Advertisement

*19.1*
விருந்தின் உபயத்தில் அவர்கள் வீடு இருக்கும் தெருவே கலைகட்டியிருந்தது. ஊரே அவர்கள் வீட்டில் குமிந்திருக்க அன்பரசனும் நீலாவும் மாறிமாறி ராஜனை தங்களுடன் இருத்திக்கொண்டு அவனை மற்றவர்களுக்கு ஆவலாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். இத்தனை வருடங்கள் இல்லாது இப்போது எப்படி திடுமென இவ்வளவு பெரிய மகன் என்று இயல்பாய், ஆர்வமாய், வம்பாய் கேட்ட அனைவருக்கும் கடத்தப்பட்ட தகவலோ உறவினரிடம் வளர்ந்தான் என்ற சுருக்கமான பதிலே ஒன்றுபோல தெரிவிக்கப்பட்டது. அதை நம்பியும் நம்பாமலும் இருவேறாக பேசுக்கள் எங்கும் காற்றோடு கலந்திருக்க, அன்றைய விழா நாயகனாக ராஜராஜனே வளைய வலம் வந்துகொண்டிருந்தான். 
மாறாக இத்தனை வருடங்கள் ரவுசு விட்டு சுற்றிக் கொண்டிருந்த தச்சன் அடங்கி ஒரு ஓரமாய் அமர்ந்துகொண்டு அனைத்தையும் மேன்போக்காய் பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் கூட்டாளிகள் வந்து அழைத்த போது கூட பெரிதாய் ஆர்வம் காட்டாது குணாவுடன் அவர்களை அனுப்பிவிட்டான். குணா அவனை நொண்டி துருவிய போதும் பதிலேதும் கொடுக்கவில்லை தச்சன். அவனின் இந்த மாற்றத்தில் துணுக்குற்று மனம் கேளாமல் நேரே குந்தவையிடமே சென்று நின்றான் குணா.
“நான் கேக்குறது உனக்கு பிடிக்காம கூட இருக்கலாம் ஆனால் கேட்காம இருக்க முடியல… எதுவும் பிரச்சனையா? தச்சன் இப்படி அமைதியா ஒதுங்கிப் போற ஆளில்லை. ஆனால் இன்னைக்கு எனக்கென்னன்னு ஓரமாய் போய் உட்கார்ந்திருக்கான்? நான் கேட்டாலும் வாயை திறக்க மாட்டேங்குறான்.” 
திடுமென குணா அவளிடம் வந்து கேள்வி எழுப்பியது இயல்புக்கு மீறியதாய் தெரிந்தாலும் தச்சன் மீதிருக்கும் அக்கறையில் அவன் விசாரித்தது அவளை இளக வைத்தது.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. சரியோ தப்போ அவர் எது செஞ்சாலும் அவரை மட்டுமே முன்னிறுத்தி அவரை கொண்டாடி தீர்த்து பழக்கி விட்டாச்சு. இப்போ திடீர்னு அத்தான் வந்ததும் இவரை விட்டுட்டு  அத்தான் பக்கமே எல்லோரும் சாயுறாங்கன்னு நினைச்சி வீணா கற்பனை பண்ணி மனசை அலைபாய விட்டுட்டு இருக்காரு. நீங்க கவலைப்படாதீங்க உங்க பிரெண்டால ரொம்ப நேரமெல்லாம் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு கோபப்பட முடியாது. கொஞ்ச நேரத்தில் தானாய் வழிக்கு வந்துடுவாரு.” என்று இன்முகமாகவே சொல்ல குணா யோசனையாய் நின்றான்.
“சின்ன வயசில் வரவேண்டிய பொறாமையெல்லாம் இப்போ வருது போல…”
“இருக்கும் இருக்கும்…” என்று சிரித்தாள் குந்தவை.
