Advertisement

“சித்தி மாதிரியே முழிக்குறதை பாரு… அடுத்த குந்தவையாக வர இப்போவே இந்த ராட்சசி ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிச்சிட்டா போலிருக்கு…” என்று இதழ்களுக்குள் முணுமுணுக்கொண்டவன் அவளுக்கு வாங்கி வந்த பொம்மையை எடுத்து நீட்ட, ஓரிரு நொடி யோசித்த பின்னேதான் அவனை நெருங்கி அந்த பொம்மையை வாங்கிக்கொண்டாள் அறிவழகி. அவளின் கன்னம் தட்டியவன், குந்தவையிடம் பார்வையை திருப்பி,
“கிளம்பலாமா குந்தவை…”
“என்ன அதற்குள் கிளம்புறீங்க மாப்பிள்ளை? சாப்பிட்டுட்டு போகலாமே…”
“இல்லைங்கத்தை இப்போவே மணி ஆறாகப்போகுது… இப்போ கிளம்புனால் தான் இருட்டுறதுக்கு முன்னால் வீட்டுக்கு போக முடியும். நாளைக்கு நேரமே வயலுக்கு போகணும்.”
“நீங்க வருவீங்கன்னு பஜ்ஜிக்கு கரைச்சி வச்சேன்… அதையாவது சாப்பிட்டு போங்க… காபி குடிப்பீங்க தானே?” என்று கேட்டுவிட்டு சுமதி வேகமாய் எண்ணைக் கடாயை அடுப்பில் ஏற்றி சுடச்சுட பஜ்ஜியை தயார் செய்ய, வானதி இன்னொரு அடுப்பில் காபி போட்டாள். உள்ளே அவனை உபசரிக்கவென வேகமாய் வேலைகள் நடக்க,
“என்ன வம்புக்கு இழுக்காம உன்னால இருக்க முடியாதா?” என்று வெளியே அவனிடம் எகிறிக் கொண்டிருந்தாள் குந்தவை.
“யார் நானா? நீதான்டி நேரம் கிடைக்கும் போதெல்லாம் பஞ்சாயத்தை கூட்டிட்டு இருப்ப… காலையில் கூட என்னவோ ஆரம்பிச்ச அதுவே இன்னும் முடியல…”
“நான் ஒன்னும் ஆரம்பிக்கல… நீதான் சும்மா இருந்தவளை உசுப்புன…” காலையில் விட்டது மீண்டும் நின்ற இடத்திலிருந்தே துவங்கியது.
“என்னை பிடிச்சிக்க தானே சொன்னேன்… அதிலென்ன உனக்கு கசக்குதுனு புரியல… ரூமில் எல்லாம் நல்லாத் தானடி இருக்க…” என்று புரியாமல் பேச அவன் வாயிலே பட்டென்று ஒரு அடி  போட்டாள் குந்தவை.
“பிள்ளைங்க இருக்குற இடத்தில் இப்படி நடுக்கூடத்தில் என்னடா பேச்சு இதெல்லாம்?”
“ப்ச்… என்னமோ சிட்டியில தான் இருக்கனும். அங்க வேலைப் பார்க்கிறவன்தான் வேணும்னு முதல்ல சொல்லிட்டு இப்போ நீதான்டி இன்னும் பட்டிக்காடாவே இருக்க…” என்று சிலுப்பியவன் அவளை கண்டுகொள்ளாது மழலையோடு மழலையாய் விளையாடச் சென்றுவிட்டான்.
அவனையே முறைத்துப் பார்த்தவள் மனம் தாளாது, “சாப்பிட்டியா மதியம்?” என்ற அவளது கேள்விக்கு அவனிடம் சிறு தலையசப்பு மட்டுமே… போடா என்றுவிட்டு அவளும் டீவியை போட்டு அமர, அவனுக்காய் சுடச்சுட ஆவிபறக்க வந்தது பஜ்ஜியும், காபியும். 
பொருமலோடு அவனுக்கு கிடைத்த உபசாரத்தை பார்த்துக் கொண்டிருந்தவள் அங்கிருந்து கிளம்பும் வரையில் வாயே திறக்கவில்லை. வானதியிடம் சிறு தலையசைப்பு மட்டுமே.
