Advertisement

“என்னடா காத்து இந்த பக்கம் வீசுது… வெளிய துரத்தி விட்டுட்டாங்களா?” அறிவழகியை தூக்கி வைத்து வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்த தச்சன், ராஜனைக் கண்டதும் விஷமமாய் சிரித்தான்.
“அப்பாடா வந்துட்டீங்களா! நீங்களே வந்து உங்க பசங்களையும் தம்பியையும் மேயுங்க அத்தான்… நான் கிளம்புறேன்.” களைப்பாய் தென்பட்ட குந்தவை ராஜனைக் கண்டதும் களிப்பாகி அவனிடமே உணவுத் தட்டை நீட்டிட்ட, கேள்வியாய் பார்த்தான் ராஜராஜன்.
“ஏன் என்னாச்சு குந்தவை? இப்படி நீயே தெரிச்சு ஓடுற?”
“மூணு பேரும் கூட்டு சேர்ந்துகிட்டு என் பேச்சை கேட்காம டிமிக்கி கொடுத்துட்டு இருக்காங்க… உங்க தம்பி தான் கெட்டது மட்டுமில்லாம பசங்களையும் செல்லம் கொடுத்து கெடுக்குறான்.”
“தோடா… உன்கிட்டிருந்து இதுங்களை காப்பாத்த நான் பெரும்பாடு பட்டுட்டு இருக்கேன், நீ என்னடான்னா அவன்கிட்ட குற்றப்பத்திரிக்கை வாசிச்சிட்டு இருக்க…” மனைவியின் காலை வாரிய தச்சன், ராஜனிடமும் முறையிடத் தவறவில்லை, “இவளை வளர்க்க விட்டேன்னு வச்சிக்கோ, நாளைக்கு உன் பிள்ளைங்க குதிரைக்கு லாடம் கட்டின மாதிரி சுத்தி இருக்குற எதையுமே அனுபவிக்காம யோசிக்காம இந்த ரோபோட் மாதிரி நேரா போய் எங்கேயாவது முட்டிக்குங்க…”
“அத்தான் இவன்கிட்ட விட்டீங்க தொலைஞ்சுது… அவிழுத்து விட்டவங்க மாதிரி தறிகெட்டு ஓடிடுவாங்க, நாம பிடிக்க முடியாது…”
“அதுதான் எந்த பக்கம் போனாலும் நீ குறுக்கால வந்து கேட் போடுறீயே…”
“ஆளை விடுங்கடா கண்ணுங்களா… நீங்க ரெண்டு பேரும் ஆணியே புடுங்க வேணாம், நான் பசங்களை பார்த்துக்குறேன், நீங்க அப்படியே ஓரமா போய் அடிச்சிக்கோங்க…” என்று ராஜன் கையை உயர்த்தி சரணடைந்துவிட, அவனது பாவனையில் கைதட்டி சிரித்தாள் அறிவழகி.
வாஞ்சையாய் அவளை தூக்கிக் கொண்ட ராஜன், அவளது குண்டு கன்னத்தில் முத்தமிட்டு, “உன்னை சிரிக்க வைக்க நான் இவங்ககிட்ட இடிபடனுமா…” என்று கொஞ்சியபடி அவளிடம் பேச்சுக்கொடுக்க, அறிவழகனும் ராஜனின் காலை பிடித்துக்கொண்டு நின்றான். அவனையும் ஆசையோடு மறுகையில் தூக்கிக்கொள்ள, அறிவழகி ராஜனின் கவனம் தன்னுடன் பிறந்தவன் மீது திரும்பவும், ராஜனின் கன்னத்தை பிராண்டி கவனத்தை தன்புறம் ஈர்த்தாள்.
“அச்சோ பாப்பா… அப்பா கன்னத்தை கிள்ளக்கூடாது. வலிக்கும்…” என்ற கண்டிப்புடன் அவர்களிடம் வந்தாள் வானதி.
“அதெல்லாம் வலிக்கல… நான் இவங்களுக்கு வேடிக்கை காட்டுறேன் நீ ஊட்டிவிடு…” என்ற ராஜன் குழந்தைகளை பசுக்கன்று அருகில் அழைத்துச் செல்ல, உணவுத் தட்டை தங்கையிடமிருந்து வாங்கிக்கொண்டு வானதியும் அவன் பின்னேயே சென்றாள்.
