Advertisement

குடை 17:
“என்னாச்சு ரேகா..? ஏன் தனியா வந்து உட்கார்ந்திருக்க..? என்றார் சிவகாமி.
“இத்தனை வருஷம் கழிச்சு, இவனுக்கு எங்க இருந்து வந்தது பாசம்..? இத்தனை நாள் நாம எங்க இருக்கோம்.. இருக்கோமா, இல்லையா? அப்படின்னு எதையும் கண்டுக்காம, இப்ப ஏன் திடீர்ன்னு வந்திருக்கான்..? என்றார் ரேகா.
“நீ யாரை சொல்ற..? என்றார்.
“நடிக்காதிங்கம்மா..! நான் மித்ரனை தான் சொல்றேன்னு, உங்களுக்கு நல்லாத் தெரியும். அவன் தான் மித்ரன்னும், உங்களுக்கும் நல்லா தெரியும். அப்பறம் ஏன், அவனைத் தெரியாத மாதிரி நடிக்கிறிங்க..? என்றார் ரேகா.
“என் பேரனை எனக்குத் தெரியாதா…? அவன் உன் மகனா வந்திருந்தா, நானும் உடனே பாசத்தைக் காட்டியிருப்பேன். அவன் இன்னும் ராணியம்மாள் பேரனா தான் இருக்கான். அந்த இறுக்கம், அந்த திமிர் இப்படி எதுவும் அவன்கிட்ட குறையலை. வந்ததில் இருந்து பாட்டின்னு கூட சொல்லலை..! என்றார் சிவகாமி.
“விகாஸ்க்கு தெரிஞ்சா..எப்படி எடுத்துப்பானோன்னு பயமா இருக்கும்மா..! அவன் அப்பாவும், அண்ணனும் உயிரோட தான் இருக்காங்க, அதுலயும் இந்த மித்ரன் தான் உன்னோட அண்ணன்.. அப்படின்னு சொன்னா, அவன் ஏத்துப்பானா..? என்று ரேகா புலம்ப,
“அவனை சமாளிக்கிறது பெரிய விஷயம் இல்லை. ஆனா இப்ப மித்ரன் எதுக்கு வந்திருக்கான்னு தெரியனும். அவனா வந்தானா..? இல்லை உன் புருஷன் அனுப்பி வந்தானா..? என்றார் சிவகாமி.
“தெரியலைம்மா..! எப்படி வந்திருந்தாலும், என் மகன் வந்திருக்கான். பதினெட்டு வருஷம் கழிச்சு வந்திருக்கான். இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூட, இந்த அம்மாவோட நியாபகம் அவனுக்கு வரவேயில்லையா..? என்றபடி ரேகா அழுகத் தொடங்கினார்.
இத்தனை நேரம் கட்டுப் படுத்தி வைத்திருந்த அவர் கண்ணீர் எல்லாம், வெளி வரத் தொடங்கியது.
“ஒரு தடவை என்ன..பல தடவை உங்க நியாபகம் வந்தது..! என்று பின்னிருந்து சொன்னான் ஜீவ மித்ரன்.
அவனின் குரலில் திகைத்துத் திரும்பியவர்கள்,
“மித்ரா..! என்றார் அதிர்ந்து.
“அதே கேள்வியை நான் கேட்கிறேன்..? உங்களுக்கு ஒரு தடவை கூட என் நியாபகம் வரலையா..? விகாஸ் மேல உங்களுக்கு இருந்த பாசம், கொஞ்சம் கூட என் மேல இல்லையா..? என்றான் மித்ரன்.
“நான் பெத்த ரெண்டு பிள்ளைங்க மேல, நான் எப்படி பாகுபாடு பார்ப்பேன்..? என்றார் ரேகா.
“நீங்க பார்த்திங்க..? அதான் என்னை அப்பாவோட அனுப்பிட்டிங்க..? என்றான் குற்றம் சாட்டும் குரலில்.
“நான் உன்னை அனுப்பலை மித்ரா..! நீ தான்,உன் அப்பா கூடவும்,பாட்டி கூடவும் தான் போவேன்னு அடம்பிடிச்ச..! என்றார் ரேகா, கண்ணீருடன்.
