Advertisement

அப்படி அவன் அவளை அடக்கி வீரனாக வேண்டும் என்று உசுப்பிவிட்ட மாயத்தில் தச்சனும் குரலை உயர்த்தி, “என்ன பேசுற நீ? எல்லோரும் இவ்வளவு சொல்றாங்க… யார் பேச்சையும் கேட்கக் கூடாதுனு முடிவு பண்ணிட்டியா?”
இதுவே வேறு சூழ்நிலை என்றால் அவனின் ஆதிக்க குரலுக்கு எதிர்க்குரல் எழுப்பி இருப்பாள். இப்போதோ மனதால் சோர்ந்திருக்க, தட்டுத்தடுமாறி குழந்தையை கீழே விட்டுவிட்டு எழுந்து அவனிடம் வந்தவள், நீர் திரண்டிருந்த சிவந்த விழிகளுடன், அதரங்கள் துடிதுடிக்க, “அப்பாவோட இறுதி நாட்களில் அவருடன் பேசாமல், அவரோட கடைசி நொடிகளில் கூட நான் நிம்மதியாக இருக்கவிடல… என்னை நினைச்சிகிட்டே தான் இருந்திருப்பார். அதுக்கு நான் நியாயம் செய்யணும். அப்பாவோட ஆன்மாவுக்காவது தன்னோட கடமை முடிஞ்ச திருப்தி கிடைக்கட்டும். பெண்ணா பிறந்த ஒரே காரணத்திற்காக எங்களுடைய உரிமையை மறுக்கிறது தர்மமே இல்லை. நீங்களாவது என்னோட இந்த நியாயமான விருப்பத்துக்கு தடையாய் இருக்காதீங்க. ” என்று வேண்டல் போல வைக்க, 
அவளின் இறங்கிய குரலும், இறைஞ்சும் உடல்மொழியும் சுத்தமாய் பிடிக்கவில்லை தச்சனுக்கு. சண்டை போட்டால் கூட தேவலாம் என்றிருந்தது. இத்தகைக்கும் அவர்களுக்குள் தம்பதிக்குண்டான வழக்கமான பழக்கங்கள் இன்னும் வரவில்லை. பேசியதே மொத்தம் மூன்று நான்கு முறை தான். அது அனைத்துமே சண்டையில் தான் முடிந்திருக்கிறது. அதற்குள்ளேயே அவள் சண்டையே போடலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டிருந்தான் தச்சன்.
ஆனால் அவளோ தன்னை திரைக்குள் மறைத்து அமைதியாய் மனதிற்குள் கண்ணீர் சிந்தினாள். தந்தை விட்டுச் சென்றுவிட்டார் என்ற வலியை விட, அவரின் நலனை கவனிக்காமல் அவரின் இறுதி காலத்தில் பேசாமல் இருந்து அவரை வாட்டிய குற்றவுணர்ச்சி தேளாய் கொட்டி துடிதுடிக்க வைத்தது.
“வேற வழி இல்லையா? அவள் விருப்பமும் நியாயம் தானே. அவர் பெண்ணே செய்தால் அவர் ஆன்மா ஏற்றுக்காமையா போயிடும்?” தச்சன் அவளுக்குத் தோதாய் பேச அதுவே பிரச்சனைக்கு அடித்தளமாய் அமையும் என்ற எண்ணமிருக்கவில்லை. அவனை பொறுத்தமட்டில் இந்த சடங்கு சம்பிரதாயத்திற்கு எல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பழக்கமுமில்லை. குந்தவையின் நிலையில் இருந்து பார்க்கும் போது அவள் கேட்பதில் தவறொன்றும் தெரியாமல் போக அதை மற்றவர்கள் ஏற்கணுமே… 
“உன்னை என்ன செய்யச் சொன்னா நீ என்ன செஞ்சிட்டு இருக்க?” என்று அன்பரசன் கடிய,
“சின்ன பசங்க, அதுகளுக்கு ஒன்னும் தெரியல சம்மந்தி. எங்க பங்காளிங்க நாலு குடும்பம் இருக்கோம் அதில் பையன் முறையில் இப்போ என் தம்பி பையன் மட்டும் தான் இங்க இருக்கான். அவனை வைத்தே செய்திடுவோம்.” என்று நந்தனின் உறவுகள் வலியுறுத்த இம்முறை குந்தவைக்கும் சேர்த்து குரல் கொடுத்தான் தச்சன்.
