Advertisement

ப்ச்… அதுக்கு பிறகு அம்மா திட்டவும்தான் நான் திருடி வச்சிகிட்டேன்னு அத்தை மட்டுமில்லை அம்மா கூட தப்பா புரிஞ்சிகிட்டாங்கலேன்னு அழுகை தான் வந்தது. அழுகையில் என்னோட தரப்பு நியாயத்தை சொல்லனும்னு கூட எனக்கு அப்போ தோணல… அம்மா கூட நம்பாம எல்லோர் முன்னாடியும் திட்டி அடிச்சிட்டாங்கன்னு தான் மனசுல பதிஞ்சுது. எல்லோரோட பார்வையும் என்னை நிமிர்ந்து பார்க்க விடல… கூனிகுறுக வச்சிது. எதுவுமே பிடிக்கல… எல்லோரோட குற்றம்சாட்டிலிருந்தும் கீழான பார்வையிலிருந்தும் தப்பிச்சு எங்காவது ஓடிடணும் போல இருந்தது. எதை பத்தியும் யோசிக்காம எல்லோரும் தூங்குனதும் இங்கிருந்து ஓடிட்டேன். ஊரிலிருந்து மெயின்ரோடு போன பிறகு என்ன செய்யறதுன்னு தெரியல… திரும்ப அம்மாகிட்டேயே போயிடுவோம்னு நினைக்கும் போதே கோபம் வந்துச்சு. என்னை நம்பாம எல்லோர் முன்னாடியும் அடிச்சவங்க கிட்டேயே திரும்ப போறதான்னு கோபம்… அதே கோபத்தில் கால் போன திசையில் நடந்து சந்தையில் போய் நின்னேன். அங்க கேரளா லாரி டிரைவர் ஒருத்தர் காய்கறி ஏத்திக்கிட்டு கேரளா வரை போகணும். அவரோட வந்த கிளீனர் பையன் சண்டை போட்டுகிட்டு போயிட்டான்னு புது கிளீனர் தேடிட்டு இருந்தாரு. நான் தனியா நிக்கிறதை பார்த்துட்டு என்கிட்ட விசாரிச்சாரு… 
நானும் கோபத்தில் இங்கிருந்து கிளம்பிடனும்னு எனக்கு இங்க யாரையும் தெரியலைன்னு சொல்லிட்டேன்… அவரும் கம்மியான சம்பளத்தில் உழைக்க ஒரு அடிமை சிக்கிட்டான்னு அவரோடவே கூட்டிட்டு போய் வச்சிருந்தார். அவர் போகிற இடத்திற்கு எல்லாம் அழைச்சிட்டு போனாரு. ஆரம்பத்தில் எனக்கு பெருசா எதுவும் தெரியல ஆனால் ஒரு மாசத்துக்கு மேல என்னால அங்க இருக்க முடியல… அம்மா அப்பாவை பார்க்கணும்னு தோணுச்சு. ஆனால் திரும்ப வர பயம்… சொல்லாம ஓடிட்டேன்னு திரும்ப திட்டுவாங்கன்னு நினைச்சே காலத்தை ஓடிட்டேன். வளர வளர நான் பண்ணது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு புரிஞ்சுது. அம்மா தானே திட்டுனாங்கன்னு துடிச்சிவிட்டுட்டு இருந்திருக்கணும். அந்த வயசில் அதெல்லாம் புரியல… ஏன் வீட்டை விட்டு போகணும்னு எண்ணம் வந்துச்சுன்னும் தெரியல… அந்த நேரப் பிசகல், வாழ்க்கையையே புரட்டி போட்டுடுச்சு. ஆனால் அம்மா கூட இல்லாத போதுதான் அவங்க அருமை புரிஞ்சிது.” என்று பெருமூச்சிழுத்தவன்,
“க்ளீனரா ஆரம்பிச்சு இப்போ சொந்த லாரி வாங்கி ஓட்டுறேன். இன்னொரு லாரி வாங்க காசு சேர்த்துட்டு இருக்கேன். இந்தியால அதிகமா புழக்கத்தில் இருக்குற எல்லா மொழியும் பேச கத்துகிட்டேன்” பழையதில் துவங்கி இப்போது அவன் இருக்கும் நிலை வரை கதை போல சொல்லி முடித்தான் ராஜராஜன். 
