Advertisement

குடை 15:
இயற்கை அன்னை, செழிப்பையும்,அழகையும் அள்ளிக் கொடுத்திருந்தாள் அந்த இடத்திற்கு. மலைகளின் ராணியாய் திகழ்கின்ற ஊட்டியில், அந்த இடத்திற்கு ராணியாய் இருந்தது அந்த அழகிய வீடு. செல்வமும், செல்வாக்கியமும் கொட்டிய வீடு அல்ல. அன்பும், பாசமும் முழுமையாக நிறைந்த வீடு.
அந்த வீட்டில் இருந்த மனிதர்களுக்கு அன்பு ஒன்று மட்டுமே பிரதானம். அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதைப் போல் இருந்தது அந்த வீட்டின் அமைப்பு.பெரிய வீட்டிற்கும், சிறிய வீட்டிற்கும் இடைப்பட்ட அமைப்பு.
ஒருகிலே மீட்டார் தொலைவிற்கு ஒரு வீடு என்று இருந்தது. அனைத்து வீடுகளிலும் முன்னால் பூஞ்சோலையாகவே இருந்தது. அதிகமான ரோஜா செடிகள் பூத்துக் குலுங்க, ஸ்ட்ராபெரி கொடிகள் அங்கிருந்த சுவர் முழுவதும் பரவியிருக்க, அதில் காய்த்திருந்த அந்த சிவப்பு வண்ண ஸ்ட்ராபெரிகள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய். பழங்களின் மேல் இருந்த பனித் துளி, பார்ப்போரை சாப்பிடத் தூண்டும்படியான அழகில் இருந்தது.
வீட்டின் முன் இருந்த இயற்கை புற்களின் மேல் இருந்த பனித்துளி, ஊட்டியின் குளிரை நினைவு படுத்துவதாய் இருந்தது. அந்த அழகிய வீட்டின் முன் வந்து காரை நிறுத்தினான் விகாஸ்.
அந்த பகுதியின் அழகில் மயங்கி, வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த சுபஷ்வினிக்கு, ஏதோ  மனதில் இருந்த பாரங்கள் எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்வு கிடைத்த மாதிரி இருந்தது. அந்த காலநிலையை மிகவும் விரும்பினாள்.குளிர் உடலினுள் ஊடூர, கைகளை இறுகக் கட்டியபடி வெளியே வேடிக்கைப் பார்த்தாள்.
“எவ்வளவு அழகா இருக்கு..? என்றபடி இறங்கினாள் தேஜஸ்வினி.
“ஆமா தேஜு. செம்மையான பிளேஸ். சோ பிளசன்ட்…எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த இடம்..! என்றாள் சுபஷ்வினி.
அவள் அப்படி சந்தோஷமாய் பேசி பல நாட்கள் கடந்த நிலையில், இப்போதைய அவளின் பேச்சு தேஜுவுக்கும் புதுத் தெம்பைக் கொடுத்தது.
ஜீவ மித்ரன் மட்டும் காரை விட்டு இறங்காமல் இருந்தான். அவனுக்கு மனதிற்குள் ஏதோ செய்ய, அவனால் உடனடியாக இறங்க முடியவில்லை.
“மித்ரன் சார்..! இறங்குங்க..! என்றான் விகாஸ்.
அதற்கு வீட்டிற்குள் இருந்து வந்தார். விகாசின் பாட்டி சிவகாமி. பெயருக்கு ஏற்றார் போல், உருண்டையான முகத்தில், ஐம்பது பைசா அளவுக்கு பொட்டுடன், பார்ப்பதற்கு தெய்வ கடாட்சமாக இருந்தார். ஸ்வெட்டர் அணிந்து அவ்வளவு பாந்தமாக இருந்தார்.
“பாட்டி..! என்றபடி விகாஸ் சென்று அவரை அணைத்துக் கொள்ள,
“பேசாதடா படவா..! என்கிட்டே பொய் சொல்லிட்டு போனவனுக்கு என் கூட பேச என்ன இருக்கு..? என்று ஒரு பக்கமாய் முகத்தைத் திருப்ப,
“பாட்டி கோபத்துல கூட நீ அஞ்சலி தேவி மாதிரியே இருக்க..? என்றான் சிரிக்காமல்.
“என்னது அஞ்சலி தேவியா..? என்று பட்டி முறைக்க,
“அப்பறம் என்ன அனுஷ்கா மாதிரின்னா சொல்ல முடியும்..? உனக்கு ஆசை தான்..! என்றபடி அவன் கடைவாயில் இடித்தான்.
