Advertisement

*3*
தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் அவன் இருப்பிடம் குடந்தையை ஒட்டிய ஊராட்சியான திருநறையூரில் இருந்து அவள் வசிப்பிடம் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியது. இரண்டு வாடகைக் கார் பிடித்து மகளின் புகுந்த வீட்டினரை மட்டும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தேவையானவற்றை குடந்தையில் வாங்கிவிட்டு பயணமாக, வெள்ளைவேட்டிக்கு தோதாய் அரக்குச் சட்டையில் இருந்தவன் கழுத்திலும், கையிலும் தங்கம் மின்னியது. கண்களை மறைக்கும் விதமாய் ஒரு கூலர்ஸ். தலைக்கு எண்ணை வைக்காமல் இந்த நாளிற்கென மெனெக்கெட்டு அதிக விலை கொடுத்து வாங்கிய ஹேர் ஜெல்லின் புன்னியத்தில் ஸ்டைல் என்ற பெயரில் என்னவோ செய்து வைத்திருந்தான். முகத்திற்கு தனி க்ரீம் வேறு… தந்தையிடமும், அன்னையிடமும் இந்த திருமணம் வேண்டாம் என்று முறுக்கியதற்கு முற்றிலும் மாறாக இருந்தது அவனது வதனத்தில் தவழ்ந்த பெருநகை. பின்னே, சும்மாவே அப்படி இப்படி என்று பெண்களை ஆவென்று பார்ப்பவனை மாப்பிள்ளை என்று முன்னிறுத்தி பெண் பார்க்க அழைத்துச் சென்றால் கிடைத்த வாய்ப்பை விடுவானா என்ன? ஜோராக கிளம்பிவிட்டான்.
“பொண்ணு பார்க்க இவ்வளவு அலப்பறை தேவையா?” என்று முகத்திற்கு சாயம் ஏற்றும்போதே அவனின் தங்கை திவ்யா கூட கோடிட்டு கேட்டாள். அதெல்லாம் அவன் காதில் விழுமா என்ன? 
“அப்பாரும், மகளும் ஒரே மாதிரி கேட்குறீங்க? பொண்ணு பார்க்க போறோம், கொஞ்சம் பார்க்குற மாதிரி போனால் தானே பொண்ணு ஓகே சொல்லும்.” என்று நீலா இயல்பாய் சொல்ல, பற்களை கடித்து விழிகளை உருட்டினான் தச்சன். அப்போ மற்ற நாளில் பார்க்க முடியாத அளவிற்கா இருக்கேன் என்ற செய்தியே அதில் பிரதிபலிக்க,
“நீ நினைக்குறது சரிதான். இன்னைக்கு தான் கொஞ்சம் பார்க்குற இருக்க.” என்று அன்பரசனும் வேண்டுமென்றே வம்பிழுத்தார் அவனிடம்.
“அவன் சும்மா இருந்தாலும் நீங்க சும்மா இருக்க மாட்டேங்குறீங்க.” என்று நீலா கணவரை கண்டிக்க,
“என் பேராண்டிக்கு என்ன குறைச்சல்? அவனை வேண்டாம்னு எவ சொல்லுவா?” என்று இடைபுகுந்து மங்களம் தச்சனின் முகம் வழித்து திருஷ்டி கழிக்க, 
அவனை வேண்டாம் என்று அந்த நாளின் இறுதியிலேயே சொன்னாள் குந்தவை. எல்லாமே நன்றாகத்தான் சென்றது… உண்மை தெரியும் வரை. 
மயிலாடுதுறையின் முக்கிய பகுதியிலேயே சிறிய வாடகை வீட்டில் இருந்த அவளது வீட்டில் தச்சன் குடும்பத்துடன் சென்று இறங்கவும் ராஜ உபச்சாரம் நடந்தது. சுமதியின் அக்கா மட்டுமே குடும்பத்துடன் பெண் வீட்டு உறவினராய் சபையில் நிற்க, அவரே ஓடியாடி வந்திருந்தவர்களை கவனித்தார். வேறு உறவுகள் இல்லை என்பதைவிட உறவினர்களை அழைக்கவில்லை என்பது தான் உண்மை. சின்னவளுக்கு நல்லது நடக்கும் இந்நேரத்தில் பெரியவளை பற்றிய பேச்சின்றி உறவுகள் நகராது என்றுணர்ந்தே எவரையும் அழைக்கவில்லை நந்தன். 
