Advertisement

 
குடை 10:
“இது தான் பொண்ணோட போட்டோ..! பொண்ணு பேரு லக்சனா. ரொம்ப அழகா இருக்கா, நல்ல படிப்பு, நல்ல குடும்பம் இப்படி எல்லாமே பொருத்தமா இருக்கு..! என்று மித்ரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ராணியம்மாள்.
அவளின் புகைப்படத்தை பார்த்த மித்ரனுக்கு பெரிதாக ஒன்றும் தோன்றாவிட்டாலும், பிடிக்காத மாதிரியும் தோன்றவில்லை. ஆனால் அவனின் கொள்கையில் அவன் உறுதியாக இருந்தான். அதாவது காதலித்து கல்யாணம் செய்வதில்.
“நேர்ல பார்த்துட்டு வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியது தான்..! என்று மனதிற்குள் நினைத்தவன், பாட்டியிடம் ஒன்றும் சொல்லவில்லை.
“சரின்னு சொல்லிட்டியா..? என்றாள் ஜெனி.
“எங்க..? அப்படி எல்லாம் சொல்லலை.ஆனா சொல்லிடுவேன்..! என்றான்.
அவனுடைய காரில், அவனுடைய அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தான். ஜெனியும் உடன் இருந்தாள்.
“நீ எப்ப லண்டன் கிளம்புற? என்றான்.
“நாளைக்கு மார்னிங் பிளைட்! என்றாள்.
“எத்தனை நாள் ட்ரிப்..? நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் உன்னை..! என்றான்.
“பிஸ்னஸ் விஷயமா தான் போறேன்..! மே பி த்ரீ மந்த்ஸ் கூட ஆகலாம்..! என்றாள்.
“மூணு மாசம் ரொம்ப நிம்மதியா இருக்கலாம்ன்னு சொல்லு..! என்றான்.
“எங்க..? அதுக்குள்ள உங்க பாட்டி உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சாலும் ஆச்சர்யமில்லை.. என்றாள்.
“கண்டிப்பா..! நீயும் பக்கத்துல இருப்ப..! என்றான்.
“நான் இல்லாம எப்படிடா உன் கல்யாணம் நடக்கும்…? எங்க இருந்தாலும் ஓடி வந்துடுவேன்.. என்றாள்.
அவனின் அலுவலகத்திற்கு அருகில் கார் சென்று கொண்டிருக்க… எதிர்புறம் சாலையை ஒட்டி இருந்த ஒரு கட்டிடத்தின் முன்னால் நின்றிருந்தாள் அஸ்வினி.
அவள் எதேச்சையாக ஜெனியின் கண்களில் பட…
“டேய் ஜீவா..! உன்னை சைட் அடிச்ச பொண்ணு..! என்றாள் கையைக் காட்டி.
“என்ன கிண்டலா..? இதுக்கெல்லாம் நான் காரை ஸ்டாப் பண்ண மாட்டேன்..! என்று அவன் சொல்ல,
“நிஜமாடா..! அதோ அந்த கார்னர்ல பாரு..! ஒரு காரை ஒட்டி நிக்குறா பாரு..! என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஜெனியின் மொபைல் ஒலி எழுப்ப அதை எடுத்துப் பேசுவதில் முனைந்தாள் ஜெனி.
பார்க்கக்கூடாது என்று நினைத்தாலும், உள்ளுக்குள் ஏதோ உந்த, ஜெனி அறியாதவாறு பார்த்தான் மித்ரன். அவன் கண்களில் பட்டதென்னவோ, காரின் கதவைத் திறந்து கொண்டிருந்த லக்சனா தான். அவளைப் பார்த்தவன் அதிர்ந்தான்.
“இது பாட்டி காட்டிய போட்டோல இருந்த பொண்ணாச்சே..! என்று அவன் யோசிக்க,  சற்று தள்ளி நின்றிருந்த அஸ்வினி அவன் கண்ணில் விழவே இல்லை.
“இதுக்கு நீ நேராவே பார்த்திருக்கலாம்..! என்றாள் ஜெனி.
“நீ என்ன சொல்ற..? என்றான்.
“நீ பார்த்ததை, நான் பார்த்துட்டேன்னு சொல்றேன்..! என்றாள்.
“இவ போட்டோவைத்தான் பாட்டி காலைல காட்டினாங்க..! என்றான்.