“எதுனாலும் பார்த்துக்கோமா. அவன் எதையும் இதுவரை சீரியஸாவே  எடுத்துகிட்டது இல்லை. ஆனால் அவன் அப்படி வெளில காட்டிக்கிறதால எப்போதும் அப்படியே இருப்பான்னு சொல்ல முடியாது. மனசு எந்த நேரம் எதை நினைச்சித் தொலையும்னு கணிக்க முடியாது. நாம சின்ன விஷயம்னு நினைச்சு கடந்து போற விஷயங்கள் எத்தனையோ பேருக்கு காயத்தை ஏற்படுத்திட்டு தான் நம்மகிட்டயே வந்திருக்கும். வீட்டுல சொல்றதை அவன் கேட்காத மாதிரி திரிஞ்சாலும் எல்லோர் மேலேயும் பாசம் அதிகம். அவன் காயப்பட்டுறாம பார்த்துக்கோமா. நான் கிளம்புறேன். வயலில் வேலை இருக்கு. ரெண்டு நாளுக்கு நானே வயலை பார்த்துக்குறேன். அவன் சரியானதும் அனுப்பினா போதும்.”
“சாப்பிட்டுட்டு போங்க.” என்று அவள் சொல்லவும் தலையாட்டிவிட்டுச் சென்றான் குணா.
அவன் சொன்ன வார்த்தைகளை அசைபோட்டவள் யோசனையுடனே தச்சனைத் தேடிப் போனாள். இடையில் தென்பட்ட உறவினர்களிடம் சம்பிரதாயத்திற்காய் சிரிப்பை உதிர்த்துவிட்டு வேக நடையிட்டவள், அவனைத் தேடிக் கலைத்தவலாய் நடையின் வேகத்தை குறைத்து வாயிலிலேயே ராஜனைக் காண்பித்து யாருடனோ பேசிக்கொண்டிருந்த நீலாவிடம் சென்றாள்.
“அவரைப் பார்த்தீங்களா அத்தை? ஆளையே காணோம். காலையிலிருந்து பார்க்கவே இல்லை.”
பேச்சு தடைபட்ட சஞ்சலத்தில், “யாரை?” என்று அவர் அவசரகதியில் கேட்கவுமே குந்தவையின் மனம் வாடியது.
“உங்க அருமைப் புள்ளையத் தான்… காலையிலிருந்து என்கிட்ட திட்டுவாங்காம அவருக்கு சாப்பாடு இறங்கல போல… அவர் பிரென்ட் வந்து சொல்லிட்டு போனாரு.” என்று அவள் சொன்ன தொனியில் ராஜனுக்கு சிரிப்பு வந்தது. 
“ஜாடிக்கு ஏத்த மூடி தான் நீங்க ரெண்டு பேரும்… தச்சன் இங்கதான் எங்கேயாவது இருப்பான்மா… போன் போட்டுப் பாரேன்.” என்று ராஜன் சொல்ல, குந்தவையிடம் அலைபேசி இருந்தால் தானே… தச்சனிடம் சண்டையிட்டு அவன் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் தான் புது அலைசிபேசி வாங்குவேன் என்று பிடிவாதமாய் நின்று தச்சனையே சபதம் எடுக்க வைத்தவள் ஆகிற்றே!!!
சங்கடமாய் நெளிந்தவள், “இங்க தான் இருப்பாரு… நான் இன்னொரு முறை தேடிப் பார்க்கிறேன்.” என்றுவிட்டு அப்படியே நகர்ந்துவிட்டாள். மீண்டும் ஒருமுறை கண்களை சுழல விட்டவள் முன்பு தேடாமல் விட்ட வீட்டின் பக்கவாட்டை நோக்கி நடைபோட்டாள். அவளை பொய்க்காமல் யாருமற்ற இடத்தில் அங்கேயே ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தான் தச்சன். அவனைக் கண்டதும் அவளின் எட்டுக்கள் வேகமாகியது.
“இப்போ எதுக்கு இங்க வந்து உட்கார்ந்துகிட்டு பக்கத்து ஊர் வரைக்கும் முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க?” என்று வேகமாய் குரலை உயர்த்த, விழியை எரிச்சலுடன் அவள் மீது பதித்தான் தச்சன். 
“நான் சிவனேன்னு உட்கார்ந்திருக்கேன். என்னை எதுக்கு இப்போ தொந்தரவு பண்ற?”
“அதுதானே சந்தேகமா இருக்கு. உடம்பெல்லாம் நல்லாத்தானே இருக்கு? காலையிலிருந்து சமத்து பையனாட்டம் என்கிட்ட திட்டு வாங்காம இருக்க.” என்று கிண்டலாய் பேசி அவன் கன்னத்தை தட்டினாள். அவனோ எரிச்சலுடன் அவள் கரத்தை தன்னிடமிருந்து பிரித்தெடுத்தான்.
