Advertisement

“சரி நான் அவனுங்களை அனுப்பிட்டு வீட்டுக்கு போயிட்டு வரேன்… நீ இதெல்லாம் சரி பண்ணி வை… வாடியது போக மீதி எவ்வளவு தேறுதுன்னு பார்த்து அதையாவது காப்பாத்துவோம்.” என்றுவிட்டு குணா சென்றுவிட, வேலை செய்ய ஏதுவாய் சட்டையை கழற்றி மோட்டார் ரூமில் வைத்துவிட்டு பேன்ட்டையும் மாற்றிவிட்டு கழனியில் இறங்கினான் தச்சன். அதன் பிறகு வேலை சரியாக இருக்க அவன் திரும்ப வீட்டிற்கு செல்லவே மணி மூன்றாகிவிட்டது.
வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் எப்போதுமே முற்றத்திலோ இல்லை திண்ணையிலோ அமருபவன் நீலா திட்டினால் தான் எழுந்து தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளவே செல்வான். இன்று வீட்டினுள் நுழைந்தவுடனேயே தண்ணீர் அருந்திவிட்டு நேரே கொல்லைக்குச் சென்று கை, கால் கழுவிவிட்டுத் தான் வீட்டினுள் வந்தான்.
அவனுக்கு மதிய உணவை தயாராய் எடுத்துவைத்து நீலா அமர்ந்திருக்க அவரிடம் சென்றவன், “குந்தவை எங்க?” கேள்வியை நீலாவிடம் கேட்டுவிட்டு பார்வையை வீட்டினுள் தேடலாய் சுழலவிட்டான்.
“ரொம்பத் தேடாத… அவ ரூமில் பரிட்சைக்கு படிச்சிட்டு இருக்கா…” என்று நீலாவே பதில் சொல்ல, ‘என்னடா நடுக்குது இந்த வீட்டுல…’ என்று நினைத்துக்கொண்டே உண்ண அமர்ந்தான்.
“அவள் சாப்பிட்டாளா?” 
“நீ வருவேன்னு நான் சாப்பிடாம காத்திட்டு இருந்தேன்.”
‘இது என்ன மாதிரியான பதில்.’ என்பது போல நீலாவைப் பார்க்க, சட்டென்று உரைத்தது உண்மை. இதுவரை அவன் வெளியில் சென்றுவிட்டு வந்து உண்ணும் போதோ, உண்ட பின்னோ வீட்டினர் சாப்பிட்டார்களா என்று கேட்டதுகூட இல்லை. இன்றோ… நீலாவின் பாவனையை பார்த்த பின் இன்று மட்டும் ஏன் இந்த சந்தேகமும் நினைப்பும் வந்து தொலைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தலை குனிந்துவிட்டான் தச்சன்.
மகள்களைப் பெற்ற அன்னைகளுக்கு இருக்கும் விட்டுக்கொடுக்கும் தன்மை மகன்களை பெற்ற அன்னையர்களுக்கு இருப்பதில்லை. பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்த கணம் அவள் இன்னொரு வீட்டுக்கு போகப்போகிறவள் என்ற மெய்யும் சேர்ந்தே மனதில் பதிகிறது. மகளை திருமணம் செய்து வேறு குடும்பத்திற்கு கணவனுடன் அனுப்பும் எந்தவொரு தாயும் மகளை கட்டிய மருமகன் தன்னிடமிருந்து தன் மகளை பிரித்து அழைத்துச் செல்கிறான் என்று சொல்வதில்லை. சீராட்டி பாராட்டி அவள் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்றே அனுப்பி வைக்கிறாள். ஆனால் மகன்களை பெற்ற அதே தாய் தான் மருமகள் வந்த பின்பு மகனை தன்னிடமிருந்து பிரிக்கிறாள் என்று மருமகள் மீதே குற்றம்சாட்டுகிறாள். இருபாலினரையும் ஒரே கருவறையில் சுமந்து வளர்த்த அன்னையவளிடம் தெறிக்கும் இந்த முரண் முறையாய் கையாளப்படுவதில்லை.
“நீங்க வந்தாச்சா… சீக்கிரம் வந்திருக்கலாமே… உங்களுக்காக அத்தையும் சாப்பிடாம காத்திட்டு இருக்காங்க. அத்தை நீங்களும் அவரோடவே உட்கார்ந்து சாப்பிடுங்க. நான் பரிமாறுறேன்.” என்று தச்சனின் குரல் கேட்டு அங்கு வந்து நின்றாள் குந்தவை.
