Advertisement

*17*
போதையில் கூர்மையை இழந்து அங்குமிங்கும் அலைபாயும் விழிகளுடன் தச்சன் கால்களை ஆட்டிக்கொண்டு மெத்தையில் படுத்திருக்க, அவன் சட்டை பொத்தான்களை கழற்றிக் கொண்டிருந்தாள் குந்தவை. போதையை தெளியவைத்த பின்தான் அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அன்பரசன் கறாராய் நிற்க, நீலாவுக்கோ வானதி, குந்தவை முன்னர் அவர் தச்சனைக் கடிந்துகொண்டது துளியும் பிடிக்கவில்லை. ஏற்கனவே குந்தவை ம் என்றால் வரிந்துகட்டிக் கொண்டு சண்டைக்குச் செல்கிறாள் இதில் பெற்றவரே அவனை அவள் முன் வைதால்… அவனை மதிப்பாளா… அவனை இன்னும் தானே ஏசுவாள்… என்ற எண்ணம் வலுபெற அன்பரசன் சொன்னதையெல்லாம் காதிலே வாங்கவில்லை அவர். 
நேரே அவனை அறைக்கு கூட்டிவந்து மெத்தையில் படுக்கவைத்துவிட்டு குந்தவையிடம் அவனை தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதெப்படி அவர் அதைச் சொல்லலாம்? அவங்க பையனை நான் என்ன தொந்தரவு செய்திடப் போகிறேன்… என்ற சுணக்கம் குந்தவைக்கு ஏற்பட்டாலும் அதை புறந்தள்ளிவிட்டு தச்சனிடம் கவனத்தைப் பதித்தாள். கசங்கியிருந்த அவனது மேல்சட்டையை முழுதாய் நீக்கிவிட்டு ஒருநிலையில் இல்லாமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தவன் தாடையை பிடித்து தன் புறம் திருப்பினாள் குந்தவை.
“என்னடா பண்ணிட்டு வந்திருக்க? யாரைக் கேட்டு குடிச்ச? என் பேச்சை கேட்கக்கூடாதுன்னே முடிவு பண்ணிட்டீயா?” வருத்தமும், எரிச்சலும் பன்மடங்கு இருந்தாலும் அவனிடம் இப்போது அதை வெளிப்படுத்த முடியாத சூழலில் சற்று தணிந்தே பேச்சு கொடுத்தாள் அவள்.
“நீதானே சொன்ன… வேற என்னனென பழக்கம் இழுக்கோ அதையெல்லாம் ஒன்னா சொல்லிடுனு… உன் பேச்சை கேட்டாலும் டிட்டுற கேட்கலைன்னாலும் என்னையே டிட்டுற நீ…” என்று அவன் முகத்தை சுழிக்க, அவளது பொறுமையெல்லாம் காற்றில் பறக்க தயாராய் இருந்தது.
“டேய்… நடிக்காத… சொல்லச் சொன்னா குடிக்குற பழக்கம் இருக்குனு நீ சொல்லியிருக்கனும் ஆனால் நீ அதை செஞ்சிட்டு வந்திருக்க…” என்று குந்தவை முறைக்க, தச்சன் கை உயர்த்தி அவள் கன்னத்தில் கோடிட்டிட்டான்.
“நீ டிட்டுனீயா அதுதான் குச்சேன்.”
அவன் கையை தட்டிவிட்டவள், அவனை முறைத்தபடியே தான் நின்றாள். “திட்டுனா அதை திருத்திக்க பார்க்கணும். அதை விட்டுட்டு இன்னொரு தப்பை பண்ணிட்டு வந்திருக்க… இப்போவும் திருந்துற யோசனை கிடையாது அதுதானே?”
“போ… நீ எப்போதும் டிட்டிட்டே இருக்க…”
“நீ பண்ற வேலைக்கு உன்னை கொஞ்சுவாங்களா? குடும்பம்னு ஆகிட்டு இன்னமும் விவரம் புரியாம தானே இருக்க?” என்று அவள் கடிய, அவனோ பட்டென்று அவள் கையை பிடித்துக்கொண்டான்.
