Advertisement

குடை 13:
மறுநாள் கோயம்புத்தூர் வரை பிளைட்டில் சென்று, அங்கிருந்து காரில் செல்வதாக முடிவு செய்திருந்தனர். முடிவு செய்து அதை செயல்படுத்தி, இப்போது கோயம்புத்தூரில் இருந்தனர்.
சுபஷ்வினி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, தேஜஸ்வினி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். தங்கை தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள்,
“என்ன..? என்றாள்.
“ஒண்ணுமில்லை..! என்ற தேஜு, மனதிற்குள்…,
“ரெண்டு பெரும் ஒன்னாதான் பிறந்தோம்.பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கோம். இவ மட்டும் எப்படி இப்படி இருக்கா..? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
சுபஷ்வினிக்கு அவர்களின் அப்பாவின் நிறம். வசந்தாவை விட அவர் கொஞ்சம் கூடுதல் நிறம். தேஜஸ்வினி கொஞ்சம் நிறம் கம்மி. அதையும் மேக்கப்பில் ஈடு செய்திருந்தாள்.
“என்ன ஆச்சு தேஜு..? என்று சுபஷ்வினி கேட்க,
“ஒண்ணுமில்லை. இந்த விகாஸ் எங்க..? கிளம்பாம இன்னமும் என்ன செய்றான்…? என்று அவனைத் தேடிக் கொண்டிருந்தாள். சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்திருந்தனர். சாப்பிட்டு முடித்தும் கிளம்பாமல், விகாஸ் போன் பேசிக் கொண்டு வெளியே சென்றான். இன்னமும் அவனைக் காணவில்லை.
“அதோ வரான்..! என்றாள் சுபஷ்வினி.
“கிளம்பலாமா..? என்றான்.
“எங்க போன விகாஸ்..? எதுக்கு இவ்வளவு நேரம்..? என்றாள் தேஜு.
“அதுவா..? மித்ரன் சார்க்கு ஊட்டில ஒரு முக்கியமான வேலை இருக்காம். அவரும் ஊட்டி தான் வராராம். சோ நம்ம கூடயே ஜாயின்ட் பண்ணிக்க சொல்லிட்டேன்..! என்றான் விகாஸ்.
“ஐயோ அந்த சிடுமூஞ்சியா..? என்றாள் தேஜஸ்வினி.
“ஆமா..! ஆனா அவர் முன்னாடி அப்படி ஏதும் பேசி வச்சுடாத..? அவர் என்னை நம்பி வரார். அதுவும் எங்க ஊருக்கு. அவரை நல்ல முறையில கவனிச்சு அனுப்பனும். எவ்வளவு பெரிய ஆளு. நம்ம கூட, நம்ம கார்ல..! அதுவே பெரிய விஷயம்..! என்றான் விகாஸ்.
“அதைத்தான் நானும் கேட்கிறேன்..! அவ்வளவு பெரிய ஆளு, ஏன் ஓசிக் கார்ல வரணும்? சொந்த கார்லயே போகலாமே..? என்றாள் தேஜு.
“அது எனக்கு எப்படி தெரியும் தேஜு. அவருக்கு பர்சனலா என்ன பிராப்ளம்ன்னு நமக்கு என்ன தெரியும்..? அவர் கேட்டார். நான் ஓகே சொன்னேன், அவ்வளவு தான்..! என்றான் விகாஸ்.
“அது யாரு..? என்றாள் சுபஷ்வினி தெரியாததைப் போல்.
“அதான், நான்னு நினச்சு உன்கிட்ட வந்து பேசுனார்ன்னு சொன்னல்லா அந்த சிடு மூஞ்சி தான்..! என்றாள் தேஜு.
அவ்வளவுதான், சுபஷ்வினிக்கு ஹார்ட்பீட் எகிறத் தொடங்கியது. அவள் மறந்தாலும், விதி அவளை மறக்க விடுவேனா என்று சுத்தி சுத்தி ஆட்டம் காட்டத் தயாராகிக் கொண்டிருந்தது.
“நாம வேணுமின்னா இன்னொரு கார் எடுத்துக்கலாம். இல்லைன்னா பஸ்ல போகலாமா..? என்றாள் சுபஷ்வினி.
“ஐயோ சுபா..! நீ நினைக்கிற மாதிரி அவர் டெரர் பீஸ் எல்லாம் இல்லை. நல்ல மனுஷன் தான். பட் ஏதோ பிராப்ளம் போல. அதான் கொஞ்சம் டென்சனா இருந்தார். மத்தபடி பயப்படுற அளவுக்கு அவரோட பிகேவியர் இருக்காது. ஒன்றை நாள் அவர்கூட டிராவல் பணியிருக்கோம். தப்பா ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது.. என்றாள் தேஜஸ்வினி.
