Advertisement

*6*
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது வெறும் வார்த்தை இல்லை போலும் அதிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் மெய். ஆனால் அந்த மாற்றம் எத்தகையது என்பதில் தான் ஒருவரின் மனநலன் தீர்மானிக்கப்படுகிறது. என்ன செய்வது என்று வழி அறியாது சஞ்சலமாய் அலையும் போது வழி கிடைத்துவிட்டால் அந்த மாற்றம் வாழ்க்கையையே மாற்றியமைப்பது போல, இருந்தவற்றை இழக்கும் வலி தரும் மாற்றமும் வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்துவிடும். முன்னம் இருக்கும் மாற்றம் ஒருவரை ஒருபடி மேலே ஏற்றினால் பின்னர் இருப்பது ஒருவரை கீழிறக்கும் வல்லமை படைக்கும். அந்த வல்லமை வென்றுவிட ஓய்ந்துபோனாள் குந்தவை.
மணம் முடித்த மறுநாள் கதிரவன் உதயமாகும் முன்னமே தச்சனின் அலைபேசி அழைக்க முதலில் விழித்தது குந்தவை தான். சண்டை போட்டுவிட்டு இரவு ஒருவர் முகம் ஒருவர் பாராது அசதியில் படுத்திருந்ததற்கு மாறாய் விடியற்காலை இருவருமே மற்றவரின் மீது கை போட்டு படுத்திருந்தனர். அதிலும் தச்சன் உரிமையெடுத்து அவளை முழுதும் அவனுக்குள் வளைத்து அவள் தோளிலேயே தலை வைத்து படுத்திருக்க கோபம் வருவதற்கு பதில் முதன்முறையாய் நாணம் எட்டிப்பார்த்தது குந்தவைக்கு. எல்லாமே நொடிபொழுது தான் அதற்கு மேல் அவளை சிந்திக்கவும், ரசிக்கவும் விடாமல் தச்சனின் அலைபேசி சிணுங்கியது. வேண்டுமென்றே தன் இடை சுற்றி இருந்த அவன் கையை நறுக்கென்று கிள்ளி எழுப்ப, அலறிக்கொண்டு எழுந்தான் தச்சன்.
“ஏன்டி இப்படி தூக்கத்திலும் இம்சை பண்ற? உன்னை கல்யாணம் பண்ணது தப்புதான் ஒத்துக்குறேன். இப்போ திருப்தி தானே உனக்கு?” என்று தூக்கக் கலக்கத்தில் எரிச்சலாய் மொழிந்தவன் திரும்ப படுக்க, குந்தவையின் முகம் வாடியது. 
திருமணம் வேண்டாம் என மறுத்து, மணமான நாளிலேயே அவனை வறுத்து இந்த திருமணம் சரிவராது என புரியவைக்க முயன்றது அவளாகினும், அவன் வழியாய் இந்த பந்தமே தவறு என்று கேட்டதும் மனம் ஆதவனை இழந்த தாமரையாய் வாடியது.
“உங்களுக்கு ஏதோ போன் வந்துச்சு.” என்று சுருதி இறங்க சோகம் இழைத்தவள், எழுந்து அவன் அலைபேசியை கையிலெடுத்து, தனக்கு முதுகுகாட்டி குப்புற படுத்திருந்தவனை சுரண்டி எழுப்பி அலைபேசியை கொடுத்துவிட்டு கீழே இறங்க முற்பட, அலைபேசியில் கண்ணை பதித்துக்கொண்டே அவள் கைபிடித்து தடுத்து அவள் மடியினில் தலை வைத்து படுத்துக் கொண்டான் தச்சன். அவனை விலக்கவும் முயலவில்லை, அவனை கொஞ்சவுமில்லை. சற்று முன் வாடிய மனதிற்கு இட்ட மருந்தாகவே அந்த நிமிடத்தை அமைதியாய் அனுபவித்தாள் குந்தவை. அவ்வளவே… 
“என்னப்பா? எதுக்கு போன் பண்ணியிருக்க? கதவை தட்ட வேண்டியது தானே?” என்று தச்சனின் குரல் மட்டும் அவளுக்குக் கேட்க மறுபுறம் என்ன செய்தி வந்ததோ சட்டென்று எழுந்தமர்ந்தான் தச்சன்.