“கொஞ்சேன்… நான் கொஞ்சலைன்னு மட்டும் சொல்ற… நீயும் என்னை கொஞ்ச மாட்டேங்குற.” என்று ஏக்கமாய் உரைத்தவன் தடுமாறி எழுந்தமர்ந்து முகத்தை அவளருகில் கொண்டு போக, அவன் கன்னத்தை பிடித்து மறுபுறம் திருப்பினாள் குந்தவை.
“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… விழுந்துட்டேன்னு சொன்ன… எங்க விழுந்த? எப்படி விழுந்த?” என்று பேச்சை திசைதிருப்பி அவனை ஆராய, 
“லாரில மோதி… விளுண்டுட்டேன்.” என்றான் சாவுகாசமாய். அவளுக்குத்தான் பக்கென்றிருந்தது.
“என்ன? லாரில மோதுனீயா?” என்று பதறியவள் அவன் கை கால்களை தடிவிப்பார்த்து அவனுக்கு பெரிதாய் எதுவும் ஆகவில்லை என்பதை மனதில் பதியவைக்க முயன்றாலும், ஐயம் சூழ்ந்துகொண்ட மனம் அமைதியடைய மறுத்தது.
“மோதிடுச்சுன்னு இவ்வளவு சுலபமா சொல்ற… ஏன்டா இப்படி பண்ணி என்னை டென்ஷன் பண்ற? லாரில மோதின வேகத்துக்கு ஏதாவது விபரீதமா நடந்திருந்தா… நான் திட்டுனா நீயும் திரும்ப திட்ட வேண்டியதுதானே… அதை விட்டுட்டு இன்னைக்கு தான் நான் புதுசா திட்டுன மாதிரி குடிச்சிட்டு வந்திருக்க? என்னை பத்தி யோசிக்கவே மாட்டீயா நீ? நீ இல்லாம நான் என்னடா பண்ணுவேன்… குடிச்சிட்டு உன்னை யாரு வண்டி ஓட்டிட்டு வரச்சொன்னா? ஏடாகூடமா எதுவும் ஆகியிருந்தா? ஏன் திரும்பத் திரும்ப நான் பயப்படுற காரியத்தையே பண்ணி வைக்குற? என்னால இன்னொரு வானதியா இருக்க முடியாது… அந்த இழப்பை தாங்குற சக்தியும் எனக்கில்லை…” ஐயத்தில் தேம்பலுடன் வந்து விழுந்த வார்த்தைகளுக்கு இணையாய் அவளது கண்ணீரும் அடைபடாமல் கீழிறங்க, எப்போதும் திடமாய் இருக்கும் அவளது மனமும், உடலும் சட்டென சோர்ந்து நடுங்கியது. அவனுக்கு எதுவும் ஆகியிருந்தால் என்ற நினைப்பே அவளது நேர்மறை தைரியங்களை அடித்து துவம்சம் செய்துவிட, அவள் அவளாகவே இல்லை. தள்ளாட்டத்துடன் கீழே கால் மடித்து அமர்ந்துவிட்டாள். 
எண்ணங்களில் முதிர்ச்சி அடைந்த பெண்தான் என்றாலும் வானதியின் நிலையைக் கண்டு அவளைப் போலவே நெருக்கமானவரை இழுந்து விடுவோமோ… என்று ஆழ்மனதில் பதிந்திருந்த தேவையற்ற பயம்தான் துவக்கத்தில் தச்சனை வேண்டாம் என்று சொல்ல வைத்தது. திருமணம் முதல் அவனது பழக்கவழக்கங்கள் வரை அனைத்துமே அவள் கையை மீறி நடந்திருக்க, இப்போதும் அவள் அஞ்சியது போலவே விவசாயத்தில் இழப்பு என்று மாமியார் மூலம் தெரிந்தவுடன் சட்டென அவள் அகத்தில் வந்து போனதேல்லாம் வானதியின் இடத்தில் அவள் நிற்பது போலத்தான். அதன் தாக்கம் தச்சனிடம் கடுஞ்சொற்களாய் பிரதிபலித்துவிட, அவனோ குடித்துவிட்டு லாரி முன் விழுந்து வந்திருக்கிறான். இறுதியில் அவள் ஐயமே நடந்தேறியிருக்க, திடமெல்லாம் விலகி உடல் உதறல் எடுத்து நடுங்கியது.
