Advertisement

*11*
“உனக்கு அங்க எல்லாம் பொருந்திப் போகுதாடி? உன்கிட்ட முன்னாடியே கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் அதற்குள் என்னென்னவோ நடந்துப் போச்சு…” 
“இப்போவாவது கேட்கணும்னு தோணுச்சே…” என்று அன்னையிடம் அலட்டிக்கொண்டே கால்களை மடக்கி சுவரில் சாய்ந்தமர்ந்தாள் குந்தவை. 
திகட்டத் திகட்ட அவளைக் கொஞ்சிவிட்டு ஒருவழியாய் தச்சன் அப்போது தான் மாலை காபி அருந்திவிட்டு வயலுக்குச் சென்றிருந்தான். மாமியாரும் நீ படி என்று அவளை அனுப்பிவிட, அன்னைக்கு பேசிவிட்டு பின்பு படிப்போம் என்று புத்தகத்துடன் அலைபேசியை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள், சுமதியும் அழைத்துவிட்டார்.
“எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பேசலாமா? எதிர்பாராத நேரத்தில் சட்டுன்னு அந்தரத்தில் விட்டுட்டு போயிட்டாரு உங்கப்பா… கெட்டதிலும் ஏதோ நல்ல நேரம் இருந்திருக்கு அதுதான் உனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்துட்டு போயிட்டாரு. இல்லைன்னா ரெண்டு பொண்ணுகளை வச்சிட்டு நான் தள்ளாடியிருப்பேன்.”
“ப்ச்… விடு… பசங்க என்ன பண்றாங்க? அவங்க என்ன சேட்டை செஞ்சிட்டு இருப்பாங்கன்னு தான் மனசுல ஓடிட்டே இருக்கு. வானதி என்ன பண்றா? நித்யா ஹால்டிக்கெட் கொண்டுவந்து கொடுத்தாளா?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றாள் குந்தவை.
“அதுக்கு முன்னே நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு. அங்க எல்லோரும் எப்படி இருக்காங்க? மாப்பிள்ளை எப்படி இருக்காரு… மாப்பிள்ளை உன் சார்பா உங்கப்பாக்கு எல்லாம் செஞ்சதுக்கு அங்க யாரும் கோச்சிக்கிடலயே?” என்று சுமதியும் தன்பங்கிற்கு வினாக்களை அடுக்கினார்.
“எல்லோரும் நல்லாயிருக்காங்க. ஒரு பிரச்சனையும் இல்லை. நான் இருந்துப்பேன்.”
“நீ இருந்துப்பேன்னு தெரியும். ஆனால் வீணா உன்னோட கோபத்தை பிடிச்சு தொங்கிட்டு இருக்காத… பார்த்து இருந்துக்கோ…”
“சரிசரி சும்மா எதையாவது சொல்லிட்டே இருக்காத. நாளைக்கு வானதியை அப்பா ஆபீசுக்கு போய் கணக்கை முடிச்சு கொடுக்கச் சொல்லி பாக்கி பணத்தை வாங்கிட்டு வரச்சொல்லு. நாம தாமதிச்சா அவங்களும் இழுத்தடிப்பாங்க…”
“என்ன கணக்குடி? வானதி போனா தருவாங்களா? அவளுக்கு வேற ஒன்னும் தெரியாதே. பரீட்சை எழுத வரும்போது நீயே என்னனு வந்து பார்த்து முடிச்சி கொடுத்துடேன்.”
