Advertisement

“வீட்டுல அப்பா அம்மாவை நான் சமாளிச்சுக்குறேன். நீங்க சொல்லுங்க… நான் செஞ்சது தப்புன்னு நீங்களும் நினைக்குறீங்களா? குந்தவை ஆசை நியாயமானது அதை தடுக்க எனக்கு என்ன உரிமை இருக்கு?”
“நான் நினைக்கிறது முக்கியம் இல்லை மச்சான். அங்க அத்தையும், மாமாவும் என்ன நினைக்குறாங்கன்னு தான் முக்கியம். அவங்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம்னு அவங்க ஆதங்கப்படுவது சரிதானே… நீங்க ஒத்தையா இருந்த போது தன்னிச்சையா செய்தால் அது வேற, ஆனால் கல்யாணம் ஆனபிறகு செய்தால் நம்ம குடும்பத்தில் எல்லாம் அதை வேற மாதிரி தான் பார்ப்பாங்க. குந்தவைக்கு தான் இது பிரச்சனை. நீங்க என்னனு கொஞ்சம் பார்த்து சரிப்பண்ணுங்க மச்சான். என்னோட பிரேக் டைம் முடிஞ்சிடுச்சு நான் அப்புறம் பேசுறேன் மச்சான்.” என்று அழைப்பை துண்டித்துவிட, கதிரவனின் வார்த்தைகளை உருபோட்டுக் கொண்டே கைலியை கட்டியவன் பனியனை வேகமாய் மாட்டிக்கொண்டு நீலாவை பார்க்கச் சென்றான்.
“என்ன பேசிட்டு இருந்தீங்க அண்ணனும் தங்கச்சியும் இவ்வளவு நேரம்? இப்போ தானே காபி கொண்டு போய் கொடுத்த? அதுக்குள்ள என்ன சாப்பாடு கேக்குறான் உன் அண்ணன்?”
“ப்ச்… லூசு மாதிரி அவன் கூட சண்டை போட்டுட்டேன் அம்மா. இங்கன நம்ம சொந்தகாரங்க கூட என் வீட்டுக்காரர் ஒத்துப்போகனும், எனக்காக சில விஷயங்கள் செய்யணும்னு எதிர்பார்ப்பேன் தானே… அதே தான் குந்தவை அண்ணியும் எதிர்பார்த்திருப்பாங்க…”
“நல்லா மந்திரிச்சு விட்டு அனுப்பியிருக்கான். நீ அதை அப்படியே இங்க வந்து ஒப்பிக்குற.” என்று நீலா அசராமல் நொடித்துக்கொள்ள, 
வம்படியாய் வந்து மூக்கை நுழைத்தான் தச்சன், “என்னை பத்தி ஏதோ பேசுற மாதிரி இருக்கே?”
இதற்குத் தானே காத்திருந்திருந்தேன் என்பது போல கேள்விக்கணைகளை தாமதமின்றி ஏவினார் நீலா.
“ஏன் தனியா வந்த?”
நீலா நறுக்க வைத்திருந்த கேரட்டை தூக்கிப்போட்டு பிடித்து ஒரு கடி கடித்தவன் ஒன்றும் அறியாதது போல, “இதென்ன வம்பா இருக்கு? நம்ம வீட்டுக் கிச்சனுக்கு வர ஊரையேவா கூட்டிட்டு வர முடியும்? எனக்குத் தெரியாம விருந்து எதுவும் போடுறியா என்ன?” 
அவன் கையிலேயே பட்டென்று ஒன்று வைத்த நீலா இம்முறை சுற்றி வளைக்காமல், “என்ன கொழுப்பா? எதுக்கு குந்தவையை அங்கேயே விட்டுட்டு வந்த?”
அன்னையின் குரலில் இருந்த கடுமையும், கதிரவன் சற்று முன் அளித்திருந்த எச்சரிக்கையும் புரிபட விளையாட்டை கைவிட்டவன் என்ன பிரச்சனை என்று தெரிந்துகொண்டு அதை இன்றே முடிக்கும் முடிவில், “அவளுக்கு பரீட்சை வருதுமா. முடிஞ்சதும் வருவா.”
“அப்படியா?”
“ப்ச்… என்ன அப்படியானு தெரியாத மாதிரி கேக்குற? அவங்க அம்மா உங்ககிட்ட சொன்னாங்க தானே அப்புறம் ஏன் கேக்குற?”
