Advertisement

*22*
‘உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க, வாசலில் நிற்கச் சொல்லியிருக்கேன்.’ என்று அலுவலக உதவியாளர் அவளிடம் வந்து செய்தியைக் கடத்த, வியப்புடன் தன் இருக்கையில் இருந்து எழுந்தாள். 
‘நம்மள யாரு பார்க்க வருவா! வீட்டில எதுவும் பிரச்சனையா? அம்மா வந்திருப்பாங்களோ? இல்லைன்னா நான் வேலைக்கு வர்றது தெரிஞ்சு என் மாமியார் பிரச்சனை பண்ண வந்திருப்பாங்களோ? அவங்களா இருந்தா என்ன பண்றது?’ எண்ணங்கள் திசையெங்கும் சிதற, பதட்டம் தானாய் வந்து ஒட்டிக்கொண்டு கால்களை நகரவிடாமல் கட்டிப்போட்டது.
“உங்களை தான் யாரோ பார்க்க வந்திருக்காங்களாம். நீங்க என்ன இங்க நின்னுட்டு இருக்கீங்க? வேலை நேரத்தை கடத்தாம சீக்கிரம் பேசி அனுப்புங்க. மேனேஜர் பார்த்தா திட்டுவாரு.” என்று சகஅலுவலர் அவளை உசுப்ப, கையை பிசைந்துகொண்டே அந்த சிறிய அலுவலக வாயிலை அடைந்தாள். அங்கோ யாரும் இல்லாமல் போக, விழிகள் தவிப்பு மற்றும் ஆவலைத் தாங்கி ஒருமுறை சுற்றி வந்தது. 
“என்னை தேடுறீங்களா?” என்று திடுமென பின்புறம் பக்கவாட்டிலிருந்து குரல் ஒலிக்க, பதறித் திரும்பியவள் அங்கு நின்றுகொண்டிருந்தவனை கண்டு ஓரடி பின்னே நகர்ந்துவிட்டாள். 
இவரா! என்ற குழப்பமும் பதட்டமும் பல்க, குரல் வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடித்து நின்றது.
“இந்த பக்கம் வந்தேன்… அப்படியே இதை குடுத்துட்டு போகலாம்னு…” என்று இழுத்தவன் அவளிடம் ஒரு பையை நீட்ட, அவள் அதை வாங்கும் எண்ணமின்றி அவனையே இமைக்காது பார்த்து நின்றாள்.
அவளின் அதிர்வை உணர்ந்தவன், “நான் இங்க வருவேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. வேலையா ஒரு மாசம் போல சுத்திட்டு இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். வரும்போது பசங்களுக்கு கொஞ்சம் பொம்மையெல்லாம் வாங்கிட்டு வந்தேன். நீங்க அங்க வரும்போது கொடுக்கலாம் தான் நினைச்சேன், ஆனா முன்னாடியே இங்க ஒரு வேலை வந்துடுச்சு… இவ்வளவு தூரம் வந்துட்டு பசங்களை பார்க்காம போக மனசு வரலை.”
“ப… பசங்க வீட்டுல இருப்பாங்க. நான் அம்மாகிட்ட சொல்றேன் நீங்க போய் பாருங்க.” அவனின் நீண்ட விளக்கத்திற்கு பின் சற்று தெளிந்து, தயங்கி பின் சுதாரிப்பாய் பதில் கூறினாள். இம்முறை அவனிடம் பேச்சு வாங்கக்கூடாது என்ற எண்ணம் திண்ணமாகியது.
“பசங்களை பார்க்கணும்னா நேரா நான் அங்கேயே போயிருப்பேன். குந்தவை உங்க வீட்டு முகவரி தான் குடுத்துச்சு. ஆனா நான் தான் அம்மாகிட்ட நீங்க வேலை பாக்குற ஆபீஸ் பேரை கேட்டு தெரிஞ்சிக்கிட்டு அட்ரெஸ் கண்டுபிடிச்சு வந்தேன்.” உன்னைப் பார்க்கத் தான் வந்தேன் என்ற செய்தி அவன் பதிலுக்கு பின் ஒளிந்திருக்க, தெளிந்திருந்த அவள் மனம் மீண்டும் பதட்டமாகியது. 
“நீங்க எதுக்கு என்னை தேடி வரணும்?” விரல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ள, வார்த்தை திணறலுடன் வெளிவந்தது.
