Advertisement

அவனின் சொல்லில் பெற்ற தாயின் மனம் கலங்க, அதை வெளிப்படுத்தத் தெரியாது தவித்தார் ரேகா. அதற்கு காரணம் உண்டு. அவர் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தினால் மித்ரனுக்கு கோபம் வரும். அதனால் அமைதியாக இருந்தார்.
“பிள்ளைன்னு தெரிஞ்சும் உங்களுக்கு இன்னமும் தயக்கம் போகலை இல்லையா..? என்றான்.
“அம்மான்னு தெரிஞ்சும், உனக்கு என்னை அம்மான்னு கூப்பிட மனசு வரலை இல்லையா..? என்றார் ரேகாவும் பதிலுக்கு.
“என்னை எப்படி அடையாளம் கண்டு பிடிச்சிங்க..? என்றான்.
“இதென்ன பிரம்மாதம்..? பத்து மாசம் சுமந்து பெத்து, பத்து வயசு வரை வளர்த்தவளுக்குத் தெரியாதா..பையன் யாருன்னு..? என்றார் ரேகா.
அவரின் அந்த வார்த்தைகளில் கண்கள் கலங்கியது அவனுக்கு. இத்தனை வருடங்கள் இழந்த தாய்ப்பாசம், கிடைக்க வேண்டிய வயதில் கிடைக்காத தாய்ப்பாசம்.
“பரவாயில்லையே..? அந்த மட்டுக்கும் பிள்ளைன்னு அடையாளமாவது தெரிஞ்சதே..? என்றான் நக்கலாய்.
“விகாஸ்க்கு தெரியுமா..? என்றார் ரேகா.
“நான் சொல்லலை..! என்றான் பட்டென்று.
“அம்மா, தம்பின்னு சொல்ல ஈகோ பார்க்குற நீ, எங்களை எதுக்கு தேடி வரணும்..? உங்க அருமை பாட்டி எப்படி விட்டாங்க..? என்றார் ரேகா.
“சோ..! உங்களுக்கு இப்பவும் என்னைப் பத்திக் கவலை இல்லை. என்மேல துளி பாசம் கூட இல்லை. இப்பவும் பாட்டியைப் பத்திய கேள்விதான் இல்லையா..? என்றான்.
“பத்து வயசுலையே என்னோட பாசம் உனக்கு தெரியலை. இப்ப மட்டும் தெரியவா போகுது..? என்றார் விரக்தியான குரலில்.
அந்த வார்த்தைகளில் அவன் தலை குனிய,
“இங்க என்ன பண்றிங்க ரெண்டு பேரும்..? மித்ரன் சார் உள்ள வாங்க..! என்றான் விகாஸ்.
“எதுக்கு இவனை சார்ன்னு கூப்பிடுற..? என்றார் ரேகா.
“அம்மா..! அவரை மரியாதை இல்லாம பேசாதிங்க. அவரு எவ்வளவு பெரிய ஆள்ன்னு தெரிஞ்சா இப்படி பேச மாட்டிங்க…! என்றான் விகாஸ்.
“பணத்துக்கு மதிப்பு குடுக்க கூடாதுன்னு உனக்கு சொல்லி இருக்கேனா இல்லையா..? என்றார் ரேகா, விகாசிடம்.
“அம்மா..!!  என விகாஸ் ஏதோ சொல்ல வர,
“பரவாயில்லை விகாஸ்.., அம்மாதான..! சாரி, உங்க அம்மா தான… சொன்னா சொல்லிட்டு போறாங்க. நான் இதை பெருசா எடுத்துக்க மாட்டேன்..! என்றபடி மித்ரன் உள்ளே சென்றான்.
“இவனுக்கு மட்டும் தான் நான் அம்மாவா..? என்று உள்ளுக்குள் நினைத்த ரேகா, மனம் வெம்பிப் போனார்.
மித்ரனை சடனாக பார்த்திருந்தால் அதிர்ச்சியாகி இருக்கும் அவருக்கு.ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னரே, ட்ரெயினில் எடுத்த செல்பியை, ரேகாவிற்கு அனுப்பியிருந்தான் விகாஸ். அப்போதிலிருந்தே ரேகாவிற்கு சந்தேகம்.அவன் மித்ரன் என்பதில் வந்த சந்தேகம் இல்லை. அவன் எதற்காக வருகிறான் என்ற சந்தேகம்.
தன்னையும், தன் அன்பையும் தூக்கி எறிந்துவிட்டு, தந்தைவழி பாட்டியுடன் சென்றவனுக்கு, இத்தனை வருடங்கள் கழித்து…தன்னை நியாபகம் இருக்கிறதா என்ற சந்தேகம் தான்.
