Advertisement

“உன்னை மாதிரியே யோசிச்சு என்னால தச்சனா வாழ முடியாது. குந்தவை என்னைக்குமே குந்தவை தான். ஆனால் உனக்காக… நான் சிலதை ஏத்துக்க முயற்சி பண்றேன். நீ என்னோட மூச்சுக்காற்று மாதிரி. அவசியமானது. அதே மாதிரி உன்னோட மனநிம்மதியும் மரியாதையும் எனக்கு முக்கியம். அதுக்கு பணம் வேணும். பாசத்தை மட்டும் வச்சிட்டு சாப்பிட்டு வாழ முடியாது. நாளைக்கு நம்ம பசங்களுக்கு தரமான படிப்பையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரணும். நமக்கே நாளைக்கு வயசாகும் ஆரோக்கியம் குறையும் அதை சரிபண்ண பணம் தேவைப்படும். பணத்தை குறைச்சு எடை போட்டுறாத. அது இருந்தா தான் இப்போ வயிற்றை நிரப்ப முடியும். அதுல நீ அலட்சியமா இருக்க. அதுதான் எனக்கு கோபம் வருது…”
“சரிங்க அம்மையாரே… தங்கள் சித்தமே இனி இந்த அடியேனின் சித்தம். நானே வியர்வை சிந்தி உழைச்சி சம்பாரிக்குற காசுல உங்களுக்கு போன் வாங்கிக் கொடுக்கிறேன். அதுவரை என்னோட பழைய போன் ஒன்னு டீவி செல்ப்பில் இருக்கு. அதை எடுத்துக்கோங்க. இல்லைனா இப்போ நான் யூஸ் பண்ற போன் வேணும்னாலும் எடுத்துக்கோங்க.” என்று தீவிரமாய் கூற, அவன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள் குந்தவை.
“இப்போ தான் என் புருஷன் உருப்படியா ஒன்னை ஒத்துகிட்டு சரியா யோசிச்சி இருக்கான்.”
“அடியேய்… நீ சொன்னதாலத் தான் இப்ப தம் கூட அடிக்கிறது இல்லை… இனி தண்ணியும் கிடையாது. பசங்க எல்லாம் பொண்டாட்டிக்கு பயமான்னு கிண்டல் பண்றானுங்க.”
“கிண்டல் பண்றாங்கன்னு மறுபடியும் சிகரெட், குடின்னு உன்னை பார்த்தேன் தொலைச்சிடுவேன் படவா…”
“நீ என்னை தொலைச்சாலும் நான் உன்னை தேடி வந்துடுவேன்டி என் பிரியாணி…” என்று சொல்லி அவள் இதழை கவ்வ, அவனை தள்ளிவிட்டு எழுந்தாள் குந்தவை.
“பல்லு விளக்கிட்டு குளிடா தடிமாடு…” என்று சிரித்துவிட்டு ஓடினாள் குந்தவை.
“ஓய் பொண்டாட்டி… நீ குளிப்பாட்டி விடுடி…” என்று அவனும் சிரித்துக்கொண்டே அவளை துரத்திச் செல்ல, நடுவில் அவன் கால்களை பிடித்துக்கொண்டான் அறிவழகன். அவனையும் வாரி அள்ளிக்கொண்டு மனைவியை கேலி செய்யக் கிளம்ப, இருவரின் தெளிந்த முகத்தை பார்த்தபின் தான் அங்கிருந்த பெரியவர்களுக்கு மனம் நிறைந்தது.
“இப்போ தான் ரெண்டு பேரு முகமும் தெளிஞ்சிருக்கு. இனி பிரச்சனை இருக்காது பாரு…” என்று மங்களம் மருமகளிடம் சொல்ல, நீலா ஆமோதிப்பாய் தலையசைத்தார்.
“நீங்க சொல்றபடியே இருந்தா எல்லோருக்கும் சந்தோசம் தானே… விருந்துக்கு என்ன சாப்பாடு போடுறதுன்னு லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன். அது சரியா இருக்கான்னு பாருங்க. எதாவது விட்டிருந்தா சொல்லுங்க சேர்த்திடுவோம்…” என்று சொல்லி லிஸ்டை எடுத்துவந்து கொடுக்க, அதை சரி பார்த்துவிட்டு தச்சனிடம் என்னென வாங்கச் சொல்ல வேண்டும் என்று அதற்கு தனி லிஸ்ட் போட்டனர். விருந்தின் பரபரப்பில் தச்சனை அழைத்து வந்து விட்டவனைப் பற்றி மறந்தே போயிருந்தனர்.
