Advertisement

“பளார்…” என்ற ஓசையின் அதிர்வில் அங்கிருந்த அனைவருமே திரும்பப் பார்த்தனர்.
பள்ளி சீருடையில் இருந்த சிறுமியொருத்தி பயத்தில் சற்று நடுங்கினாலும் அவளது கரம் என்னவோ தன் எதிரில் இருந்தவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.
“இதை முன்னாடியே செய்திருந்தால் இத்தனை நாள் உன் பின்னால் வந்து உனக்கு தொல்லை கொடுக்கும் துணிச்சல் இவனுக்கு வந்திருக்குமா?” அதிகாரமும், ஆளுமையும் போட்டி போட்டுக்கொண்டு அவளின் குரலிலும் உடல்மொழியிலும் வெளிப்பட, அவளின் கரத்தை பிடித்து அவளை பின்னே இழுக்க முயன்று கொண்டிருந்தாள் அவளது தோழி நித்யா, “நமக்கு எதுக்கு வம்பு? நீ வாடி நாம போவோம்… அந்த பொண்ணோட வீட்டில் பார்த்துப்பாங்க.”
நித்யாவின் பிடியை உதறியவள், “இப்படி எல்லோரும் ஒதுங்க ஒதுங்கத்தான் இவனுங்களுக்கு எகத்தாளம் கூடிப்போச்சு. டேய் என்ன படிக்குற நீ?” அடிவாங்கி நின்று கொண்டிருந்தவனை பார்த்து கேள்வி எழுப்பினாள் அவள்.
இவளின் அதிகாரக் குரலில் சற்று பம்மியவன், “நீங்க எதுக்கு அதெல்லாம் கேட்குறீங்க?” என்று எதிர்கேள்வி எழுப்ப, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் முன்னே வந்தார்.
“செய்யுற தப்பை எல்லாம் செஞ்சிட்டு அந்த பொண்ணையே கேள்வி கேட்குற. படிக்குற வயதில் படிக்காம ஊர் சுத்திட்டு பொண்ணுங்ககிட்ட வம்பு செய்துட்டு இருக்க. இவனை எல்லாம் போலீசில் பிடித்து கொடுக்கணும்.” என்று சத்தம் போட பதறிவிட்டான் அவன்.
“அந்த பொண்ணு பார்க்க நல்லா இருந்துச்சு சும்மா பார்த்தேன், போலீஸ் எல்லாம் வேண்டாம்.”
“பொண்ணுங்க என்ன காட்சிப் பொருளா அழகா இருக்குனு நின்று நிதானமா நீங்க பார்க்கறதுக்கு? போலீசிடம் சொல்லி தோளை உரிச்சிடுவேன்…நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதிலே சொல்லல… என்ன படிக்குற நீ?”
“பாலிடெக்னிக் செகண்ட் இயர் அக்கா. நீங்க போலீசிடம் எல்லாம் சொல்லாதீங்க. வீட்டுக்கு தெரிஞ்சாவெளுத்துடுவாங்க. இனி இதுமாதிரி செய்ய மாட்டேன் அக்கா. இந்த முறை மன்னிச்சிடுங்க,” என்று அவளிடம் இறைஞ்சினான் அவன். கூட்டம் அதிகம் சேர்வது போல இருக்க, யாரிடமும் உதைவாங்க தெம்பில்லை அவனுக்கு.
“அந்த பயம் இருந்திருந்தால் இப்படித் தான் இந்த பொண்ணையே ஒருவாரமா தொடர்ந்து வந்திருப்பாயா? போலீஸ் என்றதும் மட்டும் இப்படி பம்முர… உன்னை எப்படி நம்புவது?” என்று நம்பாமல் அவனை முறைத்தாள் அவள்.
“அக்கா அக்கா ப்ளீஸ்… நீங்க என்னை நம்பலாம். நான் இனி இந்த பொண்ணு இருக்குற பக்கமே இல்லையில்லை யாரையுமே இப்படி தொந்தரவு செய்ய மாட்டேன்.”
“உன் பெயர், உன் அப்பா, அம்மா பெயர், நம்பர் எல்லாம் கொடுத்துட்டு போ. இனி ஒருதரம் இந்த பொண்ணுக்கு உன்னால் பிரச்சனை வந்தால் போலீஸ் லாக்அப் தான்,” என்று அவனை மிரட்டியவள் அவனிடமிருந்து அவனைப் பற்றிய எல்லா தகவல்களையும் வாங்கிவிட்டு தான் அனுப்பினாள். கூட்டமும் மெல்ல கலைந்தது.
அவன் சென்ற பின்பு இப்போது முறைப்பு பள்ளிச்சசீருடையில் இருந்தவள் மீது பாய்ந்தது.
