Advertisement

குடை 1:
நினைவு….
நகரத்தின் மிகப் பிரபலமான அந்த பள்ளியில்…பள்ளியின் ஆண்டு விழாவை ஒட்டி மாணவர்களுக்கு நடனம் மற்றும் நாடகம் ஆகியவற்றிற்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர் ஆசிரியர்கள்.
அனைத்து மாணவ,மாணவியரும் மிக ஆர்வமாக தங்கள் பயிற்சியை செய்து கொண்டிருக்க…மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அந்த குட்டி தேவதை மட்டும்…ஓரமாக அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் அன்னையும் அந்த பள்ளியில் ஒரு ஆசிரியர். அவர் மாணவிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்க.., அதைத்தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த குட்டி தேவதை.அவளுக்கும் ஆட வேண்டும் போல் இருந்தது.உட்கார்ந்த படியே அவர்கள் செய்யும் அனைத்தையும் செய்து பார்த்துக் கொண்டிருந்தாள்.இதற்கும் அவள் அம்மா பெரிய வகுப்பு மாணவிகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
மாணவிகள் அவர்கள் ஆடுவதை விடுத்து…அவர்களின் முன்னால் அமர்ந்து, ஆடிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த குட்டி தேவதையின் அழகில் மயங்கி….அவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் கவனம் நடனத்தில் இல்லாததை கவனித்த அந்த ஆசிரியர், என்னவென்று திரும்பிப் பார்க்க….அங்கே அவரின் பெண் செய்யும் சேட்டைகள் கண்ணில் விழுந்தது.
அவளின் அருகில் சென்றவர்…மெதுவாக அவளின் காதைப் பிடித்து திருகி…எத்தனை தடவை அம்மா சொல்லியிருக்கேன்..!இப்படி பண்ணக் கூடாதுன்னு..? என்று செல்லமாய் கடிந்து கொண்டார்.
“அம்மா..எனக்கும் ஆசையா இருக்கு..! என்றாள் மழலைக் குரலில்.
“நீ இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ணா ஆனதுக்கு அப்பறம்…நீயும் இதே மாதிரி டான்ஸ் ஆடலாம்…சரியா…? என்று புரிய வைத்துக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில்…அந்த பள்ளியின் மற்றொரு இடத்தில்….நாடகத்திற்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. நாடகத்திற்கான ஒத்திகை மற்றும் அதற்கான வசனங்களை ஒரு ஆசிரியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த வசனங்களை சொல்ல …சில மாணவர்களுக்கு நாக்கு குழற… கஷ்ட்டப்பட்டு மனப்பாடம் செய்து கொண்டிருந்தனர்.அங்கு அமர்ந்து அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த சுட்டிச் சிறுவன்.அவனது அன்னையும் அங்கு ஒரு ஆசிரியை.அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.
அவர்கள் செய்ததைப் போலவே..இவனும் கையைக் காலை ஆட்டி நடித்துக் கொண்டிருந்தான்.
“என்ன பண்ற..? என்று அவனின் அம்மா அவனை அதட்டும் வரை.
“ம்ம்மா..! வீட்டுக்கு போக நேரம் ஆச்சு…நீங்க எப்ப பிராக்டிசை முடிப்பிங்க..? எனக்குப் பசிக்குது…! என்றான்.
“இதோ இப்ப முடிஞ்சுடும் கண்ணா…! நம்ம சீக்கிரம் வீட்டுக்கு போய்டலாம்..! என்றபடி அவர் வேலையை அவர் தொடர…
“பசிக்குதா…! இந்தாங்க பிஸ்கட்..! என்று ஒரு கரம் நீட்ட..அவளை முறைத்துப் பார்த்தவன்,
“எனக்கு வேண்டாம்..! என்றான்.
அவள் தன்னுடைய அம்மாவை நிமிர்ந்து பார்க்க…அவரோ அருகில் இருந்த அவனின் அம்மாவைப் பார்த்து..என்ன மிஸ்..! உங்க பையனுக்கு,என் பொண்ணு பிஸ்கட் கொடுக்கறா…! வேண்டாம்ன்னு சொல்றான்..! என்றார்.
