Advertisement

 
குடை 14:
சுபஷ்வினியின் வார்த்தைகள் மழைச்சாரலாய் மித்ரனின் மனதை நனைத்திருந்தது.இப்படி ஆகும் என்று தெரிந்தே தான், அவன் அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருந்தான்.
“நீங்க இதுக்கு  முன்னாடி ஊட்டி வந்திருக்கிங்களா மித்ரன் சார்..? என்றான் விகாஸ்.
அவனின் கேள்வியில் நினைவிற்கு வந்தவன்,
“தெரியலை..! பட் சின்ன பிள்ளையில் வந்த மாதிரி ஒரு நியாபகம்.! என்றான் மித்ரன்.
“என்ன சார் இப்படி சொல்றிங்க..? உங்களுக்கு இருக்குற வசதிக்கு நீங்க உலகத்தையே சுத்தி இருப்பிங்க…இந்த ஊட்டியை பார்த்திருக்க மாட்டிங்களா..? என்று தேஜஸ்வினி கேட்க,
“நீ சொல்றதும் உண்மை தான் தேஜஸ்வினி. ஆனா பகட்டா தெரியற வாழ்க்கைக்குள்ள இருக்குற சிக்கல்கள், கஷ்ட்டங்கள் எல்லாம் அதுல இருந்து பார்த்தா தான் தெரியும்.. என்றான் மித்ரன்.
“ஏன் சார்..! எங்களை மாதிரி மிடில்கிளாஸ்க்கு எல்லாம், ஓரளவு பணம் சேர்ந்தாலே…போதும் இதை வச்சே இந்த கடமையை முடிச்சு, அந்த கடமையை முடிச்சு நிம்மதியா செட்டில் ஆகிடலாம்ன்னு கணக்குப் போடுறோம்..!
ஆனா, நீங்க மட்டும் ஏன் சார்  கோடி கோடியா சம்பாதிச்சாலும், இன்னமும் பத்தலை பத்தலைன்னு பணத்துக்குப் பின்னாடியே போறீங்க..? அவ்வளவு பணத்தை வச்சு என்ன பண்றிங்க..? சரி அப்படியும் நல்லா இருக்கோம்ன்னு சொல்றிங்களா..? அதுவும் இல்லை. அப்பவும் அவ்வளவு கோடி கடன், இவ்வளவு கோடி கடன்னு சொல்றிங்க..? அது எப்படி சார்..? என்றாள் தேஜஸ்வினி.
தேஜஸ்வினி பேச பேச அங்கே சுபஷ்வினிக்கு தான் புளியைக் கரைத்தது. அவனை மட்டும் தெரியும் அவளுக்கு. அவனைப் பற்றிய பின்புலங்கள் எதுவும் தெரியாது. அவனோடு பேசியது கூட கிடையாது. அப்படி இருந்த, இருக்கின்ற பட்சத்தில், இப்போது கேட்கும் விஷயங்கள் அவளுக்கு திகிலையும், பயத்தையும் தான் வரவழைத்தது.
“பேசுறது ஈசி தேஜஸ்வினி. ஆனா எதையும் செய்றது தான் கஷ்ட்டம். போதும்ன்னு நாங்க முடங்கிட்டா, எங்களை நம்பி இருக்குற அத்தனை வொர்க்கர்சும் தெருவுல தான் நிக்கணும். நாங்களே நினைச்சாலும் முடியாது. இது ஒரு வழி பாதை தான்..! என்றான் முகத்தில் வேதனையுடன்.
“தேஜூ..! கொஞ்ச நேரம் அமைதியா இரு. இப்பவும் பிஸ்னஸ் பத்தியே அவர்கிட்ட பேசணுமா..? அவரே ஏதோ பர்சனல் விஷயத்துக்காக வரார். நம்ம கூட வர்ற அந்த கொஞ்ச நேரமாவது நிம்மதியா இருக்கட்டுமே..! என்றான் விகாஸ்.
“சரி சரி “ என்று முறைத்துக் கொண்டே சொன்னாள் தேஜு.
“நீ எதுக்காக மும்பை வந்த விகாஸ்..? என்றான் மித்ரன்.
