Advertisement

Epilogue
இப்போ இருக்குற மாதிரி பெரிய பெரிய மெஷின் எல்லாம் இல்லாத அந்த காலத்துல அவ்வளவு எடையுள்ள விமானத்தை கோவில் மேல எப்படி ஏத்துனாங்கன்னு இன்னைக்கு வரைக்கும் உலகமே வியந்து பார்த்துட்டு இருக்கு…அன்பரசன் தன் பேரப்பிள்ளைகளை அருகில் அமர்த்திக் கொண்டு தான் வியந்தவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்திக்கொண்டிருக்க, அங்கு அமர்ந்திருந்த மூவரில் ஒருவன் மட்டும் காதை தேய்த்துக்கொண்டு எப்போதுடா எழுந்து ஓடலாம் என்ற பாவனையில் அமர்ந்திருந்தான்.
அசுவாரசியமாய் அமர்ந்திருந்த அவனை அதட்டலுடன் முறைத்தவர், “என்னடா முகம் ஏழு முழத்துக்கு போகுது? அக்காவும் அண்ணனும் எப்படி ஆர்வமா கேட்டுட்டு இருக்காங்க நீ என்ன காதை நோண்டிக்கிட்டு பராக்கு பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க?”
ஐயோ… தாத்தா எனக்கு நீங்க பேசுறது போரடிக்குது… நான் போய் தூங்கவா?” என்று தன் மொழியில் வெகுளியாய் கேட்டவனை மறுக்கத் தோன்றுமா அன்பரசனுக்கு… ஆனால் அவன் இதை எப்போதாவது செய்தால் ரசிக்கும்படியாக இருக்கும், எப்போதுமே அப்படியென்றால்!!! கடுப்புதான் வந்தது அன்பரசனுக்கு, அந்த சிட்டின் மீதல்ல… அவனை பெற்றவன் மீது…
வளர்க்குறான் பாரு, அவனை மாதிரியே… நல்லதா நாலு வார்த்தை சொன்னா உடனே தூக்கம் வந்துரும் இந்த துரைக்கு…என்று அவர் பல்லிடுக்கில் முணுமுணுக்க, அருகிலேயே அமர்ந்திருந்த நீலா கணவரை இடுங்கும் பார்வை பார்த்து, “நீங்க எப்படி உங்க பிள்ளையை வளர்த்தீங்களோ அப்படித்தான் அவனும் வளர்க்குறான். இத்தனை வருஷமாச்சு இன்னமும் அவனை ஏதாவது சொல்லிட்டே இருக்கனும், இல்லைனா உங்களுக்கு தூக்கமே வராது…
ஆமா எனக்கு ஆசை பாரு, அவனை திட்டிகிட்டே இருக்கணும்னு…என்று அன்பரசன் பதிலுக்கு மென்குரலில் சலித்துக்கொள்ள, 
நான் தூங்கப் போறேன்…என்று எழுந்துவிட்டான் தச்சனின் சீமந்த புத்திரன்.
பெரியம்மாகிட்ட பால் வாங்கி குடிச்சிட்டு போடா சசி…என்று நீலா சொல்லி முடிப்பதற்குள் அறை வாயிலை நெருங்கி இருந்தவன், சட்டென திரும்பி,
பாட்டி ஷஷின்னு சொல்லு… பெரிய பாட்டிகூட கரெட்டா கூப்பிடுறாங்க, நீதான் எப்போதும் தப்புதப்பாவே என் பேரை சொல்ற…என்று குறை சொன்னான் ஷஷி எனும் ஷஷ்விக்… பெயர் உபயம் சாட்சாத் தச்சனேதான்… 
என் அப்பா பெயரை வைக்கணும், என் முப்பாட்டன் பெயரைத்தான் வைக்கணும்னு எதையாவது தூக்கிட்டு வந்தீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்… நீங்க பெயர் வச்ச லட்சணம் என்னோட போகட்டும். என் பையனுக்கு நான் ஸ்டைல்லா பெயர் வைப்பேன்.என்று சண்டை போட்டு தச்சன் தன் மகனுக்கு சூட்டிய பெயர் தான் ஷஷ்விக். பெயருக்கான அர்த்தம் என்னவென்று கேட்டால் மட்டும் தெரியாது என்று அனாசியமாய் உதட்டை பிதுக்குவான் தச்சன்.
