Advertisement

*10*
“என்னங்கடா நடக்குது இங்க? எவன் வீட்டுக் கூடாரத்தில் எவன் குளிர் காயுறது? எழுந்திருங்க தடிமாடுகளா?” என்று கடுகடுத்தவன் வயல் வரப்பில் அங்குமிங்கும் போதையின் பிடியில் விழுந்துக் கிடந்த அவனின் சகாக்களை காலால் எட்டி உதைத்தான். 
புலர்ந்து கதிர்களை வீசத் துவங்கிய ஆதவனின் வெக்கையைக் கூட பொருட்படுத்தாமல் மதுபோதையின் பிடியில் கீழே அலங்கோலமாய் கிடந்தவர்கள் தச்சனின் அதட்டலுக்கு சிறு அசைவைக் கூட காட்டவில்லை.
“எவ்ளோடா குடிச்சி தொலைச்சீங்க… இப்படி மட்டையாகிக் கிடக்குறீங்க…” என்று எரிச்சலுற்றவன் வேகமாய் மோட்டார் அறைக்குச் சென்று அங்கிருந்த வாளியில் தண்ணீர் பிடித்து வந்து அவர்கள் மீது ஊற்றினான்.
குணாவிடம் லேசாய் அசைவு தெரியவும் அவனிடம் சென்ற தச்சன் அவன் காலை எத்தியபடியே, “டேய் குணா எழுந்திருச்சு தொலைடா தடிமாடு… உன்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன். நீ என்ன செஞ்சு வச்சிருக்க?”
தச்சனின் தொடர் உசுப்பலில் கண்களை தேய்த்துக்கொண்டே எழுந்தமர்ந்து விழித்தான் குணா. கைகள் தரையில் ஊன்றியிருக்க நின்றுகொண்டிருக்கும் தச்சனை நிமிர்ந்து பார்க்க கண் கூசியது அவனுக்கு. அதனால் விழிகளை தாழ்த்தி குரலை மட்டும் உயர்த்தினான், “எப்போடா வந்த ஊரிலிருந்து?” 
“நான் வந்தது இருக்கட்டும். தினம் தண்ணி பாய்ச்சி, களையெடுக்க ஆள் பார்த்து வைக்க சொன்னா வயல் மொத்தத்தையும் களையெடுத்து வச்சிருக்க? தண்ணியையே பார்க்காம எல்லாமே காய்ந்து வாடி வதங்கி போயிருக்கு. போதாதற்கு எலி வேறு துளிர்த்து வந்திருந்த நெற்கதிரை கொறிச்சிட்டு போயிருக்க. அப்புறம் என்ன டாஷ்டா பண்ணிட்டு இருக்கீங்க இங்க? யாரைக்கேட்டு இங்க சரக்கடுச்சீங்க? அங்கங்க சரக்கு பாட்டில், பிளாஸ்டிக் பை, கப்பு, ஊறுகாய், சிப்ஸ் பாக்கெட்டுன்னு நிலத்தை குப்பையிடமா ஆக்கி வச்சிருக்கீங்க? ஒருவாரம் வயலை உன்னால ஒழுங்கா பார்த்துக்க முடியாதா? உன்னை நம்பி இதை ஒப்படைத்ததாலத் தான் கல்யாணத்திலும் மாமா காரியத்திலும் பிசி ஆகிட்டேன். ஆனா நல்லா புடுங்கி வச்சிருக்க…” 
தச்சனின் வசவில் தூக்கம் மொத்தமும் கலைந்து கைலியை சரிசெய்து கொண்டு நிதானமாக எழுந்தான் குணா.
“என்னடா மச்சி சூடா இருக்க?” 
“கொலைவெறியில் இருக்கேன்…” என்று கத்திய தச்சன் குணாவின் சட்டையை பிடித்து அருகில் இழுத்து சேதமாகியிருந்த பயிர்களை காண்பித்து, “என்னடா இதெல்லாம்? நீ பார்த்துக்குறேனு சொன்னதால தானே உன்னை நம்பி விட்டுட்டு போனேன்… ஆனால் என்ன பண்ணி வச்சிருக்க நீ?”
தன் சட்டைக் காலரை பிடித்திருக்கும் தச்சனின் கரத்தை வெடுக்கென தட்டிவிட்ட குணா, “ஒழுங்கா பேசு… நீ சொன்னதை தான் செஞ்சேன். தினம் மூணு வேலை தண்ணி பாய்ச்ச சொன்ன… உன் கல்யாணத்திற்கு முதல் நாள் பாய்ச்சினேன். அடுத்த நாள் உன் கல்யாணத்திற்கு வந்துட்டேன். திரும்ப அடுத்த நாளே கரெண்ட்டும் வரல தண்ணீரும் வரல. என்ன செய்றதுன்னு கேட்க உனக்கு போன் போட்டா உன் மாமனார் காரியத்தில் பிசியா இருந்த… போன் கூட எடுக்கல… சரின்னு நானே என்னனு ஈபியில் விசாரிச்சா… இந்த த்ரீ பேஸ் இலவச மின்சாரத்திற்கு நீ அப்பளை பண்ண கொடுத்த டாகுமெண்ட் எதிலோ ஏதோ மிஸ்டேக் இருக்குனு கரெண்ட்டை நிறுத்தி வச்சிருந்து இருக்காங்க.”