வெள்ளியன்று கடைசி பரீட்சைக்கு குந்தவையை கல்லூரியில் விட்டுவிட்டு மார்க்கெட்டில் தேவையானவற்றை சனியன்று வீட்டிற்கு லோட் இறக்க சொல்லிவிட்டு வந்திருந்தான் தச்சன். 
வீட்டில் சனி பிறந்ததும் உறவினர்களின் வருகை ஒற்றை இலக்கத்தில் அதிகரித்த வண்ணம் இருக்க, காய்கறி, வெற்றிலை, வாழை எல்லாம் எப்போது வந்திறங்கும் என்ற யோசனையில் அமர்ந்திருந்தார் அன்பரசன். அவர்களது ஊரில் விருந்தே திருவிழா போல களைகட்டும். வாழை முதல் தோரணம் வரை அனைத்தும் வாயிலில் கட்டப்பட்டு ரகளையாய் இருக்கும். திண்ணைக்கும் வெளிக்கதவுக்கும் இடையே இரண்டு கார் தாராளமாய் நிற்கும் அளவுக்கு இடம் இருப்பதால் சாமியானா பந்தல் போட்டு அங்கேயே உணவு பரிமாற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அதை மேற்பார்வை பார்த்தபடி இருந்தார் அன்பரசன். 
“காய்கறி எல்லாம் ஒழுங்கா கொண்டு வந்து போட்டுருவாங்க தான தச்சா? உன் பிரண்டுன்னு தான் உன்னை நம்பி பொறுப்பை ஒப்படிச்சிருக்கேன்.” என்று அன்பரசன் கேட்கவும், 
“நம்பிக்கை இல்லாதவரு எதுக்கு என்கிட்ட சொல்லணுமாம்… நீங்களே செய்ய வேண்டியது தானே…” என்று முறுக்கினான் தச்சன். 
“சரியான நேரத்துக்கு கொண்டு வந்து போட்டுடுவாங்கன்னு நேரா சொன்னா முத்து உதிர்ந்திடுமோ…” என்று அன்பரசனும் பதிலுக்கு வம்பு வளர்த்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்திருக்க, இரும்புகேட்டின் மறுபுறம் மாருதியின் செல்ல லோடு வண்டியான குட்டியானையின் ஹார்ன் சத்தம் கேட்டது. 
“சும்மா தானே உட்கார்ந்திருக்க. போய் திறந்து விடுடா… உன் பிரென்ட் எவனாவது வந்திருப்பான்… போ…” என்று தச்சனை உந்தினார் அன்பரசன்.
அவரிடம் சலித்துக்கொண்டு எழுந்து சென்று இரும்புகேட்டை திறந்துவிட்டான். காய்கறிகள், வாழை மரம் என்று அதன் பின்புறம் முழுதும் பச்சைகள் நிரம்பி வழிந்தபடி அந்த மாருதி உள்ளே நுழைய,
“தோ… சரியான நேரத்துக்கு வந்துடுச்சுல்ல…” என்று மிதப்பாய் அன்பரசனைப் பார்த்தான் தச்சன்.
“வண்டியை கொல்லைக்கே விட்டு அங்க இருக்குற ரூமில் இறக்கிடுங்க…” என்றுவிட்டு வேலை முடிந்தது என்பது போல அவர் நகர்ந்துவிட்டார்.
தச்சன் அவர் சொன்னபடியே வண்டியை உள்ளே விடச் சொல்லி வீட்டின் பின்புறம் இருக்கும் ஸ்டோர் ரூமை அந்த டிரைவரிடம் காண்பிக்க, டிரைவர் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவன் ஒருவித ஆர்வத்தோடு சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான்.
“அண்ணன் வாழையையும் இங்கேயே இறக்கிடவா?” என்று அந்த ஓட்டுனன் தச்சனிடம் கேட்க, அவனை முந்திக்கொண்டு பதில் சொன்னான் அருகில் அமர்ந்திருந்தவன்.
“அதை நாமலே வெளில கட்டிருவோம்டா… இங்க வச்சா வாடிடும்…”
அப்போது தான் அவனை கவனித்த தச்சன் புருவம் சுருக்கி, “நீங்க? நீங்கதானே அன்னைக்கு லாரில வந்தது?” அதில் தடுமாறியவன் சங்கடமாய், “நல்ல நியாபக சக்தி உனக்கு.” என்றான்.
