காரணமா இருக்கலாம். ஆனா ஏதோ ஒரு மூலையில, ஒரு பையனை நல்லா வளர்ப்பார் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கும், நான் நல்லா வளர்ப்பேன்ற நம்பிக்கை அவருக்கும் இருந்திருக்கு. நாங்க இல்லைன்னு அவரும், அவர் இல்லைன்னு நானும், பசங்க கிட்ட சொல்லி வளர்த்தது கூட, எங்களை நாங்களே கட்டுப்படுத்திக்கப் போட்ட, கட்டுப்பாடு. அவ்வளவு தான்..!” என்றார் ரேகா.
“இப்படி புரிஞ்சுகிட்ட நீங்க, பேசாம சேர்ந்தே வாழ்ந்திருக்கலாம்..!” என்ற சிவகாமி, பெருமூச்சுடன் எழுந்து செல்ல,
சிவகாமியின் வார்த்தை ரேகாவின் மனதிற்குள் இறங்கி நினைவுகளைத் தூண்டியது.
“எதுக்காக ரேகா…நாம பிரியனும்..?” என்றார் நேசன்.
“உங்களுக்குக் காரணம் தெரியாது..?” என்றார் ரேகா.
“நிஜமா புரியலை..!” என்றார்.
“எப்படி புரியும்..? ராணி அத்தை என்ன பேசினாலும் அதை நீங்க எதிர்த்துக் கேட்குறது இல்லை. கடைசியில, நான் வேலைக்கு போறதால, என் நடத்தை சரியில்லைன்னு சொன்னதையும் நீங்க மறுக்கலை. அப்ப உங்க எண்ணமும் அது தான..?” என்றார் ரேகா.
“நான் அப்படி நினைக்கலை..!” என்றார் நேசன்.
“அப்ப நீங்க, அவங்க பேசும் போது பேசியிருக்கனும். என் மனைவி அப்படிப்பட்டவ இல்லைன்னு சொல்லியிருக்கணும். நீங்க தான் சொல்லலையே..? உங்க மவுனம் எதைக் குறிக்குது..?” என்றார்.
“இதுக்குத் தான் சொல்றேன். நீ அம்மா சொல்றதைக் கேட்டு இருந்தா, எந்த பிரச்சனையும் இல்லை..” என்று நேசன் பழைய பல்லவியை பாட, வெறுத்துப் போனது ரேகாவிற்கு.
ஒரு கணவனாய், எல்லா இடத்திலும் அவர் துணை நிற்காவிட்டாலும், நிற்க வேண்டிய இடத்தில் அவர் துணை நிற்கவில்லை. நாளொரு போராட்டத்தையும், தன்மான சீண்டல்களையும் எதிர்க்கும் துணிவும் ரேகாவிற்கு இல்லை. அதை சரி படுத்த நேசனும், முயற்சி செய்யவில்லை.
மொத்தத்தில் இரு பெண்களின் போராட்டத்திற்கு இடையில் சிக்கிக் கொண்டது நேசன் தான்.  அவர் மீது தவறுகள் இருந்தும், அதை அவர் திருத்திக் கொள்ள முன் வராதது தான், முக்கிய காரணம்.
வசதி,வாய்ப்பை ரேகா விரும்பவில்லை. ஆடம்பரத்தை அவர் விரும்பவில்லை. அமைதியையும், அன்பையும் விரும்பினார். அவருக்கு நேர்மாறாய் நேசனின் குடும்பம் இருக்க,  அவர்கள் விவாகரத்து வாங்கமாலேயே பிரிந்தனர்.
சிவகாமியைப் பார்க்க சென்ற ரேகாவை, மீண்டும் வரவிடவில்லை ராணியம்மாள். அவர்களுக்கு இடையில் இருந்த சிறு பிரிவை, நிரந்தர பிரிவாகவே மாற்றி விட்டார். பெண்களுக்கு, பெண்கள் மட்டுமே எதிரி என்று காலங்காலமாக நிலவி வந்த கூற்றை, உண்மையாக்கியதும் ராணியம்மாள் தான்.