“ப்ளீஸ்..! முடிஞ்ச விஷயத்துக்கு சப்ப கட்டுக் காட்டாதிங்க..! இப்ப கூட உங்களைக் கண்டு பிடிக்க, நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும். எப்படிப்பட்ட சூழ்நிலையில இங்க வந்தேன்னு எனக்கு தான் தெரியும்.உங்களுக்காக எதையெல்லாம் இழந்துட்டு வந்துருக்கேன்னு எனக்குதான் தெரியும்..? என்றான் ஜீவ மித்ரன்.
“மித்ரா..?
“நான் தான் அப்போ சின்ன பையன். விவரம் தெரியாம சொன்னேன்னு சொன்னா, நீங்களும் சரின்னு சொல்லி அனுப்பி வச்சது உங்க தப்பு. அதுக்கு பிறகு கூட, என்னோட நியாபகம் வராம இருந்தது உங்க தப்பு..! என்றான்.
“உன்னோட நியாபகம், எனக்கு இல்லைன்னு சொல்ல வரியா..? என்றார் ரேகா.
“இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ன்னு சொல்ல வரேன். என்னைத் தேடி வந்திருப்பிங்கன்னு சொல்ல வரேன்..! என்றான்.
“எந்த ஒரு நிலையிலும் உங்களைத் தேடி வரக் கூடாதுன்னு, உங்க பாட்டியும், அப்பாவும் தான் சொன்னாங்க..! என்றார் சிவகாமி பாட்டி.
“அதே வார்த்தையை நீங்க சொன்னா, அம்மா அப்படி இருந்திருவாங்களா..? என்றான் மித்ரன்.
“இப்ப என்னன்னு சொன்ன..? என்று ரேகா அழுகையுடன் கேட்க,
“அம்மா.. பிளீஸ்..! எனக்கு அம்மான்னு கூப்பிட ஆசைதான். உங்களுக்கு பிடிக்குதோ, என்னமோ..? அதனால் தான் கூப்பிடலை..! இது சினிமா கிடையாது, வாழ்க்கை. உங்களால நான் பதினெட்டு வருஷம் இழந்த தாய்ப்பாசத்தை திருப்பித் தர முடியுமா..? என்றான்.
“உன்னால…நான் இத்தனை வருஷம் இழந்த அப்பா பாசத்தை திருப்பித் தர முடியுமா..? என்றான் விகாஸ்.
“விகாஸ்..! என்று அதிர்ந்தார் ரேகா.
“ஏன்ம்மா என்கிட்டே பொய் சொன்னிங்க..? அப்பாவும்,அண்ணாவும் இல்லைன்னு..! என்று ரேகாவை உலுக்கினான்.
விகாசுக்கு தெரிய வேண்டிய உண்மைதான். ஆனால் அது தானாக தெரிய வந்தது தான் அவனுக்கு அதிர்ச்சி. மித்ரனை அவனுக்குப் பிடித்திருந்தது. ஒரு பிஸ்னஸ்மேனாக. அந்த வயதில் அவனுடைய திறமை கண்டு வியந்திருக்கிறான். எத்தனையோ நாள் அவனை உதாரணமாக மனதில் நினைத்திருக்கிறான். ஆனால், அவன் தன்னுடைய அண்ணன் என்ற உண்மை, அவனால் ஜீரணிக்கப் பட முடியாத ஒன்று.
தாயிடம் வளர்ந்த பிள்ளைக்கும், தந்தையிடம் வளர்ந்த பிள்ளைக்கும் இடையே அங்கே ஒரு பாசப் போராட்டமே உருவானது.
“விகாஸ், உன் அண்ணன் மேல எந்த தப்பும் இல்லை. எல்லா தப்பும் என்மேல தான். நான் கொஞ்சம் தன்மானம் பார்க்காம இருந்திருந்தா, இன்னைக்கு என் ரெண்டு பிள்ளைங்களும் என் கூடவே இருந்திருப்பாங்க..! என்று ரேகா அழுதார்.
