Advertisement

“அந்த பொண்ணே இப்போ தான் அப்பாவை இழந்து நிக்குது. அதுகிட்ட ஆதரவா நாலு வார்த்தை பேசு, சும்மா தேவையில்லாததை மனதில் போட்டு குழப்பிக்காத…” என்று அன்பரசன் சொல்லியிருக்க,
“என்னமோ எனக்கு மட்டும் தான் அவங்க செஞ்ச காரியத்தில் விருப்பம் இல்லை என்கிற மாதிரி பேசுறீங்க? உங்களுக்கும் ஈமச் சடங்கில் தச்சனும், குந்தவையும் நடந்துகிட்டது பிடிக்கல தானே?” என்று எதிர்கேள்வி எழுப்பியிருந்தார் நீலா.
“அதில் எனக்கும் வருத்தம் தான். ஆனால் அதை வெளிகாட்ட இது நேரம் இல்லை நீலா. நம்ம பையன் கல்யாணம் நடந்து இன்னும் ஒருவாரம் கூட முடியல அதுக்குள்ள நம்மை மனசு அறிந்து அந்த பொண்ணு நடந்துக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாது. போக போக நம்ம குடும்பத்துக்கு எது சரிவரும் வராதுனு நீ தான் எல்லாத்தையும் குந்தவைக்கு சொல்லிக் கொடுக்கணும். நாளைக்கு இந்த குடும்பத்தை வழிநடத்த போறது குந்தவை தான். அதற்கு அவளை தயார்படுத்தணும் அதை விட்டுட்டு பயந்துட்டு இருக்காத… நம்ம காலம் வேற இப்போ இருக்குற காலம் வேற… பசங்க வெளிப்படையா சில விஷயங்களை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இவனும் அந்த ஆர்வகோளாரில் தான் இயல்பா குந்தவை மீது இருக்கும் தன்னோட விருப்பத்தை வெளிப்படுத்துறானே ஒழிய அதன் வெளிப்படைதன்மைக்கு பின்னாடி நம்ம மேல இருக்குற பாசம் குறைஞ்சிட்டதா அர்த்தம் இல்லை. குடும்பத்தோட ஒற்றுமை குந்தவை கையிலும் உன் கையிலும் தான் இருக்கு. தச்சன் உன் கையிலேயே இருக்குறதும் உன்னோட செயலில் தான் இருக்கு. அவன் இப்போ நமக்கு பையன் மட்டுமில்லை குந்தவைக்கும் உரிமைப்பட்டவன். புரிஞ்சி நடந்துக்கோ…” என்று அன்பரசன் நீண்ட விளக்கம் கொடுத்திருக்க, நீலாவும் சற்று ஆசுவாசமானார்.
ஆனால் அதெல்லாம் குந்தவையின் வார்த்தை பிரயோகங்களை கேட்டதும் பின்னே சென்றுவிட்டது. என்ன இவள் மட்டுமரியாதை இல்லாமல் என் பையனை ஒருமையில் பேசுகிறாள் என்று குந்தவையின் மீது முதலில் கடுப்பு வர, மகன் முகத்தில் தெரிந்த அவளது வார்த்தைகளுக்கான பிரதிபலிப்பு பயத்தை இன்னுமே கிளப்பிவிட்டது, ‘என்னவோ பரிசு வாங்குன மாதிரி இப்படி பல்லை காண்பிக்கிறான்,’ என்று செல்லும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டார்.
“என்னம்மா சிலை மாதிரி நிக்குற? பாட்டி கசாயம் கேட்டாங்க. கொதிக்க விட்டிருக்கேன், கொதிச்சது போதுமான்னு வந்து பாரேன். எனக்கு பதம் தெரியல.” என்று திவ்யா வந்து அவரை உசுப்பும் வரை அப்படியே நின்ற நீலா, ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு சமையலறைக்குச் சென்றார்.
தயங்கித் தயங்கி அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்த குந்தவையும் இவர்களை தொடர்ந்து வந்து,
“நைட்டுக்கு என்ன செய்யணும் அத்தை?”