“அவன் அப்படித்தான் மிஸ்..! யார் எது குடுத்தாலும் வாங்க மாட்டான்.நான் சொன்னாலும் கேட்குறது இல்லை.எங்க மாமியார் அப்படியே பழக்கிட்டாங்க..! என்றார்.
“பரவாயில்லை மிஸ்..! பிராக்டிஸ் முடிஞ்சுடுச்சா..? என்றார்.
“இதோ..அவ்வளவுதான் மிஸ்.. இனி கிளம்புற வேலைதான்..!என்றபடி அவரும் கிளம்பினார்.
அந்த குட்டி தேவதை, அவளின் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு நடக்க, அந்த சுட்டிப் பையன் அவன் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.
இவள் அவனையே பார்க்க…அவனோ அவளை கண்டு கொள்ளாமல் கோபமாய் நடந்துகொண்டிருந்தான்.அவன் பசி அவனுக்குத் தானே தெரியும்.
“மிஸ்…! அந்த அண்ணா பேசமாட்டாங்களா..? என்று அவள் கேட்க…
“அவன் பசி அடங்குனாதான் இனி பேசுவாண்டா.. என்றார் அவரும்.
“என்ன மிஸ்..? டிராமா பிராக்டிஸ் எல்லாம் எப்படிப் போகுது..? என்றார்.
“நல்லா போகுது மிஸ்…! பெரிய பிள்ளைங்கள கணவன், மனைவியா நடிக்க வைக்க.., கொஞ்சம் யோசனையா இருக்கு…? என்றார்.
“டிராமா தானே மிஸ்…! என்றார்.
“இருந்தாலும் கொஞ்சம் யோசனையா தான் இருக்கு..! என்று அவர் சொல்ல…
“பேசாம உங்க பையனையும்,என் பொண்ணையும் நடிக்க வைக்கலாமா…? அவங்களுக்கு சொல்லிக் குடுக்குற  வேலை ரொம்ப சுலபம்.ஏன்னா உங்க பையன்..நீங்க சொல்லிக் குடுத்த வசனத்தை அப்படியே பேசுவான்.நானும் அவனை கவனிச்சுகிட்டு தான் இருந்தேன்.. என்றார்.
“நல்லா ஐடியா தான் மிஸ்…! ஆனா எங்க மாமியாருக்கு தெரிஞ்சா எதவாது சொல்லுவாங்களோன்னு பயமா இருக்கு..? என்றார் அவனின் அம்மா.
“சின்ன பிள்ளைங்க தானே மிஸ்…அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க..! நாம இவங்க ரெண்டு பேரையும் நடிக்க வைக்கலாம்… என்று அவர் உறுதியாய் சொல்ல…இன்னொருவரும் தலையை ஆட்டினார்.
அந்த குட்டி தேவதையும்,சுட்டிப் பையனும்….அந்த ஆண்டு அவர்கள் பள்ளியில் நடக்க இருந்த ஆண்டு விழாவின் நாடகத்தில் கணவன், மனைவியாக நடிக்க தங்கள் அம்மாக்கள் மூலே தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி ஆண்டு விழாவிற்கான நாளும் வந்தது.
கலை நிகழ்ச்சிகளில் உள்ள பிள்ளைகள்…ஒரே அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர்.
தத்தம் நபருக்கு உரிய கேரக்டருக்கு தகுந்தார் போன்று அவர்கள் வேஷமிட்டுக் கொண்டிருக்க….
குட்டி பட்டுச்சேலையில்..அழகாய் தயாராகி இருந்தாள் அந்த குட்டி தேவதை.அவளைப் பார்க்கவே அவ்வளவு அழகாய் இருந்தது.
மற்றொரு பக்கத்தில் அந்த பையன் தயாராகி இருந்தான்.வேஷ்டி சட்டையில் அவன் தோரணையாக இருந்தான்.
இருவரையும் பார்த்த அவர்களின் அம்மாக்களுக்கு உண்மையாகவே பிரம்மிப்பாக இருந்தது.அவ்வளவு அழகு, அவ்வளவு பொருத்தம்.
மேடையில் நாடக அரங்கேற்றத்தின் போதும்..அவர்களுக்கு உரிய கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்தனர்.அனைவரின் கண்களும் அவர்கள் மேல் இருக்க…
“இந்த சின்ன வயசில்.., இவ்வளவு திறமையா..? என்று எல்லோரும் பாராட்டித் தள்ளினர்.
