Advertisement

*9.2*
“முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்று முணுமுணுத்துவிட்டு நகர்ந்தவன் டூத்ப்ரஷ்ஷில் பேஸ்ட் வைத்து பல் துலக்க, விரைந்து அவனை நெருங்கி அவன் முதுகிலே ஒரு அடி போட்டாள் குந்தவை.
சுள்ளென்று விழுந்த அடியில் துள்ளியவன் விரைவாய் அவள் கை பிடித்துத் தடுத்து அவளை தன் முன்னே இழுத்தான், “என்னடி பிரச்னை உனக்கு? சின்ன பிள்ளை மாதிரி அடிக்கிறது குதிக்குறதுனு இல்லாத குரங்கு சேட்டை எல்லாம் பண்ற?”
அவன் பேச்சில் எரிச்சல் வந்தாலும் அதை உதறித்தள்ளியவள் மீண்டும் துவக்கமாய், “பல்லு கூட விளக்காம உனக்கு அப்படியென்ன அந்த கருமம் வேண்டிக்கிடக்கு?” 
“திரும்ப முதலிலிருந்து ஆரம்பிக்காத… உன் மாமியார் மாமனார் எல்லாம் கோச்சிக்கிட்டு போயிட்டாங்க… போய் அவங்களை சமாளி. அப்படியே எனக்கொரு காபி போட்டு வை… செம்ம பசியில் இருக்கேன்…” என்று சாமர்த்தியமாய் அவளை திசைதிருப்பிவிட்டு தன் வேலையைத் தொடர, குந்தவை யோசனையுடன் அப்படியே நின்றுவிட்டாள். ஏற்கனவே இந்த குடும்பத்தோடு சுமூக உறவு இல்லை, இப்போது வந்த இரண்டாம் நாளே அனைவரையும் பகைத்துக்கொண்டு என்ன வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? அவர்களும் வருந்தி, இவளும் எரிச்சலாய் முகத்தை திருப்பிக்கொண்டோ இல்லை எப்போது பிரச்சனை சரியாகும் என்று தவிப்புடனோ நாட்களை கடத்தி நிம்மதி இழப்பதை விட வேறென்ன சாதித்துவிட முடியும்?
“என்னடி யோசனை? மசமசன்னு நிக்காம நீயும் போய் சீக்கிரம் ஏதாவது சாப்பிடு. உனக்கும் இன்னைக்கு சீக்கிரம் பசியெடுக்கும்… நேத்து ஹெவி ஒர்க் லோட் ஆகிப்போச்சு.” என்றவன் கைகளை மேலேத் தூக்கி சோம்பல் முறித்தபடியே அவளை மேலிருந்து கீழ் அளப்பது போல பார்த்து வைத்தான். அவனின் பார்வை மாற்றத்தில் சுதாரித்தவள், அவன் சொற்கள் கோடிட்டு காட்டும் நிகழ்வையும், எண்ணம் செல்லும் திசையுமறிந்து இலகத்துடிக்கும் மனதையும், வெளிப்பட போராடும் வெட்கத்தையும் ஒருசேர முறைப்பிற்கு பின்னால் ஒளித்து மறைத்துத் தோற்றவள்,
“இவ்வளவு பேச்சு வாங்கின பிறகும் உன் பார்வை பேச்சு எல்லாம் சரியில்லையே… பேச்சை திசை திருப்பலாம்னு ப்ளானோ… ஒழுங்கு மரியாதையா எல்லாத்தையும் மூட்டைகட்டி வச்சிட்டு உருப்புடுற வழியைப் பாரு…” என்றுவிட்டு அவள் உள்ளே சென்றுவிட, இரவின் மிச்சங்கள் நினைவில் வந்து அவனை இம்சித்து நடப்பில் இருக்கும் கலக்கங்களை மழுங்கச் செய்தது. உல்லாசமாய் முகம் கழுவி காலைக்கடன்களை முடித்துவிட்டு உள்ளே நுழைய, குந்தவை முற்றத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள். 
