Advertisement

“ஏன் தச்சனிடம் கூட நான் இப்படித்தானே பேசுவேன்… அப்போ நீ எதுவும் சொல்லல… திடீர்னு இவரும் உனக்கு அண்ணன். மரியாதை கொடுத்து பேசு அதுஇதுன்னு சொல்ற… இப்படி ஒருத்தவங்க இருக்காங்கன்னு என்றைக்காவது சொல்லி இருக்கீங்களா? இவங்க இங்க வந்தே ஒருமணி நேரத்துக்கு மேல ஆகுது இவங்க பேர் கூட என்னன்னு இன்னும் நீ சொல்லல… என்னாச்சுன்னு சொல்லல… அப்புறம் எப்படி எனக்கு இவங்க என் அண்ணன், என் குடும்பத்தில் ஒருத்தவங்கன்னு தோணும்.” என்று பதிலுக்கு திவ்யா பொரிந்து தள்ள, அவளின் பின்னந்தலையை தட்டினான் தச்சன்.
“லூசு எதுக்கு இப்போ கத்திட்டு இருக்க… எவ்வளவு வருஷம் கழிச்சு பார்க்குறாங்க… அவங்க பேசி முடிக்குறதுக்குள்ள உனக்கு என்ன அவசரம். எல்லோரையும் திட்டுற, அம்மாவை முறைக்குற… கிளம்புறேன் கிளம்புறேன்னு தேஞ்ச ரெகார்டு மாதிரி பாடிட்டு இருக்க…”
“அதை நீ சொல்லாத… கொஞ்ச நேரம் முன்னாடி முகத்தை தூக்கிவச்சிக்கிட்டு அம்மாவை திட்டல நீ… அதையே நான் பண்ணா பாஞ்சிகிட்டு வர…” என்று திவ்யாவும் சளைக்காமல் மல்லுக்கு நிற்க, நீலா தான் தவித்துவிட்டார். 
“அண்ணி அவங்களை பேச விடுங்க… நீங்க மூணு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கணும்னு தான் அத்தையும் மாமாவும் விரும்புவாங்க… இப்படி நீங்க ரெண்டு பேரும் தேவையில்லாம சண்டை போட்டு அவங்களைத் தான் தவிக்க வைக்குறீங்க. உட்காருங்க முதல்ல…” அவர்களுக்குள்ளேயே பேசிவிட்டு வரட்டும் என்று அமைதியாய் நின்ற குந்தவைக்கு பொறுமை பறக்க, தச்சனை முறைத்துவிட்டு திவ்யாவிடம் முறையிட, திவ்யா சற்று அமைதியானாள்.
“உனக்கு என்னைப் பத்தி தெரியனும் அவ்வளவு தானே… உட்காரு நானே சொல்றேன்…” என்ற ராஜராஜன் இப்போது தன் உடன்பிறந்தவர்களுடன் அமர்ந்து கொண்டு, அவர்களை பார்த்து மெல்ல முறுவலித்தான்.
“எனக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேர் இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா இங்கிருந்து கிளம்பி இருக்க மாட்டேனோ என்னவோ… அஞ்சு வயசு இருக்கும் நான் இங்கிருந்து கோபப்பட்டு மடத்தனமா கிளம்பின போது… தச்சன் அம்மா வயித்துல இருந்தான்… தம்பியோ தங்கச்சியோ வரப்போறாங்கன்னு ஆர்வம் இருந்தாலும் அந்த நேரக் கோபம் அப்படியே கிளம்பிட்டேன். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு இத்தனை வருடத்தில் நல்லாவே புரிஞ்சிது.” என்று அவன் இறந்தகால நினைவுகளுக்கே சென்றுவிட, திவ்யா கதை கேட்கும் தொனியில் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினாள்.
“எதுக்கு இங்கிருந்து போனீங்க?”
ராஜராஜனின் பார்வை சட்டென பெற்றோர் புறம் செல்ல, நீலாவும் அன்பரசனும் வலியுடன் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“பழசு எல்லாம் எதுக்கு இப்போ? அதெல்லாம் முடிஞ்சி போனது.” ராஜராஜன் மழுப்ப, திவ்யாவின் ஆர்வம் அதிகமானது.