இதெல்லாம் புரியாத வயசு அந்த குட்டி தேவதைக்கு. அந்த சுட்டிப் பையனுக்கும் தெளிவாகத் தெரியவில்லை. அனால் எல்லோரும் தன்னைப் பாராட்டுவது தெரிந்தது.
அந்த பாராட்டு தனக்கு அருகில் இருக்கும் இந்த தேவதையால் வந்தது என்று நம்பினான்.அவளைப் பார்த்து அவன் மனம் நிறைந்து சிரிக்க… அவளும் பதிலுக்கு தலையை ஆட்டி சிரித்தாள்.
அந்த குட்டி தேவதையின் சிரிப்பு…அந்த சுட்டிப் பையனின் மனதில் அப்படியே பதிந்தது.
அவன் கை கொடுக்க, அவளும் சந்தோஷமாக அவன் கைகளைப் பிடித்து குலுக்கினாள்.
இனி அந்த தேவதையின் வாழ்வும்,அந்த சுட்டிப் பையனின் வாழ்வும் எப்படி போகும் என்பதை கதையின் ஓட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இன்று:
மும்பை ரயில் நிலையம்..! அன்று மிகவும் கூட்ட நெரிசலாக இருந்தது. பயணிகள் ஒவ்வொருவரும் அவர்கள் செல்ல வேண்டிய ட்ரெயின் வருவதற்காக காத்திருந்தனர். சிலர் கிளம்ப தயாராக இருந்த ட்ரெயினைப் பிடிக்க..அரக்க பறக்க ஓடி வந்தனர்.
கூட்ட நெரிசலும், புரியாத பல பாஷைகளும் நமக்கு அந்நிய இடமோ என்று ஒரு நிமிடம் தோன்ற வைக்கும்.நமக்கு தான் ஹிந்தி என்றாலே ஆகாதே.
மும்பையில் இருந்து சென்னை செல்லும், சென்னை எக்ஸ்பிரஸ் கிளம்ப தயாராக இருந்தது.பலவித மனிதர்களும் ஏறிக் கொண்டிருந்தனர்.
அந்த சென்னை எக்ஸ்பிரஸில், படுக்கை வசதி கொண்ட இரண்டாம் நிலை  கோச்சில் அமர்ந்திருந்தாள் அஸ்வினி.அப்போது தான் ஏறியிருந்தாள். தன்னுடைய லக்கேஜை சரியாக வைத்தவள்… ஆசுவாசமாக அமர்ந்தாள்.
“எப்படியும் ட்ரெயினை விட்டுடுவேன்னு நினைச்சேன்..! நல்லவேளை வந்துட்டேன்..! என்று எண்ணியவளின் பெருமூச்சில், அப்படி ஒரு நிம்மதி.
இன்னமும் அங்கு யாரும் வரவில்லை.நாம மட்டும் தானோ..? என்று அவள் ஒரு நிமிடம் யோசிக்க…வரும் அவசரத்தில் நேம் லிஸ்ட்டையும் பார்க்கவில்லை.
“சரி யார் வந்தா என்ன..? வராட்டி நமக்கென்ன..? என்றபடி அவள் சாய்ந்து அமர்ந்தாள்.
அஸ்வினி- அவளுடைய வேலை இங்கு மும்பையில் தான்.பணி நிமித்தமாக சென்னையில் இருந்து இங்கு வந்தவள்…இன்று அந்த வேலையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
அவளாக வேலையை விடவில்லை.அவளுடைய அம்மாவின் கட்டளை அது.இனியும் இவள் மும்பையில் வேலை செய்வது சரிவராது என்று நினைத்தாரோ என்னவோ..?
அஸ்வினி தமிழ்நாட்டு பெண்களுக்கே உரிய உயரம்.அளவான உடல்வாகு. எப்போதும் புன்னகையுடன் இருக்கும் முகம், பால் நிறம், வடிவான முக அமைப்பு என எல்லாத் தகுதிகளும்,அழகும், அறிவும் அமையப் பெற்றவள்.