“சொந்தம் வழியா பொண்ணு எடுத்தா மனசுக்கு திருப்தியா இருக்கும்னு பார்த்துட்டு இருந்தேன், நான் எதிர்பார்த்த மாதிரியே சரியா அமைஞ்சிருச்சு. பிள்ளைகளுக்கு பிடிச்சு போச்சுன்னா சீர் சனத்தை பெருசா பார்க்காம முடிச்சிட வேண்டியதுதான்.” அன்பரசன் பேச்சை துவங்க, தச்சனின் பார்வை அவ்வீட்டை சுற்றி சுற்றி வந்தது. இந்த படத்தில் எல்லாம் காட்டுவது போல சன்னல் வழியே தான் பார்க்க வந்திருக்கும் குந்தவை ஆவலாய் நின்றுகொண்டு தன்னை பார்க்க மாட்டாளா என்ற எண்ணம் அவனிடத்தில்… சன்னலுக்கே பஞ்சமாக இருக்கும் வீட்டினில் அவனை பார்க்க வேண்டும் என்று அவள் ஆவல் கொண்டு மட்டும் என்ன பயன்? 
“எனக்குமே வெளியே கொடுக்க விருப்பம் இல்லைங்க. பெரியவளுக்கு வெளில தான் எடுத்தோம் ஆனா சரியா வரல… அதுதான் சின்னவளுக்கு சொந்தத்தில் நம்பகத்தன்மையான குடும்பத்தில் கொடுக்கும்னு பிடிவாதமா பார்த்துட்டு இருந்தேன்.” என்று நந்தனும் பேச, சொந்தங்களை பற்றிய பேச்சுக்கள் வளர, தச்சனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
“வந்த வேலையை பார்க்காம இதென்ன இப்படி தேவையில்லாதது எல்லாம் பேசிட்டு இருக்காங்க? இதெல்லாம் நீ கேட்க மாட்டியா?” என்று நீலாவின் காதை கடிக்க, அதையே தான் உள் அறையில் குந்தவையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“காலையிலேயே என்னை படுத்தியெடுத்து கிளம்ப வச்சுட்டு இப்போ எதற்கு இவ்வளவு நேரம் வெட்டியாக பேசிட்டு இருக்காங்க?” என்று வானதியிடம் சிணுங்கிக் கொண்டிருந்தாள் அந்த அரிவை. கிளம்பி அமர்ந்திருப்பது கூட அவ்வளவு கொடுமையானதாக தெரியவில்லை ஆனால் உடையும் ஒப்பனையும் களைந்து விடுமென்று வானதியின் பிள்ளைகளை கூட தூக்க அனுமதிக்கவில்லை என்பது தான் எரிச்சல் தருவதாய் இருந்தது. 
“கல்யாணமே வேண்டாம்னு அழுத, இப்போ என்ன ஆர்வமா இருக்க?” என்று வானதி கேலிப்பார்வை வீசி கிளுக்கிச் சிரிக்க, குந்தவையின் கன்னிக்கதுப்புகளை நாணம் ஆக்கிரமிக்க முற்பட்டது. புலர்ந்தும் புலராத மலர்ச்சிக்கு இடையில், “இங்கிருந்து நாலு அடி எடுத்து வைத்தால் பார்க்கலாம் என்ற தூரத்தில் வச்சிக்கிட்டு ஆர்வம் இருக்கக்கூடாதுனா எப்படி? அப்பா மொபைல் டிஸ்பிளேவில் போட்டோ தெளிவாகக் கூட தெரியல.” என்று உதட்டை பிதுக்கியவளுக்கு திருமண பேச்சுக்கள் அதிகரிக்க அதிகரிக்க அந்த வயதிற்கே உண்டான ஆசைகளும் கனவுகளும் மெல்ல எட்டிப்பார்த்தது. ரகசியம் ரகசியமாகவே இருக்கும் வரை தான் அதை சுற்றியே எண்ணங்கள் ஓடி, ஈர்ப்பு குறையாமல் இருக்கும். அதுபோன்றதொரு ஈர்ப்பு அவளிடத்தில்… வரப்போகிறவனை பற்றி பெற்றோர்கள் எதுவும் பெரிதாக சொல்லியிராது இருக்க, வந்திருப்பவனை பார்க்கும் ஆவலில் நெஞ்சம் அடித்துக்கொண்டது. 