“குடும்பமா ஒன்னு கூடிட்டாய்ங்க… நம்ம இங்கிருந்து நடையக் கட்டுவோம்…” என்று அங்கலாய்த்த தச்சன் குந்தவை கைபிடிக்க, அதை உதறிவிட்டு உள்ளே சென்றாள் அவள்.
‘ரொம்பத்தான் சிலுப்புறா…’ என்று வழக்கம்போல முணுமுணுத்தபடி வேகமாய் தன்னறைக்குச் சென்றான் தச்சன்.
உள்ளே நுழைந்து முற்றத்தில் அமரச் சென்ற குந்தவையை கூடத்திலேயே நிறுத்திய நீலா, நெற்றியை தேய்த்தபடி, “வானதி எங்க குந்தவை?”
“வெளில சாப்பாடு ஊட்டிட்டு இருக்கா அத்தை? ஏதாவது வேணுமா?”
“மண்டையெல்லாம் கணக்குது, நான் போய் தூங்குறேன். வானதிகிட்ட பாத்திரம் எல்லாத்தையும் ஒழிச்சுப்போட்டுட்டு தூங்கச் சொல்லு… காலையில அவ சீக்கிரம் எந்திரிக்க வேண்டாம், பகல்ல இன்னைக்கு பசங்க ரொம்ப நேரம் தூங்கிட்டாங்க. நைட் லேட்டாதான் தூங்குவாங்க… அவ காலையில கொஞ்சம் தூங்கட்டும்… நீ சீக்கிரம் எந்திரிச்சிடு…” என்று லிஸ்ட் போட்டு அடுக்க, ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்து நின்றாள் குந்தவை.
“என்ன பேச்சையே காணோம் குந்தவை? ஒன்னு சரின்னு சொல்லு இல்லை ம் போடு… இப்படி ஒன்னுமே சொல்லாம நின்னா என்ன அர்த்தம்? இந்நேரம் வானதி பக்கத்துல இருந்தா பத்து தடவையாவது தலைவலிக்கு மருந்து தேய்ச்சு விடவான்னு கேட்டு இருப்பா…” பேச்சோடு பேச்சாய் நீலா இளையவளை இறுதியில் சாட, நாக்கை கடித்த குந்தவை, 
“ஷ்… நீங்க இவ்வளவு இயல்பா வானதியை பத்தி பேசுனதும் சந்தோஷத்தில் அப்படியே நின்னுட்டேன். சாரி அத்தை, மாத்திரை எடுத்துட்டு வரவா?”
“அதுக்குத்தான் வீட்டுல என்ன நடக்குதுன்னு கவனிக்கணும். வானதி இங்க மருமகளா வந்தது முதல்ல வருத்தமா இருந்தாலும் என்னைக்குமே அவளை நான் ஒதுக்குனது இல்லையே… யாருக்கு யாருன்னு எழுதியிருக்கோ அவங்ககூட தான் விதி சேர்த்து வைக்கும்… நீ இதையெல்லாம் ஆராய்ச்சி பண்றதை விட்டுட்டு போய் என் புள்ளையைப் பாரு. பாவம் தச்சன் முகத்தை தொங்கப் போட்டுட்டே போனான்…”
“ம்கூம்… அதுதானே உங்க பையனை விட்டுக்கொடுக்க மாட்டீங்களே…”
“போ… போய் அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு செஞ்சுகொடு… சும்மா அவனை எப்போதும் காய்ச்சிட்டே இருக்காதே… நானும் இதுமாதிரி எப்போதும் பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்…”
“இப்போ தலைவலி காணாம போச்சோ? சரி சரி..  உங்க பையனை கண்கலங்காம பார்த்துக்கிறேன்…” என்று வேண்டுமென்றே குதர்க்கமாய் குந்தவை பதில் பேச, சளைக்காத நீலா கண்டிக்கும் தோரணையில்,
“அக்காகாரி இங்கேயே வந்ததும் உனக்கு வாய் அதிகமாகிடுச்சு குந்தவை… முன்ன தேவைன்னா மட்டும் பேசுவ, இப்போ அவனை மாதிரியே கேலி பேசிட்டு சுத்துற…”
“உங்களுக்கு தலைவலி அத்தை… ரெஸ்ட் எடுங்க… நான் பார்த்துக்குறேன்…” என்று நீலாவை பேசி ஒருவழியாய் அனுப்பிவிட்டு அறைக்குள் நுழைய, அவளுக்காகவே காத்திருந்தவன் அலமாரியிலிருந்து புது அலைபேசி பெட்டியை எடுத்து நீட்டினான்.