“புகழாதீங்க பாஸ்… இன்னும் என்ன வண்டிக்குள்ளேயே உட்கார்ந்து இருக்கீங்க… கீழ இறங்குங்க. என்னை சேதாரம் இல்லாம வீட்டுல சேர்த்திருக்கீங்க… அதுக்கே உங்களுக்கு ஒரு பெரிய விருந்து வைக்கணும். நீங்க சுதாரிக்காம இருந்திருந்தா என் பொண்டாட்டி உங்களை கொன்னிருப்பா… நீங்க வாங்க என்கூட…” என்று வலுக்கட்டாயமாக வண்டிக் கதவைத் திறந்து ராஜராஜனை கொல்லை வழியாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் தச்சன்.
“ஹேய்… என்ன பண்ற நீ? நான் வேலை முடிச்சிட்டு சீக்கிரம் போகணும்… வீட்டுக்கு வந்தா லேட் ஆகிடும்.” என்று கையை உருவப்பார்த்த ராஜனை எப்படியோ வீடு முற்றம் வரை இழுத்து வந்திருந்தான் தச்சன்.
“அம்மா… குந்தவை…” என்று அழைக்க அவர்கள் வந்தபாடில்லை. ‘எங்க தான் போனாங்கனு தெரியல இந்த ரெண்டு பேரும்…’ என்று தச்சன் முணுமுணுக்க, வேகமாய் அடுப்பறையில் இருந்து வெளியே வந்தாள் வானதி.
“அத்தை, அம்மா, குந்தவை எல்லோரும் கொல்லையில் மருதாணி பறிக்க போயிருக்காங்க.”
“ஓ… கொல்லை கடைசியில் இருந்திருப்பாங்க போலிருக்கு. சமைக்க கொட்டகை போட்டதில் அவங்க அங்க இருந்ததே தெரியல… திவ்யா எங்க?”
“திவ்யா அண்ணி அண்ணன் கூட போனில் பேசிட்டு இருக்காங்க…” என்று அதுவரை பவ்யமாய் பதில் சொன்ன வானதி, ராஜராஜனை பார்த்ததும் திடுக்கிட்டு நின்றாள்.
“பாஸ்… நீங்க உட்காருங்க. என் பொண்டாட்டி உங்களுக்கு நன்றி சொல்லனும்னு சொல்லிட்டு இருந்தா… இதோ கூட்டிட்டு வந்துறேன்.” என்று ராஜனை அமரவைத்தவன் வானதி புறம் திரும்பி, “இவருக்கு குடிக்க ஜூஸ் போட்டு கொடுங்க… வீட்டுக் கொலையில் டிரைவர் காய்கறி இறக்கிட்டு இருக்கான் அவனுக்கும் சேர்த்து கொடுத்துடுங்க. நான் குந்தவையை கூட்டிட்டு வரேன். பசங்க எங்க சத்தத்தையே காணோம்?”
“குந்தவை கூட இருக்காங்க.” தச்சனை விரட்டினால் போதும் என்ற எண்ணத்தில் வானதி அவசரமாய் பதில் சொல்ல, தச்சனும் அவசரமாய் வெளியேச் சென்றான்.
தச்சன் வெளியேச் சென்ற நேரம் ராஜனும் வெளியேற எழுந்திருக்க, வானதியும் அவனை வேகமாக நெருங்கினாள்.
“நீங்க இங்கிருந்து சீக்கிரம் கிளம்பிடுறீங்களா? தப்பா நினைக்காதீங்க… இங்க பெரியவங்களுக்கு அவர் லாரில விழுந்தது தெரியாது… தெரிஞ்சா வருத்தப்படுவாங்க… என் தங்கச்சிக்கும் பிரச்சனை ஆகிடும்.” என்று இறைஞ்ச, அவளை இன்னும் விசித்திரமாய் பார்த்தான் ராஜராஜன்.
“உண்மையை மறைக்கிறது தாங்க பிரச்சனை. உங்க தங்கச்சி வீட்டுக்காரரே என்னை நியாபகம் வச்சி வீட்டுல அறிமுகப்படுத்த கூட்டிட்டு வரும் போது நீங்க கேக்குறது உங்களுக்கே அபத்தமா இல்லையா? நீங்க தேவையில்லாம ரொம்ப பயந்து போயிருக்கீங்க. அன்னைக்கும் நான் தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசும் போது குறுக்கிட்டு என்னை தடுக்காம அப்படியே ‘பே’ன்னு பார்த்துட்டு நின்னீங்க. இந்த பொண்ணு திட்டுனத்துக்கா அவன் குடிச்சான்னு நினைச்சேன்.” என்று பேசிக்கொண்டே சென்றவன் அதிகப்படியாய் பேசுகிறோம் என்று உணர்ந்த நொடி பின்வாங்கினான்.
