Advertisement

“கேலி பேசுற நேரமா இது… நான் எவ்வளவு முக்கியமா பேசிட்டு இருக்கேன்… எனக்கு பயம் இருந்தது உண்மைதான். அது அந்த நேர தடுமாற்றம். அண்ணி வளைகாப்பு அப்போ அவங்க மாமியார் என் காதுபடவே உங்களுக்குன்னு ஒரு குழந்தை வந்துட்டா ரத்த பாசம்தான் முன்னாடி நிக்கும். ரெட்டை புள்ளைங்க மேல வச்சிருக்குற பாசம் பின்னாடி போய்டும்னு சொல்லவும் எனக்கு அந்த நேரம் அப்படி இருக்காதுன்னு யோசிக்ககூட தோணலை. உடனே, உங்கமேல நம்பிக்கை இல்லையான்னு கேட்காதீங்க. நம்பிக்கையை அசைச்சு பார்க்கிற சக்தி சில சொற்களுக்கும் அதை சொல்றவங்களோட ஆளுமைக்கும் இருக்கு. அந்த நேரம் வந்த சஞ்சலத்தை அப்படியே உங்ககிட்ட வந்து சொன்னதுதான் இப்போ தப்பா போச்சு… மூணு வருஷமா இதை சொல்லியே குழந்தையை தள்ளிப் போடுறீங்க. என்னால இதுக்கு மேல காத்திருக்க முடியாது. என்னோட முதல் பிள்ளைங்களுக்கு எப்படி தலைமுடியெல்லாம் நரைக்காத திடகாத்திரமான அப்பா இருந்தாரோ அதே மாதிரித்தான் என்னோட மூணாவது புள்ளைக்கும் வேணும். ஒழுங்கா இப்போவே இதுக்கு சம்மதிக்குறீங்க இல்லைன்னா நான் போய் பசங்களை கூட்டிட்டு வந்துருவேன், அவங்ககிட்ட மாட்டிட்டு முழிக்கணும் சொல்லிட்டேன்…”
“ப்பா… மிரட்டல் பலமா இருக்கு அதோட சொற்பொழிவும் பலமா இருக்கே. அதையும்விட என்னை கிழவன்னு சொல்லாம சொல்லிட்ட நீ…” என்று போலியாய் ராஜன் முறைக்க, உதட்டை சுழித்து அவனை மேலும் கீழுமாய் பார்த்த வானதி, “நேராவே சொல்றேன்… உங்களுக்கு வயசு எக்குதப்பா ஏறிகிட்டே போகுது. முன்ன மாதிரி வேகமில்லை உங்ககிட்ட, எதை எடுத்தாலும் அநியாயத்திற்கு யோசிக்குறீங்க, உடம்புல கொழுப்பு கூடிப்போச்சு…” என்று அடுக்கியவள் அவனை மெத்தையில் தள்ளி, அவன் நெஞ்சில் தலைவைத்து படுத்துக்கொள்ள, ராஜனின் கரங்கள் அவளை அரணாய் சுற்றிக்கொண்டன.
“உனக்கு மட்டும் வயசு குறைஞ்சிகிட்டே வருதா என்ன… வயசோட சேர்ந்து உன் வாயும் கூடிப்போச்சு… அதிகாரமும் கூடிப்போச்சு.”
“தன்னம்பிக்கையும் கூடிப்போச்சு.” என்று முகம் மலர விளித்தவள் அப்படியே அவன் மார்பில் இதழ் ஒற்றி எடுக்க, 
“அதுதான் தெரியுதா…” என்று ஏற இறங்கப் பார்த்தவன், “சாப்டியா?”
“நீங்க முன்னாடியே வெளில சாப்டுடுவேன்னு சொன்னதால நான் குந்தவைக்கூடவே சாப்பிட்டுட்டேன்…” 
“அப்போ தொடங்கிட வேண்டியது தான்…”
“எதை?” என்று ஒருவித ஆர்வத்துடன் வானதி தலையை உயர்த்தி அவனைப் பார்க்க, மையலாய் கண்சிமிட்டியவன்,
“நீ ஆரம்பிச்சதை!” என்றபின் அவளை கீழே புரட்டி அவளுள் புதைய, அதற்குமேல் அங்கு வாய்மொழிக்கு என்ன வேலை!!!
