Advertisement

என்ன உங்கக்கா இன்னைக்கு இவ்வளவு அவசரப்படுறாங்க…
அதெதுக்கு நமக்கு… நீ பேசாம தள்ளி படு… இன்னைக்கு ஷஷி நடுவில் படுத்துப்பான்.என்றவாறே தம்ளரை ஷஷியின் இதழிடுக்கில் வைத்து மெல்ல சாய்க்க, பொறுமையாய் பாலை உறிஞ்சிக் கொண்டிருந்த ஷஷ்விக் குந்தவை சொன்னதில் குஷியாகி அவள் மீது நன்றாக சாய்ந்து கட்டிக்கொண்டு தச்சனை கேலியாய் பார்த்தான்.
அடிங்க… ரொம்பத்தான்டா கொழுப்பு உனக்கு…என்று கைலியை மடித்து கட்டிக்கொண்டு போலியாய் அடிப்பது போல் கை ஓங்க, குந்தவை முறைத்த முறைப்பில் அவன் கை தானாய் கீழிறங்கியது.
அம்மாவும் பையனும் கூட்டு சேர்ந்தாச்சு, இனி என்னை கழட்டி விட்டுடுவீங்க…என்று அலுத்தபடி தச்சன் மெத்தையில் படுக்க, இடம் போய்விடுமோ என்ற பயத்தில் விரைவாய் பால் குடித்துவிட்டு தச்சன் அருகில் வந்து படுத்தான் ஷஷ்விக்.
ஷஷி பால் குடிச்சிட்டு வாய் துடைக்காம தூங்கக்கூடாது…என்ற குந்தவையின் கட்டளைக்கு எதிர்வினையாய் தச்சன் புறம் திரும்பி, அவன் பனியனில் வாயை தேய்த்தான் ஷஷ்விக்.
அவனின் விஷமத்தில் தச்சனின் விழிகளும் குந்தவையின் இதழ்களும் ஒருசேர விரிந்தன.
டேய்… ரொம்பப் பண்றடா நீ… இதையும் உன் அம்மாகிட்டயே செஞ்சுக்க வேண்டியதுதானே… எதுக்கு என் மேல வந்து தேய்க்கிற…என்ற தச்சனின் சிணுங்களுக்கு மகனின் சிரிப்பே அறையை நிறைக்க, தச்சனின் இதழ்களும் மலர்ந்தது.
ஷஷ்விக்கை தூக்கி தன் மேல் போட்டுக்கொண்டவன் அவன் முதுகை தட்டிக்கொடுத்தபடியே, “அம்மா வயித்துல குட்டிப்பாப்பா தூங்கிட்டு இருக்கும், நீ தூக்கத்துல தெரியாம அம்மா மேல கால் போட்டா பாப்பாக்கு வலிக்கும்ல… வலிச்சா ஷஷி அழுகுற மாதிரியே பாப்பாவும் அழும்…
அச்சசோ… நம்ம பாப்பா அழவேண்டாம்… நான் அம்மா மேல கால் போட மாட்டேன்…தினமும் சொல்லவதையே தச்சன் சொல்ல, அதை அன்றுதான் புதிதாய் கேட்பது போல கேட்டு பதறினான் ஷஷ்விக்.
ஷஷ்விக் நல்ல பையனா அப்பாகூடவே படுத்துப்பானாம்…
அம்மாகிட்ட வேண்டாம் நான் இப்படியே உன் மேல படுத்துக்குறேன் ப்ளீஸ்…என்று தலையை தச்சனின் நெஞ்சிலிருந்து உயர்த்தி வாஞ்சையாய் கேட்பவனை மறுக்க யாருக்குத்தான் தோன்றும்…  மகனை ஆசையோடு கட்டிக்கொண்டு அவன் தலையை செல்லமாய் கலைத்துவிட்டான்.
பதிலுக்கு தச்சனின் இருபக்கமும் காலை போட்டுக்கொண்ட ஷஷ்விக் சட்டமாய் தலையை தச்சனின் நெஞ்சில் பதித்து அன்னையை பார்த்து, “ம்மா வா… எனக்கு தூக்கம் வருது…என்று அன்னையை அழைக்க, வேலை பாக்கி இருந்தாலும் ஷஷியின் அழைப்பை நிராகரிக்க விரும்பாமல் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஏழுமாதம் நிறைவடைந்து நன்றாய் மேடிடத் துவங்கியிருந்த வயிற்றுடன் கவனமாய் நடந்துவந்து விளக்கை அணைத்துவிட்டு மெத்தையில் ஏறிப்படுத்தாள் குந்தவை.