பாட்டி ஷஷின்னு சொல்லு…ஷஷி அறைக்குள் நுழையாமல் நீலா சரியாய் அவன் பெயரை உச்சரிக்கும் வரை பிடிவாதமாய் நின்று அவர் சரியாய் பெயரை உச்சரித்த பின்தான் அறைக்குள் ஓடினான்.
அப்படியே அம்மாக்காரி மாதிரி பிடிவாதம்… அவ என் பையனை திருத்துறேன்னு தினம் எதையாவது அவனை சொல்லிகிட்டே இருக்கா, அவ பெத்த புள்ளை என்னை திருத்துறேன்னு தினம் கிளம்பியிருக்கான்…இப்போது அலுத்துக்கொள்வது நீலாவின் முறை அதை மறுப்பது அன்பரசனுடையது.
குந்தவை எப்போதும் சரியாத்தான் செய்யும். உன் பையன் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கான்னா அதுக்கு குந்தவைதான் காரணம்.
நீங்க அவளை விட்டுக்கொடுக்க மாட்டீங்களே…
அதெப்படி முடியும்… அம்பது சென்ட் நிலத்தில் விவசாயம் பண்ண திணறிட்டு இருந்தவன் இன்னைக்கு ஒத்தையா ஐநூறு சென்ட் நிலத்தை பார்த்துக்குறான். எனக்கு ஓய்வு கொடுத்து தினம் என்னென்ன நடக்குதுன்னு வந்து சொல்லிடுறான். இதெல்லாம் குந்தவை இல்லைன்னா முடியுமா?”
ம்க்கும்… என்கிட்ட மல்லுக்கு நிக்குறதை விட்டுட்டு பேரப்புள்ளைங்களை கவனிங்க.என்று நீலா கழுத்தை நொடித்து பார்வையை திருப்ப, இரட்டையர்கள் அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது.
இதுங்க ரெண்டும் ஷஷி கூடவே ஓடிட்டாங்களா?” என்ற கேள்வியுடன் மனைவியைப் பார்த்தார் அன்பரசன்.
ஆனால் பதிலோ அவர் அன்னையிடமிருந்து வந்தது, “நான்தான் அவங்களை உள்ள போகச் சொன்னேன்… பேரப்பசங்களை எதிரில் உட்கார வச்சிக்கிட்டு என்ன சண்டை வேண்டிக்கிடக்கு உங்க ரெண்டு பேருக்கும்… அதுவும் மகன் மருமகளை குறை பேசிட்டு இருந்தா அவங்க மனசுல இதெல்லாம் பதிஞ்சிடாதா… வயசுக்கு ஏத்த மாதிரி என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசுங்க.என்று சத்தம் போட,
கொள்ளு பேரப்பசங்க வளர்ந்ததும் உங்கம்மா பேச்சும் அதிகமாகிடுச்சு. இந்த சசி பய நல்லா கெடுத்து வச்சிருக்கான்…என்று கணவரிடம் முணுமுணுக்க,
அவங்க சரியாத்தானே சொல்றாங்க… நாம யோசிச்சு பேசணும்…என்றார் அன்பரசன். 
பேசுவோம் பேசுவோம்… ராஜாகிட்ட தீபாவளி வரிசை பணத்தை மாப்பிள்ளை அக்கவுண்ட்க்கு போட சொல்லிட்டீங்களா?”
சொல்லணும்… எவ்வளவு போடச் சொல்றதுன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன் நீலா… எப்போதும் பழம், டிரெஸ், பட்டாசு எல்லாம் வாங்கி வைப்போம். இப்போ சம்மந்தி அம்மாகூட அவங்களோடவே மலேஷியா போய்ட்டாங்க. ட்ரெஸ், பழம் எல்லாத்தாக்கும் சேர்த்து பணம் போட்டாதானே நல்லாயிருக்கும், நமக்கும் இந்த வருஷம் நல்ல லாபம் வந்திருக்கு கொஞ்சம் அதிகமா செய்யலாம்னு பார்க்கிறேன்.
