Advertisement

“ஏங்க அவசரப்படுறீங்க? யோசித்து சொல்லுறோம்னு சொல்லியிருக்கலாமே?” என்று சுமதி தனிமையில் வந்ததுமே கணவரை பிடித்துக்கொண்டார்.
“யோசிக்க என்ன இருக்கு? நான் குடும்பத்தை பற்றி விசாரிச்சுட்டேன். எல்லாமே நல்ல மாதிரி தான் சொல்றாங்க. குந்தவைக்கும் அந்த பையனை பிடிச்சிருக்க மாதிரி தான் தெரியுது.” என்று நந்தன் அசலாய் தனக்குத் தோன்றியதை சொன்னாலும், அவசரம் அவசரமென்று குந்தவை திருமணத்தை முடிக்க எண்ணினார். ஏனோ சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என்ற உந்துதல் மனதில்… 
“எனக்கு பிடிச்சிருக்குறதெல்லாம் சரிதான். ஆனால் கொஞ்சம் பொறுமையா செய்யலாம் அப்பா. அவங்க எந்த ஊரு, என்ன வேலைனு நீங்க இன்னமும் சொல்லவே இல்லை.” என்று குந்தவை பேச, அதை ஆமோதித்து பதில் எதிர்பார்த்து காத்திருந்தார் சுமதி. அவருக்கும் தச்சனை பற்றி முழுதாய் சொல்லியிருக்கவில்லை.
“எல்லாம் யோசிக்காம செய்வேன்னு நினைக்குறீங்களா?”
தந்தை காட்டும் அவசரம் குந்தவைக்கு ஏனோ அச்சத்தை தான் கொடுத்தது.“யோசித்து தான் செய்வீங்க ஆனால் அதை ஏன் அவசரமா செய்யணும்?” 
“அவசியமா படுவதால் தானே அவசரமா செய்யுறேன். உனக்கு பிடிச்சிருக்கு தானே குந்தவை? நான் சரி சொல்லிடவா?” என்று மீண்டும் தன் பிடியிலேயே நின்றார் நந்தன்.
குந்தவையும் இறங்கிவராமல், “என்ன அவசியம் இப்போ? ” என்க, இது முடிவுக்கு வராது என்றுணர்ந்து, “உனக்கு பிடிச்சிருக்குனு உன் பார்வையிலேயே தெரியுது, நான் சரி சொல்லிடுறேன்.” என்றவர் விடுவிடுவென வீட்டுனுள் நுழைய, பதறி அவரைத் தொடர்ந்து வந்தனர் தாயும், மகளும்.
“எங்களுக்கு முழு சம்மதம்.” என்று மலர்ச்சியுடன் நந்தன் சபையில் சொல்ல,
“அப்போ கையோடு பரிசம் போட்டுடலாம்.” என்றார் திவ்யாவின் மாமியார்.
‘என்ன எல்லோரும் இவ்வளவு வேகமா இருக்காங்க? விட்டால் நாளைக்கே கல்யாணம் செய்து வச்சிடுவாங்க போலிருக்கு,’ என்ற பீதியுடன் குந்தவை நிற்க, அவளை கண்டு மலர்ச்சியுடன் புன்னகைத்தான் தச்சன். அவனின் புன்னகையில் பதட்டம் இன்னுமே அதிகரித்தது.
“சிறப்பா செஞ்சிடலாம். இந்த இடம் தான்னு முடிவாகிடுச்சு, ஏன் காத்திருக்கணும்.” என்று நந்தனும் ஒத்துதூத, அன்பரசனுக்கும் இனி காலம் தாழ்த்த வேண்டாம் என்றே தோன்றியது. உடனேயே வரிசை பொருட்கள் வாங்கி அடுக்கிவிட, குந்தவைக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே புரியவில்லை. அவ்வப்போது விழிகள் மட்டும் அவனிருக்கும் திசைக்கு சென்று வந்தது. வானதியின் சிட்டுகளும் விழித்துவிட வானதியின் பேச்சை கேட்காமல், தத்தை நடையிட்டு கூடத்திற்கு சென்றவர்கள் அங்கு குழுமியிருக்கும் கூட்டத்தை சுவற்றை பிடித்துக்கொண்டு பார்த்தார்கள்.