“அதெல்லாம் சரிதாங்க மாமா. இதில் நாமெல்லாம் முடிவு செய்றதை விட உரிமைப்பட்டவங்களே முடிவு செய்யறது தானே சரியாக இருக்கும். குந்தவையே எல்லாம் செய்ற மாதிரி ஏதாவது வழியிருந்தால் மாமாவுடைய ஆன்மாவும் சாந்தியடையும், அவருடைய பொண்ணுங்களும் நிம்மதியடைவாங்க.”
முணுமுணுப்புகள் சத்தமாக உருபெற… அன்பரசன் தச்சனை ஒருபுறம் கடிய, மகளை ஒருபுறம் கடிந்தார் சுமதி.
“இறுதி காரியம் செய்யறது பையன் முறை உள்ளவர்கள் தான் செய்யணும். இது இன்றைய ஒருநாளோடு முடியறது இல்லை. அடுத்து வரும் சந்ததி வரை இதோட மிச்சங்கள் தொடரும். நீ பெரிய இவன் மாதிரி தேவையில்லாமல் எல்லாத்தையும் மாத்த பார்க்காத.” அன்பரசன் கடுமையாக பேச அதெல்லாம் அவனுக்கு ஒருபொருட்டாகவே தெரியவில்லை. முதல் முறையா அவரிடம் பேச்சு வாங்குகிறான்… 
“என்ன பிடிவாதம்டி உனக்கு. ஏன் உன் வாழ்க்கையோட விளையாடுற. உன் மாமனார் மாமியார் சொல்றதை கேளு. எங்களுக்கு பையன் முறை உள்ளவனே செய்யட்டும்.” என்று சுமதி காட்டமாய் பேச, நந்தன் இழப்பை விட அவருக்கு இறுதி காரியங்களும் மரியாதைகளும் யார் செய்வது என்பது தான் பேசுபொருளானது.
பெண்களை பெற்றவர்கள் நிம்மதியாக தங்களின் இறுதி பயணத்தில் உறங்க ஏதுவாக செய்யப்படும் இறுதி காரியங்களில் கூட சிக்கல் இருப்பதை என்னவென்று சொல்வது? முன்னர் வேண்டுமென்றால் கூட்டுக் குடும்பமாய் ஒருவரின் மீது ஒருவர் தூய்மையான அன்பு செலுத்தி அனைத்துக்கும் தகுதியானவர்களாக இருந்தார்கள்… இன்று சூழ்நிலை அப்படி இல்லையே. பெற்றது பெண்களாகினும் கிஞ்சித்தும் குறையாத பாசத்தை பெண்கள் தங்களின் பெற்றவர்கள் மீது செலுத்துகிறார்கள். அந்த பாசத்திற்கு உண்டான உரிமையை ஏதாவது ஒருவிதத்தில் நிறைவேற்ற வழி ஏற்படுத்தித் தருவதில் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. 
“இங்க பாருங்க மாப்பிள்ளை… முறைப்படி இறுதி காரியங்கள் செய்பவருக்கு அந்த வீட்டில் சகல உரிமையும் இருக்கு. சொத்தில் கூட பங்கு கேட்கலாம் ஆனால் நாங்க இங்க உரிமை எடுக்க வரல, நந்தனும் பெருசா சொத்து சேர்த்து வைக்கல. நீங்க என்ன சொன்னாலும் பொண்ணுங்களை மயானத்திற்கு எல்லாம் அழைத்துச் செல்ல முடியாத. எங்க கடமையை செய்ய விடுங்க. நீங்க குறுக்கால பூந்து குட்டையை குழப்பாதீங்க.”
“இப்போ என்னதாங்க பிரச்சனை. குந்தவை நேரடியா இறுதி சடங்குகள் நடக்கும் இடத்திற்கு வந்து எதுவும் செய்யக்கூடாது அதுதானே? என்னென்ன செய்யணுமா, எதை வீட்டில் செய்ய முடியுமோ அதை இங்கேயே குந்தவையை வச்சு செஞ்சுடுங்க. வீட்டிற்கு வெளியே மற்றதை அவள் சார்பா நான் செய்றேன். நம்ம வழக்கப்படி வீட்டு மாப்பிள்ளை பேச்சுக்கு மரியாதை கொடுக்கணும், கொடுப்பீங்க தானே?” என்று ஒரேபோடாய் தச்சன் போட சலசலப்பு அடங்கியது. 
