Advertisement

“தச்சா பார்த்து போடா…” என்று அரைபோதையில் குணாவின் குரலும் பின்னே கேட்க, அவனிடம் கையசைத்துவிட்டு கிளம்பியவன் இருட்டிலும், போதையிலும் தடுமாறி போக்குவரத்துக்கு குறைவாய் இருந்த அந்த சாலையில் வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தினான்.
மிதமான வேகத்தில் சென்றாலும் பார்வையில் தெளிவின்றி, உடலும் கட்டுப்பாட்டில் இல்லாத போது எங்கிருந்து பத்திரமாய் செல்ல முடியும்… தோப்பிலிருந்து பிரதான சாலைக்கு வந்ததுமே எதிரே வந்த லாரியின் வெளிச்சத்தில் கண்கூசி, நேரே வண்டியை அதன் முன்பகுதியில் கொண்டுபோய்  இடித்தான். இடித்த வேகத்தில் பைக்கோடு சேர்த்து அவனும் கீழே விழுந்ததில் கையிலும், காலிலும் சிறு சிராய்ப்பு.
வண்டியை நிதானமின்றி இவன் ஓட்டி வருவதை முன்னரே கவனித்திருந்த அந்த லாரி ஓட்டுனான் சுதாரிப்பாய் தச்சன் வண்டியை மோதுவதற்கு முன்னரே நிறுத்தி இருந்தான். அவன் நிறுத்தாமல் இருந்திருந்தால் பயங்கரம் நிகழ்ந்திருக்கும்.
பொங்கிய கோபத்தோடு கீழே இறங்கிய அந்த லாரி ஓட்டுனன் தச்சனை இரண்டே எட்டில் நெருங்கி, “சாவுகிராக்கி வீட்டுல சொல்லிட்டு வந்துட்டீயா?”
“இல்லையே… கோச்சிட்டு வந்துட்டேன்…” என்றான் தச்சன் எழத் தடுமாறியபடியே….
தச்சன் சொன்ன காரணத்தில் அந்த ஓட்டுனனுக்கு என்ன தோன்றியதோ தச்சனை நெருங்கி அவனை எழுப்பிவிட்டு, அவனுக்கு ஏதும் அடிப்பட்டிருக்கிறதா என்று பார்த்தான். பின் லாரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து, தச்சனை குடிக்க வைத்துவிட்டு அவனே பைக்கை அப்புறப்படுத்தி தள்ளி நிறுத்தினான். இரவு வேளை என்பதால் அந்த சாலையில் நடமாட்டம் அதிகம் இருக்கவில்லை. ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் அவ்வப்போது அவர்களை கடந்துச் சென்றது. உதவிக்கு வரவா என்று வழிப்போக்கர் ஒருவர் கேட்டபோதிலும் அதை மறுத்துவிட்டான் அந்த லாரி ஓட்டுனன்.
“என்ன நடந்தாலும் கோபப்பட்டு வீட்டிலிருந்தெல்லாம் வரக்கூடாது… குடும்பம் தான் முக்கியம். உன் நல்லதுக்குத் தான் உன் வீட்டில் ஏதாவது சொல்லியிருப்பாங்க… நீ வீட்டுக்கு போ… இப்படி குடிச்சிட்டு வண்டி ஓட்டாத…” என்று அறிவுரையும் சேர்த்துச் சொல்ல, தச்சனுக்கு அவனிடம் பேச தயக்கம் துளியும் இல்லை.
“நான் வீட்டுக்குத் தான் போயிட்டேடே இக்கேன்… என் என் பொண்டாட்டி டிட்டிட்டா…” ஏனோ தச்சனின் பேச்சுக்கள் மற்றவனைக் கவர்ந்தது.
சுவாரசியமாய் தச்சனை நோக்கியவன் கதை கேட்பதுப் போல, “ஏன் திட்டுனாங்க?”
“அவள் அப்பித்தான்… என் மேல ரொம்பப… பாசம் வச்சி இருக்காளா…. ஆனால் கோபமும் நிறையா வச்சிருக்கா…” என்று சொல்லும் போதே தச்சனின் முகம் சுருங்கியது.
“உனக்கு அவங்க மேல பாசமா இல்லை கோபமா? கோச்சிகிட்டு வேற வந்திருக்க அப்போ நிறைய கோபம் இருக்கு தானே உனக்கும்?”
“இருக்கே…. நிறைய இருக்கு… ஆனால் அவளை எனக்கு ரெம்ப பிக்கும். ப்ச்… ஆனால் என் பொண்டாட்டி திட்டிட்டா…”
“சரி சரி… பிக்குறது இருக்கட்டும், திட்டு வாங்குனதும் இருக்கட்டும்… வீட்டுக்கு பத்திரமா போ… வீடு எங்க இருக்கு?”