“என்னால முடிஞ்சா வர மாட்டேனா? ஒரே நாளில் முடிச்சு கொடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தால் தான் ஒருவாரத்திலாவது பணம் வரும். இந்த மாசத்தில் பாதி நாள் அப்பா வேலைக்கு போயிருக்காங்க. அதுக்கான சம்பளமும், சேமிப்புக்காக மாசாமாசம் கொஞ்சம் பணம் பிடிச்சிருப்பாங்கல்ல அதையும் சேர்த்து வாங்கனும். அப்புறம் ஏதோ ஒரு எல். ஐ. சி பாலிசி எடுத்த மாதிரி நியாபகம் இருக்கு. அந்த பாலிசி பேப்பரை தேடி எடுத்து அது என்னனு வானதியை படிச்சுப் பார்க்கச் சொல்லு. நாமினியா உன் பெயர் தான் கொடுத்திருப்பார், அதையும் இப்போவே க்ளைம் பண்ண முடியுமா இல்லை மேல வேற என்னமாதிரி பண்ணலாம்னு அதிலேயே கொடுத்திருக்கும். அவளை படிக்கச் சொல்லி அது என்னனு எனக்கு சொல்லு. இறப்புச் சான்றிதழை பத்திரமா வச்சிக்கோ அது இருந்தால் தான் சேமிப்பாய் சேர்த்த பணத்தை எல்லாம் எடுத்து உன் பெயருக்கோ இல்லை வானதி பெயருக்கோ மாற்ற முடியும்.”
“ஏய் நில்லுடி… நீபாட்டிற்கு அடுக்கிகிட்டே போற… கேட்கவே மலைப்பா இருக்கு. இதையெல்லாம் பசங்களை வச்சிக்கிட்டு தனியா வானதி எப்படிடி செய்வா? ஒரு ரெண்டு நாள் சேர்ந்தாற்போல வந்து எல்லாத்தையும் அவளுக்கு விளாவரியா சொல்லிட்டு போ.” என்ற அன்னையின் குரலில் வெளிப்பட்ட பதட்டம் குந்தவையுமே வாட்டியது.
இனி என்ன செய்யப் போகிறார்கள்? என்ற பயமும் லேசாய் எட்டிப்பார்த்தது. இவள் அங்கிருந்தால் நிச்சயம் ஏதாவது செய்து கடனையாவது அடைத்திருப்பாள். இப்போது இங்கு பிறந்தவீட்டை விட்டு தொலைவில் ஒரு கிராமத்தில் இருப்பவளாள் அடுத்து என்ன செய்ய என்றுகூட விளங்கவில்லை. யோசித்துப் பார்த்தவளுக்கு எதுவும் புலப்படவுமில்லை. 
சில நேரம் வாழ்க்கையை அதன் போக்கில் சென்றுதான் கையாள வேண்டும். எல்லா நேரங்களிலும் முன்கூட்டியே திட்டமிடல் சாத்தியப்படுவதுமில்லை, அதற்காக திட்டமிடாமல் எதையும் சாதித்துவிடவும் முடியாது. சரியோ தவறோ இக்கட்டான சூழ்நிலையை சந்திக்கும் போது ஏதோவொரு முடிவை எடுத்துத்தான் ஆகவேண்டும். அது சரிவருமா வராதா… இப்படி நடக்காமல் இருந்திருக்கலாமே என்று அந்தநேரம் யோசித்து காலம் கடத்துவதைவிட துரிதமாய் சாதக பாதகங்களை ஆராய்ந்து அப்போதே முடிவெடுப்பதென்பது இருப்பவற்றை இழப்பதைவிட சாலச்சிறந்தது. 
அப்படித்தான் வாழ்க்கை ஓடத்தில் அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்த ஓட தன்னை தயாராக்கிக் கொண்டாள் குந்தவை. கிராமத்தில் தான் மீதி வாழ்க்கை என்று முடிவான பின், கிடைக்காத நகர வாழ்க்கையை மனதிற்குள் வைத்து புழுங்கிக்கொண்டு காலத்தை கடத்துவதை விட நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்வோம் என்ற பக்குவத்திற்கு வந்திருந்தாள் அவள். ஆனால் இந்த பக்குவம் வருவதற்கு அவள் கொடுத்த விலை தான் பெரியதாகிப்போனது. எதிர்பாராத தந்தையின் இழப்பு எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவந்திருந்தது. அதுவும் அவளது தந்தை குந்தவையிடம் பார்க்க நினைத்த மாற்றம். ஆனால் அந்த மாற்றத்தை பார்க்கத் தான் மனிதருக்கு காலம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. புகுந்த வீட்டினரும் அந்த மாற்றத்திற்கு செப்பனிட, நடப்பவற்றை அப்படியே ஏற்கவும் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
“வானதிகிட்ட போன் கொடுக்கிறேன். நீ அவகிட்டேயே பேசு…” என்று சுமதி தன் பெரிய மகளை அழைத்து அலைபேசியை அவளிடம் கொடுக்க, அன்னையிடம் சொன்ன அனைத்தையும் மீண்டும் அக்காவிடம் கடத்தினாள் குந்தவை.
