Advertisement

“இட்லி மாவு கொஞ்சம் தான் இருக்கு. உளுந்தும், அரிசியும் ஊற வைச்சு மாவு அரச்சிடவா அத்தை?”
“நானே ஊற வைக்கணும்னு நினைச்சேன். நீயே கேட்டுட்ட… பெரிய பித்தளை குவளையில் அரிசி இருக்கு, உளுந்தும் பக்கத்திலேயே இருக்கு.”
“தெரியும் அத்தை… நான் பார்த்துக்குறேன். அப்புறம் நேத்து தான் சிலிண்டர் மாத்துனேன், நீங்க மறக்காம புது சிலிண்டர் புக் பண்ணிடுங்க.” என்றுவிட்டு வானதி உள்ளே சென்றுவிட நீலா ஆமோதித்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார்.
இயல்பாய் அந்த வீட்டோடு ஒன்றிப்போயிருந்த வானதி அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரம் கண்மூடி திறப்பதற்குள் ஓடியிருந்தது. அவளது வாழ்க்கை குறித்த பிரச்சனைக்கும் முடிவு வந்திருந்தது. பதினாறாம் நாள் சடங்கில் ஒன்றுகூடிய சொந்தங்களை சாட்சியாய் வைத்து விடுதலைப் பத்திரம் வாங்கியிருந்தனர். பிள்ளைகளை ஒரேடியாய் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று விட்டுக்கொடுத்திட முடியாது என்று பிடிவாதம் பிடித்த வானதியின் புகுந்த வீட்டினரை சமாதானம் செய்வதற்குள் தான் நாக்கு தள்ளிப்போனது.
பேரப்பிள்ளைகளின் மீது உண்மையான பாசத்திலும், உரிமையிலும் அவர்கள் சண்டையிட்டிருந்தாலும் வானதிக்கு அவர்களிடம் விட விருப்பமில்லாத போது எவராலும் எதுவும் செய்யமுடியவில்லை. பிள்ளைகளை பெற்ற தகப்பன் இல்லாததும் வானதிக்கு சாதகமாக இருக்க, பிள்ளைகள் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் உரிமை மொத்தமாய் வானதியிடம் இருந்தது. அதனால் அன்பரசன் தைரியமாய், தடாலடியாய் இறங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டவும் தான் பணிந்து வந்தனர்.
பின்னரும் அவர்களை நம்பி வானதியை அவள் அன்னையோடு அங்குவிட்டு வர தயக்கம் என்பது ஒரு காரணமாய் இருக்க, பத்து நாட்கள் வீட்டையே இரண்டாக்கி மழலை மொழி பேசிக்கொண்டு காலையே சுற்றி சுற்றி வந்து கலகலப்பாய் வைத்திருக்கும் பிள்ளைகளுடன் இன்னும் கொஞ்ச நாள் கூடவே இருக்கலாம் என்ற ஆசையில் வானதியை திரும்ப அவர்கள் ஊரான திருநரையூருக்கே அழைத்து வந்துவிட்டனர்.
முதலில் தயங்கித் தயங்கி நடமாடிய வானதி பத்து நாட்களில் வளைய வலம்வரத் துவங்கியிருந்தாள். குந்தவையை விட வானதிக்கு அந்த வீட்டின் சமையலறை அத்துப்படி என்ற நிலையில் இருந்தது வானதியின் செயல்பாடுகள்.
எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற அச்சமெல்லாம் புகுந்து வீட்டினரிடமிருந்து விடுதலை கிடைத்தவுடன் சற்று தணிந்துவிட, புது இடமான குந்தவையின் வீடும் அவளை சுதந்திரமாய் உணரவைத்தது. இறந்தகாலத்தின் கசப்புகளும், நினைவுகளும் அறவே இல்லாத இந்த வீட்டில் பொழுதுகள் நன்றாகவே கழிந்தது. குந்தவை பரீட்சை என்று படிக்க அமர்ந்துகொள்ள அவள் வேலை செய்யாமல் படிக்க சென்றுவிடுகிறாள் என்று எவரும் குறை சொல்லிவிடக் கூடாது என்ற முனைப்பில் முதலில் நீலாவுக்கு சிறிது சிறிதாய் உதவ ஆரம்பித்தாள். பின்னோ கொஞ்ச கொஞ்சமாக சமலையறை கட்டுப்பாடு யாரும் அறியாமலேயே அவளின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. குந்தவை விட்ட இடத்தை நிரப்ப நினைத்து வானதி அனைத்தும் செய்ய, அவளுக்கான இடமும் அவ்வீட்டில் உறுதியாகிக் கொண்டிருந்தது.
