Advertisement

அதை மனதில் குறித்துக் கொண்ட குந்தவை மாலை அன்பரசன் வந்த உடனேயே அவர் அறைக்கே சென்று வானதிக்கு வேலை ஏற்பாடு செய்து வைத்திருப்பதை சொன்னாள். இவ்வளவு அவசரமாக குந்தவை அறைக்கு வந்து பேசவுமே அன்பசரனுக்கு அவள் கடத்த நினைக்கும் விஷயமும், அதன் அவசியமும் புரிந்ததுவிட்டது.
“எப்போமா போகணும்?”
“சீக்கிரம் வேலையில் சேர்ந்துடுறது நல்லது மாமா…”
குந்தவையிடம் வெளிப்படும் திடம், எடுத்திருக்கும் முடிவிலிருந்து அவள் பின்வாங்கப் போவதில்லை என்பதை வெளிப்படுத்த, ஓரிரு நொடி யோசித்தவர், “சரி… அப்போ உனக்கு பரீட்சையெல்லாம் முடிஞ்சதும் நீயும் கூடப்போய் வீட்டில் விட்டுட்டு வேலையிலும் சேர்த்து விட்டுட்டு வாமா… நான் தான் பேசி வானதியை இங்க கூட்டிட்டு வந்தேன். அதனால நாம முறையா கொண்டு போய் விடுறது தான் சரி… என் சார்பா நீயே தச்சனை அழைச்சிட்டு போய் விட்டுடு.”
வானதியை இங்கிருந்து கிளப்ப நினைக்கும் போதெல்லாம் ஏதோவொரு காரணத்தால் தள்ளிப் போய்கொண்டே இருக்கிறதே என்று நினைத்தவளால் அன்பரசனின் பேச்சை மீற முடியவில்லை.
“நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடலாம் மாமா… இந்த வார இறுதியில் பரீட்சை முடிஞ்சிடும்.” என்று தகவலையும் சேர்த்துச் சொல்ல,
“நானும் உங்கத்தையும் வானதியை பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தோம். வானதிக்கு வாழுற வயசுமா… ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. வானதிக்கு நாம ஏன் இன்னொரு கல்யாணம் செய்து வைக்கக் கூடாது? நம்ம பக்க சொந்தத்திலேயே பார்க்கலாம். நீ என்ன நினைக்குற?”
“கல்யாணமா?”
“இதுல யோசிக்க என்ன இருக்கு குந்தவை? உன்னைவிட ரெண்டு மூணு வயசு தான் பெரியவ… ஒரு வாழ்க்கை முடிஞ்சிபோச்சுனு அப்படியே விட்டுட முடியுமா? காலத்துக்கும் தனியா விடமுடியாது…”
“அதில்லை மாமா… அவள் கொஞ்சம் மேல வந்து யாரையும் சார்ந்திருக்காம வாழ பழகட்டுமேன்னு பார்க்குறேன்…”
“திடமா இருந்தா எப்போ வேணும்னாலும் முன்னேறிடலாம். ஆனால் எனக்கென்னமோ தள்ளிப்போடாம பசங்களுக்கு விவரம் தெரியுற முன்னாடியே கல்யாணம் பண்றது நல்லதுனு தோணுது. பசங்களுக்கு விவரம் புரிய ஆரம்பிக்கும் போதே அப்பான்னு ஒருத்தரை தெரிஞ்சிகிட்டே வளருவாங்க. விவரம் தெரியுற வயசு வரும்போது அவங்களுக்கு வித்தியாசம் தெரியாது. புதுசா இணையப்போறவனுக்கும் பிள்ளைங்க சின்ன வயசிலிருந்தே கூட இருந்தா இதுவும் என் பிள்ளைங்கன்னு நினைப்பு வரும். பிடிமானம் வரும். நீ யோசி. வீட்டிலேயும் கலந்து பேசு. இந்த முறை அவரசப்பட வேண்டாம்… நிதானமா செய்வோம்…”
“சரிங்க மாமா. நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான். பசங்க மனநிலையும் முக்கியம் தானே… ஒரு ஆறு மாசம் அவள் வேலைக்கு போகட்டும் மாமா. வெளிய போக ஆரம்பித்தால் அவளுக்கும் தன்னம்பிக்கை வரும். அப்புறம் நானே அவகிட்ட இதைப் பத்தி பேசுறேன்.” என்று குந்தவை சொல்ல, அதோடு அந்தப் பேச்சுக்கள் முடிந்தது.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் பரீட்சை என்று அதில் மூழ்கிவிட்டாள் குந்தவை. தச்சனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. அன்றும் அப்படித்தான் வேலை முடித்துவிட்டு நேரமே வீட்டிற்கு வந்திருந்த தச்சன் பார்வையில் மும்மரமாய் படித்துக் கொண்டிருக்கும் குந்தவை தான் கண்ணில்பட்டாள்.
