Advertisement

*18*
வார்த்தைகள் மரணித்து உணர்ச்சிகள் உச்சானிக்கொம்பில் இருக்க, தச்சன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் திவ்யா. விழி எதிரில் தந்தை, அன்னை, ஆச்சி என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் புதிதாய் அண்ணன் என்று சொல்லப்பட்டவனின் அருகே கண்ணீருடன் அமர்ந்து அவன் கரத்தை இறுக்கமாய் பற்றியிருக்க, திவ்யா தச்சனின் கரத்தை கெட்டியாக பிடித்திருந்தாள். ராஜராஜன் என்று ஒருவன் தங்களுக்கு முன் பிறந்திருக்கிறான் என்ற செய்தியே அவளுக்கு அதிர்ச்சியாய் இருக்க… சென்ற கணம் வரை பெருந்தச்சன் மட்டுமே உடன்பிறந்து கூடவே வளர்ந்தவன் என்று பதிந்திருந்த அவளது எண்ணத்தில் புதிதாய் ஒருவன் உட்புக, அதனை ஆதரவுக்கரம் நீட்டி வரவேற்க முடியவில்லை அவளால்…
“என்னடி இப்படி உட்கார்ந்திருக்க… போய் பேசு.” என்று தச்சன் திவ்யாவை உசுப்ப, 
“நீ போய் பேச வேண்டியதுதானே?” என்று துடுக்காய் கேட்டவளுக்கு மறுநொடியே ஏதோ மனதில் தோன்ற அவனை நம்பாமல் பார்த்தாள்.
“நீ எப்படி இவ்வளவு ஈசியா எடுத்துக்குற? அதிர்ச்சியா இல்லையா உனக்கு?” என்ற திவ்யாவின் கேள்விக்கு அவனிடம் மெளனம் மட்டுமே…
“என்ன அமைதியாகிட்ட? அப்போ… உனக்கு… ஏற்கனவே தெரியுமா? இப்படி ஒருத்தர் இருக்காருன்னு உனக்கு தெரியும் தானே? இல்லைனா நீ இவ்வளவு அமைதியா இருக்க மாட்ட… ஏதாவது சொல்லி இருப்ப… நீங்க எல்லோரும் சேர்ந்து என்கிட்ட மட்டும் இதை மறைச்சிருக்கீங்க!” திடுமென அவளுக்கு என்னத்தான் ஆனதோ, குரல் உயர்ந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.
“இப்போ எதுக்கு இவ்ளோ ஸீன் போடுற நீ? ஒன்னுக்கு ரெண்டு அண்ணனுங்க இருக்காங்கன்னு நீ கெத்தா சுத்தலாம்… உன் வீட்டுக்காரரை மிரட்டி வைக்கலாம்.” என்று கேலி போல தச்சன் திவ்யாவிடம் சொன்னாலும் கெத்து என்று சொல்லும் போதே பார்வை தானாய் குந்தவையிடம் சென்று நின்றது. இதற்கும் லெக்ஸர் எடுப்பாளோ என்ற பயம் தான் வேறென்ன… ஆனால் குந்தவையின் கவனம் ராஜராஜனிடம் இருந்தது.
இவர்களின் விவாதத்தை கணக்கிலேயே கொள்ளாது, “ஏய்… இங்க வாங்க ரெண்டு பேரும். அண்ணன் பாருங்க…” என்று நீலா ஆர்வமாய் தன் மற்ற இருபிள்ளைகளையும் அருகில் அழைத்துவிட்டு அவர்கள் வருகிறார்களா என்றுகூட கவனிக்காமல் அதே ஆவலுடன் ராஜன் புறம் திரும்பி, “தம்பியும், தங்கச்சியும்டா… திவ்யா தான் சின்னவ, நம்ம வீட்டு கடைக்குட்டி. திருச்சியில கட்டிக்கொடுத்திருக்கோம். மாப்பிள்ளை கதிரவன் கடையில வேலைப் பார்க்கிறாரு. நல்லா பார்த்துக்கிறாரு நம்ம பொண்ணை… மாப்பிள்ளை இன்னைக்கு ராத்திரி இங்கன வருவாரு… அப்போ பேசிப்பார்த்து எப்படின்னு சொல்லு… 
உனக்கு அடுத்தவன் பெருந்தச்சன். இங்க தான் நம்ம நிலத்தை பார்த்துக்கிறான். இப்போ தான் ரெண்டு மாசம் முன்ன கல்யாணம் ஆச்சு. அதோ இருக்கா பாரு… குந்தவை…” என்று அவர் குந்தவையை காட்டவுமே, சற்று தள்ளி சமையலறை ஒட்டி வானதியுடன் நின்றுகொண்டிருந்தவளை கண்ட ராஜனுக்கு ‘என் பொண்டாட்டி டிட்டிட்டா’ என்று புலம்பிய தச்சன் தான் நினைவுக்கு வந்தான். 