“என் பேரக்குழந்தைங்க. பெரியவ வானதியோட டிவின்ஸ். குட்டிப்பையன் அறிவழகன், பொண்ணு அறிவழகி.” என்று நந்தன் அறிமுகப்படுத்தி குழந்தைகளை அருகில் அழைக்க,
திவ்யா எழுந்து சென்று ஆசையுடன் பெண் குழந்தையை தூக்கிக்கொண்டாள். ஆண் பிள்ளை வாயில் விரலை விட்டு சப்பு கொட்டிக்கொண்டே தச்சனிடம் சென்று அவனது சட்டையை பிடித்து நின்றுகொண்டது.
“தூக்குடா குழந்தையை… இதெல்லாமா சொல்லி கொடுக்கணும் உனக்கு?” என்று தச்சனை நீலா அடிக்குரலில் கடிய, “எனக்கு தூக்கத் தெரியாதுன்னு உனக்கு தெரியாதா?” என்றான் அவன்.
“உன்கிட்ட போய் சொன்னேன் பாரு,” என்று முணுமுணுத்துக்கொண்டு அவரே அந்த குழந்தையை தூக்க முற்பட, அவனோ தச்சனின் வேட்டியை இப்போது இறுக பற்றிக்கொண்டு மறுப்பாய் சிணுங்கினான். தச்சன் தர்மசங்கடமாய் நெளிய, அசட்டு சிரிப்பை உதிர்த்த திவ்யா,
“என்னடா குட்டிப்பையா உங்க சித்தி மாதிரி உனக்கும் சித்தப்பாவை பிடிச்சிருச்சா?” என்று அறிவழகனை பார்த்து கேட்க, அவளது வார்த்தையினை உள்வாங்கியிருந்தவன் தச்சனின் காலை பிடித்துத் தொங்கி, “பா… பூ… ப்பா,” என்றானே மழலை மொழியில்… குந்தவையின் சர்வ சந்தேகமும் அடங்கியது. ஏனோ வயது வந்தவர்களுக்கு காரணமின்றி காதல் மட்டும் வருவதில்லை, மழலைகளுக்கும் காரணமின்றி ஒருசிலரை பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. அவர்களின் உலகிலும் அந்த பிடித்தத்திற்கான காரணம் பிடிபடுவதில்லை.
இப்போது என்ன உணர்கிறோம் என்று புரியாத நிலை தச்சனுக்கு. அந்த மழலை மொழியில் பொறுப்பு வந்து அமர்ந்துகொண்டது போன்றதொரு பிம்பம். வெட்டியாக சுற்றுவதை நிறுத்திவிட வேண்டுமென்ற எண்ணமும் தானாக தோன்றியது. அந்த எண்ணம் வந்த பின்பு குழந்தையை தூக்காமல் இருக்க முடியவில்லை. பழக்கமில்லை என்றாலும் ஒருவயது குழந்தையை தூக்குவதில் சிரமமொன்றும் இல்லை. இரு கைகளை அணைவாக தாங்கி அறிவழகனை தூக்கிக் கொண்டவன், அவனை மடியில் அமர்த்திக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் ஒன்று வைக்க, சத்தமாய் கிளுக்கிச் சிரித்தான் அறிவழகன். அறிவழகன் சிரிப்புச் சத்தத்தில் அவனைவிட இரண்டு நிமிடமே மூத்தவளான அறிவழகியும் கைகளை தச்சன் புறம் நீட்டிக்கொண்டு சிணுங்க, 
‘பாருடா… ஒட்டிக்குறதை,’ என்றுதான் பார்த்திருந்தனர் அனைவரும், ஒருவரைத் தவிர. நீலாவுக்கு தன் மகள் வயிற்றுப் பிள்ளையை இப்படி அவன் கொஞ்சுவதற்கு இன்னும் வாய்ப்பு அமையவில்லையே என்ற சுணக்கம் இப்போதே வந்திருந்தது. தன் மகளுக்கு குழந்தை பாக்கியம் அமையும் முன்னமே இந்த பிள்ளைகள் முந்திக்கொண்டு அவனிடம் ஆதிக்கம் செலுத்திவிடுவார்களோ என்ற தேவையற்ற எண்ணங்கள் வேறு சோர்வை ஏற்படுத்த, முன்பிருந்த மலர்ந்த முகம் வாடியது.