அங்கிருந்தவர்களுக்கு அவன் சொல்லாமல் விட்ட கஷ்டங்கள் நிறைய இருக்கும் என்பது புரிந்து என்ன சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர். 
நீலாவும், அன்பரசனும் தலைகுனிந்தபடி கண்களில் நீருடன் அமைதியாய் வேதனையில் வெந்து கொண்டிருந்தனர். முதல் பிள்ளைக்கு இழைத்த துரோகத்தில் பாடம் கற்றுக்கொண்டு மற்ற இருபிள்ளைகளை நல்ல முறையில் கரைசேர்த்தாகிவிட்டது. ஆனால் அவர்களின் தவறுக்கு பலியானவனோ பெயருக்கு ஏற்றார் போல வாழாமல் எங்கோ ஒருமூலையில் கஷ்டப்பட்டிருகிறானே என்ற எண்ணம் அவர்கள் நெஞ்சை முள்கொண்டு தைத்தது.
“நீ தப்பான பாதைக்கு மறந்தும் போயிடக்கூடாதுன்னு தான் நானும் நீலா உன்னை திட்டும் போது அவளை அடக்கல… ஆனா அதுவே உன் மனசை பாதிச்சிருக்கு.” என்று அன்பரசன் வருந்திச் சொல்ல, மயான அமைதி அவ்விடத்தில்.
“மாமா அத்தையெல்லாம் எப்படி இருக்காங்க…” என்று ராஜனே மீண்டும் அமைதியைக் கலைக்க இம்முறையும் மங்களமே பதில் கூறினார்.
“அந்த நாளுக்கு பிறகு இன்னைக்கு வரை யாருமே நீலாவோட அண்ணன் வீட்டுக்கு போகல… உறவும் அப்படியே அறுந்துடிச்சு… அங்க போகாம இருந்திருந்தா இது எதுவுமே நடந்திருக்காது, நீலாவோட அண்ணனும் உனக்கு ஆதரவா பேசலை… நீ போனதும் உன்னை தப்பா தான் பேசுனான்… அதுனால மொத்தமா அந்த உறவே வேண்டாம்னு விட்டாச்சு. திவ்யா சடங்குக்கு கூட உங்கம்மாவோட ஒன்னுவிட்ட அண்ணன் தான் வந்து முறை செஞ்சாரு.”
“இவ்வளவு நடந்திருக்கு… ஆனால் எங்ககிட்ட ஒன்னுமே சொல்லலையே…” என்று திவ்யா மீண்டும் புள்ளி வைக்க,
“நீ திரும்ப ஆரம்பிக்காதமா… அப்பாவும் அம்மாவும் அதை நினைச்சு நினைச்சு அழுகுறாங்க… நீயும் அவங்க மனசு நோகுற மாதிரியே திரும்பத் திரும்ப அதே விஷயத்தை கிளறுற.” என்று ராஜராஜன் கண்டிப்பு காட்ட திவ்யா வாயை மூடிக்கொண்டாள்.
அவளின் செய்கையில் காரணமின்றி எரிச்சலுற்ற தச்சன், “என்கிட்ட மட்டும் அப்படி வாயடிப்ப… சண்டைக்கு எகிறிகிட்டு வருவ, இப்போ அப்படியே பம்முற…” என்று தங்கையை முறைத்தான்.
“அவங்க எவ்வளவு பொறுப்பா பேசுறாங்க… பார்த்தாலே மரியாதை தானா வருது… நீயும் தான் இருக்கீயே… என்கிட்ட என்னைக்காவது இது மாதிரி பேசியிருக்கியா? சடையை பிடிச்சு இழுக்குறது… என் வீட்டுக்காரர் கிட்ட தேவையில்லாததை கோர்த்து விட்டு அவரோட லெக்சரை கேட்க வைக்கிறது… என் பிரெண்ட்ஸ் கிட்ட கடலை போடுறதுன்னு ஜாலியா சுத்துனவன் தானே நீ…” என்று திவ்யாவும் தச்சனின் காலை வார, இந்த சின்ன சின்ன சீண்டல் சண்டைகளைக் கூட அனுபவிக்காமல் தவறான முடிவெடுத்து அழகான தருணங்களை தவறவிட்டு விட்டோமே என்ற ஏக்கம் ராஜனுக்கு மெல்ல எட்டிப் பார்த்தது.