நேரே சென்று அவளை இடித்துக் கொண்டு நெருங்கி அமர்ந்தவன், அவள் கையில் இருந்த தம்ளரை பிடுங்கி அதிலிருந்த மீதத்தை மடக்கென்று தன் வாயில் சாய்த்துக் கொண்டான்.
“என்னோடதுடா அது…” என்று நடந்ததை உணர்ந்து குந்தவை அவனிடமிருந்து தம்பளரை பிடுங்கும் முன்னரே மொத்தத்தையும் காலி செய்திருந்தான் தச்சன்.
“யாருடையதா இருந்தால் என்ன… எல்லா எச்சமும் எப்போவோ மிச்சமில்லாம சங்கமம் ஆகிடுச்சு…” என்க, அவளது உடல் சிலிர்த்து அடங்கியது. 
வேகமாய் தன் தோளிலிருந்து சரிந்த துப்பட்டாவை சரிசெய்துக் கொண்டவள், “வெக்கம்கெட்டவனா இருக்கடா நீ… எங்க என்ன பேசனும்னு விவஸ்தையே இல்லை உனக்கு.” என்று அடிக்குரலில் சீறிவிட்டு குந்தவை எழப்பார்க்க, அவள் கரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டான் தச்சன்.
“எங்க ஓடுற? ஏதோ இப்போ தான் பிரியாணி கிடைச்சுது அதுக்குள்ள தயிர் சாதம் மோடுக்கு போற… இந்த அப்பாவிக்கு ஒரு மினி பிரியாணியை பார்சல் பண்ணிட்டு போயேன்…”
“நீ அப்பாவியா? நல்லா சுத்துற ரீலு… ஆமா அதென்ன புதுசா மினி பிரியாணி?”
“அப்படி கேளுடி என் செல்லக்குட்டி…” என்று கொஞ்சலாய் அவள் தாடை பிடிக்க, பட்டென்று தட்டிவிட்டாள் அவனது கரத்தை.
“கொஞ்ச நேரம் முன்னாடி தான் சண்டை போட்டோம்… அது நியாபகம் இருக்கா இல்லையா? எதுவுமே நடக்காதது மாதிரி வந்து கொஞ்சிகிட்டு இருக்க… இன்னும் இங்க எல்லோரும் கோபமாத் தான் இருக்காங்க… நீ செய்த காரியத்திற்கு நான் எல்லோரோட வருத்தத்துக்கும் ஆளாகிட்டேன். அதெல்லாம் சரி பண்ணனும்னு கூட தோணலையா உனக்கு?”
“ச்சு… நல்லா போயிட்டு இருக்கும் போது எதுக்குடி பிரேக் போடுற… அவங்க எல்லாம் இங்கேயே தானே இருக்கப் போறாங்க… பேசிக்கலாம்.” என்று அலட்டலின்றி பதில் கூறினான் தச்சன்.
“எதுனாலும் அலட்சியம் தான் உனக்கு… பிறந்துட்டோம் எப்படியோ வாழ்ந்துட்டு போவோம்னு வாழுற. அடுத்தவங்க மனசுல என்ன இருக்கும், நம்ம செயலால் அவங்க மனசு எவ்வளவு வருத்தப்படும்னு யோசிக்கிறதே கிடையாது…” 
“நீ யோசிச்சியா?” கொஞ்சலாய் துவங்கிய பேச்சுக்கள் எங்கோ சென்று தீவிரமாய் மாறிவிட தச்சனின் முகமும் இறுகியது.
தன் மேல் குறை இருப்பது போல தச்சன் மொத்தமாய் மாற்றிப் பேச குந்தவையால் அமைதியாய் பேசிட முடியவில்லை, “நான் என்ன யோசிக்கல?”
“என்ன யோசிச்ச நீ? கல்யாணம் ஆன பின்னான இத்தனை நாளும் உன்னை பற்றி மட்டும் தான யோசிச்ச? உனக்கு பிடிச்ச மாதிரியான வேலையை தான் நான் பார்க்கணும், சிட்டியில் இருக்கனும், உங்கக்கா பிள்ளைங்களோட கடமையை உன்னோடதா மாத்திக்கணும்னு இப்படி எல்லாமே உன்னை சுத்தியே மட்டும் யோசிச்சிட்டு இப்போ என்னவோ என்னை மட்டும் சொல்ற? 