தன்னுடைய அகம்பாவத்திற்கும், ஆணவத்திற்கும், இன்னொருவரின் வாழ்க்கையை பாழ்படுத்தும் பெண்களில், அவரும் ஒருவராகிவிட்டார்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில், சோர்வுடன் இருந்தாள் தேஜு. பயணக் களைப்பு அவள் முகத்தில் அப்படியே இருக்க, தூக்கத்திற்கு கண்கள் சொக்கியது.
“என்ன தேஜு..தூக்கம் வருதா..?” என்றாள் அஸ்வினி.
“ஆமா..! ரொம்ப டயர்டா இருக்கு. உனக்குத் தூக்கம் வரலையா..?” என்றாள்.
“இல்ல. கார்ல வரும் போது தூங்கிட்டு தான வந்தேன்..அதனால தெரியலை. செம்ம கிளைமேட், வெளிய கால் வைக்க முடியலை..!” என்று தன் கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
“ஆமா அஸ்வினி..! நம்ம சென்னை கூட கம்பேர் பண்றப்போ, ஆயிரம் மடங்கு, செம்ம பிளேஸ். ரொம்ப  அமைதியான பிளேஸ்..!” என்றாள் தேஜுவும்.
“நீ தூங்கு..! நான் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டு வரேன்..!” என்றவள், அந்த அறையை ஒட்டிய பால்கனிக்கு சென்றாள். அந்த பால்கனி முழுவதும் மர வேலைபாடுகளை அதிகம் கொண்டிருந்தது. அந்த அமைப்பும் கூட, அவளுக்கு மிகப் பிடித்திருந்தது.
ஸ்வெட்டர், ஸ்கார்ப் சகிதம் நின்றவள், மற்றொரு அறையின் பால்கனியில் நின்றிருந்த மித்ரனைப் பார்த்தாள். அவ்வளவு பனியிலும், அவன் ஸ்வெட்டர் எதுவும் அணியாமல், எதையோ வெறித்துக் கொண்டு நின்றிருந்தான்.
“எப்படி பனி கொட்டுது… இப்படி நிற்க்குறார். அப்படி என்ன தீவிர யோசனையா இருக்கும்…” என்று அவளும் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க, பட்டென்று திரும்பினான் ஜீவ மித்ரன்.
அவள் தன்னையே பார்ப்பது கண்டு..”என்ன..?” என்றான் புருவத்தைத் தூக்கி.
அவன் செய்கையில் மயங்கி, அவனையே மீண்டும் பார்த்துக் கொண்டிருக்க, அவளையும், அவள் பார்வையையும் யோசனையுடன் பார்த்து வைத்தான் மித்ரன்.
“எதுக்கு இப்படி பார்த்துகிட்டு இருக்கா..?” என்று அவனும் யோசிக்க… சுபஷ்வினியோ, எதைப் பற்றியும் கவலை இல்லாமல், பார்வையில் அவனையும், சிந்தனையில் அவனைப் பற்றிய யோசனைகளையும் கொண்டிருந்தாள்.
உள்ளே செல்ல எத்தனித்தவனுக்கு, மீண்டும் அவளைப் பார்க்க வேண்டும் போல் இருக்க, மறுபடியும் அவளைப் பார்த்து வைத்தான்.
“ஆத்தி..! இவளைப் பார்த்தா, கண்ணை எடுக்க முடியாது போல. நமக்கு இருக்குற பிரச்சனையில, இந்த பிரச்சனை வேறையா..?” என்று உள்ளுக்குள் எண்ணியவன்,
“ஜீவா ஸ்டெடி,ஸ்டெடி..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
அறைக்குள் சென்றவனின் போன் தன்னுடைய சத்தத்தை எழுப்ப,
“யாரா இருக்கும்..?” என்ற யோசனையில் போனை எடுத்தான். நேசன் அழைத்திருந்தார்.