“இந்தாடி புதுபோன்… நீ கேட்ட மாதிரியே சுயமா உழைச்சு சம்பாரிச்ச காசில் வாங்குனது.”
அவன் பரிசளித்ததை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்ளாது கையை குறுக்கே கட்டி நின்றவள், இடுங்கிய பார்வையுடன்,
“இது வாங்க ஏது பணம்?”
“அதுதான் சொன்னேனே… உழைச்சு சம்பாரிச்சதுன்னு. நம்ம வயலில் வந்த லாபத்தில் வாங்குனதுடி… நியாயமா எனக்கு சேர வேண்டிய பணத்தில்தான் வாங்கியிருக்கேன். நீ சும்மா கேள்விகேட்டு கடுப்பாக்காத…” என்று தச்சன் சலித்துக்கொள்ள, அழுத்தமாய் பார்த்தாள் குந்தவை.
“குணா அண்ணனுக்கு கொடுத்தது நம்ம வீட்டுக்குன்னு எடுத்துகிட்டது போக மீதி வந்த பணம் அடுத்த போகத்துக்கு நிலத்தை உழுது நாத்து நடவே செலவாகியிருக்கும். இதுல எங்கிருந்து லாபம் வந்துச்சு? அதுல எப்படி நீ போன் வாங்குன?”
“ம்ச்… சத்தியமா இது நான் உழைச்சதுக்கான கூலிடி… ரெண்டு வருஷம் முன்னாடி வெள்ளம் வந்து அறுவடைக்கு தயாரா இருந்த பயிரையெல்லாம் காலிபண்ணிட்டு போயிடுச்சு. அதுக்கு பயிர் காப்பீடு வசதிக்கு கீழ காப்பீடு பண்ணி வச்சிருந்தோம். அந்த பணம் இப்போதான் வந்துச்சு, அதை அப்படியே விதை வாங்கவும் ட்ராக்டர் கூலிக்கும் குடுத்துட்டேன். அதனால் என்னோட பணம் அப்படியே இருந்துச்சு, அதோட நம்ம விதை பயிர் பண்ணி ஆராய்ச்சி நிலையத்திற்கு கொடுத்தோமே அதுக்கும் பணம் வந்துச்சு. ரெண்டுத்தையும் சேர்த்துதான் போன் வாங்குனேன்.” என்று அவன் நீண்ட விளக்கம் கொடுக்க, மனதிற்குள் வரவு செலவை கூடிக்கழித்துப் பார்த்தவள் உதட்டை சுழித்து, “ஆனாலும் அந்த பணம் போதுமானதா இருக்காதே? போன் எப்படியும் பத்தாயிரம் இருக்கும்…” என்று கிடுக்கிப்பிடி போட்டாள். 
“ஷப்பா… போன் ஏழாயிரம் தான்டி, இப்போ கூட்டி கழிச்சுப் பாரு. கணக்கு சரியா வரும்…” என்று சொல்ல, மீண்டும் கணக்கிட்டுப் பார்த்தவள் தெளியாத பார்வையுடனே, “கணக்கு சரியாத்தான் வருது. ஆனா ரெண்டு வருஷம் முன்னாடி எல்லாத்தையும் மாமாதான் பார்த்துட்டு இருந்தாங்க, சோ அந்த காப்பீடு பணம் மாமாவோடது… அதை எதுக்கு அடுத்த போகத்துக்கு முதலீடா போட்ட? நியாயமா நீ சம்பாரிச்சதை முதலீடு பண்ணி இருக்கணும்.”