என்னைக்காவது இங்க இருக்குறவுங்க பற்றி யோசிச்சியா? என் அம்மா பேசல பேசலனு சொல்ற அதை சரிபண்ண என்ன முயற்சி செஞ்ச? இல்லை அவங்களையும் உன் குடும்பமா பார்த்தியா? இப்போ தான் இங்க வந்திருக்க, கொஞ்ச நாளானால் எல்லாம் சரியாகிடும்னு பார்த்தால் நீ அதற்கான முயற்சி எடுக்குற மாதிரியே தெரியல… 
ஆனால் நான் உன் பேச்சுக்கு ஆடணும்னு நினைக்குற… நீ எள்ளுனு சொன்னால் நான் எண்ணையாய் இருக்கணும்னு கட்டளை போடுற… நீ அது மாதிரி இருந்தியா? இங்கன அம்மா கூட நீ ஒட்டாம இருக்குறது எனக்கு எவ்வளவு வருத்தம் தரும் என்கிற யோசனையாவது இருக்கா உனக்கு?” என்று தச்சன் பொரிந்து தள்ளிவிட குந்தவை மலைத்து நின்றுவிட்டாள். 
எல்லா தவறும் அவள் மீது தான் என்பது போல அழகாய் பேசிவிட்டானே… அப்போது இவ்வளவு நாள் அவளுக்காய் அவன் செய்தது எல்லாம் அவன் குடும்பத்தினருடன் அவள் ஒட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தானா… என்று குந்தவையின் சிந்தனைகள் தாறுமாறாய் போக, நீலா கண்ணாம்பூச்சியாய் விடுத்து பூனைக்கு மணி கட்ட களம் இறங்கிவிட்டார்.
“நானும் அப்போலேந்து பார்த்துட்டு இருக்கேன் ரெண்டு பேரும் நான் நான்னு போட்டி போட்டுக்கிட்டு இருக்கீங்க. இங்க ஏதாவது போட்டியா நடக்குது? ரெண்டு திக்கா நின்னுகிட்டு சண்டை போடத்தான் கட்டி வச்சோமா? ஏதோ சின்னஞ்சிருசுங்க புரியாம எல்லாம் செய்றீங்கன்னு பார்த்தால் எல்லை மீறி போயிட்டு இருக்கீங்க…
ஏம்மா குந்தவை உனக்கு அவன் செய்யறது பிடிக்கலைன்னா உனக்கு பிடிக்கலைனு தன்மையாய் எடுத்து சொல்லணும். ஒரு முறை சொல்லி கேட்கலையா இன்னொரு முறை சொல்லிப்பாரு அப்போதும் கேட்கலைன்னா அவனை கண்டிச்சு வை. அதை விட்டுட்டு எடுத்தவுடனேயே வன்மையை கையிலெடுத்தால் வெறுப்பும் பிடிவாதமும் தான் வரும்… 
டேய் தச்சா… நீ என்னடா வீம்பு பேசிட்டு திரியுற? இப்போ தான் அவள் அப்பா நினைப்பிலிருந்து வெளியே வந்திருக்கா… அதுக்குள்ள அவளை காய்ச்சுர… அவள் இல்லாத போது எங்ககிட்ட வாய் கிழிய குந்தவைக்கு ஆதரவா பேசுனியே அதை எங்ககிட்ட சொன்னா மட்டும் போதாது கொஞ்சமாவது அவகிட்டேயும் காட்டணும். உனக்கு எது முக்கியம்னு நீ சொன்னால் தான் அவளுக்கும் தெரியும். அதை விட்டுட்டு எங்ககிட்ட அவள் சார்பாகவும் அவகிட்ட எங்க சார்பாகவும்னு ரெண்டு பக்கமும் ஆட்டம் ஆடுனா இப்படி தான் முடியும்.