“இப்படி வாசலிலேயே நின்னு பேசணுமா? கொஞ்ச தள்ளி நின்னு பேசலாமே!” என்று ராஜன் சற்று நகர்ந்து செல்ல, அலுவலகத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்த வானதி, “இப்போ தான் ஒரு மாசமா இங்க நான் வேலைக்கு சேர்ந்திருக்கேன். இப்படி இடையில் ப்ரேக் எடுத்து பேசிட்டு இருந்தா ஏதாவது சொல்லுவாங்க. மேனேஜரும் திட்டுவாரு.” என்று தயங்கிச் சொல்ல, நிராசை அவனை சூழ்ந்துகொண்டது.
“வீட்டுக்கு வந்தா பேச சங்கடமா இருக்கும்னு தான் இங்க வந்தேன். சரி நீங்க வேலையைப் பாருங்க. நான் கிளம்புறேன்.”
“இல்லை இல்லை… இங்கேயே ஒருமணி நேரம் காத்திருக்கீங்களா? நான் சீக்கிரமே வேலை முடிச்சிட்டு லஞ்ச் டைமோட பெர்மிஷன் கேட்டுட்டு வரேன்.” என்று அவசரமாய் இயல்புக்கு மீறி அவனிடம் இறைஞ்சினாள் வானதி. 
எங்கே அவன் சென்றுவிடுவானோ என்ற தவிப்பு! எதற்காக தன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் என்று தெரிந்துகொள்ள அவா! என ஒருவித பரவசத்தில் அவள் கையை பிசைந்துகொண்டு அவன் முகம் பார்த்து நின்றாள்.
“நான் காத்திருக்கேன். நீங்க முடிச்சிட்டு வாங்க… என் போன் நம்பரை குறிச்சிக்கோங்க, வேலை முடிஞ்சதும் ஒரு போன் பண்ணுங்க நானே இங்க வந்துறேன்…” என்றான் ராஜனும் சற்றும் குறையாத ஆர்வத்துடன்.
“என் போன் உள்ள இருக்கு. என் நம்பர் சொல்றேன், நீங்க எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க நான் சேவ் பண்ணிக்கிறேன்.” என்று தன் எண்ணை சொன்னவள், அவனிடம் விடைபெறும் விதமாய் தலையசைக்க, அவளிடம் கண்சிமிட்டி நகர்ந்தான் ராஜராஜன்.
காத்திருக்கிறேன் என்று எளிதாய் சொல்லிவிட்டான் தான் ஆனால் அந்த காத்திருப்பில் முரணாய் சுகமும் பரபரப்பும் கூட்டு சேர்ந்துகொண்டு அவன் அமைதியை பதம் பார்த்து தவிக்க விட்டுவிட்டது. எதற்கு இத்தனை தவிப்பு? ஆர்வம்? என்ற கேள்வி வண்டென குடைந்தாலும் விடை தேட விழையவில்லை மனம். இந்த விஷயத்தில் தம்பி போலவே நடப்பது நடக்கட்டும் என்று மனம் செலுத்திய திசையில் வானதியை பார்க்க வந்து விட்டான். அடுத்து? காத்திருப்பு எப்போது முடியுமோ என்ற பரபரப்பு தான் அந்நேரம்…
இவனுக்கு சற்றும் குறையாத பரபரப்புடன் பதட்டமாய் உள்ளே வேலை செய்கிறேன் என்ற பெயரில் சொதப்பிக் கொண்டிருந்தாள் வானதி. எந்த தைரியத்தில் அவனை காத்திருக்க சொல்லிவிட்டு வந்தோம்! எதற்காக அவன் தன்னை பார்க்க வர வேண்டும்? இல்லை எதற்கு இவளும்தான் கிளம்புகிறேன் என்றவனை காத்திருக்க சொல்ல வேண்டும்! என்ற எண்ணமே அவளை அமைதியடைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. 
“கணவனை இழந்து ஆதரவில்லாம இருக்கிற பொண்ணுங்குற சலுகையால் தான் நீ இங்க வேலையில் இருக்கேன்னு நியாபகம் இருக்கட்டும்மா… இப்படியே வேலையை சொதப்பி இழுத்தடிச்சிட்டு இருந்தா வேலைக்கு பங்கம் வந்துடும் பார்த்து நடந்துக்கோ…” தப்பும் தவறுமாக கடிதத்தை அச்சிட்டு தேவையான ஆவணங்களை முறையாக இணைக்காமல் கோப்புகளை ஒப்படைத்த வானதியை அவளது உயரதிகாரி கடிந்துகொள்ள, அத்தனை நேரம் ராஜனைச் சுற்றியே வந்த எண்ணங்களும் பரபரப்புகளும் அடங்கி கழிவிரக்கமும் எதிர்காலம் குறித்த பயமும் முன்வந்துவிட்டது.