“குந்தவை வா, மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துட்டாங்க. வந்து வணக்கம் சொல்லி, ஆசிர்வாதம் வாங்கிக்கோ.” என்று சுமதி சற்று பரபரப்பாக உள்ளே நுழைந்து சொல்ல, குந்தவையின் உள்ளங்கையெல்லாம் ஈரமாகியது.
வியர்த்து நீர்த்த கையுடன் வானதியின் கரத்தை பற்ற, நாசுக்காக அதை அகற்றினாள் வானதி. என்ன என்பது போல குந்தவை நோக்க, சிறு முறுவலுடன் கண்சிமிட்டியவள், “பசங்க அங்க வந்தால் சும்மா இருக்க மாட்டாங்க. நீ போ.” என்று வானதி அவளை வெளிப்புறம் லேசாக தள்ள, குழந்தைகளை காரணம் காட்டி சாக்கு சொல்கிறாள் என்று நன்றாகவே புரிந்தது குந்தவைக்கு. இருந்தும் அந்நேரம் எதுவும் பேசிட முடியவில்லை.
ஒருவித படபடப்புடன் சேலையை ஒருமுறை சரிசெய்துவிட்டு கூடத்திற்கு வந்தாள் குந்தவை. விழிகள் யார் தனக்கானவன் என்ற கேள்வியோடு அலைபாய முனைய, அதை தடுக்கும் விதமாய் அவளின் முழங்கையை அழுத்தமாய் பிடித்த சுமதியின் அக்கா வந்தவர்களை வரவேற்க சொல்ல, ‘இதென்னடா ஒரவஞ்சனையா இருக்கு. ஆம்பளைங்க மட்டும் நம்ம வீட்டுக்கே வந்து நடுவீட்டில் சட்டமா உட்கார்ந்துகிட்டு எந்த தடங்கலும் இல்லாம நம்மை பார்ப்பங்களாம் ஆனால் சொந்த வீட்டிலே அந்நியமாகி நாங்க மட்டும் குனிந்த தலை நிமிராமல் பொம்மை மாதிரி நிற்கணுமாம். மாப்பிள்ளை பார்க்குற சடங்குனு ஒன்னு வைக்கணும், அப்போ தான் நம்மோட தவிப்பு புரியும்.’ என்று அந்நேரத்திலும் மனம் கேள்வி எழுப்பி முரண்டியது.
“குந்தவை.” நந்தனின் குரல் அழுத்தமாய் ஒலிக்க, சுதாரித்தவள் படபடக்கும் இதயத்தோடு கைகளை கூப்பினாள். இதயத்தின் தாளத்திற்கு ஏற்ப அவள் விழிகள் நர்த்தனம் புரிய சுவாரசியமாய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் தச்சன்.
“படபடப்பா இருக்கா? ஒன்னும் பிரச்சனை இல்லை. என்னை பொண்ணு பார்க்க வந்தபோது எனக்கும் இப்படித்தான் இருந்தது.” என்று இயல்பாய் கீழே அமர்ந்திருந்தவள் எழுந்து குந்தவையின் அருகில் வந்து பேச, படபடப்பு குறைவது போல உணர்ந்தாள் குந்தவை. தன்னுடன் பேசியது யாரென்ற வினா தொக்கி நிற்பினும், நிமிர்ந்து பார்த்தவள் உளமார முறுவல் பூத்தாள் பதிலுக்கு.
“திவ்யா இந்த பூவை அண்ணிக்கு வச்சுவிடு,” என்று நீலா திவ்யாவிடம் மல்லிச்சரத்தை நீட்ட, ‘இதென்ன பொண்ணு பார்க்க வந்துவிட்டு எல்லாம் முடிஞ்ச மாதிரியே பேசுறாங்க?’ என்று எண்ணம் தான் குந்தவையிடம்.
