Advertisement

*9.1*
குளியறையில் இருந்த போதே சிகரெட்டின் வாடை நாசியை எட்டி குமட்ட, அருகிலுள்ள வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் புகைத்துக் கொண்டிருப்பார்கள் என்றெண்ணி குளித்து உடைமாற்றி வந்தவளின் பார்வையில் சுருள் சுருளாய் புகைவிடும் தச்சனே எதிர்பட ஒருநிமிடம் எதுவுமே புரியவில்லை குந்தவைக்கு. 
வேலை, பின்புலம், இருப்பிடம் என்று எதுவுமே அவள் விரும்பியது போல அமையாது இருக்க, தந்தையின் இழப்பு தந்த பாடத்தில் கிடைத்ததை தக்கவைத்துக் கொள்வோம் என்ற முடிவெடுத்து, தச்சனின் வேலை இருப்பிடம் என்று அனைத்தையும் ஏற்றுக்கொள்ள தன்னை பழக்கப்படுத்திக் கொண்டிருப்பவளால் அவனின் புகை பழக்கத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 
நுனியில் பற்றவைத்த நெருப்பு மெல்ல புகையிலையை கருக்கி வெளியிடும் புகையை அவன் உள்ளிழுக்கும் ஒவ்வொரு முறையும் இங்கு இவள் நெருப்பில்லாமல் எரிந்து கொண்டிருந்தாள். உள்ளிழுத்ததை அவன் வெளியிடும் நொடிதோறும் இவளின் ரத்தழுத்தமும் எகிறிக் கொண்டிருந்து. அவன் உள்ளிழுத்தது போக வெளியேறும் மிச்சமீதி அவளைச் சென்றடைய, அமிழ்ந்தியிருந்தது கட்டவிழ்ந்தது.
வேக எட்டுகள் வைத்து இரண்டே பாய்ச்சலில் அவனை நெருங்கியவள், புகையின் நெடி தாளாமல் துப்பட்டா கொண்டு தன் மூக்கினை மூடிக்கொண்டு அவன் எதிரே சென்று நின்றாள்.
இரு விரல்களுக்கு இடையில் ஒய்யாரமாய் அமர்ந்து அவளை பார்த்து சிரிப்பது போன்றிருந்த அந்த சிகரெட் துண்டு அவளின் இதயத்துடிப்பை தாறுமாறாய் உயர்த்தியது. 
“அதை கீழ போடு…” அவளது குரல் கடினமாய், கட்டளையாய், அதிகாரமாய் ஒலிக்க அதற்கான எதிர்வினை அவனிடம் துளியுமில்லை. தன்னுடைய தனிப்பட்ட பொழுதில் இடையூறாய் வந்துவிட்டாள் என்ற எரிச்சல் மட்டுமே அவனிடத்தில்.
“என்ன?”
அவனின் அசுவாரசியமும் அவளை கண்டுகொள்ளா பாவனையும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கணக்காய் இருந்தது, “அதை கீழ போடுடா…”
விழிகளில் எரிச்சலை கூட்டி, புகையை நன்றாய் உள்ளிழுத்த தச்சன், “எதுக்கு?”
தச்சனின் செயல்கள் யாவும் அவளை கடுப்பேத்த, கைகள் பரபரவென அவன் கையில் இருப்பதை பிடுங்கி விட்டெறிய துடிக்க, அதைவிட தன் பேச்சை கேட்காமல் அலட்சியமாய் புகைத்துக் கொண்டிருப்பவனை அடித்தால் என்ன என்ற எண்ணம் கூட எட்டிப்பார்த்தது. அதையும் செய்திருப்பாள் தற்போது இருக்கும் இருப்பிடம் நினைவில் இல்லாமல் இருந்திருந்தால்… 
‘பொறுமை… பொறுமை…’ என்று முயன்று அந்த எண்ணங்களை பின்னுக்கு அனுப்பியவள் கடினப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டு, அடிக்குரலில், “எனக்கு பிடிக்காது.” என்று சீறினாள்.
அவனும் கடுப்பாய், “ப்ச்… எனக்கும் தான் நடக்கிறது எதுவும் பிடிக்கல… போடி உன் வேலையை பார்த்துட்டு…”
“இது உடம்புக்கு நல்லதில்லை.” என்று சொல்லியும் பார்த்தாள்.
“என் மனசும் தான் நல்லாயில்லை.” என்று அவன் இடக்காய் பேச இவள் பொறுமை எல்லாம் அவன் விடும் புகையோடு சேர்ந்து காற்றில் கரைந்தது.