ரெண்டு பேரும் நிதானமா நான்னு ஏறி இருக்குற தலைக்கணத்தை இறக்கி வச்சிட்டு பேசுங்க… இனி இந்த நடுவீட்டில் சண்டை போட்டுக்குற வேலையெல்லாம் வேண்டாம்…” என்க, அனைவருமே நீலாவை வியப்பாய் ஏறிட்டனர்.
“என்ன நீலாவதி இப்படி பல்டி அடிச்சிட்ட… நான் உன்னை என்னவோன்னு நினைச்சேன்…” என்று தச்சன் கேட்டேவிட்டான்.
“ஒருமுறை இறங்கி வந்துட்டா எல்லாம் சரியாகிடுச்சுனு அர்த்தம் இல்லை.” என்று குந்தவை முதலில் சொன்னதை இப்போது நீலா சொல்ல, ‘அப்போ இன்னும் எதுவுமே சரியாகலையா.’ என்ற எண்ணம் தான் அனைவர் மனதிலும் ஓடியது.
தலையை சிலுப்பிய அன்பரசன் தச்சனிடம் கண்காட்டிவிட்டு வெளியே திண்ணைக்குச் சென்றுவிட, குந்தவையின் புறம் திரும்பிய தச்சன், “என்கூட வா.” என்றுவிட்டு அன்பரசனை தொடர்ந்தான். நீலாவை புரியாத பார்வை பார்த்த குந்தவையும் அன்ன நடையிட்டு வெளியே சென்றாள்.
“பாட்டி நீயும் உன் பங்குக்கு ஏதாவது சொல்றது?” திவ்யா கிசுகிசுப்பாய் மங்களத்தின் காதை கடிக்க,
“அடிபோடி… உங்கண்ணனும் உங்கண்ணியும் செய்யுற கூத்தெல்லாம் பார்க்கும் போது ஏதோ சீரியல் பாக்குற மாதிரியே இருக்கு. நல்லா பொழுது போகுது… இவங்களுக்கு உன்அம்மாகாரி தான் லாயிக்கு. இதுங்க எப்படி பிள்ளைங்களை பெத்து அதுங்களை வளர்க்கப் போகுதுங்களோ தெரியல…” என்று பதிலுக்கு பெருமூச்செடுத்து அசட்டையாய் சிரித்தார் மங்களம்.
“அண்ணனுக்கு இருக்குற குசும்பெல்லாம் உன்னோட கைங்கரியம் தான்னு இப்போ தான் தெரியுது.” என்று திவ்யாவும் சேர்ந்துகொண்டு சிரித்தாள். 
“சிரிக்காம போய் உங்கம்மாகிட்ட பேசிப்பாரு… அவ என்ன நினைப்புல இருக்கான்னே தெரியல…” என்று திவ்யாவை விரட்டினார் மங்களம். 
“அம்மாவை சும்மா ஏதாவது சொல்லிகிட்டே இருக்காத பாட்டி…” என்று அன்னைக்கு பரிந்து பேசிவிட்டே நகர்ந்தாள் திவ்யா.
***
“எதுக்கு கூப்பிட்ட? காலையிலேயே பஞ்சாயத்தை கூட்டி கடுப்பேத்துறீங்க.” சுற்றி வளைக்காமல் நேரே காரியத்தில் இறங்கிவிட்டான் தச்சன்.
“அதை நான் சொல்லனும்டா… காலையிலேயே பஞ்சாயத்தை இழுத்தது யாரு?” 
“நான் இல்லை. உன் மருமக தான் இழுத்தா…” என்று அன்பரசனும் தச்சனும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருக்க, தச்சன் தன் பெயரை எடுக்கவும் திடுக்கிட்டு அவனை முறைத்தாள் குந்தவை. 