“முடிஞ்சதா இருந்தாலும் வீட்டை விட்டு போகுற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு? எனக்கு தெரிஞ்சி அம்மா, அப்பா, ஆச்சி யாருமே அவ்வளவா திட்டக்கூட மாட்டாங்க. சத்தம் போட்டாலும் கொஞ்ச நேரத்தில் சரியாகிடுவாங்க. இதோ இவன் தான் அப்பப்போ திட்டு வாங்குவான் அதை அப்படியே துடைச்சு போட்டு போயிட்டே இருப்பான். ரோஷமே கிடையாது…” என்று பேச்சுவாக்கில் தச்சனின் காலை வாரினாள் அவனின் தங்கை.
“ஓய் என்னடி லந்தா… ரொம்ப பேசுன உன் வீட்டுக்காரரை மட்டும் பரதேசம் அனுப்பிடுவேன். அப்புறம் நீ இங்கேயே உன் மாமியார் கூட குடும்பம் நடத்த வேண்டியதுதான்…” என்று தச்சன் எகிறிக்கொண்டு வர, குந்தவை தலையிலடித்துக் கொண்டு அவன் அருகிலேயே வந்து அமர்ந்துகொண்டாள்.
“எல்லோரும் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்காங்க நீ மட்டும் எதுக்கு தேவையில்லாம வம்பு பண்ணிட்டு இருக்க…”
“உனக்கு என்னை ஏதாவது சொல்ல சாக்கு கிடைக்கணும்… கிடைச்சதும் உடும்பு பிடிபிடிக்குற… சும்மா இருந்தவனை உன் நாத்தனார் தானே வம்புக்கு இழுத்தா அவளைக் கேளு…” என்று தச்சனும் அவளிடம் அங்கேயே மல்லுக்கு நிற்க ராஜராஜன் இவர்களின் வாதத்தை சுவாரசியமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இவங்களை பார்த்திட்டு இருந்தா நல்லா பொழுது போகும்… இனி தினமும் பார்க்கத் தானே போறீங்க… நீங்க சொல்லுங்க. இப்போ என்ன பண்றீங்க? எங்க இருக்கீங்க? அண்ணி இருக்காங்களா?” திவ்யா ராஜராஜனின் கவனத்தை தன்புறம் திருப்ப, குந்தவை புதியவனின் முன் சங்கடமாய் நெளிந்தாள்.
“இதங்கதான்னு இல்லை… ஒண்டிக்கட்டையா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரு, மாநிலம்னு சுத்திட்டே இருக்கேன். இன்னைக்கு வரைக்கும் எங்கேயும் நிலையா இருந்தது இல்லை. இருக்கணும்னு தோணினதும் இல்லை. எந்த ஊரும் இதுவரை இது உன்னோட இடம்னு என்னை உணர வச்சதும் இல்லை. சரக்கு ஏத்திக்கிட்டு மாநிலம் விட்டு மாநிலம்னு போயிட்டே இருப்பேன். வேலைக்கு லீவு, ஓய்வுன்னு ஒன்னு எடுத்ததே கிடையாது. இங்க தமிழ்நாட்டுல கோயம்பேடு, கோயம்பத்தூர், திருச்சின்னு தமிழ்நாடு முழுக்க சுத்தி இருந்தாலும் இந்த டெல்டா பக்கம் இப்போ தான் வரேன்… இங்க வந்தாலும் உங்களை எல்லாம் பார்ப்பேன்னு சத்தியமா நினைச்சு கூட பார்க்கல… காய்கறியை கும்பகோணம் மார்கெட்டில் இறக்கிட்டு அப்படியே கிளம்புறதா இருந்தேன்… திடீர்னு இங்க சரக்கு இறக்கனும் எப்போதும் எடுக்குற ஆள் இல்லைன்னு பேசிட்டு இருக்குறதை கேட்டதும், இந்த ஊரிலிருந்து கிளம்புறதுக்கு முன்னாடி அப்பா அம்மாவை ஒருமுறை பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன்.” என்று சொல்லிவிட்டு ராஜராஜன் தலை கவிழ்த்துவிட, பெற்ற மனம் பதறியது. 
