Advertisement

குடை 12:
அன்று மாலை சுபஷ்வினி வீட்டிற்குள் நுழையும் போதே, ஒரு ஆண் குரல் கேட்டது.
“யாரு வந்திருப்பா..? என்று யோசித்தபடி உள்ளே சென்றாள் அஸ்வினி.
“வா அஸ்வினி..! என்றார் வசந்தா.
அங்கே வரவேற்பறையில் விகாஸ் அமர்ந்திருக்க, அவனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. அவனோ அவளைப் பார்த்ததும் என்ன பேசுவதென்று புரியாமல் முழித்தான்.
“யார் இது..? என்றாள் பார்வையால் வசந்தாவிடம்.
“இவனை யாருன்னு தெரியலையா..? என்றபடி வந்தாள் தேஜஸ்வினி.
“தெரியலையே..? என்றாள்.
“நம்ம கூட பிப்த் வரைக்கும் படிச்சான்..! என்றாள் தேஜு.
அவனை உற்றுப் பார்த்த சுபஷ்வினிக்கு அப்போதும் அடையாளம் தெரியவில்லை.
“என்னோட பிரண்டு விகாஸ்..! எப்ப பார்த்தாலும் உன்னை முறைச்சுட்டு இருப்பானே..! அவன்தான் என்றாள் தேஜு.
இப்போது நியாபகம் வந்தது சுபஷ்வினிக்கு. பள்ளியில் இருவரும் இருவேறு வகுப்பில் படித்தனர். வசந்தா எவ்வளவு சொல்லியும் ஒரே வகுப்பில் படிக்க மறுத்து விட்டாள் தேஜு. சுபஷ்வினிக்கு சங்கீதாவும், மந்த்ராவும் பெஸ்ட் பிரண்ட்ஸ் என்பதைப் போல, தேஜஸ்வினிக்கு பெஸ்ட் பிரண்ட் விகாஸ். ஆனால் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் காணாமல் போய்விட்டான். வேறு பள்ளிக்கு சென்றதைக் கூட யாரிடமும் சொல்லவில்லை.
தேஜஸ்வினிக்கு பிடிக்காத எதுவும் அவனுக்கும் பிடிக்காது அந்த சிறு வயதில். அந்த வகையில் சுபஷ்வினியும் அவனின் எதிரி வட்டத்திற்குள் வந்து விட்டாள்.
மொத்தத்தில் இரட்டை சகோதரிகள் இருவருக்கும், தனித்தனி நண்பர் பட்டாளம். இவர்கள் சும்மா இருந்தாலும், அவர்கள் வம்பை இழுத்து விடுவார்கள். சுபஷ்வினி அப்போதும் புன்னகை முகமாகவே இருப்பாள்.
சிறிது யோசனைக்குப் பின்,
“வா விகாஸ்..! என்றாள் சுபஷ்வினி.
“சாரி சுபா..! அப்போ ஏதோ சின்னப் பிள்ளைத்தனமா உன்னை ரொம்ப டீஸ் பண்ணியிருக்கேன்..! என்றான்.
“சின்னப்பிள்ளத்தனமா இல்லை. அப்ப நாம எல்லாருமே சின்ன பிள்ளைங்க தான்..! எவ்வளவு முறைச்சிகிட்டாலும், முட்டிக்கிட்டாலும் மனசுக்குள் எந்த வஞ்சமும் இருந்ததில்லை. எந்த பேதமும் இருந்ததில்லை. அதனால இப்ப சாரி கேட்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை.. என்றாள் சுபஷ்வினி.
அவள் பேசுவதைக் கேட்ட தேஜுவுக்கு தான் மயக்கம் வந்தது. இவ்வளவு வார்த்தை சேர்ந்தார் போல பேசி, பல நாட்களுக்கு பின் இப்போது தான் கேட்கிறாள்.