“அதான், ஆல்ரெடி சொன்னேனே சார். எனக்கு விளம்பர மாடல் ஆகணும்ன்னு ஆசை. அதுக்காக, அந்த ஷூட்க்காக தான் வந்தேன். எங்க பாட்டிக்கு தெரியாம வந்தேன். அது எப்படியோ அவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சு. உடனே வர சொல்லிட்டாங்க..! என்றான் சோகமாய்.
“உனக்கு, உங்க பாட்டின்னா அவ்வளவு பயமா..? என்றான் மித்ரன்.
“பயமெல்லாம் இல்லை சார்..! பிரியம் மட்டும் தான். எனக்கு எங்க பாட்டின்னா உசுரு சார்..! என்றான் மித்ரன்.
“ம்ம்ம்.. என்றவனின் முகம் வேதனையில் சுருங்க, அப்படியே தலையை சாய்த்துக் கொண்டான் ஜீவ மித்ரன்.
அவனுக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்த சுபஷ்வினியின் மனதில் பல எண்ணங்கள். அவனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று தேஜு சொன்னதைக் கேட்டதில் இருந்து அவளுக்குள் பல கேள்விகள். எதற்காக, ஏன் அப்படி நடந்தது என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் அவனைப் பார்க்கும் போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது அவளுக்கு. அது அவன் மீது எந்த தப்பும் இருக்காது என்ற எண்ணம் தான். அவன் மேல் கொண்ட காதல் கூட அப்படி யோசிக்க வைத்திருக்கும்.
“எனக்கு வாமிட் வர மாதிரி இருக்கு..? என்றாள் சுபஷ்வினி. பொதுவாக மலை பிரதேச பயணம் அவளுக்கு அவ்வளவாக ஒத்துக் கொள்ளாது. எப்போதும் நடக்கும் விஷயம் தான்.
விகாஸ் ஒரு ஓரமாக காரை நிறுத்த, காரை விட்டு இறங்கிய வேகத்தில் சற்று தள்ளி சென்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் சுபஷ்வினி. கையில் வாட்டர் பாட்டிலுடன் தேஜஸ்வினி செல்ல, அவர்களுடன் விகாசும் சென்றான்.
ஜீவ மித்ரன், காரில் சாய்ந்தவாறு அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். சுபஷ்வினி கொஞ்சம் துவண்டு விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அவள் முகம் அப்படியே சோர்வை காட்ட, அவளைப் பார்த்துக் கொண்டிருந்த மித்ரனுக்குள், அந்த சோர்ந்த முகத்தை எங்கோ பார்த்த மாதிரியே இருந்தது. ஆனால் நியாபகம் வரவில்லை.
அவன் அதை யோசித்துக் கொண்டிருக்க, சட்டென்று அவனைப் பார்த்தாள் சுபஷ்வினி. அவள் பார்ப்பதை அறிந்து அவன் பார்க்க, அந்த பார்வையை, அந்த கண்களை இதற்கு முன் நேருக்கு நேராக பார்த்த மாதிரி இருந்தது அவனுக்கு.
“ஒருவேளை தேஜஸ்வினியை ஏற்கனவே பார்த்துட்டு, இவளைப் பார்க்கிறதுனால அப்படித் தோணுதோ..? என்று யோசித்தான்.
“இல்லை..! அப்படி இருந்திருந்தா ட்ரெயின்ல தேஜஸ்வினியைப் பார்த்தப்பவே அப்படித் தோணியிருக்கணும். ஆனா தோணலை. இப்போ இவளைப் பார்க்கறப்ப மட்டும் தான் அப்படி தோணுது..!
“என்ன நடக்குது இங்க..? சுபா பார்வை ஆயிரம் செய்தி சொல்லுது..! என்று தேஜுவிடம் சொன்னான் விகாஸ்.
“அப்படியெல்லாம் இல்லை..! அவ அப்படிப்பட்ட ஆளும் இல்லை. நீ கொஞ்சம் வாயை மூடு..! என்று தேஜு கடித்துத் துப்பினாள்.
“நான் தப்பா ஒன்னும் சொல்லலை…! என்று அவன் சொல்ல,
“நானும் நீ தப்பா சொன்னேன்னு சொல்லலை..! ஏற்கனவே அவ லவ் பெயிலியர். இதுல எப்படி உடனே அடுத்த லவ் வரும்..? என்றாள் தேஜு.