“அவங்க அம்மா சொன்னாங்க சரி, குந்தவை ஒருவார்த்தை கூட சொல்லவும் இல்லை, அங்கேயே இருக்கவான்னு கேட்கவும் இல்லை? நீயும் சொல்லல… அதற்குள்ள இங்க புகுந்த வீடுனு ஒன்னு இருக்குறதையே மறந்துட்டாளா அவள்? இல்லை நாங்க தேவையில்லைனு நீங்க ரெண்டு பேரும் முடிவே பண்ணிட்டீங்களா? உங்க நடவடிக்கை எல்லாம் அப்படித்தான் இருக்கு.” 
ஆதங்கமாய் நீலாவின் கேள்விகள் அவனைத் தாக்க, குடும்பச் சிக்கல்கள் அனைத்துமே புதிதாய் இருந்தது தச்சனுக்கு. பெரியவரான சுமதியே மகளை பிறகு அனுப்பி வைக்கிறேன் என்று அலைபேசி வாயிலாக அன்பரசனிடமும், நீலாவிடமும் தனித்தனியாய் சொல்லியிருக்க, இவனும் குந்தவையும் வேறு சொல்லியிருக்க வேண்டுமா? தகவல் தரப்பட்ட பிறகு இதென்ன நாங்கள் சொல்லவில்லை என்று குறைபடுகிறார்கள்? 
“நீ எதிர்பார்க்குற மாதிரி அவங்களே முறையாய் தகவல் சொன்ன பிறகு நானும் குந்தவையும் தனியா வேறு சொல்லனுமா?” என்று எண்ணங்களை கேட்டும்விட்டான்.
“அப்போ இனி என்ன நடந்தாலும் நீ சொல்லமாட்ட? கல்யாணம் ஆனவுடனேயே பெரிய மனுஷனாகிட்ட! நீ கேட்ட நிலத்தையும் உன் அப்பா கொடுத்துட்டதால இனி எங்க தயவு உனக்கு தேவையில்லைனு முடிவு பண்ணிட்ட, அப்படித்தானே? சரிடா இனி நான் என் பையன் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயங்களை வெளி மனுஷங்க மூலமாகவே தெரிஞ்சிக்கிறேன். நீ தான் பெரியாளாகிட்டியே…” என்று குமுறியவரின் குரல் உடைய, கண்களில் நீர் கசிந்துவிடுவேன் என்று பயமுறுத்திக்கொண்டிருக்க பதறிவிட்டான் தச்சன்.
“என்னம்மா இப்படி பேசுற?” என்று அவரின் கைகளை பிடித்தவன் சற்று தள்ளி இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மங்களத்தை முறைத்தான், “என்ன கிழவி உன் மருமக இப்படி என்னை தவறா புரிஞ்சிகிட்டு என்னை திட்டுது, என்னென்னவோ பேசுது நீ பார்த்துட்டு சும்மா இருக்க? ஏய் திவ்யா நீ என்னடி வேடிக்கை பார்க்குற? நீ பார்த்து வச்ச வேலைதானா இதெல்லாம்?” என்று திவ்யாவையும் சேர்த்து முறைக்க, நானில்லை என்று மறுப்பாய் தலையசைத்தாள் திவ்யா.
“அவள் கேட்பது நியாயம் தானே அப்பு. கல்யாணமாகி ஒரு ராத்திரி தான் இங்க இருந்துச்சு அந்த பொண்ணு… ஏதோ எதிர்பாராத விதமாய் அவங்க அப்பா தவறிட்டாங்க, ஒருவாரம் இருந்தோமானு இங்க வந்திருக்கணும். இழப்பு வந்துடுச்சுன்னு அதையே நினைச்சிக்கிட்டு அங்கேயே இருந்திட முடியுமா? பரீட்சை எழுதப் போகணும்னா இங்கிருந்தே போக முடியாதா என்ன? நீ இங்க அவள் அங்கேன்னு இப்படி கல்யாணமான உடனேயே தனியா இருக்குறது எல்லாம் நல்லதுக்கு இல்லை அப்பு… அதோட குந்தவையும் எங்ககிட்ட பேசினால் தானே இதுவும் என் குடும்பம், என்னோட முடிவுகள் இந்த குடும்பத்தையும் பாதிக்கும் என்கிற நினைப்பு அவளுக்கு வரும்? அங்க சபையிலேயே அந்த நினைப்பு இல்லாததால் தான் தன்னிச்சையாய் செயல்பட்டுடுச்சு.” என்று மங்களம் விந்தையாய் நீலாவின் பக்கம் பேச அந்த இடத்தில் குந்தவையை கீழிறக்க மனமேயில்லை தச்சனுக்கு. இருவருக்குள்ளும் ஏகப்பட்ட புகைச்சல்கள் இருக்கலாம் ஆனால் வீட்டின் பெண்மணிகள் மூவரும் குந்தவையின் புறம் தவறு இருப்பது போல பேச, அவள் என்னை நம்பி வந்தவள் என்ற எண்ணம் அழுத்தமாகியது.
