Advertisement

திருமணத்தன்று எப்படி இருந்தானோ அதேப்போல கால் மேல் கால்போட்டு காலை ஆட்டிக்கொண்டு மேல்சட்டையின்றி மெத்தையில் படுத்திருந்தான் தச்சன். சிந்தனையுடன் வந்தவள் கருத்தில் அதெல்லாம் பதியாமல் போக, தேமேவென அலைபேசியில் அலார்ம் வைத்தபின், விளக்கை அணைத்துவிட்டு மெத்தையில் அவனைத் தாண்டி சுவரோரம் படுத்துக்கொண்டாள். தன்னை கவனிப்பாளா என்று பொறுத்து பொறுத்துப் பார்த்தவன், அவளிடமிருந்து அசைவில்லை என்றவுடன் சீண்டும் பொருட்டு அவள் மீது கை போட, திடுகிட்டவள் திரும்பவெல்லாம் இல்லை தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன் இடையில் விழுந்திருந்த அவன் கரத்தின் மீது தன் கரத்தை வைத்துக்கொண்டாள் குந்தவை.
அவளது அமைதியில் மனம் சோர்ந்துபோக, கையை உருவிக்கொண்டவன் அவளை வலுக்கட்டாயமாக தன்புறம் திருப்பி, தாடையை அழுத்திப் பிடித்து, “ப்ச்… என்னடி பிரச்சனை உனக்கு?”
விழிகள் கேள்வியுடன் அவனை நோக்க, வார்த்தைகள் அகத்தை திறந்தது, “அத்தையை எப்படி அணுகுறதுனே தெரியல…”
“எதுக்கு நீலாவை பார்த்து இப்படி பயப்படுற? என்கிட்ட என்ன பேச்சு பேசுன, அதே மாதிரி நேரா அம்மாகிட்டேயே போய் பேசிட வேண்டியது தானே?”
“தெரியாத மனிதர்களிடமும் நமக்கு ரொம்ப நெருக்கமானவர்களிடமும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாய் எப்படி வேண்டுமென்றாலும் தைரியமா பேசிடலாம். தெரியாதவங்க கடந்து போயிடுவாங்க, நெருக்கமானவங்க நம்ம பேச்சுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை புரிஞ்சிப்பாங்க. ஆனால் இந்த ரெண்டுகெட்டான்… நமக்கு வேண்டியவங்க ஆனால் நெருக்கம் இல்லாதவங்க அவங்களை பகைச்சிக்க முடியாது. தணிஞ்சி தான் பேசணும்.”
“என்னை மட்டும் காய்ச்சி எடுத்த இப்போ என் அம்மாவுக்கு மட்டும் இவ்வளவு யோசிக்குற?”
“அப்போ என் பின்னாடி எனக்கு ஆதரவா என் அப்பா இருந்தாங்க. நீ செய்யுறது எல்லாமே சரியா இருக்கும்னு சொல்லி சொல்லியே என்னை ஊக்கப்படுத்துவாங்க. எவனா இருந்தாலும் பார்த்துக்கலாம்னு தைரியமா பேசுனேன் ஆனால் இப்போ அவர் இல்லையே…” என்று சொல்லும்போதே விசும்பல் வெளிப்பட்டது.
“ச்சு… நீ தைரியசாலின்னு நினைச்சேன்… நீ என்ன அப்பா அப்பான்னு உன்னையே நீ தொலைக்குற…”
“நான் சரியா செய்வேன்னு சொன்ன அப்பாவையே என்னோட வீம்பால பேசாம இருந்து அவரை மேல அனுப்பிட்டேன். இனி யாரையும் நான் பகைச்சிக்குறதா இல்லை. இருக்குறவரை நம்மை சுற்றி உள்ளவங்க மனசு நோகாம பார்த்துக்கணும், ஆனால் அது முடியுமான்னு தெரியல… நான் சரியா இருக்குற மாதிரி தான் எனக்குத் தோணுது ஆனால் அது மற்றவர்களுக்கு தப்பா தெரியுது. இதை எல்லாம் எப்படி மாத்தப்போறேன்? இல்லை நானே மாறப் போறேனா எதுவுமே எனக்குப் புரியல… ஒரே குழப்பமா இருக்கு.” என்று அவள்பாட்டிற்கு பேசிக்கொண்டு செல்ல, அடங்கி அமைதியாய் அவனின் ஆதரவை யாசித்து காத்திருக்கும் தெளிவற்ற குந்தவையையும் பிடிக்கவில்லை அவனுக்கு. 