“வீடு வரை வந்து எங்களை பார்த்த பிறகும் நீ கிளம்புறேன்னு சொன்னா உனக்கு எங்க மேல இன்னும் கோபம் இருக்கு… அதுதான் வாசலோட கிளம்பிட்ட…”
“அச்சோ அப்பா அப்படி கோபம் இருந்தா இன்னைக்கு திரும்ப வந்திருக்கவே மாட்டேன். அறியாத வயசில் செஞ்சது தப்புன்னு புரிஞ்ச பிறகு வேண்டாம்னு தூக்கிபோட்டுட்டு போனவன் திரும்ப எந்த முகத்தை வச்சிக்கிட்டு இங்க வர்றதுன்னு தயக்கம். ஒரு பயம்… நீங்க எல்லாம் என்னை பத்தி என்ன நினைப்பீங்கன்னு உறுத்தல்.” என்று ராஜன் தன்னிலை விளக்கம் தந்து சமாதானம் செய்ய முற்பட,
“மாமா முடிஞ்சதை திரும்பத் திரும்ப பேசுறதால மனகசப்பு தான் அதிகமாகும். வேதனையை நோண்டாம அடுத்து என்னனு பார்ப்போமே…” என்று குந்தவை சொல்லவும் தான் அன்பரசன் சற்று அமைதியாகி விடைதெரியா கேள்விகளை தெளிவுபடுத்தி இதற்கு இதோடு முடிவெழுத முன்வந்தார்.
“தச்சனை உனக்கு முன்னாடியே தெரியுமா? அவன் பிரெண்டானு கேட்டப்போ ஆமாம்னு சொன்ன?” 
“ரெண்டு நாள் முன்னாடி நிதானமில்லாம இவர் லாரில தான் போய் வண்டியை விட்டேன்… இவர் தான் வீடுவரை வந்து என்னை இங்க விட்டாரு…” ராஜராஜன் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசிக்கும் முன்னரே தச்சன் அனைத்தையும் ஒப்பித்துவிட ராஜராஜனின் பார்வை அன்னிச்சையாய் வானதியிடம் தான் சென்றது. 
வீட்டினருக்கு தச்சன் குடித்துவிட்டு லாரியில் வந்து மோதியது தெரியக்கூடாது என்றுதானே அவனை வீட்டிலிருந்து சீக்கிரம் விரட்டுவதிலேயே குறியாய் இருந்தாள். இப்போது உரியவனே கவலையின்றி அனைத்தையும் சொல்லிவிட, இப்போது என்ன செய்வாய் என்ற பார்வை தான் ராஜனிடத்தில். வானதியோ ஒன்றும் சொல்ல முடியாமல் அவஸ்தையுடன் நின்றாள்.
“அன்னைக்கு என்னை மாதிரியே வீட்டுல கோச்சிகிட்டு வந்துட்டேன்னு தச்சன் சொல்லவும் எனக்கு மனசு கேக்கல… நான் பண்ண தப்பை வேற யாரும் செஞ்சிறக்கூடாதுன்னு தான் தச்சனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்… அப்போ தான் உங்களைப் பார்த்தேன். நீங்க தச்சனோட நிலைமையை பார்த்து பயந்துபோய் அவனை திட்டிகிட்டே உள்ள கூட்டிட்டு போனீங்க.” என்றான் ராஜன். 
தச்சனை கொண்டுவந்து விட்டது ஒரு லாரி டிரைவர் என்று வானதி சொன்ன போது வந்த சந்தேகம் இப்போது நிவர்த்தியாகியிருந்தது ராஜனின் பதிலில்.
“அவர் யாருன்னு தெரியாத போதும் பத்திரமா வீடுவரை கொண்டுவந்து விட்டதுக்கு தேங்க்ஸ்… அன்னைக்கு இருந்த சூழலில் உங்களை சரியா கவனிக்கல. எங்களுக்கும் உங்களைத் தெரியல, ஆனால் நீங்க எங்களை பார்த்தீங்களே? இந்த வீடும் உங்களுக்கு முன்னாடியே பழக்கப்பட்டதா இருக்கும்… அப்படியே உள்ள வந்திருக்கலாமே? அத்தையும் மாமாவும் சந்தோசப்பட்டிருப்பாங்க.” எதுவும் பேசாமல் இருக்ககூடாது என்று தன் பங்குக்கு பேசினாள் குந்தவை.
“அவனுக்கு இந்த வீடு தெரிய வாய்ப்பில்லை. ராஜன் பிறக்கிறதுக்கு முன்னாடியே இந்த வீட்டில் பழுது நிறையா இருக்கவும் இதை இடிச்சிட்டு புதுசா கட்டுற வரை போக்கியத்துக்கு பக்கத்து ஊரில் இருந்தோம். வறட்சி, பஞ்சம்னு ஒரு ரெண்டு வருடம் விவசாயத்திலும் இழப்பு அதிகம் அதுனால இந்த வீட்டை முழுசா கட்டிமுடிக்கவே நாலஞ்சு வருஷமாகிடுச்சு. அவன் அங்கிருந்து போன கொஞ்ச நாளிலே இந்த வீட்டு வேலையும் முடிஞ்சிது தச்சனும் பிறந்துட்டான். அப்புறம் இங்கேயே வந்துட்டோம்.” குந்தவையின் பேச்சில் ஒளிந்திருந்த கேள்விக்கு பதிலை உதிர்த்தார் அன்பரசன்.