“மிஸ்டேக்கா? நான் எல்லாமே சரியாத்தானே கொடுத்தேன்.”
“எல்லா அசலும் நகலும் சரியாத்தான் கொடுத்திருக்க ஆனால் கொடுக்க வேண்டியதை சரியா கொடுத்தியா? இப்போ புதுசா ஒரு ஆபிசர் வந்திருக்கார்… அவருக்கு சில ஆயிரங்களை வெட்டுனாத் தான் இலவச மின்சாரமாம். பணமும் என் கையில் இல்லை… அதை புரட்டி கொடுக்க வேண்டிய இடத்தில கொடுத்து திரும்ப கரெண்ட் வாங்கவே மூணு நாளாச்சு. நேத்தி அந்தியில தான் திரும்ப கரெண்ட் விட்டானுங்க…” 
“அதுவரைக்கும் பயிறை காயப் போட்டிருக்க… எலி நாசம் பண்ணது கூட தெரியாம புடுங்கிட்டு இருந்துட்டு இந்த தடிமாடுகளையும் இங்க சரக்கடிக்க வச்சிருக்க… கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடா உனக்கு…”
“இதையே நானும் கேட்கலாம். கல்யாணமாகி ஒருவாரம் ஆகப்போகுது, இந்த ஒருவாரம் முழுதும் வயலுக்குத் தான் வரமுடியலை ஆனால் வயலில் வேலை நடக்குதா, ஏதாவது பிரச்சனை இருக்கான்னு ஒரு போன் போட்டு கேட்கக் கூடவா முடியல? நான் போட்டாலும் உனக்கு லைன் போகல.” தச்சனைப் போல கத்தவில்லை, ஆனால் வார்த்தைகள் அதற்கான அழுத்தத்தோடும், அர்த்தத்தோடும் வெளிவந்தது.
சட்டென்று தன் புறம் திரும்பிய குற்றச்சாட்டில் நிதானித்த தச்சன் மெல்லிய குரலில், “மாயவரம் போகும்போது போன் சார்ஜர் எடுத்துட்டு போகலடா… லோ பேட்டரியில் தான் யூஸ் பண்ணேன்… அங்கேயும் சரிவர சார்ஜ் போடமுடியலை… அந்த குட்டீசும் என் கூடவே இருந்தாங்க, நேரம் போனதே தெரியல… அதோட நீ பார்த்துப்பேன்னு தைரியத்தில் இருந்துட்டேன்…”
“இப்போ நல்லா வியாக்யானம் பேசு… எனக்கு இங்கன உன்னோட வயலில் மட்டும் வேலையில்லைடா… எங்க வீட்டு தோட்டத்துக்கு தேங்காய் வந்து இறங்கியிருக்கு. கொப்பரை தேங்காய் எல்லாம் பிரிச்சி எடுத்து, நார் உரிச்சு எக்ஸ்போர்டுக்கு அனுப்பனும், அப்பாவுக்குத் துணையா அந்த வேலையும் செஞ்சிட்டு இருக்கேன். அதில் இந்த எலிப் பிரச்சனை எல்லாம் கவனிக்கலடா…”
“அப்போ இவனுங்க?” என்று வயலில் சிதறிக் கிடந்த மற்ற கூட்டாளிகளை கைகாட்டினான் தச்சன்.
“உன் கல்யாணத்துக்கு ட்ரீட் வேணும்னு வந்து நின்னானுங்க… நான் தான் நீ வந்ததும் பார்த்துக்கலாம்னு சொல்லி அனுப்பியிருந்தேன். அப்படியும் கேட்காம தச்சன் தான் இல்லை இது நம்ம தச்சன் வயல் தானேனு அவன் கல்யாணத்தை கொண்டாடுவோம்னு இங்கன வந்து சரக்கடிச்சிருக்கானுங்க… விஷயம் தெரிஞ்சி இவனுங்களை போகச் சொல்லலாம்னு வந்தேன்… என்னையும் சேர்த்து குடிக்க வச்சிட்டானுங்க… வரப்பிலிருந்து தள்ளி தான் உட்கார்ந்து குடிச்சானுங்க… எப்போ இப்படி இங்கன வந்தோம்னு தெரியல…” என்று இப்போது பம்முவது குணாவின் முறை.