“ஷ்… என் வாயை கிளராத குந்தவை. ஏதாவது திட்டி விட்டுருவேன்…”
“ஓ… சாருக்கு திட்டக் கூட தெரியுமா? எங்க திட்டங்களேன் பார்ப்போம்…” என்று கேலி பேசியவள் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்காலியிலிருந்து ஒன்றை இழுத்துப்போட்டு கதை கேட்பது போல அமர, அவனது எரிச்சல் பன்மடங்கானது.
“என்னடி லொள்ளா? என்னை கொஞ்ச நேரம் தொந்தரவு பண்ணாம போய் வேற வேலை இருந்தா பாரு…”
“இன்னைக்கு எனக்கு இதுதான் வேலையே…” 
“உன்னை… ஷ்… போடி இம்சை.”
“இம்சையாம்ல இம்சை… போடா டேய்… காஞ்சி போயிருக்கீயே…  காலையிலிருந்தே ஆள் கண்ணிலேயே படலையே… புது புடவை கட்டினதையும் பார்க்கலையேன்னு பாவம் பார்த்து நேரம் கிடைச்சதும் உன்கிட்ட காண்பிக்க தேடி வந்தேன் பாரு என்னை சொல்லணும்…” என்று அவள் கடிந்தபோதும் அவன் அதை கண்டுகொள்ளவில்லை. 
வீடு முழுக்க உறவினர்களின் வருகைக்கும் பேச்சுக்கும் பஞ்சமில்லை எனும்போதும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட தச்சனின் கண்கள் நீலா பின்னரே தான் சுற்றியது… நேற்று காலை பேசியது அதன்பின்னர் இப்போது வரை தச்சன் புறம் அவரின் கடைக்கண் பார்வை கூட விழவில்லை. வெகு வருடங்கள் கழித்து வீடுவந்திருக்கும் மூத்தவனை கண்ணுக்குள் நிரப்பி அவனை கவனிப்பதிலேயே அவரின் நேரம் ஓடிவிட, தச்சனுக்குத் தான் பொறுமை கரைந்திருந்தது. அதை யாரிடமும் காட்ட விரும்பாது தனியாய் ஒதுங்கிக்கொண்டான். 
“ரொம்ப பண்றடா நீ…” குந்தவை வேண்டுமென்றே சீண்டுவது கூட புரியாது தன் எண்ணங்களில் மட்டுமே சுழன்று கொண்டிருந்தவனுக்கு அவள் பேச பேச எரிச்சல் மூண்டது.
“என்ன பண்ணிட்டேன் இப்போ? உனக்கு என்னை ஏதாவது சொல்லிட்டே இருக்கனும். இல்லைனா சாப்பிட்டது உள்ள இறங்காது… அதுதான் உங்க அம்மா வந்திருக்காங்களே… அவங்களயே போய் கொஞ்சு.”
“நீயும் உங்கம்மாவை கொஞ்சேன்… யார் வேணாம்னு சொல்றா?” 
“அடியேய்… எங்கம்மா என்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டேங்குதுனு உட்கார்ந்திருக்கேன், நீ காமெடி பண்ணிட்டு இருக்க. அங்கப்பாரு நீலாவை! என்னோட கல்யாண விருந்துன்னு சொல்லிட்டு அவன் பின்னாடி தான் சுத்திட்டு இருக்கு… நேத்திலிருந்து அது உலகத்திலிருந்து நான் மட்டும் மறஞ்சிட்டேன் போல… நான் சாப்பிட்டேன்னான்னு கூட கேட்கல… இதுல கொஞ்சல் ஒன்னு தான் இப்போ குறைச்சல்…” அடக்கப்பட்டிருந்தது அடைப்பை உடைத்துக்கொண்டு வெளியே வர, அவன் சோகம் போல சொன்ன தினுசில் பக்கென்று சிரித்துவிட்டாள் குந்தவை.