காலைப் போலவே பயணம் அமைதியாய் இருக்க, போக்குவரத்து நெரிசல் அதிகமிருக்கும் இடத்தை தாண்டியதுமே தச்சனின் வார்த்தைகள் வெளிவந்து விழுந்தது, “எதுக்குடி இப்படி உர்ருனு வர? சிரிச்சா குறைஞ்சா போயிடுவ?”
“ரோட்டுல போறவங்க வர்றவங்கள பார்த்து சிரிக்கச் சொல்றியா? நான் இப்போ சிரிச்சா அப்படித்தான் இருக்கும்.” வெடுக்கென அவள் பேச அவன் தலையிலடித்துக் கொண்டான்.
“நீ யோசிக்காம பேசிட்டு இப்போ என்னமோ என் பதிலை கேட்டு தலையிலடிச்சுக்குற? சிரிக்கணும்னா எதிரில் யாராவது தெரிஞ்சவங்க வரணும் இல்லையா ஏதாவது ஜோக்குக்கு சிரிக்கலாம். ரெண்டுமே இல்லாம வண்டியில் போகும்போது ஈன்னு பல்லை காட்டிட்டு வரச் சொல்றியா?” என்று குந்தவை தன்னிலை விளக்கம் கொடுக்க, 
‘இன்று ஒரு முடிவோடு தான் இருக்கிறாள்… வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொள்ளாமல் நாம தான் சுதாரிப்பா இருந்துக்கணும்.’ என்று நினைப்பில் அவன் வாயே திறக்கவில்லை. நாள் முழுதும் வேலை செய்யாமல் பாதி நேரம் சும்மாவே நாற்காலியில் அமர்ந்து காத்திருந்ததில் உடல் சோர்வாகியிருக்க, அவளுடன் மல்லுக்கு நிற்பது எவ்வளவு பிடித்ததோ அதே அளவிற்கு கசத்தது இப்போது. வீட்டிற்கு போய் கால்நீட்டி படுத்தால் தேவலாம் என்பது போல தோன்ற விரைவாய் வண்டியை விரட்டி வீட்டுக்கு வந்துவிட்டான்.
இறங்கியவுடன் நேரே அறைக்குச் சேர்ந்து கைலிக்கு மாறியவன் மேல்ச்சட்டையை கழற்றி கைபோன போக்கில் வீசிவிட்டு மெத்தையில் படுத்துவிட்டான். படுத்த வேகத்தில் உறங்கியும் விட்டான். வேலை செய்திருந்தால் கூட இவ்வளவு களைப்பு வந்திருக்காது ஆனால் ஆராய்ச்சியாளரை பார்க்கவென சும்மாவே  காத்திருந்திருந்தது அவ்வளவு சோர்வாக இருந்தது. ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்ற காரியமும் நம்பகத்தரமாய் இருக்க நேற்றிருந்த கவலையெல்லாம் இன்றில்லை. கவலையற்ற நிம்மதியான உறக்கம் கலையவே வெகுநேரம் பிடித்தது.
அதுவும் பின்னிருந்து யாரோ தன்னை இறுக்கமாய் பிடித்திருப்பது போன்று உணர, அந்த இறுக்கத்தின் பிடியில் தூக்கத்தை தொடரமுடியாது சிரமப்பட்டு இமைகளை பிரித்தான். 
அறை இருளில் மூழ்கியிருக்க கண்ணை கசக்கியவன் நேராய் படுக்க முற்பட, அவனை திரும்பவிடாமல் தடுத்தது அவனைச் சுற்றியிருந்த குந்தவையின் கரம்.
அவளது மூச்சுக்காற்று அவனது வெற்றுமுதுகில் பட்டுத்தெறிக்க மூச்சு முட்டியது இவனுக்கு.
“என்னடி இப்படி பிடிச்சிருக்க? வலிக்குது…” உறக்கத்திற்கு பின்னான குரல் சோபையாய் ஒலிக்க, அவனை மேலும் ஒண்டிக்கொண்டாள் குந்தவை.