“ஒரு வாரமா உன் பின்னாலே வந்து உனக்கு அசவுகரியம் கொடுக்குறான் நீயும் அமைதியா ஒதுங்கி ஒதுங்கி போற? அவனை எதிர்த்து என்னடான்னு கேட்க வேண்டாம்? இதுமாதிரி பொண்ணுங்க பயந்து பயந்து ஒதுங்கிப் போகிறதால் தான் அவனுங்க தறிகெட்டு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்னு பொண்ணுங்க பின்னாடி சுத்துறானுங்க… இப்போ நான் சொன்னதால அவனை அடிச்ச… நாளையே அவன் திரும்ப உன் பின்னாடி வந்தா என்ன செய்யுவ?” என்று கேட்க, அந்த சிறுமி அழுதே விட்டாள்.
“நீங்க சொன்னதாலத் தான் அடிச்சேன். இப்போ என்னக்கா இப்படி கேட்குறீங்க?”
“நீ அந்த பொண்ணுக்கு உதவி செய்றேன்னு நினைத்தால் இக்கட்டில் மாட்டிவிட்டுருவ போலிருக்கே… நாளைக்கே இந்த பிரச்சனையால் அந்த பொண்ணு வீட்டில் படிப்பை நிறுத்திட்டா என்ன செய்வ?” துவக்கத்தில் இருந்தே இந்த களீபரத்தை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் இவளைக் கேட்க,
“பிரச்சனை வரும்னு அமைதியாக போக ஆரம்பித்தால் நம்மை திரும்ப அடுப்பங்கரைக்கு அனுப்பிடுவாங்க அக்கா. நமக்கு இடைஞ்சல் கொடுத்தால் எதிர்த்து நிற்கணும். நம்மோட விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடந்தால் வெற்றி தோல்வியை பற்றி யோசிக்காது எதிர்ப்பு தெரிவிக்கணும். நம்முடைய மறுப்பை அழுத்தமா பதிவு செய்யணும். அப்படி ஒவ்வொருவரும் செய்ய ஆரம்பித்தால் என்றாவது ஒருநாள் நிச்சயம் நம் குரலுக்கு செவி சாய்ப்பாங்க. 
இதோ இன்னைக்கு அடிச்சதும் பம்முனானே அதே மாதிரி இந்த பொண்ணு முதல் நாளே அவனை முறைத்திருந்தால் கூட அவளது எதிர்ப்பு அவனிடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதை விட்டுவிட்டு எல்லாவற்றிற்கும் பயந்து ஒடுங்கினால் நம்மை அடக்கிவிடலாம் என்ற ஆணவம் வந்துவிடும். அடக்கும் வழியை அவர்களுக்கு நாமே வெளிச்சம் போட்டு காண்பித்துவிட்டு பின் நம்மை அடக்குறாங்கன்னு புலம்பி ஒரு பயனும் இல்லை. முடிந்த வரை முயற்சி செய்யணும் இல்லையா நமக்கு நெருக்கமானவர்களிடம் பிரச்சனையை பகிர்ந்து தீர்வு கண்டுபிடிக்கலாம். பயத்தின் பின்னால் ஒளிந்தால் எதுவும் கிடைக்காது.” என்று தெளிவாக பேசிவளுக்கும் பலவீனம் என்ற ஒன்று இருக்கிறதே… 
அவளுக்கு மட்டுமா இவ்வுலகில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது பலம் இருப்பது போல பலவீனமும் இருக்கத்தான் செய்கிறது. அந்த பலவீனத்திற்கு இடம்கொடுத்தால் பலம் கூட பலமிழந்துவிடும் என்று புரியத்தான் நேரமெடுக்கிறது.
“நான் இனிமே தைரியமா இருக்கேன் அக்கா.” என்றாள் அச்சிறுமி இடைபுகுந்து. 
மென்முறுவல் பூத்தவள், “என்ன படிக்குற?” 
“பத்தாவது அக்கா.” என்று பதில் கூறினாள் அவள்.
“இனி பயப்படாம எதிர்த்து நிற்கணும். உனக்கு உடன்பாடில்லைனு நீ வெளிப்படையா காட்டினால் குறைந்தது ஒரு சதவிகித பேராவது உன்னை நெருங்க மாட்டாங்க.” என்றவள் மேலும் சிலபல அறிவுரைகளை வழங்கிவிட்டு தன் கல்லூரி பேருந்திற்காக காத்திருந்தாள்.
***
“கூட்டமா இருந்திருக்குமே தரிசனம் சிறப்பா கிடைச்சுதா?” 
மூவரும் வீட்டில் நுழைந்ததுமே கேள்வியே வரவேற்ப்பாய் வந்தது.
“கொஞ்சம் தள்ளுமுள்ளா தான் இருந்தது ஆனால் எனக்கு நிறைவான தரிசனம் கிடைச்சுது.” என்று நீலா பதில் கூறிவிட்டு நடுமுத்தத்தில் கால்களை நீட்டி முதுகை தூணில் சாய்த்து ஓய்வாய் அமர்ந்தார்.
“அதென்ன உனக்கு மட்டும் நிறைவான தரிசனம்?” அடுத்த கொக்கி போட்டார் அவரது மாமியார்.