“எல்லாத்தையும் சொல்றீங்க எதுக்கு அண்ணன் வீட்டை விட்டு போனாங்க அவங்க பெயர் என்னனு யாருமே சொல்ல மாட்டேங்கிறீங்க…” என்றாள் திவ்யா அலுப்பாய்.
திவ்யாவின் அண்ணன் என்ற விளிப்பில் ராஜனுக்கு உச்சி குளிர்ந்தது. இது என் வீடு என்ற நினைப்பே அவளின் அங்கீகாரத்திற்கு பிறகுதான் வந்தது. முந்தியோ இது அவன் அப்பா, அம்மா வாழும் வீடு, உடன் தம்பியும் இருக்கிறான் அவன் வீடு இது… என்ற அளவில் தான் இருந்தான். இப்போது பாசத்துக்கும், சண்டைக்கும் தங்கை என்ற ஒருவள் இருப்பது தெரிய குடும்பமே நிறைவான உணர்வு. உடன் இங்கேயே தங்கி மீதி வாழ்க்கையை கழித்துவிட வேண்டும் என்ற பேராவல்.
திவ்யாவின் கேள்விக்கு பதில் கூற அனைவருமே தயங்க மங்களமே நடந்ததை சொன்னார்.
“உலகமே அண்ணாந்து பார்க்கும் கோயிலைக் கட்டியவனும் தன் வாழ்நாளில் தோல்வியே பார்க்காத பேரரசன் ராஜராஜன் பெயர் தான் இந்த வீட்டு ராசாவோட பேரு… நீலாவோட ஊரில் ஒரு திருவிழாவுக்கு போனப்போ அவள் அண்ணன் கொளுந்தியா குளிக்கப் போகுற முன்னாடி ரூமில் கழற்றி வச்சிட்டு போன வைர மோதிரம் காணோம்னு ரகளை பண்ணுனா… வீடு முழுக்க தேடியும் எங்கேயும் கிடைக்கல… அந்த காலத்திலேயே வைரம் வச்சி இருக்குற அளவுக்கு பவுசு உள்ளவ சும்மா இருப்பாளா… போலீசுக்கு போவேன்… புகார் குடுக்குறேன்னு சொல்லவும் வீடே ஆடிப்போச்சு. நம்ம சுத்துப்பட்ட குடும்பத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் பக்கமெல்லாம் போய் பழக்கமில்லை. அவளை சமாதானம் பண்ணி வீடு தோட்டம் துரவுன்னு எல்லா இடத்தையும் மறுபடி சல்லடை போட்ட கணக்கா தேடி ஓஞ்சி போய் உட்கார்ந்தா இந்த பயல இழுத்துட்டு வந்தா நீலாவோட அண்ணிக்காரி… 
ராஜாகிட்ட தான் மோதிரம் இருக்கு. எதுக்கு எடுத்தான்னு தெரியல… நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுத்து வளருங்க அண்ணின்னு நீலாகிட்ட சொல்லிட்டா. கூறுகெட்டவ என் புள்ளை தப்பு பண்ணியிருக்க மாட்டான்னு சொல்லாம ராஜாவை அங்கேயே வச்சு வாங்குவாங்குனு வாங்கிட்டா… நாங்க தடுத்தும் எங்களை தலைகுனிய வச்சிட்டியேன்னு புள்ளையை வஞ்சிகிட்டே இருந்தா… என்ன நடந்ததுன்னு அவன்கிட்ட கேட்கவும் இல்லை. தன் பிறந்த வீட்டுல தன்னோட மானம் மரியாதை போனதோடு மட்டுமில்லாம, இந்த விஷயம் பெருசாகி போலீஸ் வரைக்கும் போயிருந்தா ராஜா வாழ்க்கையே நாசமாகியிருக்குமேனு தோணுன பயமெல்லாம் ராஜா மேல கோபமா மாறிடுச்சு… அப்புறம் கொஞ்சம் சமாதானம் பண்ணி அன்னைக்கே கிளம்பி நம்ப வீட்டுக்கு வந்துட்டோம். 