“வந்தவங்களை முதல்ல கூப்பிடனும், தள்ளுடா படவா முதல்ல.. என்று அவனை விலக்கியவர், அங்கிருந்த சுபஷ்வினியையும், தேஜஸ்வினியையும் பார்த்து சிரித்தார்.
“வாங்கம்மா..! என்று சொல்ல,
“ஹாய் பாட்டி..? நல்லா இருக்கிங்களா..? என்றனர் சம்பிரதாயமாய்.
“எங்களுக்கு என்ன குறை..? இவன்  சந்தோஷமா இருந்தா நாங்களும் சந்தோஷமா இருப்போம்..! என்று விகாஸை பார்த்து சொல்ல, மீண்டும் பாட்டியைக் கட்டிக் கொண்டான்.
“ஆமா எங்க இன்னொரு கெஸ்ட்..? போன்ல சொன்னியே மூணு பேருன்னு..! என்று பாட்டி கேட்க,
“எங்க மித்ரன் சாரை காணோம்..? என்று பார்த்தவன், அவன் இன்னமும் காரை விட்டு இறங்காமல் இருக்க, காரின் அருகில் ஓடினான்.
“வாங்க மித்ரன் சார்..! என்று அவனே கதவைத் திறந்து விட்டு அழைக்க, வேறு வழியின்றி இறங்கினான் மித்ரன்.
எப்போதும் கம்பீரமாக இருக்கும் அவனின் நடை கொஞ்சம் தளர்ந்து காணப்பட்டது.அனைத்து உணர்வுகளையும் மனதிற்குள் போட்டு அடக்கிக் கொண்டு அமைதியாக சென்றான்.
“இவருதான் பாட்டி மித்ரன் சார். பெரிய பிஸ்னஸ் மேன்..! என்றான் விகாஸ்.
அவனைப் பார்த்த பாட்டிக்கு, எங்கோ பார்த்தது போன்று இருக்க, நன்கு கூர்ந்து கவனித்தார். ஆனால் நியாபகம் வரவில்லை.
“வணக்கம் பாட்டி..! என்றான் மித்ரன்.
“வாப்பா..! என்றவரின் உள்ளுணர்வு ஏதோ சொல்ல, மீண்டும் மீண்டும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமி பாட்டி.
“அம்மா எங்க பாட்டி..? என்றான் விகாஸ்.
“உள்ள தான் இருக்கா. உங்களுக்கு எல்லாம் சமைச்சுட்டுகிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்..! என்றார்.
“நாங்க வந்தது கூட தெரியாம அப்படி என்ன சமையல்..? என்றான் விகாஸ்.
“எப்படியும் நீ வெளிய எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்ட, கூட வந்தவங்களையும் சேர்த்து பட்டினி போட்ருப்ப, அதான் வந்த உடனே வயித்த நிரப்ப உங்க அம்மா வேலை பார்த்திட்டு இருப்பா..!  என்றார் சிவகாமி.
“எப்படி பாட்டி..? இப்படி உண்மை எல்லாம் புட்டு புட்டு வைக்கிறிங்க..? என்றாள் தேஜு.
“இவன் சின்ன வயசுல இருந்தே அப்படித்தான்..! வெளிய எங்கயும் சாப்பிட மாட்டான். அவனுக்கு எப்பவும் வீட்டு சாப்பாடுதான். அப்படியே வெளிய சாபிட்டாலும் ஒழுங்கா சாப்பிட மாட்டான். இதுக்குத்தான் இவனை எங்கயும் அனுப்பறதே இல்லை..! என்றார் சிவகாமி.
“இந்த பச்ச புள்ளைய வீட்டுலையே வச்சுக்கோங்க..! என்று தேஜு சொல்லிக் கொண்டிருக்க,
‘விகாஸ் என்ற குரலில் திரும்பினர் அனைவரும். மித்ரன் சிரமப்பட்டு தலையைத் தூக்கினான்.
“எல்லாரும் வீட்டுக்குள்ள வாங்க..! பனி கொட்டுது..! என்றார் ரேகா.
“ட்ரடிஷனல் மம்மி..! என்று தேஜு முனுமுனுக்க,
“ஹேய் அஸ்வினி.. வாடாமா..! என்று சுபஷ்வினியைப் பார்த்து கையை நீட்ட, அவரின் அருகில் சென்று அவரை அணைத்துக் கொண்டாள் சுபஷ்வினி.