“சொல்லுங்க டாட்..!” என்றான்.
“இப்ப தான் பேசனும்ன்னு தோணுச்சா ஜீவா. நீ போய் எத்தனை நாள் ஆகுது? ஒரு கால் பண்ணனும்ன்னு தோணலையா..?” என்றார் விடாமல்.
“டாட், கொஞ்சம் மூச்சு விட்டு பேசுங்க..!  நான் கால் பண்ணா, தேவையில்லாத பிராப்ளம் வரும். பாட்டி உங்களைத் தான் திட்டுவாங்க. அதான் பண்ணலை..!” என்றான்.
“அவங்களைப் பார்த்துட்டியா ஜீவா..?” என்றார் கேள்வியில் உயிரைத் தேக்கி.
அந்த குரலில் இருந்த உணர்வு, அவனை என்னவோ செய்தது. உண்மையை சொல்லலாமா..? வேண்டாமா? என்று ஒரு நிமிடம் யோசித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன்,
“பார்த்தேன் டாட். ஆனா அவங்க இன்னொரு மேரேஜ் பண்ணிகிட்டாங்க போல, நீங்கதான் இத்தனை நாள் அவங்களை நினைச்சே இருந்திருக்கிங்க. பேசாம, பாட்டி சொன்னப்பவே நீங்க செகேன்ட் மேரேஜ் பண்ணியிருக்கலாம்..!” என்றான்.
“ரேகா, இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்காளா..? இருக்க முடியாது. ஹன்ரெட் பெர்சென்ட் இருக்க முடியாது. இன்னொரு வாழ்க்கைக்குள்ள எப்பவும் அவளால போகவே முடியாது..” என்றார் உறுதியாய்.
“இவ்வளவு உறுதியா சொல்ற நீங்க…அவங்களை ஏன் தேடி வரலை..?” என்றான்.
“அது, எனக்கு நானே கொடுத்துகிட்ட தண்டனை. அவளை நம்பாம போனதுக்கு, அம்மா பேச்சை கேட்டதுக்கு இப்படி எல்லாத்துக்கும் சேர்த்து. என்னை விட்டு பிரிஞ்சு இருக்குறது தான் அவளுக்கு சந்தோஷம்ன்னு அவ சொன்னா. அவளுக்காக தான், இத்தனை வருஷம் அவளைப் பார்க்க போகாம இருக்கேன். ஏன், எங்க இருக்கான்னு கூட தெரிஞ்சுக்க விரும்பலை. அப்படி அவ இருக்குற இடம் தெரிஞ்சுட்டா, என்னை, என்னாலேயே கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு தெரியும். அதனால் தான். சோ அவளைப் பத்தி பொய் சொல்றதை விட்டு, அவ எங்க இருக்கான்னு கண்டு பிடிக்கிற வழியைப் பாரு..!” என்றார் மூச்சு விடாமல்.
“ஓகே டாட்..!” என்று அவன் சொல்லி போனைக் கட் பண்ண, எதிரில் கேட்டுக் கொண்டிருந்த ரேகாவிற்கு, அழுகையை அடக்க முடியவில்லை. அவருக்குத் தனிமை கொடுத்து, அங்கிருந்து வந்து விட்டான் மித்ரன்.
அறைக்கு வந்தவனுக்கு, உறக்கம் என்பது முற்றிலும் தொலைந்து போனது. இப்படி கூட நேசிக்க முடியுமா..? என்ற கேள்வி தான் அவன் மனதைப் போட்டு குடைந்து கொண்டிருந்தது.
அவனைப் பெற்றவர்களின் நினைவில் அவன் உறக்கம் தொலைத்திருக்க, அவனுடைய நினைவில் ஒருத்தி, உறக்கம் தொலைத்து இருந்தாள் பக்கத்து அறையில்.