“நீயாவது பிப்தோட போய்ட்ட விகாஸ்..! ஆனா நான் இப்போ கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் அவளை விரோதியா தான் பார்த்திருக்கேன்..! எவ்வளவு சைல்டிஷா பீகேவ் பண்ணியிருக்கேன்னு நினைச்சா எனக்கே ஒரு மாதிரி இருக்கு..! என்றாள் தேஜஸ்வினி.
“அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கலை. விடு அந்த பேச்சை..! என்றாள் சுபஷ்வினி.
“ஆமா சங்கீதாவும், மந்தராவும் எப்படி இருக்காங்க..? என்றான் விகாஸ்.
“மந்த்ராக்கு மேரேஜ் ஆகிடுச்சு..! சங்கீதாவும் நானும் ஒரே ஆபீஸ். ரொம்ப நல்லா இருக்கா.. என்றாள்.
“அந்த சங்கி மங்கி ரெண்டு பேரும் என்னைக் கண்டா கல்லாலேயே அடிப்பாங்க..! என்று பழசை நினைத்து சிரித்தான் விகாஸ்.
“ஆமா இத்தனை வருஷம் கழிச்சு, நீங்க எப்படி மீட் பண்ணிங்க..? எதுக்காக ஸ்கூல் மாறிப் போன..? என்றாள் சுபஷ்வினி.
“அது ஒரு பெரிய கதை. மும்பைல இருந்து, நான் வந்த ட்ரெயின்ல தான் விகாஸ் வந்தான். முதல்ல அடையாளம் தெரியாம, வாங்க, போங்கன்னு ரொம்ப பார்மலா பேசினான். கடைசியா தான் தெரிஞ்சது இவன் விகாஸ்ன்னு. இவன் பேரை சொன்னப்ப கூட இந்த விகாஸா இருக்கும்ன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை. சின்ன வயசுல குண்டு குண்டுன்னு இருப்பான். இப்ப ஹென்ட்சமா வேற ஆகிட்டானா…அதான் அடையாளம் தெரியாம போய்டுச்சு..! என்றாள் தேஜஸ்வினி.
“நான் எங்க குண்டா இருந்தேன். கொஞ்சம் சப்பியா இருந்தேன்..! என்றான்.
“டேய்..! அண்ட புளுகு புளுகாத..! உனக்குப் பட்ட பேரே குண்டா தான்..! கொஞ்சம் சப்பியா இருந்தியா நீ..! என்று சொல்லி சிரித்தாள் தேஜு.
“போதும்..! போதும்! வீட்டுக்கு வந்த பையனை இப்படி பேசுறதை முதல்ல நிறுத்து. இந்தா விகாஸ் காபி எடுத்துக்கோ..! என்றார் வசந்தா.
“அம்மா இவன் தான் குண்டன் விகாஸ்ன்னு ட்ரெயின்ல முன்னமே தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லா வச்சி செஞ்சிருப்பேன்..! லாஸ்ட் நேரத்துல தெரிஞ்சதால தப்பிச்சான்..! என்றாள்.
“அராத்து, கொஞ்சம் அமைதியா இரு..! என்றவர்,
“சுபா உனக்கு காபி எடுத்துட்டு வரவாடா..? என்றார்.
“குடுங்கம்மா..! தலைவலிக்குது..! என்றாள்.
“ரேகா மிஸ் எப்படி இருக்காங்க விகாஸ்? என்றாள் சுபஷ்வினி.
“அம்மா ரொம்ப நல்லா இருக்காங்க..! என்றான்.
“ரொம்ப வருஷம் ஆச்சு விகாஸ். எனக்கு ரேகாவை பார்க்கணும் போல இருக்கு. ரொம்ப ஹெல்பிங் மைன்ட் அவங்களுக்கு. அவங்க திடீர்ன்னு ஸ்கூல விட்டு நின்னதும் எனக்கு கொஞ்ச நாள் ஸ்கூல் போகவே பிடிக்கலை. அப்படி ஒரு வெற்றிடத்தை அவங்க உருவாக்கிட்டாங்க..! என்று கவலையுடன் பேசிய வசந்தா, சுபஷ்வினியிடம் காபியை நீட்டினார்.