“நான் வரேன்.” என்று அலைபேசியை அணைத்தவன் பரபரப்பாய் குந்தவையிடம் பார்வை பதித்து, “சீக்கிரம் கிளம்பு. அவசரமா போகணும்.” என்றுவிட்டு வேகமாய் இறங்கினான். அவனைவிட துரிதமாய் செயல்பட்டவள் அவனை போகவிடாமல் கைபிடித்து தடுத்து, பதற்றத்துடன், “என்னாச்சு?”
தயங்கியவன் அவள் கன்னத்தை மெலிதாய் தட்டிவிட்டு, “கிளம்பு குந்தவை.” என்று இறுகிய முகத்திற்கு நேரெதிராய் இளகிய குரலில் சொல்லிவிட்டு நிற்காமல் தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட, ஏனென்றே புரியாத ஐயம் அவளை சூழ்ந்துகொண்டது. எவரிடமும் கேட்கலாம் என்று அறையை விட்டு வெளியே போனால் அனைவருமே ஒருவித அமைதியில் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஒருவரும் அவளிடம் காரணம் கூறாமல் கிளம்பு கிளம்பு என விரட்டி கிளப்பி அழைத்துச் செல்ல, கார் அவளது வீட்டில் சென்று நிற்கவுமே அங்கிருந்த சூழலில் அவள் இதயம் பரபரப்பாய் அடித்துக்கொண்டு நுரையீரல் ஒருமுறை வேலைநிறுத்தம் செய்து மீண்டது.
“என்னாச்சு? ஏன் எல்லோரும் வந்திருக்காங்க?” கேள்வி மற்றவரின் செவி எட்டியதா என்ற சந்தேகத்தில் தன்னருகில் இருந்த நீலாவிடம் மீண்டும் தன் கேள்வியை முன்வைக்க, பார்வை தன்னாலேயே தச்சனை தேடியது. 
“உள்ள போ குந்தவை.” நீலா அவளை வீட்டினுள் இழுக்க முயல, வாயிலிலேயே வேரூன்றி நின்றாள் குந்தவை. அடுத்த அடி எடுத்துவைத்து உள்ளே செல்லும் தைரியம் அவளுக்கு இல்லை என்பது அவள் முகத்தில் மண்டிக்கிடந்த தவிப்பிலும் பயத்திலுமே புரிபட, ஏற்கனவே உள்ளே நுழைந்திருந்த தச்சன் வேகமாய் வெளிவந்து குந்தவையின் கைபிடித்து உள்ளே இழுத்தான்.
“நான் வரமாட்டேன். அப்பாவையும் அம்மாவையும் இங்க கூப்பிடுங்க.” நிஜத்தை எதிர்கொள்ள திராணியற்று நிழலிலேயே தஞ்சம் கொள்ள நினைக்க, விழிகள் அப்பட்டமான பிடிவாதத்தையும், அச்சத்தையும் வெளிப்படுத்தியது.
“நீயே உள்ள வந்து பாரு.” என்று தச்சன் இழுக்க, அவனது உடல்பலத்திற்கு ஈடுகொடுத்து தன் பிடிவாதத்தால் ஆணியடித்தாற் போல நின்றாள் குந்தவை.
‘எதிலும் பிடிவாதம் தானா?’ என்று அப்போதும் எரிச்சல் தான் தச்சனுக்கு. 
“கல்யாணம் ஆகி இங்கிருந்து புகுந்த வீட்டுக்கு போனவ அப்பன் உயிரையும் சேர்த்து கூட்டிட்டு போயிட்டா… அம்மாடி குந்தவை உள்ள போய் அப்பாவை பாருமா… ” என்று வீடுமுன் குழுமியிருந்த கூட்டத்தினில் இருந்து எவருடைய குரலோ சத்தமாய் ஒலிக்க குந்தவையின் சப்தநாடியும் அடங்கி மனமெல்லாம் மரத்துப் போனது. முன்பு வானதியை பேசினர், இப்போது இவள்.