“குந்தவை…” அவனின் பல்லிடுக்கில் அவள் பெயர் கடிபட்டு வந்துவிழ, அவனது அழைப்பே தீவிரத்தை உணர்த்தியது குந்தவைக்கு. இத்தனை தினங்களில் எண்ணிலடங்கா சண்டைகள் போட்டிருந்ததன் விளைவு அவனது ‘குந்தவை’ என்ற அழுத்தமான அழைப்புக்கான அர்த்தம் கூட பிடிபட்டிருந்தது.
“இப்ப என்ன அத்தை உன்னை கண்டுகிட்டு உன்னை அவங்க முந்தானையிலேயே முடிஞ்சிகிட்டு சுத்தனுமா?” என்ற அவளது கேள்விக்கு அவன் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் எல்லாப் பக்கமும் தலையை ஒருவாறாய் உருட்ட, அடங்கியிருந்த சிரிப்பு மீண்டும் பொங்கியது குந்தவைக்கு.
“சிரிக்காதடி…”
“ஆளு மட்டும் தான் வளர்த்தி… உள்ள ஒண்ணும் வளரல…” என்று அவன் தலையை லேசாய் தட்டிவிட்டு எழுந்தவள் அவனிடம் எதுவும் சொல்லாது அங்கிருந்து அப்படியே பின்புறமாய் வீட்டிற்குள் நுழைந்து அறிவழகியை தூக்கிக்கொண்டு மீண்டும் நீலாவிடம் சென்றாள். சுற்றி உறவினர்கள் பட்டாளம் சூழ்ந்திருக்க அவர்களை ஒருமுறை பார்த்தவள் நீலாவின் கவனத்தை தன்புறம் திருப்பினாள்.
“அத்தை பாப்பாக்கு சாப்பாடு ஊட்டப் போறேன்… அவரு இன்னும் சாப்பிடல… நீங்க கொஞ்சம் என்னனு பாருங்களேன்.”
“பாப்பாக்கு நான் ஊட்டுறேன். நீயே போய் அவனை கூட்டிட்டு வந்து ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுங்க. இன்னைக்கு தனித்தனியா சாப்பிட்டா நல்லாயிருக்காது.” என்று சொல்லிவிட்டு அறிவழகியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து நகர, என்ன நினைத்தானோ நீலாவைத் தொடர்ந்துச் சென்று அறிவழகியை வாங்கிக்கொண்டான் ராஜன்.
“நீங்க போய் தச்சனை கூட்டிட்டு வாங்கமா… இந்த குட்டி பொண்ணு இப்போ தான் என்கிட்ட வந்திருக்கா. நான் கொஞ்ச நேரம் வச்சிட்டு இருக்கேன்.” என்று நீலாவிடம் சொல்லிவிட்டு அறிவழகியை கொஞ்ச அவள் அழத் தயாராய் இருந்தாள். நீலாவுக்கோ ராஜன் வீடுவந்த நாழிகை முதல் அவனது பேச்சுக்களே வேதவாக்காகியிருந்தது. நொடியும் தாமதிக்காமல் தச்சன் எங்கிருக்கிறான் என்று கேட்டுக்கொண்டு அவன் இருக்கும் திசை நோக்கிச் சென்றார். அவர் நகர்ந்ததுமே அறிவழகி தன் சத்தத்தை கூட்ட ராஜனிடமிருந்து அவளை வாங்கிக்கொண்டாள் குந்தவை.
“நீங்க நேராவே சொல்லியிருக்கலாமே?” குழந்தையை சமாதனம் செய்யும் நேரம் திடுமென ராஜன் கேள்வி எழுப்ப எதுவும் புரியவில்லை குந்தவைக்கு.
“எதை?”
“தச்சனை கண்டுக்க சொல்லி நேராவே சொல்லியிருக்கலாமே? ஏன் இப்படி பாப்பாவை மெனக்கெட்டு தூக்கிட்டு வந்து… சுத்தி வளைச்சு?” என்று ராஜன் இழுக்க, ஆச்சரியமாய் பார்த்தாள் குந்தவை.
“நீங்க மாமா மாதிரி… மாமாவும் டான்னு எல்லாத்தையும் புரிஞ்சிப்பாரு.” என்று அவள் சொல்ல, மென்னகை உதிர்த்தான் ராஜன்.