நீலா திரும்பி ஒருபார்வை பார்த்தவர் மீண்டும் பார்வையை அடுப்பின் மீது பதித்து கசாயத்தை கலக்கிவிட்டபடியே, “தச்சன் ராத்திரி டிபன் தான் சாப்பிடுவான். அவனுக்கு மட்டும் ஏதாவது செஞ்சிடு.” என்க,
“மத்தவங்களுக்கு எல்லாம்?”
“மதியம் வடிச்ச சோறு தான்.” என்க, அந்த பதிலில் குந்தவையின் முகம் சுருங்கியது. அவளுக்கு இரவில் சாதம் சாப்பிடவே பிடிக்காது. அதற்காகவே அவர்கள் வீட்டில் பழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். இங்கு?
“எல்லோருமே சூடா டிபன் சாப்பிடலாமே அத்தை? எப்படியும் அவருக்கு டிபன் செய்யணும் தானே அப்படியே எல்லோருக்கும் சேர்த்து செஞ்சிடலாமே?” என்று தயக்கத்தை உடைத்து அந்த வீட்டினுடன் ஒன்ற முயல்வோம் என்று முதல் அடி எடுத்து வைத்தாள் குந்தவை.
“இதையேத் தான் நானும் அடக்கடி சொல்றேன். இந்த அம்மா கேட்க மாட்டேங்குறாங்க… அம்மா நம்ம வீட்டு புதுவரவே சொல்லியாச்சு… டிபனே செய்யலாம்மா…” என்று திவ்யா நச்சரிக்க,
“சோறு வீணாகிடுமே…” மகள் சொன்ன பிறகு கொஞ்சம் இறங்கி வந்தார் நீலா…
“மாட்டுக்கு வச்சிடலாம்.”
“மாடு இருக்கா இங்க?” என்று குழப்பமாய் கேட்டாள் குந்தவை.
“நீங்க பார்க்கலையா? நம்ம வீட்டு இடது பக்கம் தான் மாட்டுக் கொட்டகை இருக்கு.”
“கவனிக்கல அண்ணி.”
“நைட் டிபன் நானே செஞ்சுக்குறேன். திவ்யா நீயும் குந்தவையும் போய் பால் கறக்குறவங்க வாடிக்கை பால் ஊதிட்டு வந்து எல்லாத்தையும் சுத்தம் செய்ய ஆரம்பிச்சிருப்பாங்க, அதை மேற்பார்வை பாருங்க. அப்படியே செடி எல்லாத்துக்கும் தண்ணி ஊத்துங்க.” என்று அனுப்பி வைக்க, திவ்யா குந்தவையை தள்ளிக்கொண்டு வெளியே வந்து, “உங்க புண்ணியத்தில் இன்னைக்கு டிபன்…” என்று குதூகளித்துக் கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு அழைத்துச் செல்ல,
“எனக்காக இல்லை அண்ணி உங்களுக்காகத் தான் டிபன் செய்ய ஒத்துட்டு இருப்பாங்க.” என்று குந்தவை மறுக்க, அதை காதில் வாங்கவே இல்லை திவ்யா.
மாட்டுக் கொட்டகையை நெருங்க நெருங்க மாட்டின் சாண வாடையில் தன் துப்பட்டா கொண்டு மூக்கை மூடிக்கொண்டாள் குந்தவை. அதையே விசித்திரமாய் பார்த்த திவ்யா, “என்ன இதுக்கே இப்படி ஆகிட்டீங்க?”
“இல்லை எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை.” திவ்யா எதுவும் தவறாய் எடுத்துக்கொண்டு வீட்டினில் சொல்லி இதுவேறு பிரச்சனை ஆகிவிடுமோ என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் குந்தவை.
“பரவாயில்லை இனி பழகிக்கோங்க.” என்று திவ்யா முடித்துக்கொள்ள, அழுத்தத்தில் அமிழ்ந்து உருமாறியிருந்த குந்தவையின் இயல்பு அவளை நிம்மதியாய் இருக்கவிடவில்லை. அனைத்தையும் பார்க்க பார்க்க ஏதோ ஒரு அழுத்தம் வந்து எறிக்கொண்டது. எல்லாவற்றிற்கும் தயங்கித் தயங்கி உணர்வுகளை மறைத்து அடுத்தவர் வாய் பார்த்து நிற்பது எரிச்சலை தருவதாய் இருந்தாலும் தந்தையின் இழப்பு நினைவு வந்து, அமைதியாய் அனைத்தையும் கையாண்டு விட்டுக்கொடுத்துப் போகவேண்டும் என்று எடுத்திருந்த முடிவை நியாபகப்படுத்தி அவளை அமிழ்த்தியது.