“நிஜமாவா..? என்றான் விகாஸ்.
“ம்ம்…ஆமா..! என்பதோடு முடித்துக் கொண்டாள் தேஜு.
இவர்கள் சம்பாஷனை முடிந்து காருக்கு வருவதற்குள், சுபஷ்வினிக்கு கதவைத் திறந்து விட்டு, அவள் நன்றாக அமர உதவிக் கொண்டிருந்தான் மித்ரன்.
“ஆர் யு ஓகே..! என்றான்.
“ஓகே..! தேங்க்ஸ்..! என்றவாறு சுபஷ்வினி சாய்ந்து அமர,
“நான் டிரைவ் பண்றேன் விகாஸ்..! என்றான் மித்ரன்.
“என்ன சார்..? நீங்க போய் காரை ஓட்டிகிட்டு. நீங்க உட்காருங்க. நான் ட்ரைவ் பண்றேன்..! என்றான்.
“இதுல என்ன இருக்கு? நீயே எவ்வளவு நேரம் டிரைவ் பண்ணுவ..? நான் பண்றேன்..! என்றபடி மித்ரன் டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.
அந்த அழகான வளைவுகளில் அவன் லாவகமாய் காரை ஓட்டிக் கொண்டிருக்க, அவனைப் பார்த்து வியந்தான் விகாஸ்.
“சார், செம்மையா டிரைவ் பண்றிங்க..! என்றான். அதற்கு மித்ரனின் பதில், சின்ன சிரிப்பு மட்டுமே.
“நான் இப்படி லாங் டிரைவ் போய் பல நாட்கள் ஆகுது. என் பிரண்ட் ஜெனி கூட அடிக்கடி போவேன்..! என்றான் மித்ரன்.
“உங்க கேர்ள் பிரண்டா சார்..! என்றாள் தேஜஸ்வினி.
“எஸ்…! கேர்ல்ஸ்ல எனக்கு இருந்த ஒரே பிரண்ட். என்னோட நலன் விரும்பின்னு கூட சொல்லலாம்… என்றான்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சுபஷ்வினிக்கு கண்கள் கலங்கியது. அவர்கள் அறியாதவாறு கண்களை மூடிக் கொண்டாள்.
“இப்போ எங்க இருக்காங்க சார்..? அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே..? என்றான் விகாஸ்.
“நான் அவகிட்ட சொல்லலை. சொல்லி இருந்தா கண்டிப்பா வந்திருப்பா..! என்றான்.
காரினுள் கொஞ்ச தூரம் அமைதி நிலவ, கண்ணாடியில் தெரிந்த சுபஷ்வினியை அவ்வப் போது பார்த்துக் கொண்டே வந்தான் மித்ரன். ஏனோ அவளை மீண்டும் மீண்டும் பார்க்க சொல்லி மனம் உந்தியது.
“உங்க பேமிலி பத்தி சொல்லு விகாஸ்..! என்றான் மித்ரன்.
“என்னோட பேமிலி பத்தி சொல்ல ஒன்னும் இல்லை சார். அம்மா ஸ்கூல் டீச்சர். எனக்காக இடையிலேயே வேலையை விட்டுட்டாங்க..! அப்பறம் எங்க பாட்டியும், தாத்தாவும். அவ்வளவு தான்..! என்றான் விகாஸ்.
“உங்க அப்பா..! என்றான் மித்ரன்.
“அவர் நான் சின்ன வயசா இருக்கும் போதே இறந்துட்டார்..! என்றான் விகாஸ்.
“ஹோ..சாரி..! என்றான்.
“இட்ஸ் ஓகே சார். இதுல என்ன இருக்கு? என்றான் விகாசும் பெருந்தன்மையாய்.
“நீ யாரையாவது லவ் பண்றியா..? என்றான் மித்ரன்.
“இப்ப வரைக்கும் இல்ல சார்..! என்றான் சிரித்துக் கொண்டே.
“அப்போ…! இனிமேல் அந்த ஐடியா இருக்கா உனக்கு..? என்றான் மித்ரனும் சிரித்துக் கொண்டே.