செஞ்சிருவோம்… ராஜன் வீட்டுக்கு வர நேரம்தான் அவன்கிட்ட பணத்தை கொடுத்துருங்க, நாளைக்கு போட்டுருவான்.என்று நீலா சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “இன்னும் தூங்கலையா நீங்க ரெண்டு பேரும்?”என்ற கேள்வியோடு வீட்டினுள் நுழைந்தான் ராஜராஜன்.
தூங்க வேண்டியதுதான்… நீ வந்ததும் வரிசை பணம் அனுப்புறதை பத்தி பேசிடுவோம்னு உட்கார்ந்திருக்கேன்…என்று அன்பரசன் சொல்ல, 
கையோடு எடுத்து வந்திருந்த பையை நீலாவிடம் நீட்டினான். அவரோ அதை வாங்காது,
வானதி ராஜா வந்துட்டான்… தண்ணீர் எடுத்துட்டு வா…என்றதும் வானதி விரைவாய் சமையலறையிலிருந்து வந்தாள். அவளைக் கண்டதும் ராஜனின் முகம் மலர, வானதியின் பார்வையோ அவனை எடைபோட்டது. அவள் பார்வையை தவிர்க்கும் விதமாய் ராஜன் தண்ணீர் பருகிவிட்டு பழங்கள் எடுத்து வந்திருந்த பையை வானதியிடம் கொடுத்துவிட்டு அன்பரசன் அருகில் அமர்ந்து கொண்டான்.
என்ன பேசணும் அப்பா?”
சாப்பிட்டுட்டு வா. பேசுவோம்…
இல்லை சொல்லுங்கப்பா. கடையிலேயே சாப்பிட்டுட்டேன் இன்னைக்கு.
திவ்யாவுக்கு தீபாவளி சீர் செய்யணுமே… நம்மால இப்போ நேரில் வைக்க முடியாது அதுதான் மாப்பிள்ளை பேங்க் அக்கவுண்ட்டில் பணம் போடலாம்னு நினைக்கிறேன். அம்மாகிட்ட பணம் வாங்கி நாளைக்கு பேங்க் போய் போட்டு விட்டுறீயா?” என்று அன்பரசன் நிறுத்தவும், மனைவியை ஒருமுறை ஏறிட்டு மீண்ட ராஜன்,
ப்பா… எப்போதும் செய்யுறதை விட கொஞ்சம் நல்லா செய்யலாம் அப்பா… கடையிலையும் லாபம்தான். பாப்பாக்கு தங்கத்துல செயின் வாங்கிப் போடலாமா?” 
உன் பணத்தை வாங்கி சீர் செய்யுறது இல்லைன்னு இப்படி ஒரு யோசனையா… என்னால முடியுற வரைக்கும் நானே செய்யுறேன் ராஜா, சொல்லப்போனா என்னோட சேமிப்பு பணத்தோட சேர்த்து நீ கொடுக்குற பணத்தையும் தச்சன் தர்றதையும் சேர்த்துதான் இதுவரை சீர் செஞ்சிட்டு இருக்கோம். திவ்யாவுக்கு பொண்ணு இருக்கா அதனால பின்னாடி நிறைய செய்யலாம், இப்போவே நீ தனியா தங்கச் சங்கிலின்னு ஆரம்பிச்சா அவங்களும் உன்கிட்டேயும் தச்சன்கிட்டேயும் தனித்தனியா எதிர்பார்ப்பாங்க… ஒண்ணா இருக்குற குடும்பத்துக்குள்ள இதுனால சங்கடம் வந்துறக் கூடாது. எது செய்யணும்னாலும் ரெண்டு பேரும் கலந்து பேசி ஒண்ணா செய்யுங்க… தனித்தனியா செய்யுறேன்னு கிளம்புனா நீ செய்யுறேன்னு சொல்லி அவனும் செய்ய அப்புறம் உங்களை அறியாமலேயே எல்லாம் தனித்தனி ஆகிடும். பார்த்துக்கோ…என்று அன்பரசன் அழுத்தமாகவே சொல்ல, ராஜன் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாய் தலையசைத்தான்.
நான் இதை யோசிக்கலைப்பா… வருமானம் அதிகம் வருது, இருக்குறது ஒரே தங்கச்சி அவளுக்கும் அவ பொண்ணுக்கும் செய்யாம வேற யாருக்கு செஞ்சிடப் போறோம்னுதான் யோசிச்சேன்.