“அவன் எப்படி பேசுற ஆளுன்னு அன்னைக்கு நைட்டே தெரிஞ்சிகிட்டேன். அப்படி இருக்கிறவன் என்கிட்ட இப்பவரை ஒருவார்த்தை கூட பேசலை என்கிற போதே ஏதோ இருக்குன்னு புரிஞ்சிக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்லையே. அவன் கோவமா இருக்கானா? நான் இங்க வந்தது அவனுக்கு பிடிக்கலையா?” இன்முகமாய் துவங்கி வருத்தத்தில் முடிந்த அவனது கேள்விக்கு அவள் என்ன சொல்ல என்பது போல நின்றாள்.
“அவன் பேசலைன்னா என்ன… நானே போய் பேசுறேன்.” என்றான் அவளின் அமைதியை படித்தபடி…
“உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றது சரியா இருக்காது. நீங்க அவருக்கு அண்ணனா இருந்தாலும் ஒண்ணா வளரல. நீங்க எப்படினு அவருக்குத் தெரியாது அவர் எப்படின்னு உங்களுக்கும் தெரியாது. இந்த நிலையில் நான் உங்க ரெண்டு பேருக்குள்ளும் நடுநிலையா புகுந்து இவங்க இப்படித்தான்னு பிம்பத்தை உருவாக்க விரும்பல. நீங்களா அவரை தெரிஞ்சிக்கோங்க. அவரும் அதை செய்வாரு…” என்று அவனின் கேள்விகளிலிருந்து விலகிக்கொள்ள, 
ராஜன் பெருமூச்சிழுத்தான், “அவன் கோபமா இருக்காங்குறதை இப்படி கூட சொல்லலாம்னு இப்போ தான் தெரியுது.”
“நீங்க மாமாவை விட ஷார்ப் அத்தான்! ஆச்சி மாதிரி யோசிக்கிறீங்க…” என்று குந்தவை மெச்சுதலாய் சொல்ல மீண்டும் மென்முறுவல் அவனிடம். 
கூடவே அவர்களை சுற்றி அங்குமிங்கும் நடமாடுபவர்களை கருத்தில் கொண்டு, “யார் எப்படினு நீ சொன்ன மாதிரியே போகப்போக தெரிஞ்சிக்கலாம்மா… இப்போ போய் சாப்பிடுங்க. வீட்டுல ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க. நாம இப்போ இதையெல்லாம் பேசுறது சரியா இருக்காது. எல்லோரும் கிளம்பட்டும் நானே அவன்கிட்ட பேசுறேன்.” என்றான் ராஜன்.
“என்கிட்ட நல்லா பேசுறீங்களே இப்படியே அவர்கிட்டேயும் பேச வேண்டியது தானே? நீங்களும் ஏன் ஒதுங்கிப் போறீங்க? திவ்யா அண்ணிகிட்ட நல்லா பேசுறீங்களே!” என்ற அவளது கேள்வி காற்றுக்கு இரையாகியது. தச்சன் நீலாவிடம் ஏதோ வளவளத்துக் கொண்டே அவர்களை நோக்கி வருவதைக் கண்ட ராஜன் நேரே அவர்களிடம் சென்று தச்சன் தோளில் கைபோட்டான்.
“உனக்காக ஏற்பாடு பண்ணியிருக்கிற விருந்தில் ஜமாய்க்க வேண்டாமா… எங்க போன?” என்று இயல்பாய் ராஜன் பேச, தச்சன் அதிர்ந்து பின் கூர்மையாய் பார்த்து வைத்தான் தன் தமையனை.
“என்ன பேசமாட்டீயா?” என்று ராஜன் கேட்டது தான் தாமதம் நீலா பிடித்துக்கொண்டார்.
“டேய் தச்சா என்ன பிரச்சனை? அண்ணன் கூட பேசலையா நீ?”
“ப்ச்… ம்மா… நான் தான் அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் மறந்துடாத… என்னால தான் அவன் வீட்டுக்கு வந்தான்…”
“மரியாதை இல்லாமா அதென்ன அவன் இவன்னு? அண்ணன்னு சொல்லு…” 
“எனக்கு இப்படித்தான் வருது.”
“சொல்ற எதையும் கேட்டுறாத. வக்கனையா பேச்சு மட்டும் தான்…”
“அதை புதுசா இப்போ தான் கண்டுப்பிடிக்கிறியா என்ன?”