கோபம் என்றால் என்னவென்றே தெரியாது அவளுக்கு.ஆனால் அதையும் மீறி கோபம் வந்துவிட்டால்…அவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆக மாட்டாள்.எந்த ஒரு விஷயத்திலும் பிடிப்பு அவளுக்கு ஒரு முறை மட்டுமே. பிடித்து விட்டால் அதை எளிதில் மாற்றிக் கொள்ளும் ரகம் இல்லை.மொத்தத்தில் பூவாகவும் இருப்பாள்.புயலாகவும் இருப்பாள்.
அடர் கிரே கலரில் அவள் அணிந்திருந்த சுடிதார்…அவளுக்கு கொஞ்சம் எடுப்பாகவே இருந்தது.எப்போதும் ஜீன்ஸ் தான் விரும்பி அணிவது. ஆனால் இன்று ஊருக்கு செல்வதால் தான் சுடிதார்.இல்லை என்றால் அவள் அம்மாவிடம் யார் திட்டு வாங்குவது?
அவள் அம்மா அப்படி ஒன்றும், அதீத கண்டிப்பு கிடையாது.கண்டிக்கும் அளவிற்கு அஸ்வினி வைத்துக் கொள்ள மாட்டாள் என்பதே உண்மை.
அவள் தன் யோசனையில் இருக்க…பொத்தென்று ஒரு பேக் விழும் சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள்.ஆறடியில் ஒருவன் நின்றிருந்தான்.
அவளின் இருக்கைக்கு பக்கத்து இருக்கை அவனுக்கு.அவள் லேடிஸ் கம்பார்ட்மென்ட்டில் டிக்கெட் புக் செய்யவில்லை. எப்போதும் அவளுக்கு எல்லாருடனும் பயணம் செய்ய தான் பிடிக்கும்.ஆண்,பெண் பாகுபாடு அவள் பார்ப்பதில்லை.
அவனும் ஆசுவாசமாய் அமர…ஹாய்..! ஐயாம் அஸ்வினி..! என்றாள்.
“ஹாய்..! ஐயம் விகாஸ்..! என்றான் அவனும் பதிலுக்கு.
ஆறடியில்…பார்க்க அழகாய் இருந்தான்.அவன் முக அமைப்பே அவன் தமிழ்நாடு என்று சொல்லாமல் சொல்லியது.
“நீங்க சென்னையா..? என்றாள்.
“இல்லைங்க..! நான் ஊட்டி.சென்னையில் ஒரு வேலை இருக்கு. முடிச்சுட்டு ஊட்டி கிளம்பனும்..! என்றான்.
“ஓகே..! என்றபடி அவள் தன் கையில் இருந்த செல்போனைப் பார்க்க… அவனுக்கும் கொஞ்சம் அமைதி தேவைப்பட்டது போலும். அவனும் அப்படியே அமர்ந்தான்.
“வேற யாராவது வராங்களா..? என்று அவன் கேட்டு முடிப்பதற்கும் ஒருவன் ஓடி வந்து ஏறுவதற்கும் சரியாய் இருந்தது.வெளியில் லேசாக மழை தூர ஆரம்பித்திருந்தது.அதனால் ஏறியவன் கொஞ்சம் நனைந்து இருந்தான்.
எப்படியோ ட்ரெயினைப் பிடித்துவிட்டான்.ஏறிய பின்பும் சீட்டிற்கு செல்லாமல் படியின் அருகிலேயே நின்று…அந்த சாரல் மழையை வெறித்துக் கொண்டிருந்தான்.
அவன் காலில் இருந்த ஷூவின் பிராண்டும், அவன் கையில் கட்டியிருந்த வாட்சின் பிராண்டும்..அவன் செல்வ நிலையைச் சொல்லியது.
அவன் முகம் இருண்டு கிடக்க…கோபத்தில் நரம்புகள் புடைத்துக் கிடந்தது. சொல்ல முடியாத வெறுப்பு அவன் முகத்தில் மண்டிக் கிடக்க… அந்த ட்ரெயின் நகரும் வரை அங்கேயே இருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல்…தன்னை ஒருவாறு நிலைப்படுத்தியவன், மெதுவாக நகர்ந்து தனது இருக்கையை நோக்கி சென்றான்.
அங்கே அஸ்வினி அமர்ந்திருப்பதோ, அவளுக்கு எதிரில் விகாஸ் இருப்பதோ அவன் கண்களுக்குத் தெரியவே இல்லை.