“ஆண்டாவா எனக்கு ஒரு தேன்மொழியையோ கனிமொழியையோ கொடுத்திருக்கக் கூடாதா?… எதுக்கு இந்த கணக்கம்மாகிட்ட என்னை மாட்டிவிட்ட? படுத்துறாளே… 
ஏய் குந்தவை, நீ போன் மட்டும்தான் என்னோட உழைப்புல வாங்கித் தரச் சொன்ன. அடுத்த போகத்துக்கு என்னோட பணத்தை முதலீடா போடணும்னு சொல்லவே இல்லை… நீ வேண்டினது கிடைச்சுடுச்சுள்ள பேசாம வாங்கிட்டு ஒழுங்கா ஒரு கிஸ் கொடுத்துட்டு போயிடு…” என்ற அவனது புலம்பலில் குந்தவையின் முகம் சுருங்கியது. 
“நாந்தான் உன்னை படுத்துறேனே… அப்புறம் எதுக்கு கிஸ்ஸு கொசுன்னுட்டு கிட்ட வர… ஒழுங்கா ஓடிபோயிடு…” என்று அதட்டியவள், கடுப்பில் முகத்தை கோணி, மெத்தையில் சென்று அமர்ந்துகொண்டாள்.
வெளியே முகக்கோணல் இருந்தாலும், உள்ளமோ அவனை அதிகம் தொல்லை செய்கிறோமோ என்ற சுயஅலசலில் ஈடுபட்டது. தச்சனை பக்கத்தில் வைத்துக்கொண்டு சுயஅலசலுக்கு விடை கண்டுபிடுக்க முடியுமா என்ன!
தனக்கு எதிராய் முகத்தை திருப்பி அமர்ந்திருப்பவளின் பின்சென்று அமர்ந்தவன், மூச்சை நன்றாக உள்ளிழுத்து உதட்டை குவித்து அவளது தோளில் அந்த உஷ்ணக் காற்றை வெளியேற்றி, “இந்த ராஜன் அல்வா வாங்கிட்டு வந்து அவன் பொண்டாட்டியை கரெக்ட் பண்றான்…. உன்னை கரெக்ட் பண்ண இதுமாதிரி சிம்பிளான ஐடியா ஏதாவது சொல்லேன்… தினம் ஏதாவது இடக்கா வந்துடு. என் வாயும் உன் வாயும் அடங்காம எதையாவது பேசி வச்சிடுது… மீ பாவம்ல… எவ்வளவுதான் சமாளிக்குறது…” என்று கேட்க, சட்டென அதிர்வில் திரும்பினாள் குந்தவை.
“என்ன? அல்வாவா? கிறுக்கனா நீ? இதையெல்லாமா பார்த்துட்டு வந்து என்கிட்ட சொல்லுவ… உன் அண்ணன் பொண்டாட்டி என் அக்காடா…” அதிர்வு என்பதைவிட இதைப்போய் கண்காணித்து வந்து நாணமின்றி தன்னிடமே இப்படி சொல்கிறானே என்ற சங்கடமும் கோபமும்தான் வந்தது அவளுக்கு… 
“அவங்க பெட்ரூமை நான்போய் எட்டிப்பார்த்த மாதிரி ஏன் இவ்வளவு அதிர்ச்சி ஆகுற? வாங்கிட்டு வந்தவன் பையில தெரியுற மாதிரி மேல வச்சிருந்தான், அதோட நெய் வாசனை தூக்குச்சு… ஏன் உனக்கே வாசனை வந்திருக்குமே… அம்மாகிட்ட கொடுத்தது போக வேற பூவும் தனியா வச்சிருந்தான்…” என்ற அவனது விளக்கத்தில் குந்தவை தலையிலடித்துக் கொண்டாள்.
“பதில் சொல்லிட்டு தலையில அடிச்சிக்கோ… என்ன ஸ்வீட் வாங்கிட்டு வந்தா நீ சமாதானம் ஆவ?” அவள் சங்கடமாய் உணர்வதைக் கூட கண்டுகொள்ளாமல் துவங்கிய இடத்திலேயே மீண்டும் வந்து நிற்க, அவளது எரிச்சல் பெருகத்தான் செய்தது.
