Advertisement

 
குடை 11:
தேஜஸ்வினி தன் அம்மாவிடம்  கேட்ட கேள்வியைத்தான், சுபஷ்வினியும் மனதில் நினைத்துக் கொண்டு சென்றாள்.
“எனக்கு மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் எங்கே சென்றது..? நான் ஏன் இப்படி மாறிப்போனேன்..? என்ற பல கேள்விகள் அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது.
காரை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு மனதில் இந்த சிந்தனைகள் எல்லாம் தோன்ற, குணம் மாறி வந்த தங்கை தேஜஸ்வினியும் நியாபகத்திற்கு வந்தாள்.
அவள் வந்தது, தன்னிடம் பேசியது, அவள் மாறியது இப்படி ஒவ்வொன்றாய் அவள் கண் முன் அணிவகுத்து நின்றது. அவளுடைய பல நாள் ஆசை இன்று நிறைவேறியது என்று கூட சொல்லலாம்.
அழுத்தம் நிறைந்திருந்த அவளின் மனதிற்கு ஆறுதல் என்றாள் அவள் வீடும் அவள் அம்மாவும் தான். அதையும் தாண்டி தேஜஸ்வினியிடம் எதையும் அவள் எதிர்பார்க்க முடியாது. சின்ன வயதில் ஒதுங்க ஆரம்பித்தவள், நேற்று வரை ஒதுங்கித் தான் இருந்தாள். ஆனால் இன்றைய அவளின் திடீர் மாற்றத்திற்குக் காரணம் தெரியாமல் குழம்பித் தவித்தாள் சுபஷ்வினி.
அவள் மும்பை செல்வேன் என்று அடம்பிடித்து தான் சென்றாள். வசந்தா எவ்வளவு தடுத்தும் அவள் கேட்கவில்லை. சுபஷ்வினி அவளின் விஷயத்தில் தலையிடவே இல்லை. அப்படியே இவள் சொல்லி இருந்தாலும் அவள் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
இப்படி பல எண்ணங்களுக்கு இடையில் அவள் காரை ஓட்டிக் கொண்டிருக்க, முன்னால் சிக்னல் விழுந்ததை கவனிக்காமல் செல்ல, அங்கிருந்த போக்குவரத்து காவலரின் அழைப்பு அவளின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவளின் நல்ல நேரமோ என்னவோ, அசம்பாவிதமாக எதுவும் நடக்கவில்லை. எப்போதும் இப்படி அசட்டையாக காரை ஓட்டுபவள் அல்ல.இன்றுதான் இப்படி நடந்திருக்கிறது.
எப்படியோ ஒரு வழியாக அலுவலகத்தை அடைந்தாள் சுபஷ்வினி. கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, ஆபீசிற்குள் செல்ல முற்பட,
“ஹேய் நில்லுடி…! நானும் வரேன்..! என்றபடி ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஓடி வந்தாள் சங்கி.
“ என்னைக்காவது ஒரு நாள் டைமுக்கு வந்திருக்கியா..? என்றாள்.
“ஏன் நீ வந்திருக்கியா..? எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைங்க தான். நீ ஹீரோயின்னா இப்படி அட்வைஸ் பண்ணனும்ன்னு அவசியம் இல்லை..! என்றாள் சங்கி.
“நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்..? எதுக்கு இப்படி மூச்சு விடாம பேசுற..? என்றாள் சுபஷ்வினி.
“இங்க பார் அஸ்வினி..! நான் உன்மேல ரொம்ப கோவமா இருக்கேன். இத்தனை நாள் ஏதோ விரோதியை பார்க்கிறதை மாதிரி பார்த்துட்டு, இப்ப என்னமோ நீயா வந்து பேசுற..! நானும் உடனே பேசிடனுமா..? என்றாள் சங்கி.
குற்ற உணர்வில் தலை குனிந்தாள் அஸ்வினி. அவள் செய்ததும் அப்படித்தானே..! அவளுக்கு சோகம் என்றால், அவளோடு நிறுத்தியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சங்கியை கோபித்துக் கொண்டதில் அர்த்தம் இல்லை தானே..!
“சாரிடி சங்கீதா..! என்றாள்.
“எனக்கு காது கேட்கலை..! என்றாள்.
“தேஜஸ்வினி மும்பைல இருந்து வந்துட்டா..! என்றாள் அஸ்வினி.