“நீலா சொன்னதை கேட்டீங்க தானே ரெண்டு பேரும்… இந்த பிரச்சனையில் தப்பு உங்க ரெண்டு பேர் மேலையும் இருக்கு. தச்சன் புகைச்சது தப்புனா அவனை கண்டிக்குறேன்னு கோபத்தில் நீ மொத்தமாய் கொளுத்தியதும் தப்பு தான் குந்தவை. அவன் எந்த காரணத்துக்காக புகைக்கக் கூடாதுனு நினைச்சியோ அதைத்தான் கடைசியில் நீ செஞ்சிருக்க. அவன் ஒத்தையா புகைச்சான் நீ மொத்தமா செஞ்சிட்ட. நீங்க செஞ்ச செயலுக்கு பின்னால் இருக்கும் காரணம் வேறன்னாலும் பாதிப்பு ஒன்னு தான். இனியாவது எது செய்வதாய் இருந்தாலும் ஒழுங்கா யோசித்து செய்யுங்க. ஆர்வக்கோளாறில் எதையாவது செஞ்சு எங்களை தலைகுனிய வச்சிடாதீங்க.” என்று அன்பரசன் பேச சுருக்கென்றது குந்தவைக்கு. அப்படியென்ன தலைகுனிவை நான் ஏற்படுத்திவிடுவேன் என்ற சீற்றம் அவளுள் சீற, அதை வெளிப்படுத்தியும் விட்டாள்.
“குறுக்க பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மாமா. நீங்க சொன்ன மாதிரி இன்னைக்கு நான் அதிகமா உணர்ச்சிவசப்பட்டிருக்க கூடாது, என் மேலும் தப்பு இருக்கு ஆனால் அதற்காக குடும்பத்தை தலைகுனிய வைக்குற அளவுக்கு எதுவும் செஞ்சிட மாட்டேன்.” என்று நேராய் பேசிட தச்சனுக்கு சுள்ளென்றது. நான் என் தந்தையை எப்படினாலும் பேசுவேன் நீ பேசக்கூடாது என்ற அதிகாரம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது, “ஏய் நீ அவரை எதிர்த்து பேசுற வேலையெல்லாம் வச்சிக்காத.”
“நான் எங்க எதிர்த்து பேசினேன்… எனக்கு தோணினதை சொன்னேன்.” என்று அவளும் சளைக்காமல் பேச,
‘இவன் பேசவேண்டிய நேரத்தில் இதெல்லாம் பேசித் தொலைய மாட்டான். அன்றைக்கு குந்தவை வீட்டில் அவங்கப்பா இறுதி சடங்கில் கூட இப்படித்தான் பேசுச்சு இந்த பொண்ணு அப்போ சபையில் கம்முனு இருந்துட்டு இப்போ யாரும் இல்லாத போது என் அப்பாவை எதிர்த்து பேசாதேன்னு கம்பு சுத்திட்டு இருக்கான்.’ என்ற எண்ணம் தான் சட்டென்று வந்தது அன்பரசனுக்கு.
“இங்க நான் ஒருத்தன் இருக்கேன்னு எண்ணமே இல்லாம இப்போவும் முறைச்சிட்டு நிக்குறீங்க? இதுதான் எங்க வார்த்தைக்கு நீங்க கொடுக்கும் மரியாதையா? அன்றைக்கும் அப்படித்தான் சபையில் எல்லோருக்கும் முன்னாடி என் பேச்சை கேட்காம நீங்க ரெண்டு பேருமே முடிவெடுத்து இறுதி காரியமும் செஞ்சுட்டீங்க…” என்று குரலை உயர்த்த,
கணவன் மனைவி இருவருமே திகைப்புடன் அவரைக் கண்டனர். என்றாவது ஒருநாள் இந்த பேச்சு வரும் என்று தச்சன் முன்னரே அறிந்தது தான் ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் குந்தவையின் முன்னிலையிலேயே உடையும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. குந்தவையோ இதனை பற்றி யோசித்திருக்க்கூட இல்லை. அகம் முழுதும் பிறந்தகமும் அதன் இழப்புமே முதன்மையாய் இருக்க அதைத்தாண்டி வேறெதுவும் சிந்தித்திருக்கவில்லை அவள். ஏற்கனவே நீலா சரியாய் பேசுவதில்லை இப்போது மாமனாரும் இப்படியொரு குற்றச்சாட்டை வைக்கிறாரே என்று தலை சுற்றுயது அவளுக்கு.
