Advertisement

அவனையே குறுகுறுவென பார்த்தவள் தலையை ஒருபுறம் சரித்து விழிகளையும், புருவத்தையும் மேலுயர்த்தி, “நீ சொன்னா நான் கேட்கணுமா… அதெல்லாம் கேட்க முடியாது போ…” என்க, முகத்தை தூக்கினான் தச்சன்.
“இதெல்லாம் செல்லாது செல்லாது… நீலா இதையே சொல்லும்போது கேட்டுக்குற… நான் சொன்னா மட்டும் சிலுப்பிக்குற.” 
“அதெல்லாம் அப்படித்தான்…” வேண்டுமென்றே சீண்டினாள் குந்தவை.
“அப்போ வண்டி இங்கிருந்து நகராது… நீ எப்படி போகிறேன்னு நானும் பாக்குறேன்.” விருப்பம் நிறைவேறாத கடுப்பில் முறுக்கிக்கொண்டவன் வண்டியை அணைத்துவிட்டு அப்படியே அமர்ந்துவிட, ஓரிரு நிமிடம் பார்த்த குந்தவை வண்டியை விட்டு கீழிறங்கி அவன் முன்னே வந்து நின்றாள்.
“பஸ் ஸ்டாப் கிட்ட சரியான இடத்தில் வண்டியை நிறுத்தி இருக்கடா… நான் பஸ்ஸில் கூட போயிப்பேன்.” என்றுவிட்டு அங்கு நடக்கும் தூரத்தில் சற்று தள்ளியிருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடைபோடுவது போல பாவனை செய்ய பதறிக்கொண்டு வண்டியை இயக்கி அவளை மடக்கினான் தச்சன்.
“சரியான ராங்கிடி நீ… வேணும்னே என்னை இம்சை பண்ணுற.”
“நீதானே தினமும் எனக்கு பிரியாணி வேணும்னு கேட்ட… இப்போ அனுபவி.” என்று குந்தவை நயமுடன் சொல்ல தச்சனின் கடுப்பு இருந்த இடம் தெரியாமல் வடிந்தது.
ஆவல் மனதினில் உதிக்க, காதல் அவன் விழிகளில் நிரம்பி வழியக் காத்திருந்தது.
“ரொம்ப வழியுது தொடச்சிக்கோ.” என்று அதற்கும் தன் கைக்குட்டையை நீட்டி அவனை வெறுப்பேற்றினாள் குந்தவை.
“கிறுக்கி… அஞ்சு நிமிஷம் மனுஷன நிம்மதியா காதல் பண்ண கூட விடமாட்டா… நீ ரெண்டு பக்கமெல்லாம் கால் போட்டு உட்கார வேண்டாம்… உன் கையை மட்டும் என்னை சுத்தி போட்டு உட்கார்ந்துக்க…” என்று பெரிய மனது பண்ணி சொல்வது போல சொன்னவன் அவள் கைப்பிடிக்க, வெடுக்கென உருவிக்கொண்டு அவன் பின் ஏறி அமர்ந்தாள் குந்தவை.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ வண்டியை எடு.”
“நான் சொல்ற எதுக்குமே ஒத்துக்க கூடாதுனு முடிவு பண்ணிட்டியா குந்தவை?” அவனின் குரலில் கடினம் ஏறியிருக்க, குந்தவையின் குரலும் ஏற முற்பட்டு அது வெளிவரும் முன்னரே தாழ்ந்து தன் நிலை உரைத்தது.
“அம்பர்லா கட் சுடி போட்டிருக்கேன்… ரெண்டு பக்கம் கால் போட்டு உட்கார முடியாது.” என்றதும் திரும்பி அவளது உடையை கவனித்தவன் அவளது காரணம் ஏற்கும்படியாய் இருப்பதை உணர்ந்து, அவளின் ஒருகையை பிடித்து தன் இடைசுற்றி போட்டுக்கொண்டான்.
அதை வெடுக்கென உருவப்பார்த்தவளின் செயலை ஏற்கனவே கணித்து தன் வயிற்றில் பதியவைத்திருக்கும் அவளது கரத்தின் மீது தன்னுடையதை வைத்து அழுத்திப் பிடித்திருந்தான்.
“ப்ச்… விடு. வண்டியில் போகும் போது இதென்ன பிடிவாதம் உனக்கு?” என்று அவள் மறுத்தாலும் அவளை விடுவதாய் இல்லை தச்சன்.
“சும்மா இருடி… ரொம்பத் தான் அலட்டுற… என்னை பிடிச்சிக்குறதுல என்ன குறைஞ்சிடப் போகுது இப்போ?” என்று எரிச்சலை வெளிப்படுத்த அவளது பதிலுமே எரிச்சலாய் தான் வந்தது.