அவன் குடும்பத்தினர் அதிர்ச்சியை வெளிப்படுத்த, குந்தவையிடம் விசும்பல் வெளிப்பட்டது. இறுதிச் சடங்கில் வரப்போகும் நடைமுறை சிக்கல்களை பற்றி அவள் ஏற்கனவே யூகித்து ஐயப்பட்டுக் கொண்டிருக்க, அவளுக்காக தச்சன் பேசவும் அந்த ஐயம் அடியோடு தகர்ந்து தந்தையின் இழப்பு தந்த வலி பிரதானமானது. இனி தச்சன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வர, விசும்பல் பெருகி அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து, முகத்தை கால்களுக்கு இடையில் மறைத்துக்கொண்டு குலுங்கினாள்.
அவள் அழட்டும் என்று அமைதியாய் வானதியும், சுமதியும் அவளின் இருபுறமும் அமர்ந்துகொள்ள, அவளின் பேரழுகையை காணச் சகிக்காமல் வெளியேறிவிட்டான் தச்சன்.
அதன் பின் காரியங்கள் மளமளவென நடக்க, வீட்டிலேயே வானதி மற்றும் குந்தவையிடமிருந்து சம்பிரதாயத்திற்கு அக்கினியை வணங்கி கொடுக்க, குந்தவையிடமிருந்து பெற்றுக்கொண்டு அவள் சார்பாகவே இறுதி காரியங்களை செய்து முடித்தான் தச்சன். அன்பரசனோ நீலாவோ எவரும் வாய் திறக்கவில்லை. திவ்யாவுக்கு கூட தச்சனின் செயல்கள் நீலாவின் கூற்றை உறுதிப்படுத்துவது போலவே தெரிந்தது. 
தாடியும் மீசையும் மழிக்கப்பட்டு ஆற்றில் குளித்துவிட்டு வேட்டியும், தோளில் ஒரு துண்டுடன் தச்சன் திரும்ப வீட்டிற்கு வர, உறவினர்கள் கூட்டம் முற்றிலும் குறைந்திருந்தது. தச்சன் குடும்பமும், சுமதியின் அக்கா குடும்பம் மட்டுமே இருந்தனர். வீடு சுத்தம் செய்யப்பட்டிருக்க வானதியை கண்ட தச்சன் பார்வையை அலையவிட்டு, கேள்வியை அவள் புறம் வீசினான், “குந்தவை எங்க?” 
“ரூமில் இருக்கா.” என்று கையை காண்பிக்க, தாமதியாது விரைந்து அறைக்குள் நுழைந்தான். தலையிலிருந்து நீர் சொட்ட சொட்ட, கண்களிருந்தும் நிற்காமல் நீர் வழிந்துகொண்டிருந்தது. தரையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் பார்வை விட்டத்தை வெறிக்க, மெல்லிய விசும்பல் மட்டும் வெளிப்பட்டது.
“குந்தவை.”
அவனின் தவிப்பான அழைப்பில் பார்வையை பிரித்து அவன் புறம் செலுத்தியவள், கையையும் அவன் புறம் நீட்டினாள். அதை பற்றிக்கொண்டு தச்சன் அவளருகில் அமர, அவன் தோள் சாய்ந்தவள், “இன்னும் கொஞ்சநாள் எங்ககூட இருந்திருக்கலாம் தானே? நானும் கல்யாணம் செய்துகிட்டேன்… என்ன அவசரம் அவருக்கு?” என்று விசும்ப, சங்கடமாய் அவள் தலையை வருடினான் அவன்.
இந்த இன்னுயிர் இனியும் எனக்கு வேண்டாம் என்பவனை விட்டுவிட்டு இன்னும் சில காலம் பொறுத்திருந்தால் கடமைகளை முடித்துவிடுவேன் என்பவரை சீக்கிரமே கூட்டிச் சென்றுவிடுகிறது இயற்கை. நந்தனின் நிலைமை இரண்டாம் ரகம்.