“உன் சாபம் தாண்டி என் பொண்டாட்டி ரூபத்தில் வந்து பலிச்சிருக்கு.” என்றான் தச்சனும் கடுப்பாய்.
“அண்ணி நல்லா கேட்டுக்கோங்க உங்க புருஷன் என்ன சொல்றான்னு… என்னோட சாபம் தான் நீங்களாம்.” 
“நல்லா வருவடி நீ… போய் உன் வீட்டுக்காரர்கிட்ட கடலை போடு… என் வாழ்க்கையை கடல்ல மூழ்கடிச்சிடாத…”
“ரொம்பத்தான் பயம் போலேயே…”
“நானே இப்போதான் சரிபண்ணி வச்சிருக்கேன்… நீ வேற எதையாவது பேசி அவளை திரும்ப மலை ஏத்தி விட்டுறாத…”
“அந்த பயம் இருக்கட்டும்…” என்று கெத்தாக புருவம் உயர்த்தினாள் திவ்யா.
“எல்லாம் என் நேரம். உன்கிட்ட இப்படியெல்லாம் பேச வேண்டியதிருக்கு.” என்று தலையிலடித்துக் கொண்டான்.
“அதெல்லாம் இருக்கட்டும் உனக்கு எப்படி அண்ணனை பத்தி தெரியும்? உன்கிட்ட மட்டும் சொன்னாங்களா?”
“அம்மா பேசுனதை ஒருநாள் கேட்டேன்டி…” என்றான் கள்ளத்தனமாய்.
“பிராடு… ஒட்டுக்கேட்டேன்னு சொல்லு…”
“நானா போய் கேட்கல… அதுவா என் காதுல வந்து விழுந்து மனசில் பதிஞ்சிடுச்சு.”
அதிசயத்திலும் அதிசயமாய் குந்தவை குறுநகையுடன் அவர்களின் செல்ல சண்டையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சின்ன பசங்க மாதிரி எதுக்கு இப்போ அடிச்சிக்கிறீங்க? போங்க போய் வேலையைப் பாருங்க… போட்டது போட்டபடி கிடக்கு. நாளைக்கு விருந்து இருக்கு. அடியே நீலா போனது போகட்டும் இப்போ தான் புள்ளை வந்துட்டான்ல அவனை கவனிக்காம கண்ணை கசக்கிட்டு உட்கார்ந்திருக்க. போய் புள்ளைக்கு என்ன வேணும்னு கேட்டு நாக்குக்கு ருசியா ஆக்கிப்போடு. ராஜா இனி நீ எங்கேயும் போகக்கூடாது. இந்த லாரி ஓட்டுறதை எல்லாம் நிறுத்திபுட்டு இங்கனேயே எதாவது தொழில் பண்ணு. இல்லையா இருக்கவே இருக்கு நம்ம நிலம். தச்சன் கூட இப்போ தான் பார்க்க ஆரம்பிச்சான். ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கோங்க.” என்று மங்களம் அனைவரையும் சேர்த்து அதட்ட, நீலா சட்டென எழுந்தார்.
“ராஜாக்கு அசைவம்னா ரொம்ப பிடிக்கும். நீங்க போய் எதெல்லாம் கிடைக்குதோ எல்லாத்தையும் வாங்கிட்டு வாங்க…” என்று அன்பரசனுக்கு உத்தரவை பறக்கவிட்டுவிட்டு சமையலறை விரைய, 
“நானும் வரேன் அத்தை…” என்று குந்தவையும் எழுந்தாள்.