பிறந்தவீட்டில் நிகழ்ந்தால் என்ன புகுந்த வீட்டில் நிகழ்ந்தால் என்ன துயரம் அனைத்துக்கும் அவ்வீட்டின் பெண்ணவளே காரணம் என அவள் தலையிலேயே கட்டி அதை நம்பும் கூட்டம் இன்னும் இங்கே இருக்கத் தான் செய்கிறது. அப்படிப்பட்டவர்களை களையெடுக்கும் மெத்த படித்தவர்களோ சரியான பக்குவமின்றி எதையோ பிடித்துக்கொண்டு எதன் பின்னோ ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
தன் குடும்பத்தினரை உள்ளே செல்லுமாறு சைகை செய்த தச்சன் குந்தவையை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்றான். 
வெறித்த பார்வையோடு நுழைந்தவளை சுமதியும், வானதியும் கேவலுடன் கட்டிக்கொள்ள நாசுக்காய் நகர்ந்து கொண்டான் தச்சன். 
“இதயத்தில் கோளாறு இருந்ததை அப்பா சொல்லாமையே மறச்சிட்டாருடி… நாலு மணிக்கு வலிக்குதுன்னு சொன்னாரு ஹாஸ்பிடல் போகும் முன்பே…” என்று வானதி விசும்ப, அனைத்தும் புரிவது போல இருந்தது குந்தவைக்கு.
அவள் கணிப்பு சரியென்றால் தந்தையுடைய பிரச்சனை அவள் தச்சனை வேண்டாம் என்று சொல்லி, அவன் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்த பிறகு தான் தெரிந்திருக்க வேண்டும். தன் விருப்புக்கு மாறாக திருமணம் செய்ய அன்னை ஒப்புக்கொண்டது கூட இதற்காகத்தான் இருக்கும் என்று யூகிக்க… அவளுடைய கணிப்பு கனக்கச்சிதமாய் சரியாகத்தான் இருந்தது. வானதியும் வைத்துக்கொண்டு இதயக்கோளாறை சொல்லி பயமுறுத்த வேண்டாம் என்று மறைத்து குந்தவையின் திருமணத்தை நடத்தினர்.
வெறித்த பார்வை குற்றம்சாட்டும் விதமாய் மாறி சுமதியை துளைக்க, “சிகிச்சைக்கு லோனுக்கு ஏற்பாடு செஞ்சிட்டு இருந்தாரு அதுக்குள்ள நம்மை விட்டுட்டு போயிட்டாருடி.” என்று பெருங்குரலெடுத்து அழ, குந்தவையின் நாசி புடைத்து, இதழ் துடித்து முகமெல்லாம் சிவந்தது. ஆனால் அழவில்லை. கண்கள் கலங்கி மட்டும் இருந்தது. 
‛என்னடா இவள் இவ்வளவு அடம் பண்றா. ஆனாலும் மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை, இவள் வித்தியாசம்டா தச்சன்.’ என்று அந்நேரத்திலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால். 
“பசங்க எங்க?” தந்தையை பற்றி விசாரிப்பாள் என்ற எண்ணத்திற்கு மாறாக குழந்தைகளை கேட்க, வானதி ஒருநிமிடம் விழித்துவிட்டு, “பெரியம்மாகிட்ட இருக்காங்க.” என்க குந்தவையின் பார்வை குழந்தைகளைத் தேடியது. அவர்களோ அவளின் பெரியம்மாவிடம் இருக்காது வானதியின் மாமியாரிடம் இருக்க, நந்தன் அமைதியாக உறங்கும் கண்ணாடி பேழை அருகில் சென்றவள் ஓரிரு நிமிடம் அவரை கண்களில் நிரப்பிக் கொண்டு, பின் கண்களை மூடி கண்ணாடிப் பேழையின் மீது தலை சாய்த்து நின்றவள் சில நிமிடங்களிலேயே ஒன்றுமில்லாதது போல நேராக வானதி மாமியாரிடம் சென்று பிள்ளைகளை வாங்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள். 
