Advertisement

“என்ன ரேகா..? நீயும் இப்படி பிடிவாதமா பேசிகிட்டு..! நான் தான் பிஸ்னஸ்ல நம்பர் ஒன். நீ வேலைக்கு போகணும்ன்னு என்ன அவசியம். ராணி மாதிரி வீட்ல இரு..! என்றார் காதலுடன்.
“எனக்கு சுயத்தோட இருக்கனும்ன்னு தான் ஆசை.. என்றார் ரேகா.
“அப்போ, உனக்கு குடும்பம் முக்கியம் இல்லை, உன் பிள்ளைங்க முக்கியம் இல்லை..! என்றார் ராணி.
“எல்லாமே முக்கியம் தான். என்னோட சுயமரியாதை ரொம்ப முக்கியம் அத்தை..அதை நான் யாருக்காகவும் விடத் தயரா இல்லை. மித்ரனுக்கு நீங்க ரொம்ப செல்லம் குடுக்குறிங்க..? இனி அவன் விஷயத்துல நீங்க தலையிடாதிங்க..! என்றார் ரேகா.
“அவன் என் பேரன்..! என்றார் ராணி.
“எனக்கு மகன்..! என்றார் ரேகா.
“இதென்ன இப்படி பேசிட்டு இருக்கீங்க..? ரேகா உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா..? நீ வேலைக்கு போக வேண்டாம்…! என்றார் நேசனும்.
“நீங்க தான் எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்திங்க. இப்ப நீங்களும் இப்படி சொல்றிங்க..? என்று ரேகா கண்கலங்க, அதைப் பார்த்த நேசன், ஒரு நிமிடம் துடித்து விட்டார்.
“வீட்ல இருந்தா, இவங்க பேசியே கொல்றாங்க..! கொஞ்சம் மன நிம்மதிக்காகத் தான் வேலைக்கே போனேன். இப்போ அதுவும் உங்களுக்குப் பொறுக்கலையா..? என்று வெடித்து அழுது விட்டார் ரேகா.
“என்ன..? என் பையனையே எதிர்த்து பேசிட்டு இருக்க..? என்று ராணி எகிற,
“நீங்க என்னைக்காவது எங்க மாமாவை மதிச்சு இருக்கிங்களா..? இல்ல ஒரு நல்ல பொண்டாட்டியா நடந்திருக்கிங்களா..? உங்க பேச்சு தாங்காம தான் அவர் போய் சேர்ந்துட்டார். அதுக்கும் என் பையனைத் தான் குறை சொன்னிங்க. நீங்க என்னை சொல்றிங்களா..? பிரச்சனை என்கிட்டே இல்லை. உங்க குணத்துல தான் இருக்கு… என்றார் ரேகா.
“பார்த்தியாடா உன் பொண்டாட்டிய..?எப்படி பேசுறான்னு பார்த்ததான…? நான் பிறந்த பிறப்பென்ன..? என் குடும்ப வசதி என்ன..? என்னைப் பார்த்து எப்படி பேசுறான்னு பாரு..! என்று ராணி ஒரு பக்கம் ஒப்பாரி வைக்க,
அதைப் பார்த்த நேசன், ரேகாவிடம் திரும்பி…
“நீ கொஞ்சம் பொறுத்து போகக் கூடாதா ரேகா..? பெரியவங்கன்னு பார்க்காம இப்படிதான் வார்த்தையை விடுவியா..? என்று கோபம் கொள்ள,
“எத்தனை வருஷம் மண்ணு மாதிரி இருக்க முடியும். உங்க அளவுக்கு நான் வசதியான வீட்ல பிறக்கலை தான். ஆனா தன்மானம்ன்னு ஒன்னு இருக்கு. அது எனக்கு நிறையே இருக்கு..! என்றார் ரேகா.
“இத்தனை வருஷமா, உன்னோட தன்மானம் எங்கடி போயிருந்தது..? என்று ராணி சீற,
“அது என்னோட அன்புக்காக, காதலுக்காக மழுங்கிப் போயிருந்தது. ஆனா இப்போ நான் மனைவி மட்டும் இல்லை. ரெண்டு பசங்களுக்கு அம்மா. இனியும் அப்படியே இருந்தா, என்னோட சுயமே தொலைஞ்சுடும்..! விட்டுக் குடுத்து போறதுங்கறது, ரெண்டு பக்கமும் நடக்கணும். ஒருத்தரே அப்படி பொறுத்து போய்கிட்டு இருந்தா அது வாழ்க்கை கிடையாது.. என்றார் ரேகா.