“வேண்டாம் குந்தவை. இன்னைக்கு நானே எல்லாருக்கும் சமைக்கிறேன். நீங்க பேசிட்டு இருங்க.” என்றுவிட்டு சமையலறை விரைந்தார் தன் மூத்த பிள்ளைக்கு பிடித்ததை செய்ய… 
“தப்பிச்ச மவனே… அண்ணன் வந்ததால நீ லாரில விழுந்து பண்ண சாகசத்தை யாரும் கண்டுக்கல. இல்லைன்னா இன்னைக்கு ஒரு பெரிய பஞ்சாயத்தே நடந்து அம்மா ஊரை கூட்டியிருக்கும்…” என்று ரகசியமாய் திவ்யா தச்சனின் காதை கடிக்க, அவள் தலையை கொட்டிவிட்டு எழுந்தான் தச்சன். அதற்குள் சமையலறை நோக்கி நடைபோட்ட நீலா சட்டென திரும்பி வலி நிறைந்த விழிகளுடன் ராஜனை பார்த்து நின்றார்.
“உனக்கு அசைவம் பிடிக்கும் தானே ராஜா? சின்ன வயசுல நீ ரொம்ப விரும்பி சாப்பிடுவ… இப்போ வளர்ந்துட்ட… உன் விருப்பும் மாறியிருக்கும். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு அம்மா செஞ்சுத் தரேன்…” 
“உங்கையால என்ன செஞ்சு கொடுத்தாலும் சாப்பிடுவேன்…” என்று ராஜனும் உருகிச் சொல்ல, நீலா உருக்கமாய் அவனை கண்களில் நிரப்பிக்கொண்டு வேலையில் இறங்க, வீட்டின் முற்றத்தில் நின்றுகொண்டிருந்த தச்சனின் முகம் போன போக்கில் குந்தவை அவனை நெருங்கி அவன் கையை அழுத்தினாள்.
“என்னத்தை கிறுக்குத்தனமா யோசிச்சிட்டு இருக்க?” என்று மெதுவாகவே அவள் கேட்க, அவள் கையை உதறிவிட்டு வெளியேச் சென்றான் தச்சன். அவளும் அவனின் செயலில் துணுக்குற்று வேக நடையிட்டு வாயிலிலேயே அவனை தடுத்து நிறுத்தினாள்.
“என்ன இப்போ? ஒழுங்காத்தானே இருந்த? எதுக்கு முகம் எதையோ திண்ண மாதிரி இருக்கு?”
அவன் முகம் இன்னுமே கடுகடுவென இருக்க, “ரொம்பத் தான் உருகுறான்… இவ்வளவு உருகுறவன் முன்னாடியே வர்றதுக்கு என்ன…” 
“அடேய் அவங்க வேதனை புரியாம எப்போதும் போல இடக்கா பேசி என்னை கடுப்பேத்தாத. எத்தனை வருஷ வலி, வேதனை, ஏக்கமெல்லாம் இருக்கும். அதை புரிஞ்சிக்காம முகத்தை தூக்குற? நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். நீ வந்ததிலிருந்து உங்கண்ணன் கூட பேசவே இல்லை. திவ்யா அண்ணி கூட தன்னோட கோபத்தை காட்டுனாங்க. ஆனால் நீ அண்ணியை அடக்குற மாதிரி அடக்குனாலும் வாயை திறக்கல. உன் வாய் சும்மா இருக்காதே? என்ன விஷயம்?” என்று அவள் கேட்டது தான் தாமதம் தச்சன் பொரிந்து தள்ளிவிட்டான்.
“இப்போ அவன் யாருன்னு தெரிஞ்ச பிறகு பக்கம் பக்கமா வசனம் பேசுறவன் வீட்டுல எல்லோரையும் பார்த்த அன்னைக்கே வரவேண்டியது தானே? இல்லைன்னா இன்னைக்கு அவனை நான் உள்ள கூட்டிட்டு வந்தேனே அப்போதாவது தான் யாருன்னு சொல்ல வேண்டியது தானே? என்கிட்டேயாவது சொல்லி இருக்கலாமே… அதெல்லாம் செய்ய மாட்டான்.