“நீ ஆசைப்பட்ட மாதிரியே தமிழ்நாட்டு பொண்ணு தான் போல..? என்றாள் ஜெனி, அஸ்வினியை மனதில் எண்ணிக் கொண்டு.
“அவங்களுக்கும் பூர்விகம் தமிழ்நாடு தானாம்..! பாட்டி சொன்னாங்க…! என்றான் மித்ரன், லக்சனாவை மனதில் வைத்து.
“அப்பறம் என்னடா..? நீ ஆசைப்பட்ட தமிழ்நாடு, அவளுக்கும் உன்னைய ரொம்ப பிடிச்சிருக்கு போல, அன்னைக்கு அவ கண்ணுலையே அது தெரிஞ்சது..! உங்க பாட்டிக்கும் பிடிச்சிருக்கு..! உன் காட்டுல மழை ..! என்றாள் ஜெனி.
“இருந்தாலும் ஏதோ ஒன்னு மிஸ் ஆகுது..! என்றான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை..! இதுக்கு மேல ஒரு பொண்ணு, உனக்குத் தேடுனாலும் கிடைக்காது..! என்றாள்.
“பார்க்கலாம்..! என்பதோடு அவன் பேச்சை முடித்துக் கொண்டான். அதன் பிறகு ஜெனி லண்டன் செல்ல, நடக்க வேண்டிய அனைத்தும் விதியின் நேர்கோட்டில் நடந்து முடிந்திருந்தது.
ட்ரெயின் சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்து நின்றது.
“அப்ப நான் கிளம்புறேன் விகாஸ்..! நீ ஊட்டி போறதுக்கு முன்னாடி கண்டிப்பா ஒரு நாள் வீட்டுக்கு வரணும்..! என்றாள் அஸ்வினி.
“கண்டிப்பா வரேன் வினி..! நீ பார்த்து பத்திரமா போய்டுவதான..? இல்லைன்னா நான் வந்து விட்டுட்டு வரட்டுமா..? என்றான்.
“பாருங்கப்பா..! நான் பச்ச பிள்ளை… இவரு வந்து என்னைய விட்டுட்டு வராரு..! இது எங்க சென்னை..எனக்குத் தெரியும் போக. நீ பார்த்து போயிடுவியா இல்லை நான் வந்து விட்டுட்டு வரணுமா..? என்றாள்.
“அடிங்க..! என்றவன், அவளை பத்திரமாக ஆட்டோவில் ஏற்றி விட்ட பின்பு தான் சென்றான்.
ஆட்டோவில் ஏறிய அஸ்வினிக்கு அதுவரை இருந்த சிரிப்பு முகம் அப்படியே மாறிப் போனது. மனதில் இருந்த பாரங்களும், வலிகளும் இவ்வளவு நேரம் மறந்திருந்தது அவள் மனதில்.மீண்டும் தனியாக நிற்கும் போது, அவை அனைத்தும்  விஸ்வரூபம் எடுக்க, அதை மறைக்க கொஞ்சம் பிரயத்தனப்பட்டாள் அஸ்வினி. அவளின் அம்மாவின் கண்களில் இருந்து தப்புவது மிகவும் கடினம் என்று அவளுக்குத் தெரியும்.
அஸ்வினி வீட்டிற்கு செல்ல இரவு ஏழு மணிக்கு மேல் ஆனது. வீட்டிற்கு ஏதோ வெகு நாள் கழித்து வருவதைப் போல உணர்ந்தாள் அஸ்வினி. அவள் வந்ததை உணர்ந்த அவள் அம்மா வசந்தா,
“ஹேய் தேஜுமா…! என்றபடி அவளை வந்து அணைத்தவர்,
“எப்படிடா இருக்க..? என்றார்.
“ம்ம்..! நல்லா இல்லை. நீங்க தான் வேலைய விட்டுட்டு வர சொல்லிட்டிங்களே..! என்றாள்.
அவளின் பதிலைக் கேட்ட வசந்தாவிற்கு கண்கள் கலங்க, “என்னால முடியலை தேஜு..! உன் அக்கா இப்பல்லாம் யார் கூடவும் பேசுறதில்லை. நீ இருந்தா மட்டும் தான் சரி வரும். இனியாவது அவகூட சண்டை பிடிக்காம, ரெண்டு பெரும் ஒத்துமையா இருங்கமா..! என்றார்.