“பிரியாணி தான் இல்லைனு பார்த்தால் இப்போ நீ தயிர்சாதமாகவும் இல்லைடி… நீலாவையே நினைச்சிக்கிட்டு இருக்காத? அவங்க பையனையும் கொஞ்சம் கவனிடி…” என்றவன் குனிந்து அவள் கன்னத்தில் வலியாது கடித்துவிட்டு அவளைக் காண அவளிடம் மறுப்புக்கான சாத்தியகூறு தெரியவே இல்லை.
“என்னடி அமைதியா இருக்க? தள்ளிவிடுவ இல்லைனா கன்னத்திலே பளாருன்னு ஒன்னு விடுவேன்னு எதிர்பார்த்தேன்.” என்று வியப்பாய் வினவ, மெல்லிய முறுவல் மட்டுமே அவளிடம்…
“என்னடி சிரிக்குற?”
“பிரியாணி விருந்து கேட்டுட்டு அது கிடைக்கும் போது என்ன தொனதொனணு பேச்சு வேண்டிக்கிடக்கு உனக்கு?” என்று மையலாய் பேசியவளை நம்பாமல் பார்த்தான் தச்சன்.
“ஏய் என்னடி ஒரு மார்க்கமா பேசுற?”
“வேண்டாம்னா போடா…” என்று நகைப்புடன் அவனை தள்ளிவிட்டு திரும்பி படுத்துக்கொள்ள, அதற்கு மேலும் அவனின் நிலையை கேட்கவும் வேண்டுமா… உருண்டு அவளையும் சுவரோடு தள்ளி அணைகட்டியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக்கொள்ள, சீரற்ற மூச்சுகளும், எண்ணிலடங்கா முத்தங்களும், மிச்சங்களும் போட்டி போட்டுக்கொண்டு அடுத்தடுத்து அரங்கேற அவளின் கொலுசொலி மட்டுமே அங்கு மொழி பேசின.
ஓய்ந்து போய் நடுநிசியில் தூங்கியவர்கள் விடிந்தது தெரிந்தும் விழி பிரிக்கவே பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.
“எனக்கு தூக்கம் வருதுடா… ஆனால் அலார்ம் அடிச்சிடுச்சு.” என்று அறைதூக்கத்தில் பிதற்றிகொண்டே அவன் நெஞ்சில் இவள் பிராண்ட,
“ச்சு… பேசாம தூங்குடி…” அவன் அதட்டி அவள் கரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.
“முதல் நாளே தாமதமா எழுந்தா நல்லாயிருக்காது…” என்று இடைவெளி விட்டு வார்த்தைகளை வீசியவள் முகத்தை அவன் நெஞ்சத்தில் தேய்த்து சோம்பல் முறிக்க முயன்றாள்.
அவளின் தீண்டலில் நெளிந்தவன், புருவம் சுருக்கி, “மனுஷனை ராத்திரியும் தூங்கவிடுறது இல்லை இப்போவும் விடுறது இல்லை.” என்று முனுகிக்கொண்டே விழித்தவன் அவளை புரட்டிப்போட்டு, போட்ட கோடுகளை திரும்ப போட ஆரம்பிக்க, தன் இதழில் ஊர்ந்து உட்புக முயலும் அவனது அதரங்களை தடுத்து ஒருவழியாய் விழித்தாள் அவள்.
“கெட்டப்பையன்டா நீ…” தூங்கி எழுந்து சோபைக் குரலில் அவனை மையலுடன் நோக்க,
துரித முத்தங்களை அவள் முகத்தினில் வாரியிறைத்து, “ரொம்ப ரொம்ப கெட்டப்பையன் இந்த குந்தவைக்கு.”