ஆனால் ராஜா ஓயாம அழுதிட்டே இருந்தான்… தூங்கி எழுந்தா கொஞ்சம் சரியாகிடுவான்னு நினைச்சு நேரமே தூங்கியாச்சு… நல்ல அசதியல இருந்திருப்போம் போல காலையில எழுந்து பார்த்தா ராஜாவை காணோம். பதறியடுச்சு தேடிப் பார்த்து… போலீஸில் புகார் கொடுத்து, ஒரு மாசம் வரைக்குமே எங்கிருக்கான்னு கண்டுபிடிக்க முடியலை… அவன் போட்டோ காட்டி தேடுனதில் விடியற்காலையில் ஏதோ காய்கறி லாரியில் ஏறினான் என்கிற தகவல் மட்டும் தான் தெரிஞ்சுது. எந்த லாரில ஏறுனான் அது எந்த ஊருக்கு எல்லாம் போச்சுன்னு கண்டுபிடிக்க முடியல… தேடல் நீண்டுகிட்ட போச்சு, இங்க வாழ்கையும் நகர ஆரம்பிச்சுது. தச்சன் பிறந்தான். நீலா அவளாவே இல்லை. பிள்ளையை புரிஞ்சிக்காம அவன் மனசை நோகடிச்சு தொலைச்சிட்டோமேன்னு தினம் அழுகை… 
தச்சனோ வளர வளர ரொம்ப அடம் பண்ண ஆரம்பிச்சான். அவனை பார்த்துக்கவே நாங்க ரெண்டு பேரும் சக்கரம் கட்டிட்டு சுத்த வேண்டியிருந்தது. ராஜா மனசை காயப்படுத்தி அது தந்த வலியில் இந்த புள்ளையையாவது வருத்தப்படாம வளர்க்கணும்னு தான் தச்சன் எது பண்ணாலும் நீலா திட்டமாட்டா… அவனை எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டா… ராஜாக்கு பண்ண தவறை அடுத்து இருக்கும் பிள்ளைகளுக்கு செய்யக் கூடாதுன்னு தான் அதிகம் திவ்யாவையும் திட்டுனதில்லை. ஆனா இன்னைக்கு வரை மூத்தவன் மனசை உடைச்சிட்டோமே! அந்த பிஞ்சு மனசை தவிக்க விட்டுட்டோமேன்னு எங்க மூணு பேருக்குள்ளும் குற்றவுணர்ச்சி குத்திட்டு இருந்தது. இப்போ ராஜாவை பார்த்ததும் தான் மனசு நிறைஞ்சிருக்கு. நீ இனி எங்கேயும் போகக்கூடாது. இந்த ஆச்சியையும் மன்னிச்சிடு ராசா… எவ்வளவு வேதனை இருந்தா எங்களை விட்டுட்டு போயிருப்ப. நீ போனது கூடத் தெரியாம இந்த கிழவி நல்லா தூங்கிட்டு இருந்திருக்கேன்.” மங்களம் ராஜராஜனின் முகத்தை தன் நடுங்கும் கரம் கொண்டு வருட, அவர் கையை கெட்டியாக பிடித்தான் ராஜன்.
“ப்ச்… ஆச்சி இன்னொரு முறை மன்னிப்பு அதுஇதுன்னு சொன்னா அப்புறம் நான் திரும்ப போயிடுவேன்.” என்று மிரட்ட, இதயத்துடிப்பு எகிறி குதித்தது வயதானவர்களுக்கு.
“அன்னைக்கு வீட்டுக்கு பின்பக்கம் விளையாடிட்டு இருக்கும் போது காலில் ஏதோ குத்தவும் என்னனு எடுத்துப் பார்த்தா வெள்ளைக் கல்லு பதிச்ச மோதிரம் இருந்தது. யாரோடதுன்னு தெரியல சரி விளையாடி முடிச்சதும் அம்மாகிட்ட கொடுத்துடலாம்னு பாக்கெட்டில் அதை போட்டுகிட்டு விளையாடுறதில் ஆர்வமா இருந்துட்டேன்… அது எப்போ என் சட்டையிலிருந்து வெளியில விழுந்துதுன்னு தெரியல அதை அத்தை பார்த்துட்டு நீ எடுத்தியான்னு கேட்டாங்க… நாம தானே கீழிருந்து எடுத்தோம்னு நினைச்சிகிட்டு ஆமாம்னு சொல்லிட்டேன். 

Advertisement