“என்னிடம் உண்மையை சொல்லியிருந்தா நானும் ஏதாவது செய்ய முயற்சி செஞ்சிருப்பேன். அட்லீஸ்ட் அவர்கூட ஒழுங்கா பேசவாவது செஞ்சிருப்பேன். நான் இப்போ அவர்கூட முன்ன மாதிரி பேசணுமே… ” என்று சிறுபிள்ளை போல விசும்ப, என்ன சொல்லுவான் அவன்? அவள் தந்தை மீது கோபம் கொண்டு பேசாமல் இருக்க தன்னுடைய அழுத்தமும் ஒரு காரணம் தானே என்ற எண்ணம் எழாமல் இல்லை.
“என்னோட பிடிவாதம் தான் என் கண்ணை மறைச்சிடுச்சு… அப்பாவை திரும்ப வரச்சொல்லேன் நான் அவரை நல்லா பார்த்துப்பேன். அவர் சொல்படி நடப்பேன். கஷ்டம் கொடுக்க மாட்டேன். நாம சந்தோசமா வாழுறதை பார்க்கணும்ல அவரு…” 
இருக்கும் போது விட்டுவிட்டு இல்லாத போது புலம்பி என்ன பயன்? சின்ன கோபம், பிடிவாதம் என்று உப்புபெறாத காரணத்தை பிடித்துக்கொண்டு முகத்தை திருப்பினால் பின்னர் புலம்பி நஷ்டம் தான் மிஞ்சும். நிலையில்லாத உலகில் உறவுகளை நிலைத்துக்கொள்ள நிதானமும் தேவையே… 
“அண்ணன் அப்பா கூப்பிடுறாங்க… கொஞ்சம் வரியா?” அவர்களின் தனிமையை இடையிடும் விதமாய் அறை வாயிலிருந்து திவ்யா கூப்பிட,
“நான் வந்துறேன் குந்தவை. நீ இப்படி அழாத உடம்புக்கு ஆகாது.” என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டு கன்னம் தட்டி விடைபெற்றவன், தந்தையை சந்திக்க வர, அவரோ பிடிகொடுத்து பேசாமல், “நாங்க கிளம்புறேன் தச்சா. வீட்டுல போட்டது போட்டபடி இருக்கு. நீ இங்க இருந்து காரியம் எல்லாம் முடிச்சிட்டு வா.” 
“அப்பா நீங்களும் கிளம்பிட்டா நல்லாயிருக்காதுப்பா. என்ன செய்யணும்னு நீங்க முன்ன இருந்து சொல்லுங்க. பெரியவங்க யாராவது இருக்கணுமே…”
“அதான் நீயே பெரிய மனுஷனாகிட்டியே… தனியா முடிவெடுக்கவும் கத்துகிட்ட. எல்லாத்தையும் முடிச்சிட்டு சீக்கிரம் உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வா…” என்றுவிட்டு கிளம்ப நீலா அப்போதும் வாய் திறக்கவில்லை.
அவரின் கோபம் புரிந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்கிற தைரியத்தில் இருக்க, அது அவ்வளவு எளிதானதாக இருக்க வாய்ப்பில்லை என்று யார் சொல்லி புரிய வைப்பர்… 
அதன் பிறகு குந்தவையிடம் தனியாக பேச அவகாசமே கிடைக்கவில்லை. வானதியும், அவள் பிள்ளைகளுமே அவளை சூழ்ந்திருக்க மூன்று நாளும் மொட்டை மாடி வாசியாகிவிட்டான். வழக்கத்திற்கு மாறாக குந்தவையும் அமைதியுடன் நடமாட, அவளை தொந்தரவு செய்யவும் மனமில்லை தச்சனுக்கு. பொழுது போகாமல் அறிவழகனை தூக்கிக்கொண்டு சுற்றினான். மூன்று நாள் கழிந்ததும் ஊருக்குச் செல்லவென அவளை அழைக்க,
“பைனல் எக்ஸாம்ஸ் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்குது. எழுதி முடிச்சிட்டு வரவா?” என்று குந்தவை அனுமதி வேண்ட, என்னடா இது ஆர்டர் போடாம அனுமதி கேக்குறா என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியடையாமல் எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் தனியாகவே ஊருக்குச் செல்ல… சுமதியும் மரியாதை நிமித்தமாய் மகளை பரீட்சை முடிந்து அனுப்பி வைக்கிறேன் என்று தகவல் சொல்லியிருக்க… தச்சனுக்கு காத்திருந்தது அடுத்த சிக்கல்… 

Advertisement