அனைவருக்குமே இனிமையாய் கழிந்த இரவுபொழுதிற்கு நேரெதிராக பரபரப்பாய் விடிந்தது விடியல். 
மூன்று பிள்ளைகளையும் பள்ளிக்கு கிளப்பும் பொறுப்பு ஆண்களுடையது என்பது எழுதப்படாத சட்டமாய் நடைமுறையில் இருந்தது அவ்வீட்டில். இதில் பாதி நேரம் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டுமென்று தச்சன் கழன்று கொள்வான். ராஜன்தான் மூவரையும் கிளப்புவது… அன்பரசன் தினம் காலை ஒருமுறை மட்டும் தோட்டத்திற்கும் வயலுக்கும் சென்று வந்துவிடுவார். 
வானதி மதியம் சாப்பாட்டை கவனித்துக்கொண்டாள் குந்தவை காலை உணவை செய்துவிடுவாள். இதில் பொதுவாய் இரு மருமகளுக்கும் காய்கறி வெட்டிக் கொடுப்பது, பிள்ளைகளை சாப்பிட வைப்பது போன்றது நீலாவின் வேலை என அனைத்துமே அவரவர்களுக்கு வேலை தயாராய் இருக்கும். மறந்தும் எதிலாவது கோட்டை விட்டாலும் குழந்தைகளின் பள்ளி வேன் நிற்காமல் சென்றுவிடும். அப்போதும் ராஜன்தான் மூவரையும் வண்டியில் அழைத்துச் சென்று விட்டுவருவான்.
“பெரிப்பா என்னோட மேக்ஸ் நோட்டை காணோம்…” இன்னும் குளிக்காமல் தலையை சொரிந்துகொண்டு முற்றத்தில் அமர்ந்திருந்த ஷஷ்விக்கை முறைத்தான் ராஜராஜன். 
“நைட்டே எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு தூங்கனும்னு எத்தனை தடவை சொல்றேன், கேட்குறீயா நீ!…” அப்போதுதான் அறிவழகனை கிளப்பிவிட்டு அறிவழகி குளித்து வரட்டும் என காத்துக்கொண்டிருக்க, ஷஷ்விக் தினம் செய்யும் அதே கூத்தை ஆரம்பித்தான். ஒரு நாள் பென்சில் காணோம் என்பான், அன்று அதற்கு திட்டினால் மறுநாள் பென்சிலை பத்திரமாய் வைத்துவிட்டு மற்ற எதையாவது எங்காவது வைத்துவிடுவான். இன்று தொலைந்து போவது மேக்ஸ் நாட் முறை போல…
“நைட்டே எடுத்து வச்சேன் பெரிப்பா…”
“எங்க எடுத்து வச்ச?” என்றவாறே அவனருகில் வந்த ராஜன் ஷஷ்விக்கின் பையில் தேட,
“இதுலதான் வச்சேன்…” என்று பையைக் காட்டினான்.
“இதுல வச்சா இதுலதானே இருக்கும்… நல்லா யோசி எதுல வச்ச?” பையில் இருந்த அனைத்தையும் கீழே கொட்டி ஒவ்வொரு நோட்டாய் எடுத்துப்பார்க்க அதில் அவர்கள் தேடும் நோட் மட்டும் இல்லவே இல்லை…
“நோட் எடுத்துட்டு போலேன்னா மிஸ் திட்டுவாங்க…” என்று ஷஷ்விக் உதட்டை பிதுக்க,
“இதை மட்டும் வக்கனையா பேசு… அக்கா பேக்ல மாத்தி வச்சிட்டீயான்னு பாரு…” என்ற குந்தவையின் குரல் சமையலறை வாயிலிலிருந்து கேட்டது.
ஷஷ்விக்கின் முகம் நொடியில் மலர்ந்து, “அதுலதான் இருக்கும்… அக்காவோட பேக்கும் என்னோடதும் ஒரே மாதிரி இருக்குள்ள என்னோடதுன்னு நினைச்சு அதுல வச்சிருப்பேன்…” என்று சொல்லிக்கொண்டே சிட்டென ராஜனின் அறைக்குப் பறந்தான் ஷஷ்விக்.