அவன் முகத்தினை பிடித்து தடுத்து நிறுத்தியவள், “ஆனால் இந்த குந்தவை இப்போ நல்ல்ல மருமகளா நடந்துக்கணும்… சோ நகரு, நான் குளிச்சிட்டு வந்துறேன்.” என்கவும், அவளுக்கு வழிவிட்டவன் தன் மேல்சட்டையை மாட்டிக்கொண்டே,
“ஆனால் நீ அந்தர்பல்டி அடிச்சிட்டடி… நீ இருந்த பார்முக்கு எப்படியும் முதல் கல்யாண நாள் வரைக்கும் நான் பிரம்மசாரி தான்னு நினைச்சேன்…” என்று இயல்பாய் சொல்ல அவள் சொன்ன பதிலில் இவன் முகம் சுருங்கியது.
“எப்படியும் வாழ்ந்து தானே ஆகணும். அது நேற்றா இருந்தா என்ன இன்னும் ஒரு வருஷம் கழிச்சி நடந்தால் என்ன?” என்றவள் தன் துணிகளை எடுத்துக்கொண்டு வெளியேற முயல, அவளை தடுத்தவன், “என்ன இப்படி சுரத்தையே இல்லாம சொல்ற?”
அவனை கூர்ந்து பார்த்தவள் மென்னகை பூசிக்கொண்டு, “இதுக்கு பிரியாணியோட பதில் வேணுமா இல்லை தயிர்சாதத்தோட பதில் வேணுமா?”
“என்னடி புதிர் போடுற? ரெண்டு பதிலையும் சொல்லு…”
கண்களை சிமிட்டியவள் அவனை நெருங்கி அவன் விழிகளில் விழி கலந்து, அவன் கன்னத்தை கரங்களில் தாங்கி, “ரெண்டு பதிலும் ஒன்னு தான். அப்பாவுக்கு செய்ய வேண்டிய கடமையை உரிமையா நான் செய்யுறேன்னு சொன்ன போது யாருமே என்கூட நிக்கல… நீங்க மட்டும் தான் இருந்தீங்க எனக்காக… என் வீட்டில் கூட யாருமே என் சார்பா பேசல… என்னோட உரிமையை கேட்டபோது தப்புனு தான் சொன்னாங்க, ஆனால் நீங்க எனக்காக செஞ்சீங்க. நான் எவ்வளவு முற்போக்கா பேசினாலும் அது சபையில் எடுபடல… நிதர்சனம் வேறு கோட்பாடுகள் வேறாக இருந்துச்சு, ஆனால் நீங்க அதை இணைச்சீங்க. அதுக்கான மதிப்பும், நன்றியுணர்வும் என்னைக்கும் என்கிட்டே இருக்கும்.”
அவளது பதிலில் கடினம் ஏறிக்கொள்ள, கன்னத்தில் இருந்த கரத்தினை வேகமாய் உதறியவன், “மண்ணாங்கட்டி… நன்றிக்காக செஞ்சியா இதெல்லாம்… இன்னொரு முறை இப்படி பேசுன கொன்னுடுவேன் உன்னை… ஒழுங்கு மரியாதையா உனக்கு நீயே போட்டுட்டு இருக்கும் திரையை விட்டு வெளியே வா… எனக்கு அந்த குந்தவையைத் தான் பிடிச்சிருக்கு. போலியா வாழுற இவளை இல்லை.” என்று ஆள்காட்டி விரலை அவள் புறம் நீட்டிச் சொல்ல, இதழை இறுக பூட்டிக்கொண்டவள் அவனிடம் எதுவும் சொல்லாமல் குளிக்கவென அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.
செல்லும் அவளையே கடுப்புடன் பார்த்து நின்றவன் காற்றிலேயே ஒரு குத்து விட்டான்.