“இங்க… இல்லை இங்கத்தான்…” என்று அந்த பிரதான சாலையிலிருந்து பிரிந்து ஊருக்குள் செல்லும் சாலையை காண்பித்தான் தச்சன். அவனின் தடுமாற்றத்தில் துணுக்குற்ற அந்த லாரி டிரைவர், “பத்திரமா போயிடுவீயா?” என்று கேட்க, அந்த நேரத்திலும் தச்சனின் வாய்க் கொழுப்பு அடங்கவில்லை.
“உன் லாரி மாதிரி எதுவும் எதிரே  வராம இருந்தா அதுமேல மோதாம போயிடுவேன்…”
“விளங்குச்சு… தள்ளு நானே உன்னை வீட்டில் விட்டுறேன்… வீடு ரொம்ப தூரமா இல்லை பக்கமா?”
“இங்கன தான் இருக்கு…” என்று தச்சன் வழி சொல்ல, அந்த லாரி டிரைவர் முதுகிலேயே சாய்ந்துகொண்டு சவாரி செய்தான் தச்சன்.
“ஆமா…. நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க? என் பொண்டாட்டியே என்னை டிட்டிட்டா… உங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை?”
“குடும்பத்தோட அருமை எனக்குத் தெரியும்…” என்று கசந்த முறுவலோடு முடித்துகொண்டான் அந்த இளைஞன்.
தச்சன் வழி சொல்லியபடியே குந்தவை திட்டியதை அவ்வப்போது ராகம் போல இழுக்க, சிரித்துக்கொண்டே வண்டியை வீட்டு வாயிலில் நிறுத்தினான் அந்த டிரைவர். வண்டி சாவியை பத்திரமாய் தச்சனின் சட்டை பையிலேயே வைத்தவன், கைத்தாங்கலாக வாயில் கேட்டை திறந்துகொண்டு தச்சனை உள்ளே இழுக்கவுமே, அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரு பிள்ளைகளும் தச்சனைப் பார்த்ததும் ஓசை எழுப்பிக்கொண்டு தத்தை நடையிட்டு அவனை நெருங்க முயல, பிள்ளைகளை கவனித்துக் கொண்டு அங்கு நின்றிருந்த வானதியும் தச்சனின் நிலை கண்டு பதற்றத்தில் அவனை நோக்கி வேக நடையிட்டாள். பிள்ளைகளோ அவளைவிட வேகமாக ஓடிச் சென்று அந்த பெரிய இரும்பு கேட் அருகிலேயே தச்சன் கால்களை பிடித்துக்கொண்டு நின்றனர். ஆனால் தச்சன் தான் அதை சரியாய் உணரும் நிலையில் இல்லை. அவனுடன் வந்த அந்த டிரைவர் ஆசையாய் அந்த பிள்ளைகளை பார்த்துக் கொண்டு நிற்க, அவர்களை  நெருங்கியிருந்தாள் வானதி.
“என்னாச்சு?” என்று கேட்டது தான் தாமதம், தச்சனை தாங்கிப் பிடித்திருந்தவன் முகம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
“என்னங்க உங்க புருஷன் பொண்டாட்டி பிரச்சனை எல்லாம் வீட்டோட முடிச்சிக்க மாட்டீங்களா? இப்படி வெளில விட்டு… இவரு குடிச்சிட்டு வண்டி ஓட்டிகிட்டே என் லாரி மேல மோதப்பார்த்தாரு… நான் சுதாரிக்காம இருந்திருந்தா உங்க சொந்த பிரச்சனையால நான் உள்ள போயிருப்பேன். லாரில விழுந்தாலே லாரி டிரைவர் தான் போதையில் வண்டியை மேல ஏத்திட்டான்னு சுலபமா பழியை என் மேல போட்டு என்னை உள்ள தள்ளிடுவாங்க… ஆனால் குடிச்சிட்டு என் வண்டியில விழுந்தது என்னவோ இவன் தான்… அதை யாரும் கண்டுக்க மாட்டாங்க… சண்டை எப்போ வேணும்னாலும் போட்டுக்கலாம் ஆனால் உசுரு போனா திரும்ப வராது… இனியாவது உங்க பிரச்சனையை வீட்டோடு முடிச்சிகோங்க… இவன் வேற என்ன கேட்டாலும் என் பொண்டாட்டி திட்டிட்டானு சின்ன பிள்ளை ரைம்ஸ் மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கான்…” என்று இறுதியில் சிரித்தே விட்டான் அவன்.