“நிறுத்து நிறுத்து… எனக்கு இதைப்பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியாது. நீயே வந்து எல்லாத்தையும் செஞ்சிடு.” என்று அவள்பங்கிற்கு வானதியும் பதறினாள்.
“ஒன்னும் பிரச்சனையில்லை. நீ பதறாத… முதல்ல அப்பா ஆபீசுக்கு போ. அவங்க என்ன சொல்றாங்கன்னு விசாரி. அதற்கு தகுந்தாற் போல பேசு. அடிக்கடி அலைய முடியாது சீக்கிரம் செட்டில்மென்ட் பண்ணுங்கன்னு சொல்லு. இதை முதலில் வாங்கு. எல். ஐ. சி கூட பரிட்சைக்கு நான் அங்க வரும்போது பார்த்துக்கலாம். அப்போ ஒரு ரெண்டு மூணு நாள் தங்குற மாதிரி வரேன்.”
“நான் எப்படிடி…” பழக்கமில்லாததால் தயக்கம் பெரிதாய் எட்டிப்பார்த்தது வானதியிடம். 
எதுவென்றாலும் தந்தை, கணவன் என்று அவர்களை நாடியே இருந்துவிட்டாள். குந்தவை கூட வீட்டிலிருந்து தொலைவில் இருக்கும் கல்லூரியில் படிக்கிறாள் ஆனால் வானதி வீட்டிற்கு மிக அருகில் நடந்து செல்லும் தூரத்தில் இருந்த கல்லூரியில் தான் பெயருக்கு பட்டம் படித்தாள். குந்தவைக்கு நேரெதிர் குணம். அது பிறப்பால் வந்ததா இல்லை வளர்ப்பால் வந்ததா என்ற சந்தேகம் அவளுக்கே உண்டு. அதுவும் கணவனை இழந்தபின்பு நிமிர வேண்டியவளோ ஒடுங்கிவிட்டாள். இதுவரை அந்த ஒடுக்கத்தை முடக்க நினைத்ததில்லை ஆனால் காலம் அதை உடைக்கும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. தள்ளியும் இதை ஏற்கமாட்டேன் என்று தயங்குபவளை என்ன செய்ய முடியும்?
“நீதான் போகணும். வேற வழி கிடையாது.” என்று கறாராய் சொன்ன குந்தவையே மறுநாள் அங்கு போகும்படி ஆகிற்று.
***
“நிதானமா சாப்பிடு குந்தவை. வண்டியிலத் தானேப் போறீங்க. தச்சன் நேரத்திற்கு உன்னை அழைச்சிட்டு போயிடுவான்.” இட்லிக்களை வேகமாய் விழுங்கும் மருமகளுக்கு தண்ணீர் எடுத்துவந்த நீலா அருகிலேயே அமர்ந்துகொள்ள, தச்சனும் திவ்யாவும் கன்னத்தில் கைவைத்தமர்ந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நான் ஹால்டிக்கெட் தானே வாங்கப் போறேன்… அது கல்லூரி நேரத்தில் எப்போ வேண்டுமென்றாலும் வாங்கிக்கலாம் அத்தை. ஆனால் இவரு ஆடுதுறைல வேளாண் சம்மந்தமா ஏதோ விசாரிக்கனும், அதனால என்னை விட்டுட்டு அங்க போகணும்னு சொன்னாரு… அங்கே நேரத்திற்கு போனால் தானே சரியாய் இருக்கும். என்னை பஸ் ஏற்றிவிடுங்கனு சொன்னாலும் கேட்கல… ஆடுதுறை சரியா இங்கிருந்து மாயவரம் போகும் வழியின் நடுவில் இருக்கு. இவர் இங்கிருந்து காலேஜ் வரை என்னை அழைச்சிட்டு போய் விட்டுட்டு திரும்பி அதே வழியில் வந்து அந்த ஆராய்ச்சி மையத்திற்கு போகணும். அலைச்சல் தானே… அதற்கு இவர் என்னை ஆடுதுறையில் பஸ் ஏற்றிவிட்டால் கூட நானே போயிப்பேன்.” என்றவளை தாயும் மகனும் ஒருசேர முறைத்தனர்.