ராஜன் அப்பாடா என்று அமர்ந்திருக்க, “எல்லாம் உங்க தம்பியை சொல்லணும்… மூணு பேருக்கும் ஒரே மாதிரி வாங்கிட்டு வரேன்னு சொல்லி இப்படியொரு குழப்பத்தை ஏற்படுத்திட்டு அவர் ஜாலியா தப்பிச்சிடுறாறு… நல்லவேலை அழகனோட பை பிஞ்சி போய் இப்போ வேற யூஸ் பண்றான் இல்லைனா இவன் நோட்டை தேடுறதுக்கு அவன் பேக்கையும் நோண்டணும்…” என்று அவனிடம் குறைபடிக்கவும் தவறவில்லை குந்தவை.
“சரிசரி டென்ஷன் ஆகாத… உன்னை பார்க்க குணா வருவான்னு நினைக்குறேன்…” என்று ராஜன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தச்சனுடன் உள்ளே வந்தான் குணா.
“வாங்க… என்ன காலையிலேயே இந்த பக்கம்?” என்று வரவேற்றபடி குந்தவை கையை துடைத்துவிட்டு வந்தாள்.
“உன்னை பார்க்கத்தான் குந்தவை… பிசியா?”
“இவங்க ஸ்கூல் கிளம்புற வரை பிசிதான்…”
“சாப்டுட்டு போ குணா…” என்றதோடு நீலா பேரப்பிள்ளையை கவனிக்கச் சென்றுவிட, ராஜனும் ஷஷியை தூக்கிச் சென்று குளியறையில் விட்டுவிட்டு, குளித்து காத்திருந்த அறிவழகியை கிளப்பச் சென்றுவிட்டான்.
“காலையிலேயே வரவேண்டாம்னுதான் நினைச்சேன். ஆனா இது கொஞ்சம் முக்கியமான விஷயம் குந்தவை.” குணா தான் வந்த விஷயத்தை துவங்க சங்கடப்பட்டு விழிக்க,
“என்ன சொல்லுங்க…”
“அடுத்த கொள்முதலுக்கு நம்ம ஊர் மக்களுக்குதான் முன்னுரிமைன்னு நீ போட்ட ஆடரை எதிர்த்து சில க்ரூப் இன்னைக்கு உன் ஆபீஸ் வாசலில் போராட்டம் பண்ண முடிவெடுத்திருக்கிறதா தகவல் வந்திருக்கு. அதுதான் நீ டென்சன் ஆகாம இதை கையாளனும்னு முன்கூட்டியே உன்கிட்ட சொல்ல வந்தேன்…”
“அதெல்லாம் பார்த்துக்கலாம் அண்ணா… நீங்க இவ்வளவு பதற வேண்டாம்.”
“அதுக்கில்லைமா… அவனுங்க வேணும்னே தகராறு பண்ணுவாங்க… நீ எப்போ பிரசவத்துக்கு லீவ் எடுக்கப்போற?”
“இந்த பிரச்சனையை முடிக்காம லீவ் எடுத்து தப்பிச்சிக்க சொல்றீங்களா? பிரச்சனைக்கு பயந்து எல்லாம் லீவ் எடுக்க முடியாது. நான் ஒன்பதாவது மாசத்தில்தான் லீவ் எடுக்கப் போறேன் அப்போதான் ஷஷிகூடவும் மே மாத லீவை ஸ்பெண்ட் பண்ண முடியும். பசங்களுக்கும் லீவ் விட்டுட்டா வீட்டையும் பார்த்துகிட்டு கைக்குழந்தையையும் வானதி ஒத்தையா சமாளிக்க கஷ்டமா இருக்கும்… 
நீங்க கவலைப்படாதீங்க எல்லாமே முறைப்படிதான் செஞ்சிருக்கு. போராட்டம் பண்ணா பண்ணட்டும், கோர்ட் போனும்னாலும் போகட்டும். நம்மகிட்ட பேப்பர்ஸ் கரெக்ட்டா இருக்கு…” என்று அவ்வூர் மன்றத் தலைவியாய் அவள் பேசியது தச்சனுக்கு அத்தனை உவப்பாய் இருந்தது. 