இது வேலைக்கு ஆகாது என்று பாய்ந்து அவன் விரல்களில் தஞ்சம் புகுந்திருந்ததை பிடுங்கி வீச அது சற்று தள்ளி இருந்த தண்ணீர் தொட்டியில் சென்று விழுந்து அணைந்தது.
அவளின் செய்கையை எதிர்பாராதவன் திகைத்து பின் தெளிந்து எரிந்து விழுந்தான், “லூசாடி நீ…”
அவனுக்கு சற்றும் சளைக்காமல் விரலை நீட்டி உரத்த குரலில், “சொல்லிகிட்டே இருக்கேன் எனக்கென்னனு ஊதித் தள்ளுற? இதுதான் கடைசி. இன்னொரு முறை நீ இந்த கருமத்தை புகைக்குறதை பார்த்தேன் அவ்வளவு தான்.” என்று எச்சரிக்க, சுறுசுறுவென சினம் தலைக்கேறியது தச்சனுக்கு.
ஒருஎட்டு முன்னே வைத்து அவளை நெருங்கியவன், “நான் என்ன செய்யணும் செய்யக்கூடாதுனு நீ சொல்லக்கூடாது. எனக்கு பிடிச்சதை தான் நான் செய்வேன்.” என்று ஆள்காட்டிவிரலை நீட்டி எதிர்வாதம் செய்ததோடு நில்லாமல் தன் சட்டையை துழாவி சிகரெட் பெட்டியிலிருந்து இன்னொரு சிகரெட்டை பற்றவைக்க, அதன் நெருப்புக்கு ஈடாய் கனன்றாள் குந்தவை.
‘இப்ப என்னடி பண்ணுவ?’ என்ற அவனது பார்வை அவளைச் சீண்ட, இந்த சிகரட்டையும் பிடுங்க முயன்றாள். இதைத்தான் செய்வாள் என்று முன்னரே பாடம் கற்றிருந்தவன் அவளுக்கு போக்குக்காட்டி புகையை உள்ளிழுத்து பின் கையை மேலுயர்த்திவிட, இவளும் எம்பி அவன் கையில் இருந்ததை வெறியுடன் பிடுங்க முயன்றாள். இருவருக்குமே பெரிதாய் உயர வித்தியாசம் இல்லாத போதும் அவனிடமிருந்து பிடுங்க முடியவில்லை அவளால். அதிலும் சிட்டிகை அளவு சாம்பல் சூடாய் அவள் மேல் விழுந்து அவளை இன்னும் சூடாக்கியது. அதை கவனியாதவனின் கோபம் எல்லாம் அவனின் பிரியாணியை கண்டதும் பொசுங்கியது.
குந்தவை எதிர்க்க எதிர்க்க அவனுக்கு இருந்த எரிச்சலும் பிடிவாதமும் அடங்கி ‘முடிந்தால் பிடுங்குடி’ என்று விளையாட்டாய் மாறியிருந்தது. அது அப்படியே வதனத்தில் பிரதிபலிக்க, அவனது அதரங்களில் வெளிப்பட்ட கேலிச் சிரிப்பில் இன்னும் கொதித்தாள் குந்தவை.
“ஒழுங்கா அதை கீழ போடுடா… இல்லைனா மரியாதை கெட்டுடும்.”
“நீ எங்கடி மரியாதை கொடுக்குற இனி புதுசா அது கெடுறதுக்கு?” வியாக்யானம் பேசியவன் மீண்டும் புகையை உள்ளிழுக்க சட்டென்று அதைப் பிடுங்கி தூரப்போட்டாள் குந்தவை.
“இதை தூக்கிப் போட்டா எனக்கு வேற கிடைக்காதா? இல்லை வாங்கத் தான் முடியாதா?” முன்பிருந்த விளையாட்டும் மட்டுப்பட்டுவிட, எள்ளல் தூக்கலாய் வெளிப்பட்டது அவனிடம். 