“நீயே நினைச்சிருந்தாலும், ராணி விட்டிருக்க மாட்டா. எல்லா பழியையும் தூக்கி உன் மேல போட்டுக்காத ரேகா.. என்று சிவகாமி அதட்டினார்.
“இல்லைம்மா..! இவங்களை பெத்துக்கற வரைக்கும் இருந்த பொறுமை, அதுக்கு பிறகும் இருந்திருக்கணும். இப்ப கஷ்ட்டப் படுறது என் பிள்ளைங்க தான்..! என்றார் ரேகா.
“நீங்க ஏன் என்னை ஒரு தடவை கூட தேடி வரலை..! என்றான் மித்ரன்.
“யார் சொன்னது..? சென்னைல இருந்த வரை, நான் நிறைய தடவை தேடி வந்தேன். ஒரு தடவையாவது அவனை என் கண்ணில் காட்டுங்கன்னு கெஞ்சினேன். ஆனா அத்தை கொஞ்சம் கூட இறக்கம் காட்டவேயில்லை. அப்பறம் ஒரு நாள் வந்தப்போ, யாருமில்லை. அப்போதான் தெரிஞ்சது, அத்தையும், உங்கப்பாவும் ஊரை விட்டே போயிட்டங்கன்னு..! என்றார் ரேகா.
“இப்போ தேடி வரத் தெரிஞ்ச உனக்கு, முன்னாடியே வரத் தெரியாதா..? என்றான் விகாஸ், நக்கல் குரலில்.
“எனக்கும், நீங்க உயிரோட இருக்குற விஷயமே ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் தெரியும். உனக்கு என்ன காரணம் சொல்லி வளர்த்தாங்களோ, அதே காரணம் தான் எனக்கும் சொல்லி வளர்த்தாங்க..! என்றான் மித்ரனும் அதே நக்கல் குரலில்.
விகாசின் தலை தொங்கிப் போனது. இரண்டு மகன்களும் இப்படி பேசிக் கொள்வதை ரேகா சுத்தமாக விரும்பவில்லை.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு சந்தித்தால், அவர்களும் கட்டியா தழுவுவார்கள்…? ஒரு பெரிய இடைவெளியே இருவருக்கும் இடையில். இரண்டு பிள்ளைகளின் வளர்ப்பும் இருவேறு மாதிரி.
ஒருத்தன் பணத்தின் மதிப்பில் வளர்க்கப்பட்டான், இன்னொருவன் பாசத்தின் மதிப்பில் வளர்க்கப்பட்டான்.
ஒருவன் பணத்தில் இருந்ததால், அந்த திமிர் இயல்பிலேயே வந்திருந்தது. இன்னொருவனுக்கு, பாசத்தில் இருந்ததால், அந்த அமைதியும் அழகும் இயல்பிலேயே வந்திருந்தது.
பணத்தின் கம்பீரமும், பாசத்தின் கம்பீரமும் எதிரெதிரே முறைத்துக் கொண்டு நின்றது.
இரயிலில் வரும் வரை, விகாஸ் தன்னுடைய தம்பி என்று மித்ரனுக்கு தெரியவே தெரியாது. சென்னைக்கு வந்து அவர்களைத் தேடியவனுக்கு, பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.
அதற்கு பிறகு, ஒரு டிடக்டிவ் ஏஜன்சி மூலம் கிடைத்த தகவல் படி தான், விகாஸ் தன்னுடைய தம்பி என்று மித்ரனுக்குத் தெரிய வந்தது.
அவன் ஊட்டி செல்வதாய் சொன்னது நியாபகம் வர, அவனிடம் சொல்லாமலேயே, அவனுடன் சேர்ந்து வந்தான் மித்ரன். வரும் வழியில் கூட, உண்மையை சொல்லத் துடித்த உதடுகளை, கட்டுப் படுத்தி தான் வைத்திருந்தான்.
“இப்ப நீ இங்க வந்தது ராணிக்குத் தெரியுமா, தெரியாதா மித்ரா..? என்றார் சிவகாமி.
“பாட்டிக்கு  உங்களைத் தேடி வந்திருக்கேன்னு தெரியும். ஆனா, நீங்க ஊட்டில இருக்குறதோ, நான் உங்களை கண்டுபிடிச்சு இங்க வந்ததோ அவங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. என்றான்.