“அவங்க அப்பா சம்மந்தப்பட்ட முடிவில் அவள் தன்னிச்சையா செயல்பட்டதில் என்ன தப்பு? பெற்றவருக்கு மகளா தன்னோட கடமையை செய்ய விரும்புனா அதில் தப்பெதுவும் எனக்குத் தெரியல. அதோடு இங்க வந்து ஒருநாள் கூட முழுசா தங்கல, நம்ம கூட இன்னும் பழக்கம் வரலை… அந்த தயக்கத்தில் அவள் விருப்பத்தை உரிமையா உங்ககிட்ட பேசலாமா வேண்டாமான்னு சந்தேகம் இருந்திருக்கலாம்… 
அடுத்து இங்கே திரும்பி வருவது தள்ளிப்போவது பற்றி அவங்க அம்மா தகவல் சொல்லிட்டாங்கனு இருந்திருப்பா. நீங்க சொன்ன மாதிரி அவள் இன்னும் இங்க தங்கவே ஆரம்பிக்கலை அப்புறம் எப்படி ஒட்டுதல் வரும்? சொல்லிட்டு செய்யணும்னு எல்லாம் எப்படி தோணும்?”
“ஆனால் நீ ஒட்டிக்கிட்டியே? இங்க வீட்டுக்குன்னு பொறுப்பா ஏதாவது செஞ்சிருக்கியா? ஆனால் பொண்டாட்டினு ஒருத்தி வந்தாள், வந்தவள் ஒருநாள் கூட முழுசா தங்கல அதற்குள் நீ அவள் பக்கம் சாஞ்சிட்ட… அவளுக்குன்னு ஓடி ஓடி எல்லாம் செய்யுற. உருகுற… பொறுப்பா பேசுவேன்னு கூட எங்களுக்கு இப்போ தான் தெரியுது. சபையில் நாலு பேர் முன்னாடி அப்படி பேசுன? அப்பா சொல்பேச்சை கூட கேட்கல… ஒருவர் இறப்பின் இறுதி பயணத்தில் பிரச்சனை செய்ய வேண்டாம், போனால் போகுதுன்னு அதை பெரிதுபடுத்தாமல் விட்டால் இப்போ இது… அவள் சொல்லாம அங்கேயே தங்கிட்டா இங்க நீ அவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்க.” துவங்கிய இடத்திற்கே நீலா பிரச்சனை கொண்டுவந்து நிறுத்த, அதற்கு மேல் பொறுமை பறந்தது தச்சனுக்கு.
“இப்போ என்ன அவள் சொல்லாதது தானே பிரச்சனை? இருங்க வரேன்…” என்று எழுந்தவன் வேகமாய் அறைக்குச் சென்று அங்கிருந்த தன்னுடைய அலைபேசியில் குந்தவைக்கு அழைப்பு விடுத்து, “பரீட்சை முடிந்ததும் வீட்டுக்கு வந்துறேன்னு அம்மாகிட்ட நீயும் ஒருவார்த்தை சொல்லிடு குந்தவை.” என்க,
“ஏன்? என்னாச்சு?”
“நீயும் நானும் சொல்லைனு வருத்தப்படுறாங்க. நாம வேற தனியா சொல்லியிருக்கணுமாம்… பிரச்சனை வேண்டாம்டி ஜஸ்ட் தகவல் சொல்லிடு… நான் அம்மாகிட்ட போன் கொடுக்கிறேன்.” என்று தச்சன் தணிந்து பேச பரபரப்பானாள் குந்தவை. 
மகளாய் பிறந்தகத்தை பற்றி யோசித்த அளவுக்கு மறுமகளாய் புகுந்த வீட்டை பற்றி யோசிக்க தவறிவிட்டோமோ என்ற எண்ணம் எழ சங்கடமும் தவிப்பும் ஒருசேர அவளை வாரிக் கொண்டது. 
“நீங்க இருங்க. நானே அத்தைக்கு கூப்பிட்டு பேசுறேன். அதுதான் சரியா இருக்கும்.” என்று தவிப்பாய் பேசியவள் சற்று இடைவெளிவிட்டு தயக்கத்துடன், “அங்க என்னை தப்பா நினைச்சிட்டாங்களா? எனக்கு சொல்லணும்னு நியாபகமே வரல. அம்மா சொல்லிட்டாங்க நீங்களும் சொல்லி இருப்பீங்கனு இருந்துட்டேன்.” 