“உனக்கு குந்தவை தான் லாயக்கு… அவள் ரெண்டு வாங்குவாங்குன்னா தான் அடங்குவ நீ…”
பேச்சுக்கள் எதுக்கோ துவங்கி எங்கோ செல்ல, தச்சன் ராஜனிடம் பேசாதிருப்பது கருத்திலே நிற்கவில்லை நீலாவுக்கு.
“இப்படி தான் பேசி பேசி அவளை உசுப்பிவிடுறீங்க. அப்புறம் அவள் என்னை திட்டுறான்னு அதுக்கும் பிரச்சனையை இழுக்குறீங்க.” என்று தச்சனும் சளைக்காது மல்லுக்கு நிற்க, குந்தவை தலையிலடித்துக் கொண்டாள்.
“அத்தை மணியாச்சு நீங்களும் சாப்பிடுங்க. அப்பதான் மத்த வேலையை கவனிக்க தெம்பா இருக்கும். எல்லோரும் கிளம்புனதும் இதெல்லாம் சுத்தம் பண்ணி அப்புறப்படுத்த நீங்க பக்கத்தில் இருந்து சொன்னா தான் வேலை நடக்கும். அத்தான் நீங்களும் சாப்பிடுங்க. நீ வா என்கூட…” என்று தச்சனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றாள் குந்தவை. 
“ஏய் எல்லோரும் இருக்காங்க. நீ பாட்டுக்கு என்னை இழுத்துட்டு போற? சைசா தள்ளிகிட்டு போறேன்னு நினைச்சிடப் போறாங்க…” என்று தச்சன் சிரிக்க, அவன் கையை பட்டென விட்டாள் குந்தவை. 
“இதுதான் பட்டணத்து புள்ளைங்குறது… புருஷனை எப்படி முந்தானையில் முடிஞ்சி இழுத்துட்டு வர்றா பாரு.” அவர்கள் எதிரில் வந்த மங்களம் வயதை ஒத்த ஒருவர் வம்பிழுக்கவென விழி விரித்து அவர்களை இடைமறித்தார்.
“கண்ணு அவிஞ்சி போச்சா உனக்கு? என் பொண்டாட்டி என் கையைத் தான பிடிச்சி இழுத்துட்டு வர்றா கிழவி…” என்று தச்சன் அசட்டையாய் இழுக்க, குந்தவை விழியை உருட்டினாள்.
“முந்தானையில் முடிஞ்சிகிட்டு வரலைன்னு வருத்தமா பேராண்டி உனக்கு?” என்று அவரும் அவனுக்கு சரிசமமாய் பேச குந்தவை தான் ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றாள்.
“கண்டுபிடிச்சிட்டீயே கிழவி… வாழ்க்கையில கொஞ்சம் கிளுகிளுப்பு இருந்தா தானே சுவாரசியமா இருக்கும்.” என்று தச்சன் கண்சிமிட்ட, தன் பொக்கை வாயில் கைவைத்தபடியே நகர்ந்துவிட்டார்.
அவர் நகர்ந்தவுடனேயே இங்கு குந்தவை அவனை முறைத்துக் கொண்டிருந்தாள், “அவங்ககிட்ட என்னடா பேச்சிது? அவங்க வயசென்ன? இப்படி பேசுற… சவலைப் புள்ளை மாதிரி இவ்வளவு நேரம் இருந்துட்டு இப்போ அத்தைகிட்ட பேசிட்டு வந்தப்புறம் பேச்சைப் பாரு…”
“நல்லா பாருடி… காலையிலிருந்து நான் பேசலைங்கவும் எப்படி வந்து இழைஞ்ச… அந்த கிக்கே சுகமா இருந்துது…” என்று தச்சன் சிலிர்த்து உணர்ந்து சொல்ல, அவன் கையை கிள்ளினாள் குந்தவை. உடனே அவள் இடையில் இருந்த அறிவழகியும் அவனைக் கிள்ள, 
“ஷ்… அடியேய் செல்லாக்குட்டி இவ்வளவு நேரம் இருந்த இடம் தெரியாம அமைதியா தான இருந்த… இப்போ மட்டும் என்னவாம்? சித்தியை அப்படியே காப்பி அடிக்க வேண்டியது…” என்றுவிட்டு அவளை தூக்கிக்கொள்ள, குறும்புப் புன்னகை குந்தவையிடத்தில்…
“ப்பா… ப்பாவ்…” என்று தச்சன் கன்னத்தை தட்டி சிரித்தாள் அந்த சின்ன அழகி.