“பாருங்கப்பா..! வந்துட்டாளா அவ. ஆமா அவ வந்தா உனக்கென்ன..? அவதான் உன்னை ஒரு பொருட்டா கூட மதிக்க மாட்டாளே..! என்றாள்.
“இல்லடி..! அவ முன்னாடி மாதிரி இல்லை. அவளே வந்து என்கிட்டே பேசுனா…? என்றாள் கொஞ்சம் சந்தோஷமாய்.
“அப்படியா..? நம்பிட்டேன். அவளுக்கு இந்த திடீர் ஞான உதயம் எங்க இருந்து வந்தது..? மும்பைல இருந்தா..? என்றாள் சங்கி.
“தேஜுவ தப்பா பேசாத சங்கி..! என்று முறைத்துக் கொண்டாள் அஸ்வினி.
“யாரு நான் தப்பா பேசுறேன்…? நல்லா இருக்குடி உங்க நியாயம். இத்தனை வருஷம் அடிச்சுகிட்டு இருந்தவ, திடீர்ன்னு நான் திருந்திட்டேன் அப்படின்னு வந்து சொன்னா, என்னன்னு நினைக்கிறது. எதுலையுமே அவ உனக்கு விட்டுக் குடுத்தவ கிடையாது. நீ என்ன செஞ்சாலும் அதையே செய்யனும்ன்னு நினைக்கிற ஆளு. அவ திருந்திட்டாளா..? நீ மும்பைல போய் வேலை பார்த்தங்கற ஒரே காரணத்துக்காக தான் அவளும் மும்பைக்கு வேலைக்கு போனா…? இப்ப எப்படி திருந்துனா..? என்றாள் சங்கி.
“அதெல்லாம் எனக்கு தெரியாது சங்கி. ஆனா அவ முன்னாடி மாதிரி இல்லை. ரொம்ப மாறிட்டா..! இன்னைக்கு சேர்ந்து தான் சாப்பிட்டோம்..! என்றாள்.
“சரி உனக்கு அப்படி தோணினா அதை நான் ஒன்னும் செய்ய முடியாது. எனக்கு என்னைக்கு அவ மேல நம்பிக்கை வருதோ…அன்னைக்கு நான் நம்புறேன்..! இப்ப போய் வேலையை பார்க்கலாமா..? என்றாள் சங்கீதா.
“ம்ம் சரி..! என்றபடி சென்றாள் அஸ்வினி.
அவள் சென்ற பின்பு அவளைப் பின்னிருந்து பார்த்த சங்கியின் கண்களில் கண்ணீர்.
“இவ இப்படி சகஜமா பேசி எத்தனை மாசம் ஆகுது. இன்னைக்கு தான் என்னையவே கண்ணு தெரிஞ்சிருக்கு இவளுக்கு. கடவுளே இவளை மட்டும் பழைய அஸ்வினியா..சுபஷ்வினியா மாத்திடுங்க..! என்று கடவுளை மனதிற்குள் வேண்டிக் கொண்டு சென்றாள் சங்கீதா.
ஒரு உயிர்தோழியின் வலியையும், வேதனையையும் அருகில் இருந்து பார்த்தவள் சங்கீதா. சாதாரணம் என்று அவள் நினைத்த விஷயம் பூதாகரமாகி, அதுவே வெடித்து அவளின் வாழ்க்கையை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்ற நாட்கள், மிகவும் கொடிய நாட்களாகத் தான் தோன்றியது சங்கீதாவிற்கு.
இப்போது தான் கொஞ்சம் மீண்டு வந்திருக்கிறாள் என்றால் அது தான் நிஜம்.
தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்த அஸ்வினிக்கு எல்லாம் புதிதாய் தோன்றியது. ஏதோ ஒரு மாயம் நடப்பதைப் போல் இருந்தது. இருண்டு கிடந்த நாட்கள், திடீரென்று வண்ண மயமானதைப் போன்ற ஒரு உள்ளுணர்வு அவளுக்கு. காரணம் தெரியாத ஒரு படபடப்பு.
“இடத்துக்கு வந்து வேலை பார்க்கணும்..! இப்படி வேடிக்கை பார்க்கக் கூடாது.. என்றாள் சங்கி.