சென்னையில் சங்கீதாவின் போன் அடிக்க,
“சொல்லு அஸ்வினி..! ஊட்டி போயாச்சா…” என்றாள் சங்கி, சந்தோஷமாய்.
“வந்துட்டோம் சங்கி. இங்க விகாஸ் வீட்ல தான் இருக்கோம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அதான் கூப்பிட்டேன்..!” என்றாள்.
“என்னடி..? ஏதும் பிரச்சனையா..?” என்றாள் சங்கி.
“இல்லை, நான் அவனை இங்க பார்த்தேன். எங்க கூட தான் டிராவல் பண்ணினான். இப்போ, விகாஸ் வீட்ல தான் தங்கியிருக்கான்..!” என்றாள் தயங்கி.
“ஹேய் என்னடி சொல்ற..? மிஸ்டர் மும்பை அங்கையா இருக்கான்..?” என்றாள் அதிர்ந்து. அவளுக்கு தெரியும், சுபஷ்வினியின் நிலைமை.
“ம்ம்..ஆமாடி..!” என்றாள்.
“ஹேய்..தேஜுக்கு விஷயம் தெரியுமா..?” என்றாள் சங்கி.
“தெரியாதுன்னு நினைக்கிறேன்டி. ஆனா கொஞ்சம் சந்தேகமா பார்க்குறா..?” என்றாள் அஸ்வினி.
“அவ ரொம்ப ஷார்ப். உன்னோட சின்ன அசைவைக் கூட கண்டு பிடிச்சுடுவா..? கல்யாணம் ஆனவனை சைட் அடிக்கிற வேலையை விட்டுட்டு, உருப்படியான வேலைப் பாரு..!” என்றாள் சங்கி.
“அவனுக்கு டைவேர்ஸ் ஆகிடுச்சாம்டி..” என்றாள் வேகமாக.
“என்னது..? அதுக்குள்ள டைவேர்ஸ் வேற பண்ணிட்டானா..? சுத்தம். அப்போ இவன் நிஜமாவே ஆள் சரியில்லைடி. டைவேர்ஸ் ஆகிட்டா, நீ சைட் அடிப்பியா..? பழைய புராணத்தை ஆரம்பிச்ச, நான் அம்மாகிட்ட சொல்லிடுவேன்..!” என்று மிரட்டினாள் சங்கி.
“உனக்கு போய், போன் போட்டேன் பாரு..என்னை சொல்லணும்..!” என்று தலையில் அடித்தபடி போனைக் கட் பண்ணிவிட்டு திரும்ப, அங்கே தூக்கத்தில் இருந்து எழுந்து உட்கார்ந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜஸ்வினி.
“நீ..நீ எப்ப எழுந்த..?” என்றாள்.
“ நீ சங்கிக்கு கால் பண்ணி, ஸ்டார்ட் பன்னப்பவே..!” என்றாள் அவளையே பார்த்துக் கொண்டு.
“ஹோ..!” என்று சுபஷ்வினி நிறுத்த,
“ஏன் என்கிட்டே சொல்லலை நீ. அப்போ நீ இன்னும் என்னை நம்பலை..!” என்றாள் தேஜு, தீர்க்கமாக.
“அப்படியில்லை தேஜு. எனக்கே தெளிவில்லை. நான் எப்படி உன்கிட்ட சொல்றது..?” என்றாள்.
“அப்போ, இந்த சிடு மூஞ்சிய தான் லவ் பண்ணியா..?” என்றாள் ஒரே போடாக.
“இல்லை..” என்றவள், அவள் முறைக்கவும்..”ஆமா..” என்றாள்.
“இவன் தான் உன்னை ஏமாத்திட்டு போனவனா..? எப்படி நல்லவன் மாதிரி பேசுனான். இதுல தெரியாத மாதிரி வேற நடிக்கிறான்..அவனை… இப்ப என்ன செய்யுறேன் பாரு..!” என்றபடி ரசாய்க்குள் இருந்து எழுந்தாள் தேஜு.