நினைவுகளில் இருந்தவர், நிஜத்திற்கு மீண்டு உள்ளே சென்றார்.
“தாத்தா எங்க பாட்டி? என்றான் விகாஸ்.
“எஸ்டேட் வரைக்கும் போனார்..! இன்னமும் ஆளைக் காணோம். போனா போன இடம், வந்தா வந்த இடம் தான் மனுஷனுக்கு.. என்று சிவகாமி பாட்டி குறைபட,
“அப்பாவை பேசலைன்னா உங்களுக்குத் தூக்கம் வராதே..! என்று ரேகா சொல்ல,
“அந்த அளவுக்கு தாத்தாவை லவ் பண்றாங்க பாட்டி..? என்ற விகாஸ், பாட்டியைப் பார்த்து கண்ணடிக்க…. அவர்களை, வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர் சகோதரிகள் இருவரும்.
“ஆன்ட்டி உங்க மூத்த பையன் எங்க..? என்றாள் சுபஷ்வினி.
“என்ன சொல்ற..?விகாஸ் ஒரு பையன் தான..? என்றாள் தேஜு.
“இல்லை, இன்னொரு பையன் இருந்த மாதிரி நியாபகம் எனக்கு. சின்ன வயசுல நான் பார்த்திருக்கேன்..! என்றாள் சுபஷ்வினி குழப்பமாக.
“குழப்பம் எல்லாம் வேண்டாம். எனக்கு ஒரு அண்ணா இருந்தான். அப்பாவும்,அவனும் ஒரு விபத்துல இறந்துட்டாங்க..! என்றான் விகாஸ் வருத்தமாக.
“ஹோ..! சாரி ஆன்ட்டி.. என்று சுபஷ்வினி வருத்தமாக சொல்ல, அதுவரை பேசிக் கொண்டிருந்த பேச்சுக்களைக் கேட்டுக் கொதித்து எழுந்தான் ஜீவ மித்ரன்.
உள்ளுக்குள் கொதிக்கத் தொடங்கிய அனலை, எந்த நீர் ஊற்றி அணைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. காரணமே இல்லாமல் கண் கலங்கியது.
இத்தனை வருடம் இவர்களை நினைத்து மட்டுமே அவன் வாழ்ந்திருக்கிறான். ஆனால் இங்கு, தான் இறந்து விட்டாதாக சொல்லி.., உயிரோடு இருக்கும் தன் அப்பாவுக்கும் இப்படி ஒரு நிலையா..? என்று அவனை அவனாகவே கேட்டுக் கொண்டான்.
கோபத்தில் தானாக எழுந்து நின்றிருந்தான் மித்ரன். அவனே அறியாமல்.
“என்னாச்சு மித்ரன் சார்…? ஏன் எந்திருச்சுட்டிங்க.? என்று விகாசும் எழுந்தான்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்,
“நத்திங்..! எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அப்போ நான் கிளம்புறேன்..! என்றபடி கிளம்ப போக,
“இங்க தங்குறதா சொன்னிங்க சார்..! இப்ப பட்டுன்னு கிளம்புறிங்க.. அதெல்லாம் முடியவே முடியாது. நீங்க இங்க தான் இருக்கணும்.. என்று உறுதியாக சொன்ன விகாஸ்,
“என்னம்மா பார்த்துட்டே இருக்கீங்க..? சொல்லுங்க.. என்றான்.
“ஆமாப்பா..! இங்க தான் இருக்கணும்..! என்றார் ரேகாவும் உறுதியாக.
அவரின் முகத்தில் எதைக் கண்டானோ, உடனே பட்டென்று அமர்ந்துவிட்டான் ஜீவ மித்ரன்.
“என்னடா விகாஸ்..! பிப்த் வரைக்கும் உன்கூடவே தான படிச்சேன். உனக்கு ஒரு அண்ணா இருந்தாங்கிற விஷயமே எனக்கு இன்னைக்கு தான் தெரியுது.. என்றாள் தேஜு.
“இப்போ இது ரோம்ப முக்கியமா..? என்றான் ஜீவ மித்ரன்.
“ஏன் சார்..? முக்கியமில்லையா..? என்றாள் தேஜு.
“கூட படிச்சேன், பெஸ்ட் பிரண்ட்,பேமிலி பிரண்ட்ன்னு சொல்ற…உனக்கே பார்த்த உடனே பிரண்ட்ன்னு கண்டுபிடிக்க முடியலை. இதுல வேற விஷயம் உனக்குத் தேவையா..? என்றான் மித்ரன்.