“எனக்கு இதில் விருப்பமில்லை. என்னை கட்டாயப்படுத்தாத.” 
“என்ன கட்டாயப்படுத்துறாங்க உன்னை? இதெல்லாம் ஒரு குத்தம்னு நடுரோட்டுல பஞ்சாயத்தை இழுக்காத…” 
“இது… இதுத்தான் பிரச்சனை… ரோட்டில் என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு?” அவன் எதிர்க்க, அவளது நியாயங்களும் பழையபடி உரத்த குரலில் வெளிவந்தது.
“இதுக்குப் பேரு கொஞ்சலாடி? வெளில சொல்லிடாத சிரிப்பாங்க.”
“சிரிச்சா தப்பில்லை… கெட்டுப்போனா தான் தப்பு.”
“ப்ச்… யாரு, எங்க கெட்டுப்போயிட்டாங்க இப்போ? எதுக்கு இப்படி சம்மந்தம் இல்லாம பேசுற?” என்று தச்சன் எரிந்துவிழ, இருவருக்குள்ளும் இருந்த இலகுத்தன்மை எப்போதோ கரைந்திருந்தது.
“நமக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைனு சொல்லி சொல்லித்தான் இப்போ இருக்குற சமுதாயமும் காலமும் கெட்டுக்கிடக்கு.””
“சமூகம் கெடுறதுக்கும் என்னை பிடிச்சிக்க சொன்னதற்கும் என்னடி சம்மந்தம் இருக்கு… ஒரு மண்ணும் புரியல… என்னவோ பண்ணு.” என்று அவள் கையை அழுத்திப் பிடித்திருந்த தன்னுடையதை விலக்கிக்கொண்டு வேகமாய் அவன் வண்டியை விரட்ட, குந்தவையும் கையை உருவிக்கொண்டு பக்கவாட்டில் இருந்த கைப்பிடியை பிடித்துக்கொண்டாள்.
பதினைந்து நிமிடம் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் வண்டியின் சப்தத்தைவிட வேறெதுவும் கேட்கவில்லை. தச்சனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று பொறுமையாய் கேட்கும் எண்ணமில்லை. அவளுக்கோ தன்னுடைய எண்ணங்களை வன்மையாய் கொட்டாமல் மென்மையாய் புரியும்படி சொல்ல ஏதுவான நிதானத்தை கொண்டுவர அவகாசம் தேவைப்பட்டது.
“கொஞ்சம் பொறுமையா போ…”
“முடியாது.”
“நான் ஏன் மறுக்குறேன்னு உனக்கு காரணம் தெரிய வேணாமா?” என்று பொறுமையாய் சொல்லவும் அவளது வார்த்தைகள் வேலை செய்தது. வேகத்தை மிதமாக்கியவன் செவிகளை தீட்டிக்கொண்டு அதிலேயே கவனம் பதித்திருக்க, சாலையில் சென்ற வாகனங்களின் இரைச்சலையெல்லாம் அவன் கவனித்திருக்கவில்லை. ஆனால் குந்தவைக்குத் தான் பயமாகிப்போனது. ஒருநொடி கவனம் சிதறினாலும் ஆபத்து தானே என்று தாமதமாய் புரிபட இதழ்களை இறுக பூட்டிக்கொண்டாள்.
“என்னடி என்னமோ சொல்ல வந்த மாதிரி இருந்தது…ஆனால் சத்தத்தையே காணோம்?”
“இப்போ நேரமாகுது அப்புறம் பேசலாம்.” என்று அவள் மறுக்க, அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
“அப்புறம் எதுக்குடி என்னை உசுப்பிவிட்ட? இதையே இன்னைக்கு முழுசும் என்னால நினைச்சுகிட்டு இருக்க முடியாது. நீ முகத்தை தூக்கிவச்சிக்குற அளவுக்கு நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்.” என்று பிடிவாதம் பிடித்தவன் வண்டியை நிறுத்தியே விட்டான்.
“என்னடா நேரம் காலம் பார்க்காம பிடிவாதம் பிடிக்குற? எனக்கு பிடிக்கலைனு சொல்லிட்டேன்… இதுக்கு  மேல இதைப்பற்றி பேச இப்போ சரியான நேரமில்லை. நாம பொறுமையா அப்புறம் பேசலாம்… உனக்காக அந்த ஆராய்ச்சி நிலையத்தில் யாரும் காத்திட்டு இருக்க மாட்டாங்க… நீ தான் நேரத்திற்கு போகணும். அந்த எண்ணமே இல்லாம வண்டியை நிறுத்தி நிறுத்தி விளையாடிட்டு இருக்க… முதலில் வண்டியைக் கிளப்பு…” என்று குந்தவை அதட்ட, இனி முக்கினாலும் முனகினாலும் அவளிடமிருந்து இப்போதைக்கு காரணம் வரப்போவதில்லை என்பது புரிந்துவிட, அவள் பேச்சை கேட்பதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை அவனுக்கு.
ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு அவளை நேரே கல்லூரியில் இறக்கிவிட்டவன், அவள் கைகளில் சில நூறு ரூபாய் தாள்களை திணித்து, “செலவுக்கு வச்சிக்கோ… நீ செலவு செஞ்சது போக மீதியில் என் அறிவு செல்லங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு போ…” என்றவன் அவள் எதிர்வினை புரியும் முன்னரே கிளம்பிவிட்டான். நின்றால் இதற்கும் ஏதாவது மறுப்பு சொல்லி பிரச்சனையை கிளப்புவாள் என்று தெரியும்… அவளும் அந்த எண்ணத்தில் தான் இருந்தாள் ஆனால் தச்சன் சுதாரித்து வேகமாய் பறந்துவிட்டான்.
கல்லூரியில் கொடுக்க வேண்டிய தகவல்களை கொடுத்துவிட்டு ஹால்டிக்கெட் வாங்கியவள் வானதியை நந்தன் வேலை செய்த அலுவலகத்திற்கு வரச்சொன்னாள். வானதியோ பிடிவாதமாய், “இவ்வளவு தூரம் வந்திருக்க, நீயே போயிட்டு வந்துரு… நான் இன்னும் குளிக்கக்கூட இல்லை. மதியம் சமையலும் இன்னும் ஆரம்பிக்கல. பசங்க இப்போ தான் தூங்கி எழுந்தாங்க… இனி தான் ஓடியாடி விளையாடுவாங்க அம்மாவால் எல்லாத்தையும் தனியா பார்த்துக்க முடியாது.” என்று ஏதேதோ சாக்கு சொன்னாள்.
“என்னடி விளையாடுறீயா? நைட்டே நான் ஹால்டிக்கெட் வாங்க வருவேன், நீயும் பஸ் ஸ்டாண்ட் வந்துட்டா சேர்ந்த போயிட்டு வந்துருவோம்… உனக்கும் விவரம் தெரிஞ்ச மாதிரி இருக்கும்னு சொன்னேன்ல…” என்று அதட்ட, வானதி உள்ளே போன குரலில், “நான் வரலடி…”
அக்காவின் குரல் கெஞ்சலாய் ஒலிக்க, குந்தவைக்கு ஒருமாதிரியானது. மற்றவர்களை அரட்டும் அளவிற்கு குந்தவை என்றுமே வானதியை ஒன்றும் சொன்னதில்லை. வானதி அமைதியோ அமைதி, குந்தவை அதற்கு நேரெதிரான துடுக்கான பெண் என்று உறவினர்கள் சொல்லும் போது துவக்கத்தில் பெருமையாகத்தான் இருந்தது குந்தவைக்கு. வானதி இப்படித்தான் என்று அவள் பெரிதாய் கண்டுகொண்டதில்லை. ஆனால் என்று வானதி கணவனை இழந்து வீட்டோடு முடங்கினாளோ அன்றிலிருந்து அதுவே பெரிய குற்றவுணர்ச்சி ஆகிப்போனது. 
வெளியே தைரியமாய் பேசி தவறை தட்டிக்கேட்டு, தோழிகளை தைரியமாய் இருக்கச்சொல்லி பக்கம் பக்கமாய் அறிவுரை வழங்குபவள் தன் உடன்பிறந்தவளையே தேற்றத் தவறிவிட்டாளே… மற்றவர்களிடம் சொன்ன உத்வேக வார்த்தைகளில் கொஞ்சமேனும் வானதிக்கும் சொல்லியிருக்கலாமோ என்ற எண்ணம் தாமதமாகவே வந்தது குந்தவைக்கு. வந்தபின்னும் கூட உடனேயெல்லாம் அவளை தேற்றிட முடியவில்லை. உள்ளிருந்து எழும் ஆழ் உணர்வுகளை அடியோடு மாற்றுவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லையே… அதுவும் வானதியே மாற வேண்டும் என்ற நினையாத போது குந்தவை மட்டும் நீ இப்படித் தான் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்று எண்ணங்களை வற்புறுத்தி வானதியிடம் திணித்துவிட முடியுமா என்ன? அதுபோன்ற சமயங்களில் குந்தவை இறங்கித்தான் போவாள்… இறங்கிப் போவாள் என்பதை விட தெரிந்தே தோற்றுப் போவாள்… அப்படி தோற்பவளை வெல்ல வைக்க வேண்டும் என்று வானதியும் என்றுமே சிந்தித்ததில்லை. இன்றும் அதுவே தான் நிகழ்ந்தது. 