இனி யோசிச்சு செய்யு….என்றதோடு முடித்துக்கொண்டு, அவர் எழுந்து சென்றுவிட, வானதியின் பார்வையை தவிர்த்து ராஜனும் தன்னறைக்குச் சென்றான்.
அவனையே கவனித்துக் கொண்டிருந்த வானதி தட்டில் நான்கு தம்ளர் பாலை எடுத்துக்கொண்டு குந்தவை அறைக்குச் செல்ல, அறையை நெருங்கும் போதே தந்தையும் மகனும் வாக்குவாதம் செய்யும் சத்தம் கேட்டது.
நீ தூங்கலைன்னு எனக்குத் தெரியும். நகர்ந்து படுப்பா…என்று இறைஞ்சினான் மகன்.
தூக்கத்தில் டிஸ்டர்ப் பண்ணாம இருக்குற இடத்தில் படு.என்றான் தகப்பன்.
அம்மா அப்பாவை நகர்ந்து படுக்க சொல்லுமா… நான் உன்கூடத்தான் படுப்பேன்.தந்தையிடமிருந்து கவனம் அன்னையிடம் புகாராய் தாவியது.
உன் மேல கால் போடுவான் குந்தவை. அவனை பக்கத்துல படுக்க வச்சுக்காத.என்று உடனேயே எச்சரிக்கை பறந்தது தச்சனிடமிருந்து.
மறுப்பாய் ஷஷியும் சிணுங்கலுடன், “நான் அம்மாவை கட்டிபுடுச்சி தூங்குவேன், கால் போட மாட்டேன்..
அப்போ நான் யாரைப் புடுச்சு தூங்குறது?”
நீ போய் உன் அம்மாவை கட்டிபுடிச்சு தூங்கு…தன் வினை தன்னைச் சுடும் என்பதை உண்மையாக்கும் விதமாய் அமைந்தது ஷஷ்விக்கின் பேச்சுக்கள் தச்சனிடம்.
டேய் நாலு வயசு பையன் பேசுற பேச்சாடா இது… ஒழுங்கா என் பக்கத்துல படு…
மாட்டேன்… தினம் உன்கூட சுவரோரம்தானே என்னை படுக்க வச்சிக்குற… இன்னைக்கு நான் நடுப்புற படுத்து அம்மாகூடத் தான் தூங்குவேன்… நீ நகருப்பா…விட்டால் அழுது விடுவேன் என்றளவில் மெத்தையில் நடுவில் படுத்திருந்த தச்சனிடம் ஷஷி கெஞ்சிக் கொண்டிருக்க, குந்தவையின் அதட்டல் இருவரையுமே அடக்கியது.
ஒரு பத்து நிமிஷம் நிம்மதியா வேலை பார்க்க விடுறீங்களா ரெண்டு பேரும்… ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு ரெண்டு பேரும் இப்போ தூங்கலைன்னா நான் வெளில போய் பாட்டிகூட தூங்கிடுவேன். 
கத்தையாய் காகிதங்கள் அவள் முன்னே சிதறியிருக்க, அவர்கள் ஊரில் புதிதாய் அமையவிருக்கும் பாலத்திற்கான திட்டப்பணிகளின் கணக்கு வழக்குகளை அறையின் மற்றொரு மூலையில் அமர்ந்து சரிபார்த்துக் கொண்டிருந்தாள். பத்து நிமிடத்தில் முடிக்க வேண்டிய பணிகள் இழுத்துக்கொண்டே செல்ல, அதுதந்த கடுப்பில் இவர்களும் எண்ணையை ஊற்ற குந்தவையின் பொறுமை கட்டவிழுந்தது. 
குந்தவையின் அதட்டலுக்குப் பின் அவ்வறை அமைதியாகிவிட, சிறு தயக்கத்திற்கு பின் வானதி அறைக்கதவை தட்டினாள், “குந்தவை?”
உள்ள வாக்கா… ஷஷி பெரியம்மா பால் எடுத்துட்டு வந்திருப்பாங்க, போய் வாங்கிக் குடி…வானதியை உள்ளே அழைத்துவிட்டு மகனிடம் கட்டளை பிறப்பிக்க,
உனக்கும் எடுத்துட்டு வந்துருக்கேன். ஒழுங்கா குடிச்சிட்டு வேலையைப் பாரு குந்தவை…என்ற உத்தரவுடன் உள்ளே வந்தாள் வானதி.