“எனக்கு ஸ்வீட் பிடிக்காது…” என்றாள் முறைப்புடனே.
“அதுதானே… நீதான் காரமாச்சே. நான்தான் மறந்துட்டேன்.”
“நீ சப்புன்னு ஒன்னுலையும் உருப்படி இல்லாம இருந்தா எப்படி காலத்தை தள்ளுறது…”
“அடிப்பாவி… நான் சப்புன்னு இருக்கேனா… அப்படி இருக்கிறதால தான் நீ காரமா இருக்க… யோசிச்சு பாரு காரத்துக்கு காரமே ஜோடி சேர்ந்திருந்தால் இந்நேரம் நீ விவாகரத்து வாங்கி டாட்டா காட்டிட்டு போயிருப்ப…” என்று தச்சன் சொல்ல மீண்டுமொரு ஊடல் அரங்கேறியது. 
“அடிங்க… பாதி நேரம் ஏதாவது கிறுக்குத்தனமா பேசுறது செய்யுறதுன்னு எல்லாத்தையும் பண்ணி சண்டை போட வைக்குறதே நீதான்… போனா போகுதுன்னு உன்கிட்ட முகத்தை தூக்காம தினம் தினம் சமாதானமா போறேன்ல்ல… நீ இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ…”
“என்னமோ நீயே முதல்ல வந்து வெள்ளை கொடி காட்டுற மாதிரியே பேசுற… நான் கோச்சிக்கிட்டாலும் நீ கோச்சிக்கிட்டாலும் நான்தான்டி முதல்ல சமாதானம் பேச வருவேன். நீ அப்படியே முறுக்கிக்கிட்டு திரிவ…”
“நீ சமாதானம் பேசுற லட்சணம் எனக்குத் தெரியாதா… இல்லை என்னைக்கு நீ பேசி இருக்க? எதுவுமே நடக்காதது மாதிரி கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்துட்டு நான் சொன்னதுக்கு எல்லாம் சரிசரின்னு பேருக்கு தலையாட்டுவ… நான்தான் போனால் போகுதுன்னு சண்டையை இழுத்து பிடிச்சுகாம இலகளா விட்டிருக்கேன்…” என்று குந்தவை மல்லுக்கு நிற்க, விஷமமாய் சிரித்தவன்,
“புரிஞ்சு போச்சே… புரிஞ்சி போச்சே… என்ன பண்ணா நீ சமாதானம் ஆவேன்னு…” என்று ராகம் இழுத்தவன் அவளின் விழி வழி கேள்விக்கு விடையாய், விரிந்திருந்த தன் இதழ் கொண்டு அவளிழதில் சங்கமம் நிகழ்த்த, அவனது தாக்குதலுக்கு பழகிப் போயிருந்த குந்தவை அவனிதழை வன்மையாய் கடித்து வைக்க, அலறிக்கொண்டு அணைப்பை விலக்கினான் தச்சன்.
“அடுத்த போகத்துக்கு என்னோட காசை வச்சே அறுவடை செய்யலாம்… இனி நோ அப்பா காசு… நோ வயலன்ஸ்…” என்று பேரம் பேச, ஓரேடியாய் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்கும் பொறுப்புகள் வருவதை உணர்ந்த குந்தவையின் இதழ்கள் அகல விரிந்து கண்கள் மின்ன, அவளது விரல்கள் தானாய் அவனது கன்னத்தை கிள்ளி முத்தமிட்டது.
“எல்லாத்துலேயும் நேர்மையின் சிகரமா இருக்குறவங்க இதுல ஓரவஞ்சனை செய்யக்கூடாது மை டியர் பிரியாணி…” என்றவனை குந்தவை புரியாமல் பார்க்க, அவளை இழுத்தணைத்துக் கொண்டான் பெருந்தச்சன்… அவனுடன் மல்லுக்கு நிற்காமல் விரும்பியே அவனைத் தாங்கினாள் குந்தவை… குந்தவை பெருந்தச்சன்!

Advertisement