“ஆமா..! அவரைப் பத்தி தேஜுக்கு தான் நல்லா தெரியும். இவ தான அவரை சைட் அடிச்சுகிட்டே வந்தா. சாப்பாடை கூட ஷேர் பண்ணி தான் சாப்பிட்டாங்க..! இல்லையா தேஜு.. என்று போட்டுக் கொடுத்தான் விகாஸ்.
“ரொம்ப ஓவரா பண்ணாத விகாஸ். சைட் அடிச்சேன் தான். ஆனா ஓவரா எல்லாம் இல்லை. லைட்டா சைட் அடிச்சேன். அதுக்குள்ள அந்த சிடுமூஞ்சி எல்லாத்தையும் கலைச்சிடுச்சே..! என்று சோகமாய் சொல்ல சிரித்தான் விகாஸ்.
ஆனால் சுபஷ்வினிக்கு இந்த பேச்சு இனிக்கவில்லை போலும். அவனுடைய தாக்கம் மனதில் இல்லை என்று தனக்குத் தானே முகமூடி போட்டுக் கொண்டிருந்தவளுக்கு, அது பொய்யோ என்று எண்ணத் தோன்றியது.
அவனைப் பற்றி பேச பேச, உள்ளுக்குள் ஏதோ பிசையத் தொடங்க, அதை அவர்கள் அறியாதவாறு சாமர்த்தியமாக மறைத்தாள் சுபஷ்வினி.
“ஆமா சுபா, அந்த சங்கி எப்படி உன்னைய விட்டா..? என்று தன்னுடைய அதி முக்கிய சந்தேகத்தைக் கேட்டாள் தேஜு.
“அவ எங்க விட்டா..? நானும் வருவேன்னு தான் சொன்னா. ஆனா அவளுக்கு லீவ் கிடைக்கலை. குடுத்த பிராஜெக்ட்டை முடிச்சுட்டு லீவ் வாங்கிக்கங்கன்னு சொல்லிட்டாங்க..! முடிச்ச உடனே வந்துடுவா..! என்றாள் சுபா.
“ரெண்டு பேரும் ஒன்னாதான் வேலைல ஜாயின்ட் பண்ணிங்க..! நீ டீம் லீடர் ஆகிட்ட. ஆனா அவ இன்னும் அப்படியே தான் இருக்கா..! என்று தேஜு கிண்டல் பண்ண,
“சங்கியை கிண்டல் பண்ணாத தேஜு. எனக்குப் பிடிக்காது..! என்றாள்.
“இப்படியே பேசினா ரெண்டு பேரும் சண்டை தான் போடுவிங்க. அதனால் இனியாவது அமைதியா இருங்க. இப்ப நீங்க திருந்திட்டிங்க. அது நியாபகத்துல இருக்கட்டும்..! என்று விகாஸ் சொல்ல,
“ஆமால்ல, நாங்க திருந்திட்டோம்.. என்றாள் தேஜுவும் சிரிப்புடன்.
“கிளம்பலாமா..? என்றான் விகாஸ்.
“அந்த மிஸ்டர் சிடுமூஞ்சி எங்க வந்து நம்ம கூட ஜாயின்ட் பண்ணுவார்..? என்று தேஜு கேட்க,
“போற வழியில, அவரை பிக்கப் பண்ணிக்கலாம்..! என்றான் விகாஸ்.
“டன்.. என்று தேஜு சந்தோஷமாக சொல்ல,
“இந்த ட்ரிப்புக்கே வந்திருக்க கூடாதோ..? என்று முதன் முறையாக மனதில் நினைத்தாள் சுபஷ்வினி.
சிறிது தூரம் கடந்து, சிட்டியை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தது கார். சற்று தொலைவில் நின்றிருந்தான் ஜீவ மித்ரன். அவ்வளவு தூரத்திலும் அவனை அடையாளம் கண்டு கொண்டாள் சுபஷ்வினி.
“அதோ அங்க நிற்கிறார்..! என்று சுபஷ்வினி  உணர்ச்சிப் பெருக்கில் சொல்லிவிட,  அவளை ஆச்சர்யமாய் பார்த்தனர் தேஜுவும், விகாசும்.
அவர்கள் தன்னை வித்யாசமாய் பார்ப்பதை உணர்ந்த சுபஷ்வினி,
“ஹி..ஹி..! இல்ல, அங்க நிக்குறவர் மாதிரி இருக்கேன்னு சொல்ல வந்தேன்..! என்றபடி பேச்சை திசை திருப்ப,
“இப்ப நாங்க ஒன்னும் சொல்லலையே..? என்றனர் இருவரும் கோரசாய்.