“அட… ஆமானுங்க… என் பொண்டாட்டி டிட்டிட்டா…” என்று இடையில் தச்சன் திடுமென உளறினான்.
“நீங்க திட்டிட்டீங்கனு புலம்புனாலும் வீட்டு அட்ரஸ் சரியா சொலிட்டாரு… இல்லைனா ரோட்டிலேயே விட்டுட்டு போயிருப்பேன்… இன்னும் என்னங்க வேடிக்கை பார்க்குறீங்க? அழகான பிள்ளைங்க இருக்காங்க… வாழப் போறது ஒரே ஒரு முறை தான்! அதில் எதுக்கு வீண் வீம்பு, வறட்டு கவுரவம் பார்த்துகிட்டு… இனியாவது சண்டை போடாம மகிழ்ச்சியா வாழ்க்கையை மாத்திக்கோங்க…” என்றவன் தச்சனின் மீதிருந்த தன் பிடியை விலக்கி, வானதியை நோக்கி தச்சனைத் தள்ள, பிடி தளர்ந்ததும் தடுமாறி விழப்பார்த்தான் தச்சன்.
புதிதாய் வந்தவன் அவளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் பேசிய பேச்சிலேயே அரண்டு பேச்சு வரமால் பதறி நின்றிருந்தவள், தச்சனின் மீதிருந்த பிடி தளர்ந்ததும் எங்கே தன் மீது விழுந்து விடுவானோ என்ற பயத்தில் இரண்டடி பின்னெடுத்த வானதி, ‘குந்தவை’ என்று அலறலாய் தங்கையை அழைத்தாள்.
அதற்குள் விழப்போன தச்சனை தாங்கிப் பிடித்திருந்த அந்த லாரி ஓட்டுனர், வானதியை வித்தியாசமாய் பார்த்து நின்றான்.
வானதியின் அலறலில் வேகமாக ஓடிவந்த குந்தவை, தச்சன் வேற்றான் தோளில் சாய்ந்திருப்பது கண்டு விரைந்தாள்.
“என்னாச்சு?” என்று தச்சனை நெருங்கி அவன் தோள் தொட, பதில் கூறும் முன்னரே தெளிவில்லாத நிலையிலும் குந்தவையின் குரல் கேட்டு அவள் புறம் திரும்பி தன் முழு உடலையும் அவள் மேல் சரித்து அவள் தோளிலே சாய்ந்தான் தச்சன். அவனைத் தாங்கிப்பிடித்திருந்த அந்த லாரி ஓட்டுனன் தச்சனின் கனத்தில் குந்தவை தடுமாறுவது உணர்ந்து தச்சனை பிடிக்கப் போக, அவன் கையை தட்டிவிட்ட தச்சன், குந்தவை கையை அழுத்தி பிடித்துக்கொண்டு,
“நீ தேடுனீயா… உன்னை பார்க்கத் தான் வேகமா வந்தேன்… ஆனால் நான் விழுண்டுட்டீண்டி…” என்று உளற, அவனது குழறலான பேச்சிலும், அவன் மீதிருந்து வந்த மதுவின் வாடையும் குந்தவையை அதிரச் செய்தது. அவனை நிமிர்த்த முயன்று தோற்றவள் நம்பாத குரலில்,
“குடிச்சிருக்கியா?” என்று கேட்க,
“லைட்டா…” என்று கையை அகல விரித்துக் காட்டினான் தச்சன். அதிலேயே அவள் மனம் இறுகி சோர்ந்துவிட எதுவும் பேசவில்லை அவள். அவளுக்கு பிடிக்காததில் மற்றொன்றை செய்து வந்திருக்கிறான். ஆனால் பத்திரமாய் வீடு வந்துவிட்டான் என்ற திருப்தியும், மனநிறைவும் இல்லாமல் இல்லை குந்தவைக்கு.
“என்னாச்சு… ஏன்டா இப்படி வந்து நிக்குற? வண்டி எங்க?” என்று நீலா மறுபுறம் தச்சனை பிடித்துக்கொண்டு கேள்விகளை எழுப்ப,
“ம்மா… நான் விளுண்டுட்டேன்…” என்று சிறுபிள்ளை போல் சோகமாய் ராகம் இழுத்து நீலா புறம் சாய்ந்தான் தச்சன்.
“உள்ள இழுத்துட்டு போங்க முதல்ல… தலையில நாலு வாலி தண்ணிய ஊத்தி நாலு சாத்து சாத்துனா ஒழுங்கா இருப்பான்.” என்று அன்பரசன் வந்து தச்சனை முறைத்துக் கொண்டே கூற, நீலா அதட்டல் போட்டார்.
