Advertisement

 
குடை 16:
அங்கே மும்பையில், தன்னுடைய வீட்டில் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தார் ராணியம்மாள். அவரின் முன் நேசன் அமைதியாக அமர்த்திருந்தார்.
“இவனை இத்தனை வருஷம், பாராட்டி,சீராட்டி வளர்த்து என்ன பிரையோஜனம். இன்னைக்கு அந்த கழுதையைத் தேடி போய்ட்டான். நான் பார்த்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்? கல்யாணம் பண்ணி அவகூட ஒழுங்கா இருப்பான்னு நினைச்சேன். ஆனா அந்த ஆசையிலையும் மண்ணை அள்ளி போட்டுட்டான்.  என்னால ஒரு பொண்ணு வாழ்க்கையும் கெட்டுப் போய்டுச்சு..!” என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.
அம்மாவின் பேச்சில் நேசனுக்கு உடன்பாடு சுத்தமாக இல்லை என்றாலும், மித்ரனும் இப்படி செய்துவிட்டு போன நிலையில், தானும் அவரை பேசுவது அதிகப்படி என்று நினைத்து தான் இத்தனை நாள் அமைதி காத்தார்.
“நான் பேசிட்டே இருக்கேன்..! நீ இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..?” என்றார் நேசனைப் பார்த்து.
“யாரோ ஒரு பொண்ணு வாழ்க்கையைப் பத்தி யோசிக்கிற நீங்க, என்னோட வாழ்க்கையை பத்தியும் யோசிக்கலை, என் பையனோட வாழ்க்கையைப் பத்தியும் யோசிக்கலை..!” என்றார் நேசன். அவரையும் மீறி வார்த்தைகள் வந்து விட்டிருந்தது.
“நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்ன்னு நினைச்சது என் தப்பா..?” என்றார் ராணியம்மாள்.
“நான் உங்களைத் தப்பு சொல்லலை. நீங்க நல்லதுன்னு நினைக்கிறது, எங்களுக்கு நல்லதா அமையலைன்னு சொல்றேன்..!” என்றார்.
“சபாஷ்..! என்னையவே எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்ட நேசா..?” என்று ராணியம்மாள் குத்திப் பேச,
“என் வாழ்க்கைக்கு தான் பேசலை. ஆனா, இப்போ என் பையன் வாழ்க்கைக்காக பேச வேண்டிய இடத்துல நான் இருக்கேன். தொழில்ல எவ்வளவோ சுதந்திரமான முடிவுகளை அவன் எடுத்திருக்கான். அதெல்லாம் அவனுக்கு வெற்றியை மட்டும் தான் கொடுத்திருக்கு. சொந்த வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்தான். நீங்க தான் அவனுக்கு செக் வச்சு, அவனுக்கு மேரேஜ் பண்ணிங்க. பொண்ணும் அவனுக்கு பிடிக்கலை. அவளோட நடவடிக்கையும் அவனுக்குப் பிடிக்கலை.அதான் டைவேர்ஸ் குடுத்துட்டான். இதுல அவனை எப்படி குறை சொல்ல முடியும்..?” என்றார் நேசன்.
ராணியம்மாளுக்கு, அவனிடம் வைத்த கட்டளை நியாபகத்துக்கு வர, அமைதியானார். ஆனால் மனம் அமைதியாகவில்லை.
“அதுக்காக உடனே அவளைத் தேடி போகனுமா..? அவனா போனானா..? இல்லை நீயே அனுப்பி வச்சியா..?” என்றார்.
மனதில் இருந்த வேதனைகளை எல்லாம் முகத்தில் கொண்டு வந்து நிறுத்தியவர்,
“அவன் அம்மாவை அவன் தேடித் போனதில் என்ன தப்பு..?” என்றார்.
“அவ எனக்குப் பிடிக்காதவ..!” என்றார் ராணி.
“அதுக்காக என் வாழ்க்கை மாதிரி, அவன் வாழ்க்கையும் வீணாக வேண்டாம்..!” என்றார் நேசன்.
“அப்போ, நான் செய்றது தப்பு.அவன் செய்றது சரி. அப்படித்தான..?” என்றார்.
“இதுல தப்பு, சரி அப்படிங்கிற வார்த்தைக்கு இடமில்லை. நான் தான் மனைவியைத் தொலைச்சுட்டேன். இனியாவது அவன் அம்மாவைத் தொலைக்காம இருக்கணும். அது தான் எனக்கு வேணும்..!” என்றார்.