“அசிங்கப்பட்டாள் தேஜு..! என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் தேஜு.
அதன் பிறகு சாப்பிடும் நேரத்தில் கூட மித்ரன் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனுக்கு இருந்த கோபத்தில் ஒன்றை கவனிக்க மறந்தான்.
அன்றைய சமையலில் இருந்தது எல்லாமே சின்ன வயசில் அவன் விரும்பி சாப்பிட்ட உணவுகள் மட்டுமே. அதில் சில விகாசுக்கு அறவே ஆகாது.
நீண்ட வருடங்களுக்கு பிறகு அம்மாவின் சமையல். பாசம் ருசி அறியாது என்பதைப் போல உண்டு முடித்தான் ஜீவ மித்ரன்.
சாப்பிடும் போது, அவன் அறியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுபஷ்வினி. ஏனோ அவனை பார்த்துக் கொண்டிருந்தால் மட்டுமே போதும் என்று தோன்றியது அவளுக்கு.
அவளைப் பார்த்த தேஜு, அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீங்க இப்படி சொல்லாம கிளம்புவிங்கன்னு நாங்க நினைக்கவே இல்லை ஆன்ட்டி. அம்மா அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க..! என்றாள் சுபஷ்வினி.
“என்னோட நிலைமை அப்படி சுபா. அப்போதைக்கு சொல்லிட்டு வர நிலைமையில் இல்லை. அதான் அம்மா வராங்க இல்ல, அப்ப பார்த்து சாரி சொல்லிடுறேன் ஓகேவா..? என்றார் ரேகா.
“ஐயோ, சாரி எல்லாம் வேண்டாம் ஆன்ட்டி..! என்று சுபா சொல்ல,
“ஆமா கேட்கணும்ன்னு நினைச்சேன். ரெண்டு பேரும் சின்ன பிள்ளையில் அப்படி முறைச்சுக்குவிங்க..? இப்ப எப்படி ஒண்ணா இருக்கீங்க..? என்றார் ரேகா.
“சின்ன வயசுல மட்டும் இல்லை ஆன்ட்டி. இப்போ கொஞ்ச நாள் முன்னாடி வரை அப்படித்தான். இப்ப தான் நான் திருந்தியிருக்கேன்..! என்றாள் தேஜு.
“அதான பார்த்தேன். அஸ்வினி அப்படின்ற பேருக்கே அப்படி சண்டை போட்டிங்க..? இப்ப எப்படி..? என்றார்.
“இப்பவும் இவ பிரண்ட்ஸ்க்கு இவ அஸ்வினி தான். என் பிரண்ட்ஸ்க்கு நான் அஸ்வினி தான்.. என்று சொன்ன சுபா சிரிக்க,
“இதுக்கு இப்பவே ஒரு முடிவு கட்டுறேன். இந்த நிமிஷத்தில் இருந்து நான் தேஜு மட்டும் தான். சுபஷ்வினி இப்போதிலிருந்து அஸ்வினி என்று அழைக்கப்படுவாள்.. என்றாள் தேஜு.
“அதெப்படி உன்னை அஸ்வினின்னு கூப்பிட்டு எனக்கு பழகிடுச்சு.. என்றான் மித்ரன்.
“இதென்ன சார் பிரமாதம். ஒரு ரெண்டு நாள் கூப்பிட்டு இருப்பிங்க. அதை மாத்துறது பெரிய விஷயமா என்ன? என்று தேஜு சொல்ல,
“உன்கிட்ட பேசனும்ன்னா நான் இன்னொரு தடவை சாப்பிடனும்..! எனக்கு அதிகம் பேசுறவங்க எப்பவும் ஆகுறது இல்லை.. என்றான்.
“இதோ இவ பேசவே மாட்டா..! இவ தான் உங்களுக்கு செட் ஆவா. நான் உங்களுக்கு செட்டே ஆக மாட்டேன் சார்..! என்று தேஜு விளையாட்டாகத் தான் சொன்னாள்.
“அப்படிங்கிற..? என்றபடி சுபஷ்வினியைப் பார்த்தான் மித்ரன்.
அந்த பார்வை அவளுக்குள் ஒரு சுகமான உணர்வை ஏற்படுத்தியது. அவன் பார்ப்பது தெரிந்தும், கவனிக்காததைப் போல் இருந்து விட்டாள் சுபஷ்வினி.

Advertisement