“ஆகமொத்தம் சொதப்பியாச்சு… அதுதானே…” என்று தரையை உதைத்துவிட்டு மோட்டார் அறையின் நிழலில் சென்று தரையில் அமர்ந்துகொண்டான் தச்சன். அவனைத் தொடர்ந்து வந்த குணாவும் மோட்டார் போட்டு தன்னை சுத்தம் செய்துகொண்ட பின் தச்சனின் அருகில் அமர்ந்துகொண்டான்.
“நாம நினைச்ச மாதிரி இது எளிதான வேலை இல்லை தச்சா… சாதிச்சிடுவோம்னு சொல்றதைவிட அதை செய்யறது கடினமா இருக்கு. ஏதாவது ஒன்றில் சொதப்பினாலும் மொத்தமும் நாசமாகிடும் போல… எலி வயலில் புகுந்து பயிரை நாசமாக்கும்னே எனக்கு இப்போ தான் தெரியும்… நேத்து கவனிக்கும் போது கொஞ்சம் வாட்டமா தெரியவும் ஏதோ பூச்சிப்பட்டிருக்கும்னு நினைச்சேன்…”
“ப்ச்… நான் ஏதேதோ பிளான் பண்ணி உழைச்சிட்டு இருந்தேன். கடைசியில் இப்படி ஆகிடுச்சு. தப்பிய பயிரை அறுவடை செஞ்சாலும் போட்ட காசு வராது. இதுக்கே ஒவ்வொன்றிற்கும் அப்பா கிட்ட தான் கடன் வாங்குனேன். நான் கூட சமாளிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனால் இங்க வந்து நிலவரத்தை பார்த்த பிறகு அந்த நம்பிக்கை துளியும் இல்லை.” என்று தச்சன் விட்டேற்றியாய் பேச ஆதரவாய் அவன் தோள் தட்டினான் குணா.
“குறுவை சாகுபடியில் விட்டதை சம்பாவில் பிடிச்சிடலாம்டா…”
“ம்ச்… குறுகிய காலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும் இந்த குறுவையிலேயே நம்மால ஒன்னும் கிழிக்க முடியல… இதில் சம்பா சாகுபடிக்கு உழைப்பும் காலமும் அதிகம் தேவை. குறுவை அளவுக்கு லாபம் சம்பாவில் வரும்னு சொல்ல முடியாது.” தச்சனின் குரல் தாழ்ந்திருக்க, முதல் முறையாய் ஏதோ சொல்லணா பயம் வந்திருந்தது அவனிடத்தில். எதனால் என்று ஆராயுமளவுக்கு பொறுமை இல்லாதவனுக்கு ஒன்று மட்டும் புரிந்திருந்தது… தோற்றுப் போனவனாய் குந்தவை முன் நிற்க அவன் தன்மானம் இடம் கொடுக்காது என்பது தான் அந்த மாற்றம்.
“அனுபவப்பட்டவர்கள் உதவி இல்லாம நாமா செய்வதில் சிக்கல்களும் தவறுகளும் வர்றது இயற்கை தான்… இந்த முறை செய்த தவறை அடுத்த முறை திருத்திப்போம். நீ வீம்பு பிடிக்காம உங்கப்பாகிட்ட ஆலோசனை கேளு. நம்ம வயசு அவரோட அனுபவம்.”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… அவர் ஏதாவது நொட்டம் சொல்லிட்டே இருப்பாரு… மாயவரம் போற வழியில் ஆடுதுறையில் நெல் ஆராய்ச்சி மையம் இருக்கு. அங்க தனிப்பட்டவர்கள் ஆராய்ச்சி செய்றத்துக்கு, புதுசா வேளாண்மையில் ஈடுபடுறவங்க, சுயதொழில் செய்றவங்க, லேடுசுக்குன்னு உதவுற மாதிரி ஏதோ தனி துறை இருக்காம். அடுத்த சாகுபடிக்கு அங்க போய் விசாரிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்… இப்போவே போக வேண்டியது தான்… அவங்க ஏதாவது உதவுறாங்கலான்னு பார்ப்போம்…”
“உங்கப்பாகிட்ட கேட்கக் கூடாதுனு அப்படி என்னடா வீம்பு உனக்கு? இந்த நிலத்தை மட்டும் அவரிடமிருந்து வாங்கி இருக்க? இதுவும் வேண்டாம்னு உதறித்தள்ளிட்டு உன் உழைப்பில் ஒரு செண்ட்டு நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்ய வேண்டியது தானே? அவரோட நிலமும் பணமும் வேணும் ஆனால் அவரோட ஆலோசனை வேண்டாமா? இதென்னடா நியாயம்?” பல நாட்களாகவே தச்சனிடம் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்ததை இன்று சந்தர்ப்பம் அமைந்ததும் கேட்டுவிட்டான் குணா.