குந்தவையின் சிகையில் அழகாய் மல்லிகையை தொங்கவிட்ட திவ்யா, “நான் திவ்யா. என் அண்ணனுக்கு தான் உங்களை பார்க்க வந்திருக்கோம். அதோ அந்த அரக்குச் சட்டை தான் என் அண்ணன்.” என்று அண்ணனை அறிமுகப்படுத்த, அரக்குச் சட்டையை தேடி குந்தவையின் விழிகள் அவசரமாய் ஒருமுறை கூடம் முழுதும் உலா வந்து, அரக்குச் சட்டையை கண்டு அங்கேயே பார்வை நிலைத்தது. முதலில் ஆர்வமாய் படிந்து பின் ஆராய்ச்சியாகவும் படிந்தது.
‘மாநிறத்திலும் கலையா இருக்கான். என்ன தாடி வச்சிருக்கான்? தாடி இல்லைனா இன்னும் நல்லா இருப்பான்… முதல் வேலையா அதை எடுக்க சொல்லணும். அட கூலர்ஸ் எல்லாம் வச்சிருக்கான், கூலர்ஸ் போட்டால் நல்லா இருப்பானோ? ஆள் பார்க்க அலுங்காம குலுங்காம உழைக்குற வர்க்கம் மாதிரி இருக்கே, என்ன வேலை செய்றான்னு கூட அப்பா சொல்லல… கரடுமுரடா தெரியல சோ விவசாயம் பார்க்கல அது மட்டும் உறுதியா தெரியுது. அடுத்து… என்ன அவன் உதட்டை காணோம்? ஓ.. தாடிக்குள் ஒளிஞ்சிட்டு இருக்கா? என்று கூர்ந்து அவனுதடத்தை பார்த்தவள், ‘அவன் லிப்ஸ் கூட கருப்பா இல்லை, சோ சிகரெட் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. தண்ணி அடிப்பானா?’
“என்ன அண்ணி எங்க அண்ணன் அவ்வளவு சூப்பராவா இருக்காரு? இப்படி அங்குலம் அங்குலமா சைட் அடிக்குறீங்க?” என்று அவள் அருகில் இருந்த திவ்யா கிசுகிசுக்க, ஒருநொடி மூச்சு நின்று பின் இயல்புக்கு வந்தது குந்தவைக்கு.
தச்சனிடம் நிலைத்திருந்த ஆராய்ச்சி பார்வை எங்கோ ஓடிஒளிந்துகொள்ள, தான் ஆராய்ந்ததை திவ்யா போல வேறு யாரும் கவனித்து விட்டார்களோ என்ற ஆராய்ச்சி வந்துவிட்டிருந்தது.
“உங்களை மாதிரியே என் அண்ணனும் தொபக்கடீர்னு விழுந்துட்டான்.” என்று திவ்யா மீண்டும் அவளிடம் மெல்லமாய் பேச, தச்சனை பார்க்காமலேயே அவனின் கூர்பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தாள் குந்தவை.
“எவ்வளவு நேரம் நிற்பமா குந்தவை. உட்காரு. நீலா என்ன பார்த்துட்டு இருக்க…” வெகுநேரமாக குந்தவை சங்கடமாய் நிற்பதை உணர்ந்த அன்பரசன் நீலாவை அழுத்தமாய் பார்த்தார். அவர் சொன்ன செய்தியை உணர்ந்துகொண்ட நீலா குந்தவையை அழைத்து தன் அருகில் அமர்த்தி, மங்கலத்தையும், திவ்யா வீட்டினரையும் அறிமுகப்படுத்தினார்.
சட்டென்று ஒன்றமுடியாத சங்கடத்துடன் குந்தவை எப்புறமும் அசையாமல் சிலையென அமர்ந்திருக்க, அவளின் விழி அசைவுகளை தான் பார்த்திருந்தான் தச்சன். சும்மாவே அழகை ரசிக்கிறேன் என்று சுற்றுபவனை மாப்பிள்ளையாக்கி லைசன்ஸ் கொடுத்து நடுவீட்டில் அமர்த்தியது மட்டுமில்லாமல் குந்தவையின் ஆர்வமான பார்வை அவனை இனிய சுழலுக்குள் இழுத்துச் சென்று உசுப்பியது. 