குந்தவையின் அமைதியை உணர்ந்த திவ்யா நட்பாய் புன்னகை உதிர்த்து, “நீங்க பயப்பட வேண்டாம். இதெல்லாம் மேற்பார்வை பார்த்தால் போதும் அண்ணி. உங்களுக்கு பெருசா இங்க வேலை இருக்காது. வாடிக்கையா ஒரு இருபது வீட்டுக்கு கொடுப்பதால ஆள் வச்சி தான் எல்லாம் செய்றோம்.”
“நம்மோட தோட்டம், வயல் எல்லாம் இங்கிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கு அண்ணி. மெயின் ரோட்டுக்கு போய் ஊருக்கு மறுபக்கம் போகணும். நடந்து அங்கே போறதுக்குள்ள சோர்வாகிடும் நீங்க இன்னோரு நாள் பைக்கில் அண்ணனோட போய் பாருங்க.”
திவ்யாவின் பேச்சுக்கள் குந்தவையின் மனதை வெகுவாய் சாந்தப்படுத்த, அவளுமே இயல்பாய் இருக்க முயன்றாள், “இந்த ஊரே அமைதியா இருக்கு.” 
“ஆமா ஆமா… சின்ன ஊரு தானே அண்ணி. சின்னதும் பெருசுமா மொத்தமே பத்து தெரு தான் இருக்கும்.” என்று பதில் சொல்லிக்கொண்டே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச ஹோஸ் பைப்பை சொருக, “குடுங்க அண்ணி நான் செய்றேன்.” என்று குந்தவை இடைப்புகுந்தாள்.
“ஆரம்பத்தில் இதெல்லாம் செய்யணும்னு நமக்கு ஆசையா தான் இருக்கும் ஆனால் போகப்போக எவ்வளவு வேலை தான் செய்யுறதுன்னு சலிப்பு வந்துடும். இனி இதெல்லாம் நீங்க தானே செய்யப் போறீங்க இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.” என்று திவ்யாவே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச, குந்தவை அமைதியாய் நின்றுகொண்டாள். 
வாழ்க்கை இனி எப்படி செல்லப் போகிறது என்ற நிலையற்ற தன்மை நிலைத்திருக்க அனைத்தையும் மெளனமாய் கடப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை குந்தவைக்கு. 
சொன்னபடியே நீலாவே அனைவருக்கும் இரவு உணவு தயாரித்து வைத்திருக்க, குந்தவை அந்தி பொழுது முழுதும் திவ்யாவையே வால்பிடித்துக் கொண்டு சுற்றினாள். நீலாவை இவளும் நெருங்கவில்லை அவரும் இவளை கண்டுகொள்ளவில்லை.
இரவு உணவின் போது அனைவருமே முற்றத்தில் சுற்றி அமர்ந்திருக்க,
“என்ன இன்னைக்கு எல்லோருக்கும் டிபன் செஞ்சுருக்க?” என்று அன்பரசன் விளிக்க,
துரிதமாய் வந்தது திவ்யாவின் பதில், “அண்ணி உபயம்.”
அதைவிட விரைவாய், “ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டாங்களா?” என்று வந்து விழுந்தது தச்சனின் வியப்பு.
“அதுக்குத் தான் முயற்சி பண்றேன்,” என்று திவ்யா முணுமுணுக்க, நீலா தன் மக்கள் இருவரையும் ஒருசேர முறைத்துவிட்டு,
“திவ்யாவும் குந்தவையும் கேட்டாங்க, அதுதான் செஞ்சேன்.” என்று பொதுவாய் சொல்ல, அவர் மனதில் என்ன ஓடுகிறது என்று அன்பரசனாலே கண்டுகொள்ள முடியவில்லை.