விகாஸ் ஜன்னலை ஒட்டி அமரவில்லை.அதனால் அந்த இடத்தை அவன் எடுத்துக் கொண்டான்.அஸ்வினி அவன் வந்ததையே கவனிக்கவில்லை
அவள் செல்லில் யாருக்கோ படு சின்சியராக மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்.அவள் அனுப்பும் மெசேஜ்ஜிற்கு தக்க, அவளின் முக பாவனைகள் மாறிக் கொண்டே இருந்தது.
விகாஷிற்கு அவளை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.ஆனால் சட்டென்று நியாபகம் வரவில்லை. நினைவடுக்கில் அவளைத் தேடிக் கொண்டிருந்ததில் அவனும் வந்தவனை கவனிக்கவில்லை.
தனது சாட்டிங்க்ஸ் அனைத்தையும் முடித்துவிட்டு நிமிர்ந்தாள் அஸ்வினி.அப்போது தான் கவனித்தான் அவனை.அவள் அப்படி ஒன்றும் வியப்படையவில்லை.அந்த சீட்டிற்கு உரியவன் என்று நினைத்தாள் அவ்வளவே.
பனைமரத்தின் வளர்த்தியில் பாதி இருந்தான்.கருப்பு தான்.ஆனால் அதீத கருப்பு இல்லை.பெண்களால் விரும்பப்படும் கருப்பு.அழகுதான், ஆனால் சிரித்தால் மட்டுமே. அவன் முகம் தான் அங்கு பாறையாய் இருக்கிறதே.இதில் எங்கிருந்து சிரிப்பைக் காண்பது.என்று அவனைப் பற்றிய ஆராய்ச்சியில் அவள் இருக்க….விகாஸ் அந்த ஆராய்ச்சியைக் கலைத்தான்.
“ஹலோ..! நான் விகாஸ்…! நீங்க..! என்றான் சம்பிரதாயமாய்.
அவன் பதில் பேசாமல் அவனை முறைக்க…
“ஹாய்..! ஐயாம் அஸ்வினி..! என்றாள் அவளும் அவள் பங்குக்கு.
அவளுக்கும் அவன் பதில் சொல்லவில்லை.அவன் அமைதியைப் பார்த்து இருவரும் தப்பாக எடை போடவில்லை.அவன் குணமே அப்படித்தான் போல என்று தான் நினைத்தனர்.
அவர்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தவன்…ஜன்னல் புறம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க…, விகாசிற்கு ஒரு மாதிரி ஆனது.ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
“அஸ்வினி..! எனக்கு உங்களை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கு..! என்றான் விகாஸ்.
அவள் பதில் சொல்லுவதற்கு முன்பு விகாஸை முறைத்தான் அவன்.ஆனால் அவள் அப்படியெல்லாம் நினைக்கவில்லை போல.
“அப்படியா…? எங்க பார்த்திருப்பிங்க..? தெரியலையே..? என்றாள்.
“நானும் அதைத்தான் இவ்வளவு நேரமா யோசிக்கிறேன்..! ஆனா நியாபகத்துக்கு வரலை..! என்றான்.
“சரி விடுங்க விகாஸ். நியாபகம் வரும் போது அது தானா வரட்டும்…! என்று சொல்லி லேசாக சிரிக்க..
“யப்பா சாமி..! சிரிக்கறப்போ எவ்வளவு அழகா இருக்கா..? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் விகாஸ்.
“விகாஸ் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..! என்றாள் அவளும் சிரித்துக் கொண்டே.
“நிஜமாவா…? என்று அவன் கேட்க..அவன் கேட்ட விதம் கூட அழகாய் தெரிந்தது அஸ்வினிக்கு.
“எஸ்…நிஜமா செம்மையா இருக்கீங்க..அப்படியே விளம்பர மாடல் மாதிரி..! என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தான்.சிரிக்கும் போது அவன் அழகு கூடித் தெரிய…அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“விளம்பர மாடல் மாதிரி என்ன..? நான் விளம்பர மாடலே தான்..! என்றான் விகாஸ்.
“சீரியஸ்லி.. என்றாள் ஆச்சர்யம் தாங்காமல்.