ம்மா… பாப்பா வெளில வந்ததும் நான் உன் பக்கதுல படுக்கலாம்தானே…என்று வெகுளித்தனம் குறையாத மழலை மொழி பெற்றவர்கள் அகத்தில் இன்பச் சாரல் வீசியது.
தாராளமா படுக்கலாம்டா தங்கம்… ஆனா பாப்பா வந்ததும் நீ பாப்பாகூடவே இருப்பேன்னு அடம்பிடிப்ப பாரேன்…என்று குந்தவை சொல்ல, தாடையில் கைவைத்த ஷஷ்விக் ஏதோ யோசனையுடன்,
ம்ம்ம்… ம்மா… என் பிரென்ட் ஷாலினிக்கு தம்பி பாப்பா இருக்காம், அப்புறம் சுரேனுக்கு தங்கச்சி பாப்பா இருக்காம் அப்போ எனக்கும் தங்கச்சி பாப்பா தானே இருக்கும்… ஆப்போசிட் ஜெண்டர்தான் சிப்லிங்கா பிறப்பாங்களாம் என் பிரென்டெல்லாம் சொன்னாங்க…என்று ஆர்வமாய் கேட்க, குந்தவை அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தாள்.
அப்படி இல்லை தங்கம்… காட் ஏஞ்சலுக்கு நமக்கு என்ன பாப்பா குடுக்கணும்னு தோணுதோ அதைத்தான் கொடுப்பாங்க… ஆனா தம்பியோ தங்கச்சியோ எந்த பாப்பாவா இருந்தாலும் அது நம்ம பாப்பாதானே… ரெண்டுமே ஒண்ணுதான். அதுனால் எந்த பாப்பாவா இருந்தாலும் ஷஷ்விக் குட்டி பத்திரமா பார்த்துக்குவான்தானே?”
ஆமாஆமா… நான் பார்த்துப்பேன்… அழகி அக்காவும் அழகன் அண்ணாவும் என்னை எப்படி பார்த்துக்குறாங்களோ அதே மாதிரி நானும் என் பாப்பாவை பார்த்துப்பேன்… பாப்பா கூட விளையாடுவேன், ஸ்கூல் போகும்போது கைப்பிடுச்சு கூட்டிட்டு போவேன், லஞ்ச் டைமில் போய் பார்ப்பேன்… அப்புறம் சாய்ந்தரம் நானே பாப்பா கிளாஸ் போய் பத்திரமா வீட்டுக்கு வேனில் கூட்டிட்டு வந்துருவேன்…என்று ஆர்வமாய் அடுக்கிகொண்டே போனான் ஷஷ்விக்.
ஷஷ்விக் இன்னும் என்னவெல்லாம் செய்வேன் என்று லிஸ்ட் போட்டு அடுக்க, தச்சன் குந்தவை காதில் கிசுகிசுப்பாய், “ரொம்ப அறிவா கேள்வி கேட்குறான்டி…
பின்ன உன்னை மாதிரியே இருப்பானாக்கும்…என்று குந்தவை சத்தமாய் பதில் சொல்லிவிட,
கண்களை இறுக மூடித்திறந்த தச்சன், “ஷ்… சரிசரி உடனே அவன் முன்னாடி என் காலை வாராத… எனக்கு தூக்கம் வருது…என்று நழுவி கண்ணை மூடிக்கொள்ள, ஷஷ்விக் வெகுநேரம் அன்னையிடம் கதையளந்துவிட்டுத் தான் உறக்கத்தின் பிடிக்கு சென்றான்… 
அதே நேரம் ஷஷியிடம் பாலை கொடுத்துவிட்டு தன்னறைக்குச் சென்ற வானதியை வரவேற்றது தந்தையும் மகளும் சேர்ந்து படுத்துக்கொண்டு அறிவழகியின் நோட்டில் கலர் அடித்துக்கொண்டிருப்பதும் அறிவழகன் படுத்திருக்கும் ராஜராஜனை ஷோபாவாக்கி அவன் மீது சாய்ந்துகொண்டு ஏதோ புத்தகத்தை திறந்து வைத்து படித்துக்கொண்டிருந்த காட்சியும்தான்.