ஆமாம். அவனும் அப்படித்தான் நினைத்தான். எப்படியும் வாழத்தானே போகிறோம் அது எப்படி நடந்தால் என்ன என்று… ஆனால் இப்போது அது இனிக்கவில்லையே. வெளியில் தித்திப்பாய் காட்டிகொண்டு உள்ளே கசப்பாய் இருப்பதற்கு பதில் முன்பு போல வெளியில் காட்டமாய் உள்ளே தித்திப்பாய் இருந்தது கூட இனிப்பாய் தானே இருந்தது.
“தச்சா… டேய் எழுந்தியா இல்லையா?” என்று அன்பரசனின் சத்தமான குரல் அவனை மேலும் சிந்திக்கவிடாமல் செய்ய, சிகையை சரிசெய்து கொண்டு வெளியே சென்றான்.
“என்ன?” என்று அலட்சியமாய் கேட்டுகொண்டே முற்றத்திற்கு வர அங்கு அன்பரசன் கோபமுடனும், நீலா அவர் அருகிலேயே கையை பிசைந்துகொண்டு நின்றார்.
“என்னடா பண்ணி வச்சிருக்க நிலத்துல? எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னேன் மண்ணை பொன் போல பார்த்துக்கணும்னு. நீ என்ன செஞ்சிருக்க? உன் பிரண்டுனு ஊருக்குள்ள திரியுற மொத்த ஊதாரியும் உனக்கு கொடுத்த நிலத்தில தான் கும்மியடிச்சிட்டு திரியுது. இதுதான் நீ விவசாயம் பாக்குற லட்சணமா? ரெண்டு நாள் அங்க போகமுடியலைன்னு இன்னைக்கு காலையிலேயே அங்கு போய் பார்த்தா பாதி பயிரை எலி நாசம் பண்ணிட்டு போயிருக்கு மீதியை உன் பிரெண்டு கூட்டம் சிகரெட், சாராய பாட்டிலை போட்டு நாசம் பண்ணி வச்சிருக்கானுங்க… ஏற்கனவே நீயும் குடிச்சிட்டு அந்த இடத்தில கூத்தடிச்சதால தான் உனக்கு எதுவுமே கொடுக்காம இருந்தேன். இப்போ கல்யாணம் ஆகப்போகுது உருப்படியா இருப்பேனு பார்த்தால் திரும்பவும் நீ எதுக்கும் லாயக்கு இல்லைன்னு நிரூபிச்சிட்ட… உன்னை நம்பி பொன்னையும், பொண்ணையும் கொடுத்துட்டேன் அதுக்காகவாவது இனி ஒழுங்கா இருக்குற வழியைப் பாரு…” என்று கத்திவிட்டு அன்பரசன் சென்றுவிட நீலாவும் அவரை சமாதானப்படுத்த அவர் பின்னேயே சென்றார்.
வீறாப்பாய் பேசி வாங்கிய நிலத்தை வைத்து எவ்வளவோ சாதிக்க வேண்டும் என்று எண்ணமிட்டிருக்க, அதில் குணாவையும் கூட்டு சேர்த்து வேலைகள் செய்திருக்க அது அனைத்தும் வீண் எனும் விதமாய், மீண்டும் தோற்றுவிட்டாய் என்று தந்தை குத்திக்காட்டி பேசியது ஈட்டியாய் பாய்ந்து அவனை கூனிக் குறுகச் செய்தது. ஏற்கனவே குந்தவையின் பேச்சில் சுணங்கியிருந்த மனம் தந்தையின் பேச்சில் முற்றிலும் துவண்டுவிட இதுபோன்ற நேரங்களில் எப்போதும் அவனுக்கு துணையாய் இருப்பதையே இப்போதும் தேடிப் போனான். வீட்டினில் எப்போதும் செய்ததில்லை ஆனால் இன்று மனம் அதை நாடிச் செல்ல, வேகமாய் ஒரு சிகரெட்டை எடுத்தவன் கொல்லைக்குச் சென்று தன் மனப்புகைச்சலை சுருள் சுருளாய் புகை விட்டு தள்ளினான்… அவன் ஆவலாய் எதிர்பார்த்த அதிரிபுதிரியான அசல் பிரியாணி தயாராகி வரப்போவது தெரியாமல்…
 
 

Advertisement