“அக்கா..! என்ற வார்த்தையைக் கேட்ட உடன் அஸ்வினியின் கண்களும் கலங்க…
“சாரிமா..! நானும் என் தப்பை உணர்ந்துட்டேன்..! அவளை பழையபடி மாத்த வேண்டியது என் பொறுப்பு..! நீங்க கவலையை விடுங்க..! என்றாள் சந்தோஷமாய்.
“கேட்கவே ரொம்ப சந்தோசம் தேஜுமா..! எனக்கு உங்களை விட்டா யாரு இருக்கா..! நீங்க கடைசி வரைக்கும் ஒத்துமையா இருந்தா அதுவே போதும்..! என்றார் வசந்தா.
“ம்ம்மமா ! வந்த உடனே இப்படி அழுது வடியனுமா..? இன்னும் இதுக்கெல்லாம் நேரம் இருக்கு..! முதல்ல என் வயித்தை நெப்புங்க..! நாக்கு செத்து போய் வந்திருக்கேன்..! என்றாள் சோகமாய்.
“உனக்கு பிடிச்சது, உன் அக்காவுக்கு பிடிச்சதுன்னு எல்லாமே சமைச்சிருக்கேன்…! உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்..! என்று வசந்தா சொல்ல,
“அவ எங்கம்மா..? என்றாள்.
“ரூம்ல இருக்கா..! என்றார் வசந்தா.
“நான் போய் குளிச்சுட்டு, அவளையும் கூப்பிட்டுட்டு வரேன்..! என்றபடி சென்றாள் அஸ்வினி என்று அழைக்கப்படும் தேஜஸ்வினி.
நேராக அறைக்கு சென்று குளித்து முடித்தவள், இலகுவான ஒரு ஆடையை அணிந்து கொண்டு, தன் அக்காவைப் பார்க்க போனாள். நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருவரும் பாச மலர்கள் எல்லாம் கிடையாது.
அந்த அறையே அமைதியாகவும், படு சுத்தமாகவும் இருந்தது. ஆள் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருக்க, மெத்தையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து, தன்னுடைய லேப்டாப்பில் ஏதோ தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தாள்.
அவளையே சத்தமின்றி பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜஸ்வினி. அவ்வளவு முடியையும் தூக்கி ஸ்டைலாக ஒரு கொண்டை போட்டிருந்தாள். இரவு பேண்ட்டும், சட்டையும் அணிந்திருந்தாள். முகத்தில் பெயருக்கு பவுடர் கூட இல்லாமல், துடைத்து வைத்ததைப் போல் இருந்தது அவள் முகம். இப்பொழுது மட்டும் அல்ல. எப்பொழுதுமே அவள் முகம் இப்படித்தான் இருக்கும்.
லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்த கண்கள், அவளின் அறிவின் தீட்சண்யத்தை சொல்லியது. அவள் முகத்தில் இருந்த அமைதி, அவளின் அழுத்தத்தை சொல்லியது. மொத்தத்தில் இவளுக்கு நேரெதிர் அவள். அவள் சிரித்தால் அவ்வளவு அழகாய் இருப்பாள். ஆனால் அவள் சிரிக்க மறந்து பல மாதங்கள்  ஆனது.
“அஸ்வினி என்றாள் தேஜஸ்வினி.
அவளின் குரலில் நிமிர்ந்தாள் ‘அஸ்வினி என்று அழைக்கப்படும் சுபஷ்வினி.
நிமிர்ந்தவளின் கண்களில், முன்பு இருந்த விலகல் இல்லை என்றே தோன்றியது தேஜஸ்வினிக்கு. அவள் கண்களில் ஒரு இளைப்பாறுதல் தெரிந்தது.
“வா தேஜு..? எப்ப வந்த..? எப்படி இருந்தது ட்ரிப்..? எத்தனை நாள் லீவ்..? அகைன் எப்ப போகணும்..? என்றாள் கணினி திரையைப் பார்த்துக் கொண்டே.
“எத்தனை கேள்வி.? ஒவ்வொன்னா கேட்கலாம்ல..? என்றாள் தேஜஸ்வினி.
“கேட்கலாம்..! ஆனா உனக்கு தான் என்கூட பேசவே பிடிக்காதே..! அதான் ஒரேயடியாய் கேட்டேன்..! என்றாள்.