“இத்தனை வருஷம் கழிச்சு, நாங்க உயிரோட இருக்குற விஷயத்தை உனக்கு யார் சொன்னது..? என்றார் ரேகா.
“பாட்டி தான் சொன்னங்க..! என்றான் அசால்ட்டாய்.
“இத்தனை வருஷம் கழிச்சு, அவங்களா சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே..? சொல்லனும்ன்னு நினைச்சிருந்தா எப்பவோ சொல்லி இருப்பாங்களே..? என்றான் விகாஸ்.
“கரெக்ட்..! அவங்க தானா சொல்லலை..! என்று ஒரு நிமிடம் நிறுத்தினான்.
அவர்கள், அவனையே கேள்வியாகப் பார்க்க,
“நான் சொல்ற பொண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டா, இத்தனை வருஷம் உன்கிட்ட சொல்லாத ஒரு உண்மையை சொல்றேன்னு சொன்னங்க..!
“அப்பறம்..?
“என்ன உண்மைன்னு கேட்டப்பதான் சொன்னாங்க. நீங்க உயிரோட இருக்குறதையும், அவங்க சொன்னது பொய்யின்னும்..! என்றான்.
“இதுக்காகவா அந்த லக்சனாவை மேரேஜ் பண்ணிங்க..? என்றான் விகாஸ் ஆச்சர்யமாக.
“எஸ்..! அவங்களோட கண்டிஷன் அது. லக்சனாவை நான் மேரேஜ் பண்ணினா, உங்களை அங்க வர வைக்கிறதா சொன்னங்க..! பட் நான் நம்பலை. அப்பறம் டாடிகிட்ட கேட்டப்ப தான், அவரும் தயங்கி உண்மையைச் சொன்னார். சரி, என்னோட மேரேஜ் தான், எல்லாரையும் ஒன்னு சேர்க்கும் அப்படின்னா, அதையும் பண்ண தயாரா இருந்தேன்..! என்றான் மித்ரன்.
“மேரேஜ் கூட முடிஞ்சிடுச்சா மித்ரா..? என்றார் ரேகா, விரக்தியாய்.
“மேரேஜ் மட்டுமில்லம்மா , அவருக்கு டிவர்ஸ் கூட ஆகிடுச்சு..! என்றான் விகாஸ்.
“என்ன சொல்ற..? என்று ரேகா அதிர்ந்து கேட்க,
“இதுக்கு எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறிங்க. அவங்க ஒரு கண்டிஷன் வச்சு தான் எனக்கு மேரேஜ் பண்ணாங்க. நான் உண்மையா நடந்துகிட்டேன். ஆனா அவங்க அப்படி நடந்துக்கலை. சோ டிவேர்ஸ் பண்ணிட்டேன்.. என்றான் சாதரணமாக.
“டைவேர்ஸ் பண்றதை, சாதரணமா சொல்ற மித்ரா..? உன்னோட வாழ்க்கையை பத்தி யோசிச்சுப் பார்த்தியா..? என்றார்.
“மும்பைல, இதெல்லாம் சகஜம். ஏன் லக்சனாவுக்கு ஆல்ரெடி ஒரு ரிலேஷன்ஷிப் இருந்திருக்கு. அதை மறைச்சு தான், எனக்கு வைப் ஆகியிருக்கா. நான் டிவேர்ஸ் கேட்டது கூட அவளுக்கு பெரிசில்லை. பட் என்னோட பணம் எல்லாம் அனுபவிக்க முடியாத கோபம், அவளுக்கு இப்ப வரைக்கும் இருக்கு..! என்றான்.
“அவன் நல்ல முறையில் இருப்பான் என்ற நம்பிக்கையில் தான், காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார் ரேகா. ஆனால் மித்ரனின் வாழ்க்கை ஒழுங்கில்லாமல் இருந்ததை, அவன் வாயால் கேட்கும் போது அவருக்கு மனதில் பாரம் அழுத்தியது.  தாயின்றி வளர்ந்த பிள்ளையின் தோற்றம்,  அவருக்கு மிகுந்த வேதனையை தான் ஏற்படுத்தியது.