குந்தவையைக் கண்டதும் தச்சனின் முகம் தானாய் மலர, மகனை பன்மையில் விளிக்கும் அவளை வியப்பாய் ஏறிட்டார் நீலா. நீலா எதுவும் சொல்லாமல் இருக்க, அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டு பொறுப்பை தனதாக்கிக் கொண்டாள்.
“மாமாவுக்கு கொடுத்துவிடுற மாதிரியே இவருக்கும் கொடுத்துவிட்டா இவரும் நேரமா சாப்பிடுவாரு, நீங்களும் நேரமா சாப்பிட்டு ஓய்வெடுக்கலாமே அத்தை.” உணவு பரிமாறிக்கொண்டு கேள்வியாய் நீலாவைப் பார்க்க, அவரும் இயல்பாய்,
“உங்க மாமா அளவுக்கு இவனுக்கு வேலை கிடையாது. மதியம் சாப்பிட வந்தா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு போகலாம்னு எவ்வளவு நேரமானாலும் இவனை வீட்டுக்கு வரச் சொல்லிடுவேன்.”
“அப்போ நாளையிலிருந்து நீங்க எங்ககூடவே சாப்பிடுங்க… அவர் முன்னபின்ன ஆனாலும் தாங்கிப்பாரு… நீங்க வயிறை காயப்போட வேண்டாம். நேரத்திற்கு சாப்பிடணும்.” என்றாள் குந்தவை.
பிரச்சனைகள் எல்லாம் சரியானது போன்ற பிம்பத்தை இவர்களின் உரையாடல் கொடுத்தாலும் அதை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தச்சன்.
“நிசமாவே நீங்கத் தான் பேசுறீங்களா இல்லை உங்களோட ஆவி எதுவும் பேசுதா?” என்று கண்களை சுருகியவனை இருபெண்களுமே முறைத்தனர்.
“நோ முறைப்ஸ்… இப்படி ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு மாதிரி இருந்தா நானும் என்னத்தான் நினைக்கிறது?”
“உங்களுக்கு என்ன பிரச்சனை இப்போ? பேசாம சாப்பிடுங்க. அத்தை எவ்வளவு நேரம் தான் பட்டினியா இருப்பாங்க.” என்று குந்தவை விழிகளை உருட்டி அதட்ட போலியாய் அவளை முறைத்துவிட்டு உணவில் கவனம் செலுத்தினான் தச்சன். நீலா மருமகளை மெச்சுதலாய் பார்த்துவிட்டு விரைவாய் உண்டு முடித்து எழ, தச்சனும் குந்தவையிடம் கண்சிமிட்டிவிட்டு அறைக்குச் சென்றான். 
மீதமிருந்த பாத்திரங்களை ஒழித்த குந்தவை, “பாத்திரம் எல்லாத்தையும் கொல்லையில் போட்டு தேச்சிடவா?” 
“அதெல்லாம் வேண்டாம். நீ கொல்லையில் போட்டுட்டு போய் படி, நான் அந்தியில தேச்சிக்கிறேன்.” என்றதை மறுக்கலாம் என்று நினைக்கும் போதே, “சொன்னா கேட்டுக்கணும் குந்தவை.” என்ற நீலாவின் அழுத்தமான கட்டளை தடுத்தது.
நீலா சொன்னது போல அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு அறைக்குள் நுழைய, அதற்காகவே காத்திருந்த தச்சன் பட்டென கதவை சாற்றி தாழிட்டான். அடுத்து என்ன செய்வான் என்ற யூகம் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் இன்னும் திறக்காமல் ஓரமாய் இருந்த தன் பைகளை எடுத்து அதிலிருந்த மாற்று உடைகளை பிரித்தெடுத்து அங்கிருந்த செல்ப்பில் அவனது உடைகளுடன் சேர்த்து அடுக்கினாள். புதிய உடைகளை அங்கிருந்த புதிய பீரோவிலும் அடுக்கினாள்.
“ஒருத்தன் வேலை செஞ்சி கலைச்சிபோய் வந்திருக்கானே அவனை கவனிப்போம்னு இல்லாமல் நீ என்னடி இப்போ தான் அடுக்கிக்கிட்டு இருக்க… புதுசா கல்யாணம் ஆனவங்க பண்ற வேலையா இது?” தன்னை கவனிப்பால் என்று எதிர்பார்த்து ஏமாந்தவன் எரிச்சலாய் மொழிந்து சுணக்கத்துடன் கட்டிலில் அமர்ந்துகொண்டான்.