கையோடு எடுத்துவந்திருந்த பையை ஒரு ஓரமாய் வைத்தவன், கைலிக்கு மாறியபடியே தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பவளை சீண்டினான்.
“சரியான படிப்ஸா இருப்பியோ… இன்னும் ரெண்டு நாள் இருக்கு அடுத்த பரீட்சைக்கு… ஆனாலும் எந்நேரமும் நீ படிச்சிட்டே இருக்க.”
“எக்ஸாமுக்கு படிக்காம போக முடியுமா… இன்னும் ஒன்னு தான் பாக்கி.” என்றவள் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்தாள்.
“நானெல்லாம் படிக்காமலேயே பரீட்சை எழுதுவேன்டி…”
“நீதானே… நீ எப்படி படிச்சி கிழிச்சிருப்பேன்னு நீ சொல்லாமலேயே எனக்குத் தெரியும்.” என்று இதழ் வளைத்து குந்தவை நக்கல் பேச, உதட்டை சுழுத்தவன், ‘இந்த அவமானம் உனக்குத் தேவையாடா.’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, ஓரமாய் வைத்திருந்த பையிலிருந்து காகிதத்தில் சுற்றி இருந்த ஒரு பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“என்னது இது?”
“பிரிச்சுப் பாருடி… இன்னைக்கு ஒரு வேலையா தஞ்சாவூர் போயிருந்தேன். அங்கிருந்து உனக்காக வாங்கிட்டு வந்தேன்.” என்று அவள் கையில் அந்த பெட்டியைத் திணிக்க, ஆர்வமுடன் அதை பிரித்தாள் குந்தவை.
“முதல் முதலா எனக்கு என்னவோ வாங்கிட்டு வந்திருக்க.” என்றவள் பெட்டியை பிரித்து அதிலிருந்ததை எடுத்துப் பார்க்க, விழிகளின் மொழிக்கேற்ப அழகிய பதுமையொன்று தலையாட்டிக் கொண்டிருந்தது தஞ்சையின் அடையாளங்களில் ஒன்றான தலையாட்டி பொம்மை. அடர் நிறங்களை சமகலவையாய் கொண்டு உடுப்பும், அதற்கேற்ப ஒப்பனையும், உடைகளில் கூட நுணுக்கமாய் செய்திருந்த வேலைப்பாடுகளும் பார்த்ததும் கண்ணையும், மனதையும் பறிப்பதாய் இருக்க குந்தவையின் உள்ளமும் அந்த பதுமையிடம் இருந்த புன்சிரிப்பை பூசிக்கொண்டது. அதோடு முதன்முதலாய் அவன் வாங்கிக்கொடுத்த பொருள் என்பதிலும் மனம் தனி உவப்பை உணர்ந்தது.
“பிடிச்சிருக்காடி… என்னமோ இன்னைக்கு இதை பார்த்ததும் உனக்கு இதை வாங்கிக் கொடுக்கணும்னு தோனுச்சு… வாங்கிட்டு வந்துட்டேன்.” என்று அவன் ஆர்வமாய் கேட்க, அவளுக்கோ அவனை சீண்டிப் பார்க்கும் ஆர்வம் வந்துவிட்டிருந்தது. சீன்டாதே என்று ஒரு மனம் அவளை தடுத்தாலும் அதை உதறியவள், அகல விரிய முயலும் இதழ்களை இழுத்துப் பிடித்து, முகத்தில் கடுமையை கடினமாய் கொண்டுவந்து, புருவத்தை உயர்த்தி, “இது மாதிரியே நீ என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாம நான் தலையாட்டி கேட்டுக்கனும்னு தானே இதை வாங்கிட்டு வந்து கொடுத்திருக்க.” என்க, பதறிவிட்டான் தச்சன்.