பிடித்தவனையே பிடித்தமின்மையில் மணம் புரிந்திருக்க, மனங்கள் இணையும் முன்னமே இழப்பு வந்து, இணக்கம் கொள்ள நேரமே அமையவில்லை எனும் போது தேர்ந்த மறுமகளாய் நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அவளை அவள் கூண்டிலிருந்து அசல் உலகிற்கு இழுத்து வந்தது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவள் ஒருவீட்டின் மறுமகள் தானே? அந்த உறவுக்கான கடமைகளை இழப்பை காரணம் காட்டி பின்வாங்காமல் செய்யத்தானே வேண்டும்? அதைத்தானே எதிர்பார்க்கிறது மனங்கள். 
அவன் கணித்ததையே அவளும் சொல்ல, ‘நீ தேறிட்டடா தச்சா…’ என்று மைண்ட்வாய்ஸ் தான் முதலில் ஓடியது அவனிடத்தில்.
“ஹலோ இருக்கீங்களா? என்னாச்சு? அத்தை கோபமா இருக்காங்களா?” மீண்டும் தவிப்பாய் கேட்க, ஏனோ நெருடல் அவன் அகத்தினில். 
அதிகாரமாகவே கேட்டுப் பழகிய ஒருகுரல் இலகவும் ஏதோ இழந்த உணர்வு, “கோபம்னு சொல்ல முடியாது. வருத்தமா இருக்காங்க.” என்றவன் அதிமுக்கியமாய், “ ஆமா நீ யாரு?” என்க, குந்தவைக்கு சட்டென்று அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரியவில்லை.
“என்ன கேட்டீங்க?”
“நீ யாருனு கேட்டேன்டி… நான் கல்யாணம் பண்ணது ஒரு பிரியாணியை ஆனால் இப்போ ஒரு தயிர்சாதம் என்கூட பேசிட்டு இருக்கு? அதுவும் தொண்டையெல்லாம் கமறடிக்குற புளிச்சி போன தயிர்சாதம். என் பிரியாணியை துரத்திவிட்டுட்டியா என்ன?”
“புரியல.”
“ப்ச்… இந்நேரம் இதுவே என் பிரியாணியா இருந்தால் ஒவ்வொன்றிற்கும் எல்லாரிடமும் அனுமதி வாங்கிட்டு தான் செய்யணுமா? நான் இங்கத் தான் இருப்பேன்னு சொல்லியிருப்பா… ஆனா இந்த தயிர்சாதம் தயங்கித் தயங்கி கெஞ்சலா பேசுறா…” என்ற அவனது விளக்கத்தில் பெருமூச்சு அவளிடம்.
“எல்லா நேரத்திலும் பிரியாணியையே கொண்டாடுனா வாழ முடியாதுனு புரிஞ்சிடுச்சி. அதோட பிரியாணியையே தொடர்ந்து எடுத்துக்கிட்டா புண்ணாகிடும். அப்பப்போ இதமா பதமா எடுத்துக்கணும். அதுதான் குடும்பத்துக்கும் நல்லது. என் அப்பா ஆசைப்பட்டதும் அதைத்தான்.” என்று அவன் வழியிலேயே பதில் கொடுக்க, அவள் என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை அவனுக்கு. புதிர் வைத்து பேச துவங்கியது அவன்தான் எனினும் அவளது பதில் புதிரிலும் புதிராய் தெரிய, நான்கு நாட்களாகவே அழுதழுது உள்ளே போய் உடைப்பட்டிருக்கும் அவளது குரலில் இருந்தும் எதுவும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.
“என்னடி சொல்ற?”
“ஒன்னுமில்லை… நான் அத்தைகிட்ட பேசுறேன்.” என்று அழைப்பை துண்டித்துவிட்டாள் குந்தவை.
‘என்ன சொல்றா இவள்? ஒன்னும் புரியலையே… பணிந்து போனால் தான் வாழ முடியும்னு சொல்றாளா? என்னடா கொடுமையா இருக்கு… இப்போ எனக்கு பிரியாணி கிடைக்குமா கிடைக்காதா? காலம் முழுதும் இந்த தயிர்சாதமே இருந்தால் சலிச்சி போயிடுமே… என்ன தான் ஆச்சு இவளுக்கு? அப்பா தவறியதும் இவளும் சுயத்தை இழந்துட்டாளா?’ என்று முழித்துக்கொண்டு அறையிலேயே நின்றுவிட்டான் தச்சன்.

Advertisement