“வேற என்ன வேலை செய்யணும் இப்போ?” என்று கேள்வி எழுப்பியபடியே அவன் புறம் திரும்பியவள், இருக்கரத்தையும் இடையில் வைத்து புருவங்களை உயர்த்த, அவளின் ஆர்வமின்மையில் அவனது உற்சாகங்கள் வடிந்தது. 
“ஒன்னுமில்லை போடி… உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு ஆசையா வந்தேன்… கேட்டா நீ சந்தோசப்படுவேன்னு பார்த்தேன்… ப்ச்… போ…” என்று கைகளை உதறிவிட்டு படுத்துக்கொள்ள அவனையே குறுகுறுவென பார்த்துக்கொண்டு நின்றாள் குந்தவை.
கோபித்துக் கொண்டாலாவது தன்னை நெருங்கி வருவாள் என்ற எதிர்பார்ப்பில் அவன் கண்களை மூடிக்கொண்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்திருக்க அவள் வந்தபாடில்லை.
“சரியான அழுத்தக்காரி… ராங்கி… திட்டனும், அடிக்கணும்னா மட்டும் சுறுசுறுன்னு இருப்பா… இப்போ பாரு அவள் பாட்டிற்கு அவள் வேலையை பார்த்துட்டு இருக்கா… இங்க நீ புலம்பிட்டு இருக்க…” என்று ஓசையில்லாமல் இதழ்களுக்குள்ளேயே முணுமுணுத்தவன் வேண்டுமென்றே அப்படியும் இப்படியும் திரும்பி ஓசை எழுப்ப அனைத்தையும் சிறுநகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் குந்தவை.
“கிட்ட வராளா பாரு… நீதான் மானக்கெட்டு அவள் எவ்வளவு அடிச்சாலும் திரும்பத் திரும்ப அவள்கிட்டேயே போய் பல்லை காட்டிகிட்டு நிக்குற…” சுயவசவுகள் தொடர்ந்து கொண்டிருக்க, துணிகளை அப்படியே போட்டுவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவனைத் தாண்டி உள்ளே ஏறி சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள் குந்தவை.
கொலுசொலியும், அவளது அசைவுகளையும் மிக அருகினில் உணர, ஆவலுடன் விழிகளை பிரித்தவன் பார்வையில் விழுந்தது புத்தகத்தை மடியில் திறந்துவைத்துக் கொண்டு அதிலேயே பார்வை பதித்திருக்கும் குந்தவை தான். 
பொங்கி வந்த பாலில் தண்ணீர் தெளித்தது போல சுரத்தை இழந்தவன் மறுபுறம் திரும்பி அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.
“ராட்சசி… தெரிஞ்சே வேணும்னு செய்றா…”
“இன்னைக்கு பிரியாணில காரம் கொஞ்சம் தூக்கலா போச்சு… சரி இனிப்பா ஏதாவது செய்யலாம்னு பார்த்தேன் ஆனால் வேண்டாம் போலிருக்கே… வேலை மிச்சம்… நாமளும் தூங்குவோம்.” என்று தச்சனை பார்த்துக்கொண்டே சொன்ன குந்தவை, அவன் தன்புறம் திரும்பவும் புத்தகத்தை மூடி சுவரோரம் வைத்துவிட்டு தலையணையை நேராய் போட்டு படுக்க ஆயத்தமானாள்.
தச்சன் திரும்பினானே ஒழிய வேறெதுவும் செய்யவில்லை. கண்களைக் கூட திறக்கவில்லை. ‘என்னை சுத்தல்ல வீட்டீல்ல நீயும் இப்போ அதை நல்லா அனுபவி..’ என்று கருவிக்கொண்டே அவன் இமைகளை பூட்டியிருக்க, இப்போது ஏமாறுவது குந்தவையின் முறை. 
கருத்து வேறுபாடுகள் இருக்கிறது தான்… தச்சன் செய்யும் சில காரியங்களும் பிடிக்கவில்லை தான்… பிரச்சனைகள் கூட அப்படியே தான் இருக்கிறது. ஆனால் பிடித்திருந்தது இந்த பெருந்தச்சனை.
