Advertisement

*8*
மாலை வேலையெல்லாம் முடித்து வீட்டிற்குள் நுழைந்ததுமே தனக்கு தண்ணீர் எடுத்து வந்து நீட்டியவளை ஆச்சர்யமாய் பார்த்த அன்பரசன், “என்னமா அதுக்குள்ள வந்துட்ட? பரீட்சை முடிஞ்சதும் அனுப்பி வைக்குறேனு தகவல் சொன்னாங்க?”
“இங்கிருந்தே போயிக்கிறேன் மாமா. புக் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்ற குந்தவை சங்கடமாய் முறுவல் உதிர்க்க, அன்பரசனின் பார்வை கேள்வியுடன் நீலாவை தேடியது.
“எப்படி வந்த மா? சங்கடம் ஒன்னும் இல்லையே. இன்னும் ரெண்டு நாள் அங்கேயே தங்கிட்டு வந்திருக்கலாம் உங்க அம்மாவுக்கும் ஆறுதலா இருந்திருக்கும்.”
“அவங்க தான் வண்டியில் கூட்டிட்டு வந்தாங்க மாமா. இப்போ தான் வந்தோம். எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. அம்மாவும் இருந்துப்பாங்க.” என்று வாய் தான் மொழிந்ததே ஒழிய மனம் முழுதும் அவள் பிறந்தகத்தில் தான் இருந்தது. 
எப்படி சமாளிக்கப் போகிறார்களோ? என்ன செய்யப் போகிறார்களோ?… சேமிப்பை வைத்து அத்தியாவசிய தேவைகளை சமாளித்துவிடும் அளவுக்கு இருப்பு இருக்கிறது ஆனால் வரும் மாதங்களுக்கான வீட்டு வாடகை, திருமணத்திற்கு என்று வாங்கிய ஒருலட்ச ரூபாய் கடனுக்கான வட்டி, நிரந்தர மாத வருமானமின்மை என்று கழுத்தை நெருக்கும் நிலை தான் வீட்டினில்… பரீட்சை துவங்கவே இன்னும் ஒருவாரத்திற்கு மேல் அவகாசம் இருக்க, அதன் பிறகு பரீட்சைக்கு இடையில் படிக்கவென கிடைக்கும் விடுமுறைகள் சேர்த்து பரீட்சை முடியவே ஒருமாதம் ஆகும். அதுவரை அங்கு தங்கியிருந்து அனைத்திற்கும் ஏதாவது வழி ஏற்படுத்தி தீர்வு கண்டுவிட வேண்டும் என்ற நினைப்பில் தான் பரீட்சையை காரணம் காட்டி அங்கேயே தங்குகிறேன் என்று சொல்லியிருந்தாள். அதற்கு வேட்டு வைக்கும் விதமாய் நீலா வருத்தம் தெரிவித்துவிட, அவளுக்குமே இந்த நேரத்தில் எவரையும் பகைத்து கொண்டு வாழ விருப்பமில்லை. நீலாவிடம் பேசுகிறேன் என்று தச்சனிடம் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த நொடி நீலாவின் அலைபேசி எண் கூட தன்னிடம் இல்லை என்பது புரிய, தவறு தன்மீது தானோ என்ற எண்ணம் ஆழமாகியது. தச்சனிடம் சண்டை மட்டுமே போட்டிருக்கிறாள் அதைத் தவிர்த்து அந்த குடும்பத்தில் தான் இன்னும் ஐக்கியமாகவில்லை என்ற பிழை உணர்ந்தவுடன் சுமதியிடமும் விஷயத்தை கூற, சுமதி அவளை பேக் செய்து உடனே திருநறையூருக்கு அனுப்பி வைத்துவிட்டார். 
“எங்க யாரையுமே காணோம்?”
“கொல்லையில் காஃபி குடிச்சிட்டு இருக்காங்க. ஏதாவது வேணுமா மாமா?”