தணிவாய் அவள் சொல்லியிருந்தால் கேட்டிருப்பானோ என்னவோ… அவள் மிஞ்சவும் இவனும் விஞ்சிவிட்டான். அகலரயில் தண்டவாளங்கள் போல சேர்ந்தும் சேராமல் பயணிக்கும் வாழ்க்கை நாம் என்பதை நசுக்கி நான் என்ற பாதையில் பயணித்து நிம்மதியை அழித்துச் சென்றுவிடும் என்பதை அறியாமல் இருவருமே நீயா நானா என்ற போட்டியில் மெட்ரோ ரயிலுக்கான ஒற்றை தண்டவாளங்கள் போல சேர்ந்து பயணிக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
அவனை ஒருபார்வை பார்த்தவள் விருட்டென உள்ளே சென்றுவிட, சிரித்துக்கொண்டு மற்றொரு சிகரெட்டை பற்ற வைத்தான் தச்சன். உள்ளே சென்றவள் அவர்கள் அறைக்குள் நுழைந்து அந்த அறையை சுற்றி பார்வையை விரட்டினாள். இரண்டே இரவுகள் மட்டும் கழித்த அந்த அறையில் எது எது எங்கு இருக்கிறது என்ன இருக்கிறது என்ற அறியாமையை விரட்டி, அவ்வறையையே புரட்டி போட்டுவிட்டு பதினைந்து நிமிடம் கழித்து கைநிறைய சிகரெட் பெட்டிகளுடன் மீண்டும் அவனிடத்தே வந்தாள்.
“ஹே… இதெல்லாம் எங்கிருந்து எடுத்த? இவ்வளவு இருக்கு? தொலைச்சிட்டேனு நினைச்சேன்.” என்று அவன் வியப்பாய் விளிக்க அவளருகிலேயே செல்ல முடியாத அளவு அனல் வீசியது குந்தவையின் விழிகளில்… 
அவனை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தவள் அனைத்து பெட்டிக்களையும் காலியாக்கி அதிலிருந்த சிகரெட்டுகளை கீழே குமித்தாள்.
“என்னடி செய்யுற?” கேள்வியாய் அவன் நடப்பதை பார்த்துக்கொண்டிருக்க, சில நொடிகளிலேயே பதிலும் கிடைத்தது புகைமண்டலமாய்.
கீழே குழுமிக் கிடந்த சிகரெட்டுகளை அவன் வைத்திருந்த தீப்பெட்டி கொண்டே மொத்தமாய் கொளுத்தியிருந்தாள் குந்தவை.
“லூசாடி நீ… என்ன காரியம் பண்ற?” என்று அவன் பதறி கத்தியது கூட புகை ஏற்படுத்திய இருமலுக்கு இடையில் தெளிவற்றுக் கேட்டது.
“நல்லா இழுத்துக்க… இதுக்குத் தானே ஆசைப்பட்ட?” என்று அவளும் வறட்டு இருமலுக்கு இடையில் கத்த, அவ்விடத்தை விட்டு அவளை வேகமாய் நகர்த்தி இழுத்துச் சென்றான் தச்சன்.
கையை வெடுக்கென்று உருவிய குந்தவை எரிக்கும் பார்வை வீசி, “விடு… எதுக்கு இப்போ நகர்ந்து வர? அந்த புகையை தானே ஆக்சிஜன் மாதிரி இழுத்துட்டு இருந்த? இப்போ ஒரேடியா இழுத்துக்க… உன்கூட சேர்ந்து நானும் அதை சுவாசிச்சு இருமி இருமியே சாவுறேன்.” 
“சாவுறேன் அதுஇதுன்னு சொன்ன பல்லை தட்டிடுவேன்…” என்று அவளுக்கு ஈடாய் கத்தியவன் விரைந்து தண்ணீர் பிடித்து எரிந்து கொண்டிருந்தவை மீது ஊற்றினான்.
அதையும் பொருமலுடன் பார்த்துக் கொண்டிருந்தவள் சிலையென அசையாதிருக்க தச்சனுக்கு நடந்த களேபரத்தில் மூச்சு ஏறி இறங்கியது.
“கொழுப்பாடி உனக்கு? எவனாவது இப்படி செய்வானா? கிறுக்குத்தனம் பண்ணிட்டு திரியுற? இப்படியா கொளுத்திவிடுவ? ஏதோ உடனே அணைச்சிட்டேன்…”
“அணைச்சிட்டா? இதை அணைச்சிட்டா நீ செய்யுறது எல்லாம் மறைஞ்சிடுமா? இல்லை இதுவரைக்கும் நீ புகைச்சதால ஏற்பட்ட உடல் பழுது தான் நீங்கிடுமா? பெரிய இவனாட்டம் எக்காரணம் கொண்டும் விவசாயத்தை விடமாட்டேன்னு இயற்கையை மதிக்குறவன் மாதிரி குதிச்ச? இப்போ நீ பண்றது இயற்கைக்கு செய்யுற துரோகம் இல்லையா? யாரை பற்றியும் கவலை இல்லாம இதை புகைச்சு நீ உடலை கெடுத்துக்குறது மட்டுமில்லாம உன்னை சுற்றி உள்ளவர்களுக்கும், இந்த சுற்றத்திற்கும் கெடுதல் செய்யுற… உன்னோட அற்ப சுகம் தான் பெருசுனு சமூகத்தை பற்றி யோசனை இல்லாமல் புகையிலையை எடுத்துக்கிட்டு நச்சை வெளியிடுற. வீட்டில் வயாசனவங்க இருக்காங்க. அவங்களுக்கு இதெல்லாம் சேராது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா உனக்கு? இதோ இங்கேயே ஒரு பத்தடி தள்ளி தான் மாட்டுக் கொட்டகை இருக்கு. அதுகளும் நீ விடுற நச்சை சுவாசித்து பாதிக்கப்படும்…”
“உன் புராணத்தை நிறுத்துறியா கொஞ்சம்?” என்று கடுப்படுத்தவன் அவளை பேச விடாது, “கொஞ்சம் நேரம் முன்னாடி ரூமில் உருகி உருகி எனக்கு கட்டுப்படுறவ மாதிரி பேசிட்டு இப்ப என்ன ஓவரா துள்ளுற?”