“நான் தானடி கொண்டு வந்து விடுறேன்னு சொன்னேன்? சுகமா பின்னாடி உட்கார்ந்துட்டு வரவேண்டியதை விட்டுட்டு எதுக்கு இப்போ பஞ்சாயத்தை இழுக்குற?” என்று தச்சன் கடிந்துகொண்டான் என்றால் நீலாவோ, “உன்னை கூட்டிட்டு போறது எல்லாம் அவனுக்கு அலைச்சலா இருக்குமா என்ன? அதெல்லாம் சுகமா அழைச்சிட்டு போவான்… அவன் வேலை முடிச்சிட்டு திரும்ப உன்னை அழைக்க வரும்வரை உங்க வீட்டுக்கு போயிட்டு வா குந்தவை… அங்கேயே சாப்பிட்டு வந்துருங்க.” என்க, தச்சனுக்கு இவர்களின் இயல்பான பேச்சுக்களில் மண்டை காய்ந்தது.
“மாமியாரும் மருமகளும் கூடி கொஞ்சி குழாவிய தருணம் எல்லாம் எப்போ நடந்ததுன்னே தெரியல… ஆனால் சுத்தி இருக்குறவங்களை நல்லா குழப்பி காயவிடுறீங்க. இனி சண்டைன்னு என்கிட்ட வந்து புலம்பிகிட்டு நின்னுடாதீங்க.” என்று எரிச்சலாய் மொழிந்தவன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
அவன் சொன்ன தினுசில் குந்தவைக்கு சிரிப்பு வந்துவிட நீலாவுக்கு தெரியாமல் இதழ் மடித்து சிரித்துக்கொண்டாள். நீலாவின் சிந்தனையோ வேறாக இருந்தது. குந்தவையுடனான கசப்புகள் மறைந்து விட்டாலும் அதனின் தாக்கம் தச்சனை வருத்தியிருக்குமோ… நம்ம புள்ளைய நாமே ரொம்ப படுத்திட்டோமோ என்று தான் எண்ணியது.
அதற்குள் உண்டு முடித்திருந்த குந்தவை வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். நீலா வாயில் வரை வந்து அவர்கள் செல்வதை பார்த்துவிட்டுத்தான் உள்ளே சென்றார். குந்தவைக்கு பரீட்சை முடியும்வரை அவளை அங்கேயே அவளது பிறந்தகத்தில் தங்கிடச் சொல்வோமா என்ற யோசனை எழுந்தாலும் ஒரேடியாக குந்தவையின் புறம் சாய்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த யோசனையை கைவிட்டுவிட்டார். 
இறுதியாண்டு என்பதால் சுயவிவரங்கள் சில சேகரிக்கவென மாணவர்கள் அனைவரையுமே ஹால்டிக்கெட் வாங்க நேரே கல்லூரிக்கு வரச் சொல்லியதால் குந்தவையே நேரில் செல்ல வேண்டியதாகிவிட்டது.
வீட்டினுள் வந்த நீலாவை கேலியாய் பார்த்த திவ்யா, “மருமகளை ரொம்பத்தான் கொஞ்சுறீங்க நீலாவதி…” 
“ஆமாமா கொஞ்சுறாங்க… அதுவும் நல்ல பொண்ணு தான் ஆனால் ஒரு உறையில் ஒரு கத்தி தானே இருக்க முடியும்? அளவுக்கு மீறி திணிச்சா இருக்குறதும் அறுந்துடும். அறுவதற்கு முன்னாடியே அவள் வந்து பேசுனா… நாங்க ரெண்டு பேரும் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு இருந்து என்னத்தை செஞ்சிட முடியும்? இருக்குறவரை நிம்மதியா இருந்துட்டு போவோம்.” என்றுவிட்டு அவர் நகர, திவ்யாவிற்கு இப்போவாவது சேர்ந்தாங்களே என்றுதான் ஆனது.