‘என்னடா இவள் நம்மைவிட சூப்பரா சைட் அடிக்குறாளே,’ என்ற கவலை வேறு அவனுக்கு. இவன் நினைத்தது மட்டும் அவளுக்குத் தெரிந்தால் அவனை புரட்டி எடுத்துவிடுவாள் என்ற உண்மை விளங்க வெகுகாலம் இருக்கிறதே… 
“அப்போ ராகுகாலம் வரதுக்கு முன்னாடி கிளம்புறோம். நீங்க வீட்டில் கலந்து பேசிட்டு சொல்லுங்க.” என்று அன்பரசன் எழுந்துகொள்ள, தச்சன் எழாமல் குந்தவையை பார்த்தபடியே அமர்ந்திருந்தான். அவளை பிடித்திருக்கிறதா? தெரியவில்லை. பஞ்சமுமில்லாமல், மிதமிஞ்சமும் இல்லாமல் அவனுக்கு ஏற்றார் போல நடுநிலையான அவளது அழகு அவனை ஈர்த்ததா? அதுவும் தெரியவில்லை. இரு பத்து நிமிடத்தில் முடிவு செய்ய முடியவுமில்லை. ஆனால் பார்வையை மட்டும் அவளிடமிருந்து விலக்கிக்கொள்ள முடியவில்லை. மனதில் அவளை சிம்மாசனமேற்றி இவள் தாண்டா என்னவள் என்று சொல்லவும் முடியவில்லை. இவளை விடவும் மனதில்லை. இப்படி பல இல்லைகளை வைத்திருந்தாலும் திருமணம் என்பது இவளுடன் தான் என்ற முடிவிற்கு வந்திருந்தான். 
காரணம் இவளை மணமுடித்தால் வெகுசில வருடங்களாகவே அவன் எதிர்பார்த்து காத்திருக்கும் திருமகள் அவனுக்கு கிடைப்பாள். பக்குவம் இல்லாத வயதில் செய்த தவறால் அது கிடைக்கப்பெறாமல் இருக்க, நிராகரிப்பு தந்த பிடிவாதத்தில் வெளியிலும் தேட மனமின்றி தனித்தும் செயல்படமுடியாமல், தந்தையுடன் ஒன்றியும் வேலையில் மூழ்கமுடியாமல், தன்னை நிரூபிக்க வழியின்றி ஏனோ கடமைக்கு என்று ஊர் சுற்றி பொழுதை கழிக்கும் வாழ்க்கைக்கு முடிவு கிடைக்கும். குந்தவையிடமும் எந்த குறையும் தெரியாமல் போக, இந்த திருமணத்தை தள்ளிப்போடும் எண்ணமுமில்லை.
“தச்சா என்னடா அந்த பெண்ணை இப்படி பார்க்கிற? மானத்தை வாங்காத… அப்பா எழுந்துட்டாரு, நீயும் எழுந்திரு.” என்று நீலா அவன் காதை கடிக்க, பட்டென்று எழுந்தவன், “எனக்கு இந்த பெண்ணை கட்டிக்குறதுல முழு சம்மதம் அப்பா. அவங்க சம்மதம் கேட்டுட்டு நீங்க மேல பேசுங்க.”என்று தந்தையிடமே நேராகச் சொல்ல, அன்பரசனே திகைத்து நிற்கும் போது குந்தவையை கேட்கவும் வேண்டுமா? 
இன்னும் தச்சனின் வேலை, அவனது இருப்பிடம் என்று சிலபல கேள்விகள் அவளுள் இருக்க, அதை தெளிவுபடுத்தி கொண்ட பின்பே சம்மதம் சொல்ல வேண்டும் என்று எண்ணி இருந்தாள். இப்போதோ தச்சன் அனைவர் முன்னும் தன்னை மணம் புரிந்துகொள்ள சம்மதம் சொன்னது மனதில் ஒருபுறம் சாரல் அடித்தாலும், மறுபுறம் இதையே காரணமாக வைத்து தந்தை அவசரப்பட்டு இன்றே இந்த சம்மந்தத்தை உறுதி செய்துவிடுவாரோ என்ற படபடப்பும் இருந்தது. அவளது படபடப்பை பொய்யாக்காமல், “மாப்பிள்ளை தம்பி சரி சொல்லியாச்சு. என் பொண்ணுகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுறேன் இப்போவே… ஜுஸ் குடிச்சிட்டு இருங்க.” என்றுவிட்டு எழுந்த நந்தன், மகளுக்கும் மனைவிக்கும் கண்காட்டிவிட்டு வீட்டின் பின்கட்டிற்கு நகர்ந்த நேரம், இங்கு பூசை ஆரம்பமாகியது.