“உங்க அத்தையை நான் கூப்பிட்டேன்னு சொல்லுமா…” என்றவர் மற்றொரு அறைக்குள் புகுந்துகொள்ள, காலியான தண்ணீர் சொம்பை சமையல் மேடையில் வைத்துவிட்டு நீலாவை தேடிச் சென்று அவரிடம் அன்பரசன் அழைத்ததை கூற, அமைதியாய் உள்ளே சென்றுவிட்டார் நீலா. செல்லும் அவரையே தொடர்ந்த அவளது பார்வையை கவனித்த தச்சன்,
“ஏய் என்ன வேடிக்கை? நீ இப்படியே பார்த்துட்டு இருந்தா நீலாவதி வந்து உன்னை கொஞ்சிட போறதில்லை. பொறுமையா பேசிக்கலாம் இங்க உட்காரு.” 
“ஆமா அண்ணி நீங்க இப்படியே பார்த்துட்டு இருந்தால் எங்கம்மா கொஞ்ச மாட்டாங்க, என் அண்ணன் தான் கொஞ்சுவான்.” என்று மூக்கை நுழைத்த திவ்யாவின் தலையை கொட்டியவன், குந்தவையின் கையை பட்டும்படாமல் பிடித்து அவளை துணி துவைக்கும் சலவைக் கல்லில் அமரவைத்தான். மற்றவர்கள் பாத்திரம் துலக்கவென சலவைகல்லை ஒட்டியே அங்கே போடப்பட்டிருந்த சிமெண்ட் தரையை தாண்டி கீழே மண் தரையில் கால்நீட்டி அமர்ந்திருக்க, சங்கடத்துடன் குந்தவை எழப்பார்த்தாள். ஈரமில்லாததால் கீழே அமர்ந்தபடியே தச்சன் அவள் கையை அழுத்திப் பிடித்து அவளை எழவிடாமல், “நீ மேலேயே உட்காருடி…” 
“இல்லை உங்க கூடவே உட்கார்ந்துக்குறேன்…” என்று எழுந்துவிட, கத்தி மேல் நிற்பது போன்று தவிப்புடன் ஒருவித அழுத்தத்தில்… மூச்சுவிடவே ஆயிரம்முறை யோசித்து தயங்கித் தயங்கி செய்பவளை பரிவாய் பார்த்த மங்களம், “இங்கன என் பக்கத்தில் வா குந்தவை…” என அவளை அருகில் அழைத்து அமரவைத்துக் கொண்டவர் திவ்யாவிடம் திரும்பி, “செழிப்பா இருக்குற நாலு கொய்யா இலையை பறிச்சிட்டு போய் கஷாயம் போடுடி. நாலு சீரகத்தையும் அதோட சேர்த்து போட்டு நல்லா கொதிக்க வை. சுகர் அதிகமாகிடுச்சி போல குதிகால் எரியுது.” என்க, திவ்யா கொய்யா இலைகளை பறிக்க,  குந்தவையின் பார்வை அங்கிருந்த பச்சைகளில் படிந்தது. செம்பருத்தி, மல்லி, முல்லை, ரோஜா, நந்தியாவட்டம், அரளி, தும்பை, கனகாம்பரம் என்று பூச்செடிகள் ஒருபுறம், கொய்யா, எலுமிச்சை, மாங்காய், கத்திரிக்காய் என்று காய், கனிகள் மறுபுறம் என்று இருபுறமும் அழகாய் வரிசைகட்டி பராமரிக்கப்பட்டிருந்தது. புதிதாய் வைத்திருந்த மருதாணியும் வெற்றிலையும் கூட சிறிதாய் ஒரு ஓரத்தில் துளிர்விட்டு மேலெழும்பி வந்துகொண்டிருந்தது.
விழி எடுக்காமல் இயற்கையில் லயித்து, இயற்கையின் வாசனையை நாசியினுள் இழுத்தபடியே, “நேர்த்தியா பராமரிச்சிருக்கீங்க.” என்று குந்தவை எண்ணங்களை வெளிப்படுத்த, அவள் அகத்தில் இருந்த அழுத்தமும் அமைதியான தென்றலில் மறைந்து கரைந்து, அதன் சீரான மென்னிசையில் உற்சாகமாய் உணர்ந்தது.