விழிகளில் குழப்பம் தெரிந்தாலும் குந்தவை நின்ற தொனியே அவளது கம்பீரத்தை பறைசாற்றி, தச்சன் தன் சொற்கள் கொண்டு பிரதிபலித்திருந்த பிம்பத்துடன் ஒத்துப்போவதாய் இருந்தது.
அடுத்து குந்தவையிடமிருந்து விலகிய பார்வை அவள் அருகில் அதிர்வுடன் நின்றுகொண்டிருந்த வானதியின் மீது பதிந்தது.
“அவங்க யாரு?” என்று ராஜன் கேட்டது தான் பலவருடங்களுக்கு பின் அவன் அங்கு பேசிய சொற்களாய் அமைந்தது.
“அது குந்தவை அக்கா வானதி… அவளுக்கு பக்கத்திலேயே கீழ உட்கார்ந்து இருக்குறது அவங்க அம்மா… நாளைக்கு உன்னோட பிறந்தநாள் வருது தச்சன் கல்யாணத்துக்கும் விருந்து வைக்கல அதுதான் ரெண்டுத்துக்கும் சேர்த்தார்ப்போல நாளைக்கு விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கு.” 
“அந்த பசங்க?” பதில் தெரிந்தாலும் சந்தேகமாய் கேள்வி எழுப்பினான் ராஜன். துவக்கத்தில் அன்று தச்சனை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டபோது அந்த பிள்ளைகளை தன் தம்பி பிள்ளைகள் என்றல்லவா எண்ணியிருந்தான். தற்போது தெரிவிக்கப்பட்ட தகவல்படி தம்பிக்கு திருமணம் முடிந்தே இரண்டு மாதங்கள் தான் ஆகியிருக்க, அந்த பிள்ளைகள் தம்பியினுடையதாய் இருக்க வாய்ப்பில்லை என்று புரிந்தாலும் எழுந்த ஏமாற்றத்தை தடுக்கமுடியவில்லை.
“குந்தவை அக்காவோட இரட்டை பிள்ளைங்க…” என்று நீலா பதில் சொல்லவும், ராஜன் கண்கள் இப்போது தச்சன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் மீது வாஞ்சையாய் படிந்தது. 
“இத்தனை வருஷத்துல ஒருதடவை கூட எங்களை வந்து பார்க்கணும்னு உனக்கு தோணலையா? அவ்வளவு கொடுமை பண்ணிட்டோமா உன்னை?” அமைதியாக மகனையே கண்களில் நிரப்பிக் கொண்டிருந்த அன்பரசன் தன் மெளனம் கலைத்து வாய் திறக்க, கவனத்தை குழந்தைகளிடமிருந்து பிரித்தெடுத்து பெருமூச்சிழுத்தான் ராஜராஜன். 
கனவாகவே இறுதிவரை இருந்துவிடுமோ என்று நினைத்த கணங்கள் நிகழ்காலத்தில் நிகழும் போது உடைப்பெடுக்கும் உற்சாக ஊற்றுக்கு சற்றும் குறையாமல் கடந்த காலத்தின் வடுக்களை வன்மையாய் வருடவும் வேண்டியிருந்தது எதிர்காலத்தின் நலன் கருதி. 
“நீங்க எதுவும் செய்யலப்பா… நான் தான் தப்பு பண்ணிட்டேன். கோழை மாதிரி ஓடிட்டு திரும்ப எந்த முகத்தோட உங்களை பார்க்க வர்றதுன்னு தயக்கம். நீங்க என்னை மறந்திருப்பீங்கன்னு நினைச்சேன்.” என்று சொன்ன ராஜனுக்கே அவனது எண்ணங்கள் அபத்தமாய் தெரிந்தது. ஆனால் நிதர்சனம் அதுதானே… பல நேரங்களில் தன் பெற்றோர் தன்னை நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதினான். இப்போதோ அவர்கள் விழிகளில் போட்டிபோட்டுக் கொண்டு வெளிப்படும் ஆவலும் வருத்தமும், அன்பும் கண்ணீரும், கனிவும் வேதனையும் உண்மையை உரக்கச் சொல்லியது.
“ஐயா ராசா… உன்னை எப்படிடா மறப்போம். நீ குடும்பத்தோட முதல் வாரிசு. ஆசையா வளர்த்த பிள்ளை. நீ காணும்னு தெரிஞ்சதும் உன்னை தேடாத இடமில்லை, நீ கிடச்சிடனும்னு வேண்டாத தெய்வமில்லை. இந்த கட்டை வேகுறத்துக்கு முன்னாடி உன்னை பார்த்திடனும்னு நினைச்சேன். அதுவே நடந்துச்சு. இனி நிம்மதியா நான் கண்ணை மூடிடுவேன் ராசா…” என்று மங்களம் ராஜன் மீது சாய்ந்து அழ, தொண்டை கமறியது அன்பரசனுக்கு. 