முதல்முறை போட்டியிட்ட போது எவ்வளவு முயன்றும் குந்தவையால் பதவிக்கு வரமுடியவில்லை. ஆனால் அந்த தோல்வி நிறைய அனுபவங்களை கொடுத்திருக்க அடுத்த ஐந்து வருடத்தில் அவ்வூரில் இருக்கும் அனைவருக்கும் பரிட்சையமாகி இருந்தாள் குந்தவை.
மக்களை கவரவேண்டும் என்று எந்த உள்நோக்கமும் இல்லாமல் பிரச்சனைகளுக்கு தனக்குத் தெரிந்தவரை இணையத்தின் உதவியோடு ஆலோசனைகள் கூற குந்தவை இப்படித்தான் என்று நேர்மறையான எண்ணம் பெரும்பான்மையோர் மனதில் பதிந்துவிட, அடுத்து நடந்த தேர்தலில் வென்றது குந்தவையே. இப்போது ஒரு வருடமாக தலைவியாய் தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் செவ்வென வலம் வந்துகொண்டிருப்பவளிடம் நிகழ்ந்திருந்த ஒரே மாற்றம் நிதானம். அதுவும் வீட்டிற்கு வெளியே மட்டுமே… 
“சரி குந்தவை அப்போ நான் கிளம்புறேன். நீ பார்த்து இருந்துக்கோ. எதுவும் பிரச்சனை வந்தாலும் தயங்காம எனக்கு ஒரு போன் போடு, நான் வந்துறேன்…” என்றுவிட்டு குணா எழ,
“உங்க தோஸ்த் சொன்னதை சரியா சொல்லிட்டீங்களா இல்லை ஏதாவது சொல்ல மறந்துட்டீங்களா?” என்று கேலியாய் கழுத்தை சாய்த்து குணாவைப் பார்த்து கேட்டாள் குந்தவை.
“நீ ஷார்ப் குந்தவை. நான் முதன்முதலா பார்த்தப்போ எப்படி இருந்தீயோ அப்படியேதான் இருக்க இப்போவும்… இதோ இவனும் முதல்ல என்னை எப்படி உன்கிட்ட மாட்டி விட்டானோ அதேதான் இப்போவும் பண்றான்…” என்று குணா உண்மையை போட்டு உடைக்க தலையிலடித்துக் கொண்டான் தச்சன். அடுத்து குந்தவையிடமிருந்து என்ன கேள்வி வரும் என்று தெரிந்தவனாய் முந்திக்கொண்டு,
“உனக்கு வாக்கு கொடுத்திருக்கேன், உன் வேலை விஷயத்தில் நான் தலையிட மாட்டேன்னு… அதுதான் குணாகிட்ட சொல்லி சொல்லச் சொன்னேன்.”
“அதுக்காக அவரை தேவையில்லாம அலைய வைப்பீயா?” என்று குந்தவை துவங்க, அடுத்த ஊடலின் துவக்கம் இது என குணாவுக்கு புரிந்துவிட, குந்தவையைத் தாண்டி பின்னால் நின்று கொண்டிருந்த ராஜனிடம் தலையசைத்து சத்தமில்லாமல் நகர்ந்தான் குணா. 
“ம்ச்… அவன் ஒன்னும் தேவையில்லாம வரலை, எனக்காக வந்தான்.” என்று தன்பக்கத்தை தச்சன் விளக்க, ஊடல் விலகாமல் இழுவையாய் இழுத்துக்கொண்டே சென்றது.
“இன்னமும் அவரை எதுக்கு உன் இஷ்டத்துக்கு கூப்பிடுற… உன் இஷ்டத்துக்கு வேலை வாங்குற? அவங்க வீட்டில் என்ன நினைப்பாங்க? அவருக்கும் குடும்பம் இருக்கு… அவர் குழந்தைங்க கூடவும் அவர் நேரம் செலவழிக்கணும்னு நினைக்க மாட்டாங்களா?”
“ஏய் நான் என்ன அவனை இருபத்திநாலு மணிநேரமும் என்கூடவே வச்சிகிட்டா சுத்திட்டு இருக்கேன்… சும்மா சின்ன விஷயத்தை எல்லாம் பெருசு பண்ணிட்டு, பெரிய விஷயத்தை எல்லாம் சின்னதா எடுத்துட்டு இருக்காத குந்தவை.” என்றான் தச்சனும்.