“நீயாதான் வாயைக் குடுத்து மாட்டிக்கிற..? கொஞ்சம் அடக்கி வாசி, எவ்வளவு பட்டாலும் உனக்கு புத்தி வராது..! என்று அவளின் மனசாட்சி கிண்டல் அடித்தது.
அவனின் அருகில் சென்ற கார், தானாக நிற்க…
“ஹாய்..! என்றபடி ஸ்டைலாக ஏறினான் ஜீவ மித்ரன். பின்னால் இருந்த சகோதரிகளை அவன் பார்க்கவில்லை.
சுபஷ்வினிக்கோ மனம் படபடவென்று அடித்துக் கொள்ள, கைகளை இறுகக் கட்டி, அலைபாயும் தன் மனதையும், பழைய நினைவுகளுக்கு செல்ல முயன்ற மூளையையும் அடக்கி வைக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எனிவே தேங்க்ஸ் விகாஸ்..! என்றான் மித்ரன்.
“இதுல என்ன சார் இருக்கு…! தேங்க்ஸ் சொல்லி எங்களை பிரிச்சு வைக்காதிங்க..! என்றான் விகாஸ் சம்பிராதயமாக.
“ஆமா சார்..! பிரிச்சு வைக்காதிங்க..! அப்பறம் எங்களுக்கு கோபம் வந்துடும்..! என்று தேஜஸ்வினி பின்னால் இருந்து குரல் கொடுத்தாள்.
“ஹேய் அஸ்வினி..! நீயெங்க இங்க..? என்றான் மித்ரன் ஆச்சர்யமாய். அவனுக்கு நேர் பின்னால் சுபஷ்வினி இருந்ததால் அவனுக்குத் தெரியவில்லை.
“சார் இது எங்க ட்ரிப். நீங்க தான் இடையில ஜாயின்ட் ஆகியிருக்கிங்க..! என்றாள் சிரிப்புடன்.
“பாருங்கப்பா..! நேத்து மட்டும் அவ்வளவு அமைதியா இருந்த உங்க ஆபீஸ்ல. எனக்கு கூட ஒரு நிமிஷம் சந்தேகம் வந்துடுச்சு… இது அஸ்வினி தானான்னு. இன்னைக்கு பழைய பார்ம்க்கு வந்துட்ட போல, என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு சுபஷ்வினியைப் பார்த்து சிரித்து வைத்தாள்.
“என்னை எப்ப பார்த்திங்க சார்..? நல்லா யோசிச்சு சொல்லுங்க..! என்றாள்.
“என்ன கிண்டலா..? ஆனா ஒரு விஷயம்…நேத்து ரொம்ப அழகா இருந்த, இன்னைக்கு கொஞ்சமா அழகா இருக்க, இல்லையா விகாஸ்..! என்றான் மித்ரன் சிரிப்புடன்.
விகாஸ் காரணமே இல்லாமல் விழுந்து விழுந்து சிரிக்க,
“நான் சொன்னது அவ்வளவு பெரிய காமெடியா என்ன? என்றான் மித்ரன்.
தேஜுவைப் பார்த்த விகாஸ், அசிங்கப்பட்டாள் அஸ்வினி..! என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் தேஜு.
சுபஷ்வினியோ, இந்த உலகத்திலேயே இல்லை. முதன் முறையாக அவன் இப்படி பேசி கேட்கிறாள். நேற்று பேசும் போது கூட பதட்டத்தில் அவள் சரியாக கவனிக்கவில்லை. ஆனால் இன்று இவ்வளவு அருகில் அவனுடைய குரலைக் கேட்பாள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. அவன் பேச்சிலேயே லயித்திருந்தாள்.
“எதுக்காக சிரிக்கிற விகாஸ்..! என்றான் மீண்டும்.
“இல்லை..! நீங்க பார்த்த பொண்ணு அந்த பொண்ணா பாருங்க..! என்று சுபஷ்வினியின் பக்கம் காட்ட, அப்போது தான் திரும்பிப் பார்த்தான் ஜீவ மித்ரன்.
பார்த்தவன் அப்படியே பிரமிக்க, நம்பமுடியவில்லை அவனால். ஒரு முறை கண்களை மூடி திறந்து பார்க்க,
“நிஜம் தான் சார்..! மேடம்ஸ் ரெண்டு பெரும் டிவின்ஸ். அவங்க சுபஷ்வினி, நீங்க ட்ரெயின்ல பார்த்தது தேஜஸ்வினி..! என்றான் விகாஸ்.

Advertisement