“ஹோ..புதுமை பேசுறிங்களோ..? நான் அந்த காலத்துலயே உனக்கு மேல படிச்சவடி.. என்று ராணியம்மாள் சொல்ல,
“எவ்வளவு படிச்சு என்ன செய்ய..? புத்தி நல்லதை யோசிக்கலையே..? என்றார் ரேகா, விரக்தியுடன்.
“இங்க பாருடா…இவ பேசுறதை..! நான் நல்லதை யோசிக்கலையா..? உங்களுக்கு நல்லதை செய்யலையா..? நான் உன்னோட நல்லதுக்காகத் தானே சொன்னேன். நாளைக்கு ஒருத்தர்,உன்னை ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதுன்னு தான சொன்னேன். அதுக்கு எனக்கு நல்ல பேரு..! என்று நேசனை இழுத்து பஞ்சாயத்து பண்ணிவிட்டார் ராணி.
“என்ன ரேகா..? நானும் பார்த்துட்டே இருக்கேன். நீ ரொம்ப பேசுற..! பெரியவங்களை எப்படி பேசனும்ன்னு தெரியாது. உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணது தான் , நான் செஞ்ச முதல் தப்பு..! வீட்டுக்கு வந்தா, மனுஷனுக்கு நிம்மதி இருக்குதா..? என்றபடி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார்.
“உன்னை லவ் பண்ணி, கல்யாணம் பண்ணினது தான் தப்பு.. என்ற வார்த்தைகள் ரேகாவின் மனதிற்குள் ஆழமாய் புதைய, அவர் மனதிற்குள் ஒரு திடமான முடிவை எடுத்தார்.
நேசன் அறைக்குள் சென்று விட,
“கடைசியா, நீங்க நினைச்சதை சாதிக்க, ஒரு டிராமாவை ஆரம்பிச்சுட்டிங்க போல..? என்றார் ரேகா.
“நான் என்ன டிராமா ஆரம்பிச்சுருக்கேன்..! என்றார் ராணி, தெரியாததைப் போல்.
“சும்மா, நடிக்காதிங்க அத்தை. உங்களுக்கு நாங்க பிரியனும். உங்க பையனுக்கு பணக்கார பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்கணும். அது தான உங்க ஆசை. நீங்களும் எப்படி எப்படியோ முயற்சி பண்ணி பாத்திங்க. இப்ப முடியலைன்னு சொன்னதும், இப்படி ஒரு டிராக்கை ஆரம்பிச்சிருக்கிங்க..? என்றார் ரேகா.
“தேவையில்லாம பேசாத ரேகா..? என்றார் ராணி.
“மித்ரனுக்கு பத்து வயசு ஆச்சு, சின்னவனுக்கு ஆறு வயசு முடியப் போகுது. இப்ப போய், இந்த எண்ணம் உங்களுக்கு வந்திருக்கு பாருங்க….இதுல இருந்து தெரியலை, உங்க புத்தி..! என்றார் ரேகா.
“தெரிஞ்சா சரி. நான் சொல்றபடி இருந்தா மட்டும் தான், இந்த வீட்ல உன்னால இருக்க முடியும். இல்லைன்னா இன்னொருத்தியை கொண்டுட்டு வந்தாலும் ஆச்சர்யமில்லை.. என்றார் ராணியம்மாள் சாதரணமாக.
“அது இந்த ஜென்மத்துல நடக்காது..! என்றார் ரேகா.
“நடத்திக் காட்டுவா இந்த ராணி..! என்றார்.
“எத்தனை வருஷம் ஆனாலும், என் புருஷன் இன்னொரு கல்யாணம் பண்ணவே மாட்டாரு..! என்றார் ரேகா.
“நீயிருக்க வரைக்கும் பண்ண மாட்டான் தான்..! என்றார் ராணி.
“நான் இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி, அவருக்கு அந்த எண்ணமே வராது..! என்றார் ரேகா.
“என்னடி திமிரா..?
“ஆமா..! திமிர் தான். என் புருஷன் மேல நான் வச்சிருக்க நம்பிக்கை, திமிரா தெரிஞ்சா… கண்டிப்பா இது திமிர் தான்..! என்றார் ரேகா.