“உன்னோட அப்பா, இதுக்கு எப்படி சம்மதிச்சார்..?
“அப்பா..! எப்பவுமே என் விருப்பத்துக்கு மாறா, எதுவும் செய்ய மாட்டார். அதே மாதிரி பாட்டியின் விருப்பத்து மாறாவும் எதுவும் செய்ய மாட்டார். எங்க ரெண்டு பேருக்கும் இடையில் மாட்டிக்கிட்டு முழிப்பார்..! என்றான் மித்ரன். அவனுடைய அப்பாவைப் பற்றிய நினைவில், அவன் முகம் கனிந்தது.
நேசனின் மேல் அவன் வைத்திருக்கும் பாசத்தின் அளவு, அவன் முகத்தில் தெரிந்தது.
“உங்க ரெண்டு பேருக்கு இடையில மாட்டிகிட்டு நான் தான் முழிக்கிறேன்…!என்ற நேசனின் வார்த்தைகள், நியாபகத்திற்கு வந்தது ரேகாவிற்கு.
“உங்கப்பா மாதிரி, எல்லாத்துலையும் உனக்கும் அவசரம் மித்ரா..! என்றார் ரேகா.
“நோம்மா..எனக்கு வரப் போற பொண்ணு இப்படித்தான் இருக்கணும்ன்னு எனக்குள்ள நிறைய ஆசைகள் இருந்தது. அதுல எதுவுமே லக்சனாகிட்ட இல்லை. இருந்தும் நான் ஓகே சொன்னதுக்கு ஒரே காரணம் நீங்க, நீங்க மட்டும் தான்.  உங்களைப் பார்க்கணும், டாட் கூட உங்களை சேர்த்து வைக்கனும்கிற ஒரு காரணம் தான். வேற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. நான் அவ கூட ஒரு நாள் கூட வாழ்ந்தது இல்லை. அது அவளுக்கும் பெரிய விஷயமா இருந்ததில்லை.
பாட்டி அவளோட பணத்தைப் பார்த்தாங்க, ஆனா அவ குணத்தைப் பார்க்கவேயில்லை.. என்றான்.
“வேலைக்கு போனா மானம் போகும், கற்பு போகும்ன்னு பேசுனவ, இன்னைக்கு இப்படிப்பட்ட பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்கா… கொஞ்சம் கூட யோசிக்காமா..? என்று சிவகாமி பொரிந்து தள்ளின்னார்.
இத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்த போதும், அவர்களுக்குள் அந்த பிணைப்பு உடனேயே வரவில்லை. அதற்கு கொஞ்சம் நேரம் எடுத்தது. இப்போது கூட, மித்ரனால் அம்மாவிடம் முழுமையாக ஒன்ற முடியவில்லை. ஆனால் அவர்களைக் கண்டு விட்ட மகிழ்ச்சி மனதிலும், முகத்திலும்.
“உங்க அப்பா எப்படி இருக்கார் மித்ரா..? என்று ரேகா தயக்கத்துடன் கேட்க,
“இந்த பதினெட்டு வருஷத்துல, உங்களை நினைச்சுகிட்டே வாழ்ந்துகிட்டு இருக்கார். எனக்கு விவரம் தெரிஞ்சு..நிறைய டைம், பாட்டி அவருக்கு செகேண்ட் மேரேஜ் பண்ண டிரை பண்ணாங்க..! பட், டாட் அசையவேயில்லை. அந்த ஒரு விஷயத்துல மட்டும், டாடிகிட்ட பாட்டியோட ஆசை பலிக்கவேயில்லை… என்றான்.
“மித்ரனின் வாயிலிருந்த கேட்ட வார்த்தைகள், ரேகாவை இன்னொரு உலகிற்கு அழைத்து சென்றது, என்று தான் சொல்ல வேண்டும். பின்னே எது எப்படி இருந்தாலும், அவர் கணவனின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை, இன்றும் உயிர்ப்புடன் இருப்பது கண்டு, ஒரு வித உணர்வைக் கொடுக்கத்தானே செய்யும்..