“அம்மா தாயே உனக்கு மட்டும் எங்கிருந்து தான் இப்படியெல்லாம் தோணுதோ… நான் சாதாரணமாத் தான் வாங்கிட்டு வந்தேன்… ஆனால் நீ சொன்னது கூட சரியாத் தான் இருக்கு. நீயேன் இதை முயற்சிக்க கூடாது.” என்று அவன் தீவிரமாய் கேட்க, அவன் காதை திருகினாள் குந்தவை.
“நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்… இப்படியெல்லாம் எண்ணம் இருந்தா அதை அழிச்சிடுடா… அதெல்லாம் என்னைக்குமே நடக்காது”
“அதுதான் எனக்குத் தெரியுமே…” என்றவன் காதில் இருந்த அவள் கரங்களை தட்டிவிட்டு, தன் இருகரம் கொண்டு அவள் இடை சுற்றி வளைக்க, சுகமாய் அவன் நெஞ்சம் சாய்ந்து கொண்டாள் குந்தவை. தன் நெஞ்சில் இதமாய் சாய்ந்திருந்த அவள் தலைமீது தாடையை வைத்து அழுத்தியவன், “என்ன புதுசா இன்னைக்கு இப்படி வந்து சாஞ்சி நிக்குற?” என்று கிசுகிசுக்க, அவன் நெஞ்சிலேயே முகத்தை உரசியவள், பொம்மையை மெத்தையில் வைத்துவிட்டு, அவன் இடை சுற்றி கரம் போட்டுக்கொண்டாள்.
“நீ என்னைக்கு இதுமாதிரி கையை வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்க… நான் சாஞ்சிக்கணும் நினைக்கும் போதெல்லாம் சாரோட நினைப்பு வேறையா இருக்கும்…” என்று அவள் சிணுங்க, சீண்டல்கள் அற்ற அந்த சிறு அணைப்பு கூட தித்திப்பாய் இருந்தது. அந்த தித்திப்புக்கு எதிர்பதமாக காத்திருக்கும் காரம் தெரியாமல் இருவரும் அணைப்பில் நெகிழ்ந்திருக்க, தச்சன் அவள் உச்சந்தலையில் ஒரு முத்தம் வைத்து அவளை பிரித்தான்.
“பசங்களுக்கும் ரிமோட் சார், பொம்மை வாங்கிட்டு வந்திருக்கேன். போய் குடுத்துட்டு வந்துறேன். கேட்கனும்னு நினைச்சேன். உன் போன் என்னாச்சு? உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமான்னு கேட்க போன் போட்டேன். கிடைக்கவே இல்லை.” என்று கேட்க,
“இந்த அறிவழகி கீழ போட்டு உடைச்சிட்டா…” என்று சோகமாய் உதட்டை பிதுக்கினாள்.
“ஓ… சரி புதுசு வாங்கிக்கலாம்.”
“புதுசெல்லாம் வேண்டாம். கடையில் கொடுத்து சரி பண்ண முடியுதான்னு பார்ப்போம்.” என்று குந்தவை மறுக்க, அவளது அலைபேசியை கேட்டு வாங்கி அதிலிருந்த விரிசலும், பின்பக்கம் உடைந்திருந்த பாகத்தையும் பார்த்து, “வேகமா போடுட்டாளா? இப்படி உடைஞ்சிருக்கு?”
“ஆமாடா… நான் அவள் இருக்குறதை மறந்துட்டு செல்லை கீழ வச்சிட்டு கிச்சனுக்கு போயிட்டேன். இந்த மேடம் அதை எடுத்து பால் மாதிரி தூக்கிப்போட்டு விளையாண்டிருக்காங்க.”
“புதுசே வாங்கிடலாம். என் பிரென்ட் ஒருத்தன் குடந்தையில் கடை வச்சிருக்கான். அவன்கிட்ட சொன்னா வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துடுவான்.” என்றுவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் பிள்ளைகளுக்கு வாங்கி வந்திருந்த பொம்மைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
அவனைக் கண்டதுமே துள்ளலோடு தத்தை நடையிட்டவர்கள் அவன் கையில் இருக்கும் பொருளை பார்த்ததும் உல்லாசமாய் கைத்தட்டி சிரித்தனர்.