“பார்க்கத்தான போற..? என்றபடி ராணி செல்ல,
“இவ்வளவு நேரம் இருந்த தைரியம் எல்லாம் , உடனே வடிந்து போய்விட்டது ரேகாவிற்கு. சொந்த தாய்மாமனின் மனைவி, இப்படி ஜென்ம விரோதி போல பேசி செல்வது, அவருக்கு கண்ணீரை வர வழைத்தது.
அதற்கு பிறகு வந்த நாட்கள், மிக கொடுமையான நாட்கள் என்று தான் சொல்ல வேண்டும் ரேகாவின் வாழ்வில். ராணியால் அல்ல. அவருடைய கணவனால்.
நேசன், முழு நேரமும் தொழிலில் முடங்கி விட, மித்ரன் பாட்டியுடன் சேர்ந்து ரேகாவை ஒதுக்க, அவருடைய ஒரே ஆறுதல் விகாஸ் மட்டுமே. விகாசும், மித்ரனும் படித்த பள்ளியில் தான் ரேகாவும் வேலை செய்தார்.
சிவகாமிக்கு உடம்பு சரியில்லை என்று, அவரைப் பார்க்க போன ரேகா…கொஞ்ச நாட்கள் அங்கேயே தங்கி விட, அந்த பிரிவை..நிரந்த பிரிவாக மாற்றி விட்டார் ராணி.
எந்த சூழ்நிலையிலும், மித்ரனை மட்டும் ரேகாவிடம் விடவில்லை. விகாஸ் ரேகாவிடமும், மித்ரன் தந்தையிடமும் இருந்தனர்.
ராணி ஏற்படுத்திய ஒரு பிரச்சனையில், கணவன்,மனைவி இருவரும் நிரந்தரமாகப் பிரிந்தனர். இருவரும் இருவேறு துருவங்கள் ஆகினர். விகாஸ் ஒரு துருவமாகிப் போனான். மித்ரன் மறு துருவமாகிப் போனான். மித்னுக்கு விவரம் தெரிந்த வயது. ஆனாலும்  பத்து வயதிற்கு உரிய விவரம், அவனுக்குப் பத்தவில்லை.
மனதின் மூலையில், ரேகாவின் மேல் அவன் கொண்ட பாசம், ராணியால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட பாசம், இருந்து கொண்டே தான் இருந்தது.
அந்த பாசம் தான், இத்தனை வருடங்கள் கழித்தும் அவனை, ரேகாவை தேடி செல்ல வைத்தது.
பழைய நியாபகங்களில், மனைவி ரேகாவின் நினைப்பில் கண்களின் ஓரம் நீர்த்தது நேசனுக்கு. அவர் நினைத்திருந்தால், எப்போதோ அவரைத் தேடி சென்றிருக்க முடியும். அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்திருக்க முடியும்.
ஆனால் நேசன் அப்படி செய்யவில்லை. அவர் செய்த தவறுக்கு, அவரே அவருக்கு தண்டனை கொடுத்துக் கொண்டார் பிரிவின் மூலம்.
அது, தன் மேல் வைத்திருக்கும் பயமும்,பாசமும் என்று நினைத்துக் கொண்டிருப்பது ராணியம்மாளின் அறியாமை.
எவ்வளவு முயன்றும், முயற்சி செய்தும், நேசனுக்கு இன்னொரு திருமணத்தை அவரால் நடத்த முடியவில்லை. அந்த ஒரு விஷயத்தில் நேசன் பிடிவாதமாய் இருந்து விட்டார். இந்த பிடிவாதத்தை, அவர் வாழ்க்கையை வாழ்வதில் காட்டியிருந்தால், இப்படி தனி மரமாக நிற்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.
காலம் கடந்து யோசிக்கும் எந்த செயலுக்கும் பலன் இல்லை, என்பதை உணர்ந்து கொண்டார். இருந்தாலும் ரேகா எப்படி இருக்கிறார் என்ற எண்ணம், அவருக்கு உள்ளே கனன்று கொண்டே இருந்தது.
அந்த எண்ணம், மித்ரனின் வடிவில் முழுமை பெரும் என்று அவர் எண்ணவில்லை.
“மித்ரன் ரேகாவை போய், சந்தித்திருப்பானா…? ரேகாவுக்கு மித்ரனை அடையாளம் தெரிந்திருக்குமா..? எப்படி இருக்கிறாள்..? என்ற எண்ணங்கள் அவரை வாட்டி, வதைத்தது.
இத்தனை நாட்கள் வெளிப்படுத்தாத எண்ணங்கள், இப்போது ஒவ்வொன்றாய் வெளியேறத் தொடங்கியது.
 

Advertisement