குந்தவையே நேரில் அவள் தந்தை வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்று பேச வேண்டியதை பேச, ஒருவாரம் கழித்து கணக்கை முடித்துக் கொடுக்கிறோம் என்று அவர்கள் வாக்கு கொடுத்தனர். வந்த காரியம் நிறைவடைந்துவிட்ட திருப்தியில் அலுவலக அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள். அங்கோ அவளே எல்லாவற்றையும் முடித்துவிட்ட மகிழ்ச்சியில் வானதி தங்கையை உவகையுடனே வரவேற்க, குந்தவை அவளிடம் முகம்கொடுத்து பேசவில்லை. அப்படியாவது அடுத்து என்ன என்று யோசிப்பாளா என்று குந்தவை நினைத்திருக்க, இரண்டொரு நாளில் தங்கை தன்னிடம் பேசிவிடுவாள், பேசாமல் எங்கே சென்றுவிடப் போகிறாள் என்ற எண்ணத்தில் சுற்றினாள் வானதி.
“எதுக்கு குந்தவை அவகிட்ட முகத்தை காட்டுற?” என்று சுமதி சமாதானம் பேச வர,
“இனி முகத்தை மூடிக்குறேன்.” என்றவள் கண்களுக்கு மட்டும் கருணை காட்டி முகத்தை துப்பட்டாவுக்குள் மறைத்துக்கொண்டாள்.
“இதுக்கு நீ பேசாமையே இருந்திருக்கலாம்.” என்று வானதி முணுமுணுத்துவிட்டு வேலையை கவனிக்கச் சென்றுவிட, மாலையில் தச்சன் வரும்வரைக் கூட துப்பட்டாவை முகத்திலிருந்து கழற்றவில்லை குந்தவை.
தனக்காக கதவு திறந்தவளை உறுத்து விழித்து குந்தவை தான் என்று உறுதிப்படுத்திக்கொண்ட தச்சன் குழப்பமாய், “என்னடி கோலம் இது? பேசித்தான் இதுவரை எல்லோரையும் பயமுறுத்திட்டு இருந்த இப்போ இதுவுமா? ஹால்டிக்கெட் வாங்கிட்ட தானே?” என்க, ம் என்று கடைசி கேள்விக்கு பதில் கூறிவிட்டு அவள் முறைத்த முறைப்பில் இவன் கப்சிப்… 
“இவளா எதுக்குமே பதில் சொல்ல மாட்டா… அதுவும் நாம கேட்டா… ம்கூம்…” என்று முணுமுணுத்துவிட்டு அவளை இடித்துக்கொண்டு உள்ளே சென்றான்.
அவனைக் கண்டதுமே அறிவழகன் சிரித்துக் கொண்டு அவனை நோக்கி தத்தை நடையிட்டு வர, வேகமாய் அவனை வாரியணைத்துக் கொண்டான் தச்சன். 
“குட்டிப்பையா எப்படி இருக்கீங்க? சித்தப்பா உங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்கேன்னு பாருங்க… உன் சித்தி உனக்கு எதுவுமே வாங்கிட்டு வரலதானே…” என்று குந்தவையை சரியாய் கணித்திருந்தவன் பேச்சுவாக்கில் அவளுக்கு கொட்டுவைத்துவிட்டு, கையோடு வாங்கிவந்திருந்த ரிமோட் காரை எடுத்துக் கொடுத்தான். அதை ஆவலோடு வாங்கிக்கொண்ட அறிவழகன் அதில் லயித்துவிட, அவனின் குண்டு கன்னத்திலே அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்துவிட்டு அவனை கீழே இறக்கிவிட்டான்.
“எதுக்கு மாப்பிள்ளை இதெல்லாம்?” சுமதி தயக்கமாய் அவனை ஏறிட,
“இருக்கட்டும் அத்தை…” என்றவன் விழிகள் அறிவழகியை தேட, அவள் வானதியின் புடவையை பிடித்துக்கொண்டு அவனையும் அறிவழகன் கையிலிருக்கும் புது விளையாட்டுக் காரையும்  பார்த்துக் கொண்டிருந்தாள். சைகையாலேயே அவளை அழைக்க குறுகுறுவென பார்த்தாலே ஒழிய அவனை நெருங்கவில்லை அந்த சிட்டு.

Advertisement