“நீதானே உன்னை பிடிச்சிக்க சொன்ன.” அவன் காலையில் சொன்னதை அவனது அருமை மனைவி இரவு செய்து கொண்டிருந்தாள்.
“மணி என்ன இரவாகிடுச்சு தானே?”
“பத்து.”
“நான் காலையில் பத்து மணிக்கு சொன்னதை நீ ராத்திரி பத்து மணிக்கு செஞ்சிட்டு இருக்க… இவ்வளவு ஸ்லோவா இருந்தா பத்து மாசத்துல புள்ளை பெத்துகொடுப்பியா இல்லை இருபது மாசமாகுமா?” 
அவன் நெஞ்சில் பதிந்திருந்த தன் கரம் கொண்டே அவனை செல்லமாய் குத்தியவள், “இருபது மாசத்தில் ரெண்டு புள்ளை வேண்ணா பெத்துத் தரேன். ஆனால் எல்லாமே ரெண்டு வருஷம் கழிச்சு தான்.” என்று மையலாய் பேசிவிட்டு முகத்தை அவன் முதுகினில் தேய்க்க, சிலிர்த்து திரும்பியவன் அவள் கன்னத்தை மென்மையாய் பற்றிக்கொண்டான்.
“இதை காலையிலேயே செஞ்சிருக்கலாம்…”
“காலையில் செஞ்சிருந்தா என்னவாகியிருக்கும்?”
“செம்ம கிக்க்கா இருந்திருக்கும்.”
“இப்போ செய்றது அப்படி இல்லையா?”
“நான் அப்படி சொல்லல… காலையில வண்டியில போகும் போது நீ செஞ்சிருந்தா அதோட பீலே{feel) தனி…” என்று ரசித்துக் கூற அவளது முகம் சிந்தனைக்குத் தாவியது.
“என்ன பீல்?”
“ப்ச்… அதெல்லாம் பசங்க விஷயம்… சும்மா கெத்தா இருக்கும்… வண்டியில வேகமா போகும்போது சில்லுனு காத்தடிக்கும், அப்போ நமக்கு பிடிச்ச பொண்ணு நம்ம பின்னாடி நம்மள இறுக்கப் பிடிச்சிக்கிட்டு மேல சாஞ்சி…” என்று கனவுலகில் மிதந்துகொண்டு கூற, பட்டென்று கத்தரித்தாள் குந்தவை.
“இதுதான் எனக்குப் பிடிக்காது.”
அவளது குரலில் இருந்த பேதம் அவனது சிறகுகளை சட்டென வெட்டிவிட அவன் முகமும் யோசனைக்குத் தாவியது. அவனை அதிகம் யோசிக்கவிடாமல்,
“வண்டியில போகும்போது இருக்கும் நெருக்கத்தைவிட இப்போ நெருக்கம் நெருக்கியே இருக்கு…” என்று ஒருவரை ஒருவர்  அணைத்திருக்கும் அவர்களின் நிலையை சுட்டிக்காட்டியவள், “இதுல கிடைக்காதது அதில் கிடைச்சிடப் போகுதா?”
“என்ன சொல்லவர? தெளிவா சொல்லு…” அவனிடம் உவமை வைத்து மறைமுகமாய் பேசினால் எடுபடுமா என்ன… என்னவென்று  தெரிந்துகொள்ள அவசரம் தான் அதிகமாகியது.
“அணைப்பும், முத்தமும் அன்போட வெளிப்பாடு. அதை யாருக்கு எங்க கொடுக்குறோம் என்பது தான் முக்கியம். தவிர்க்க முடியாத சமையத்திலோ இல்லை வீட்டினுள்ளோ முகம் சுழிக்க வைக்காத கண்ணியமான அணைப்பு கணவன் மனைவிக்கிடையில்  பொதுவெளியில் இருக்கலாம் ஆனால் நீ கேட்ட அந்த அணைப்பு தேவையில்லாதது. வண்டியில போகும்போது சும்மா கெத்துக்காட்டணும்னு நீ நினைக்குற… யாருக்கு காட்டணும்னு நினைக்குறேன்னு தான் எனக்கு புரியல… ஒரு சமூகத்தில் வாழறோம்ன்னா அதற்கான கட்டுப்பாட்டில் கட்டுப்பட்டு வாழனும். முன்னுதாரணமா இருக்கணும்னு கூட அவசியமில்லை ஆனால் என்னோட சுதந்திரம் தான் பெருசுனு பொதுவெளியில் அநாகரீகமா நடந்துக்குறதில் எனக்கு விருப்பமில்லை.