சீக்கிரம் பால் குடிச்சிட்டு போய் பெரிய பாட்டிகூட படுத்துக்கோங்க ரெண்டு பேரும்…என்றவாறே தம்மக்கள் இருவரிடமும் அவள் பாலை நீட்ட,
பாட்டியை எதுக்கு தொந்தரவு செய்யணும்… இங்கேயே தூங்கட்டும் ரெண்டு பேரும்… அழகி உனக்கும் எழுதுற வேலை இருக்குதானேமா… இங்கேயே உட்கார்ந்து எழுதிட்டு தூங்குங்க, பாட்டியை தொந்தரவு செய்ய வேண்டாம்…வானதியிடம் பதில் சொல்வது போல் சொல்லிவிட்டு மகளை தன்னுடன் இருத்திக்கொள்ள அவளிடமும் தனியாய் பேசி வைத்தான் ராஜராஜன்.
வானதியோ அவனை விடுத்து மகளை கூர்மையாய் பார்த்தாள், “ஹோம்வொர்க் முடிச்சிட்டேன்னு சொன்ன, இன்னும் என்ன இருக்கு எழுத?”
முடிச்சிட்டேன்மா… இது சித்தி வாங்கிக்கொடுத்த கலர் புக்… இதை இந்த வீக் முடிச்சிட்டா அடுத்த வாரம் புதுசா வாங்கித் தரேன்னு சித்தி சொல்லியிருக்காங்க… அதுதான் கலர் பண்ணிட்டு இருக்கேன்.என்றாள் மகள் ஆர்வமாய்.
அப்போ இன்னைக்கே முடிச்சிடுவோமா?” என்றான் ராஜன் வானதியை பேசவிடாது.
நீங்க ஹெல்ப் பண்றீங்களாப்பா… எதெதுக்கு என்னென கலர் கொடுத்தா சூப்பரா இருக்கும்னு சொல்றீங்களா?” 
கண்களில் ஆசையும் உத்வேகமும் மின்ன ஆர்வமாய் கேட்ட மகளைக் கண்டு அகம் மலர்ந்தவன், “ஜமாய்ச்சிடுவோம்… இன்னைக்கு இதை முடிச்சிட்டுதான் தூங்குறோம்…
விடிய விடிய முடிச்சிட்டு நீங்க அக்கடான்னு காலையில தூங்கிடுவீங்க… இவள் என்ன பண்ணுவா? க்ளாஸில் தூங்கி வழிவா…வானதி முறைப்புடன் தந்தையையும் மகளையும் காண, பாலை குடித்து முடித்திருந்த அறிவழகன் சமத்தாய் தன் புத்தகத்தை பையில் வைத்துவிட்டு எழுந்து,
ம்மா நான் பாட்டிகூட தூங்குறேன்…என்று வானதியிடம் சொல்லிவிட்டு, உடன்பிறந்தவளிடம் பார்வையை திருப்பியவன், “ஏய் நீ வரியா? பாட்டிகிட்ட நான் கதை கேட்டுகிட்டே தூங்கப்போறேன்…
மகனின் முடிவில், “ஓடுங்க ஓடுங்க… ஷஷியையும் கூப்பிட்டுக்கோங்க…என்றாள் வானதி ஆரவாரமாய். 
டேய் இன்னைக்கு நானே உங்களுக்கு கதை சொல்றேன்டா…என்று ராஜனும் சொல்லிப் பார்த்தான்… ம்கூம்… இன்று அவன் திட்டம் செல்லுபடியாகவில்லை…
வேண்டாம் வேண்டாம்… பாட்டிக்குத்தான் நிறைய கதை தெரியும். நீங்க சொன்ன கதையையே திரும்பத் திரும்ப சொல்வீங்கப்பா…என்று அவன் காலைவாரிய அறிவழகன், “ம்மா, ஷஷி இன்னைக்கு அழுதாவது அவங்க அம்மாகூட படுப்பேன்னு சொல்லிட்டு இருந்தான்… அவன் சித்தி சித்தப்பாக்கூட தூங்குவான்…என்று தகவலையும் சேர்த்துச் சொன்னவன் யாருக்கும் காத்திராது வெளியே ஓடிவிட்டான்… அவன் ஓடுவதையே ஏமாற்றமாக ராஜன் பார்த்து அமர்ந்திருக்க, வானதியின் அதட்டல் அவ்வறையை நிறைத்தது.
உனக்கு வேற தனியா சொல்லனுமாடி… கலர் நாளைக்கு பண்ணிக்கலாம். இப்போ பாட்டிகூட போய் தூங்கு.என்று மகளை அதட்டியவள் குரல் முழுதாய் மாறி அதிகாரத் தொனியில் ஒலித்தது.