வானதி வந்ததும் மெத்தையிலிருந்து தச்சன் எழுந்துகொள்ள, ஷஷி உற்சாகத்துடன் அவனிடத்தில் சென்று படுத்துக்கொண்டான். 
எழுந்துருடா பால் குடிக்கணும்…என்று மகனை முறைத்தான் தச்சன்.
எழுந்தா நீ இந்த இடத்தில் படுத்துடுவ… எனக்கு பால் வேண்டாம்.என்ற பிடிவாதம் மகனிடம்.
இவர்கள் ஒருபுறம் மல்லுக்கு நின்றால் மறுபுறம் வானதி குந்தவையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
நீயே இப்படி பால் குடிக்க மாட்டேன்னு அடம் பண்ணா உன் பையன் எப்படி குடிப்பான் குந்தவை? ஒரு தம்ளர் பால்தானே குடிச்சுடுடி…
ம்ச்… இப்போலாம் எனக்கு பாலை பார்த்தாலே குமட்டுதுடி, வேண்டாமே… 
சாப்பாடும் ஒழுங்கா சாப்பிட மாட்டேங்குற, பாலும் குடிக்கலைன்னா எப்படி சத்து கிடைக்கும்? நீ குடிக்கலைன்னா நான் அத்தையை கூப்பிடுவேன்…என்று மிரட்ட, அது நன்றாகவே வேலை செய்தது. நீலா வந்தால் அவள் குடிக்கும் வரை ஓயமாட்டார். அதனால் அவளே ஒரு தம்ளர் பாலையும் கடினப்பட்டு விழுங்கினாள். காலி தம்ளரை வாங்கிய வானதி, ஷஷியிடம் வர, அவன் இன்னுமே தன் தந்தையிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். அவர்களுக்குள் நுழைய விரும்பாதவளாய்,
நான் இங்க வச்சிட்டு போறேன், புல்லா காலி பண்ணிடனும் ஷஷி.என்க, 
இதோ ஷஷியையும் கூட்டிட்டு போங்க…. அங்கேயே அழகியோடவும் அழகனோடவும் பால் குடிச்சிட்டு தூங்கட்டும்.என்று மகனை திசைதிருப்பி அங்கு அனுப்பப் பார்க்க, வானதியின் விழிகள் ஒரு நொடி அதிர்ந்து பின் சங்கடமாக மாறி, “இல்லை, இன்னைக்கு பசங்க பாட்டிகூட படுக்கப் போறாங்க…என்றாள்.
அப்போ சூப்பர்ல… ஷஷி குட்டி இன்னைக்கு பெரிய பாட்டிகிட்ட கதை கேட்டுகிட்டே அவன் அண்ணன் அக்காகூட ஜாலியா தூங்குவான்…பேச்சில் உற்சாகத்தை தூவி ஷஷ்விக்கின் மனதை மாற்ற முயன்றான் தச்சன்.
அவன் வெளிப்படுத்திய செய்தியிலிருந்த சுவாரசியத்தில் ஷஷிக்கு அங்கு செல்லவும் விருப்பம், அன்னையுடனே இருக்கவும் விருப்பமென குழப்பமாய் நின்றவன் குந்தவையை புரியாத பார்வையுடன் பார்க்க, அவளோ அவனை அருகில் அழைத்தாள். ஆர்வமாய் மெத்தையிலிருந்து இறங்கி அவன் குந்தவையிடம் ஓட, காகிதங்களை ஒதுக்கி வைத்தவள் தன்னை வந்து கட்டிக்கொண்ட மகனை தூக்க, “பார்த்து தூக்குடி…என்ற பதறல் தச்சனிடமிருந்து. அவனிடம் கண்சிமிட்டியவள் மகனை மடியில் அமர்த்திக்கொண்டாள்.
வானதி பாலை கொடுத்துட்டு நீ போ…என்று சொல்ல நொடி, வானதி ஷஷ்விக்கிற்கு கொடுக்க வேண்டிய பாலை சட்டென குந்தவை எதிரில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

Advertisement