“இப்போ நான் என்ன பெருசு பண்றேன்?” என்று குந்தவையும் விடாமல் தொடர, உள்ளிருந்து வானதியின் அழுத்தமான குரல் அவர்களின் சண்டைக்கு முட்டுக்கட்டை போட்டது.
“குந்தவை உனக்கும் நேரமாகுது, போய் கிளம்பு…”
வானதி சொன்னதும் நேரமாவதை உணர்ந்த குந்தவை தச்சனை முறைத்துவிட்டு அறைக்குச் செல்ல, அவனும் அவளைத் தொடர்ந்து சென்றான்…
குந்தவை அலமாரியில் இருந்து சுடிதாரை எடுக்க, அதைப் பிடுங்கி மெத்தையில் போட்டவன், “வேலைக்கு ஏத்த மாதிரி கெத்தா புடவை கட்டிட்டு போடி…”
“நீ எதுக்கு புடவை கட்ட சொல்றேன்னு எனக்குத் தெரியும், அது இப்போதைக்கு நடக்காது உன் வேலையை பார்த்துட்டு போ…”
“ம்ச்… இதுவும் என் வேலை தான்… இந்த சுடிதார் போட்டு என் புள்ளையை மறைச்சு மறைச்சு வச்சிக்குற…” என்று சினுங்கியவன் கரம் எப்போதோ அவள் உடைக்குள் புகுந்து வாஞ்சையாய் அவளின் வயிற்றில் பதிந்து ஊர்வலம் சென்றது.
அவளது கரங்கள் அதனைத் தடுத்தபடி, “ஷ்… மணியாகுதுடா…”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது… உன்கூட முன்னமாதிரி இருக்க நேரமே கிடைக்க மாட்டேங்குது, அப்படியே கிடைச்சாலும் உன் பையன் நடுவில் பூந்து ஆட்டத்தை கலச்சி விட்டுடுறான்…” என்றவன் வாயிலே பட்டென இரண்டடி போட்ட குந்தவை,
“நம்ம பையன்னு சொல்லு…” என்று திருத்த, தச்சனின் இதழ்கள் ஆதவனைக் கண்ட தாமரைப் போல் மலரந்திருக்க,
“நானு நானு…” என்று குளித்து முடித்து இடுப்பில் சிறிய துண்டை கட்டிக்கொண்டு அவர்களுக்கு இடையில் புகுந்தான் ஷஷ்விக். ஷஷ்விக் வந்ததும் தச்சனின் கரங்கள் அவனுடைய பிஞ்சுக் கரங்களை எடுத்து குந்தவையின் வயிற்றின் மீது வைக்க, ஆர்வமாய் தந்தையிடம் திரும்பியவன்,
“பாப்பா எப்போ அப்பா வரும்?”
“ம்ம்ம்… தை மாசம் வந்துடுவா…” என்று ஏதோவொரு நினைவில் தச்சன் பதில் சொல்ல அதை கப்பென்று பிடித்துக் கொண்டான் ஷஷ்விக்.
“அப்போ எனக்கு தங்கச்சி பாப்பா வரப்போகுதா?” என்று ஆர்வமாய் கேட்க, குந்தவை தச்சனை முறைத்தாள்.
எந்த விதத்திலும் ஷஷ்விக் ஏமாற்றம் அடைந்து தான் எதிர்பார்த்த உடன்பிறப்பு கிடைக்கவில்லை என்று நினைத்து தேவையின்றி சுணக்கம் அடைந்துவிடக் கூடாது என்று கவனமுடன் அவனை அனைத்திற்கும் தயார் செய்து கொண்டிருக்கையில் தச்சன் தன்னை அறியாமலேயே இரண்டு மூன்று முறை தங்கை பிறக்கும் என்று வாய்விட்டுவிட, எப்போதும் ஸ்டார்ட் மியூசிக்தான் இருவருக்கும்… 
ஆனால் எதையும் தாங்கும் இதயமாய் அசையாமல் நிற்கும் அவனது மனதிற்கு பிடித்தபடி தைமகளே பிறந்து, குந்தவை எனும் அவனுடைய திருமகளோடு பொன்மகளும் வந்துவிட, தச்சனின் களிப்புக்கு தடையுண்டோ!… 

Advertisement