வானதியின் மாமியார் அவளை ஏற இறங்கப் பார்க்க, அவளின் செய்கைகளையே சற்று தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த தச்சனின் தோள் தட்டி, “குந்தவை இப்படி அமைதியா இருக்குறது நல்லதில்லை. அடக்கி வச்சிருந்தா அழுத்தமாகி மனசு விட்டு போயிடும். நீ கொஞ்சம் என்னனு பாரு.” என்று சொல்லிவிட்டு அன்பரசன் அங்கிருந்து நகர, குந்தவையின் மீது அழுத்தமாய் பதிந்தது அவனது பார்வை.
அப்படி என்ன வீம்பும்? பிடிவாதமும்? அழுதால் குறைந்தா போய்விடுவாள்? ஏற்கனவே ஏத்தம் அதிகம் இப்போ அழுகாம அடக்கிக்கிட்டு இருந்தா சொல்ல முடியாது அதையே கோபமா வளர்த்துகிட்டு உன்கூட சண்டை போட்டாலும் போடுவா… என்று அவன்பாட்டிற்கு சிந்தித்துக் கொண்டே செல்ல எப்பொழுதும் போலவே அவன் கணிக்கும்படி இல்லை அவள். அவளது எண்ணங்களில் வேறு சிந்தனைகள். மூன்று பேருமே பெண்களாய் இருக்க ஆளுமை செலுத்தி முடிவெடுக்கும் அதிகாரம் இவ்வீட்டில் யாருக்கும் இல்லை என்று கணக்குப்போட்டு எவரும் தங்களை ஆள நினைக்கலாம் என்ற கணிப்பு மனதினில் ஓட, அடுத்து என்ன என்ற சிந்தனை தான்… 
“வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாச்சு. சட்டுப்புட்டுன்னு அடுத்து ஆகுற வேலையைப் பாருங்க.” என்று நந்தன் உறவினரிடமிருந்து குரல் வர சலசலப்பு துவங்கியது. 
நந்தனுக்கு இரண்டுமே பெண்களாகிவிட யார் இறுதி காரியங்கள் செய்வது என்று பங்காளிகளுக்குள் பிரச்சனை எழ, ஒருமித்த முடிவு எட்டும் முன்னமே,
“என் அப்பாவுக்கு நான் செய்வேன்.” என்றாள் குந்தவை. 
பார்வை மொத்தமும் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்திருப்பவளிடம் சென்று பின் தச்சனிடமும், அவன் குடும்பத்தினர் மீதும் படிந்தது.
“நம்ம வழக்கத்தில் பொண்ணுங்க இறுதி காரியங்கள் செய்வது எல்லாம் இல்லையே. அது சின்ன பொண்ணு தெரியாம பேசுது. சரி தானே?” என்று நந்தன் பக்க உறவினர் இப்போது நேரடியாய் அன்பரசனிடமே பேசினார், குந்தவை அவர்களின் பொறுப்பு என்ற நினைப்பில்.
“அவங்க சொல்றது சரிதான் குந்தவை. நமக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை.” என்று அன்பரசனும் நேரடியாய் குந்தவையிடம் பேச,
“இல்லைங்க மாமா. நான் தான் செய்வேன். எங்களுக்காகவே வாழ்ந்து, உழைச்சி எங்க மகிழ்ச்சி தான் அவருடையதுனு இருந்தவருக்கு நாங்க தான் செய்யணும் மாமா. அது தான் தர்மம், அது எங்களுடைய உரிமையும் கூட. சும்மா சம்பிரதாயத்திற்காக என் அப்பாவோட நெருங்கி பழகாதவங்க செய்றதில் எனக்கு உடன்பாடில்லை.” என்று அழுத்தமாய் தன் எண்ணத்தை பேச, 
“என்ன தம்பி பொண்டாட்டியை பேசவிட்டு பார்த்துட்டு இருக்கீங்க? மாமனார் சொல்றதையும் கேட்க மாட்டேங்குதே பொண்ணு.” என்று பேச்சு இப்போது தச்சன் புறம் திரும்பியது.