“ஹேய்..! வேணாம் தேஜு… அவர் பாவம்..!” என்று அவளைத் தடுத்தாள் அஸ்வினி.
“இவ்வளவு பண்ணியிருக்கான். நீ விஷம் குடிச்சு, சாக பிழைக்கக் கிடந்தது, மீண்டு வந்திருக்க, இவனை சும்மா விடலாமா..?” என்றாள்.
“அவர் மேல எந்த தப்பும் இல்லை..!” என்றாள் இறுகிய முகத்துடன்.
“நீ என்ன சொல்ற..?” என்று குழம்பிய முகத்துடன் கேட்டாள் தேஜு.
“ஆமா..! உண்மைதான். நான் மட்டும் தான் லவ் பண்ணேன். அவர் இல்லை. இன்பாக்ட் நான் லவ் பண்ண விஷயம் கூட அவருக்குத் தெரியாது..!” என்றாள் அஸ்வினி.
“”என்ன சொல்ற..?” என்றாள்  தேஜு.
சுபஷ்வினி மும்பைக்கு சென்றது, அவனின் குரல் கேட்டது, அவன் புகைப்படத்தைப் பார்த்தது, ஆர்வம் காதலாக மாறிய கதை, கடற்ரையில் பார்த்தது, அவனின் மேரேஜ் பங்க்ஷன் என்று தெரியாமல் சென்றது, இப்படி அனைத்தையும் தேஜுவிடம் ஒப்பித்தாள் சுபஷ்வினி.
அந்த கதையில் இருந்து மீண்டு வரவே. தேஜுவிற்கு சில நிமிடங்கள் பிடித்தது.
“இதெல்லாம் எப்படிடி நடக்கும். அப்படி சட்டுன்னு லவ் வருமா..?” என்றாள் புரியாமல்.
“மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியாது. ஆனா எனக்கு வந்தது. அப்படி ஒரு தீவிர காதல். அவனைப் பத்தி எதுவுமே தெரியாது எனக்கு. ஆனா அவனுக்காக உயிரை விடுற அளவுக்கு..” என்றாள் சுபஷ்வினி.
“இதுக்கு பேரு காதல் இல்லை…முட்டாள் தனம்..!” என்றாள் தேஜு, கோபமாய்.
“ஆமா..! முட்டாள் தனம் தான். இந்த ஒரு விஷயத்தில் முட்டாளா இருக்க தான் விரும்புறேன்..!” என்றாள்.
“சரி, இப்ப அவனைப் பார்த்ததுக்கு அப்பறமும், நீ என்கிட்டே சொல்லவே இல்லையே..?” என்றாள்.
“எதுக்கு சொல்லணும்..? அவன்கிட்டயே சொல்லலை. இதை எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்க சொல்றியா..?” என்றாள்.
“அவன் பெர்சனல் கேரக்டர் எப்படின்னே தெரியலைடி. அவனுக்கு ஏன் டிவேர்ஸ் ஆச்சுன்னு கூட தெரியலை.பட் ட்ரெயின்ல நான் பார்த்த வரைக்கும், பக்கா ஜென்ட்டில் மேன் தான்..!” என்றாள் தேஜு.
“அவன் எப்படி இருந்தாலும், எனக்குப் பிடிக்குது தேஜு. நானும் மறக்க எவ்வளவோ டிரை பண்ணிப் பார்த்துட்டேன். பட் முடியலை..!” என்றவளுக்கு காரணமில்லாமல் கண்ணீர் வந்தது.
“இப்பவும் நீ அதே அளவு லவ் வச்சிருக்கியா..?” என்றாள்.
“இப்ப மட்டும் இல்லை..எப்பவுமே குறையாது..!” என்றாள் தீர்க்கமாய்.
“அதுக்காக, சென்கேன்ட் லவ்வா..?” என்றாள் தேஜு.
“எனக்கு பர்ஸ்ட் லவ் தான..!” என்றாள்.