“சரி சரி… உங்களுக்கு கஷ்டமா இல்லைனா தினமும் எல்லோருக்கும் இதுவே செஞ்சுடுங்க.” என்று பொதுவாய் சொல்லிவிட்டு அன்பரசன் உணவில் கவனம் செலுத்த, தச்சன் பார்வையாலே குந்தவையிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தான். அவள் கண்டுகொள்ளவே இல்லை, தன் வாழ்க்கை மொத்தமும் அந்த உணவுத் தட்டில் இருப்பது போன்று அதிலிருந்து பார்வையை விலக்கவே இல்லை.
உண்டு முடித்த பார்த்திரங்களை திவ்யா கொல்லையில் எடுத்துக்கொண்டு போய் போட, அதை தேய்க்க அமர்ந்தாள் குந்தவை. தன் வீட்டினில் நின்று கொண்டே சிங்க்கில் எல்லா பாத்திரங்களையும் தேய்த்து பழகியவளுக்கு இங்கே சிறிய குண்டுபல்ப் வெளிச்சத்தில் கீழே வாகாய் ஊனி அமரவே கடினமாய்த் தான் இருந்தது. எப்படியோ துப்பட்டாவை அங்குமிங்கும் சுற்றி ஒழுவழியாய் அமர, நீலா வேகமாக வந்து, “நீ போய் தூங்கு குந்தவை. நான் காலையில் தேய்ச்சிகிறேன்.”
“இல்லைத்தை… நீங்க தானே எல்லா வேலையும் பார்க்குறீங்க. நானும் கொஞ்சம் செய்றேன்.” என்று இவள் மறுக்க,
“சொன்னா கேட்டுகணும் குந்தவை. எல்லோரும் தூங்கப் போயாச்சு, நீயும் போ…” என்று அழுத்தமாய் சொல்ல அதை மறுக்க முடியவில்லை குந்தவையால்… அப்படியே போட்டுவிட்டு எழுந்தவள் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்தாள்.
“என்ன வேணும்?”
“இல்லை இங்க இவ்வளவு இருட்டா இருக்கு…” என்று இழுத்தவள் உடனேயே, “ஒன்னுமில்லை…” என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி இருந்த கழிவறை நோக்கி இருட்டில் வேக எட்டுக்கள் வைத்து நடந்தாள். அவள் என்ன கேட்க வந்திருப்பாள் என்பதை உணர்ந்த மங்களம் நடந்து செல்லும் வழியின் லைட்டை போட்டுவிட்டு அவள் வரும்வரை கழிவறை அருகிலேயே நின்றார். திரும்பி வந்த குந்தவை அங்கு பரவியிருந்த வெளிச்சத்தையும் நீலாவையும் பார்த்து திகைத்து பின் அவர் செல்வதற்காக நிற்கிறார் என்று நினைத்துக்கொண்டு தள்ளி நடக்க, அவரோ இவள் பின்னேயே வந்தார்.
“லைட் சுவிட்ச் இங்க தான் இருக்கு,” என்று ஓரிடத்தை காட்டியவர், “இருட்டில் தனியா வர பயமா இருந்தால் தச்சனை கூப்பிட்டுகோ, இல்லைனா என்னை கூப்பிடு.” என்று சாதாரணமாய் சொன்னவர் உள்ளே நுழைந்ததும் இரும்புக்கதவை பூட்டிவிட்டு மரக்கதவையும் சாற்றி, “தினம் எல்லா லைட்டும் அமர்த்தியாச்சான்னு பார்த்துட்டு இந்த ரெண்டு கதவையும் நல்லா பூட்டிடணும். திருட்டு பயம் இல்லைதான் ஆனால் அதுக்காக அலட்சியமாக இருக்கமுடியாதே…”
எல்லாம் தெரிந்து கொள்ளட்டும் என்று அவளுக்கு தகவல் சொல்கிறாரா இல்லை இனி இதெல்லாம் நீதான் செய்ய வேண்டும் என்பதற்காக சொல்கிறாரா இல்லை உடன் வருகிறாளே என்று பேச்சு கொடுக்க இதெல்லாம் சொல்கிறாரா என்று புரியாமல் விழித்தாள் குந்தவை.
“என்ன முழிச்சிகிட்டு நிக்குற? போய் தூங்கு.” என்றுவிட்டு நீலா சமையலறை விளக்கை அணைக்க, யோசனையோடே தங்கள் அறைக்குச் சென்றாள்.

Advertisement