அறிவழகி என்ன செய்ய என்பது போல் ராஜனைக் காண, அவன் ஓசையின்றி இதழை அசைத்து அவளை செல்லச் சொல்ல தன் உடைமைகளை அதனிடத்தில் வைத்துவிட்டு அவளும் வெளியேறினாள். அறை வாயிலில் நின்று அவர்கள் ஒழுங்காய் சென்று படுக்கிறார்களா என்று பார்த்த வானதி நீலாவைத் தேட, அவர் அப்போதுதான் கதவனைத்தையும் அடைத்துவிட்டு முற்றத்தில் படுக்க தயாரானார். அனைத்தும் சரியாய் இருக்கிறது என்ற திருப்தியில் வானதி அறையை தாழிட்டுவிட்டு ராஜனிடம் வர, அவன் மெத்தையில் குப்புறப்படுத்து உறங்குவது போல் பாவ்லா செய்துகொண்டிருந்தான்.
நேத்து என்ன சொன்னேன்னு நியாபகம் இருக்கா?” அறிவழகியிடம் ஒலித்த அதே தொனி இவனிடமும் மாறாது அப்படியே ஒலித்தது.
அவன் பதில் சொல்லாமல் கண்களை மூடியிருக்க, அவன் தோளை சுரண்டியவள், “தூங்குற மாதிரி நடிக்காம கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க…
ம்ச்! குந்தவைக்கு பழம் எடுத்துட்டு வரச்சொல்லியிருந்த, எடுத்துட்டு வந்து கொடுத்துட்டேனே…
ப்ச்… அதில்லை…
திவ்யா பொண்ணுக்கு தங்கச் சங்கிலி வாங்கிப் போடலாம்னு சொன்ன… அப்பாகிட்ட கேட்கும் போது நீயும் அங்கதானே இருந்த?” 
என்னை கடுப்பாக்காதீங்க…என்று முறைத்து நின்றாள் வானதி. அவனும் இம்மியளவுகூட அசையாமல் படுத்தபடியே இருக்க, தன்பலம் கொண்டு அவனை புரட்டினாள் வானதி.
தலையில் கைவைத்தபடி சலிப்புடன் திரும்பிய ராஜன் அவளை சோபையாய் பார்த்து, “ஏய் என்ன வானதி… இப்போ உனக்கு என்ன வேணும்? பசங்களையும் வெளில அனுப்பிட்டு அராஜகம் பண்ற நீ…
எனக்கு என்ன வேணும்னு தெரியாத மாதிரி சும்மா நடிக்காதீங்க… அஞ்சு வயசுல நடந்தது இப்போவரை நியாபகத்தில் இருக்கு ஆனா நான் நேத்து சொன்னது உங்க நியாபகத்தில் இல்லையோ?” என்று கழுத்தை சாய்த்து அவனை கூர்மையாய் பார்த்துக் கேட்க, நெற்றியை தேய்த்த ராஜன், 
ஏய் தப்பான முடிவெடுத்து உறவுகளை உதறிட்டு எங்கேயோ ஊர் ஊரா சுத்தி என்னோட பாதி வாழ்க்கையை மறுகி மறுகி தனிமையில் கழிச்சிருக்கேன். அந்த சம்பவம் மனசுல வடுவா பதிஞ்சிபோன ஒன்னு. அதெப்படி மறக்கும்?” என்று அவளது முதல் கேள்விக்கு மட்டும் விடை சொல்லியவன் அப்படியே கண்களை மூடிக்கொள்ள, இருவிநாடி அமைதியாய் அவனையே உற்றுப் பார்த்த வானதி அதிரடியாய் அவன் சட்டை பொத்தானில் கைவைத்து அதை கழற்ற, பதறிப்போய் கண்களை திறந்தவன் அவள் கைப்பிடித்து தடுத்தான்.
கையை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும் வானதி… நான் பதில் சொல்லலைன்னா அதில எனக்கு விருப்பமில்லைன்னு அர்த்தம்.
எனக்கு வேணும்னு நான் முன்னாடியே சொல்லிட்டேன்… எந்த முக்கியமான முடிவா இருந்தாலும் யாரோட தலையீடும் இல்லாம நானே தெளிவா முடிவெடுக்கனும். அப்படி எடுக்குற முடிவு சரியா இருக்கும்னு நீங்கதான் அடிக்கடி சொல்லுவீங்க… இது நானே சுயமா எல்லாத்தையும் யோசிச்சு விரும்பி எடுத்த முடிவு. இதுக்கு நீங்க தடை சொல்ல கூடாது. அப்படி சொன்னா அது நீங்க என்னோட முடிவை மதிக்கலைன்னு அர்த்தம்.என்று பேச்சிலே அவனை மடக்கப் பார்க்க, அவனும் சலைக்காது,
நான் வேண்டாம்னு சொல்றேன், அதை நீ ஏத்துக்க மாட்டேங்குற… அப்போ நீயும் என்னோட முடிவை மதிக்கலைன்னுதானே அர்த்தம்…என்று கிடுக்கிப்பிடி போட்டான் ராஜனும். 