அவன் சொல்லப் போகும் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள் தேஜு. ஆனால் அவனோ தேஜுவை திரும்பிக் கூட பார்க்காமல்,
“அதெல்லாம் நமக்கு செட்டே ஆகாது சார். நல்ல பிள்ளையா அம்மா பார்க்குற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். அதுலயும் என்னை விட ஒரு நாலு வயசு கம்மியா இருக்குற பொண்ணை தான் சார் மேரேஜ் பண்ணுவேன்..! என்றான் தேஜுவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே.
“ஆமா சார்..! பொதுவாவே இந்த அங்கிள் எல்லாம் அப்படி தான் எதிர்பார்ப்பாங்க..! என்றாள் தேஜு.
“யாரு நானு அங்கிள் மாதிரி இருக்கேனா..? என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்துறாங்க தெரியுமா..? என்றான் விகாஸ் கெத்தாய்.
“வேற வழி..! முன்னாடி வந்து உன் மூஞ்சியைப் பார்த்துகிட்டே சுத்த முடியாது பாரு. அதான் பின்னாடியே சுத்துறாங்க..! என்று தேஜு சிரித்துக் கொண்டே, சற்று இழுத்து சொன்னால் அந்த வாக்கியத்தை.
விகாஸ் பயங்கரமாய் அவளை முறைக்க, “அடப் போடா..! நீயெல்லாம் ஒரு ஆளு..! என்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.
“விகாஸ் நிஜமாவே ஹேண்ட்சம் தான்..! என்றான் மித்ரன்.
“என் கண்ணுக்கு என்னமோ நீங்க தான் அழகா தெரியறிங்க..? இவனைப் பார்த்தா பத்திகிட்டு வருது. ரொம்ப அடக்க ஒடுக்கமா இருக்குற பசங்களையே நம்பக் கூடாது சார்..! என்று தேஜு கண்களை உருட்டி உருட்டி சொல்லிக் கொண்டிருக்க,
“நானும் பார்க்குறேன் சார்..! மும்பைல ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் இவ உங்களைத்தான் சைட் அடிக்கிறா…! எதுக்கும் பத்திரமா இருங்க.. என்று விகாஸ் எச்சரிக்க,
“ஆமா சார்..! பார்த்து பத்திரமா இருங்க. இவன் பெரிய ஒழுங்கு. நீ கூட தான் ட்ரெயின்ல வந்த அந்த பொண்ணை, அதுவும் இவர் முன்னாடியே சைட் அடிச்ச..! என்று போட்டுக் குடுத்தாள்.
“யாரை..? என்றான் மித்ரன்.
“அதான் சார்..! உங்க எக்ஸ் வொய்ப்.. என்றாள்.
“நிஜமாவா விகாஸ்.. என்றான் கோபமாய்.
“ஐயோ இல்லை சார். இந்த லூசு ஏதோ உளறிக் கொட்டுது. அந்த பொண்ணு மூஞ்சிலேயே அவ்வளவு திமிர். எப்படி சார் அவங்களை கட்டி குடும்பம் நடத்துனிங்க..! என்றான் விகாஸ்.
“அது வேற விஷயம். நேரம் வரும் போது சொல்றேன்..! என்றான்.
“நீங்க திரும்பி எப்ப மும்பை போவிங்க மித்ரன் சார்..? என்றாள் தேஜு.
“ஏன்? நான் மும்பைக்கு கிளம்புறதுல என்னை விட உனக்கு தான் ஆர்வம் ஜாஸ்தி போல.. என்றான் மித்ரன்.
“அதில்ல சார்..! எனக்கு உங்களால ஒரு ஹெல்ப் கிடைக்கணும். நானும் மும்பைக்கு போய் எவ்வளவோ ட்ரை பண்ணிப் பார்த்தேன், ஆனா முடியலை. அதான் உங்ககிட்ட ஹெல்ப் கேட்கலாம்ன்னு..! என்றாள்.
“என்ன பண்ணனும்..? என்றான்.
தேஜு திரும்பி சுபஷ்வினியை பார்க்க அவள் உறக்கத்தில் இருந்தாள். இருந்தாலும் அவள் முன் பேச அவளுக்கு விருப்பம் இல்லை.
“இப்ப வேண்டாம், அப்பறம் சொல்றேன் சார்..! என்றாள்.
“உனக்கு இப்படி ஒரு சிஸ்டர் இருக்குறதை, நீ ட்ரெயின்ல சொல்லவே இல்லையே..? என்றான்.