நீ சொல்ற மாதிரி நான் உன்னை இறுக்கமா அணைச்சிகிட்டு வண்டியில் போறதுனால என்ன நடந்துடும்னு நினைக்குற? நம்மோட தரம் தான் கீழே இறங்கும், அதுவும் எப்போதுன்னா நம்மை பார்த்து இன்னொருத்தர் செய்யும் போது… அது சின்ன பசங்களா கூட இருக்கலாம்… சாலையில் எல்லோரும் தான் பயணிக்குறாங்க. அதில் பாதிப்பேர் வேடிக்கை பார்த்துட்டு வருவாங்க… விடலைப்பசங்க பார்க்குறாங்கன்னு வச்சிக்கோ… என்ன ஆகும்? நீயே இதெல்லாம் கெத்துனு நினைச்சிட்டு இருக்க… அந்த பிம்பம் தான் அவங்க மனசிலும் பதியும்.
இதை ஏன் நாம செய்யக்கூடாதுனு தோணும். ஆர்வக்கோளாறான அந்த வயசில் இதெல்லாம் செஞ்சா நாளைக்கு அவங்க எதிர்காலம் என்ன ஆகும்? ஏற்கனவே எந்த இடத்தையும் விட்டுவைக்காம சுத்திட்டு இருக்காங்க… அப்படி சுத்துறவங்க எல்லாருமே அதே துணையோடு தான் இறுதி வரை இருக்காங்களா?
அதோட இப்போ சமூகம் கெட்டுப்போச்சு கெட்டுபோச்சுனு அதிகமா புலம்புறோம். அந்த சமூகம் யாரு? அவங்க எப்படி கெட்டுப் போறாங்க? நம்மைப் போல தனிமனிதர்கள் பலர் சேர்ந்தால் தான் அது சமூகம். சிறுதுளி பெருவெள்ளம் தான்… 
நம்மோட செயல்கள் எல்லாமே கண்காணிக்கப்படுது. அதை பார்த்துட்டு அதையே காப்பி பண்றாங்க… அப்போ அந்த பசங்க மனதில் இதுபோன்ற எண்ணங்களை விதைக்குறது யாரு? நாம தானே… நாம விதைக்குறதை தான் அடுத்த தலைமுறையில் அறுவடை பண்றோம்… நாளைக்கு நம்ம குழந்தைகளும் இந்த சமூகத்தில் தான் வளரப்போறாங்க… அவங்களுக்கு ஒரு ஆரோக்கிய சூழல் வேண்டாமா…”
“நீ இவ்வளவு பொறுமையா பேசுவியாடி…” அவள் இவ்வளவு விளக்கமாய் பொறுமையாய் பேசியதற்கு அவனது எதிர்வினை இப்படியிருக்க, அவளுக்கு கடுப்பாகுமா ஆகாதா… கோபத்தில் அவனை ஒரே தள்ளாய் தள்ள முயலும்போதே அவள் மேல் உருண்டு மறுபக்கம் சென்றுவிட்டான் தச்சன்.
“நீயெல்லாம் திருந்தவே மாட்ட டா… உன்கிட்ட போய் சொல்லிக்கிட்டு இருக்கேனே என்ன சொல்லணும்…” சொற்கள் அவள் பற்களுக்கு இடையில் இடிபட, அவள் இடையினில் கைவிட்டு அவளை தன்மேல் இழுத்துக்கொண்டான் தச்சன்.
“இதெல்லாம் பழைய பஞ்சாங்கம்டி… இதைவிட அதிகமா சினிமாவில் காட்டுறாங்க… இப்போ யாருதான் டிவி பார்க்கல சொல்லு. உன்னையும் என்னையும் பார்த்து யாரும் கெட்டுப் போகப்போறதில்லை. நீவேணும்னா பார்க், பீச்சுன்னு போய் களநிலவரத்தை ஆராய்ஞ்சிட்டு வாயேன்… நாம ரெண்டு பேருமே சேர்ந்து கெட்டுப்போவோம்…” என்றவன் அவள் இதழை வன்மையாய் சிறைபிடிக்க, நாவறண்டது குந்தவைக்கு.