“எப்போ பேசுனீங்க? நானும் வீட்டுல தானே இருக்கேன். எனக்குத் தெரியலையே…”
“நேத்து நீயும், உங்க பாட்டியும் ராகுகாலத்தில் கோவிலுக்கு போகணும்னு போயிட்டீங்க… அப்போ தான் வந்து பேசுனா… உங்கப்பா பேச சொல்லி சொல்லியிருப்பாருனு நினைக்குறேன்.”
“என்ன பேசுனீங்க? இல்லை அண்ணி என்ன பேசுனாங்க? நீயே மாறியிருக்கானா ஏதோ தரமான சம்பவம் நடந்திருக்கு தானே…” என்று ஆவலாய் திவ்யா நீலாவின் வாய்ப்பார்த்து நிற்க, அவளையே கூர்ந்து பார்த்தவர், “அப்பப்போ உன் அண்ணன்காரன் மாதிரியே பேசிவைக்குற…”
“ப்ச்… நீ என்ன நடந்ததுன்னு சொல்லு…” என்று நச்சரிக்க நீலா நடந்ததை சொல்லிவிட, மெச்சுதலான பார்வை திவ்யாவிடம், “அண்ணி ரொம்பத் தெளிவு தான்… மனசுக்குள்ள வச்சிக்காம பட்டுனு பேசி எல்லாத்தையும் சரி பண்ணிட்டாங்க… சரி அப்போ இனி எனக்கு இங்க வேலையில்லை நாளைக்கே நான் ஊருக்கு கிளப்புறேன்.” என்று நீலாவின் வால்பிடித்துக் கொண்டே நடந்தாள்.
“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போடி… இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தச்சனை கொண்டுவந்து விடச்சொல்றேன்.”
“ம்ம்மா இப்போவே இங்கன வந்து ஒருவாரமாச்சு. அவர் ஏற்கனவே எப்போ வருவேன்னு கேட்டுட்டு இருக்காரு…” என்று சிணுங்கிய மகளை வாஞ்சையுடன் பார்த்த நீலாவுக்கு இப்போது அவளின் இடத்தில் குந்தவையை பொருத்திப்பார்க்க முடிந்தது. கணவனின் அன்பிலும், ஆதரவிலும் குந்தவை கூட இப்படித்தானே மகிழ்ந்திருப்பாள். 
கணவனின் பாசம் முன்பு தாய்ப்பாசத்தை எடைக்கல்லில் நிறுத்துவது எவ்வளவு அசட்டையான புரிதலற்ற செயல். அதை செய்திருக்கவே கூடாது என்பது குந்தவையிடம் பேசிய பின்பு புரிபட்டுவிட முன்பிருந்த இறுக்கங்கள் இப்போதில்லை.
“சரி… இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு இல்லை நாளை மறுநாள் தச்சனை கொண்டுவந்து விடச்சொல்றேன்.” என்று மகளின் கன்னத்தை தட்டிவிட்டு அவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்.
***
வண்டியின் வேகத்திற்கு இணையான எதிர்காற்று அவள் முகத்தினில் வந்து மோதிட, அதை எதிர்கொள்ள முடியாமல் ஊக்கு குத்தியிருந்ததையும் மீறி பறந்த துப்பட்டாவையும், நெற்றியில் வந்து விழுந்த சிறு முடிகளையும் சரிசெய்து கொண்டே வந்தாள் குந்தவை. அதைக் கவனித்த தச்சன் போக்குவரத்து குறைவாக இருக்கும் சாலையில் ஓரமாய் வண்டியை நிறுத்தி தலையை மட்டும் அவள் புறம் திருப்பியவன், “ரெண்டு பக்கம் கால் போட்டு உட்காருடி… இப்படி எவ்வளவு தூரம் தான் துப்பட்டாவை பிடிச்சிகிட்டே வருவ…”
“இல்லை பரவாயில்லை… நான் இப்படியே வரேன்.” என்று அவள் மறுக்க,
“சொன்னா கேட்டுக்கணும் குந்தவை.” என்று நீலாவைப் போலவே பேசினான் தச்சன்.

Advertisement