இவனா ஏதாவது நினைச்சுகிட்டு வீட்டை விட்டு போவானாம்… எல்லாம் புரிஞ்ச பிறகும் வரமாட்டானாம்… வீடுவரைக்கும் வந்தும் கூட அவனுக்காக தினம் அழுதுட்டு இருக்குறங்களை கண்டுக்காம கிளம்பிடுவானாம். அப்புறம் அவனே கடைசி முறை பார்க்கணும்னு சொல்லிக்கிட்டு வீட்டுக்கே வருவானாம்… இவ்வளவு பேசுறானே அம்மா தான திட்டுச்சு… அப்பாவும் கிழவியும் அவனுக்கு ஆதரவா தானே இருந்தாங்க? விவரம் புரிஞ்ச பிறகு அவங்களுக்கா வரவேண்டியது தானே? அதை செய்யாம எல்லாத்தையும் அவன் விருப்பத்துக்கு பண்ணினதுக்கான பலனை நானும், என் அப்பா அம்மாவும் தான் அனுபவிச்சோம்.
இவனாலத் தான் இன்னைக்கு வரைக்கும் என்னை நம்பி என் விருப்பத்துக்கு இங்க யாரும் என்னை விட்டது கிடையாது. பார்க்கத்தான் என் விருப்பத்துக்கு எல்லாரும் தலையசைக்கிற மாதிரி தெரியும் ஆனால் அவங்க இழுக்குற இழுப்புக்குத் தான் நான் போயிட்டு இருக்கேன். அவங்களுக்கு அவங்களை மீறி நான் போயிடுவேன்னு பயம்… நீ எப்போதும் குறைபட்டுட்டே இருப்பீயே விவசாயம் பார்க்கிறவன் எனக்கு வேண்டாம் வேண்டாம்னு… எனக்கு ஆரம்பத்தில் விவசாயம் மேல ஆர்வமெல்லாம் கிடையாது. ஆனால் என்னைக்கு எனக்கு முன்னாடி ஒருத்தன் கோச்சிகிட்டு ஓடிட்டான்னு தெரிஞ்சுதோ அன்னைக்கு மாத்திகிட்டேன் என்னோட ஆசையை… அவன் விட்டுட்டு போனதால ஏற்பட்ட மனகஷ்டத்தை எக்காரணம் கொண்டும் நானும் திரும்பக் கொடுத்திடக்கூடாதுன்னு தான் இந்த ஊரிலேயே சுத்திட்டு இருக்கேன்.”
“கொஞ்சம் மூச்சு விடுடா… அடுக்கிகிட்டே போற… இப்போ என்ன பிரச்சனை அதைச் சொல்லு…”
“அடியேய் என்னை வெறுப்பேத்தாத… ஒருத்தன் எவ்வளவு தம்கட்டி பேசிட்டு இருக்கேன் அதை கண்டுக்கிறீயா நீ? நீலாவும் அவன் வந்ததும் அப்படியே கண்டுக்காம அவனுக்கு சமைக்குறேன்னு போயிடுச்சு.”
“அதுக்கு இப்போ என்ன செய்யணும்னு சொல்ற? அவங்க சமைக்குறதை நீயும் தான் சாப்பிடப்போற… இதுக்கு முன்னாடி அத்தை முந்தானையை பிடுச்சி அப்படியே கொஞ்சி குழாவிட்டு இருந்தியா என்ன? அவங்கள எதிர்த்து பேசி அவ்வளவு வாயடிப்ப… சண்டை போடுவ… இப்போ என்னமோ சின்ன புள்ளை மாதிரி முறுக்கிக்கிற?” என்று இடைவெளி விட்டவள் மீண்டும்,
“உனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும். எல்லாமே புரிஞ்சி தெரிஞ்சு தானே நீ விட்டுகொடுத்து போயிருக்க? அப்புறம் எதுக்கு அதை ஒரு குறையா சொல்ற? நாம மனசார நல்லதுன்னு நினைச்சு செஞ்சதை என்னைக்குமே குறையா பார்க்கக்கூடாது. அப்படி குறையா பார்த்தால் நீ விட்டுக்கொடுத்ததற்கே அர்த்தமில்லாமல் போயிடும்…” என்று இயல்புக்கு மாறாய் அவள் நிதானமாய் எடுத்துக் கூறினாலும் அது அவன் மண்டையில் ஏறுவதாய் இல்லை.
“உனக்கு புரியாது போடி…” என்று கடுப்படித்துவிட்டு கிளம்பிவிட்டான் தச்சன். குந்தவை யோசனையுடன் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

Advertisement