“நீலா தான் எல்லாத்தையும் பார்த்துகுறா… நீயும் போக போக பழகிக்கலாம்.” என்று மங்களம் சொல்லவும் திக்கென்றது குந்தவைக்கு. சிறு சிறு வேலைகள் செய்வாள் தான் ஆனால் இவ்வளவு பெரிய இடத்தை பராமரிப்பதை நினைத்தாலே முதுகுவலி வந்துவிடும் போலிருந்தது.
குந்தவையின் மீதே பார்வை பதித்திருந்த தச்சனின் கண்ணில் அவளது பாவனைகள் பட்டுவிட, “அவளை பயமுறுத்த தான் பக்கத்தில கூப்பிட்டு உட்கார வச்சிருக்கியா கிழவி?” என்று பொங்கிக்கொண்டு வர, மங்களம் அவனை கூர்ந்து பார்த்து, “கட்டிகிட்டவ மேல பாசம் இருக்கலாம், இருக்கணும். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் அதை நீ வெளிப்படுத்துற விதத்திற்கு எல்லைகள் இருக்கனும்.”
“இதென்ன வம்பா இருக்கு கிழவி? என்னவோ யாருக்கும் தெரியாம அடுத்தவன் பொண்டாடி மேல பாசம் வச்சு கொஞ்சுற மாதிரி மறஞ்சி மறஞ்சி கொஞ்ச சொல்ற? என் பொண்டாட்டி நான் எங்க, எப்படி வேண்டும்னாலும் கொஞ்சுவேன்… நீ வேணும்னா கண்ணையும் காதையும் மூடிக்கோ…” என்று பேசுபவனை குந்தவை ஆவென்று பார்த்திருக்க, அவர்கள் அசந்த நேரம் குந்தவையின் கன்னத்தில் பட்டென்று ஒரு இச்சு வைத்துவிட்டு உள்ளே ஓடியே விட்டான் தச்சன்.
“கூறுகெட்டவன் இவனுக்கு எதை எங்க செய்யணும்னே தெரியாது. பாதி பிரச்சனையை உனக்கு இவனே இழுத்து விட்டுருவான்.” என்று மங்களம் தலையில் அடித்துக்கொள்ள குந்தவை பட்டென்று எழுந்தாள் அவன் பின்னே செல்ல…
“அட நீ எங்க ஓடப்பார்க்குற? உன்கிட்ட பேசத்தான் திவ்யாவை உள்ளே அனுப்புனேன் இந்த பய கலவரம் பண்ணிட்டான். உட்காரு இப்படி…” என்று வலுக்கட்டாயமாக அவளை அமரவைக்க, நெளிந்துகொண்டே அமர்ந்தாள் குந்தவை. வீட்டினருடன் இன்னும் பழக்கமே ஆகாத நிலையில் அவர்களுடன் சரளமாக பழக வழி எற்படுத்துவதை விட்டுவிட்டு இப்படி சங்கடத்தில் தன்னை நிறுத்திவிட்டானே என்று தச்சனின் மீது கோபம் எட்டிப்பார்த்தது குந்தவைக்கு.
“நீலா நல்லவ தான் ஆனால் எங்க இவனும் கையை விட்டு போயிடுவானோன்னு அவளுக்கு பயம் வந்துடுச்சி. உன் மேல தச்சன் வச்சிருக்க பாசம் தான் அவள் பயத்தோட முகாந்திரம். அது தேவையில்லாத பயம்னு நீ புரியவச்சிட்டா உரசல் வராது. இல்லை நான் எதுக்கு அதெல்லாம் செய்யணும் என் புருஷன் மட்டும் எனக்கு போதும்னு நினைச்சா நிம்மதி தான் பறிபோகும். அனுபவத்தில் சொல்றேன், விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. இப்போவே ரொம்ப உரசி விரிசலை வளர்த்துக்காத… நீ படிச்ச பொண்ணு இதுக்கு மேல நீயே முடிவு பண்ணிக்கோ…” என்று மங்களம் அவள் உச்சியில் லேசாக தட்டிவிட்டு உள்ளே சென்றுவிட, குந்தவையின் எண்ணங்கள் முழுதும் நீலாவை சுற்றியே வந்தது. என்னதான் எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்? அனைத்தையும் செய்யும் முன்னே அனுமதி வேண்டனுமா? நாம் நினைத்தபடி, நம் பிறந்தவீடு போல இவ்விடம் இருக்காதோ? என்ற எண்ணங்கள் ஆழியாய் அவளுள் அசுரவேகமெடுக்க, அதே சிந்தனையுடன் வீட்டினுள் நுழைந்தாள்.