“இன்னைக்கு ஏதோ நல்ல மூடில் இருக்கா… இல்லைன்னா மேடம் என்கிட்ட வரமாட்டேங்களே.” என்று குந்தவையிடம் சொல்லிக்கொண்டே சாப்பாடுப் பந்தியில் அமர்ந்து மறுபுறம் பரிமாறிக் கொண்டிருந்தவர்களை அழைத்து அறிவழகிக்கு சிறிய வாழை இலை போடச் சொன்னான்.
“ஏய் அவளுக்கு எதுக்கு இலை? வேஸ்ட் பண்ணுவாடா… அவளுக்கு சாப்பிடவும் தெரியாது. நீ அவளைக் குடு நான் வானதிகிட்ட விட்டுட்டு வரேன்… அம்மா சாப்பாடு ஊட்டுவாங்க…” 
குந்தவை மறுக்க, தச்சன் பிடிவாதம் பிடித்தான்.
“அதெல்லாம் முடியாது… இன்னைக்கு தான் இந்த செல்லம் என்னை அப்பான்னு கூப்பிட்டிருக்கு… அதுக்கே ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. நீ போய் அழகு பையனையும் கூட்டிட்டு வா… இவளை கவனிச்சிட்டு அவனை விட்டுட்டா புள்ளை அழுவான்.” என்று கெத்தாய் சொன்னவனை சாப்பிட்டு முடிப்பதற்குள் கதற வைத்திருந்தனர் இரு அறிவுகளுமே. 
சும்மாவே கண்களுக்கு குளிர்ச்சியாய் இருப்பவற்றை இழுத்துப் பிடுங்கி வாயில் வைக்கும் குழந்தையின் எதிரில் தலைவாழையை விரித்தால் சும்மாவா இருப்பார்கள். தச்சன் குந்தவையை மீறி அறிவழகி ஒருபுறம் இலையை இழுத்தால் குந்தவையிடம் இருந்த அறிவழகன் அதே இலையை வீம்புக்கு மறுபுறம் இழுத்து அதில் இருந்த பதார்த்தங்களை எடுத்து கீழே போட்டான். அதைப் பார்த்த அறிவழகியும் இலையில் இருந்ததை கீழே போட்டாள். பின் தச்சனின் கன்னத்தில் அப்பினாள். அறிவழகனின் மூக்கில் தடவி அவனை இரண்டடி போட்டாள். ஆனால் ஒருபிடி சோறு கூட இதழை தாண்டி உள்ளே போகவில்லை.
“ஏய் சும்மா இருங்க… இதுக்குத் தான் அப்போவே வேண்டாம்னு சொன்னேன். கேட்டியா நீ… சின்ன பசங்க மாதிரி அவ்வளவு பிடிவாதம் பிடிச்ச இப்ப ரெண்டும் என்ன சேட்டை பண்ணுதுங்க பாரு…” குழந்தைகளுடன் சேர்ந்து தச்சனுக்கும் இரண்டு திட்டுக்கள் விழுந்தது.
“நான் என்னத்தடி கண்டேன். சொல் பேச்சை கேட்பாங்கன்னு நினைச்சேன்.”
“நினைப்ப நினைப்ப… பதினஞ்சு நாளா இங்கத்தான் இருக்காங்க. சாப்பிடும் போது எப்படி பிடிவாதம் பிடிப்பாங்கன்னு கவனிச்சது இல்லையா நீ…” என்று குந்தவை முறைக்க அவர்களின் சண்டை தான் மையமானது குழந்தைகளின் சேட்டைகளுக்கு இடையில்.
“ஆர்வக்கோளாறால் கூப்பிட்டுட்டேன்…”
“உன் ஆர்வம் தான் பலநேரம் கோளாறாகிடுது. கொஞ்சம் அடக்கி வாசி.” என்று அதட்டியவள் அறிவழகனை தூக்கிக் கொண்டு எழுந்தாள்.

Advertisement