“ம்ம்ம்..! என்றவள், தன்னுடைய கம்ப்யூட்டரை உயிர்பித்தாள். அன்றைக்கு அவள் செய்ய வேண்டிய வேலைகள், அவளை உள்ளுக்குள் இழுக்க அப்படியே மூழ்கிப் போனாள் வேலையில்.சங்கீதா இரண்டு முறை அவளை நிமிர்ந்து பார்த்தும், அவள் நிமிராமல் வேலையை செய்து கொண்டிருக்க, அவளைப் பார்த்த சங்கீதா சிரித்துக் கொண்டாள்.
யாரோ தன்னை கூர்ந்து கவனிப்பதைப் போல தோன்ற, பட்டென்று நிமிர்ந்தாள் சுபஷ்வினி. அவள்  நிமிர்ந்ததைப் பார்த்து சங்கியும் கேள்வியுடன் நிமிர, சுற்றும் முற்றும் பார்த்தாள் அஸ்வினி.
“என்னாச்சு அஸ்வினி..? என்றாள் சங்கி.
“இல்லை..! ஒண்ணுமில்லை. யாரோ பார்க்குற மாதிரி இருந்தது..! என்றவள் குழப்பத்துடன் மீண்டும் பார்க்க, அதிர்ந்தாள்.
“ஆம்..! அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஜீவ மித்ரன். யாரை இனி பார்க்க கூடாது என்று எண்ணினாளோ..? யாரால் சாவின் விளிம்பு வரை சென்று வந்தாளோ…? யாருக்காக பயந்து ஓடி வந்தாளோ..? யாரை இத்தனை நாள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தாளோ..? அந்த அவன்… ஜீவ மித்ரன் வந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்தவுடன், அவள் கைகள் தானாகத் தந்தி அடிக்க, உள்ளம் நடுங்க ஆரம்பித்தது. மூளை தன்னுடைய செயல்பாட்டை நிறுத்த, எதிரில் வரும் அவனையன்றி வேறு எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.காதலின் உணர்வும், அவஸ்தையும் அனுபவித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும் என்பது எவ்வளவு சத்யமான உண்மை.
பிடிமானத்திற்கு அருகில் இருந்த டேபிளின் தடுப்பைப் அவள் கைகள் பற்றிக் கொள்ள, கண்கள் கூட லேசாக கலங்கியது.
யாரைப் பார்க்க வேண்டும், யாருடன் பேச வேண்டும் என்று பல நாள் தவம் இருந்தாளோ..அவன் வந்து கொண்டிருந்தான்.
“எதுக்கு இவ இப்படி எழுந்து நிக்குறா..? என்று யோசித்த சங்கியும், அவள் பார்த்துக் கொண்டிருந்த திசையைப் பார்க்க, அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.
கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவள் நினைத்தது என்ன? இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன? என்று சங்கீதா மனதிற்குள் நினைக்க, ஜீவ மித்ரனை அங்கு, அவர்கள் ஆபீசில் அவள் சுத்தமாக எதிர் பார்க்கவில்லை என்பதே உண்மை. அதுவும் இத்தனை மாதங்கள் கழித்து.
சுபஷ்வினி தான் அப்படி பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, அவனுக்கு அப்படி ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.
“ஹாய் அஸ்வினி..! என்றான் கம்பீரமாக..
அதைக்கேட்ட சுபஷ்வினிக்கு மயக்கமே வரும் போல் இருந்தது. அவனுடைய வாயால் அவள் பெயரைக் கேட்ட அந்த நிமிடம், அவள் உள்ளுக்குள் உறைந்தாள். உள்ளே அழுத்தி வைத்திருந்த காதல், மேலும் அழுத்தம் கொடுக்க, அந்த அழுத்தத்தின் வலி தாங்க முடியாமல், அந்த சுகமான உணர்வை உள்வாங்கிக் கொண்டிருந்தாள் சுபஷ்வினி.
“என்ன அஸ்வினி…! இப்படி ஷாக் ஆகி நிக்குற..?ஆர் யு ஓகே..? என்றான்.
எதற்கு தலையை ஆட்டுகிறோம் என்று புரியாமல், அவளின் தலை தானாக ஆட… அவளைப் பார்த்த மித்ரனுக்கு தான் வியப்பாக இருந்தது. ட்ரெயினில் மூச்சுக்கு முன்னூறு வார்த்தை பேசிய அஸ்வினியா இது என்று.
“மும்பைல வேலையை விட்டுட்டேன்னு சொன்ன..? எப்படி உடனே உனக்கு இங்க வேலை கிடைச்சது..? என்றான்.

Advertisement