பேசியே என் முடிவை மாத்திடலாம்னு நினைப்போ… அதெல்லாம் இந்த விஷயத்துல நடக்காது. இப்போ நீங்க முடியாதுன்னு சொன்னா நான் பசங்களை கூப்பிடுவேன்…என்று அடுத்து மிரட்டலை ஆயுதமாக்கப் பார்த்தாள்.
மசியாது புருவத்தை மட்டும் உயர்த்திய ராஜன், “கூப்பிட்டு என்னென்னு சொல்லுவ?”
சித்தி சொன்ன காட் ஏஞ்சல் ஷஷிக்கு தம்பியோ தங்கச்சி பாப்பாவையோ கொடுத்த மாதிரி உங்களுக்கும் தம்பி பாப்பாவை உங்கப்பாட்ட கொடுத்துட்டு போயிருக்காங்க, உங்கப்பா அதை தரமாட்டேங்குறாருன்னு சொல்லுவேன்… அப்புறம் அவங்க கேக்குற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்க…என்று மிரட்ட, ராஜன் தலையில் கைவைக்காத குறையாய் அமர்ந்துவிட்டான். 
வானதி இப்படியெல்லாம் பின்னாளில் பேசுவாள் என்று தெரிந்திருந்தால் ஆரம்பம் முதலே அவன் உஷாராக வார்த்தையை விட்டிருப்பான். எதிலும் தெளிவின்றி பயந்து பயந்து வாழ்கிறாளே என்று நினைத்து அவன் அளித்த உத்வேக வார்த்தைகளின் பலன் எல்லாம் இப்போது அவன் புறமே திரும்பி நின்றது. 
நீ ரொம்ப தேறிட்ட வானதி… வார்த்தைக்கு வார்த்தை பேசுற… வரவர உன் செய்கையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு…
எல்லாம் உங்ககிட்ட கத்துகிட்டதுதான்… ஆறு வருஷமாச்சு நமக்கு கல்யாணமாகி, பிள்ளைகளுக்கு எட்டு முடியப்போகுது நீங்க என்னடான்னா நான் இதைப்பத்தி பேச்செடுத்தாலே நழுவி நழுவிப் போறீங்க…என்று அயர்வாய் சொன்னவள் அவனருகில் அமர, அவளை நிமிர்ந்துப் பார்த்தவன் பின் பார்வையை தாழ்த்தி,
ரெண்டு பசங்களே நமக்கு போதும் வானதி… இதோட இந்த பேச்சை விட்டுரு…
ஏன் விடணும்? எப்போதும் நீங்க சொல்ற எல்லாத்தையும் நான் கேட்டுக்குறேன் தானே… இந்த முறை நான் சொல்றதை நீங்க கேளுங்க.என்று கெஞ்சவெல்லாம் இல்லை. பிடிவாதமாய் நின்றாள்.
ம்ச்… புரிஞ்சிக்கோ வானதி. இன்னொரு குழந்தை வந்தா அழகன் மேலேயும் அழகி மேலேயும் வச்சிருக்குற என்னோட அன்பில் குறை வந்துடும் உனக்கே ஒருபயம் இருந்ததுதானே… அதுக்குத்தான் சொல்றேன், பயத்தோட வாழ வேண்டாம். இன்னொரு குழந்தையும் வேண்டாம்… அடுத்து பசங்க தனியா வளருவாங்கன்னு காரணம் சொல்லாத, தச்சன் பசங்க இருக்காங்க. கடைக்குட்டியும் பிறந்ததும் கடைசி வரை நாலு பேரும் ஒண்ணா வளருவங்க. யாரும் யாரோட பாசத்தையும் இழக்கவும் மாட்டாங்க.
எனக்கு வர ஆத்திரத்துக்கு உங்களை அடிக்கனும் போல தோணுது…என்று கைகளை உயர்த்தி வானதி பற்களை நறநறவென கடிக்க, சத்தமாய் சிரித்தவன்,
எல்லாம் குந்தவை ட்ரைனிங்கா? என் தம்பி பெற்ற இன்பத்தை நானும் பெறனும்னு ஆசைப்படுறீயோ?”

Advertisement