“குழந்தைகளை அவ்வளவா வெளியில் கூட்டிட்டு போனதில்லை. அவங்க அப்பா வீட்டிலும் அவ்வளவு சேர்த்தியில்லை. இவங்க பிறந்து ரெண்டு மாசத்திலேயே வானதி வீட்டுக்காரர் கண்ணு மூடிட்டாரு. அதுதான் பையன் மாப்பிள்ளையிடம் சீக்கிரம் ஓட்டிகிட்டேன் போலிருக்கு. அவன் இருக்கானு இவளும் போட்டிக்கு தூக்க சொல்றா.” என்றார் அழுத் தயாராகும் அறிவழகியை கைகாட்டி… 
“எதனால இவங்க அப்பா தவறிட்டாங்க? ஆக்சிடெண்ட்டா?” என்று தச்சன் சற்று தயங்கி வினவ,
நந்தன் முகம் சுருங்கியது, “இல்லை. விஷம் குடிச்சிட்டாரு. தலைக்கு மேல கடன், விவசாயத்தில் வருமானம் போதலை… பொண்டாட்டி பற்றியும், பிஞ்சு குழந்தைகளை பற்றியும் கவலை இல்லாம போய் சேர்ந்துட்டாரு. பிரசவத்துக்கு இங்கு வந்த வானதி திரும்ப அங்க போகவே இல்லை.” என்று வருந்தி கூற, தச்சன் அந்த நொடி வருத்தம் தெரிவித்துவிட்டு இயல்பாகிவிட்டான், இந்த ஒரு காரணத்தினாலே குந்தவை அவனை ஏற்காமல் அலைக்கழிக்க போவது தெரியாமல்… 
“நல்லது நடக்கப்போகிற நேரத்தில் இப்போ எதற்கு இதெல்லாம்?” என்று சுமதியின் அக்கா விரட்ட, தச்சன் வீட்டு சார்பில் குந்தவைக்கு செய்ய வேண்டியது எல்லாம் செய்து மாலையிட்டு அவளை அவனருகில் நிற்க வைக்க, குந்தவை அவனை ஒட்டாமல் தள்ளி நின்றாள். தச்சனை கேட்கவும் வேண்டுமா அவளின் செயலுக்கு நேர்மாறாக அவள் தோளை உரசிக்கொண்டு நின்றவன் யாரும் கவனியா நேரம் பட்டென்று அவள் விரல்களை தன்வசப்படுத்தி இறுக பற்றிக்கொண்டான்.
“என்ன செய்றீங்க?” என்று கைகளை உருவப்பார்க்க, கட்டைவிரல் கொண்டு அவளது மிருதுவான சருமத்தை வருடியவன் தன் மறுகையால் சட்டைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து செக்கியூரிட்டி லாக் எடுத்தவன் அதை அவள் கையில் திணித்து, “உன் போன் நம்பரை சேவ் பண்ணி கொடு.” என்க, அதிர்ந்துதான் பார்த்தாள் குந்தவை. அவள் பார்வையிலேயே அவள் மறுக்கப்போவதற்கான அறிகுறி தெரிய முந்திக்கொண்டவன், “இப்போ நீ கொடுக்கலைனா நானே உன் அப்பாகிட்ட எல்லோர் முன்னாடியும் கேட்டுருவேன்.” என்று செல்லமாய் மிரட்ட தடுமாறிப்போனாள் மங்கை. 
இந்த சூழ்நிலை புதிதாய் இருக்க, மனதிற்கு பிடித்துவிட்டவனுமே புதியவனாய் இருக்க அவளுக்கும் அவனை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவல் இருக்கத்தான் செய்தது. ஆனால் என்றும் இல்லாத இந்த பாழாய் போன கூச்சம் எங்கிருந்தோ வந்து திடுமென ஒட்டிக்கொண்டு அவளை இம்சிக்க, எங்கும் தைரியமாய் பேசும் தன்னுடைய சுயத்தை இழப்பது கடுப்பாகவும் இருந்தது. இருந்து என்ன பயன்? திருமணம் என்று வந்ததும் மங்கைகளுக்கே உரித்தான நாணம் அவளை கட்டிப்போட, அதெல்லாம் ஒரு நிமிடம் தான். 