“உங்களுக்குத் தான்டா குட்டீஸ்…” என்று தச்சன் பொம்மையை ஆட்டிக்காட்ட, ஓடிவந்து அவன் கால்களை கட்டிக்கொண்டு அவன் கையிலிருந்த விளையாட்டுப் பொருளை பிடுங்கி முயன்றனர் இரு அறிவுகளும்…
“இருங்கடா… உங்களுக்குத் தான் வாங்கிட்டு வந்திருக்கேன்.” என்று சிரித்துக்கொண்டே அறிவழகியிடம் பொம்மையை கொடுத்தவன், அறிவழகனோடு கீழே அமர்ந்து ரிமோட் காரை இயக்க, அறிவழகன் கைதட்டி சிரித்து வேடிக்கை பார்த்தான். ஆனால் பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்த அறிவழகி அவளுடையதை தூக்கி வீசிவிட்டு முற்றத்தில் கண்ணைக் கவரும் வகையில் அங்குமிங்கும் ஓடிய ரிமோட் காரை எடுத்து ஆராயத் துவங்கினாள். உடனே போட்டிக்கென அறிவழகனும் தவழ்ந்துச் சென்று அவளிடமிருந்து அதைப் பிடுங்க, அறிவழகி தரமாட்டேன் என்று மறுத்து மறுபக்கம் ஓட, அழுகைகள் துவங்கியது.
அறிவழகியை தூக்கியவன் அவள் கையிலிருந்த காரை பேச்சு கொடுத்துக் கொண்டே மெதுவாய் வாங்கி முயன்றான்.
“என் அழகி சமத்து பொண்ணு தானே… அவனோடதை அவனுக்கு கொடுத்திரு… நான் உனக்கு வேற வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு… அதை வச்சு நாம விளையாடலாம்.” என்று பேரம் பேச, பிடிவாதமாய் அதை தர மறுத்து, தன் நெஞ்சோடு அந்தக் காரை அணைத்துகொண்டாள் அறிவழகி. அவளின் செயலில் அறிவழகன் அழுகையைக் கூட்ட, அவனது வீலென்ற அலறலில் வீட்டிலிருந்த அனைவருமே முற்றத்தில் கூடி அவர்களை அமைதிப்படுத்த முயன்றனர்.
“சித்தி மாதிரியே பிடிவாதம் உனக்கு.” என்று அறிவழகியிடம் சொல்வது போல குந்தவையை சீண்ட, அவன் புறம் குந்தவை முறைப்பை வீசினாளே ஒழிய வேறேதும் பேசவில்லை.
“ரெண்டு பேரையும் வெளில கூட்டிட்டு போய் அவங்க நினைப்பை மாத்துங்க… ரெண்டுத்துக்கும் பிடிவாதம் அதிகமாகிடுச்சு…” என்றார் மங்களம்.
உடனே குந்தவை பதிலுக்கு, “செல்லம் அதிகமானதும் பிடிவாதமும் அதிகமாகிடுச்சு…”
“சரி சரி… வெளில கூட்டிட்டு போய் வேடிக்கை காட்டு…” என்று அவளை விரட்டிய தச்சன், முக்கிய கோப்புகளும், பணமும் இருக்கும் பீரோல் அறை நோக்கிச் செல்ல, யோசனையுடன் அவனை பின்தொடர்ந்தார் நீலா.
“என்ன வேணும்?” என்று நீலா கேள்வி எழுப்ப, பீரோவைத் திறந்து அதிலிருந்து பணத்தை எடுத்து எண்ணினான் தச்சன்.
“குந்தவை போன் உடைஞ்சிடுச்சு… புதுசு வாங்கணும்… நம்ம பைய ஒருத்தன் கடை வச்சிருக்கானே, அவன்கிட்ட பணம் கொடுத்தா வீட்டுக்கே எடுத்துட்டு வந்துருவான்.” என்று பதில் கூறிக்கொண்டே இரண்டாயிரம் தாள்களை எண்ண, அதை வெடுக்கென்று பிடுங்கி அதிலிருந்து மூன்று நோட்டுக்களை மட்டும் கொடுத்தார் நீலா.
“இதுல வாங்கிக்கோ…”
“அம்மா பத்தாயிராமாவது வேணும்…” என்று அவரிடமிருந்து மீதித் தாள்களை பிடுங்க முயல, அதை பின்னே மறைத்துக் கொண்டார் நீலா.
“செலவை குறைக்கணும் தச்சா… காசை வாரியிறைச்சு செலவு பண்ற அளவுக்கு இப்போ இருப்பு இல்லை.” என்று முதலில் பொறுமையாகத் தான் சொன்னார்.

Advertisement