“ஆச்சி ஏன் இப்படி பேசுறீங்க… நூறு வயசு வரை நீங்க ஆரோக்கியமா இருப்பீங்க. அம்மா சொல்லுங்கமா…”
“தெரியாம நான் ஏதாவது சொல்லி நீ திரும்ப மறஞ்சிடுவீயோன்னு பயமா இருக்கு ராசா…” என்று நீலாவும் தன் பங்குக்கு அழ, ராஜராஜன் கலக்கத்துடன் நீலா மடியில் தலைவைத்தான். புரியாத வயதில் செய்த புரியாத காரியத்தின் வீரியத்தை அவன் அனுபவித்தது மட்டுமில்லாமல் அவன் மீது அன்பு வைத்திருப்பவர்களையும் சேர்த்தே வலிக்கச் செய்து, அஞ்சவும் வைத்திருப்பது உவப்பின்றி உவர்ப்பாயிருந்தது.
“நான் புரிஞ்சிக்காம போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”
நீலாவின் விரல்கள் பரிவாய், ஆவலாய் ராஜராஜன் சிகையில் உலா செல்ல அவரின் பார்வை அச்சு பிசகாது ராஜராஜனின் முகவடிவில் நிலைத்து, அதை நினைவடுக்கில் பதிந்து கொண்டிருந்தது. சிறுவனாய் சென்றவன் நன்கு வளர்ந்த ஆண்மகனாய் வீடுவந்து சேர்ந்திருந்தான். இடைப்பட்ட காலத்தில் மகன் எப்படித் தவித்தானோ… கஷ்டப்பட்டானோ என்று தாயுள்ளம் ஒருபுறம் பதறவும் செய்தது.
“நீ சின்ன புள்ளை அறியாம என்னமோ பண்ண. ஆனா எல்லாம் தெரிஞ்ச நானே உன்னை புரிஞ்சிக்க தவறிட்டேன். உன் மேல கரும்புள்ளி வந்திருமோன்னு பயத்தில் அப்படி நடந்துகிட்டேன். ப்ச் உனக்கு விவரம் புரிஞ்ச பிறகு என்கிட்டேயே வந்திருக்கலாமே ராசா… ஏன் அம்மா அப்படி செய்தேன்னு என்னை நாலு வார்த்தை திட்டிட்டு இங்கேயே இருந்து உன்னோட கோபத்தை காண்பிச்சிருக்கலாமே? அப்போதாவது இந்த மனசு கொஞ்சம் ஆறியிருக்கும். நீ அப்படி போனதும் உன் நினைப்பு தான் எப்போதும். புள்ளை மனசை புரிஞ்சிக்காம வஸ்ஸிட்டோமே… எவ்வளவு மனசொடிஞ்சிருந்தா வீட்டை விட்டே போயிருப்பான்னு நினைச்சு அழுகாத நாளில்லை… நாம இங்க மூணு வேலை சாப்பிடும் போது அவனுக்கு சரியா சாப்பாடு கிடைக்குதா… எங்க போய் கஷ்டப்படுறானோ… நேரத்துக்கு தூங்குறானா… உடம்பு சுகமா இருக்கான்னு தெரியாம தவிச்சி போயிட்டோம்… ராவெல்லாம் தூக்கமே வராது… இப்போ நீ வந்துட்டீல்ல இனி நீ எங்கேயும் போகக்கூடாது…” நீலாவின் அன்புக் கட்டளைகள் அவனை உருகச் செய்ய, கசங்கிய முகத்தினில் முறுவல் மெல்ல எட்டிப்பார்த்தது.
“வேலைக்கு போகலாமா இல்லை இப்படியே உன் மடியில இருந்துடவா?” என்று விழியை உயர்த்தி குறும்பாய் கேட்க, தச்சனின் முகச்சாயல் அவனிடத்தில் அச்சுபிசகாமல் பிரதிபலித்தது.
அதை ரசித்தபடியே, “இப்படியே இருந்துடேன்…” என்று நீலாவும் அவன் முகம் வருடிச் சொல்ல, அவரின் அடுத்த மகனுக்குத் தான் காதில் புகை வந்தது.
‘நான் மடியில படுத்தா மட்டும் ஏழு கழுதை வயசாகிடுச்சு இன்னும் மடியில படுக்குறேன்னு இந்த நீலா திட்டி கீழ தள்ளிவிடும். இப்ப எப்படி பேசுது பாரு…’ என்று தச்சன் முனுக, அவனருகில் இருந்த திவ்யா கூட அவனை கண்டுகொள்ளவில்லை.