“உனக்கும் பொண்டாட்டி பாசம் வந்திருச்சு. நீயும் கூட போ. எனக்கு யாரும் வேண்டாம்…!” என்று ஆங்காரமாய் கத்தினார்.
“நான் போகணும்ன்னு நினைச்சிருந்தா எப்போவோ போயிருப்பேன். அப்படி போகாதது தான் தப்பு. இப்போ என் பையன் அந்த முடிவை எடுத்துட்டான்.” என்றார் பெருமையாக.
அவர் பேச,பேச ராணியம்மாளுக்கு கோபமாய் வந்தது. அவர் மனதில் இருந்த வெறுப்பு, காலம் கடந்தும் கொஞ்சம் கூட மாறவில்லை. அப்படியே இருந்தது. அது ரேகாவின் மேலும், அவர் குடும்பத்தின் மேலும்.
நேசனுக்கு தன்னுடைய இளமைக் காலம் நியாபகத்திற்கு வந்தது. அவர் தொலைத்த சந்தோஷங்கள், வாழ்க்கை என எல்லாமே அணிவகுத்து நின்றது.
ராணியம்மாள்  வசதியான வீட்டில் பிறந்தவர். அவருடைய கணவர் கொஞ்சம் நிறம் கம்மி. பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க மனம் முடித்து, பின் கணவருடன் ஒட்டுதல் இல்லாமல் வாழ்ந்தார்.
கணவரே ஆகாது என்ற பட்சத்தில், அவருடைய சொந்தங்களையும் ஆகவில்லை. அவருடைய கணவரின் உடன் பிறந்த தங்கை தான் சிவகாமி. அவரையும் ராணியம்மாளுக்கு எப்போதும் ஆகாது. ஆனால் அவருடைய கணவருக்குத் தங்கை என்றால் அப்படி ஒரு பாசம்.
அந்த பாசத்தின் வெளிப்பாடு, தங்கையின் மகளை,தன்னுடைய மகன் நேசனுக்கு திருமணம் முடிக்கும் அளவிற்கு வந்தது.
ராணியம்மாளுக்கோ, சிவகாமியே ஆகாது. அவருடைய பெண் மட்டும் எப்படி ஆவாள்..?
முதலில் இருந்தே ரேகாவை வெறுக்கத் தொடங்கினார். ஆனால் கணவரின் உறுதிக்கு முன்னால், ராணி கொஞ்சம் பிடிமானம் அற்றுப் போனார்.
நேசனுக்கும், ரேகாவைப் பிடித்திருக்க, இருவரும் காதல் வானில் சிறகடித்தனர். எப்படி இருந்தாலும் நேசனுக்கு அவருடைய அம்மா சொல்லே வேதவாக்கு. அளவுக்கு மீறிய பாசம் அம்மாவின் மேல். அவர் சொல் கேட்டு, தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு, கண்மூடித்தனமான பாசம்.
ரேகாவை கரம் பிடித்து, வாழ்க்கையைத் தொடங்கிய நேசனுக்கு அனுதினமும் போராட்டம் என்ற ரீதியில் சென்றது வாழ்க்கை. இதற்கும் ரேகா, மாமியாரை எதிர்த்துப் பேசியது கிடையாது. ஆனால் பேசுகிறாள் என்பதை போன்ற பிம்பம் காட்டப்பட்டது.
இவ்வளவு சண்டையிலும், தாய்மாமன் ஆதரவு இருக்க, வாழ்க்கையை அதன் போக்கில் வாழத் தொடங்கினார் ரேகா. அவர்களின் வாழ்விற்கு சாட்சியாக முதலில் கரு தரித்தவன் தான் ஜீவ மித்ரன்.
வீட்டிற்கு மூத்த பிள்ளை என்பதால், அனைவருக்கும் செல்லமாகிப் போனான் ஜீவ மித்ரன். அவன் வளர்ப்பிலும் பாட்டியின் ஆதிக்கமே இருக்க, அந்த அறியாத வயதில் அவன் முழுக்க முழுக்க, பாட்டியின் பேரனாக மட்டுமே இருந்தான்.