“அடுத்த முறை சரியா பண்ணிடுறேன் சார்… எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்.” என்று படபடப்புடன் சொன்னவள் தவறை திருத்தி புதிதாய் கடிதம் தயாரித்து ஒப்படைத்துவிட்டு தான் நிம்மதி மூச்சுவிட்டாள். 
ஆனால் அதற்குள் மதிய உணவு இடைவேளை முடியும் தருவாயில் இருந்தது. ராஜராஜனுக்கு கொடுத்த வாக்கா இல்லை உணவா? இரண்டில் ஒன்றுக்கு தான் நேரமிருக்கிறது என்று அவள் குழம்பிய போதே அவள் அலைபேசி அதனின் இருப்பை உணர்த்த, அதை எடுக்கும் முன்னமே அழைப்பது ராஜனாகத் தான் இருக்கும் என்று முந்திக்கொண்டு யூகித்தது உள்ளம். யூகம் சரியாய் இருக்க, தயக்கத்துடன் அழைப்பை ஏற்றாள் வானதி.
“வேலை முடிஞ்சிடுச்சா? மணியாகுதே, சாப்டீங்களா?” என்ற அவனது அக்கறையான குரலில் அவளின் தவிப்பு கூடித்தான் போனது.
“இல்லை… வேலை… இப்போ தான் முடிஞ்சிது, இனிதான் சாப்பிடனும். இன்னைக்கு பர்மிஷன் கேட்டுட்டு வர்றது சந்தேகம் தான். உங்களை வேற தேவையில்லாம காத்திருக்க சொல்லிட்டேன்.” என்றாள் தற்போது உயரதிகாரியிடம் வாங்கிய பேச்சை நினைவில் கொண்டு…
இரண்டு வினாடி அமைதிக்கு பின் நிதானமாய் ராஜனிடமிருந்து வந்தது பதில், “பரவாயில்லைங்க… நாம பேச இன்னும் நேரம் வரலை போல… நான் இன்னொரு நாள் வரேன். அங்க வீட்டில் ஒண்ணா இருந்தப்பவே என்னை பார்த்து ஒளிஞ்சி ஒளிஞ்சி போனீங்க, இப்போ கஷ்டம் தான். எப்படி இருக்கீங்கன்னு பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன். வேற ஒண்ணுமில்லை.” 
“பசங்களுக்கு பொம்மை வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொன்னீங்க.. அதை குடுக்காம கிளம்புறீங்க?” அவன் கிளம்புகிறேன் என்றதும் வானதிக்கு சரளமாய் வந்தது பேச்சு.
“நான் வீட்டுல குடுத்துட்டு போறேன்.” தேவைக்கு அதிகமாய் அவளை பார்க்க நேராக வந்துவிட்டு திடுமென கத்தரித்தது போல பேசி இணைப்பை துண்டித்துவிட, வானதியே அவனை அழைத்து, “நான் பேசுறதுக்கு முன்னாடி நீங்களே முடிவு பண்ணி பேசி முடிச்சிடுறீங்க.” என்றாள் குறையாய்…
“இதை சொல்லத்தான் கூப்டீங்களா?” என்றான் அவனும் சலைக்காது. 
“இல்லை… அது… வந்து நீங்க ஏன் அப்படி சொன்னீங்க?”
“எப்படி?”
“வீட்டுக்கு வந்தா பேச சங்கடமா இருக்கும்னு? எதுக்கு சங்கடப்படனும்?” ஒருவழியாய் தனக்கெழுந்த வினாவை வானதி வெளிப்படுத்திவிட, ராஜன் மீண்டுமொரு இரண்டு வினாடிகளை தன்வசமாக்கிக்] கொண்டு,
“எனக்கு ஒன்னுமில்லை. நீங்கதான் என்னை கண்டாலே ஓடி ஒளிவீங்க…” பாதி உண்மையை மட்டும் கூறிய ராஜராஜன் அவள் எதுவும் சொல்வாளா என்று காத்திருக்க, வானதி என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாகிவிட்டாள்.
“என்ன பேச்சையே காணோம்? நான் கிளம்பவா?”