லாக் எடுத்திருந்த அவனது அலைபேசி வால்பேப்பரில் தெரிந்த நடிகையை பார்த்ததும் நாணம் பின்சென்று எரிச்சல் வந்தது. அதென்ன ஆண்மகன் அலைபேசியில் நடிகைகள் போட்டோ? இந்த இயற்கை காட்சி, மலர்கள், பேக்கிரௌண்ட் வால்பேப்பர் என்று கோடி புகைப்படங்கள் இணையத்தில் உலாவுகையில் எவளோ ஒருவளுக்கு அலைபேசியின் முக்கிய திரையில் எதற்கு இடம் கொடுக்க வேண்டும்? அதுவும் மாடர்ன் உடையில் கையும் கழுத்தும் இல்லாத ஸ்ட்ராப்ளஸ் உடை போட்டிருந்த ஏதோவொரு நடிகையின் படம். 
“என்ன பார்த்துட்டே இருக்க? சீக்கிரம் சேவ் பண்ணி கொடு. என் தங்கச்சி நம்மை கலாய்க்க தயாரா இருக்கா.” என்கவும் வேகமாக அவளது நம்பரை அதில் சேவ் செய்துதர, அலைபேசியை பத்திரமாய் வாங்கி திரும்ப சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டான். பரிசம் முடிந்ததுமே இவர்கள் கிளம்பிவிட, கார் புறப்பட்டதுமே தன் அலைபேசியிலிருந்து வாட்ஸாப்பில் ஒரு வணக்கத்தை அவளுக்கு அனுப்பி வைத்தான்.
“சரியான கேடிமா இவன்… அண்ணிகிட்ட அதற்குள் நம்பர் வாங்கிட்டான். என் நிச்சயம் முடிஞ்சதும் அவர் நம்பர் வாங்கித் தரச்சொல்லி எவ்வளவு கெஞ்சிருப்பேன், அப்போதெல்லாம் கல்யாணத்திற்கு முன் பேசுறது நம்ம குடும்ப வழக்கத்தில் இல்லை, நமக்கு ஒத்துவராதுனு சொல்லிவிட்டு இப்போ அவனுக்கு என்றதும் என்ன பண்ணிட்டு வந்திருக்கான் பாரு…” கார் கிளம்பியதுமே திவ்யா அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டாள்.
“இந்த சுமார் மூஞ்சிக்கு அந்த பொண்ணு கொஞ்சம் அதிகம் தான்னு அவனுக்குமே தெரிஞ்சிருக்கும், அதுதான் இப்போலேந்து சோப்பு போடுறான்.” என்று அன்பரசனும் சேர்ந்துகொள்ள நீலா வாயே திறக்கவில்லை. 
“இந்த சுமார் மூஞ்சி தச்சனுக்கு அந்த சுமார் மூஞ்சு குந்தவை போதும்.” என்றவன் சிரித்துக்கொண்டே அவனின் அலைபேசியில் கண்ணை பதித்திருந்தான். 
இவனது வணக்கத்திற்கு பதில் வந்திருந்தது, ‘உங்க வால்பேப்பர் எனக்கு பிடிக்கல.’  என்று அவள் அனுப்பியிருக்க, குறும்பாய் சிரித்தவன்,
‘ஏன் உன் படம் வைக்கணுமா?’ என்று எதிர்கேள்வி எழுப்ப, அங்கிருந்து கூட எதிர்கேள்வி தான் வந்தது.
நீங்க எங்க வேலை பார்க்கறீங்க?’
‘பார்க்கறீங்க இல்லை . இனி தான் பார்க்கணும்.’ என்று இவன் மறையாது உண்மையை அனுப்ப சில நிமிடங்களுக்கு பதிலே வரவில்லை . 
‘ஏய் ? என்னாச்சு குந்தவை? பதிலையே காணும்?’ என்று பலமுறை இவன் குறுஞ்செய்தி அனுப்பியும் அவளிடமிருந்து பதில் வரவில்லை. அவனுடன் குடும்பம் மொத்தமும் இருந்ததால் அவளுக்கு உடனே அழைத்தும் பேச முடியவில்லை. என்னாச்சோ என்று படபடப்புடன் வீடு வரை வந்தவன் உடனே அவளுக்கு அழைக்க, தாமதமாகவே எடுக்கப்பட்ட அழைப்பு அவனுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல், “நமக்கு ஒத்துவராது. இனி என்னை தொந்தரவு செய்யாதீங்க.” என்றுவிட்டு அவள் அழைப்பை துண்டிக்கப்போக,
“ஏன் ஏன் குந்தவை? என்னாச்சு?” என்று பதறி கேட்க, ஒருநொடி நிசப்பதத்திற்கு பிறகு,
“நீங்க விவசாயம் செய்றீங்கன்னு இப்போ தான் சொன்னாங்க. எனக்கு விவசாயம் செய்யுறவரும் , விவசாயம் படிச்சவரும் கண்டிப்பா வேண்டாம். முன்னாடியே நீங்க வேளாண் சம்மந்தமா படிச்சிருந்து, அதைத்தான் செய்யப் போறீங்கன்னு தெரிந்திருந்தால் அப்போவே முடியாதுனு சொல்லி இருப்பேன்.” என்றவள் குரலில் ஒட்டாத தன்மை இருந்ததை கூட இவனால் உணர முடிந்தது.