கோபிக்கவில்லை,  முகத்தைத் தூக்கவில்லை,சண்டையிடவில்லை, அமைதியாகத் தான் பேசினாள். ஆனால் சரியாக பேசினாள். அதுவே தேஜுவுக்கு குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது.
“சாரி..அஸ்வினி..! என்றாள் தேஜூ உள்ளே போன குரலில்.
அவள் தங்கையைப் பார்த்து லேசாக சிரித்து வைத்தாள். சிரித்தாள் என்று சொல்ல முடியாது. லேசாக உதடு பிரித்தாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
சுபஷ்வினி-தேஜஸ்வினி இருவரும் இரட்டையர்கள். அதில் சுபஷ்வினி இரண்டு நிமிடம் முன்னதாகப் பிறந்தவள். தேஜஸ்வினி இரண்டு நிமிடம் தாமதமாகப் பிறந்தவள். இருவரும் ஒரே முக அமைப்பைக் கொண்டிருந்தாலும், அவ்வளவு ஒற்றுமையில்லை. கூர்ந்து கவனித்தால் எளிதில் இனம் கண்டு கொள்ளலாம். ஆனால் முதலில் பார்ப்பவர்களுக்கு அடையாளம் காணவே இயலாது.
எப்போதும் இரட்டையர்களுக்குள் இருக்கும் குண ஒற்றுமை இதுவரை இவர்களுக்குள் இருந்ததில்லை. அதற்காக அடித்துக் கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் அவர்களின் ரசனையில் இருந்து, படிப்பில் இருந்து எல்லாமே வேறு தான். அவர்களின் பிறப்பு மட்டும் தான் ஒன்று. மற்ற எல்லா விஷயங்களிலும் இருவரின் கருத்துக்களும் வேறு தான்.
தன் அக்கா எது செய்தாலும், அதைத் தானும் செய்ய வேண்டும் என்று நினைப்பவள் தேஜஸ்வினி. இதுவரை அப்படித்தான் இருந்தாள். ஆனால் இப்போது அப்படியில்லை. வயதும், காலமும் அவளை மாற்றி இருந்தது.
ஆனால் சுபஷ்வினிக்கு எப்போதும் தங்கையைப் பிடிக்கும். அவளுக்கு பிடிக்காது என்ற ஒரே காரணத்திற்காக அவளுடன் பேச மாட்டாள். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு வசந்தா தான் விழி பிதுங்கிப் போவார்.
படிக்கும் காலத்தில் கூட ஒரே வகுப்பில் அவர்கள் படிக்கவில்லை. இவள் ஒரு பிரிவு என்றால் அவள் ஒரு பிரிவு. அப்படித்தான் படித்தனர். அதனால் தானோ என்னவோ இருவருக்கும் இடையில் அந்த பாண்டிங் என்ற ஒன்றே இல்லாமல் போனது.
“எதுக்கு சிரிக்கிற..? என்றாள் தேஜஸ்வினி.
“சிரிக்காம என்ன பண்ண சொல்ற..? இத்தனை வருஷம் கழிச்சு என்ன திடீர் மற்றம்…? சுபஷ்வினி.
“நான் மாற கூடாதா..? என்றாள் தேஜஸ்வினி.
“எதிர்பார்த்த நேரத்துல உன்னோட மாற்றம் இல்லைங்கிற வருத்தம் தான்..! என்றாள் சுபஷ்வினி.
“சாரி..! என்றாள் தேஜஸ்வினி.
“நான் எதையும் மனசுலையும் வைக்கலை, மைன்ட்லயும் வைக்கலை..! என்றாள் சுபஷ்வினி.
“வா சாப்பிடலாம்..! என்றாள் தேஜூ.
அவளை ஆச்சர்யமாய் பார்த்த சுபஷ்வினி, எதுவும் பேசாமல் எழுந்து சென்றாள் அவளுடன்.
பெற்ற மகள்கள் இருவரும் ஒன்றாய் வருவதைப் பார்த்த வசந்தாவிற்கு வேற என்ன வேண்டும். அப்படியே இருவரும் ஒன்றாய் இருந்தனர். ஆடை மட்டும் வேறாக இருந்தது. அவரின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கித் தான் போனது.
“அம்மா… எதுக்கு இப்போ எமோஷனல்..! என்றாள் தேஜு.