“நீங்கதான் கேட்கவே இல்லையே..? என்றாள் அவளும்.
“அப்ப கேட்டாதான் சொல்லுவியா..? என்றான்.
“சார்..! நீங்க அப்போ கேள்வி கேட்குற மன நிலையிலும் இல்லை. அப்படியே சொன்னா, கேட்கிற மன நிலையிலும் இல்லை… என்றாள்.
கார், குன்னூரை நெருங்கிக் கொண்டிருந்தது. தேஜுவுக்கும் கூட கொஞ்சம் அசதியாக இருந்தது.
“இன்னும் எவ்வளவு தூரம் போகணும் விகாஸ்.. என்றாள்.
“இன்னும் கொஞ்ச தூரம் தான்..! என்றவன்,
“சார், அதோ அங்க ஸ்டாப் பண்ணுங்க..! ஒரு டீ குடுச்சிட்டு போகலாம். செம்மையா இருக்கும் இந்த குளிருக்கு..! என்றான் விகாஸ்.
தேஜு, தூங்கிக் கொண்டிருந்த சுபஷ்வினியை எழுப்பினாள்.
“என்னாச்சு தேஜு..? என்றாள் தூக்கக் கலக்கத்தில்.
“இறங்குடி..! டீ குடிக்கலாம்..! என்றாள்.
“ம்ம் என்றவள் கொஞ்சம் தெளிந்தாள்.
டீயை வாங்கிக் கொண்டு. அருகில் இருந்த ஒரு திட்டில் அமர்ந்து அதை ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள் சுபஷ்வினி. அவளுக்கு சற்று தூரத்தில் நின்றிருந்த மித்ரனிடம் சென்று டீயை நீட்டினாள் தேஜு.
“தேங்க்ஸ்..! என்றபடி வாங்கியவன், அந்த இயற்கை சூழலை அனுபவித்து, ரசித்துக் கொண்டிருந்தான்.
“உனக்கு டீ..? என்றான்.
“இதோ இருக்கு சார்..! என்றபடி அவளும் குடிக்க,
“ஆமா, உன் சிஸ்டர் சுபஷ்வினிக்கு ஏதும் பிராப்ளமா..? என்றான் சுபாவை பார்த்துக் கொண்டே.
“ஏன் சார் அப்படி கேட்கிறிங்க..? என்றாள்.
“இல்லை, பொதுவா டிவின்ஸ்ன்னா ரெண்டு பேரும் மேக்சிமம் ஒரே நேச்சரா தான் இருப்பாங்க. இங்க என்னடான்னா, அவங்க உனக்கு ஆப்போசிட். அதான் கேட்டேன்..! என்றான்.
“உண்மைதான் மித்ரன் சார். சொல்ல போனா என்னை விட எல்லாத்திலையும் அவ தான் பெஸ்ட். நான் ஆவெரேஜ் ஸ்டுடன்ட். ஆனா அவ அப்படி இல்லை. எப்பவும் பர்ஸ்ட் தான் வருவா. அதனால எங்களுக்குள்ள நிறைய ஈகோ கிரஷ் வந்திருக்கு. எல்லாரும் எல்லா விஷயத்திலையும் சரியா இருக்க மாட்டாங்க இல்லையா. அது அவ விஷயத்துல உண்மை.
பொதுவா அவளுக்கு கற்பனைகள்  ரொம்ப பிடிக்கும். அது சின்ன பிள்ளையில பெரிசா தெரியலை. ஆனா நாள் ஆக ஆக, அந்த கற்பனை உலகத்துலேயே வாழ ஆரம்பிச்சுட்டா. அது அவளை ஒரு பெரிய ஆபத்து வரை கொண்டு போய், எங்க அம்மா அவளை பழைய படி மீட்டுக் கொண்டு வரதுக்குள்ள ரொம்ப பாடு பட்டுட்டாங்க..! அப்ப இருந்து கொஞ்சம் சைலன்ட் ஆகிட்டா. இல்லைன்னா என்னை விட அவதான் நல்லா பேசுவா..! என்றாள் சுபாவைப் பார்த்துக் கொண்டே.
“என்ன பிராப்ளம்..? என்றான்.