சிறு வயதில், கண்டிப்பவர்களைக் காட்டிலும், செல்லம் கொடுப்பவர்கள் நல்லவர்களாகத் தெரிவார்கள் பிள்ளைகளின் கண்களுக்கு. அந்த விஷயம் மித்ரனின் வாழ்வில் உண்மையாகிப் போனது.
ரேகாவிடம் இருந்து மித்ரன் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினான். அவனுக்கும், பாட்டிக்குமான பிணைப்பு அதிகமாகிக் கொண்டே போனது.
இதற்கெல்லாம் சேர்த்து அச்சாரமாய், ரேகா இரண்டாம் முறையாக கருத்தரிக்க, மித்ரன்.. முழுவதும் ராணிப் பாட்டியின் வசமாகிப் போனான். இரண்டாவது பிள்ளை வயிற்றில் இருக்கும் காலத்தில், ராணியின் கணவர் இறந்துவிட, அதுவே அவருக்கு ஒரு காரணம் கிடைத்ததைப் போன்று ஆனது.
கருத்தரித்த நேரம், தன்னுடைய கணவரை காவு வாங்கி விட்டது என, அவர் அனுதினமும் ரேகாவை கரித்துக் கொட்ட, வாழ்வே சூனியமாகிப் போனது ரேகாவிற்கு.
இரண்டாவதும் பையனாகப் பிறக்க, அவன் ரேகாவை போல் அழகாக இருந்தான். ஏனோ அவரைப் போல் இருந்ததால் விகாஸை அந்த வயதிலேயே ராணிக்கு பிடிக்காமல் போனது. அவனும் தன் மகனின் வாரிசு தான் என்பதை மறந்து போனார்.
நேசன் முழுநேர தொழிலில் இறங்கிவிட, அங்கு குடும்பத்திற்கும், காதலுக்குமான நேரம் குறைந்தது. இதுவே ராணியம்மாளுக்கு வசதியாகிப் போனது.
அவரின் பேச்சில் இருந்து தப்பிக்க, தனக்கு பிடித்த வேலைக்கு செல்ல ஆரம்பித்தார் ரேகா.
“இங்க என்ன ஒன்னுமில்லாமையா இருக்கு. நீ வேலைக்கு போய் தான் இந்த வீட்டு அடுப்பு எறிய போகுதா..? என் பையன் மானத்தை வாங்குறதுக்காகவே வேலைக்கு போறா..? பஞ்சத்துக்கு பிறந்தவ அப்படித்தான இருப்பா..?” என்ற ராணியின் பேச்சுக்கள் அதிகமாகத் தொடங்கியது.
மகளின் வாழ்க்கையைப் பார்த்து, சிவகாமிக்கு மனம் வெம்பிப் போனது. அண்ணன் இல்லாத வீட்டில் அவருடைய பேச்சு எப்படி எடுபடும்..?
இப்படியே சென்ற நாட்கள், ஒரு நாள் பூதாகரமாக மாறியது.
“இங்க பாரு நேசா..! உன் பொண்டாட்டி வேலைக்கு போறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. நமக்கு இருக்குற வசதிக்கு, இவ இப்படி வேலைக்கு போகணும்ன்னு என்ன அவசியம்..?” என்றார்.
“அவளுக்கு பிடிச்சிருக்கு, அவ போறா. விடுங்கம்மா..!” என்றார் நேசன்.
“இந்த குடும்பத்துக்கு சரின்னு படாத எதையும் அவ செய்ய கூடாது. அப்படி இருந்தா தான், எனக்கு மருமகளா, உனக்கு பொண்டாட்டியா இந்த வீட்ல இருக்க முடியும்..!” என்றார் ராணி.
“என்னால முடியாது. நான் என்ன அடிமையா..? எத்தனை வருஷத்துக்கு நானும் இப்படியே அமைதியா போறது..!” என்று ரேகாவும் வெடித்தார்.
“புருஷன், பிள்ளைங்களைப் பார்க்கறதை விட என்ன வேலை..?” என்றார் ராணி.
“அவங்களையும் பார்த்துக்குறேன். உங்களையும் நல்லா தான பார்த்துக்கறேன்..! உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செஞ்சு வச்சுட்டு தான வேலைக்கு போறேன். இதுல என்ன தப்பு..!” என்றார்  ரேகா.
“வேண்டாம்ன்னா விட்டுடு..!” என்றார் ராணி கட்டளையாய்.
“முடியாது..!” என்றார் ரேகா, முதன் முறையாய்.

Advertisement