“உங்க பேச்சை கேட்கக்கூடாதுனு இல்லை மாமா… அந்த நேரம் எனக்கு அதுதான் சரின்னு தோணுச்சு.”
“சரியான விஷயத்தைக் கூட தவறான விதத்திலும், நேரத்திலும் வெளிப்படுத்தினால் அது தப்பாத்தான் போய் முடியும். உன்னோட விருப்பத்தை என்கிட்ட தனியா சொல்லி இருந்தால் நானே பேசி இருப்பேன். அதை விட்டுட்டு சபையில் பொத்தம்பொதுவாய் பெரியவங்க பேசும் போது குந்தவை பேசியது எங்களுக்கு மதிப்பு கொடுக்காத மாதிரி ஆகிப்போச்சு. இதுவும் ஒரு தலைகுனிவு தான். நாளைக்கே இது நம்ம சனத்துக்கு தெரிஞ்சா என்னை பத்தி என்ன நினைப்பாங்க? இல்லை உங்களைப் பற்றியும் தான் என்ன நினைப்பாங்க… புது மருமக புகுந்த வீட்டை மதிக்கவே இல்லை, அவங்க வீட்டிலேயும் மரியாதை சொல்லிக்கொடுத்து வளர்க்கலைன்னு குந்தவையைத் தான் பேசுவாங்க… இல்லையென்றால் தச்சனை பேசுவாங்க. எப்படி பேசினாலும் இது நம்ம குடும்ப மரியாதைக்குத் தான் இழிவு.” என்று பேசவும் அவரின் வார்த்தைகளில் ஐயோவென்று ஆனது குந்தவைக்கு. 
மணமானப்பின் பெண்களின் ஒவ்வொரு செயலுக்கு பின்னிருக்கும் அசைவுகளும், அர்த்தங்களும் அவளின் பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் இணைத்து ஒப்பிட்டே பார்க்கப்படும் என்ற நிஜம் அவளின் சிந்தையை மின்னலெனத் தாக்கியது. தச்சனுக்கு அந்த கவலையெல்லாம் இன்னும் வந்திருக்கவில்லை. சீக்கிரம் பஞ்சாயத்தை முடித்தால் சரி என்று நின்றிருந்தான்.
“இதில் இவ்வளவு சிக்கல் இருக்கும்னு தெரியாது மாமா எனக்கு. அந்த நேரம் எனக்கு வேறெதுவும் யோசிக்கவும் தோணல. என்னோட உரிமையை நான் யார்கிட்டேயும் இழந்திடக் கூடாதுனு தான் தோணுச்சு. அது என்னோட பிறப்புரிமை, அதனால் யார் பேசிலும் மசிந்து என்னோட முடிவில் இருந்து பின்வாங்கக் கூடாதுன்னு இருந்தேன். மற்றபடி உங்களை மதிக்காமையே இல்லை நம்ம குடும்பத்தை கீழிறக்கணும்னோ செய்தது இல்லை.”
அன்பரசனின் பார்வை முதலில் குந்தவையிடம் சென்று பிற்பாதியில் தச்சனிடம் நிலையாய் நின்றது, “நியாயமான கோரிக்கை என்றாலும் அதை விடுக்கும் இடமும், விதமும், சொல்லும் ரொம்ப முக்கியம்மா… உன்னோட உரிமை நியாயமானது ஆனால் அதை நீ வெளிப்படுத்திய விதம் ரெண்டு குடும்பத்துக்கும் வருத்தம் தருகிற மாதிரி ஆகிடுச்சு. கொஞ்சம் பொறுமையா கையாண்டு இருக்கலாம். இனி முடிஞ்சதை பற்றி பேச வேண்டாம். வரும் காலங்களில் பிழையை திருத்திக்கணும்னு நியாபகம் வச்சிக்கோ. பிழை செய்யாத மனிதர்களே கிடையாது. ஆனால் அதை புரிஞ்சிக்கிட்டு மனதார உணர்ந்து அந்த பிழையைத் திருத்தி வாழ்க்கையில் முன்னேறுபவன் தான் வெற்றியாளன். சும்மா அடுத்தவங்க செய்றாங்க நாமும் செய்வோம்னு தவறுன்னு தெரிந்தும் தவறை செய்தால் அது முட்டாள்த்தனம்.” என்க, அவர் இறுதியாய் சொன்ன செய்தி தச்சனுக்கானது என்று அவர் பார்வை சொன்ன சங்கதி அவனுக்கு நன்றாகவே புரிந்தது. 