“உஃப்… மன்னிச்சிடுங்க அன்னைக்கு பேசுனதுக்கும், இப்போ பேசியதுக்கும்… நான் கிளம்புறேன்.” என்று ராஜன் கிளம்ப,
மென்குரலில், “தேங்க்ஸ்,” என்றாள் வானதி.
ஓரடி எடுத்து வைத்தவன் அப்படியே திரும்பி, “எதுக்குங்க?” 
“இல்லை… நான் சொன்னதும் கிளம்பிட்டீங்க… அதுக்கு தேங்கஸ்.” என்று வானதி சொல்ல புன்முறுவல் உதிர்த்தான் ராஜராஜன்.
“நீங்க சொன்னதால கிளம்புறேன்னு தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க… எனக்கு வேலை இருக்குங்க அதுதான் கிளம்புறேன்.” என்றான் தெளிவாய்.
“எல்லாம் ஒண்ணுதான்…” என்று பல்லை கடித்தாள் வானதி.
“அதெப்படி ஒன்னாகும்? நீங்க சொன்னதால நான் கிளம்பியிருந்தால் உங்க பொய்யுக்கு நான் துணை போகிற மாதிரி ஆகிடும். ஆனால் இப்போ நானாகத் தான் கிளம்புறேன். உங்க வேண்டலுக்கு நான் செவி சாய்க்கல…” என்று விளக்கம் கொடுக்க,
‘சரியான காட்டான் எப்படி பதில் சொல்றான் பாரு… டீசன்ட்டா பல்ப் கொடுக்குறான். உனக்கு இது தேவையா வானதி.’ என்று மனதுக்குள் அவனுக்கும் அர்ச்சனை கொடுத்து தன்னையும் திட்டிக்கொண்டாள் வானதி.
“அப்போ நான் கிளம்புறேங்க.” என்று ராஜன் மீண்டும் சொல்லிவிட்டு கிளம்ப, திடுமென எதிரே வந்த அன்பரசனை அருகில் கண்டு திகைத்து நின்றுவிட்டான்.
அவரும் அவனைப் பார்த்து புருவம் சுருக்கி, “தச்சன் பிரெண்டா?” என்று கேட்க, ராஜனுக்கு புஸ்சென்றானது…
அவன் ஆமாம் என்று தலையசைக்க, அன்பரசனின் பார்வை இன்னும் கூர்மையானது, “உன்னை பார்த்த மாதிரி இருக்கு ஆனா நியாபகம் வரமாட்டேங்குதே… பரிட்சையமான முகமா இருக்கு… எந்த ஊருப்பா நீ?” என்று ஆராய்ச்சியில் அவர் இறங்க இப்போது திக்கென்று இருந்தது ராஜனுக்கு. 
அவனுக்கு என்ன உணருவது, எதை எதிர்பார்ப்பது என்றே புரியவில்லை. ஆரம்பத்தில் அன்பரசன் அவனை அடையாளம் காணத் தவறியது வருத்தமாய் இருந்தாலும், குற்றவுணர்வு கொண்ட அவன் புத்தி அதை ஏற்றுக்கொண்டு நிம்மதியடைந்தது. இப்போதோ அன்பரசன் பார்த்த முகம் போல இருக்கு என்று சொல்லவும் உணர்ச்சிகள் அனைத்தும் உல்டாவாக மாறியது.
“என்ன தச்சன் பிரெண்டா இருந்துகிட்டு வாயே திறக்க மாட்டேங்குற?” என்று அவர் மேலும் துருவ, ராஜனின் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது. 
“நா… நான் கிளம்புறேன்.” என்று எப்படியோ வார்த்தையை கோர்த்து ராஜன் சொன்னாலும் அவன் குரல் மெல்லமாகவே ஒலித்தது.
“நாளைக்கு விருந்துக்கு மறக்காம வந்துடனும்…” என்று அன்பரசன் தணிவாய் உத்தரவு போலச் சொல்ல, ராஜனின் மண்டை தானாய் சம்மதமாய் ஆடியது. 
“ஐயா ராசா… இவ்வளவு தூரம் வந்துட்டு யாரோ மாதிரி திரும்பப் போறீயே… அடியே நீலா… இப்போன்னு பார்த்து எங்கப் போன… இங்க பாரு உன் புள்ளை உன்னைத் தேடி வந்துட்டான்.” என்ற கூக்குரலில் ராஜன் திகைத்து நின்றுவிட்டான்.
அன்பரசன் மூச்சுவிடுவே மறந்து கால்கள் தள்ளாட, தொய்ந்து அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.

Advertisement