“ஹலோ ஹலோ…! ஓவர் இமாஜின் பண்ணாதிங்க.நான் இப்ப தான் சின்ன சின்ன விளம்பரங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன்.நான் அவ்வளவு பெரிய அப்பா டக்கர் எல்லாம் கிடையாது..! என்றான்.
அவன் நினைத்திருந்தால்…தான் ஒரு மாடல் என்று சொல்லி..அவளை கவர்ந்திருக்க முடியும்.ஆனால் அவன் அப்படி செய்யாமல்…உண்மையைப் பேசியதில்..அவனின் மீதான மதிப்பு அஸ்வினியின் மனதில் உயர்ந்தது.
“இப்போ சின்ன மாடலா இருந்தாலும், சீக்கிரம் பெரிய ஆளா வருவிங்க..! என்றாள்.
“தேங்க்ஸ் அஸ்வினி..! உங்க வாக்கு பலிக்கட்டும்..! என்றான்.
இவர்களின் சம்பாஷனை நடந்து கொண்டிருக்க…வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் காதுகளில்., இவர்கள் பேசுவது விழுந்து வைக்க…தலையை மட்டும் திருப்பவில்லை.
அவன் தன்னை விளம்பர மாடல் என்று சொன்னவுடன் அஸ்வினி அவனுடன் அதிகம் பேசுவது போல் பட்டது அவனுக்கு.நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டான்.
அவனுக்கு யாரின் மீதும் நம்பிக்கை இல்லை.சிரித்து பேசுபவர்கள் எல்லாம் நயவஞ்சகர்கள் என்ற பாடம் தான் அவன் வாழ்க்கையில் கற்றது.
ஒட்டி உறவாடிய உறவுகள்…வெட்டி வீழ்த்திய கதைகளை எல்லாம் அவன் சிறிது நாட்களுக்கு முன் தான் பார்த்திருந்தான்.
நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையை அவன் அறவே வெறுத்தான். வாழ்க்கையில் யாரையும், எந்த சூழ்நிலையிலும் எதிர்பார்த்து வாழும் அவசியம் அவனுக்கு இருந்ததில்லை.ஆனால் தன்னை சுற்றி வேயப்பட்ட மாய வலையை அறியாமல்,அதில் சிக்கி சின்னா பின்னமாகியிருந்தான்.
மற்ற எந்த விஷயமானாலும் அவனை ஜெயிக்க முடியாது.ஆனால் அன்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அவனை வீழ்த்தியிருந்தனர். அதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தன் கண்களில் விழும் அனைவரும் பொய்.அவர்கள் பேசுவது பொய், பழகுவது பொய் என்ற நிலைமைக்கு வந்திருந்தான்.
கோடிக்கணக்கில் இருந்த சொத்துக்கள்…சில நிமிடங்களில் கைமாறி இருந்தது.அவனே தான் கொடுத்தான்.தன்னுடைய முட்டாள் தனத்திற்கு விலையாக அவனே தான் கொடுத்தான்.
அப்பாவின் முன் கூனிக் குறுகி நின்றான்.இதற்கும் அவர் அவனை ஒன்றும் சொல்லவில்லை.ஆனால் அவனால் அப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.நடந்ததை மறக்க முடியாமல், அதை நினைக்கவும் முடியாமல்…இதோ இன்று அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கச் செல்கிறான்.
எங்கிருந்து வந்தானோ…அங்கேயே செல்கிறான்.ஆரம்பித்த இடத்திற்கே செல்கிறான்.அவனுக்கு இருக்கும் வசதி வாய்ப்பிற்கு ரயிலில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் அவனுக்கில்லை.ஆனால் நிம்மதி தேவைப்பட்டது.அது சில மணி நேரங்களில் முடிந்து போவதை அவன் விரும்பவில்லை.ஒரு இரண்டு நாட்களாவது நீடிக்க வேண்டும் என்று எண்ணினான்.அதற்காகவே இந்த ரயில் பயணம்.
தொழில் வட்டாரத்தில் அவனை அனைவரும் இரும்புக் குதிரை என்று அழைத்தனர்.அவன் தான், அந்த குதிரை தான் மித்ரன் என்று அழைக்கப்படும் ஜீவ மித்ரன்.

Advertisement