அதற்கு வலு சேர்க்கும் விதமாய் துவக்கத்தில் எந்த அளவுக்கு இரட்டை பிள்ளைகள் தன் மகளுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளின் இடத்தை தச்சனிடத்தில் பிடித்துவிடுவார்கள் என்று பயந்தாரோ அதற்கு மாறாக குழந்தையோடு குழந்தையாய் விளையாட ஆரம்பித்துவிட்டார் நீலா. குழந்தைகளின் சிறு சிறு செய்கைகள் எப்போதுமே ரசிக்கும்படியாய் தான் இருக்கும், அதுவும் இந்த பாசக்கார இரட்டையர்கள் மனதை நெகிழ்த்திவிட, அவர்களின் சேட்டையை ரசிப்பதிலேயே நேரம் போய்விடுகிறது நீலாவுக்கும் மங்களத்திற்கும்.
இப்போதும் அப்படித்தான் நீலா கொல்லையை சுத்தம் செய்து இலைகளை ஓரிடத்தில் குமிக்க, அதை பார்த்துவிட்டு இரு பிள்ளைகளுமே அவர் செய்வது போல தூக்க முடியாமல் ஆளுக்கொரு ஒரு வார்கோல் பிடித்துக்கொண்டு குப்பையை பெருக்குகிறேன் என்ற பெயரில் எதுவோ செய்து கொண்டிருந்தார்கள். அந்த அழகை ரசித்தபடியே அவர்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வேலை செய்தார் நீலா.
***
விரைவாய் வண்டியை விரட்டி குந்தவையை நேரத்திற்கு கல்லூரி வாசலில் இறக்கி விட்டான் தச்சன். உம்மென்று இறங்கியவள் அவன் முகத்தை பார்த்து நிற்க, அவனோ அவள் முகம் கூட பாராது வண்டியை கிளப்பிச் சென்றுவிட்டான்.
‛போடா டேய்… தப்பெல்லாம் நீ பண்ணிட்டு நான் பண்ண மாதிரி என்னை முறைச்சிட்டு சுத்துற!’ என்று மனதிற்குள் கறுவியவள், சுணக்கம் நீங்கி கடுப்புடன் கல்லூரிக்குள் நுழைந்தாள். நுழைந்தவள் தேர்வெழுதும் அறை இருக்கும் மாடிக்குச் சென்று அங்கிருந்த படிகளில் தோழிகளிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்துகொண்டாள். அவர்களோ இவளை பார்த்துவிட்டு எழுந்து வந்தனர்.
“ஏய் என்னடி இப்படி வந்து நிக்குற?”
“உனக்கு எத்தனை முறை நியாபகப்படுத்தினோம். பாரு நீ மட்டும் சுடிதாரில் வந்திருக்க…”
“போடி… எல்லோரும் ஒரே மாதிரி போடணும் தானே தேடித்தேடி புடவை எடுத்து இந்த நாள் பிக்ஸ் பண்ணோம்… இப்படி சொதப்பிட்டியே…”
“உன் மாமியார் வீட்டுல ஏதாவது சொன்னாங்களா…” என்று ஏகப்பட்ட கேள்விகள் அவள் தோழிகளிடமிருந்து.
அதுவேறு தச்சனின் மீதிருந்த கோபத்தை அதிகப்படுத்தின.
“என்னடி உம்முன்னு இருக்க?”
“ப்ச்… ப்ளவுஸ் சரியா இல்லைடி. அதுதான் போட்டுட்டு வரல…” கேள்விகள் தாங்காமல் குந்தவை மழுப்ப, தோழிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
“முன்னாடியே எல்லாம் சரியா இருக்கான்னு போட்டு பார்த்திருக்கணும்… கடைசி நேரத்தில் இப்படி சொதப்பிட்டீயே.” என்று குறைபட்டுக் கொண்டிருந்தனர்.