“வேற என்ன சார்..! கற்பனையா ஒரு லவ். கற்பனையா ஒரு லவ் பெயிலியர். அதே கற்பனையிலேயே பாய்சன் குடிச்சுட்டா..! போராடி தான் காப்பாத்தினோம்..! என்றாள்.
அவளுடைய காதலை கற்பனை காதல் என்று தான் சொல்லி இருந்தால் சங்கீதா. ஆனால் இன்னும் தேஜுவிற்கு அதில் சந்தேகம் உண்டு. அதை தீர்த்துக் கொள்ளும் வரை, அவளும் அதைப் பற்றி பேசத் தயாராக இல்லை.
“இஸ்இட்? இப்படி கூட நடக்குமா..? என்றான் ஆச்சர்யமாய்.
“அதுக்கு உதாரணமா தான் சுபா இருக்காளே..! என்றாள் தேஜு.
“பட், அவங்களைப் பார்த்தா ரொம்ப சாப்ட் நேச்சரா தெரியுது. சூசைட் அட்டர்ன் பண்றதுக்கு எல்லாம் ஒரு தைரியம் வேணும்..! என்றான் மித்ரன்.
“காதல் குடுத்த தைரியம் தான் சார் அது..! என்றாள்.
“கற்பனை காதலுக்கே அவ்வளவு பவரா..? என்றான்.
“என்ன சார் கிண்டலா..? என்றாள்.
“பின்ன என்ன அஸ்வினி..? உப்பு பெறாத விஷயத்துக்கு எல்லாம் இப்படி முடிவு எடுக்குற கோழைகளை எனக்கு எப்பவும் பிடிக்காது..! என்றான்.
“அது மத்தவங்க உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் சார்..! இதுல நாம கருத்து சொல்ல முடியாது. என்றாள்.
“ஓகே, கம் லெட்ஸ் கோ..! என்றபடி அவன் நடக்க,
அதுவரை அவர்கள் தனியாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த சுபஷ்வினிக்கு, காரணமே இல்லாமல் கண்ணீர் கலங்கியது.
“என்னாச்சு சுபா..? என்றான் விகாஸ்.
“ஒண்ணுமில்லை விகாஸ்.நான் காருக்கு போறேன்..! ரொம்ப குளிருது.. என்றபடி அவள் எழுந்து நடக்க, அவளையே பார்த்துக் கொண்டு நடந்தான் ஜீவ மித்ரன்.
இப்போது காரை விகாஸ் ஓட்ட ஆரம்பித்தான். மித்ரன் முன்னே உட்கார செல்வதைப் பார்த்த தேஜூ,
“மித்ரன் சார்..! நீங்க தப்பா நினைக்கலைன்னா பின்னாடி சீட்டுக்கு போறிங்களா பிளீஸ். நான் பிரண்ட்ல உட்கார்ந்து பிரண்ட் வியூ பார்க்கணும்..ப்ளீஸ்.. என்றாள்.
“ஓகே நோ பிராப்ளம்..! என்றபடி அவன் பின்னால் சென்று சுபஷ்வினியின் அருகில் சென்று அமர்ந்தான்.
அவன் உடனே இப்படி பின்னால் வந்து அமருவான் என்று சுபஷ்வினி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவன் அருகாமை அவளுக்கு மூச்சடைக்க செய்தது. கைகால்கள் நடுக்கம் குடுக்க, அந்த குளிருக்கு பற்கள் தந்தியடிக்கத் தொடங்கியது.
ஆனால் மித்ரனோ அவளின் பக்கம் கூட திரும்ப வில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்து விட்டான். முன்னால் இருந்த தேஜு பேசிக் கொண்டே வர, ஒருவழியாக விகாஸ் வீட்டினை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
“விகாஸ்..! நான் இங்கயே இறங்கிக்கிறேன். இடையில் ஓரு நாள் உங்க வீட்டுக்கு வரேன்..! என்றான் மித்ரன்.
“என்ன மித்ரன் சார்..? முதல்ல வரேன்னு சொன்னிங்க. இப்ப ஜகா வாங்குறிங்க..? நீங்க கண்டிப்பா எங்க வீட்ல தான் தங்கணும்..! என்று விகாஸ் முடித்து விட, மித்ரனின் மனதிற்குள் ஒரு பிரளையமே வெடித்துக் கொண்டிருந்தது.
 

Advertisement