“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க… எல்லோர் முன்னாடியும் பிள்ளையை இப்படி வாசலிலேயே வச்சி திட்டிக்கிட்டு… அவனே விழுந்துட்டேன்னு சொல்லிட்டு இருக்கான், அடிபட்டிருக்கும் பிள்ளைக்கு… இப்போ போய் அவனை திட்டிட்டு இருக்கீங்க… குந்தவை அவனை கைத்தாங்களா அந்த பக்கம் பிடிச்சிக்கோ. நாம உள்ள கூட்டிட்டு போயிடலாம்.” என்று நீலா மெதுவாய் தச்சனை உள்ளே அழைத்துச் செல்ல,
“நீ அதிகமா இடம்கொடுத்து தான் அவன் இப்படி சுத்துறான். கண்டிச்சு வைக்கணும்…” என்று அன்பரசனும் மனைவியை சாடிக்கொண்டே அவர்கள் பின்னாடு சென்றார். பிள்ளைகளும் அன்பரசன் கையை பிடித்துக் கொண்டு அவரோடே உள்ளே சென்றனர்.
எண்ணங்கள் அனைத்தும் தச்சனை சுற்றியே இருக்க, எவரும் அதிர்வோடு நிலத்தில் வேறூன்றி நிற்கும் அந்த லாரி ஓட்டுனரை கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் அடையாளம் தெரிந்திருக்குமா என்பது ஐயமே. தேங்கியிருந்த வானதி மட்டும் அவன் அங்கேயே நிற்பதைக் கண்டு, தயக்கத்துடன் நன்றி உரைத்தாள்.
“பத்திரமா கூட்டிட்டு வந்து விட்டதுக்கு நன்றிங்க. அவங்க என் தங்கச்சி வீட்டுகாரர்…” என்றுவிட்டு என்ன பேசுவது என்று வானதி முழித்து நிற்க, அவனோ அங்கிருந்து நகராமல் விழியை வீட்டினுள்ளே பதித்திருந்தான்.
அவன் விழி பதிந்திருக்கும் திசையை உணர்ந்தவள் சற்று தயங்கி பின், “உள்ள வாங்களேன்… அத்தை மாமா ஏதோ அவசரத்தில் உங்களை கவனிக்கல… தப்பா எடுத்துக்காதீங்க…” அவன் நகராமல் இருப்பதால் பேச வேண்டும் என்று அவள் பேச, அவள் உள்ளே அழைத்ததும் இரண்டடி பின்னெடுத்தான் அந்த ஓட்டுனன்.
அழுந்த முகத்தை தேய்த்தவன், “இல்லைங்க… நான் வரேன்… பத்திரமா பார்த்துக்கோங்க.” என்றுவிட்டு மடமடவென வேகநடையிட்டு வெளியேறினான். வேண்டாம் என்று விட்டுவந்த பின், அனைத்தும் முடிந்து போனதாய் நினைத்து தனித்து வாழப் பழகியிருந்தவனுக்கு இன்று எதிர்பாராமல் நிகழ்ந்த சந்திப்பு அவனுள் அதிர்ச்சி, ஆவல், ஏக்கம், ஆற்றாமை என்று ஒரு ஆழிப்பேரலையையே உருவாக்கி இருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் இல்லை தனக்குத் தான் என்ன வேண்டும் என்ற யோசனைகள் எதுவும் எழாதபடி மூளை அதிர்வில் மரத்திருந்தது.
உணர்ச்சிகளின் உச்சத்தில் கால்கள் தள்ளாட எப்படித்தான் பிரதான சாலை வந்து லாரியில் எறினானோ… ஏறி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த பின்னும் அங்கிருந்து வண்டியை கிளப்ப மனமில்லை. கண்களை மூடி இருக்கையில் பின்னே சாய, அப்படியே திரும்ப ஊருக்குள் சென்று தான் யார் என்று சொல்லிவிடலாமா என்ற எண்ணம் எழ, உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது போலொரு சிலிர்ப்பும், ஆற்றாமையும் சேர்ந்தே ஓடியது. அவர்கள் வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு ஓடியபின் எந்த முகத்தை வைத்துக்கொண்டு திரும்ப அவர்கள் முன்னே சென்று நிற்பது? என்ற பெருந்தயக்கம் வென்றுவிட, அவர்களை பார்த்துவிட்டதோடு மட்டுமில்லாமல், தன் பின் பிறந்தவனையும் அவன் பேசிய பேச்சுக்களையும் கண்டு, கேட்டுவிட்ட மகிழ்ச்சியிலே அங்கிருந்து கிளம்பினான் ராஜராஜன்.

Advertisement