“இம்சை பண்ணாதீங்கடி… கட்டிட்டு வரலை அவ்வளவு தான்… இப்போ நான் படிக்கணும். டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்று குரலை உயர்த்த குந்தவையின் குணம் தெரிந்த அவளது தோழமைகள் அவளுக்கு தனிமை கொடுத்து நகர்ந்துவிட்டனர். நித்யா மட்டும் அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு குந்தவையை ஆராயும் பார்வை பார்த்தாள்.
“என்ன பிரச்சனை குந்தவை? உன் மாமியார் வீட்டில் ஏதாவது சொன்னாங்களா?”
“திரும்ப ஆரம்பிக்காத…”
“அப்போ ஏதோ ஒன்னு இருக்கு.” என்று நித்யா இடக்காய் கேட்க, அமைதியடைய முயலும் குந்தவையை அது உசுப்புவதாய் தான் இருந்தது.
“ஆமா இருக்கு… எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது…” என்று பட்டென முகத்தில் அடித்தாற்போல குந்தவை எரிச்சலை வெளிப்படுத்த,
“குந்தவை!” என்ற அழுத்தமான அழைப்பு அவளை பார்வை உயர்த்தச் செய்தது.
இடுங்கும் பார்வையுடன் தச்சன் அவள் எதிரே நின்றுகொண்டிருக்க, குந்தவை புருவம் சுருக்கினாள். நித்யா சட்டென எழுந்து, “வாங்க அண்ணா… நல்லா இருக்கீங்களா?” என்று மரியாதைக்கு கேட்க, குந்தவையின் தோழி என்றமட்டில் நித்யாவிடம் மென்னகை புரிந்து தலையசைத்தான் தச்சன்.
“இதுல டிபன் இருக்கு. சாப்பிட்டு பரீட்சை எழுதப் போ.” என்று ஒரு வெள்ளை நுண்நெகிழிப் பையை குந்தவையிடம் நீட்ட, அவள் அசரவில்லை.
“எனக்கு வேண்டாம். நான் சாப்பிட்டு தான் வந்தேன்.”
“நீ ஒழுங்கா சாப்பிடலைன்னு போன் வந்தது. அதுதான் பக்கத்துல வாங்கிட்டு வந்தேன். நீ கண்டிப்பா சாப்பிட்டு தான் ஆகணும்னு அம்மா ஆர்டர்.” என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல், அவள் மடியில் பையை வைத்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டான்.
இருவரின் பார்வை பரிமாற்றங்களில் இருந்தே ஊடல் வெளிபட்டுவிட, நித்யா என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாய் குந்தவை அருகில் அமர்ந்துகொண்டாள்.
மடியில் இருந்த பையை பார்த்த குந்தவை, நீலா சொன்னார் என்ற காரணத்திற்காக உண்டாள். முன்பு போலின்றி ஊடலிட்டு நேரம் கடந்திருந்ததால் பசிக்கவும் செய்தது, கோபத்தின் வீரியமும் சற்று மட்டுப்பட்டிருந்தது. சாப்பிட்டு முடித்து தேர்வறைக்கு செல்ல தயாராகும் நேரம் அவள் பையிலிருந்த அலைபேசி ஓசையின்றி அதிர, அதை அணைக்கவென எடுத்தால் வானதி மூன்று முறை ஏற்கனவே அழைத்திருந்தாள். எதற்கு கூப்பிட்டிருப்பாள் என்ற யூகம் இருந்தாலும் எதற்கும் எடுத்து பேசிவிடுவோம் இல்லையென்றால் கவலையிலேயே இருப்பாள் என்றெண்ணி அழைப்பை ஏற்றாள்.
“சாப்டியா குந்தவை?” குந்தவை யூகித்திருந்தது போலவே வானதியின் கேள்வி ஒலித்தது.
“நான் சாப்பிட்டேன்டி… எக்ஸாமுக்கு நேரமாகுது நான் அப்புறம் பேசுறேன்…”
“ஏய்… குந்தவை… உன் வீட்டுகாரரும் சாப்பிடலடி… ரெண்டு பேரும் சாப்டீங்க தானே?” என்ற கேள்வி குந்தவையின் அவசரத்தை குறைத்தது.
“அவனும் சாப்பிடலையா?”