“சரி..! அப்ப அவன்கிட்ட பிரப்போஸ் பண்ணிடு..” என்றாள், சர்வ சாதரணமாய்.
“இல்ல வேண்டாம். அப்போ அவன் யாருன்னே எனக்குத் தெரியாது. ஆனா, இப்போ அவன் யாரு, அவனோட பின்னணி எல்லாமே தெரியும். இப்ப போய் பிரப்போஸ் பண்ணினா, தப்பா தோணும்..!” என்றாள்.
“சரி..! அப்ப, அம்மையார், ஔவையார் ஆகுற வரைக்கும், இப்படி சொல்லாம லவ் பண்ணிட்டே இருப்பியா..?” என்றாள் நக்கலாய்.
“வேண்டாம் தேஜு..! கிண்டலுக்கு கூட, என் காதலை கிண்டல் பண்ணாத. அந்த ஒரு விஷயத்தை என்னால ஜீரணிக்கவே முடியாது..!”என்றவளின் முகத்தில் அப்படி ஒரு தீர்க்கம்.
“அடிப்பாவி..! உன்னை மட்டும் யோசிக்கிறியே..? என்னை யோசிச்சியா..? இப்பவே வயசு இருப்பத்தி அஞ்சு ஆகுது. நீ இவனை நினைச்சு இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க சரி. நான் யாரையும் நினைக்கலையே… நான் ஏண்டி சிங்கிளா இருக்கணும்..?” என்றாள் தேஜு.
“அடிப்பாவி…! நீ ஒருத்தனை லவ் பண்ணிட்டு இருக்கேன்னு கேள்விப்பட்டேன்..!” என்றாள் அஸ்வினி.
“அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. உன் வாயிலிருந்து உண்மையை வர வைக்க, நான் போட்ட பிளான். எங்க..? எப்படி பிளான் போட்டாலும், அமைதியா இருந்தே கழுத்த அறுத்துட்ட. இப்ப கூட நீயா சொல்லலை. மாட்டிகிட்ட பிறகு சொல்ற…?” என்றாள் சலிப்பாய்.
“சாரி தேஜு..!” என்றாள் மனதார.
“அதெல்லாம் விடு அஸு..! நான் சொல்றதைக் கேளு. அவன் இப்போ சிங்கிள் தான். நீ பிரபோஸ் பண்ணி பாரு. ஓகேன்னா ஓகே. இல்லைன்னா இல்லை..!” என்றாள்.
“எனக்கு ஒரு மாதிரி இருக்கு..!” என்றாள் அஸ்வினி.
“லவ் பீல் வந்துட்டா, அப்படித்தான் இருக்கும்..!” என்றாள் தேஜு, ஒரு மார்க்கமாக.
“அடச்சீ..! அதில்லை. அவர்கிட்ட போய் பேசவே, தயக்கமா, ஒரு மாதிரி இருக்கு..!” என்றாள்.
“அதுக்காக நானா போய் பிரபோஸ் பண்ண முடியும்..? போடி..!” என்று இழுத்துப் போர்த்திப் படுத்து விட்டாள் தேஜு.
“நீ முன்னாடி இருந்து இப்படி, என்கூட சகஜமா இருந்திருந்தா…நான் இப்படி லவ் பண்ணியிருக்க மாட்டனோ…ரொம்ப லோன்லியா பீல் பண்ணிருக்கேண்டி..!” என்றாள் அஸ்வினி.
போர்வையை விலக்கியவள், தன் சகோதரியை அணைத்துக் கொண்டாள்.
“சாரி அஸ்வினி..! எல்லாம் என்னோட முட்டாள் தனம். இப்போ ரொம்ப பில் பண்றேன். எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு, இனி பில் பண்ணிடுறேன் ஓகே..!” என்று சொல்ல, அவளின் அணைப்பில், சுபஷ்வினியின் மனமும் இதம் அடைந்தது.

Advertisement