அவ்வப்போது சண்டையே என்றாலும் அந்நேரத்தில் பேச்சினூடே எழும் சந்தேகங்களை வெள்ளந்தியாய் அவன் வெளிப்படுத்தும் யாவும் அவன் மனதில் ஒன்றை வைத்து வெளியில் ஒன்றை பேசுபவன் இல்லை என்பதை அப்பட்டமாய் காட்டும் அவனின் நேர்மை பிடித்திருந்தது அவளுக்கு. எவ்வளவு சண்டை போட்டாலும் திரும்பத்திரும்ப தன்னையே நாடும் அவனின் பாசம் பிடித்திருந்தது. அதிகாரமாய், வீம்பாய், செல்லமாய் என அவனுடன் மல்லுக்கு நின்று சீண்டுவது கூட இப்போது பிடிக்கத் துவங்கியுள்ளது. வீட்டினரிடம் தனக்காக பேசியிருக்கிறான் என்று சண்டையின் போது மாமியாரின் வழிவந்த செய்தியும், அவளுக்காய் அத்தனை பேர் முன்னிலையும் அவள் தந்தையின் இறுதி காரியங்களை தனதாக்கிக் கொண்டதும் அவளை நெகிழ்த்தவே செய்தது. இந்த நெகிழ்ச்சியும் பிடித்தமும் அவனிடம் வெகுநேரம் கோபம் கொண்டிருக்க விடுவதில்லை. அதற்காக அவனிடம் உருகி உருகி வழியவும் பிடிக்கவில்லை… அப்படி செய்யவும் இன்னும் வரவில்லை எனும்போது அவளுக்கு வருவதை தானே அவள் செய்ய முடியும்.
ஏமாற்றமாய் உணர்ந்தவள் படுத்துக்கொள்ள… சட்டென வந்து மேலே விழுந்தது அவனின் கரமும், காலும்.
“இனிப்பெல்லாம் வேண்டாம்… எவ்வளவு காரம் இருந்தாலும் எனக்கு பிரியாணி தான் வேணும்.” என்று செவியில் கிசுகிசுத்தவனை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக்கொண்டாள் குந்தவை.
சுகமாய் அவள் கழுத்தினில் முகம் புதைத்து அவளை அணைத்தவாறு படுத்திருந்தவன் இன்னுமே அவளை ஒண்டிக்கொள்ள காற்று தான் அவர்களுக்கிடையில் சிக்கி திணறவேண்டியிருந்தது.
“காலையில் வாங்குனது பத்தலையா? திரும்ப பிரியாணி கேட்குற?” அவளது கேள்விகூட காரமின்றி கொஞ்சலாய் வர இருவரின் அகமுமே நிறைந்திருந்தது.
“அது வேற இது வேற… அந்த பிரியாணிக்கான இன்றைய கோட்டா முடிஞ்சிடுஞ்சு… இப்போ வேற வேணும் எனக்கு.”
வேற என்ன வேணும் என்பதுபோல அவனைப் பார்க்க, தலையை நிமிர்த்தியவன் அவள் விழியை நேரே சந்தித்து, அவள் நாசியருகே ஊதியவன், “குணா சிகரெட் கொடுத்தான்.” என்று நிறுத்த, அவளின் முகம் சட்டென யோசனையை தத்தெடுத்து இலகுத்தன்மை மறைய காத்திருந்தது.
“நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.” என்றதும் தான் அவளின் மனம் சற்று அமைதியாகியது. ஆனாலும் சஞ்சலம் இருக்கத்தான் செய்தது, அதை பொறுமையாய் கேட்கவும் பழக முயன்றாள்.
“இன்னைக்கு மட்டுமா இல்லை எப்போதுமேவே?”
“என்னைக்குமே…” என்று மெல்லிய குரலில் ராகம் இழுக்க, அவன் முகத்தை வன்மையாய் பற்றி அழுத்தமாய் முத்தம் வைத்தாள் குந்தவை.
“ஹுர்ரே… என் பொண்டாட்டி அவளாவே முத்தம் கொடுத்துட்டா…” என்று சீண்டலாய் குரலை உயர்த்தியவனின் குரவளையை பிடித்து கடிப்பது போல பாவனை செய்துவிட்டு உற்சாகமாய் சிரிக்க, மீதமிருந்த அந்த பிற்பகல் பொழுதிலும் உற்சாகத்திற்கு பஞ்சமில்லை.

Advertisement