அவனை நிமிர்ந்து பார்த்த தச்சன் பின் பார்வையை வயலில் செலுத்தி, “பெருசா ஒன்னுமில்லை… எவ்வளவு திட்டுனாலும் அடிச்சாலும் என்னை எங்கேயும் தனியா விட்டதில்லை. வெளியூரில் படிக்கிறேன்னு கேட்ட போது கூட விடல… கைக்குள்ளேயே வச்சி வளர்த்தாரு… அதுக்கு நியாயமான காரணமும் இருக்கு…. ஆனாலும் அவரோட துணை இல்லாம என்னோட உழைப்பில் எனக்கே எனக்குன்னு என் பெயர் சொல்றபடி ஏதாவது செய்யணும்னு ஆசை. அதனால் தான் அவர்கிட்ட நான் எதுவுமே கேட்குறது இல்லை. இது பூர்வீக வயல். அதுதான் இதை கேட்டு வாங்குனேன். மற்றபடி பிள்ளை முன்னேற பணம் கொடுக்குறது எல்லாம் அவரோட கடமைடா… அதைக் கூட பெரிய மனசு பண்ணி நான் கடனாத் தான் வாங்கியிருக்கேன்.” தீவிரமாய் ஆரம்பித்த பேச்சின் இறுதியில் தச்சனின் இயல்புநிலை திரும்பியிருந்தது. எவ்வளவு நேரம்தான் அவனும் சுயத்தை விட்டு சுயசோகச்சரிதை பாடிக்கொண்டிருப்பான். அதெல்லாம் அவனுக்கு செட்டே ஆகாதே… 
“சரி சரி… பிரெண்டு ரொம்ப பீல் ஆயிட்டீங்க… ஒரு தம் அடிங்க எல்லாம் சரியாகிடும்…” என்று குணா தச்சனின் கையில் ஒரு சிகரெட்டை திணிக்க, அதையே வெறித்துப் பார்த்தான் தச்சன்.
“என்னடா அதையே முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இருக்க… இந்தா லைட்டர்.” என்று அதையும் தச்சனின் கையில் திணிக்க, அந்த சிகரெட் துண்டை முன்னும் பின்னும் திருப்பி ஆராய்ச்சியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த நொடியே அதை வீசியெறிந்தான்.
“டேய் ஏன்டா தூக்கிப்போட்ட?” என்று கேள்வியாய் பார்த்த குணா மொத்த பாக்கெட்டையும் அவனிடம் நீட்டி, “நல்லாயில்லையா… வேற எடுத்துக்கோ…”
பார்வையை இலக்கின்றி ஓரிடத்தில் பதித்து, “எனக்கு வேண்டாம். நீ போய் அவனுங்களை எழுப்பு.” 
“இன்னைக்கு சூரியன் மேற்கிலிருந்து உதிச்சிதா என்ன?” என்றவன் வியப்பாய் மேற்கு நோக்கி பார்வையை செலுத்த அவன் தலையிலேயே ஒரு தட்டுதட்டினான் தச்சன்.
“என்னை பத்தி ஆராய்ச்சி பண்ணாம நீ போய் அவனுங்களை க்ளியர் பண்ணி அனுப்பிவிடு… இனி இந்த பக்கமே வரக்கூடாதுன்னு கண்டுச்சி அனுப்பு. நான் இருக்குற காண்டுல அவனுங்கள போட்டு வெளுத்துடுவேன் அப்புறம் அதுக்கும் வீட்டில் பேச்சு வாங்கணும். இப்போதைக்கு பிரச்சனை எதுவும் வேண்டாம்…”
“ஓ… இப்போ புரிஞ்சிடுச்சு. வீட்டம்மா உத்தரவா எல்லாம்? அதுதான் சார் இவ்வளவு பொறுப்ப்பா பேசுறீங்க…” என்று குணா கேலி போல இழுக்க, மென்னகை வெடித்தது தச்சனின் முரட்டு அதரங்களில். 
“உத்தரவு இல்லை மிரட்டல்.” என்றான் பல்லை காட்டிக்கொண்டு… 
“அதுவும் சரிதான்… அந்த பொண்ணு அடங்குற வகை இல்லை அடக்குற வகைனு எனக்கு எப்போவோ புரிஞ்சிடுச்சு…” என்ற குணாவின் நினைவுகளில் அவளை சந்தித்த முதல் முறையே தச்சன் செய்த திருகுதாளத்தில் காரணமேயின்றி இவன் திட்டுவாங்கியது வந்து சென்றது.

Advertisement