திடத்திற்கு பின் ஒளிந்திருந்த அவளது பலகீனம் அவளையும் அறியாமல் வெளிப்பட்டுவிட, அதை சரிசெய்ய வேண்டியவனோ அதனை கிரகித்து செயல்படும் நிலையில் இல்லை. அவள் அழுகிறாள் என்பது மட்டும் புரிந்து கண்களை கசக்கிக்கொண்டு எழுந்தவன், தள்ளாடியபடியே கீழே இறங்கி அவள் எதிரில் பொத்தென்று அமருவது போல வந்து தடுமாறி விழுந்தான்.
“ஏய் என்ன பண்ற?” பதறிய குந்தவை அவனை நிமிர்த்தப் போக, அவள் கையை தட்டிவிட்டு அவள் மடியிலேயே தலைவைத்து படுத்துவிட்டான் தச்சன்.
விழியில் தேங்கிய நீருடன் குனிந்து தச்சனை பார்த்துக் கொண்டிருந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, வீடு வந்து சேர்ந்துவிட்ட திருப்தியில் அவள் இடையை கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் அவளது உறக்கத்தையும் சேர்த்தெடுத்துக் கொண்டு… குந்தவையின் விரல்கள் தானாய் அவன் சிகைக்குள் புகுந்துகொண்டது.
சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு பிழிந்தெடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த நீலா தச்சன் உறங்குவதை பார்த்து விட்டு அவனை தொந்தரவு செய்ய விரும்பாது திரும்பிச் செல்ல முயல, குந்தவை அமர்ந்திருந்த தொனி மனதை நெருடியது. என்ன நினைத்தாரோ தச்சனுக்கென்று எடுத்து வந்திருந்தததை குந்தவையிடம் நீட்டினார்.
“நீயும் சாப்பிடல தானே? இதை குடிச்சிட்டு தூங்கு. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. தூங்கி எழுந்ததும் அவன் வேலையை ஆரம்பிச்சுடுவான்… அப்புறம் இதுக்கா அழுதோம்னு நீதான் வருத்தப்படுவ…” என்று தணிவாய் சொன்னவர் அவள் பதிலுக்குக் காத்திராது வெளியேற, வாயிலில் தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்தாள் வானதி.
“அத்தை சாப்பாடு எடுத்து வைக்கவா?”
“வேண்டாம் நான் பார்த்துக்குறேன்…” என்றுவிட்டு சென்றுவிட்டார்.
வானதி வெளியேறாமல் அங்கேயே நின்றாள். அதை கவனித்த குந்தவை கண்களை துடைத்துக்கொண்டு அவளை பார்ப்பதை தவிர்த்து, தொங்கிக் கொண்டிருந்த தன் துப்பட்டாவை தச்சனின் உடலில் போர்த்திவிட்டாள். “என்னடி இங்கேயே நிக்குற? பசங்கள போய் பாரு… போகும் போது கதவை சாத்திட்டு போ…”
தன்னை தவிர்க்கும் தங்கையை குறுகுறுவென பார்த்தவள் தான் நினைத்ததை சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்புடன், “நீ ஏன்டி இப்படி இருக்க? உனக்கு அமைஞ்சிருக்கிற வாழ்க்கையை நீயே ஏன் கெடுத்துக்குற? வாயைக் குறைடி… நேர்மையா இருக்கேன் அதுஇதுன்னு சொல்லி இருக்குறதை இழந்துடாத. நீ திட்டிட்டேனு சொல்லி இன்னைக்கு குடிச்சவர் நிதானமில்லாம லாரில போய் மோதியிருக்காரு… ஏதோ நல்ல நேரம் சேதாரம் இல்லாம வீட்டுக்கு வந்துட்டாரு. மாறாக விபரீதம் நடந்திருந்தா உன் வாழ்க்கை என்னவாகியிருக்கும்னு நினைச்சாலே அடிவயிறு கலங்குதுடி. இனியாவது குறையை கண்டுபிடிக்காம கிடச்சதை தக்க வச்சிக்க. என்னை மாதிரி மூலையில முடங்கிடாத… அந்த வாழ்க்கை நரகம். அது உனக்கு வேண்டாம்.