“வழக்கம் போல உங்க பேரனும் அவரும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க, இது சரிப்பட்டு வராதுன்னு நான் மட்டும் பார்த்துட்டு வந்தேன். நீங்க வராததும் நல்லதா போச்சு, முதியவர்களுக்கு தனிவழினு போட்டுட்டு எல்லோரையும் அந்த வழியிலே விட்டாங்க. எங்க திரும்பினாலும் தலை தான் தெரிந்தது, காற்றுகூட சிரமப்பட்டு தான் உள்ளே நுழைஞ்சிருக்கும்.” என்று நீலா கூறவும், தன் அருகிலேயே வைத்திருந்த தண்ணி சொம்பை அவரிடம் நீட்டி, “வந்ததும் காலை நீட்டி உட்கார்ந்துட வேண்டியது. வெயிலில் களைச்சு போய் வந்திருக்காங்க என் புள்ளையும், பேரனும் தண்ணி கொடுக்கணும்னு தோணல…” மாமியார் வாடை மெலிதாய் எட்டிப்பார்த்தது அவரிடம்.
“எனக்கு இப்போ தண்ணி வேண்டாம், தச்சனுக்கும் வேண்டாம்னு நினைக்கிறன். வரும் போதே பன்னீர் குடிச்சிட்டு தான் வந்தோம்.” மனைவியை விட்டுக்கொடுக்காமல் அதே சமயம் தாயை எதிர்த்தும் பேசாமல் மனைவிக்கு சிபாரிசு செய்தார் அன்பரசன். இது அவ்வப்போது நடக்கிற கூத்து தான் என்றாலும் எப்போதும் போலவே தந்தையை கேலிப்பார்வை பார்த்தான் தச்சன். (பன்னீர் – உலர் ரோஜாப்பூவினில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சாரோடு சர்க்கரை கலவை சேர்த்து தயாரிக்கப்படும் பானம்)
“ஆமா கிழவி வரும்போது நல்லா சில்லுனு ஆளுக்கு ஒரு பன்னீர் குடிச்சிட்டு தான் வந்தோம். அதான் வீட்டுக்கு வந்தாச்சே, இப்போ நான் கிளம்பவா அம்மா?” என்று நீலாவைப் பார்த்தான் தச்சன். அவர் தானே கோவிலுக்கு சென்றுவிட்டு நேரே வீட்டிற்கு தான் வரவேண்டும், அதன் பிறகு வேண்டுமென்றால் வேறெங்கும் சென்றுகொள் என்று வீடு வரை இழுத்து வந்திருந்தார்.
“நைட் சீக்கிரம் சாப்பிட வந்துடு தச்சா… ரொம்ப நேரம் வெளியில் சுத்தாத, நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடு.” என்று வழமையாய் சொல்லும் அதே செய்தியை சொல்ல, தலையாட்டிவிட்டு வெளியேறியவன் பைக்கில் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
“நீ சொல்லக்கூடாதா நீலா… எவ்வளவு வேகமா போறான் பாரு… எப்போ தான் மாறாப் போறானோ…” தச்சன் அதிவேகமாய் வண்டியை கிளப்பிய சத்தம் உள்ளே முத்தம் வரை கேட்க, அக்கறையுடன் மனைவியிடம் மகன் நலம் வேண்டினார் அவர்.
“இளரத்தம் அப்படித்தான் இருப்பான் அரசு. குடும்பம் ஆகிட்டா எல்லாம் தானா அடங்கிடும்.” என்று மாமியார் சொல்வதை கேட்டதும் ஏதோ நினைவு வந்தவராய் கணவர் புறம் திரும்பிய நீலா, “நம்ம திவ்யா மாமியார் சொந்தத்தில் ரெண்டு மூணு பொண்ணு இருப்பதா சொன்னாங்க. யாரு என்னனு விசாரிங்க. தச்சனுக்கும் ஒத்துவந்தா பார்ப்போமே…”
“அதற்குள் அவனுக்கு பொண்ணு பார்க்கணுமா? இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே…” என்று இழுத்தார் அன்பரசன்.
“இந்த ஆவணி வந்தா இருபத்தேழு முடிஞ்சிடும். இப்போ பார்க்க ஆரம்பித்தால் சரியா இருக்கும். இன்றைக்கே நல்ல நாள் தான். போன் போட்டு மாப்பிள்ளையிடம் விசாரியுங்க.” என்று நீலா உந்த, அன்பரசன் அதற்கு மேல் மறுக்கவில்லை.
மாப்பிள்ளைக்கு அழைத்து பேச, அவர் வேறொருவர் எண் கொடுத்து பேசச் சொல்ல, அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே அந்த வீட்டின் மருமகளை முடிவு செய்துவிட்டார் அன்பரசன்.
காரணம் ஒன்றே ஒன்று தான்… பெயர். அவளது பெயர் குந்தவை. அவர் பிரமித்து ரசிக்கும் சோழ வம்சத்தின் தன்னிகரற்ற பெண்களில் குறிப்பாய் ராசராசனின் தமக்கை பெயரும், அவரது மகள் பெயரும் குந்தவையே… 

Advertisement