“உனக்கு தெரியாது தேஜு..! என்னோட இத்தனை வருஷ ஆசை இது. எல்லா வீட்டுலையும் இரட்டைப் பிள்ளைங்க எப்படி ஒத்துமையா இருப்பாங்க. எங்க எனக்கு அதைப் பார்க்குற குடுப்பினை இல்லாமையே போய்டுமோன்னு பயந்துட்டேன்..! என்றவருக்கு அவரையும் மீறி கண்ணீர் வந்தே விட்டது.
“ரொம்ப சாரிம்மா..! என்னால தான் எல்லாமே. சுபா கூட உங்களுக்கு பிரச்சனை இல்ல..! என்றாள் தேஜு.
“அப்படியெல்லாம் இல்லை. நானும் சில இடத்துல ரொம்ப அடமென்ட்டா நடந்துகிட்டு இருந்திருக்கேன்..! சாரி தேஜு..! என்று தப்பே செய்யாமல் அவள் மன்னிப்புக் கேட்க, உருகித்தான் போனாள் தேஜஸ்வினி.
“என்னோட பிடிவாதம், ஈகோ இதுனால நாம ரொம்ப இழந்துட்டோம் இல்லையா சுபா..! என்றாள் தேஜு.
“பழசை பேசவேண்டாம்..! என்றாள் சுபஷ்வினி.
தேஜஸ்வினி மிகவும் கலகலப்பானவள் ஆனால் குடும்பத்தில் அல்ல. வெளியிடத்தில். வெளியில் யாரும் அவளை ஒரு குறை சொல்ல முடியாது. ஆனால் வீட்டில் அப்படி இல்லை. ஏதோ ஒரு வகையில் தேஜுவின் மீது அவளுக்கு கோபம்,பொறாமை இப்படி எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.அதற்கும் சில காரணங்கள் இருந்தது.
சுபஷ்வினி அவளை விட எல்லாவற்றிலும் கூடுதல் திறமையுடன் இருந்தது தான் பெரிய காரணம். நண்பர்கள் இவளைத் தூண்டி தூண்டி விட… இவர்களுக்கு இடையில் விரிசலும் கூடிக் கொண்டே போனது.
“அம்மா என்ன யோசனை..? என்றாள் தேஜு.
“ஒண்ணுமில்லம்மா..! ஏதோ பழைய நியாபகம்..! என்றவர் இருவருக்கும் பரிமாற, உணவு கூட அங்கு வேறு வேறாக தான் இருந்தது. இருவரும் அவர்களுக்கு பிடித்த உணவை சாப்பிட,
“முதல்ல இருந்தே பழகிட்டிங்க…! இனி கொஞ்சம் கஷ்ட்டம் தான்..! என்றார் வசந்தா.
“ஏன்மா..? என்றாள் தேஜு.
அவர் சாப்பாட்டைக் காட்ட.., அப்போதுதான் புரிந்தது இருவருக்கும் வித்யாசம்.
இருவரும் அமர்ந்தது கூட நேரெதிர் தான். ஆனால் மனதில் ஒரு முடிவுடன் இருந்தனர், இனி எக்காரணம் கொண்டும் பிரிய கூடாது என்று.
கடந்த காலம் அவர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்திருந்ததோ தெரியாது. ஆனால் இனி வரும் காலம் அவர்களுக்கு நல்லதை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் வசந்தா.
ஒருவாரம் கடந்திருந்தது.
இப்போது பெண்கள் இருவரும் கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்திருந்தனர். சுபஷ்வினி தங்கையுடன் நன்றாக பேசினாலும், எல்லாவற்றிலும் ஒரு ஒதுக்கம் அவளிடம். அதற்கான காரணமும் தேஜஸ்வினிக்குத் தெரியும். அந்த ஒரு காரணத்தினால் தான், அவள் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தாள் என்று கூட சொல்லலாம்.
ஒருவருடத்திற்கு முன்பு அவள் இருந்த நிலை அப்படி. இனி பிழைக்கவே மாட்டாள் என்று டாக்டர்கள் சொன்ன போது, அப்போது தான் அவளுக்கு உள்ளுக்குள் ஆட்டம் கண்டது.