அம்மாவைப் பற்றிய பேச்சு வந்த உடன் விகாசின் முகம் வேதனையைக் காட்டியது.
“ஆமா ஆன்ட்டி..! நானுமே பழைய அம்மாவை ரொம்ப மிஸ் பன்றேன்..! என்றான் மனதிற்குள்.
“இப்ப எங்க இருக்காங்க..? என்றார் வசந்தா.
“ஊட்டில இருக்காங்க ஆன்ட்டி..! என்றான்.
“நீயும் ஊட்டி போகணும்ன்னு சொன்ன..? எப்போ கிளம்புற..? என்றாள் தேஜஸ்வினி.
“சென்னைல வேலை முடிஞ்சது தேஜு. நாளைக்கு ஊட்டி கிளம்பிட வேண்டியது தான்..! என்றான்.
“ஹோ சூப்பர் சூப்பர்..! என்றாள். அந்தே நேரத்தில் விகாசிற்கு போன் வர,
“அம்மா தான் கூப்பிடுறாங்க ஆன்ட்டி. நான் இங்க வரும் போதே அவங்க கிட்ட போன்ல சொல்லிட்டு தான் வந்தேன். இங்க வந்து உங்களைப் பார்த்த உடனே போன் பண்ண சொன்னாங்க, மறந்துட்டேன்.. என்றவன் போனை அட்டென் செய்து இரண்டு வார்த்தை பேசிவிட்டு வசந்தாவிடம் கொடுத்தான்.
“ஹெலோ ரேகா மிஸ்..! என்று வசந்தா குரலில் சந்தோஷமாய் பேசிக்கொண்டு நகர்ந்து சென்றார். அவருக்கு பேச ஆயிரம் கதைகள் இருந்தது.
“அடுத்து என்ன செய்றதா பிளான்..! என்றான் விகாஸ்.
“என்ன பண்றது? வேற வேலை தேடனும்..! என்றாள் தேஜஸ்வினி.
“ஏன் என்னாச்சு..? என்றாள் சுபஷ்வினி.
“வேலையை விட்டுட்டு தான் வந்தேன். அம்மாதான் விட்டுட்டு வர சொன்னாங்க…! இனி வேற கம்பெனிதான், வேற வேலைதான்.. என்றாள் தேஜஸ்வினி சிரித்துக் கொண்டே.
அவள் வேலையை விட்டுவிட்டு வந்ததே இப்போது தான் சுபஷ்வினிக்கு தெரியும். எதற்காக வேலையை விட்டாள் என்பதற்கு அவளே காரணம் சொன்ன பிறகு, மேலும் எதையும் தோண்டித் துருவவில்லை அவள்.
“ட்ரெயின்ல வேற யாரையாவது மீட் பண்ணியா தேஜு..? என்றாள் சுபஷ்வினி.
“ஆமா..அஸ்வினி..! விகாஸ் கூட சேர்ந்து இன்னொரு டெரர் பீஸ் கூட ஜேர்னி பண்ணேன்..! மாஸ்ட்டர் பீஸ்..! என்றாள் சிரித்துக் கொண்டே.
“ஏன் என்னாச்சு..? என்றாள் அஸ்வினி.
“அது ஒரு பெரிய கதை. ஆனா சும்மா சொல்லக் கூடாது ஆள் சும்மா ஜம்முன்னு இருந்தான்..! என்றாள் தேஜு.
விகாஸ் அவளை முறைக்க, அதைப் பார்த்து மேலும் சிரித்தாள்.
“இன்னைக்கு அவரை எங்க ஆபீஸ்ல பார்த்தேன்..! என்றாள் அஸ்வினி.
“நீதான் பார்த்ததில்லையே..? அவர்தான்னு உனக்கு எப்படி தெரியும். நான் கூட இப்ப தான சொன்னேன்..! என்றாள் தேஜு.
“அஸ்வினி உளறிக் கொட்டாத..! என்று மனதிற்கு கடிவாளமிட்டவள்,
“அது எனக்கு எப்படித் தெரியும்..? நீன்னு நினைச்சு என்கிட்டே வந்து பேசினார்..! அதை வச்சு தான் கேட்டேன்..! என்று ஒருவாறு சமாளித்தாள்.