“எத்தனை வருஷம் ஆனாலும் சரி, என் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் உங்களால பண்ணி வைக்கவே முடியாது. அவரும் என்னைத் தவிர, யாரையும் மனசால கூட நினைக்கவே மாட்டார்.. என்று ராணியம்மாளிடம், தான் பேசிய வார்த்தைகள் நியாபகத்திற்கு வர, ரேகாவின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது.
அவருடைய, இத்தனை வருட நம்பிக்கை பொய்க்கவில்லை. இன்னமும் நேசன் ரேகாவின் நினைப்பில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
“என்னாச்சும்மா..?
“ஒண்ணுமில்லை மித்ரா..! அவர் எனக்குத் தாய் மாமா பையன் தான். எங்களுக்கு மேரேஜ் பேசி முடிச்ச பிறகு தான், நாங்க காதலிக்கவே ஆரம்பிச்சோம். எவ்வளவு சண்டை வந்தாலும், எங்க காதல் மட்டும் குறையவே இல்லை. அத்தனை வருஷ என்னோட பொறுமைக்குத் தீனி, உங்கப்போட காதல்.
அந்த காதல், தொழில் பக்கம் திரும்ப ஆரம்பிச்ச சமயம், அதை உங்க பாட்டி சரியா யூஸ் பண்ணிகிட்டாங்க..! எத்தனை வருஷம் பிரிஞ்சு இருந்தாலும், அது மாறவே மாறாது..! என்றார் ரேகா.
“எப்படிம்மா..? டாட் கூட,நான் கிளம்பும் போது இதைதான் சொன்னார். ஆனா நான் உங்களைத் தேடி வந்தது, அவருக்கு இப்ப தான் தெரிஞ்சிருக்கும். நான் அவர்கிட்ட சொல்லலை..! என்றான்.
“அவரும் ஒரு நாள் வருவார்..! என்றார் ரேகா நம்பிக்கையாக.
“நான் இங்க வந்தது உனக்குப் பிடிக்கலைன்னா சொல்லிடு விகாஸ். கிளம்பிடுறேன்..! என்றான் மித்ரன், அவனின் முகத்தைப் பார்த்து.
“உங்களை, இங்க கூட்டிட்டு வந்ததே நான் தான். முதல்ல நீங்க என்னோட கெஸ்ட். அப்பறம் தான் மத்த ரிலேஷன்ஷிப் எல்லாம். வீட்டுக்கு வந்த கெஸ்ட்ட, உடனே திருப்பி அனுப்புறது எங்க முறையில்லை.. என்றான் முறைத்துக் கொண்டு.
“அப்படிங்கிற..?
“அப்படித்தான்…! என்றவன்,
“அப்பறம், அம்மா முதல்ல எனக்கு தான் அம்மா. அப்பறம் தான் யாருக்கா இருந்தாலும்.. என்றான் முறுக்கிக் கொண்டு.
“டேய்..! நான் பிறந்த பிறகு தாண்டா..நீயே பிறந்த. அப்ப யாருக்கு முதல்ல அம்மாவாகியிருப்பாங்க..? என்றான் மித்ரன் ஒரு சிறிய சிரிப்புடன்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க சொல்லுங்கம்மா,,! என்று ரேகாவை வம்பிற்கு இழுத்தான் விகாஸ்.
இப்போது முழிப்பது ரேகாவின் முறை ஆகியது.யாருக்கு சொல்வது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்க,
“விடு..! அவங்க உனக்கே அம்மாவா இருக்கட்டும்..! என்று மித்ரன் சொல்ல, விகாஸ் ஒரு நிமிடம் வியந்து பார்க்க,
“எனக்கு மம்மியா இருந்துட்டு போகட்டும்..! சரியா..? என்றான் சிரிப்புடன். அவன் சொன்ன பாவனையில் அனைவருக்குமே சிரிப்பு வந்தது.
அந்த பதினெட்டு வருட இடைவெளியை, கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சி செய்தான் மித்ரன்.
ஆனால் அங்கே அவனின் பாட்டி, ராணியம்மாள்..இவனை இவர்களிடம் இருந்து பிரிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

Advertisement