“இவ்வளவு நாள் எங்கடா இருந்த? இந்த பக்கம் தான் இருந்தியா? உன்னை பக்கத்துல வச்சிகிட்டே நாங்க தான் உன்னை விட்டுட்டோமா… நீ என் எதிரில வந்தப்போ கூட உன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இந்த அப்பனும் வேண்டாம்னு நீ முடிவு பண்ணது சரிதான்… நீ நேரில் வந்தும் எனக்கு உன்னை அடையாளம் தெரியாம போச்சேடா… என் ரத்தத்தையே எனக்கு தெரியலையே… எந்த அப்பனுக்கும் இந்த நிலை வரக்கூடாது.”
“ப்பா… விடுங்க… நான் இங்கிருந்து போனப்போ அஞ்சு வயசு இப்போ முப்பத்திரண்டு… எவ்வளவோ மாற்றங்கள் வந்திருக்கு, என் முகமும் மாறிடுச்சு. அதுதான் உங்களால கண்டுபிடிக்க முடியல…” என்று ராஜராஜன் சமாதானப்படுத்த, மனம் தாளவில்லை அன்பரசனுக்கு.
“அம்மா சரியா பேரனை கண்டுபிடிச்சாங்களே எனக்குத் தான் என் பிள்ளையை தெரியல… அவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன்.”
“என்ர அப்பா மாதிரி இருக்கான் என் பேரன்! அவனை எனக்கு அடையாளம் தெரியாம போயிடுமா! நீ என் அப்பாவை பார்த்ததில்லையே அதுதான் உனக்கு அடையாளம் தெரியல அன்பு. கண்டதையும் நினைச்சு மனசை வருத்திக்காம உன் புள்ளை வீடுவந்து சேர்ந்த சந்தோசத்தை கொண்டாடு.” என்று மங்களம் மகனை அமைதிப்படுத்த, திவ்யாவுக்குத் தான் இருப்பு கொள்ளவில்லை.
“உங்களுக்குள்ள பேசுறதை நிறுத்திட்டு எதையெல்லாம் மறைச்சி வச்சிருக்கீங்ளோ அதை வரிசையா சொல்றீங்களா இல்லை நான் கிளம்பவா? என் வீடு என் அப்பா, அம்மா, அண்ணன் தான் எனக்கு பலம்னு நினைச்சிட்டு இருந்தேன்… என்கிட்டேயே சொல்லாம மறைச்சிட்டீங்கள்ள… போங்க… நீங்க எல்லோரும் ஒண்ணா இருங்க. நான் போறேன். திட்டுனாலும் கொண்டாடினாலும் என் மாமியார் கூட என்கிட்ட எதையும் மறைக்க மாட்டாங்க. ஆனா நீ மறைச்சிட்ட தானே…” அனைவரையும் பார்வையால் வறுத்தெடுத்த திவ்யா இறுதியில் நீலாவிடம் குற்றம்சாட்டும் பார்வை ஒன்றை வீசிவிட்டு கலங்கிய விழிகளை துடைத்துவிட்டு எழ, ராஜராஜனும் பட்டென எழுந்து இரண்டே எட்டில் அவளை நெருங்கி அவள் கையை பற்றி தடுத்தான். 
“ஹே… எப்போவும் யார்கிட்டேயும் கோச்சிக்கிட்டு கிளம்பக் கூடாதுமா. அவங்க சொல்லாம விட்டிருந்தால் அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். கோபம் வந்தா இங்கேயே இருந்து சண்டை போடு. நீ இப்படி போறது சரியில்லை.” என்று ராஜராஜன் பரிவாய் சொல்ல, திவ்யா ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்து நின்றாள். 
ஏதாவது சொல்லுவாள் என்று ராஜராஜனும் காத்திருக்க, திவ்யாவின் மெளனம் அவனை வெகுவாய் சோர்வடையச் செய்தது.
“என்கூட பேசமாட்டியா?”
“நீங்களும் என்கூட பேசலையே. என்கிட்ட தான் உங்களை பத்தி சொல்லாமல் மறச்சிட்டாங்க. ஆனால் உங்களுக்கு என்னை தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. அப்படியிருந்தும் நீங்க என்கூட பேசல… என்னை நிமிர்ந்து ஆர்வமா பார்க்க கூட இல்லை. அம்மாவும் அப்பாவும் மட்டும் உங்களுக்கு போதும்னு நினைக்குறீங்க. அவங்களும் உங்களை கொண்டாடுவாங்க.”
“என்னடி பேச்சு இதெல்லாம்… அண்ணன்கிட்ட இப்படித்தான் பேசுவீயா? மரியாதை கொடுத்து பேசு.” என்று நீலா அதட்ட, 

Advertisement