நீ திட்டியதாலத் தான் இவ்வளவும் நடந்ததுன்னு இன்னும் இங்க யாருக்கும் தெரியாது. தெரியாம இருக்குறது தெரியாமலேயே பார்த்துக்க… வீட்டுல தெரிஞ்சா அதுவும் பிரச்சனை ஆகும். அத்தை உன்மேலத் தான் கோபப்படுவாங்க. உயிர் பிழைச்சு வந்திருக்காரு… இனி எல்லாமே உன் கையில தான் இருக்கு.” என்று குந்தவையின் பயத்தை கீறிவிட்டுச் சென்றுவிட, மட்டுப்பட்டிருந்த அழுகை மீண்டும் முட்டிகொண்டு வந்தது.
“நான் தான் உன்னை கொடுமை பண்றேனா? உனக்கு இம்சை கொடுக்கிறேனா? சும்மா வாழ்ந்தோம்னு இல்லாம நல்ல பழக்கங்களோடும் பேரு புகழோடும் அடுத்தவங்களுக்கு எடுத்துக்காட்டா மரியாதையோட நீ இருக்கணும்னு நினைச்சு தானே எல்லாமே சொல்றேன்… அப்புறம் ஏன் நீ, அக்கா, அம்மான்னு எல்லோரும் என் ஆசை தப்புங்குற மாதிரியே பேசுறீங்க? உடம்புக்கும் மனசுக்கும் எதெல்லாம் தீங்கோ அதெல்லாம் செய்யுற. நீ நல்லாயிருந்தா நானும் நல்லாயிருப்பேன், நம்ம குடும்பமும் நல்லாயிருக்கும். அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது? ஏட்டிக்கு போட்டியாய் செஞ்சிட்டு இருக்க. ஏற்கனவே அடுத்து நான் என்ன செய்யுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்… இப்போ நீயும் இப்படி பண்ற…” அவளது புலம்பல்கள் அனைத்தும் சுற்றியிருந்த நான்கு சுவருக்குள் சென்று மறைந்துவிட, தச்சன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.
***
“என்ன நடந்தது வீட்டுல? எதுக்கு அவன் குடிச்சிட்டு வந்தான்?”
“இதென்ன கேள்வி… அவனுக்கு தோணியிருக்கும் குடிச்சிருப்பான்.”
“என்கிட்ட எதை மறைக்கணும்னு நினைச்சாலும் முடியாதுன்னு உனக்கே தெரியும் நீலா. அந்த பய அடிக்கடி தம்மடிப்பான் ஆனால் ஏதாவது விஷேசம் நடந்தா மட்டும் தான் குடிப்பான். இன்னைக்கு இந்த ஊரில எந்த வீட்டிலும் விஷேசம் கிடையாது. முன்ன மாதிரி வெட்டிப் பசங்க கூடவும் இப்போ இவன் சுத்துறது கிடையாது. அப்புறம் திடீர்னு என்ன ஆச்சு இன்னைக்கு?” என்று அன்பரசன் கிடுக்கிபிடி போட, நீலா மாலை நடந்ததை சொன்னார்.
“நான் எப்போதும் போலத்தான் சொன்னேன். அவனும் எப்போதும் போல அலட்டிக்காம பதில் பேசி காசு வாங்கிட்டு போயிட்டான்.”
“நீ ஏன் இவ்வளவு கடினமா பேசுன? பொறுமையா சொல்ல வேண்டியது தானே… நீ சொன்னா கேட்காமலேயே போயிடுவான்.”
“வெளில அவனை அந்த முறை முறைச்சீங்க. இப்போ உங்க புள்ளையை நான் திட்டிட்டேன்னு என்கிட்ட பாயுறீங்க…” என்று நீலா கேட்டேவிட, அன்பரசன் முகம் கனிந்தது.
“எப்போதும் நான் தான் அவனை ஏதாவது சொல்லிட்டே இருப்பேன், நீ சமாதனம் பண்ணி வைப்ப. இப்போ நீயே இவ்வளவு கடினமா பேசுனா அவன் தாங்குவானா… புள்ளை பாவம்டி. இப்போ தானே வேலை செய்யவே இறங்கி இருக்கான். அதோட ஒரு போகம் தானே முடிஞ்சிருக்கு… பழகப்பழக கத்துப்பான். விழுந்தா தான் எழ முடியும். இழப்பை சந்தித்தால் தான் வெற்றியோட இனிப்பு சுவையா இருக்கும். என்னால முடியுற வரை என் பசங்களுக்காக உழைச்சிட்டு போறேன். அதை ஏன் சொல்லிக் காண்பிக்கிற?”