“ஒரு முறை போனால் போகுதுனு இறங்கிப் போனால் எப்போதும் அப்படியே இருக்கணும்னு அவசியம் இல்லை. ஆரம்பத்திலிருந்தே நீ இடக்கா வீம்பு பிடிச்சு உன் விருப்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துட்டு இருந்த. ஏதோ நடுவில் பொறுப்பா பேசவும், செய்யவும் நான் தான் மயங்கிட்டேன்.”
“உன்னை என்ன மயக்கிட்டாங்க இப்போ? அப்படி மயங்கி இருந்தா இப்போ இப்படி தாம்தோம்னு குதிச்சிட்டு இருக்க மாட்ட…”
இருவருமே வெட்டவா குத்தவா என்று முறைத்துக் கொண்டு நிற்க, இவர்களின் முடிவற்ற பஞ்சாயத்தில் வேறு வழியின்றி இடைப்புகுந்தனர் குடும்பத்தினர்.
“என்ன நடக்குது இங்க? ஏன் இவ்வளவு புகையாய் இருக்கு?” என்று அன்பரசன் இருமிக்கொண்டே முன்னேற சட்டென்று தங்கள் சண்டையை நிறுத்தினர் தச்சனும் குந்தவையும். 
புகையிலை நெடி அதிகமாய் வீட்டினுள்ளும் சென்றிருக்க, என்னவென்று பார்க்க எப்போதோ பின்புறம் வந்திருந்தனர் மொத்த குடும்பமும். நீலா அப்போதே சத்தம் போட முனைய அன்பரசன் தான் கணவன் மனைவி சண்டையில் தலையிட வேண்டாம் என்று ஒதுங்கச் சொல்லியிருக்க, அவர்கள் பேச்சை கொண்டே நடந்தவை புரிந்தது. அன்பரசனுக்குமே குந்தவை செய்துவைத்த காரியத்தை அப்படியே விட தோன்றவில்லை. அவன் புகைக்கிறான் என்று இவளும் சேர்ந்து ஆத்திரத்தில் மொத்தமாய் புகையை ஏற்படுத்தியது தான் மிச்சம். இறுதியில் இருவருமே அந்த புகையின் தீவிரத்தை உணரவில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார் அவர்.
“கேக்குறாங்கள்ல பதில் சொல்லாம என்ன வாயை பார்த்துட்டு நிக்குறீங்க? இவ்வளவு நேரம் வாய் கிழிய கத்திட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி முழிக்க வேண்டியது… என்னடா பழக்கம் இதெல்லாம்?” என்று தச்சனிடம் பொருமிய நீலா குந்தவையை இடுங்கும் பார்வை பார்த்து, “அவன் தான் இப்படி இருக்கான்னா நீ பொறுமையா எடுத்து சொல்லி திருத்துறதை விட்டுட்டு நீயும் பதிலுக்கு அவன்கூட மல்லுக்கு நிக்குற?” 
‘உங்க பிள்ளையை திருத்த தான் கட்டிக்கிட்டு வந்தேனா? வளர்க்கும் போதே நல்லது சொல்லிக்கொடுத்து திருத்தியிருக்க வேண்டியது உங்க கடமை.’ என்று குந்தவையின் இதழ்கள் காட்டம் காட்ட துடிதுடித்தாலும், இருப்பதை கெடுத்துக்கொள்ள விருப்பமின்றி இதழ்களை இறுக பூட்டிக் கொண்டாள்.