“ஹோ அப்படியா..? அந்த சிடுமூஞ்சி போறப்ப சொல்லக் கூட இல்லை. டபக்குன்னு இறங்கி, டபக்குன்னு போய்ட்டான்..! என்றாள் தேஜு.
“நம்ம கிட்ட சொன்னார் தான..? என்றான் விகாஸ்.
“எது, அதுக்கு பேரு உங்க ஊர்ல சொல்லிட்டு போறதா..? என்று தேஜு நக்கல் அடிக்க,
“பார்த்தா சிடு மூஞ்சி மாதிரியெல்லாம் தெரியலை. நல்லா தான் பேசினார். சொல்லாம போனதுக்கு சாரி கூட சொன்னார்..! என்றாள் சுபஷ்வினி.
“நீ வேற அஸ்வினி..! அவன் பேரை கேட்டதுக்கு எப்படி முறைச்சான் தெரியுமா..? அப்பறம் எப்படியோ பிரண்ட் ஆகி, நம்பர்லாம் கூட வாங்குனோம்..! என்றாள்.
“ம்ம்ம்.! என்ற சுபஷ்வினிக்கு மனதிற்குள் ஏதோ செய்தது.
“இதோ நாங்க எடுத்த செல்பி..! என்று தேஜு காட்ட, அதைப் பார்த்த சுபஷ்வினிக்கு கண்ணை எடுக்க முடியவில்லை. அவன் முகம் ஏதோ ஒரு கோபத்தில் இருந்ததைப் போன்று இருந்தது.
அதற்குள் வசந்தாவும் பேசி முடித்து வந்து , விகாசின் போனை நீட்டினார்.
“என்னம்மா சொன்னாங்க..? என்றாள் தேஜு.
“நம்ம மூணு பேரையும் ஊட்டிக்கு கண்டிப்பா வரணும்ன்னு சொன்னாங்க..! என்றார் வசந்தா.
“ஐ ஜாலி..! அப்ப நாம ஊட்டி போறமா..? என்றாள் தேஜு.
“உடனே எப்படி போக முடியும்..? பென்ஷன் விஷயமா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு போய்ட்டு வரலாம்..! என்றார்.
“போங்கம்மா..! இப்படி தான் சொல்லுவிங்க. அப்பறம் கூட்டிட்டு போக மாட்டிங்க..! என்றாள் தேஜு.
“நான் நாளைக்கு கிளம்புறேன் ஆன்ட்டி. தேஜுவும்,சுபாவும் என்கூட வரட்டும். நீங்க உங்க வேலை முடிஞ்ச உடனே வாங்க..! என்றான் விகாஸ்.
“தனியாவா..? என்று வசந்தா யோசிக்க,
“ஏன் ஆன்ட்டி..! என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..? என்றான் விகாஸ் வருத்தமாய்.
“அப்படியில்லை விகாஸ்..! என்று அவர் இழுக்க,
“நான் வரலை விகாஸ். நீ தேஜுவ மட்டும் கூட்டிட்டு போ..! என்றாள் சுபா.
“நீயும் கண்டிப்பா வரணும் சுபா. அப்பத்தான் உனக்கு என்மேல கோபம் இல்லைன்னு நான் உறுதி பண்ணிப்பேன்..! என்றான்.
“ஆமா அஸ்வினி..! நாம ரெண்டு பெரும் சேர்ந்து போறோம்..! ஊட்டியை சுத்தி பார்க்குறோம்..! ஆபீஸ்க்கு லீவ் சொல்லிடு..! என்றாள் தேஜு.
தேஜுவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்காகவே சரி என்று சொன்னாள் சுபஷ்வினி.
சுபஷ்வினியின் முகத்தைப் பார்த்த வசந்தாவிற்கு இப்போது தான் கொஞ்சம் திருப்தியாக இருந்தது. எப்படியோ அவள் பழையபடி சகஜமாக மாறினால் போதும் என்று நினைத்தார்.
“நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்பனும்..? என்றாள் தேஜு.
“மார்னிங்க கிளம்புறேன்..! நீங்க ரெடியா இருங்க. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்..! என்றான்.
“ஓகே டன்..! என்று தேஜு சொல்ல, அதற்கு பிறகு அவனை சாப்பிட வைத்தே அனுப்பினார் வசந்தா. அவரின் மனதிற்குள் ரேகா சொன்ன விஷயம் ஓடிக்கொண்டே இருக்க, அவரை நினைத்தும் கவலை கொண்டார் வசந்தா.
தேஜஸ்வினி ஊட்டிக்கு செல்வதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கினாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த சுபஷ்வினி,
“மும்பைல இருந்து வந்து ரெண்டு நாள் கூட ஆகலை. அதுக்குள்ள ஊட்டியா..? நாம எப்படி அவங்க வீட்ல போய் தங்குறது. சங்கோஜமா இருக்கும்..! என்றாள் தேஜுவிடம்.
“இதுல என்ன இருக்கு. நம்ம அம்மாவுக்கு அவங்க எவ்வளவு குளோஸ். என்ன காரணம்ன்னு தெரியலை அவங்க சொல்லாம,கொள்ளாம போய்ட்டாங்க. இத்தனை வருஷத்துக்கு அப்பறம் நம்மளை பார்க்க பிரியப்படுறாங்க. நம்ம அம்மாவும் எங்க போறாங்க, வராங்க. இதை சாக்கா வச்சு அவங்களுக்கு ஊட்டியை சுத்திக் காட்டியது மாதிரியும் ஆகிடும். அவங்களும் அவங்க பிரண்டை மீட் பண்ணது மாதிரியும் ஆகிடும். நாமளும் என்ஜாய் பண்ண மாதிரியும் இருக்கும்..! என்றாள் தேஜஸ்வினி.
சுபஷ்வினி அமைதியாக இருக்க, அவளின் முகத்தைப் பார்த்தவள், என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அவளின் கீழ் அமர்ந்து சுபஷ்வினியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
“நானும் உன்கூட சேர்ந்து எங்கயுமே போனதில்லை. மத்த டிவின்ஸ் மாதிரி நம்ம ஒரே கலர் ட்ரஸ் எல்லாம் விவரம் தெரிந்து போட்டதில்லை. இப்படி எத்தனையோ சொல்லலாம். நாம நிறைய மிஸ் பண்ணியிருகோம். இன்னும் கொஞ்ச நாள்ல எப்படியும் அம்மா நமக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க..! அப்பறம் நாம நினைச்சா கூட இப்படி இருக்க முடியாது. நான் தொலைச்ச சந்தோஷத்தை எல்லாம் அதுக்குள்ள அனுபவிச்சு முடிக்கணும்..! என்றாள் கண்களில் கண்ணீருடன்.
“இதுக்கு எதுக்கு கண் கலங்குற..? கண்டிப்பா போகலாம். நானும் போய் பேக் பண்றேன்..! என்றாள் சுபஷ்வினி.
“அடிப்பாவி..! நான் பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு இருக்கேன். நீ என்னடானா சட்டுன்னு சொல்லிட்டு, பட்டுன்னு எந்திருச்சுட்ட..? என்றாள் தேஜு.
“அப்பறம் என்ன பண்ண சொல்ற..? நானும் உன்னை மாதிரியே பேசினா நீ இன்னும் பீல் பண்ணுவ. அதான் அவாய்ட் பண்ணேன்..! என்றாள் சன்னமாக சிரித்துக் கொண்டே.
அவளின் வார்த்தைகளில் அவளை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள் தேஜு.
அங்கே நடச்சத்திர ஓட்டலின் பால்கனியில் நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தான் ஜீவ மித்ரன்.