அவளை வெறுத்தாள், ஆனால் அதற்கு கூட அவள் அருகில் வேண்டும் என்று நினைத்தாள். அவளைப் பிடிக்காது, அனால் அவள் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும்..இப்படி நிறைய சொல்லலாம்.
சாவின் விளிம்பு வரை சென்று தான், தங்கையின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்… என்பதைக் கூட அறியாமல் இருந்தால் தேஜஸ்வினி.
அன்று அலுவலகம் செல்ல கிளம்பி வந்தாள் சுபஸ்வினி. ஜீன்சும் வெளிர் சிகப்பு குர்தியும், கிளிப்பில் அடக்கப்பட்ட முடிகளும், ஒப்பனையற்ற முகமும் பார்க்க தேஜஸ்வினிக்கே  கட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது. ஆனால் அமைதியாக இருந்தாள்.
“நான் போயிட்டு வரேன்ம்மா..! வரேன் தேஜு..! என்றபடி அவள் செல்ல, அவள் சென்று விட்டதை உறுதிப் படுத்திக் கொண்ட தேஜு…
“நான் மட்டும் சுடிதார் போடணும். அவ மட்டும் ஜீன்ஸ் போடலாமா..? என்றாள் கோபமாய் வசந்தாவிடம்.
“என்னடா இது..? திருந்திட்டான்னு பார்த்தா மறுபடியும் ஆரம்பிக்கிறா..? என்று எண்ணிய வசந்தாவின் முகம் பீதியைக் காட்ட, அவர் முக மாறுதல்களை கண்ட தேஜஸ்வினி விழுந்து,விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
அவர் புரியாமல் பார்க்க…
“என்னம்மா பயந்துட்டிங்களா..? என்றாள்.
“என்ன தேஜு இது..? ஒரு நிமிஷத்துல பயந்துட்டேன்..! என்றார் வசந்தா.
“நீங்க செய்றது மட்டும் சரியா..?என்றாள்.
“ அவன் ஜீன்ஸ் போட்டாலும் முட்டிக்கு கீழ வரைக்கும் டாப் போடுறா..! நீ அப்படியா..? என்றார் வசந்தா.
“அப்ப இது தான் காரணமா..? என்றாள் ஆச்சர்யமாய்.
“ஆமா..! அவ எப்படி மார்டனா டிரஸ் போட்டாலும் அதுல ஒரு கண்ணியம் இருக்கும். ஆனா நீ …. என்று நிறுத்தியவர்,
“இப்பத்தான் கொஞ்சம் மாறியிருக்கா..! மறுபடியும் அவகூட கம்பேர் பண்ணி பேசுனா அவ்வளவுதான்.. என்று மனதில் எண்ணியபடி,
“உனக்குத் தான் தெரியுமே..உன்னோட டிரஸிங் சென்ஸ் பத்தி. அதான் உனக்கு சுடிதார் மட்டும் தான் போடணும்ன்னு சொன்னேன்..! என்றார்.
“அது பேஷன் அம்மா..! என்றாள்.
“எது போடுற ஜீன்ஸ்ல பாதி கிழிஞ்சு இருக்குறதா..? என்று அவர் கேட்க, முன்பு இருந்த தேஜுவாக இருந்தால் விதண்டாவாதம் பேசியிருப்பாள். ஆனால் இப்போது அப்படியில்லை.
“அப்ப கிழியாத ஜீன்ஸ் போட்டுக்கவா..? என்றாள்.
“ம்ம்..! உடலைக் காட்டாத பேஷனை நான் என்னைக்கும் வேண்டாம்ன்னு சொல்ல மாட்டேன்..! என்றார்.
“சூப்பர்ம்மா..! அண்ட் தேங்க்ஸ்ம்மா..! என்றாள்.
“நீயும் நல்ல பொண்ணு தான் தேஜு. நான் சொன்னேன் அப்படிங்கிறதுக்காக சுடிதார் தான போட்ட. எந்த வகையிலும் நீ என்னை மீறலை. உன்னோட வயசுக்கு இந்த துடுக்குத் தனம் எல்லாம் இல்லைன்னா தான் ஆச்சர்யம்..! என்றார்.
“அப்பறம் சுபா மட்டும் எப்படி இப்படி இருக்கா..? அவளுக்கு ஆசையே இருக்காதா..? என்று அவள் கேட்க, அந்த கேள்விக்கு பின்னால் இருந்த பதிலை யார் அறிவார்.

Advertisement