“இதெல்லாம் இப்படி பட்டுனு பேசுற காரியமில்லைன்னு சொல்லி கூட்டிட்டு வரமாட்டியா நீலா? இப்போ தான் பொண்ணு பார்த்திருக்கோம் அதற்குள் இவனுக்கு என்ன அவசரம்? தேவையில்லாம இப்போ அவங்களை அவசரப்படுத்துற மாதிரி இருக்கு.”
“கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தவன் இப்படி சொல்லுவான்னு எனக்கெப்படி தெரியும்? சும்மா வந்து பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொல்லிடுவானு நினைச்சேன்?” என்று நீலா முகத்தை தூக்க,
“அப்புறம் எந்த தைரியத்தில் அந்த பெண் முன்னாடியே அவளை திவ்யாவுக்கு அண்ணினு முறைவைத்து பூ வச்சிவிடுன்னு சொன்ன? அந்த பொண்ணு என்ன நினைச்சிருக்கும்?” என்று அன்பரசன் எகிற,
‛தோடா, இவர் மட்டும் அந்த பொண்ணோட பெயரை பார்த்து அவள் தான் மருமகள்னு முடிவு செய்து எல்லாம் பேசிட்டு நம்மிடம் சொல்லுவாராம். ஆனால் அதையே நாங்க சொன்னா தப்பாம்.’ வேறு வீட்டுக்குள் நின்று சண்டையா போடமுடியும்? அமைதியாக மனதிற்குள் அன்பரசனை திட்டிக் கொண்டிருந்தார். 
“அப்பா அவங்களுக்கும் அண்ணனை பிடிச்சிருக்குனு தான் நினைக்கிறன். சரிதான் சொல்லுவாங்க. இன்னைக்கே பதில் தெரிஞ்சிட்டா நல்லதுதானே,” என்று அன்னைக்கு முட்டுக்கொடுக்க வந்தாள் திவ்யா.
இதை அனைத்தையுமே அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தார் மங்களம். அவரிடம் இந்த இடம் பார்த்திருக்கேன் செய்யலாமா என்று ஒருவரும் கேட்கவில்லை, இங்க தான் பார்த்திருக்கேன் என்ற தகவல் மட்டுமே தரப்பட்டது. அந்த தகவலுக்காக வந்து சபையில் அமர்ந்திருந்தார். 
பிள்ளைகள் வளர்ந்து அவர்களுக்கென்று குடும்பம் அமையும் வரை தான் பெற்றவர்களின் கை ஓங்கியிருக்கும், பிள்ளைகள் தலையெடுத்த பின்னே இயல்பாகவே பெற்றவர்களின் கை ஒடுங்கிவிடுகிறது. அதுவே பல பிரச்சனைகளுக்கு வழியாகவும் அமைந்துவிடுகிறது. நீலாவின் பார்வையில் மங்களம், மாமியார் கனத்தை காண்பிக்கவே அவ்வப்போது குறைபடிக்கிறார் என்றிருக்க, மங்களம் மனதிலோ அன்பரசன் நீலாவின் மேல் அதிக பிரியம் வைத்திருக்கவும் அவள் கை ஓங்கி எங்கே தன்னை செல்லாக்காசாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் தொணதொணத்துக் கொண்டிருந்தார். பேரப்பிள்ளைகள் வளர வளர அவர் அஞ்சியது போலவே நீலாவின் கை ஓங்கிவிட, நீலாவை பகைத்துக்கொண்டால் ஒன்றிற்கும் ஆகப்போறது இல்லை என்று மெல்ல மெல்ல அமைதியாக பழகிக்கொண்டார். இப்போது நீலாவும் அதே சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது தச்சன் விருப்பத்தை சொன்ன விதத்திலேயே புரிந்து போனது அவருக்கு.
***

Advertisement