“கிளம்புறேன்னு கால்ல வெந்நீர் கொட்டின மாதிரி குதிக்கிறவரை பிடிச்சி வச்சி என்ன செய்ய முடியும்?” என்று சலித்த வானதி அழைப்பை துண்டித்துவிட, இம்முறை திரும்ப அழைப்பது ராஜனுடையதாகியது.
“என்ன சொன்னீங்க?” என்று ராஜன் பரபரத்தான் வானதி அழைப்பை ஏற்றவுடன்.
“இதை கேட்கத் தான் கூப்பிட்டீங்களா?” என்றாள் அவளும் சாதுர்யமாய். அதை எண்ணி பெருமை வேறு பட்டுக்கொண்டாள். அவனை பேச்சில் தோற்கடித்ததாக நினைப்பு, வேறென்ன!
ஆனால் ராஜனோ உன் பேச்செல்லாம் என்னை மடக்கிவிடுமா என்ன என்பது போன்று அழுத்தமாய் பேசினான், “நான் கேட்டதையே நீங்க திரும்ப கேட்கவேண்டாம். நீங்க சொன்னது எனக்கு நல்லாவே புரிஞ்சுது. ஆனா உங்களுக்கு புரிஞ்சிதான்னு எனக்கு தெரியல…”
“எனக்கு எதுவுமே தெரியாது, புரியாதுன்னு நீங்களும் முடிவு பண்ணீட்டீங்களா?” சாயம் வெளுத்து வானதியின் உள்மனம் விழித்தெழுந்துகொள்ள, அவளது நம்பிக்கை எல்லாம் பின்சென்றுவிட்டது.
“நீங்க அப்படித்தான் வெளில காட்டிக்குறீங்க… அப்படித்தான் இருக்கீங்க. ஆனா…”
“ஆனா?”
“ஆனா இப்போ உங்க பேச்சுல சுதாரிப்பு தெரியுது. யோசிச்சு பேசுறீங்க. என்னையே மடக்கி பேச முயற்சி பண்றீங்க.” என்று சிரித்தான் ராஜராஜன்.
அழுத்தமாய் துவங்கியவன் இறுதியில் அவள் மனம் குளிரும்படி பேசிவிட, வானதிக்கு ஏதோ சாதித்த உணர்வு. அது துள்ளலுடன் இயல்பாய் அவள் குரலில் வெளிப்பட்டது. எத்தனை மாதங்களுக்கு பின் வரும் துள்ளளோ! அவளே அறியாள்.
“அது என்ன என்னையே? நீங்கென்ன அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா?” 
“இல்லையா பின்ன? நாம முதல்ல சந்திச்சப்போ பேயடிச்ச மாதிரி ஆன்னு என் வாயை பார்த்து நின்னுட்டு, பேச வேண்டிய நேரத்தில் பேசாம எல்லாத்துக்கும் பதட்டப்பட்டு என்னை வெளில துரத்த அவசரப்பட்டு, அப்புறம் பேசவே பயந்துட்டு ஒதுங்கிக் போனீங்க… ஆனா இப்போ பாருங்க நீங்களே என்னை போனில் கூப்டீங்க, என்கூட சரளமா பேசுறீங்க.”
“இப்போ நல்லா பேசுறேனா?”
“அதலென்ன சந்தேகம்?”
“இல்லை… எதுனாலும்… எனக்கு பயம் தான் முதல்ல வந்து நிக்கும். குந்தவை மாதிரி தைரியமா என்னால பேச முடியாது, இருக்க முடியாதுன்னு நினைச்சிப்பேன். அந்த நினைப்புலேயே என்னையும் அறியாம எனக்குன்னு ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ளேயே சுத்திட்டு இருந்தேன், இருக்கிறேன். அந்த வேலியை உடைச்சிட்டு என்னால வெளில வரமுடியும்னு தோணல. ஆனா நீங்க சொல்றதை கேக்கும் போது ஆறுதலா இருக்கு, ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கு.” என்றாள் மறையாமல். அவனைக் கண்டாலே ஒதுங்கியவள் இப்படி அவனிடம் இயல்பாய் தன்னுணர்வுகளை வெளிப்படுத்தும் அளவுக்கு நெருங்கியது ராஜனின் சாமர்த்தியமோ, இயல்போ! எதுவோ ஒன்று அவன்பால் பாதுக்காப்பை, நட்பை உணரச் செய்தது. அது அவனுக்கும் புரிந்தது.
“நீங்க இப்படி என்கூட பேசுறதிலேயே நீங்க உங்க கூட்டை விட்டு வெளியே வர முயற்சி பண்றீங்கன்னு தெரியுதே…”

Advertisement