அவன் தொலைத்த நியாபகங்களும், உறவுகளும் அவன் கண்ணுக்குக் கிடைக்காமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. தேடி வந்த வேலை முடியாமல் இருக்க, அதற்குள் ராணியம்மாள் மும்பையில் தன் பங்கு ஆட்டத்தை ஆரம்பித்து விட்டிருந்தார்.
பாட்டிக்கும் பேரனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அங்கு நேசன் தான் அல்லாடிக் கொண்டிருந்தார். பாட்டியின் குணத்திலேயே மகனும் இருந்ததாலோ என்னவோ அவரால் சமாளிக்கவே முடியவில்லை.
போதாத குறைக்கு லக்சனா வேறு அவனைப் பின்தொடர்ந்து, அவனுடைய தகவல்களை ராணியம்மாளுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தாள். விவாகரத்து வாங்கியும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தாள்.
அன்று கல்யாண நாளன்று நடந்தது அவனுக்கு நியாபகம் வந்தது. மாப்பிள்ளையின் அறைக்குள் வந்த ஜெனி,
“என்னடா பொண்ணு மாறி இருக்கு..? என்றாள்.
“என்ன கிண்டலா..? அதே பொண்ணு தான். அவ எங்க மாறியிருக்கா..? எனக்கு தான் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.. என்றான்.
“என்ன ஆச்சு..? என்றாள் ஜெனி.
“எங்க..? இவளும் பாட்டி மாதிரி  தான் போல. அவங்க பார்த்த பொண்ணு அவங்க மாதிரியே தான் இருக்கு. எனக்கு வர கோவத்துக்கு..! என்று பல்லைக் கடித்தவன், தன்னை நிதானப் படுத்திக் கொண்டான்.
“என்னடா இப்பவே இப்படி கோபப்படுற..? என்றான்.
“அவ பழக்க வழக்கமே எனக்கு பிடிக்கலை. என் கண்ணு முன்னாடியே டேட்டிங்க போறா..? நீதானா சொன்ன என்னைய அப்படி சைட் அடிச்சான்னு. இன்னும் எத்தனை பேரை இப்படி சைட் அடிச்சாலோ..? மும்பை கல்ச்சர்ல இருக்க எல்லா வேண்டாத கன்றாவியும் அவகிட்ட இருக்கும் போல..! என்றான்.
“நான் எங்கடா இவளை சொன்னேன்..! என்றாள் ஜெனி அதிர்ச்சியாய்.
“அன்னைக்கு சொன்னதான..? என்றான்.
“நான் சொன்ன பொண்ணு இவ இல்லை..! அதைத்தான் நான் இப்போ கேட்கலாம்ன்னு வந்தேன்..! என்றாள்.
“சுத்தம், அதுவும் இல்லையா..? என்றவன்,
“என்னோட வாழ்க்கையும் இப்போ கார்ப்ரேட் ஆகிடுச்சு பாட்டிக்கு…! என்றான்.
“அப்பறம் எதுக்கு சம்மதம் சொன்ன..? என்றாள்.
“அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. இல்லைன்னா இந்த ஜீவ மித்ரனை யாராலும் கட்டிப் போட முடியாது..! என்றான் உறுமலுடன்.
“அப்படி என்ன காரணம்..? என்றாள்.
“நேரம் வரும் போது சொல்றேன்..! என்றான்.
“அப்போ இவளைத்தான் கல்யாணம் பண்ண போறியா..? என்றான்.
“கண்டிப்பா..! பார்த்தா தெரியலை? மனமேடை வரை வந்தாச்சு. பாட்டி அவங்க ஆட்டத்தை ஆடி முடிக்கட்டும். என் ஆட்டத்தை அப்பறம் தொடங்குறேன்..! என்றான்.
“அதுக்காக வாழ்க்கையையே பணயம் வைக்கணுமா..? என்றாள் ஜெனி.
“நான் நினைச்சது நடக்கனும்ன்னா, எந்த எல்லைக்கும் போவேன்..! என்றான்.
இதோ இப்பொழுது சென்னையின் எல்லை வரை வந்திருக்கிறான். அவன் நினைத்த காரியம் கைகூட வேண்டி.

Advertisement