“இனி பார்த்து நடந்துக்குறேன் மாமா. என்னை பொறுத்தவரை என்றைக்குமே அநியாயத்திற்கும் உரிமைக்கு எதிராகவும் துணை போக மாட்டேன். அதில் குடும்பத்திற்கு கெட்ட பெயர் வராத மாதிரி நடந்துக்க முயற்சி பண்றேன்.”
“உன் மேல நம்பிக்கை இருக்கப்போய் தான் இப்போ அமைதியா பேசிட்டு இருக்கேன். நீயும் அதை காப்பாத்துற மாதிரி நம்பகத்தன்மையோட பேசுற… ஆனால் இப்போவும் அவன் வாய் திறக்குறானா பாரு.” என்ற அன்பரசனின் கேள்வியில் குந்தவையின் பார்வை தச்சனை பேசச்சொல்லி ஊக்கியது.
“உங்க மருமககிட்ட தானே தன்மையா சொன்னீங்க. அவள் உண்மை பத்திரம் வாசிச்சிட்டா… என்கிட்டேயா சொன்னீங்க? அப்புறம் நான் எதுக்கு?” என்று முறுக்கினான் தச்சன்.
“எகத்தாளம் அதிகம்டா உனக்கு. போடா டேய், போய் புழைக்குற வழியை பாரு…” என்று மகனின் தோளில் இரண்டடி போட்டவர், “அம்மாடி குந்தவை இனி எதுனாலும் என்கிட்டையும் உன் அத்தைக்கிட்டையும் ஒரு வார்த்தை சொல்லிடு. அனுமதி கேட்டுத்தான் செய்யணும்னு இல்லை ஆனால் முன்னாடியே தகவல் சொல்லிட்டா எங்களுக்கும் திருப்தி இருக்கும். உங்களுக்கு துணையாய் இருக்கவும் வசதியா இருக்கும். அதை விட்டுட்டு திடுத்திப்புன்னு நீங்க செய்றது எங்களுக்கு சங்கடமா இருக்கு. இந்த குடும்ப மானமும், நிம்மதியும் உன் கையில் தான் இருக்கு.” 
“நான் பார்த்துக்கறேன் மாமா… நாங்க தப்பு பண்ணா எங்களை வழிநடத்த நீங்களும், அத்தையும் இருக்கீங்களே… நீங்க எங்களை நினைச்சு குழப்பிக்காதீங்க… நான் அத்தைகிட்டேயும் பேசுறேன்…” என்ற குந்தவையின் குரல் முற்றிலும் தணிந்து பரிவாய் ஒலிக்க, பிரச்சனையை தன்மையாய் கையாண்டு எடுத்துக்கூறிய அன்பரசன் மீது அவளுக்கு இயல்பாகவே மரியாதையும் பாசமும் வந்திருந்தது.
“இந்த குடும்ப இஸ்திரிக்களை நம்பவேக் கூடாதுடா தச்சா… பொசுக்கு பொசுக்குனு பல்டி அடிச்சிடுறாங்க… முதல்ல திவ்யா அப்புறம் இந்த நீலா இப்போ சும்மா கன்(Gun) மாதிரி இருக்கும் நம்ம பொண்டாட்டியே இஸ்திரி ஆனதும் அடக்கஒடுக்கமா உல்டாவா பேசிட்டு போறாளே…” என்று தச்சன் புலம்ப, அன்பரசனும் குந்தவையும் சிரித்துக்கொண்டே தங்கள் வேலையை பார்க்கச் சென்றனர்.

Advertisement