“இதென்ன காரணம்?” என்று சற்று அதட்டலாய் கேட்க,
“என் அக்கா ஒரு விவசாயியை கட்டிக்கிட்டு வாழ்க்கையை தொலைச்சது போதும். நானும் அதே குட்டையில் விழ விரும்பல. விவசாயம் பார்த்துட்டு இனி வரும் காலத்தை தள்ள முடியாது. எங்காவது நகரத்தில் இருந்து வேலை பார்த்தால் தான் பொழைப்பு ஓடும். எங்க பக்கம் தப்பு இருப்பதால் தான் இவ்வளவு பொறுமையா சொல்லிட்டு இருக்கேன், நீங்க இதற்கு மேல தொந்தரவு செய்தால் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.” வார்த்தைகளில் கடினம் ஏற, தச்சனின் தன்மானம் தூண்டப்பட்டது.
“என்னடி செய்வ?” என்று இவன் எகிற, அவனின் விளிப்பில் அவளது சுயம் விழித்தது.
“இந்த டி போட்டு பேசுற வேலையெல்லாம் இங்கே வசிக்காத. ஒரு பொண்ணு பிடிக்கலைனு சொன்னா ஏத்துக்கணும், அதைவிட்டு சும்மா இந்த சத்தம் போடுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்.”
“பிடிக்காதவ தான் நம்பர் கொடுப்பாளா? இப்போ தான் என் அப்பாவே மனசு இறங்கி நான் ஆசைப்பட்ட மாதிரி விவசாயம் பண்ண நிலம் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்காரு. அதை கெடுத்துக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் உன்மேல விருப்பம் இருக்கு அந்த விருப்பத்தை விடவும் நான் தயாரா இல்லை.”
“உன் விருப்பத்திற்காக எல்லாம் என் முடிவை, என் கொள்கையை மாத்திக்க முடியாது.” என்று அழுத்தமாய் பேசினாள் குந்தவை.
“நானும் யாருக்காகவும் என் விருப்பத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்.” என்றான் சளைக்காமல் இவனும்.
“ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க முடியும், சும்மா வாய்ச்சவடால் விட்டு என்னை உசுப்புனா கல்யாணம் செய்துக்க சொல்லி மிரட்டுறேன்னு உன் மேல போலீசில் புகார் கொடுத்துடுவேன்.”
“கொடுடி பார்க்கலாம். யார் உறையில் இருக்கா? யார் கீழ இறங்குறானு பார்த்துடலாம்.”
“பார்க்கலாம்டா நீயா நானான்னு…” என்று மூச்சைப்பிடித்து சத்தம் போட்டவள், அலைபேசியை துண்டித்துவிட, தோப்பில் இருந்த தச்சன் அலைபேசியை தன் எதிரே குமித்திருந்த மணலில் தூக்கி எறிந்தான். கை தானாக சிகரெட்டை தேடி பற்ற வைக்க, மனம் முழுதும் குந்தவையின் மேல் ஆத்திரம் மூண்டது.
விவசாயத்திற்கு படித்துவிட்டு எவர் துணையுமின்றி இதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று காத்திருந்தவனுக்கு தக்க சமயம் அமையும் போது, அதே விவசாயத்தை காட்டி அவனை அவள் நிராகரித்தால் ஏற்பானா என்ன? உலகுக்கே சோறு போடும் உழவு எந்த விதத்தில் குறைந்துவிட்டதென இவள் இப்படி பேசுகிறாள் என்ற கடுப்பு பரவ, கட்டினால் அவளைத்தான் கட்ட வேண்டும் என்ற வெறி உதிரத்தில் கரைந்து ஊறியது.

Advertisement