“சரித்தான்… அப்பப்போ கால் வலிக்குது கை வலிக்குதுனு ராத்திரியில ஒரு கிழம் முனகிகிட்டு கிடக்கேன்னு அக்கறையில புள்ளையை கடிஞ்சிகிட்டா என்னையே குறை சொல்றீங்க… என்னமோ பண்ணுங்க.” என்று கழுத்தை வெட்டி நீலா முகத்தை திருப்பிக் கொள்ள, அவள் தலையை வாஞ்சையாய் தடவிவிட்டார்.
“அவன் எப்படி வீட்டுக்கு வந்தான்? யாரோ அவன் பக்கதுல நின்னுட்டு இருந்த மாதிரி இருந்துதே. வண்டி கூட வீட்டுக்கு வெளில தான் நிக்குது. அவனேவா வண்டி ஓட்டிட்டு வந்தான்?” என்று கேட்டுக்கொண்டே எழுந்தவர் மாட்டுக் கொட்டகையில் இருந்து வீட்டுக்கு வெளியே சென்றார்.
நீலாவும் அவரைப் பின்தொடர்ந்து, “யாரோ வந்து விட்டுட்டு போனாங்கனு நினைக்குறேங்க… தச்சா அப்படி வந்து நின்னுகிட்டு அம்மா விழுந்துட்டேன்னு சொல்லவும் படபடப்புல நான் கவனிக்கல.”
“நானும் கவனிக்காம விட்டுட்டேன்…” என்றவர் பெரிய இரும்புக்கதவை திறந்துகொண்டு வெளியே நின்ற வண்டியை ஆராய்ந்தார், “வண்டில சைட் லாக் போட்டு இருக்கே… தச்சன் கிட்ட சாவி இருக்கும் வாங்கிட்டு வா… உள்ள வைப்போம்.” என்றவுடன் நீலா தச்சன் அறைக்கு விரைந்தார். 
“குந்தவை தச்சன் சட்டையில வண்டி சாவி இருக்கானு பார்த்து எடுத்துக் கொடு. வண்டியை உள்ள வைக்கணும்.” என்று அவர் அறைக்கு வந்து இருமுறை குந்தவையிடம் கேட்டுவிட்டார் ஆனால் அவளிடமிருந்து பதில் வந்தபாடில்லை. ஏதோ யோசனையில் தச்சனையே பார்த்துகொண்டு அமர்ந்திருந்தாள்.
“குந்தவை உன்னைத்தான் கேக்குறேன். என்ன நினைப்புல இருக்க?” என்று அவர் நெருங்கி குந்தவையை உலுக்கவும் தான் தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல திடுமென நிமிர்ந்து உறுத்து விழித்தாள்.
“ஏதாவது வேணுமா அத்தை?”
புருவம் சுருக்கிய நீலா தணிவுடன், “என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு இப்போ கப்பல் கடல்ல மூழ்கின மாதிரி உட்கார்ந்திருக்க? ஜூசையும் குடிக்காம இருக்க… அவனுக்கு ஒன்னும் இல்லை. காலையில எழுந்திருச்சதும் எப்போதும் போல உன்கிட்ட வம்பு பண்ண கிளம்பிடுவான். அவனை சமாளிக்க வேண்டாமா நீ? உன்னை தைரியமான பொண்ணுனு நினைச்சேன். ஆனால் என்ன இப்படி இருக்க?”
“இல்லை… அது… நான் இவரை திட்டிட்டேன்…” என்றாள் மென்று விழுங்கி யோசனையினூடே. சாதாரண மனநிலையில் இருந்திருந்தால் இருவருக்குள் நடந்த பிணக்கை சொல்லியிருப்பாளோ என்னவோ இப்போது மனம் துவண்டிருக்கவும் ஆறுதல் தேவைப்பட்டது.
“அது எப்போதும் நடக்குறது தானே… விடு…”
“என்கிட்ட கோச்சிகிட்டு இப்படி பண்ணிட்டாரு… நான் நல்லதுக்குத் தான் சொன்னேன்.”

Advertisement