“உங்கம்மாவுக்கு என்னை மட்டும் கண்ணு தெரியாது..? இன்னும் அவங்க கொஞ்சம் கூட மாறலை. அப்படியே தான் இருக்காங்க..! என்றாள் தேஜு.
“என்ன தேஜு…சத்தம்..? நீ கூட தான் இன்னும் மாறலை..! என்று ரேகா காலை வார,
“ஆன்ட்டி போதும் என்னை டேமேஜ் பண்ணது..! என்று முறுக்கிக் கொண்டாள்.
“அம்மா..! இவர் தான் நான் சொன்ன மித்ரன் சார்..! என்று ரேகாவிடம் அறிமுகப்படுத்தினான் விகாஸ்.
“வாப்பா..! என்று ரேகா புன்னகை முகமே சொல்ல, உள்ளுக்குள் நொறுங்கிப் போனான் ஜீவமித்ரன். அவரைப் பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றுப் போனான். அதில் மட்டும் அல்ல, எல்லாவற்றிலும் தோற்றுப் போன ஒரு உணர்வு. சம்பாதித்த எல்லா பணத்தையும் விட்டு எறியும் அளவிற்கு கோபம்..காரணம் தான் தெரியவில்லை அவனுக்கு.
“எவ்வளவு வருஷம் ஆச்சு..? உங்களை எல்லாம் பார்த்து..! என்று ரேகா கண்கலங்க,
“அதான் இப்ப பார்த்துட்டிங்கல்ல..! அதெப்படி இவதான் சுபஷ்வினின்னு சரியா கண்டு பிடிச்சிங்க..? என்றாள் தேஜு.
“என் செல்லத்தை எனக்குத் தெரியாதா..? என்றார் ரேகா.
அனைவரையும் உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல, பின்னே தேங்கினான் மித்ரன். அவனுக்கு உள்ளே செல்லவே பிடிக்கவில்லை.
“ஜீவா வாங்க உள்ள..! என்று சுபஷ்வினி அழைக்க, அவளின் அழைப்பில் வியந்து போனான் ஜீவ மித்ரன்.
அவளை ஒரு மாதிரி ஆழ்ந்து பார்க்க, அந்த பார்வை அவளுக்குள் என்னமோ செய்தது.
“சுபா..! ஸ்டெடி ஸ்டெடி. உளறிக் கொட்டாத..! என்று மனதிற்குள் சொன்னவள்,
“சாரி, ஜீவா சார்..!  என்று அவள் சொல்ல,
“பரவாயில்லை, இந்த ‘சார் எல்லாம் வேண்டாம். ஜீவான்னே கூப்பிடு..! என்றான்.
“ஹப்பா..! இதைகூட இவன் பொறுமையா சொல்ல மாட்டானா..? ஏன்னா ஒரு வேகம்..? என்று மனதிற்குள் எண்ணியபடி உள்ளே சென்றாள்.
ஆனால் அவளின் முக அசைவுகளில் இருந்தே, அவள் மனதில் நினைத்ததை கண்டு பிடித்துவிட்டான் மித்ரன். சன்னமாக சிரித்துக் கொண்டவனுக்கு, உள்ளே செல்ல தயக்காமாகத் தான் இருந்தது.
“உள்ள வாப்பா..! என்றார் மீண்டும் ரேகா.
அவரை அவன் அசையாமல் பார்க்க, ரேகாவும் வைத்த விழி எடுக்காமல் பார்த்தார்.
“இவருக்கு என்னை அடையாளம் தெரியுதா? தெரியலையா? என்று மித்ரன் மனதிற்குள் நினைக்க,
“பெத்த பிள்ளையை எனக்குத் தெரியாதா..? என்றார் ரேகா பட்டென்று.
மித்ரனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. இந்த வாக்கியத்தை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அவனுக்குள் எழுந்த உணர்வு பிரவாகம், அவனைக் கடக்கத் துடித்தது.
“என்னைத்தேடி வர உனக்கு இத்தனை வருஷம் ஆச்சா..? என்று ரேகா மனதிற்குள் நினைக்க,
“இத்தனை வருஷமும் நினைச்சுகிட்டே இருந்ததுனால தான், இப்ப தேடி வந்திருக்கேன்..! என்றான் மித்ரனும்.

Advertisement