பிறந்தது முதல் பெற்றவருடன் அவர்களது பழக்கவழகங்களை பின்பற்றி வாழ்ந்திருக்க, மணம் முடித்து இன்னொரு வீட்டிற்கு வரும் புதுப்பெண்ணை தங்கள் சூழலுக்கு மாற அவகாசம் கொடுப்பதில்லை. ஆனால் அவர்களின் மீது மலையளவு எதிர்பார்ப்பு வைத்து அதை ஈடுசெய்யும் முன்னரே அதை நிறைவேற்றவில்லை என்று குறைபடிப்பவர்கள் ஏராளம்.
தன்னை பின்தொடர்ந்து வருவாள் என்று எண்ணி தச்சன் அறைக்குச் சென்றிருக்க, அவள் வரவில்லை எனவும் திரும்ப அறையிலிருந்து வெளியே வந்தவன் குழப்பமுடன் வீட்டினுள் நுழையும் குந்தவையை கண்டு யோசனையுடன் நெருங்கி, “பிரியாணி கிடைக்கும்னு நினைச்சா இதென்ன தயிர்சாதமும் இல்லாமா போச்சா?”
அவன் குரலில் தெளிந்தவள் பார்வை முறைப்பாய் மாறி, “பிரியாணி விருந்தே தரேன் வரீங்களா?” என்று கேட்க, நொடியே என்றாலும் அவள் விழிகளில் வந்துச் சென்ற பழைய மின்னலும் வேகமும் அவனை உற்சாகமாக்கின.
உல்லாசமாய் விசிலடித்தவன் அவளை சீண்டும் பொருட்டு வேகமாய் அவள் இடை சுற்றி வளைத்து, அவளை தன் நெஞ்சோடு இழுத்தணைத்து, “உன்னோட மாமன் எல்லாத்துக்கும் ரெடி தான்டி…” என்று நகைப்புடன் இதழ்கள் அவள் கன்னத்தில் உரசும்படி வார்த்தைகளை பிரயோகிக்க, கூசி சிலிர்த்தவள்,
“போடா கிறுக்கு பயலே… நடுவீட்டுல என்ன பண்ணுற?” என்று நாணப் புன்னகை சிந்தி, அவன் நெஞ்சினில் கைவைத்து அவனை ஒரே தள்ளாய் தள்ளிவிட்டு அறைக்கு ஓடிவிட்டாள் குந்தவை.
அவள் ஓடும் வேகத்திற்கு ஏற்ப அவளது காலில் புதிதாய் மின்னிய கொலுசும் மெல்லிசை வாசிக்க, ‘உனக்கு பிரியாணி மட்டுமில்லை பிரியாணி விருந்தே கன்பார்ம்டா தச்சா…’ என்று அவள் ஓடுவதையே புன்னகை மாறாமல் பார்த்து நின்ற தச்சன் தலையை சிலுப்பிகொண்டு அங்கிருந்து நகர, அவன் நேரமோ குந்தவை நேரமோ அன்பரசனின் பேச்சில் சற்று தணிந்து அறையிலிருந்து வெளியே வந்த நீலாவின் மனதில் மீண்டுமொரு நெருடல். பிடிக்காத மருமகள் கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தம் என்பது போல ஏனென்றே புரியாத தெரியாத நெருடலும், பயமும் நீலாவை மீண்டும் சூழ்ந்து கொண்டன. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்தது அடுத்தடுத்த விதியின் விளையாட்டும்.
“நீ தான் குந்தவையை இப்போவே வரச் சொன்னியா?” என்ற கேள்வி தான் கணவரை தேடிவந்த நீலாவிடம் முதலில் கேட்கப்பட்டது. அதிலேயே மனம் சுனங்கிய நீலா,
“நான் ஒன்னும் வரச் சொல்ல. ஏன் அங்க தங்குறதை பற்றி குந்தவை சொல்லலைன்னு தான் கேட்டேன்.”

Advertisement