“என்னடி அவன்னு மரியாதை இல்லாம சொல்ற? இதெல்லாம் தப்புடி.” என்று வானதி குரலை உயர்த்த, கடுப்பானாள் குந்தவை.
“ப்ச்… உன் வியாக்யானத்தை ஆரம்பிக்காத… அவனை எப்படி கூப்பிடனும்னு எனக்குத் தெரியும்.” என்று கடுப்படித்தவள், வானதியின் அழைப்பை துண்டித்துவிட்டு தச்சனை உண்ணச் சொல்லி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதோடு அலைபேசியை அணைத்து வைத்தாள்.
தேர்வுக்காக அணைத்தவள் கடுப்பில் அதை திரும்ப உயிர்பிக்கவே மறுநாள் ஆகிப்போனது. அதுவும் அவளன்னை சுமதி நினைவுப்படுத்தவும் தான் உயிர்ப்பித்தாள்.
“குந்தவை உன் செல் ஸ்விட்ச் ஆப்னு வருதாமே… வானதி என்னனு கேட்டா…”
காலை தாமதமாக எழுந்தவள் அப்போது தான் காபி குடித்துக் கொண்டிருந்தாள். சுமதி சொல்லவும் தன் பையை துலாவிபடியே, “மறந்துட்டேன்மா…” என்று அதை எடுத்து உயிர்பிக்க,
“வாழ்க்கை எவ்வளவு விசித்திரமா இருக்கு பாரேன்… பரீட்சை, வேலைன்னு சொல்லி நீ இங்க வந்து உட்கார்ந்திருக்க, விருந்தாளியா போன வானதி உரிமைப்பட்டவ மாதிரி உன் மாமியார் வீட்டிலேயே பொருந்திட்டா. இங்கன கூட அவள் குரல் சோர்வா தான் இருக்கும் ஆனால் இப்போ ரொம்ப தெளிவா பேசுறாடி… பசங்களும் மாப்பிள்ளைகூட, அப்புறம் உன் வீட்டு ஆளுங்களோட நல்லா விளையாடுறாங்கலாமே… குஷியா வீட்டையும், தோட்டத்தையும் சுத்தி சுத்தி வராங்களாம்… கன்றுக்குட்டி கூட விளையாடுறாங்களாம். ஒரு இடத்தில உட்காருறது இல்லையாமே… உங்கப்பா உனக்கு பிடிக்காத இடத்தில மாப்பிள்ளை பார்த்திருந்தாலும் நல்ல இடமா பார்த்திருக்கார். தங்கமான மனுஷங்க…” என்று சுமதி புகழ் பாட, குந்தவையின் முகம் யோசனையில் சுருங்கியது.
“நான் ஊருக்கு போனதும் அவளை இங்க அனுப்பி வைக்கிறேன். இவ்வளவு நாள் அங்க தங்குறது எல்லாம் முறையில்லை.”
“நீ ஏதாவது இடக்கா பண்ணி வைக்காத குந்தவை. இப்போ நமக்கு இருக்கும் ஒரே ஆதரவு உன் குடும்பம் மட்டும் தான். அவங்க மனசு நோகுற மாதிரி நடந்துக்க கூடாது. இந்த முறை உன் மாமனார் தான் கூட்டிட்டு போயிருக்கார். அதுக்கான மரியாதையை கொடுக்கணும்.” என்று கண்டிக்க குந்தவைக்கு அதில் விருப்பமில்லை.
“இனி பிரச்சனை இருக்காது, நீ உன் வீட்டுக்கு கிளம்புமான்னு வானதிகிட்ட அவங்க சொல்லுவாங்களா? நாம தான் சரியா இருக்கணும். நிலைமை புரிஞ்சி மரியாதையை காப்பாத்திக்கணும். ஒருத்தவங்க நமக்கு உதவுறாங்கன்னு அவங்க மேலேயே எப்போதும் சவாரி செய்யக்கூடாது.” என்று தன்பிடியில் சிந்தனையுடன் பிடிவாதமாய் நின்றாள் குந்தவை.
“நீ சொல்றதும் சரிதான்… என்னமோ பார்த்து பண்ணு… வானதி இனியாவது நல்லாயிருக்கணும்.” என்று பெருமூச்சு விட்டு நகர்ந்தார் சுமதி.
 
 

Advertisement