‛அவள் என்னமோ என் பேச்சுக்கு அடங்குறவ மாதிரி எதுக்கைய்யா இப்போ எல்லோரும் என்னை பார்க்குறீங்க? அவங்க அப்பா அவ விருப்பம். அவள் விருப்பத்துக்கு விட்டுடுங்க.’ என்று சொல்ல ஆசை தான் ஆனால் அனைவரும் கூடியிருக்கும் சபையில் இப்படியெல்லாம் பேசிட முடியுமா என்ன? அதுவும் அங்கிருப்பவர்கள் யாரையுமே அவனுக்குத் தெரியாது. அவன் சொந்தங்கள் கூட பெரிதாய் அங்கில்லை…
“என்ன மசமசனு பார்த்துட்டு நிக்குற? எடுத்து சொல்லுடா குந்தவைக்கு. இதெல்லாம் இழுத்தடிக்குற காரியம் இல்லை.” என்று அன்பரசனும் தச்சனை உசுப்ப, நீலாவும் மங்களமும் அனைத்தையும் சுணக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அனைவரின் பார்வையும் தச்சனை அழுத்தத்திற்குள் தள்ள யோசனையுடன் குந்தவையை பார்த்தவன், “பெரியவங்க சொல்றதை கேளு குந்தவை.” என்க, அழுதழுது ஓய்ந்து போயிருந்த சுமதியும், “உன் வீட்டுல என்ன சொல்றாங்களோ அதை செய் குந்தவை.” என்று சொல்லவும், சட்டென்று கண்ணிலிருந்து நீர் வழிந்திருந்தது குந்தவைக்கு.
‘அப்போ இது என் வீடு இல்லையா? அவர் என் அப்பா இல்லையா? அவர் சம்மந்தமான முடிவு எடுக்கக்கூட எனக்கு உரிமையில்லையா? கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போனா என்னை பெற்றவர்கள் வெளியாளாகி விடுவார்களா?’ என்று அவளது கண்ணீரில் ஒளிந்திருந்த ஆதங்கம் அங்கிருந்த எவருக்கும் புரியவில்லை. அவர்களுக்கு புரியவில்லை என்றால் என்ன… என் உரிமையிலிருந்து நான் விலக மாட்டேன் என்ற பிடிவாதம் அவளிடம் இருந்தது.
அதே பிடிவாதத்துடன் தச்சனைக் நோக்கியவள், “இல்லை நான் தான் செய்வேன்.”
அவளது பதிலில் சலசலப்பும் கூடியது… தச்சனுக்கு அழுத்தமும் கூடியது… 
“இதெல்லாம் நல்லாவா இருக்கு? குடும்பத்து பொண்ணுங்க இப்படியெல்லாம் பிடிவாதம் பிடிக்கலாமா? நேற்று தான் கல்யாணம் ஆச்சு இப்போவே நீங்க சொல்றதையும் கேட்க மறுக்குது. இது விளையாட்டு காரியம் இல்லை மாப்பிள்ளை தம்பி. நீங்க இலகுவா இருக்கீங்க… கொஞ்சம் இறுக்கிப் பிடிங்க அப்போ தான் கேட்கும்.” என்று அவனை வேறு உசுப்ப, சபை நடுவில் தச்சனுக்கு தன்மானம் சீண்டப்பட்ட உணர்வு. இப்படித் தான் பலது வெளியுலகத்தால் கிடைக்கவேண்டிய இயல்பான உரிமை கூட மறுக்கப்படுகிறது. 
ஒருவர் அடக்க மற்றொருவர் அடங்கித்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற தவறான புரிதல் பரவலாகிக் கிடக்க, ஒருவரை ஒருவர் அடக்காமல், ஒருவொருக்கு ஒருவர் அடங்காமல் சரிசமமாய் உணர்வுகளை பகிர்ந்துகொண்டு வாழும் வாழ்வின் ருசி சொற்ப இலக்கத்தினருக்கே வாய்க்கப்பட்டிருப்பது இது போன்ற வெளியிலக மாயத்தால் தானே… 

Advertisement