இடையில் ஏற்பட்ட இடைஞ்சலில் எரிச்சல் வந்தாலும் இனிமை வாசிக்கும் அவனது இதழ்களுக்கு இடையூறு செய்ய விருப்பமில்லாமல் போனது குந்தவையின்  இதழ்களுக்கு. அவனாய் விடுவிக்கும் வரை அவள் அதனை மறுக்கவுமில்லை முழுமனதுடன் ஒன்றவுமில்லை.
“என்னடி அமைதியா இருக்க?”
“எனக்குப் புரியல… பொதுவெளியில் வெளிப்படுத்தினால் தான் காதலா? பாசமா? நாலு சுவருக்குள் இதே அன்பை நீ என்கிட்ட பொழிஞ்சாலும் குற்றம்குறை எதுவுமில்லையே… 
உன்னோட பாசம் எனக்குத் தெரிஞ்சா போதும் என்னோடது உனக்குத் தெரிஞ்சா போதும். ஆனால் ஒருத்தருக்கு ஒருவர் கொடுக்கும் மரியாதை தான் பொதுவெளியில் முக்கியம். நீ என்னை மதிக்குற, நானும் உன்னை மதிக்குறேனு தெரிஞ்சா தான் நாளைக்கு நம்ம பசங்களும் நம்மை சமமா மதிப்பாங்க… அதைத்தான் நீ வெளிப்படுத்தனும்… அப்புறம் தான் இந்த காதல் எல்லாம்… நீ  என்ன சொன்னாலும் எவ்வளவு வற்புறுத்தினாலும் நான் இதிலிருந்து மாறுவதா இல்லை… பலருக்கு சினிமா வேற வாழ்க்கை வேற என்ற உண்மை புரிந்தும் அதை ஏத்துக்காம இருக்கலாம். ஆனால் நான் என் அளவில் சரியா இருப்பேன். இருக்கணும். உனக்கு இதில் உடன்பாடு இல்லைனாலும் நீ என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்துத்தான் ஆகணும்…” என்று கறாராய் தன் நிலையிலேயே நின்றாள் குந்தவை. 
“சரிடி என் செல்லக்குட்டி… இன்னைக்கு இவ்வளவு பிரியாணி போதும்… வயிறு முட்ட, திகட்டத் திகட்ட கொடுத்துட்ட… இப்போ எனக்கு சாப்பாடு போடு…” என்று எழுந்துகொள்ள, எழாமல் படுத்தபடியே இருந்தாள் குந்தவை.
அவளின் அழுத்தத்தை உணர்ந்தவன் பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு, “உனக்கு பிடிக்காததை செய்ய மாட்டேன் போதுமா…” என்றவுடன் தான் சட்டென எழுந்து பச்சக்கென அவன் கன்னத்தில் இதழை ஒற்றி எடுத்துவிட்டு துள்ளலாய் வெளியே ஓடினாள் குந்தவை.
ஓடியவள் கதவருகே நின்று திரும்பிப் பார்த்து, “சீக்கிரம் வா… உன்கூட சாப்பிடணும்னு நானும் சாப்பிடாம இருக்கேன்…” என்றுவிட்டு செல்ல,
வீராப்பாய் ‘என் விருப்பப்படி தான் எல்லாமே செய்வேன். யாரும் என்னை அடக்கமுடியாது’ என்று சுற்றித் திரிந்த காலங்கள் அவனுக்கு நினைவு வந்து தொலைக்க, “அன்பரசன் சாபம் பலிச்சிடுச்சே… இவள் என்ன சொன்னாலும் கடைசியில நான் கேட்டுத் தொலைச்சிடுறேன். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.” என்று மனதில் கவுண்டர் கொடுத்தபடியே உண்ணச் சென்றான் பெருந்தச்சன்.

Advertisement