அன்பரசனோ தச்சனை அழுத்தமாய் பார்க்க, அவனும் அவருக்கு சளைக்காமல் அழுத்தமாய், அர்த்தமாய் பார்த்தான். அந்த பார்வையின் பின் இருக்கும் அர்த்தம் புரிந்த அன்பரசனால் மேற்கொண்டு அவனை கண்டிக்க கூட யோசிக்க வேண்டியிருந்தது. நல்வழி காட்ட வேண்டியவரே தவறான பாதைக்கு வழி காட்டி அவனுக்கு முன்னுதாரணமாக இருந்தமையால் அவனை அதட்ட முடியாமல் அமைதியாய் உள்ளே சென்றுவிட்டார். நீலாவுக்குமே அது புரிந்ததிருந்தது. 
பெற்றவர்களை பார்த்து தான் பிள்ளைகள் அனைத்தையுமே முதலில் கற்றுக் கொள்கிறார்கள். தந்தையிடமோ, தாயிடமோ எவரிடமினும் தவறு இருப்பின் அதை பிள்ளைகள் உள்வாங்கிக் கொள்வதில் இரண்டே விதம் தான். ஒன்று பெற்றவர்கள் தவறை பார்த்து பார்த்து வளர்ந்து அது தவறென்று புரிந்தபின், இதுபோன்று நாம் இருக்கக்கூடாது என்று அந்த பிழையை செய்ய மாட்டார்கள். இன்னொரு ரகமோ நமக்கு அனைத்தும் சொல்லிக்கொடுக்கும் பெற்றவர்களே அதை செய்யும் போது அதை நாம் செய்தால் என்ன என்று பெற்றவர்களின் வழியை பின்பற்றுவது. அதில் தச்சன் இரண்டாவது ரகமே… 
பிள்ளைகளின் விடலைப்பருவம் வரை அன்பரசனும் தொடர்ச்சியாய் புகைத்தவர் தானே… நீலா எவ்வளவு சொல்லியும் கேட்காதவர் பதினைந்து வயதில் இருந்த தச்சன் விளையாட்டாய் அவரைப் போலவே அவருடைய சிகரெட்டுகளை பிடிக்கவும் பதறிப்போய் அந்த பழக்கத்தையே விட்டார். அதன் பின்னோ எப்போது அவர் தச்சனை கண்டித்தாலும் ‘நீ செய்தால் சரி ஆனால் அதையே நான் செய்தால் தவறா?’ என்று அவன் எதிர்த்து கேட்கும் நிலை வந்தவுடன் மனிதர் குறுகிவிட்டார். நான் செய்தது தவறுதான் அதனால் நீயும் இதை செய்யக்கூடாது என்று மகன் முன் ஒப்புக்கொள்ள அன்பரசனின் கர்வம் இடம்கொடுக்கவில்லை. நீலாவை  வைத்துதான் மகனை கொஞ்ச கொஞ்சமாய் மாற்ற முயல, தச்சனோ எந்த பழக்கத்தையும் விடவில்லை. வீட்டினர் முன் அதை தொடரவும் இல்லை. எதுவென்றாலும் வீட்டிற்கு வெளியிலேயே முடித்துக்கொள்வான். மது அருந்தினால் மட்டும் நீலாவை தாஜா செய்துவிட்டு வீட்டுக்குள் வந்துவிடுவான். இனி அதற்கும் வேட்டுதான் என்று யார் சொல்வர்?
“அவர் பார்த்த பொண்ணுன்னு  குந்தவையை எதுவுமே சொல்லறது  இல்லை உங்கப்பா… அவளை  கண்டிக்காம  உள்ள போயிட்டாரு…” என்று  நீலா மகளின் காதில்  முணுமுணுக்க, திவ்யா விளங்கா பார்வை  பார்த்தாள்.
“நீ அவனை கண்டிச்சிருந்தா அண்ணி ஏன் இப்படி செய்யப்  போறாங்க? நீ சும்மா இரு… இப்படியாவது அண்ணன் மாறட்டும். அண்ணியை எதிர்க்குறேன்னு அண்ணன் செய்யுற தப்புக்கும் எல்லாம் துணை போகாத… அப்புறம் அவன் தான் வீணாப்போயிடுவான்.” என்ற மகளை சுணக்கத்துடன் பார்த்தார் நீலா. 
“என்ன வேடிக்கை? போய் காலை சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணு.” என்று மங்களம் நீலாவை விரட்ட,
“எதுவும் சொல்லிக்கூடாது உடனே என்னை அடக்க வேண்டியது.” என்று தன் மாமியாரோடு சேர்த்து தன் மருமகளையும் முறைத்துவிட்டுச் சென்றார் நீலா.

Advertisement